ஆபீஸ் மானேஜர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 301 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

தாமோதர செட்டியார், புதிதாக ஆரம்பித்த ‘குட்ரயுக்தி'” என்னும் பத்திரிகையின் ஆசிரியர். அவருக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். அவருடைய தர்மபத்தினி லோக விஷயங்களுக்கெல்லாம் அகராதி. விளக்கு மாற்றுக்கு விலை முதல், வியன்னா நகரத்துச் சமாசாரம் வரையில் அவளுக்குத் தெரியும். தாமோதர செட்டியாரை நச்சு நச்சு என்று நச்சி ஒவ்வொரு சமாசாரமாக அறிந்து கொள்வாள். 

செட்டியார் நல்ல எழுத்தாளர் என்று சொல்வதற்கு இல்லை. அவருக்குச் சுமாராகக் கதை எழுதத் தெரியும்; கட்டுரையும் எழுதுவார். எல்லாம் ஒரே மூச்சில் எழுதினால் தான் வரும். ஏதாவது எழுத ஆரம்பித்தால், யோகம் செய்பவர் மாதிரி ஏகாக்கிரசித்தம் உடையவராகி விடுவார். காரியாலயத்தில் அவருடைய ஏகாக்கிரசித்தத்திற்குப் பங்கம் வருவதில்லை. வீட்டிலோ அவருடைய சகதர்மிணிக்கு அவர் எழுதத் தொடங்கும்போது தான் சந்தேகங்கள் வந்து விடும். 

ராத்திரிசாப்பிட்டு விட்டு ஏதாவது கதை எழுத உட்காருவார். அவர் தர்ம பத்தினி அருகில் இருப்பாள். 

‘இன்றைக்கு வெற்றிலைக்காரன் ஏன் வரவில்லை?” என்று ஒரு கேள்வி போடுவாள். அப்பொழுது தான் செட்டியார் ஒரு காதல் கதையைச் சித்திரித்துக் கொண்டிருப்பார். 

‘ஜப்பான் யுத்தத்தினால் பவுன் விலை ஏறப்போகிற தாமே?” என்று வெளிநாட்டு வியவகாரத்தில் பாயும் அம்மாளுடைய கேள்வி, 

“கொஞ்சம் பேசாமல் இரு” என்று சொல்லி விட்டுச் செட்டியார் எழுதத் தொடங்குவார். நாலு வரி எழுதி இருப்பார். 

“நேற்று வந்த கடிதத்திற்கு இன்னும் பதில் போட வில்லையா?” என்று அம்மாள் கேட்பாள். 

“ஹும்” என்று கோபத்தோடு கர்ஜிப்பார் செட்டியார். மறுபடி இரண்டு நிமிஷம் அம்மாள் வாயைத் திறவாமல் வெற்றிலையை மெல்லும் காரியத்தில் ஈடுபட்டிருப்பாள். 

“பியாகடை ராகத்தில் இன்று ஒரு கீர்த்தனம் பாடம் பண்ணியிருக்கிறேன்” என்று சங்கீதத்தை ஆரம்பிப்பாள். 

“என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே’ என்று உறுமுவார் செட்டியார். 

“இந்தாருங்கள் பானை ஜலம்; குடியுங்கள்; அடங்கி விடும்’ என்று தம்ளரில் ஜலத்தை எடுத்து முன்னே வைப்பாள். செட்டியார் ஆத்திரத்தோடு அதை எடுப்பார். அவள் முகத்திலேதான் கொட்டப் போகிறாரென்று நமக்குத் தோன்றும். அவரோ வாயைத் திறந்து இரண்டு மிடறாகக் குடித்து விடுவார். 


செட்டியாரால் நாள் தோறும் இந்தத் தொல்லை பொறுக்க முடியவில்லை. வீட்டை விட்டுத் தனியாக ஓர் அறை வாடகைக்குப் பேசி அதில் ராத்திரி வேளைகளில் இருந்து கதைகள் எழுதலாமென்று யோசித்தார். தனியே ஐந்து ரூாய்க்கு ஓர் அறை பார்த்து விடுவதென்று தீர் மானிதுக் கொண்டார்; அவளிடம் சொல்லவே கூடாது” என்றும் சங்கற்பம் செய்து கொண்டார். அந்தச் சங்கற்பம் நழுவி விட்டது. பேச்சுப் பராக்கில் அந்த விஷயத்தைத் தம் தர்மபத்தினிக்குச் சொல்லி விட்டார். 

“நல்ல காரியம்; உங்கள் புஸ்தகங்களைக் கூட அங்கே வைத்துக் கொள்ளலாம். இங்கே காற்றே வருவதில்லை. ஆனால்-“

”ஆனால் என்ன? சொல்லித் தொலை!” 

“நான் உங்கள் யோசனைக்குக் குறுக்கே நிற்க. வில்லையே; நீங்கள் ஏன் இப்படிக் கோபித்துக் கொள் கிறீர்கள்? இந்த வீட்டுக்குப் பதிமூன்று பாய் வாடகை அறைக்கு ஐந்து ரூபாய். ஆக மொத்தம் வீட்டு வாடகை வகையில் பதினெட்டு ரூபாய் போய்விடும். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சொல்வதற்கு முன் கோபித்துக் கொள்கிறீர்கள்.” 

“சொல்லேன்.” 

“பதினைந்து ரூபாயில் இதைவிடப் பெரிய வீடு ஒன்று வார்க்கிறது. அதில் ஓர் அறையை ‘ஆ பீஸ் ரூம்’ ஆக வைத்துக் கொள்வது. அதில் உங்களைத் தவிர வேறு ஒருவரும் போகக் கூடாது, ராத்திரியோ பகலோ நீங்கள் இஷ்டப்படி இருந்து எழுதிக் கொண்டிருக்கலாம். 

செட்டியார் தலையைச் சொறிந்து கொண்டார். சகதர்மிணியின் யோசனையில் நன்மை இருப்பதாகவே நினைத்தார். 

“நீ அங்கேயும் வந்து தொந்தரவு செய்தால்?” 

“இல்லவே இல்லை. நீங்கள் வேண்டுமானால் ‘ஆபீஸ் ரூம் – ஒருவரும் நுழையக் கூடாது’ என்று போட்டு விடுங்கள். 


செட்டியார் புது வீட்டுக்குக் குடி வந்தார். ஓர் அறை ‘ஆபீஸ் ரூம்’ ஆயிற்று, புஸ்தகங்கள், மேஜை, நாற்காலி, பெஞ்சு முதலிய சாமான்களோடு அது விளங்கிற்று. 

வந்த இரண்டாம் நாள் செட்டியார் ஏதாவது எழுதலா மென்று யோசித்தார். ஒன்றும் தோன்றவில்லை தாகமாக இருந்தது; மனைவியைக் கூப்பிட்டு ஒரு தம்ளர் ஜலம் கொண்டு வரச் சொன்னார். அவள் கொண்டு வந்து ஆபீஸ் ரூமின்’ நிலைக்கு அப்புறத்திலேயே வைத்துப் போய்விட்டாள். செட்டியார் எழுந்து சென்று எடுத்துக் குடித்து விட்டு வந்தார். 

“உள்ளே வந்து கொடுக்கக் கூடாதோ?” என்று முணுமுணுத்தார் செட்டியார். 

“நீங்கள் உள்ளே ஒருவரும் நுழையக் கூடாதென்று எழுதியிருக்கிறீர்களே?” என்று பதில் வந்தது. 

மறுநாள் காலையில் செட்டியார் தமக்குப் பிரியமான கம்ப ராமாயணத்தை எடுத்துப் படித்தார். பாரதி பாட்டு, வா.வே.ஸு. ஐயர் கதைகள் இன்னும் சில புஸ்தகங்கள் இவற்றைப் புரட்டிப் பார்த்தார். ஆபீஸுக்கு நேரமாகி விட்ட படியால் போட்டது போட்ட படியே இருக்கக் கிளம்பி விட்டார். மாலையில் வந்து பார்த்தார். எல்லாப் புஸ்தகங் களும் காலையில் இருந்தபடியே பாதி திறந்தும் சிதறியும் கிடந்தன. 

”இந்தப் புஸ்தகங்களை எல்லாம் ஒழுங்காக எடுத்து வைக்கக் கூடாதா?” என்று தர்ம பத்தினியைக் கேட்டார்.

”உங்கள் ‘ஆபீஸ் ரூமீ’ல் நான் எப்படி நுழைவேன்!’ என்று கூறினாள் அவள். 

“இந்த மாதிரியான காரியங்களை நீ கவனிக்காமல் வேறு யார் கவனிப்பார்கள்?” என்று கோபமாகக் கேட்டார் செட்டியார். 


ராத்திரி மிகவும் சுவாரஸ்ய யமாகக் கதை எழுதிக் கொண்டிருந்தார் பத்திரிகாசிரியர். பேனரவில் மை ஆகி விட்டது. “எங்கே, அந்த மை புட்டியை எடு!” என்றார்.

“நான் நீங்கள் கதை எழுதும் போது வந்தால் தொந்தரவல்லவா? உங்கள் ‘ஆபீஸ் ரூமி’ல் நான் நுழைய லாமா?” என்று கேட்டுக் கொண்டே நிலைக்கு வெளியில் நின்றாள் அந்த அம்மாள். 

“இந்தா, இந்தமாதிரி தினந்தோறும் வாக்குவாதம் வேண்டாம். ‘ஆபீஸ் ரூமு’ம் வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம். என்பக்கத்திலேயே வராமல் தீண்டாச் சாதியாக இருந்தது போதும்” என்றார் செட்டியார். அவருக்கு ‘ஆபீஸ் ரூம்’ ஏற்பாடு சலித்து விட்டது. 

“நான் ஒரு யோசனை சொல்கிறேன்” என்று சிரித்தாள் அவர் மனைவி. 

“சொல்லேன்” என்று புன்னகையோடு அவளைக் கோணலாகப் பார்த்தார் செட்டியார். 

“இந்த ‘ஆபீஸ் ரூம்’ இப்படியே இருக்கட்டும்.நீங்கள் இந்த ஆபீஸின் சொந்தக்காரராகவே இருங்கள். என்னுடைய உதவியில்லாமல் உங்கள் ஆபீஸ் வேலை நடக்காதபடியினால் நான் இந்த ‘ஆபீஸ் மானேஜ’ராக இருக்கிறேன். ஏன்? சரிதானே?” 

“சபாஷ்!” என்று மேஜைமேல் தட்டினார் செட்டியார் உத்தரவை எதிர்பாராமலே நிலைக்கு வெளியில் நின்றிருந்த ‘மானேஜர்’ உள்ளே புகுந்தார். 

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *