ஆனந்தி இல்லாத வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 4,026 
 

“இப்ப ஆனந்திய வித்தே தான் ஆகணுமா….?” கலங்கிய குரலில்… ஒரே கேள்வியைத்தான் தான் வேறு வேறு வடிவத்தில் காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

சித்தப்பா தனக்குள் என்னவோ முணங்கிக் கொண்டார். அதில் வேண்டும் வேண்டாம் இடையே நிற்கும் அவரே தேடும் இடைவெளி இருந்தது.

‘ஆனந்தீ………!’ என்று எங்கிருந்து கூப்பிட்டாலும்.. குதியாட்டம் போட்டுக் கொண்டு ஓடி வரும் ஆனந்தி நீங்கள் நினைப்பது போல நாய் இல்லை. நாய் தான் நன்றி உள்ளது என்று ஆனந்தியின் வருகைக்கு முன்புவரை நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை. சத்தியமாக இல்லை. நாயை விடவும் நன்றி உள்ள பிராணி ஆடு என்பது எனக்குள் உள்ள புரிதல். எங்களுக்குள் உள்ள புரிதல். வீட்டுக்குள் சாவகாசமாக நடந்து அப்படியே ஒரு மேற் பார்வை பார்த்து விட்டு வந்து வாசலில் படுத்துக் கொள்ளும் அல்லது நின்று கொள்ளும் ஆனந்திக்கு தான் ஆனந்தி என்று தெரியும். ருக்மணி என்றால் திரும்பி பார்க்காத ஆனந்தி…….ஆனந்தி என்றால் படக்கென்று திரும்பி பார்க்கிறதே. ஆனந்திக்கு இன்னும் கூட பல விஷயங்கள் தெரியும். அது நமக்கு தெரியாது என்பதால் அதை அதுக்கு தெரியாது என்று இத்தனை நாள் நினைத்திருக்கிறோம்.

வீட்டுக்குள் ஆனந்தியின் தலை எட்டும் அளவுக்குத்தான் அவளுக்குத் தேவையானதை வைப்போம். எங்களுக்கு தேவையானது இருந்தால் கூட அது கண்டு கொள்ளாமல் வளைந்து நிமிரும் கடைக்கண் பார்வையை பார்த்துக் கொண்டு வந்து விடுவாள். அளந்து வாய்த்த அவளின் வால் பற்றிய தவிப்பு எப்போதாவது அவள் வேகமாய் ஓடி வருகையில் படக்கென்று தன்னை தானே திரும்பி பார்த்துக் கொள்ளலில் இருந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன்.

இலை தழை மட்டும்தான் ஆடு தின்னும் என்று நீங்கள் சொன்னால் நான் நம்ப மாட்டேன். ஆடு போண்டா தின்னும். வடை தின்னும். சோறு தின்னும். நான் தின்னும் எல்லாமே ஆனந்திக்கும் தான். கடைசிப் பிள்ளை போல தான் ஆனந்தி. அதுவும் கடைசிப் பிள்ளை பெண் பிள்ளையாக இருந்தால் அந்த வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் எங்கள் வீடு. சில நாட்களில்…அம்மாவிற்கு உடம்புக்கு முடியவில்லை என்றால்… தனியாக சென்று மேய்ந்து விட்டு திரும்பி விடுவாள். மேட்டாங்காடு… மலை அடிவாரம் எல்லா வழியும் அத்துப்படி. சில நாட்களில் பக்கத்து வீட்டு ஆடுகளுக்கு வழி காட்டியாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்வாள். அத்தனை பெரிய பொறுமைசாலி. அவள் சாலையைக் கடக்கும் நேக்கு போக்குக்கே இன்னும் ரெண்டு போண்டா வாங்கித் தரலாம். அத்தனை நுணுக்கம்.

காலையிலிருந்தே தண்ணீர் குடிக்க மாட்டேன் என்று அடம்.

நாங்கள் பேசிக் கொண்டது அவளுக்கு கேட்டு விட்டது என்று தான் நினைக்கிறேன். காமெடிக்கு சிரிக்கும் போதெல்லாம் வாய் அசைப்பதை நிறுத்தி விட்டு வானம் பார்த்த மாதிரி நம்மைப் பார்த்து ….”ம்ம்ம்மே……” என்று கத்துவாள். அதுதான் சிரிப்பென்று பிறகு நாங்கள் புரிந்து கொண்டோம். கூப்பிட்டால் வருவதும்….போய் படுத்துக்கோ என்றால் போய் படுத்துக் கொள்வதுமாக எல்லாமே புரிகிறது என்றால்… இன்று அவளை விற்க இருக்கும் விஷயமும் புரிந்து தான் இருக்கும். அதுதான் அத்தனை இறுக்கத்தோடு எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அப்படி என்ன உயிர் போற விஷயமா….. ஆனந்தியை விற்கும் அளவுக்கு… என்றால்… ஆம். வேறு வழியில்லாத போது வீட்டையே வித்திருக்கிறோம். இன்று வீட்டில் இருக்கும் ஆனந்தியை விற்கிறோம். ஆனந்தி கண்களில் அனல் மங்கிய ஒளி. எங்களையே பார்த்துக் கொண்டு நின்றதை பார்க்க சகிக்கவில்லை. ஆயிரம் கேள்விகள்…. அந்த பார்வையில். ஒற்றை பதிலற்ற மௌனம் சாவினும் கொடுமை.

பரீட்சைக்கு பயந்து வீட்டுத் தூணை பற்றி நிற்கும் சிறுமியைப் போல தான் ஆனந்தி. கழுத்தை கட்டிக் கொண்டு அழாதது தான் மிச்சம். கயிற்றைக் கட்டிக் கொண்டு ஒளி இழந்த கண்களில் துக்கம் பீறிட பார்ப்பதெல்லாம் ‘நிஜமாகவே விக்க போறீங்களா’ என்று முனங்குவது போலத்தான். எல்லாருக்கும் அழுகை முட்ட ஆனந்திக்கு மட்டும் அன்பு முட்டிக் கொண்டு நின்றது.

சந்தைக்கு போன பின் ஆனந்தி எல்லாம் இல்லை. ஆடு தான். எல்லா ஆடுகளும் ஒன்று தான். ஆனந்தியும் ஆடான தருணத்தை சுமக்க முடியவில்லை. நடுங்கிய கையில் ஆனந்தியை விற்ற காசு….கறை படிந்து வியர்த்திருந்தது.

திரும்பி பார்க்காமல் நடந்தாலும்….துக்கத்தில் இருந்து எழும் ஆனந்தியின் குரல்…. சவுக்கால் அடிப்பது போல. உயிர் போகும் வலியை வழி நெடுக சொட்டிக் கொண்டே வேகமாய் சித்தாப்பாவோடு வீடு வந்தேன்.

ஆனந்தி இல்லாத வீடு அத்துவான காட்டில் குரலற்ற ஊமை வடிவம் பெற்றிருந்தது.

இரண்டு நாட்களுக்கு பின்….

கறி எடுக்க கடை வெளியில் நின்றிருந்தேன்.

கறிக்கடையில் நாலைந்து தலையில்லாத ஆடுகள் தலைகீழாய் தொங்கி கொண்டிருக்க…. ரெண்டு மூணு ஆட்டுத்தலை மூக்கு நீட்டி செல்பிக்குத் தயாரானது போல…செல்பில் அமர்ந்திருந்தன. திக்கென்றிருந்தது. ஒருவேளை ஆனந்தியை இங்கு கொண்டு வந்திருந்தா…. உள்ளே வேகமாய் எதுவோ பாய்ந்தது.

“இல்லடா இங்கெல்லாம் கொண்டு வந்திருக்க மாட்டாங்க….” தம்பி எவ்வளோ சொல்லியும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

“சரிடா… இது ஆனந்தி இல்ல… ஆனா ஆனந்தி மாதிரி யாரோ ஒருத்தங்க வித்த ஆடா இருந்தா……..” சட்டென நான் விலகி நடக்க ஆரம்பித்தேன். வீடு வரை ஆனந்தி போலவே கத்திக் கொண்டே ஓட வேண்டும் போல் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *