ஆப்பிள் பழம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 6,556 
 
 

அது 1968ம் வருடம் என்று நினைவு…

அப்போது எனக்கு பத்து வயது.

நாங்கள் ஒரு அக்கிரஹாரத்தில் குடியிருந்தோம்.

ஒருநாள் மாலை எங்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து ஆப்பிள்பழம் ஒன்றைத் தின்று கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட அந்தக் காலத்தில் ஆப்பிள்பழம் என்பது மிக அரிதான, ஆடம்பரமான விஷயம். விரல் விட்டு எண்ணிவிடும்படியான சில குடும்பங்களில்தான் ஆப்பிள் வாங்கிச் சாப்பிடுவதெல்லாம் கட்டுப்படியாகும். கட்டுப்படியாகிற குடும்பம் எங்களுடையது.

ஏதாவது பழங்களையோ அல்லது தின்பண்டங்களையோ, வாசல்படியில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்தபடி தின்று கொண்டிருப்பது என்பது அந்த வயதில் எனக்கு ஒரு மாற்றிக் கொள்ளமுடியாத வழக்கமாக இருந்தது.

அன்றும் நான் வாசல்படியில் அமர்ந்து ஒருமாதிரி மஞ்சள் நிறம் கலந்த சிகப்பு நிற ஆப்பிள் பழத்தை எச்சில் பண்ணி கடித்து கடித்து கால்வாசி முடித்த நிலையில் தின்று கொண்டிருந்தேன்.

அப்போது என்னை நோக்கி மங்களம் மெள்ள அசைந்து அசைந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். அதிகமாகப் போனால் மங்களத்திற்கு ஐந்து வயது இருக்கலாம். மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள்.

எங்கள் தெருவின் கிழக்குக் கோடியில் ஒரு காம்பவுண்டுக்குள் இருக்கும் சின்னச் சின்ன புறாக்கூடுகள் மாதிரி இருக்கின்ற பலவீடுகளில் ஒன்றில், ஏழ்மையான சூழலில் அவள் வசிக்கிறாள்.

அவளுடைய அப்பா பிச்சாண்டிக்கு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலையோ, பொறுப்போ சிறிதளவும் கிடையாது. அவர்பாட்டுக்கு எப்போது பார்த்தாலும் சிவன்கோவில் மண்டபத்தில் அமர்ந்து யாருடனாவது சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார். அல்லது பகலிலேயே கோவில் மண்டபத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்தாலே அழுக்காக இருப்பார். வேட்டியும், பனியனும் மாதக்கணக்கில் துவைக்கப் படாமல் பழுப்பு நிறத்தில் இருக்கும். அவரால் குடும்பத்துக்கு ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது.

மங்களத்தின் அம்மாதான் பாவம் அக்கிரஹாரத்தில் பல வீடுகளில் பத்துப் பாத்திரம் கழுவி, வீட்டைப் பெருக்கி, துணிகள் துவைத்து அதில் வருகிற வருமானத்தில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வந்தாள். மங்களம்தான் கடைசி. குழந்தைகள் யாருக்கும் உடுத்துவதற்குக் கூட நல்ல துணிமணிகள் இல்லாததால் அவர்கள் யாரும் பள்ளிக்கூடத்திற்கும் போகவில்லை. மூவருமே வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

மங்களமும் ஒரு அழுக்குப் பாவாடையை கட்டிக்கொண்டு, மேலே சட்டை எதுவும் போட்டுக்கொள்ளாமல் மனம் போனபடி தெருக்களில் திரிந்து கொண்டிருப்பாள். எண்ணையையே பார்த்திராத அவளுடைய தலைமுடி ஒருமாதிரியான செம்பட்டைக் கலரில் காய்ந்து தேங்காய் நார்போல இருக்கும். ஊரில் இருக்கும் அத்தனை அழுக்கும் மங்களத்தின் முகத்தில்தான் பூசப்பட்டிருக்கும்.

ஆனால் ஒன்று… இவை அத்தனையையும்விட அவளிடம் இருக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விஷயம், அவளுடைய முகத்தில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் மாறாத இளம் புன்னகைதான். அந்த இளம் புன்னகை இல்லாமல் மங்களத்தை பார்க்கவே குடியாது.

நான் எங்கள் வீட்டு வாசப்படியில் உட்கார்ந்து ஆப்பிளை எச்சில்செய்து தின்று கொண்டிருந்தபோதும் மங்களம் அதே சிரித்த முகத்தோடு எப்போதும்போல சட்டை இல்லாமல், அழுக்குப் பாவாடையில் வந்து கொண்டிருந்தாள்.

அவள் பாட்டுக்கு என்னைத் தாண்டிப் போயிருப்பாள்தான்.

ஆனால் அன்று என்னமோ ரொம்ப இயல்பாக மேற்கொண்டு நடந்து செல்லாமல் என் எதிரில் நின்றுவிட்டாள். புன்னகை மாறாமல் என் கையில் இருந்த ஆப்பிள் பழத்தையே உற்றுப் பார்த்தாள்.

நான் மங்களத்தைப் பார்த்துக்கொண்டே ஆப்பிளை ஒரு கடி கடித்தேன்.

அவள் புன்னகை மாறாமல் கையை நீட்டிக் காட்டி என்னிடம், “இது என்ன பழம்?” என்று கேட்டாள்.

“ஆப்பிள் பழம்.”

“ரொம்ப தித்திக்குமா?”

“ஆமா ரொம்ப ரொம்ப தித்திக்கும்.”

“நான் தின்னதே இல்லை.”

நான் அவளைப் பார்த்துக்கொண்டே ஆப்பிளை இன்னொரு கடி கடித்தேன்.

“கொஞ்சம் கடித்துத்தாயேன்… எப்படி இருக்குன்னு தின்னு பாக்குறேன்.”

மங்களம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். முக்கால்வாசி ஆப்பிளை நான் ஏற்கனவே தின்றுவிட்டிருந்தேன். கொஞ்சம்தான் மிச்சம் இருந்தது. அதை அப்படியே மங்களத்திடம் நீட்டினேன்.

சந்தோஷத்துடன் ஆப்பிளை வாங்கிக்கொண்டு, அதைக் கடித்து தின்றபடி குதித்து குதித்து ஓடினாள்.

அப்போது வெளியே போய்த் திரும்பிய என் அப்பா இதைப் பார்த்துவிட்டார். என்னை உள்ளே கூப்பிட்டார்.

“ஆப்பிள் பழத்தை இப்படி யாருக்கும் தூக்கிக் கொடுக்கக்கூடாது. ஆப்பிளோட விலை ரொம்ப ஜாஸ்தி…” கண்டிப்பான குரலில் திட்டினார்.

“தின்னதே இல்லைன்னு சொல்லிக்கேட்டா… பாவமா இருந்திச்சு. அதான் கொடுத்தேன்பா.”

“அவ கேட்டாக்கூட ஆத்துக்குள்ள வந்து கொய்யாப் பழமோ, வாழைப்பழமோதான் எடுத்துக்கொடுக்கணும்… ஆப்பிள் குடுக்கக்கூடாது. புரிஞ்சுதா?”

அவர் இப்படிச் சொன்னது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆப்பிள்பழம் கேட்கிறவளுக்கு எப்படி கிறுக்குத்தனமாக வேறொரு பழத்தை எடுத்துவந்து கொடுப்பது?

இதன்பின் அடுத்த வாரத்தில் ஒருநாள் நான் மறுபடியும் ஆப்பிள்பழத்தை தின்றபடி வாசல்படியில் உட்கார்ந்திருந்தேன்.

சொல்லிவைத்த மாதிரி அழுக்குப் பாவாடையுடன் மங்களம் குதித்து குதித்து வந்து கொண்டிருந்தாள். சிரித்துக்கொண்டே என் எதிரில்வந்து நின்றாள்.

என் கையில் இருந்த கடித்த ஆப்பிளைப் பார்த்தாள். நான் ஆப்பிளை மேற்கொண்டு கடிக்காமல் மங்களத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றைக்கு மாதிரியே இன்றைக்கும் கேட்டால் என்ன செய்வது? என்று யோசித்தேன்.

அப்பா சொன்ன கண்டிப்பான வார்த்தைகள் அப்படியே ஞாபகத்தில் இருந்தன. மங்களம் ஆப்பிள் கேட்டால் ஆத்துக்குள் சென்று வேறுபழம் எடுத்துத் தருவதெல்லாம் என் இயல்பிற்கு சரிப்பட்டு வராது.

தர்மசங்கடமாக இருந்தது. அவள் கேட்டால் கொஞ்சம் கடித்தாவது கொடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. என் அப்பாவும் வீட்டில் இல்லை.

நான் மங்களத்தைப் பார்த்துக்கொண்டே ஆப்பிளைக்கூட கடிக்காமல் இருந்தேன். ஆனால் மங்களமோ ‘தா’வென்று கேட்காமல் என்னையும் என் கையில் இருந்த ஆப்பிளையும் மாறிமாறிப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்.

ஒருசில நிமிடங்கள் இப்படிப் பார்வை பரிமாற்றத்திலேயே நகர்ந்தன.

அதன்பின், சிரிப்பு மாறாத முகத்தோடு மங்களம் என்னிடம் ஆப்பிள்பழம் கேட்காமல், குதித்து குதித்து ஓடிக்கொண்டிருந்த அவளுடைய ஓட்டத்தை தொடர்ந்துவிட்டாள்.

ஓடுகிற அவளையே நான் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று ஏன் அவள் என்னிடம் ஆப்பிள்பழம் கேட்கவில்லை என்பது புரியாமலேயே நான் வாசல்படியில் உட்கார்ந்திருந்தேன்.

இது நடந்து ஒருமாதம் சென்றிருக்கும்…

அன்று சனிக்கிழமை. பெருமாள் கோவிலில் கருடசேவை. அம்மா வீட்டில் சாப்பாட்டுக்கடையை முடித்துவிட்டு மாலை ஏழுமணிக்கே கோவிலுக்குச் சென்றுவிட்டாள். அங்கு அக்கிரஹார மாமிகள் சேர்ந்து கோவிலில் பக்திப்பாடல்கள் பாடுவார்கள். கருடசேவை முடிந்து இரவு பத்துமணிக்கு மேல்தான் வீடு திரும்புவாள். இது ஒவ்வொரு கருடசேவையின் போதும் நடக்கும் ஒரு நிகழ்வுதான்.

நானும் எல்லா கருடசேவையின் போதும் என்வயது நண்பர்களுடன் கோவிலுக்குச் சென்று விளையாடிவிட்டு, கருடசேவை முடிந்து அதன்பிறகு கடைசியாக தரப்படும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கலுக்கு நாக்கைத் தொங்கப் போட்டபடி காத்திருப்பேன். அவைகளை வாங்கிக்கொண்டு வீடு திரும்ப பதினோரு மணியாகிவிடும்.

ஊரே அன்று பெருமாள் கோவிலில்தான் திரண்டிருக்கும். கோவில் பிரசாதமே பெரும்பாலோனோர்க்கு அன்றைய இரவு உணவாகிவிடும்.

அப்பா கோவிலுக்கு வராமல், கருடாழ்வார் தெருவழியாக உலா வரும்போது மட்டும் வீட்டிற்கு வெளியே வந்து அவரை பக்தியுடன் தரிசனம் செய்வார். அப்பாவின் நெற்றியில் எப்போதும் வீபூதி இருக்கும். நிறைய ஸ்தோத்திரங்கள் சொல்வார்.

கருடசேவையன்று கோவில் வாசலில் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தேன். விளையாட்டின்போது என் பம்பரம் உடைந்துவிட்டது. புதிய பம்பரத்தை எடுத்துவர வீட்டிற்கு ஓடினேன்.

வீட்டின் வாசல்கதவு ஒருக்களித்து இருந்தது. அதைத் தள்ளியபடி உள்ளே சென்றேன்.

அங்கு கூடத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில், அப்பா பக்கத்தாத்து பங்கஜம் மாமியின் மடியில் படுத்துக்கொண்டு, ஒரு பெரிய ஆப்பிளை ஒருகடி கடித்துவிட்டு, அதை அப்படியே மாமியிடம் கொடுக்க; மாமியும் அதை இன்னொரு கடி பெரிதாக கடித்துவிட்டு அப்பாவிடம் கொடுக்க, இந்த விளையாட்டை சற்றுநேரம் தொடர்ந்தார்கள். அதன்பிறகு, பங்கஜம் மாமி சிரித்தபடி அப்பாவின் தலைமுடியை விரல்களால் அளைந்து கொண்டிருந்தாள்.

அப்பா அவள் பிடறியைப் பற்றிக்கொண்டு, தன் முகத்தை நோக்கி இழுத்து அவள் உதட்டிலும், கன்னத்திலும் முத்தமிட்டார்.

எனக்கு திக்கென்றது. அப்பா ஏதோ தப்பு செய்கிறார் என்பது மட்டும் புரிந்தது. அதற்குமேல் ஒன்றும் புரியவில்லை. வந்தசுவடு தெரியாமல் நான் மெதுவாகத் திரும்பிச் சென்றேன்.

என்னிடம் ஆப்பிள் காஸ்ட்லி என்று சொல்லிவிட்டு, பக்கத்தாத்து மாமிக்கு மட்டும் அப்பா எப்படிக் கொடுத்தார்… என்கிற ரீதியில்தான் அந்த வயதில் என் சிந்தனை இருந்தது.

பிறகு பதினாறு வயதில்தான் இந்தச் சம்பவத்தின் வீரியம் எனக்கு முழுதாகப் புரிந்தது.

எல்லா கருடசேவையின் போதும் பங்கஜம் மாமி, கொல்லைப்புற வழியாக அப்பாவைப் பார்க்க வருவது ஒரு வாடிக்கைதான் என்பது புரிய எனக்குப் பல வருடங்கள் ஆனது.

தற்போது, ஸிந்திப் பசுமாதிரி ஆகிருதியுடன் வளப்பமாக இருக்கும் பங்கஜம் மாமி மாதிரி மாமிகள் கிடைத்தால், எந்த ஆண்பிள்ளைதான் சும்மா இருப்பான் என்று அப்பாவின் செய்கையில் ஒரு நியாயமும் இருந்ததாகத் தோன்றுகிறது.

அப்பாவுக்கு இப்போது எண்பத்தைந்து வயது. உடல் தளர்ந்து, தோல் சுருங்கி வதங்கி காணப்படுகிறார்.

அவரைப் பார்க்கும்போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலநேரங்களில் சிலதவறுகளை நாம் செய்கிறோம்; அது கண்டுபிடிக்கப் படாதவரையில் நாம் அனைவரும் யோக்கியர்கள்தான் என்றே தோன்றுகிறது.

அதுதவிர, இது சரி, அது தவறு என்பதெல்லாம் அந்தந்தக் காலகட்டத்தில் நம் மனநிலையைப் பொறுத்தது என்றும் தோன்றியது.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *