ஆன்மா ஒன்று ஓலமிடுகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 6,172 
 
 

“நான் எடுக்கலே!” திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுப்பாக ஒலித்த குரல் போகப் போக ஈனஸ்வரமாக ஆகியது. குரல் அடைத்துவிட்டது.

“எந்தத் திருடன்தான், `ஆமா. நான்தான் எடுத்தேன்,’னு ஒத்துக்குவான்!” டீச்சர் கருணாவின் ஏளனக்குரல். (அவளுடைய கணவனின் பெயர் கருணாகரனாம். மிஸஸ் கருணா நாளடைவில் வெறும் கருணாவாகிப்போனது).

“என்ன கருணா?” இன்னொரு டீச்சரின் குரல். நேரத்துடன் வகுப்புக்குப் போகாமலிருக்க ஏதோ வம்பில் பங்கு எடுத்துக்கொள்வது ஒரு சாக்கு.

“என்னோட பார்க்கர் பேனாவை இந்தப் பொண்ணு எடுத்துட்டா. நல்லத்தனமா கேட்டா..,” என்று ஏதோ ஆரம்பித்தாள்.

“இவளா! இவளுக்குத்தான் எழுதவே தெரியாதே? பேருதான் கலைவாணி!”

எத்தனை பேருக்குப் பெயர் பொருத்தமாக இருக்கிறது! கருணைக்கு அர்த்தம் என்னவென்றே தெரியாத இவளுக்கெல்லாம்..! சிரிப்பு வந்தது.

“செய்யறதையும் செஞ்சுட்டு, சிரிப்பைப் பாரு!” டீச்சர் கன்னத்தில் அறைந்தாள்.

இந்தக் கருணா டீச்சரிடம் அடி வாங்குவது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. `எழுது, எழுது!’ என்று என் வலது கை விரல்களை ஒரு பருமனான கட்டையால் எத்தனை தடவை நசுக்கி இருக்கிறாள்!

நானும் எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒவ்வொரு எழுத்தும் ஏதோ நடனம் ஆடுவதுபோல் தெரியும். எப்படி அதைப் படிப்பது, என்ன எழுதுவது என்றெல்லாம் எனக்குப் புரியத்தானில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் நான்தான் கடைசி மாணவி.

நான் தினமும் பள்ளிக்கூடத்தில் அடியும் திட்டும் வாங்குகிறேன் என்று தெரிந்தால் துடித்துப் போய்விடுவார். நான் சொன்னதேயில்லை. பாவம், அவராவது நிம்மதியாக இருக்கட்டும்!

“இப்படியெல்லாம் கேட்டா ஒத்துக்கமாட்டா, கருணா!”

அதற்குப்பின் நடந்ததெல்லாம் யாருக்கோ நடந்ததைப்போல் இருக்கிறது. வேதியல் ஆய்வகத்தை ஒட்டியிருந்த அறையில் என்னைத் தள்ளி, கதவை வெளியில் பூட்டுகிறார்கள்.

ஒரே இருட்டு. ஜன்னல் இல்லாததால் மூச்சு முட்டுகிறது. எத்தனை நேரம் அங்கு இருந்தேனோ! கண்விழித்துப் பார்த்தபோது, அப்பாவும் பாட்டியும் கவலையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“கலை! என்னம்மா ஆச்சு? நீ ஸ்கூல்ல மயக்கம் போட்டுட்டியாம்!” என்றார் அப்பா, கவலையுடன். “அந்த நல்ல டீச்சர்தான் ஒன்னை வீட்டிலே கொண்டு விட்டுட்டுப் போறாங்க!” என்றாள் பாட்டி.

நடந்தது எல்லாம் என் நினைவில் எழுந்தது. “நான் எடுக்கலேப்பா,” என்றேன். அழுகை வந்தது.

“எதையோ பாத்து பயந்து போயிருக்கு,” என்று பாட்டி அனுமானம் செய்தாள். “மொதல்லே சூடா மைலோ குடி. எழுந்திரு!”

“இப்போ ஒண்ணும் வேணாம், பாட்டி. நான் தூங்கறேன்,” என்று எழுந்தவள், அப்பாவையும், பாட்டியையும் இறுக அணைக்கிறேன்.

“கலை! கலை! என்னம்மா?” அப்பா பதறினார். வயதுக்கு வந்த இந்த இரண்டு வருஷங்களாக நான் அப்பாவைத் தொட்டதே கிடையாது.

“எனக்கு ஒங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்பா!” என் துக்கத்தை மறைத்து, சிரிக்க முயல்கிறேன். பிறகு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் இருள். என்னைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் கருமையான, கெட்டிச் சுவர்! எந்தப் பக்கம் போக முயன்றாலும் இடிக்கிறது.

மிரண்டுபோய், “என்னைக் காப்பாத்துங்களேன்!” என்று கத்துகிறேன்.

“நீயும் தற்கொலைக் கேசா?” ஒரு குரல், லேசான சிரிப்புடன் ஒலிக்கிறது.

தற்கொலையா? நான் செத்துவிட்டேனா! ஐயோ! அப்பா துடித்துப்போவாரே!

எங்கள் வீட்டைப் பார்க்க முயல்கிறேன். முடியவில்லை. பயங்கரமான அந்த இருளிலேயே அடைபட்டுக் கிடந்தேன்.

என் ஆத்மா சாந்தியடைய பூசை செய்கிறார்கள். எனக்கும் அந்த இருளிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

வீட்டு வாசலில் நாளிதழ் கிடக்கிறது. முதல் பக்கத்திலேயே என் போட்டோ! இப்போதும் படிக்க முடியவில்லைதான். ஆனால், என்ன எழுதியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

“ஆசிரியையால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்ட மாணவி தூக்கு போட்டுக்கொண்டு இறந்துபோனாள்!”

அப்பா கதறிக் கொண்டிருந்தார்: “கண்ணு! கலைக்கண்ணு! ஏம்மா இப்படி ஒரு காரியம் செய்துட்டே? நீ நல்ல பொண்ணுன்னு எனக்குத் தெரியாதா! எடுக்கலேன்னு நீ வேற தனியா சொல்லணுமா? நீ சொன்னப்போ புரியாம போச்சே!”

கருணா டீச்சர் மட்டும் நிம்மதியாக இருக்கலாமா? நினைத்த மாத்திரத்தில் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். பீரோவில் அடுக்கி வைத்திருந்த புடவைகளுக்கிடையே இருந்தது அது — என் உயிரைப் பறித்த அந்த சிவப்பு நிற பார்க்கர் பேனா.

என்னைப்போலவே கருணாவும் அதிர்ச்சி அடைந்தது தெளிவாகத் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்தவள், அதை ஒரு புடவைகளுக்குள் செருகி, நன்றாக மறைத்துவைத்தாள்.

இவள் செய்த கொடுமையால், அதனால் அடைந்த பயத்தால், என்ன செய்கிறோம் என்று சரியாகப் புரியாமலேயே என் உயிரை மாய்த்துக்கொண்டேனே!

அந்த நிலையிலும் ஒரு சிறு திருப்தி பிறந்தது. உயிருடன் இருக்கும்போது செய்ய முடியாததையெல்லாம் இப்போது சாதிக்கலாம். நான் தொடாமலேயே, பொருட்களை இடம் மாற்றி வைக்க முடியுமே!

சற்றுப் பொறுத்து, புடவைகளின் பின்னால் கையைவிட்டுத் துழாவினாள் கருணா.

பதட்டத்துடன், சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த மேசைமேல் கிடந்த பேனாவைப் பார்த்தாள். மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டது எனக்கு நன்றாகவே கேட்டது.

வேண்டும். நன்றாக வேண்டும். பயம் என்றால் என்னவென்று இவளுக்கு மட்டும் தெரிய வேண்டாமா?

தணலைத் தொடுவதுபோல் அதை ஒரு விரலால் தொட்டாள், தான் காண்பது நிசம்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள நினைப்பவளாக.

அப்பேனாவை எடுத்து டிராயரில் வைத்துப் பூட்டினாள். தான்தான் கைமறதியாக அதை அங்கு வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருப்பாள். முட்டாள்!

மறுநாள் காலை கருணா அந்த டிராயரைத் திறந்து பார்த்தபோது அவள் முகத்தில் தோன்றிய கலக்கத்தை ரசித்தேன். `இன்று பூராவும் தேடட்டும்!’ என்று ஆக்ரோஷமாக முதலில் எழுந்த யோசனையைக் கைவிட்டேன்.

எங்கெங்கோ தேடிவிட்டு, பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டாள் கருணா.

“ஆ!”

இதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தேன்!

பூட்டி வைத்த பேனா எப்படி தன் செருப்புக்குள் புகுந்தது என்று நன்றாகக் குழம்பட்டும்!

அவள் சற்றும் எதிர்பாராத இடங்களில் அப்பேனா முளைத்தது. அரிசிமாவு சம்புடத்தைத் திறந்தபோது, அது சிவப்பாக ஒளிர்ந்தது. மிளகாய்ப்பொடி டப்பாவில் சிவப்போடு சிவப்பாக! எவ்வளவுதான் பத்திரப்படுத்தினாலும், அதற்குக் கால் முளைத்தது.

கருணாவுக்குப் புதிய கவலை பிறந்தது. பள்ளிக்கூடத்தில் இருக்கையில், கைப்பைக்குள் வந்துவிட்டால்? அப்போது வெளியே வந்து விழுந்து, தன்னைக் காட்டிக்கொடுக்காது என்று என்ன நிச்சயம்?

நடுங்கும் கரங்களுடன் அடிக்கடி பையைத் திறந்து சோதனை போட்டாள். நிம்மதி போயிற்று.

“இந்த வீட்டிலே பேய் இருக்குங்க. வீடு மாத்திடலாம்,” என்று படபடப்புடன் அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தான் மிஸ்டர் கருணா.

நடந்ததை அவள் சொல்லக் கேட்டு, “பேனா கிடைச்ச விஷயம் வெளியில தெரியக்கூடாது. நீ மாட்டிப்பே!” என்று எச்சரித்தான். “அதைத் தூக்கிக் குப்பையில போடு!”

அந்தப் பாழாய்ப்போன பேனாவுக்காக என் உயிரை வாங்கியவள், “நல்ல பார்க்கர் பேனா! எவ்வளவு ஆசையா வாங்கினது!” என்று தயங்கினாள்.

“அப்போ, கொலைக் குத்தத்துக்காக ஜெயிலுக்குப் போறியா?” என்று கத்தியவன், “எங்கே அந்த சனியன்? குடு. நெருப்பில போட்டுடறேன்,” என்று மேலும் குரலை உயர்த்தினான்.

அவ்வளவு சீக்கிரம் அவளைத் தப்பிக்க விடுவேனா!

“இங்கதானே வெச்சேன்!” என்று குழப்பத்துடன் அவள் மேசையைத் தடவினாள்.

என்னால் எழுதவோ, படிக்கவோ இயலாமல் போனது பிறவியிலேயே என் மூளையிலிருந்த ஏதோ கோளாறினால் என்பதுகூடத் தெரிந்திராத இவளெல்லாம் ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு! நான் பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த பயமும் துக்கமும் வெறுப்பாக மாறின.

மாதக்கணக்கில் நான், பேனா, கருணா மூவரும் விளையாடிய இந்த விளையாட்டின் இறுதியில் நான்தான் வென்றேன்.

`மன நிலை சரியாக இல்லை,’ என்ற காரணத்துடன் உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்டாள் எனக்குப் பொய்யாகத் திருட்டுப்பட்டம் சூட்டியவள்.

வெறித்த பார்வையுடன் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தவளை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு கல்யாணம் செய்துகொண்டான் மிஸ்டர் கருணா.

எனக்கு இனிமேல் அங்கு என்ன வேலை? அப்பாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. விரைந்தேன்.

மாலை போட்டிருந்த என் படத்தின்முன் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் அப்பா.

`நம்புங்கப்பா. நான் எடுக்கலே!’ என்றேன் கெஞ்சலாக.

ஆனால் அவருக்கு என் ஓலம் கேட்கவில்லை. அழுதபடியே இருந்தார்.

கதாசிரியரின் குறிப்பு: இளம் பருவத்தில் திடீர் மரணம் அடைந்தவர்கள் பொருட்களை இடம் மாற்றி வைப்பார்கள். சில சமயம் விளையாட்டாக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *