ஆத்மார்த்தங்கள் அழிவதில்லை…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 1,796 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சனிக்கிழமை…! பிற்பகல் ஒன்றரை மணி ஆகியிருக்கக் கூடும்….! மகேந்திரன் தனது அலுவலகக் கடமைகளைப் பொறுப்போடு செய்து விட்டிருந்த மன நிறைவோடு வெளியே வந்து கொண்டிருந்தார். மகேந்திரன் தான் தாமதித்து வந்தமைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். புன்முறுவலை மட்டும் பதிலாக உதிர்த்து நின்றார் பாங்…!

அன்றாடம் நடைபெறும் ஒன்றுதான்…! அறிவார்ந்தோரின் பண்பொழுகச் சம்பிராதயப்படி கேட்டுக் கொள்ளும் ஒரு மன்னிப்புத்தானே….! குற்றம்-மன்னிப்பு என்று கருதிக் கொள்ளத்தக்க எதுவும் இருப்பதில்லை. மகேந்திரன் பாங் இருவரும் பரஸ்பரம் முகம் மலர்ந்து முறுவலித்துக் கொண்டனர்; பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தனர்…!

இருவரும் மெக்ஸ்வல் சாலையிலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றுபவர்கள். மகேந்திரன் ஒரு பகுதியின் மேலதிகாரி; பாங் அவருக்கு உதவி அதிகாரியாகப் பணியாற்றுபவர். கோப்புகள் அனைத்தையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துத் தன் கடமைகளைச் செவ்வனே செய்து பாங் அனுப்புவார். மகேந்திரன் மறுபரிசீலனை செய்யாமல் “ஒப்பம்” இடுவதில்லை. பாங் மீது நம்பிக்கைக் குறைவு என்பதல்ல; தன்னுடைய கடமையினைத் தான் நிறைவாகச் செய்து விட வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருப்பவர்.

இன்றுவரை பாங் அவர்களின் பார்வைக் கோப்புகளில் எந்தவிதப் பிழை பாடும் கண்டறிந்ததில்லை. மகேந்திரன் பாங் மீது நூற்றுக்கு நூறு விழுக்காடு நம்பிக்கை கொண்டிருப்பவர் தான். நம்பிக்கை – நட்பு என்பது வேறு: “நாணயம்” என்பது வேறு..! மனச்சாட்சியோடு, தான் பெறும் சம்பளத்துக்கு உரிய அளவு தன்னுடைய பொறுப்புகளைச் செய்தாக வேண்டும் என்பதில் மகேந்திரன் மிகுந்த கருத்தும் கவனமும் உடையவர் என்பதைப் பாங் அனுவபவத்தில் அறிந்திருந்தார்.

இருதரப்பிலும் புரிந்துணர்வு எப்போதும் இருப்பதால் ஏறக்குறைய இருபது வருட நட்பு இனிது நீடிக்கின்றது. உடன் பணியாற்றுபவர்களின் ஒருமித்த பொறாமைக்கும் பூசல் விளை குத்தல்களுக்கும் இடம் கொடாமல் உள்ளத்தால் ஒன்றிப் பழகி வருபவர்கள். காலத்தின் முதிர்ச்சியில் கனிந்து வளர்ந்த நட்புக்குரியவர்கள்.

மகேந்திரன் ஓர் உயர் அதிகாரி. பாங் தனது உதவி அதிகாரி தான் என்றாலும், மகேந்திரன் தன் முனைப்பாக எந்தவொரு தீர்மானத்தையும் செய்து விடமாட்டார். இருவரும் கலந்தாலோசித்துத் தான் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவார்கள். மகேந்திரன் பட்டதாரி என்பதனால் மேலதிகாரி; பாங் அனுபவசாலி என்பதனால் உதவியதிகாரி..! ஏட்டறிவுக்கும் பட்டறிவுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வை நன்கு புரிந்து கொண்டிருந்ததனால் மகேந்திரன் மானசீகமாகத் தன் தலைமையதிகாரியாகப் பாங் அவர்களை ஏற்றுக் கொண்டிருந்தார். பாங் அவர்கள் மகேந்திரனை விட ஏறத்தாழப் பத்து வயது மூத்தவர்; முதிர்ந்தவர். இருபது ஆண்டு கால ஓட்டத்தின் வேகத்தை அவர்களின் “நரைமுடி” உணர்த்தியது. பாங் ஓய்வு பெறப்போகும் காலக்கட்டத்தில் இருந்தார்.

அதோ..! “மார்க்கெட் ஸ்ட்ரீட்” முனையில் இருக்கும், ஸ்ரீ ஷண்முக விலாஸ் உணவகம். இப்போது பிற்பகல் இரண்டு மணி ஆகியிருந்தது. சனிக்கிழமையல்லவா… அலுவலகம் “மதியம்” முடிந்து, அலுவலகப் பணியாளர்கள் மத்தியான உணவுக்குப் பெரும்பாலும் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். உணவகத்தில் கூட்டம் இல்லை; இருவரும் “பரபரப்பு” இல்லாமல் அமைதியாக “இலைச் சாப்பாட்டை” இனிது சுவைத்து மகிழ்ந்தனர்.

எப்போதும் “வீச்சத்தையே” உணர்ந்து கொள்ளும் தம்மின உணவின் தார்மீகம் எண்ணிச் சலித்துக் கொள்வார் பாங். மகேந்திரனுடன் செல்லும் மதிய உணவு பாங் அவர்களுக்குப் பாலமுதம்….!

இருவரும் எதிர்த்தாற்போல் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்தமர்ந்து களைப்பாறப் பேசிக் கொண்டிருந்தனர். மகேந்திரன் நின்று கொண்டே “ஊதித்” தள்ளினார். பாங் மென்மையாக மென்று வாய் மணக்கும் தாம்பூலத்தை இரசித்து உமிழ்ந்து கொண்டிருந்தார். எதிர்ப்புறத்திலிருந்து பேருந்து வந்து விட்டது; இருவரும் ஏறிக் கொண்டனர்.

தேசிய நூலகம் வந்து சேர்ந்தவுடன் மகேந்திரன் ‘வணக்கம் நன்றி’ சொல்லிக்கொண்டு இறங்கிக் கொண்டார். இதுவும் இயல்பான ஒன்று என்பதனால் பாங் எப்போதும் போல் விடை கொடுத்து அனுப்பினார்.

மகேந்திரன் தேசிய நூலகத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அகிலனும் பார்த்தசாரதியும் ஜெயகாந்தனும் அவர்தம் கரங்களில் தவழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஏறக்குறைய பிற்பகல் மூன்றரை மணி ஆகியிருக்கக்கூடும்…! சூரியனின் வெம்மைக் கதிர்கள் உலகைச் சுட்டெரிக்கப் புறப்பட்டது போலக் காந்திக் கொண்டிருந்தன…

தேசிய நூலகத்தின் பக்கச் சாரலில் அமைந்துள்ள காப்பிக் கடையில் ஒரே கூட்டம்…! எங்காவது இடம் இருக்கின்றதா? என்று மகேந்திரன் ஒரு கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். “ஜில்” என்று தாகத்தைத் தணிக்கும் வகையில் ஓர் “ஐஸ் கச்சான்” சாப்பிடலாம் என்பது அவர் ஆசை. பள்ளிப் பருவம் முதல் இந்த “ஐஸ் கச்சான்” மீது அவருக்கு அப்படியொரு அலாதி பிரியம் உண்டு. ஓர் இன்ப நுணுக்க இரகசியம்…! அதற்காகவே நூலகத்திற்கு வருகின்றாரா? அல்லது வரும் போக்கில் அதை விரும்பிச் சாப்பிடுகின்றாரா? இன்று வரை மகேந்திரன் அவர்களாலேயே பிரித்துணர்ந்து பார்த்துக் கொள்ள முடிந்ததில்லை.

எப்படியோ புத்தகச் சுமையுடன் காத்திருந்து, தன் இலட்சியப் பேராவினை முடித்துக் கொண்டு விட்ட போது தான் அவருக்கு ஓர் ஆத்ம திருப்தியே ஏற்பட்டது. வழக்கம் போல் தேசிய நூலகத்திற்கு நேர் பின்னால் அமைந்திருக்கும் “ஃபோர்ட் கேனிங்” பொழுது போக்கு மைதானத்திற்குச் சென்றார்.”எப்போதும்” அமர்ந்து “இன்பமாய்ப்” பொழுது போக்கும் அந்த அடர்ந்து வளர்ந்த மரத்து நிழலின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையில் “கைச் சுமையை” இறக்கி வைத்தார். கைத்துண்டை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.

எப்போதும் தயார் நிலையில், கொஞ்சம் அதிகப்படியாகவே வாங்கி வைத்திருக்கும் “எலுமிச்சை ரச மிட்டாய்” ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு உலவிக் கொண்டிருந்தார். உமிழ்நீரை மிகுந்த இரசிப்போடு உறிஞ்சி உறிஞ்சி விழுங்கிக் கொண்டிருந்தார்.

மெதுவோட்டக்காரர்கள் சில பேர் தனித்தனியாகவும், குழுவினராகவும் ஓட்டத்திற்கு முந்தி உடற்கூற்று “வெப்பச் சீரமைவுக்கு என்று மேற்கொள்ளும் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்து இரசித்துக் கொண்டே மகேந்திரன் முன்னும் பின்னும் நடை பயின்று கொண்டிருந்தார். வாசிப்பதற்குரிய மனோ நிலைக்குத் தன்னைத் தயார்ப் படுத்தும் அமைப்பில் நிலை குலை சிந்தனையை ஒருநிலைப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

‘உடலும் உள்ளமும் உரிய பயிற்சியின் வயப்படுவது’ என்பது உளவியல் வல்லாரின் மனோதத்துவக் கருத்தாகும். உலவிக் கொண்டிருந்த மகேந்திரன் உள்ளம் இப்போது ஒரு கட்டுக்கோப்புக்குள் வந்து அமைதியுற்றது. மகேந்திரன் தன் வெள்ளெழுத்துக் கண்ணாடியை உறைக்குள்ளிருந்து எடுத்து, மஞ்சள் நிறச் சிறு துணியால் அழுந்தத் துடைத்துக் கொண்டார்.

இப்போது மாலை மணி ஐந்தரை ஆகியிருக்கக் கூடும். பகலவன் மேற்றிசையில் பணிவன்போடு மெல்ல அடைந்து கொண்டிருக்கும் ஓர் அதிமாலைப் பொழுது…! ஆதவனின் வெம்மைச் சுடரொளி தன்னுடைய உலகின் மீதான ஆதிக்கத்தைத் தளர்த்தியிருந்தது.

மாலைத் தென்றலின் மிக மென்மையான தழுவல் வெப்பத் தணிப்புக்கு ஓர் இதமாக இருந்தது. ஊருக்குள் ஓர் உயிர் நண்பர்…! பேச்சுத் துணைக்கு அவர் – பாங்; இப்போது இல்லை. மகேந்திரனுக்கு உற்ற நண்பனாக இப்போதைக்கு இருப்பது நூல்களே..! மகேந்திரன் படிக்கத் தொடங்கினார்.

அலுவலகம் முடிந்தால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பேருந்து நிலையத்தில் பார்க்கலாம்; அப்படியொரு அவசரம்…! சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் கூடப் பறந்து கொண்டு தான் இருப்பார்கள். விடுதலை பெற்ற சிறைக் கைதி ஒருவன் எவ்வளவு ஆவலோடு வீட்டுக்குச் செல்வான்;

அத்தகையதொரு ஆத்மார்த்த அவசரங்களை அலுவலகம் முடிந்து திரும்புவோரிடையே காணலாம். அப்படியிருக்க மகேந்திரன் மட்டும் ஏன் இவ்வாறு பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றார்; அவரைப் பொறுத்த வரை அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அண்மைய காலம் வரை செம்பவாங் கிராமப் புறப் பகுதியில் தரை வீட்டில் வாழ்ந்து வந்தவர். இயற்கைச் சூழலில் வாழ்ந்தவர்க்கு செயற்கைச் சூழல் அடுக்குமாடி வீட்டு வாழ்க்கை ஒத்து வரவில்லை. வயதான தாயாரும் விதவைத் தங்கையும் மட்டுமே இருக்கும் அந்த நான்கு சுவர்களுக்குள் போய் அடைபடுவதை அந்தரங்கப் பூர்வமாக பொறுத்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குச் வீட்டுக்குச் சென்று விட்டாலும் வான்வெளி மாடம் தான் அவர் உலவும் கூடம்…! அங்கும் தனிமைதான்; இங்கும் தனிமைதான். ஒரு பெரிய வித்தியாசம் வீட்டில் இருக்கும் தனிமை கூண்டுக் கிளியின் தனிமை..! பொழுது போக்கு மைதானத்தின் தனிமை சிறகடித்துப் பறக்கும் பறவைகளின் சுதந்திரத் தனிமை; அமைதி…! பரந்து விரிந்து கிடக்கும் திறந்தவெளி; பார்க்கும் இடம் எல்லாம் ‘பசுமைக்” காட்சிகள்..! கண்ணுக்கும் கருத்துக்கும் சிந்தனை விருந்தளிக்கும் தனிமை…!

படிக்கலாம்: நடக்கலாம்; பார்க்கலாம்: சிந்திக்கலாம்; எழுதலாம்…! கற்பனை விரிவுக்கு உகந்த தனிமை…! இத்தியாதி காரணங்களால் இவ்வாறு பொழுது போக்குவது மகேந்திரனுக்குப் பழக்கம் ஆகிவிட்டது. அதுவே நாளடைவில் “வழக்கம்” ஆகிவிட்டது.

மகேந்திரன் இதய சுத்தியோடு நண்பர் பாங் அவர்களிடம் அவ்வப்போது சொல்லும் காரணங்கள் இவை மட்டும்தான்…! என்னதான் இருந்தாலும் மகேந்திரனைக் காட்டிலும் பத்து வயது மூத்தவர். பட்டறிவின் நுணுக்கத்தோடு இவற்றிற்கெல்லாம் அப்பால் உள்ள அவர்தம் இதயத்து அடித்தளத்தில் அழுந்திக் கொண்டிருக்கும் அந்த மெய்மைக் காரணத்தைக் கண்டு பிடித்தார். அது அவருக்கு அவ்வளவு எளிதில் அமைந்து விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகேந்திரனின் உள்ளத்தை மிகவும் நுட்பமாக ஊடுருவி அவர்தம் புரையோடிய சிந்தனைக் காயங்களின் வடுக்களை மென்மையாக வருடிக் கொடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் காலத்தின் கனிவில் நட்பின் முதிர்ச்சியில் அவர் தெரிந்து கொண்டிருந்த ஒரு காரணமே தலையாயதாக இருந்தது. ஆம். விரக்தி.! காதல் தோல்வி..!

இருவரும் இதயமார்ந்து பழகத் தொடங்கிய அந்த அடி நாளிலேயே இந்த உண்மையை பாங் தெரிந்து கொண்டு விட்டார். இருபது ஆண்டு காலப் பழக்கத்தில் எத்தனையோ நாட்களில் எத்தனையெத்தனையோ சந்தர்ப்பங்களில் பாங் மகேந்திரனிடம் பக்குவமாகப் பேசிப் பார்த்துவிட்டார். அவர் பேசும் போதெல்லாம் மகேந்திரன் ஏதாவது ஒரு ‘குறுக்குசால் ஒட்டி” அவரைச் சிரிக்க வைத்து அல்லது சிந்திக்க வைத்து அனுப்பி விடுவார்.

ஒருநாள் பாங் மகேந்திரனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது.வாழ்க்கை வாழ்வதற்கே. வெறுமையாக்குதல் மடமை” என்று, ஒரு தத்துவார்த்தக் கருத்தினைச் சொன்னார். மகேந்திரன் சற்றும் தாமதியாமல், என்றும் – இன்றும் கூட நான் ஆத்மார்த்தத்தோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன்” என்று, பதிலளித்து பாங் அவர்களின் பேச்சுத் தொடக்கத்தை முறியடித்து விட்டார். ‘நான் சரண்” என்று, பாங் சிரித்துக் கொண்டே தன் தோல்வியை ஒப்புக் கொண்டபோது மகேந்திரன் தன் காதல் எழுச்சியின் சித்தாந்தத்தை நிரல்படுத்திக் கூறத் தொடங்கினார்.

உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலந்தொட்டே பழகி வந்தோம். பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இழந்து விட்டாள். வேலை தேடிச் சென்று அலைந்தாள் அவள்: பல்கலைக் கழகத்தில் இடம் பெறுவதற்குப் போராடினேன் நான். அவளுக்குக் கல்வியமைச்சின் தேர்வுப் பகுதியில் வேலை கிடைத்தது. எனக்குப் பல்கலைக் கழகத்தில் இடமும் கிடைத்தது.

அவள் வேலை செய்து வருமானம் பெற்றுக் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொண்டிருந்தாள். என் பெற்றோருக்குப் ‘பாரமாக” நான் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஆமாம்; என் தகப்பனார் ஒரு சாதாரண தொழிலாளி. என்னுடைய தாயாரை அவர் என்றுமே வேலைக்கனுப்பியதில்லை. நான் படித்துப் பட்டம் பெற்று வந்து ஒரு நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால் தங்கள் வறுமை தீர்ந்துவிடும் என்று, இன்பக் கனவின் திளைப்பில் கடன்பட்டுப் படிக்க வைத்தார். எனது பல்கலைக் கழகப் படிப்புக்குத் துணை நின்றது என் தந்தையாரின் கடின உழைப்பும் என் தாயாரின் பிடிவாதமும் சிக்கனச் செலவும், வைராக்கிய மனமும்தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. அன்றும் சரி: இன்றும் இனி என்றும் என் மிடிமை வாழ்க்கையின் அடி நாளினை நான் மறந்து விட மாட்டேன். இப்படியொரு சிரம திசையில் எங்கள் குடும்பம் இருந்து கொண்டிருக்கும் போது தான் என் தங்கைக்கு நல்ல இடத்தில் “வரன்” அமைந்து வந்தது. அதனையும் கை நழுவி விட இயலாமல் என் தந்தையார் மேலும் கடன்பட்டு என் தங்கையின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக முடித்து வைத்தார். நானும் பட்டதாரியாக வெளியே வந்து சேர்ந்தேன்.

நல்லவேளை…! எங்கள் குடும்பம் சிறியது. என் பெற்றோர்கள் “திட்டமிட்டுக் கொண்டு” வாழ்ந்தார்களா…? இயற்கை வகுத்த விதியா? எனக்குத் தோன்றவில்லை. சிறிய குடும்பமே சீரிய குடும்பம்…! என்பது நமது அரசுக் கொள்கை.

ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சினைகள் எழும்போது குடும்பத் தலைவர்கள் மனம் சோர்ந்து விடுவது இயல்பு…! குறிப்பாகப் பணம் தொடர்பான செயலாக்கம் என்றால் மிகவும் தளர்ந்து போவதுண்டு…!

என்னுடைய குடும்ப நிலை இவ்வாறு இயங்கும்போது. என்னவளின் குடும்பத்துத் தார்மீகமும் இவ்வண்ணமே இயங்கி வருவதைக் கேட்டுணர்ந்து, “வீட்டுக்கு வீடு வாயிற் படி” என்ற தத்துவத்தைப் பகிர்ந்து கொண்டு சிந்தித்துக் கொள்வோம்.

“பிரச்சினைகளின் மொத்தக் கூட்டுருவமே மனிதன்” என்பது எத்துணை அருமைத் தத்துவம்…! வாழ்க்கைப் போராட்டங்களுக்கிடையேயும் எங்களின் அவ்வப்போதைய குறிப்பாக சனி, ஞாயிறுகளில் எங்களின் சந்திப்புகள் இதய வீணையின் இன்ப நாதமாக எதிரொலிக்கும்.

‘அறிவாலயம்” என்று சான்றோரால் போற்றப்படும் தேசிய நூலகத்தில் சந்திப்போம்: ஒரு வாரத்திற்குரிய தேவைப் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துச் சுமந்து கொண்டு வந்து விடுவோம். எங்களின் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ற ஒரே இன்பத் தின்பண்டம் அந்த “ஐஸ் கச்சான்” என்பதுதான். குறைந்த விலையில் வயிற்றையும் மனத்தையும் குளிர்விக்கும் இன்பத் தின்பண்டம்.

அதன்பின், ஃபோர்ட் கேனிங் பொழுது போக்கு மைதானத்திற்குச் செல்வோம். அங்கு மணிக்கணக்கில் இருதரப்புக் குடும்ப நிலவரங்களைப் பரிமாறிக் கொண்டு அமர்ந்திருப்போம். “பஞ்சும் நெருப்பும்” பக்கத்தில் இருந்தால் பற்றிக் கொள்ளும் தார்மீகம் பிறக்கவில்லை…! நனைந்த பஞ்சு.

நம்பிக்கைச் “சுடர் அழுத்தம்” இல்லாக் கக்கி முக்கிக் கற்கள். நெஞ்சகக் கனலின் முன் மூலக்கனல் அடிப்பட்டுப் போய் விட்ட நிலைமை…!

“மனிதன் என்றால் அவன் தவறு செய்வான். ஏனென்றால் அவன் உணர்ச்சிகளுக்கு ஆட்படக் கூடியவன்; தவறு செய்யாதவன் மனிதன் அல்லன்; தவறுகளையே செய்து கொண்டிருப்பவனும் மனிதன் அல்லன்….” என்பது புத்த பிரானின் அருள்வாக்கு. அமுத வாக்கு…!

உணர்ச்சிகள் மட்டுமே தலையோங்கியிருந்த உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் “தொட்ட குறை” இருந்ததுண்டு. மறைவிடம்” தேடிச் செல்லும் அளவு வரம்பு மீறும் மனோதிடம் எங்களுக்கு இருந்ததில்லை. இதய வீணையின் உணர்வுக் கம்பிகளை இனிது மீட்டி, அந்த நாதத்தின் மென்மை இசையில் இரண்டறக் கலந்ததுண்டு…!

ஓரளவுக்குப் பக்குவமடைந்த உள்ளத்தோடு பழகத் தொடங்கிய காலக் கட்டத்தில், குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டியவர்களாக இருந்தோம். எங்கள் குடும்பத்தில் கடன் தொல்லை…..! அவளின் குடும்பத்திலும் என்னைப் போலவே, சுமை தாங்கியாய்க்” கடன் தீர்க்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரே அண்ணன்….! அவன் வாலிப வயதின் எழுச்சிக்கு வடிகால் தேடிய நிலையில் கட்டறுந்து சென்று கொண்டிருந்தான். “தன்னைப் பேணிக் கொள்கையில்” தன் குடும்பம் மறந்து தொலை தூரம் போய் விட்டான்.

இருபதாம் நூற்றாண்டு எழுபதுகளின் பிற்பகுதியில் முப்பது வயதைக் கடந்து கொண்டிருந்தோம். திருமகளின் அருட்பார்வையினால் இரு குடும்பத்திலும் ஒரு குறையும் இல்லாத ஓர் அமைதி நிலை…!

வழக்கம் போல் சனிக்கிழமையன்று நூலகம் வந்தோம். ஒரு வாரம் படிப்பதற்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொண்டோம். “ஐஸ் கச்சான்” சாப்பிட்டோம்; அடர்ந்து படர்ந்து அரிய பசுங்குடை விரித்தாற் போன்று தழைத்திருக்கும் மரத்து நிழலில் அமைந்திருக்கும் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

பெற்றோர்களைச் சந்திக்க வைத்து. சம்பிராதய பூர்வமாகப் பெண் கேட்கும் படலம் ஆரம்பித்து வைப்போம். என்பது எங்கள் அன்றைய சந்திப்பின் “மகஜர்” ஆகும். எங்கள் தீர்மானத்தை இனிது தொடங்கி வைத்தேன். என் மீது நம்பிக்கையும் அளவில்லாப் பற்றும் அன்பும் கொண்ட என் பெற்றோர்கள் என்னுடைய வாழ்க்கைப் பேரவாவினைப் பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார்கள்.

சோதனைகள் நிறைந்தது தான் வாழ்க்கை. “சோதனையின் கொம்பு ஒடித்தால் சாதனையாகும்” என்பது ஒரு தத்துவம்…! கொம்பை ஒடிப்பதிலும் ஒரு தன்மை வேண்டும்; மென்மை வேண்டும்….! “வன்மை” என்று ஆகிவிட்டால் சோதனை உருமாறி வேதனை ஆகிவிடும்.

அவள் தரப்புப் பெற்றோர்கள் சம்மதிக்க மறுத்து விட்டார்கள். “எங்கள் தலை மறையும் வரை நீங்கள் கூறும் “சிங்கப்பூரிய சமுதாயம்” உருவாக வேண்டாம்…!” என்று, மிகவும் கடுமையாக – வன்மையாகக் கூறி விட்டார்கள். மாப்பிள்ளை வீட்டாராகிய என் பெற்றோர்கள் என்னுடைய இன்பமும் நலமும் கருதித் தாழ்ந்து போயினும் அவர்கள் தளர்ந்த பாடில்லை.

அலுவலகத் தொலைபேசித் தொடர்பில் தொடர்பு கொண்டு அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். பெற்றோரின் மறுதலிப்பு..! தன் வாழ்க்கையைப் பெரிதெனக் கொண்டு பிரிந்து சென்று விட்ட அண்ணன் பெரிதமைத்து வந்து தனக்கே உரிய தார்மீக உரிமையோடு கூடிய பயமுறுத்தல்….! ஆகியனவற்றைக் கூறினாள். ஆகக் கடைசியாக அவள் ஒன்றை விக்கலோடும் விம்முதலோடும் சொன்னாள்.

‘இப்பிறப்பில் இதயத்துள் வைத்துப் பூஜித்து வாழ்வேன்; இனியொரு பிறப்பு உண்டென்றால் அப்பிறப்பில் இணைந்து மகிழ்வோம்’ என்பது அன்றைய அவளது தொலைபேசித் தொடர்பின் இறுதியுரை….! நானும் பதிலுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே…! இடமளிக்காமல் தொடர்பைத் துண்டித்து விட்டாள்.

அதற்குப் பின் எந்தக் காரணம் கொண்டும் எங்களுக்குள் ‘தொலைபேசித் தொடர்பும் கூட” நிகழ்ந்ததில்லை. அந்த அளவுக்குப் “புனிதத் தன்மையைக்’ காத்துக் கொண்டு இருக்கின்றோம்…! சபலங்களுக்கும் சலனங்களுக்கும் இடம் கொடுக்காத நிலை இருக்குமானால் மனிதத் தன்மையே புனிதத் தன்மை வாய்ந்தது தான்…!

ஐந்தாண்டு இடைவெளிக்குள் தான் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள்…? காதல் தோல்வியை எதிர் கொண்டபோது கலங்கிய நாட்கள்…! இருதய நோய்க்குப் பலியான என் தந்தையின் மறைவுக்காக வருந்திய நாட்கள்….! என்னுடைய ஒரே தங்கையின் கணவர் சாலை விபத்துக்குள்ளாகி மரணமுற்ற இதயம் நொந்து அழுது வடிந்த நாட்கள்…! “பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்…” என்ற பழந்தமிழ் மொழியினுக்குப் பாத்திரமாகித் தோய்ந்து துவண்டேன்.

அலுவலகத்துக்குச் சொந்தத் தொடர்பாகப் பத்தாண்டுகளில் எந்தத் தகவலும் இருந்ததில்லை. தாயும் தங்கையும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தொலைபேசித் தொடர்பு எண் தெரியாது. நண்பர்கள் என்று எவரோடும் பழக்கமில்லை; ஏனென்றால் உயிர் சினேகிதங்கள்” இல்லை. பாங் உடனிருப்பவர்…! மேசையில் மீது எழுதி வைக்கப்பட்டிருந்த செய்திக் குறிப்பு… “மாலை மணி ஐந்துக்கு முன்னம் அலுவலகத்தில் சந்திக்கிறேன்’ நண்பர்.

அவசரமான அலுவலகப் பணிகள் நிறைந்து இருந்ததனால் அதனைப் பொருட்படுத்தாமல் வேலையில் கவனமாக இருந்தேன். மாலை மணி ஐந்து என்று கடிகாரத்தின் முள் காட்டுகிறதோ என்னவோ அதற்கு முன்னம் அலுவலகக் காற்றாடிகள் அசைவற்றுப் போகும்; மின்விளக்குகள் அணைந்து விடும். அலுவலகத்தில் நிலவிய இந்தப் பரபரப்பே மாலை ஐந்து மணியாகி விட்ட மகத்துவத்தை உணர்த்தியது. எப்போதும் போல் சற்று அமைதியாகவே எனது கடமைகளின் நிறைவுகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். தொலைபேசிச் செய்திக் குறிப்பினை முற்றாக மறந்து விட்டிருந்தேன்.

மனித வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் நிகழ்ந்தேறுவதை விட, எதிர்பாராதவைகள் தாம் அதிகம் நடந்தேறுமோ…? நான் சற்றும் எதிர்பாராத “அவள்” வந்து நின்றாள். ஒரு நிமிடம் கதிகலங்கிப் போனேன். எதுவும் சொல்லத் தோன்றவில்லை; அவளுக்கும்தான்…!

“பொம்மலாட்டம்” போல் ஒரு நிகழ்வு அமைந்தது. பொம்மைக் காட்சியில் பின்னணிக் குரல் இருக்கும். இங்கு அதுவும் இல்லை. பேசா மடந்தையாக நின்று பெரிதும் கலங்கிய நிலையில் அவள் பயபக்தியோடு இருகரம் தாங்கி ஒரு “செந்நிறக்” கூடு தந்தாள். சிரத்தையுடன் பெற்றுக் கொண்டேன்.

அவள் மாடிப் படிகளில் இறங்கிச் சென்று கொண்டிருந்தாள். எனக்கு அமைதி கொள்ளவில்லை. ஆதாரபூர்வமாய் விளங்கும் அமைதி தரும் அந்த மரத்து நிழல் அமர் பலகைக்கு எவ்வாறு சென்று சேர்ந்தேன்… நிதானிக்க முடியவில்லை.

திருமணப் பத்திரிகை…! அதனிடையில் ஒரு சிறு துண்டுப் படிவம்..! அதில்; “உள்ளத்தால் உங்களோடும், உடலால் பிறிதொருவரோடும் வாழப் போகிறேன்: ஓய்விருக்குமானால் ஒரு சில மணித்துளிகள் என் மணக்கோலம் காண வாருங்கள். ஏனென்றால் அந்த எழிற்கோலம் என்னைப் பொறுத்த வரை உங்களுக்காகவே….! என் விழிகள் உங்களைத் தேடும். வருவீர்களா?” என்று கேள்விக் குறை முத்தாய்ப்புடன் எழுதப்பட்டிருந்தது…!

மகேந்திரன் பாங் அவர்களிடம் கடந்த கால நினைவலைகளின் நீரோட்டங்களை நிரல்படுத்திச் சொல்லிமுடித்த போது பாங் அவர்களின் கண்மணிகளில் கலக்கங்கள் கரைந்துருகிக் கொண்டிருந்தன. இதயமுள்ளோர் எவருக்கும் இயல்பாக நிகழக் கூடியதுதான்…!

மகேந்திரன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் வேலைக்குச் சேர்ந்து ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தது! அதற்கு முன் “அதிகாரி – துணை” என்ற அமைப்பில் பழகி வந்தவர்கள், காலப்போக்கில் ஆறாத நட்புணர்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள்.

பெரும்பாலான சனிக்கிழமைகள் பாங் அவர்களும் மகேந்திரனோடு தேசிய நூலகப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வார். எப்படியாவது மகேந்திரனுடைய மனத்தைக் கரைத்து “வாழ்க்கை வாழ்வதற்கே” என்னும் தத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று பாங் எண்ணிக் கொண்டிருந்தார்.

“உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இன்றைய பொழுது உங்களுக்குத் துணையாக இருக்கிறேன்…” என்று பாங் முகமலர்ந்து சொல்லும்போது, “பாங் அவர்களே… நான் என்ன காதல் செய்யவா போகின்றேன். அல்லது காதலர்களின் களியாட்டங்களைக் கண்டு ரசிக்கவா போகிறேன்? ஆத்மார்த்த நினைவுகளின் ஆர்ப்பரிப்பில் இரண்டறக் கலந்து இன்பம் துய்க்கப் போகின்றேன்; பேச்சுத் துணைக்கு உங்களின் வருகை இருக்குமானால் பெரிதும் மகிழ்வேன் என்று சிரித்துக் கொண்டே மகேந்திரன் சொல்லும் போதும்; அந்தச் சிரிப்பிலும் ஓர் ஆதங்கம் இருப்பதைப் பாங் அவர்கள் பிரித்துணர்ந்து கொண்டு வருந்துவார்.

இவ்வாறு தனித்திருக்கும் போது, “இடித்தற் பொருட்டே நட்பு” என்பதை எண்ணிக் கொண்டு எத்தனை எத்தனையோ முறை இதமாகவும், இனிமையாகவும் பாங் எடுத்துரைத்து அறிவுறுத்தியிருக்கின்றார். அப்போதெல்லாம் மகேந்திரன் அரியதொரு புன்னகை பூத்தே அந்தக் கருத்துகளைமென்று விழுங்கிக் கொள்வார். “இவன் சிரித்து மழுப்பப் பிறந்தவன்” என்று, பாங் தன் மனத்துக்குள் எண்ணித் தன் தோல்வியை நெஞ்சுக்குள் அசை போட்டு நெறித்துக் கொள்வார்.

மகேந்திரன் தன்னுடைய தாயார் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருந்த ஒரே காரணம் தன்னுடைய விதவைத் தங்கைக்கு ஒரு வரன் அமையும் வரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதுதான். இந்தவோர் பொய்க் காரணத்தைத் தன் ஆருயிர் நண்பர் பாங் அவர்களிடமும் சொல்லிக் கொள்ள ஏனோ மகேந்திரனுக்குத் துணிச்சல் வரவில்லை. இதயத்து அடியூற்றின் நீரோட்டமாய் இருப்பவர்களிடமும் பொய்க் காரணங்கள் சொல்லுவதற்கு மனச்சாட்சி இடந் தருவதில்லை. மகேந்திரன் பாங் அவர்களிடம் தாய் உட்படத் தன் உறவினர்களிடமிருந்து தான் தப்பித்துக் கொண்டிருக்கும் உண்மையை மிகவும் தெளிவாக விளக்கிக் கூறியிருந்தார்.

இப்போதெல்லாம் ஒரு பத்தாண்டுகள் கடந்துவிடுவது என்பது ஏதோ ஒரு மின்னியக்கம் போலத் தோன்றுகிறது. இதற்குக் காரணம் இடையறாத வேலைகளும் பொறுப்புகளும் ஆகும். எழுதத் தொடங்கிய எழுத்தாளனுக்கு நேரம் போவதே தெரிவதில்லை. பிரச்சினைகளில் போராடும் மனித குலத்தின் சுழற்சி. பூமியின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து விடுகின்றதோ….? ஒரு பத்தாண்டுக் காலம் பறந்து சென்ற வேகம் மகேந்திரன் – பாங் எண்ணிப் பார்த்துக் கொள்ள முடியாத அமைப்பில் இருந்தது.

எப்போதும் போல் ஒரு நாள் சனிக்கிழமை…! மகேந்திரன், பாங் இருவரும் மிகவும் ஓய்வாகச் சென்று மதியம் உணவருந்திய பின் ஃபோர்ட் கேனிங் பார்க் வரை நடந்து சென்று அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: அதற்கு ஓர் அடையாளமாக, “ஒரு லெமன் மிட்டாய்” என்று கூறிக் கொண்டே, எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் மிட்டாய்ப் பொட்டலத்திலிருந்து ஒரு மிட்டாயைப் பாங் அவர்களுக்குக் கொடுத்து விட்டு, தானும் ஒரு மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டார்.

மகேந்திரன் தனக்கொரு வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டு விட்டிருப்பார் என்று இனிப்புச் செய்தியைக் கேட்க ஆவலோடு அவர்தம் முகத்தைப் பார்த்தார். “என் விதவைத் தங்கையைத் திருமணம் செய்து கொள்ள ஒருவர் முன் வந்திருக்கிறார் என்று மகேந்திரன் கூறியபோது பாங் அவர்களுக்கு அது அத்துணை பெரும் மகிழ்ச்சியை அளிக்காவிட்டாலும் இந்த வாய்ப்பு அமைந்து விட்டால் இனி மகேந்திரன் உறவினர்களிடமிருந்தும், தாயாரிடமிருந்தும் தப்பிக்க முடியாதல்லவா…? நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்.. இப்படிச் சுற்றி வளைத்துச் சிந்தித்துக் கொண்டு மகிழ்ந்தார்: பசுமை மனம் கொண்ட பாங்! பாங் தனது பெரு மகிழ்ச்சியை மகேந்திரனுக்குக் கூறியதோடு அவர்தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

பிரச்சினைகளைக் காரணங்காட்டிக் கொண்டு நெடு நாட்களை ஓட்டிக் கொண்டிருந்த மகேந்திரனுக்குத் தாயாரின் ஒரு நெருக்குதல் ஏற்பட்டு விட்டதைத் திரு பாங் அவர்களிடம் மகேந்திரன் சொல்லி வருந்திக் கொண்டார்.

ஒருவரின் கைச் சுமையை – தோள் சுமையை இன்னொருவர் கைமாற்றி – தோள் மாற்றிக் கொள்ளலாம். மனச் சுமையை மாற்றிக் கொள்ள முடியாது என்பது மகேந்திரனுக்குப் புரியும். ஆயின், மனத்தின் அழுத்தங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இதயச் சுமையை இறக்கி வைத்து விட்டதொரு ஆயாசத்தை அந்தப் பொழுதுக்கு உணரலாம்.

உலகத்தில் மனிதர்கள் எதிர்பார்ப்பது நடப்பதை விட எதிர்பாராதவைகள் தாம் அதிகம் அதிகமாக நடந்து விடுகின்றன. இதற்குக் காரணம்; இறைவனின் புள்ளி விவரக் கணக்குக்கு, மனிதர்களின் இயல்புக் கணக்கு ஒரு சமன்பாட்டில் வந்தமையாததாக இருக்கலாமோ?

எது எப்படியோ மகேந்திரனுடைய அண்மைய வாழ்க்கையில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்கள் மகேந்திரன் சற்றும் எதிர்பாராதவை தாம்..! ஒன்று: ஏறக்குறைய முப்பத்தைந்து வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் தன் இளம் விதவைத் தங்கைக்கு ஏற்புடைய வரன் அமைந்தது. இது மகிழ்ச்சிக்குரிய எதிர்பாராதது. இன்னொன்று..

மகேந்திரன் தன் தங்கை வளர்மதிக்கு “வளர்பிறைக் காலம்’ தோன்றிய மகிழ்ச்சிப் பெருமிதத்தில் தன்னுடைய தாயார் முதல் உற்றார் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் வியந்து போகும் அளவுக்கு மாப்பிள்ளையின் எதிர்பார்ப்புக்கும் மேலாகவே எல்லாமும் செய்து வழியனுப்பி வைத்தார்.

தனக்கிருந்த ஒரு தர்மசங்கடத்துக்கு ஒரு தீர்வு ஏற்பட்டு விட்டதாகக் கருதித் தான் இத்தனைச் சீரும் சிறப்பும் செய்து மகிழ்கின்றார் என்று, தார்மீகமாகப் பேசிக் கொண்ட அக்கம் பக்கத்தாரின் பேச்சு மகேந்திரனின் செவிகளில் வந்து வீழ்ந்தபோது, எப்போதும்போல் இனிமையும் எளிமையும் வாய்ந்த முகமலர்ச்சியோடு அதனை ஜீரணித்துக் கொண்டிருந்தார்.

மகேந்திரனின் தாயார் உட்பட உறவினர்கள் அனைவரும் “பேச்சு வார்த்தைகளைத்’ தொடங்கி விட்டார்கள். இப்போது தோன்றியிருக்கும் இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது..? முகங்கடுத்துப் பேசி விடுவது ஒரு பெரிய காரியமல்ல; வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நமக்கென்று நாலு பேர் வேண்டும் என்று நினைப்பவர்கள், அப்படியாக அவசரப்பட்டுப் பேச மாட்டார்கள். நாசுக்கானதோர் அணுகு முறையைப் பற்றி நாள்தோறும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

‘நாற்பத்தைந்து வயது ஆகிவிட்ட முக்காற் கிழவனுக்குப் பெண் கொடுக்க யார் சம்பதிப்பார்கள்? சமுதாய அமைப்பு ரீதியில் நன்கு சிந்தித்துப் பார்த்துப் பேசுங்கள்,” என்ற அமைப்பில் ஒரு போடு போட்டு அனைவரையும் வாயடைக்கச் செய்து விட்டார்.

கண் நிறைந்த கணவரை விரும்பிக் கொண்டிருக்கும் கலியுகத்துப் பெண்களில் யார்தான் நாற்பது வயதுக்கும் மேலாகி விட்ட, நரை திரை தோன்றிய மூப்புடை மகேந்திரனை விரும்பித் திருமணம் செய்து கொள்ள முன் வருவார்கள்? அறிவு பூர்வமாகச் சிந்தக்கத் தூண்டிவிட்டு அமைதியாக இருந்த போது அதற்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்களாக உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது மெல்ல நழுவிக் கொண்டிருந்தார்கள். அதைத் தனது பெரிய வெற்றியாகக் கருதிக் கொண்டு அந்தச் சில நாட்கள் முழுவதும் “ஐஸ் கச்சான்” சாப்பிட்டு ஆத்மார்த்த அடிமரத்து நிழலின் குளிர்ச்சியில் அமைதியும் ஆனந்தமும் ஒரு சேரக் கண்டார்.

காலம் கனிந்து கொண்டிருந்தது. ஒரு சில ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்தக் கலியுகத்தில் கரைந்துருகும் ஆண்டுகளின் வேகம், காற்றினும் கடிதாக இருக்கின்றதோ என்று மகேந்திரன் அவ்வப்போது சிந்தித்துக் கொள்வார்.

அன்றொரு நாள்…! வழக்கம்போல் மகேந்திரன் தன் கடமைகளில் ஒரு “திருப்திகரம்” ஏற்பட்ட பின் அலுவலகத்தை இழுத்துப் பூட்டிக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்த போது மாலை மணி ஐந்தரைக்கும் மேலாகியிருந்தது. வழக்கம் போல் பாங் தலைவாயில் நிலையில் காத்துக் கொண்டிருந்தார். இருவரும் பேசிக் கொண்டே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள்.

மகேந்திரன், பாங் இருவரும் தத்தமது பேருந்துக்காகக் காத்து நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது. மூன்றாவது ஒரு நபராக அவர்கள்தம் தொடர்புடையார் ஒருவர் வந்து சேர்ந்தார்.

மகேந்திரன் கிஞ்சித்தும் எதிர்பாராத ஒன்று நிலைபெற்றுக் கொண்டிருந்தது. ஆம்; அவரின் முன்னாளைய ‘ஆத்மார்த்தம்” அன்புருவாய் நெகிழ்ந்து வந்தது.

லியாவ் மெங் சோகமே உருவமாகத் தளர்ந்து போய் வந்து கொண்டிருந்தாள். யார்; யாரை? எப்படி எதிர்கொள்வது…? மகேந்திரன் புருவத்தை நெறித்துக் கொண்டிருந்தார். இந்தப் பிரச்சினைக்கே இடமில்லாமல் செய்து விட்டால் லியாவ் மெங்.

பள்ளியில் படிக்கும்போது மகேந்திரன் தன்னுடைய தமிழாசிரியருக்கும், மற்றும் ஆங்கிலப் பாடங்கள் போதிக்கும் தமிழ் இன ஆசிரியர்களுக்கும் கரங்கூப்பி வணக்கம் சொல்வதுண்டு. இளம் பிராயத்தில் அவனைக் கிண்டல் செய்வது போல, அவனைத் தனித்துக் காணும் போது லியாவ் மெங் வணக்கம் என்று சிரித்துக் கொண்டே கூறுவாள். நாளடைவில் மகேந்திரனுக்குப் பிடித்தமான ஒரு பண்பாட்டுப் பெருமிதம் என்பதை உணர்ந்து கொண்ட போது அவர்களிருவரும் சந்திக்கும் போதெல்லாம் பக்தி சிரத்தையோடு மகேந்திரனுக்கு வணக்கம் சொல்லுவாள் லியாவ் மெங்.

இப்போதும்; மகேந்திரன் சற்றும் எதிர்பாராத நிலையில் முன்னைய பழக்கத்தைப் போலவே, கன்னங்குழியச் சிரித்துக் கொண்டே கரம் கூப்பி வணக்கம் சொன்னாள். மகேந்திரன் பதிலுக்குக் கரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு, தன் இனிய நண்பர் பாங் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் கரங்கூப்பிக் கொண்டார்கள். சொற்கள் மட்டும் சீன மொழி…!

நயத்தகு நாகரிகம் என்பார்களே… அந்த முறைப்படி, மகேந்திரன் அவள்தம் இல்லறத்தின் நலம் விசாரித்தார். அவள் கண் கலங்கினாள். மகேந்திரனின் கைகள் அவள் கண்ணீரைத் துடைக்கப் பரபரத்தன. அவள் இன்னொருவரின் மனைவி: பக்கத்தில் பாங் நிற்கிறார். உணர்ச்சி வயப்பட்டு விடக் கூடாது என்று அறிவுபூர்வமாகச் சிந்தித்துக் கொண்டு அவள் தம் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். மகேந்திரனுக்கும் கண் கலங்கிக் கொண்டிருந்தது.

ஆத்மார்த்தங்களின் அலைமோதல்களை நீடிக்க விடக்கூடாது என்று கருதிய பாங் அவர்கள். ஆட்சேபணை இல்லையென்றால் அதோ அந்த இருக்கைகளில் அமர்ந்து ஆற அமரப் பேசியிருந்து செல்வோமே… என்று கூறிய போது. இருவரும் துவாலையால் தங்கள் முகங்களை அழுந்தத் துடைத்துக் கொண்டார்கள்.

தெலுக் ஆயர் தொடக்கப் பள்ளியை அடுத்துள்ள பேருந்து நிறுத்தத்தின் முன் குற்றப் புலனாய்வுத் துறை இலாகா அலுவலகத்தின் பக்கச் சாரலில் ஒரு சிறு பொழுது போக்கிடம் இருக்கிறது.

அந்த இடத்தைத் தான் சுட்டிக் காட்டினார் பாங்.மூவரும் சாலையைக் கடந்து அங்கு போய் அமர்ந்து பேசத்தொடங்கினர்.

லியாவ் மெங் தன் வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகக் கூறியபோது மகேந்திரன் கதி கலங்கிப் போனார். ஊழிக் காலத்தின் பிரளயம் உலகத்தை நிர்மூலமாக்குவது போல ஒரு பிரமை மகேந்திரனின் அகக் கண்களில் தோன்றியது. இயல்பாகவே இளகிய மனத்தையுடைய பாங் இரு துளிக் கண்ணீர் சிந்தி, இந்தத் துன்பச் செய்தியின் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அந்தத் துன்பச் செய்தி தான் என்ன… அது சிங்கப்பூரையே சோகக் கடலில் ஆழ்த்திய ஒரு துயரச் சம்பவம். ஆம். ஜூரோங் கப்பற் பட்டறையில் “ஸ்பைரோல்ஸ்” எண்ணெய்க் கப்பல் வெடி விபத்துக்குள்ளானது. சிங்கப்பூர் வரலாறு காணாத ஒரு பெரும் விபத்து. நாட்டையே அதிர்ந்திடச் செய்து, அல்லோல கல்லோலப்படுத்திய பெரும் தீ விபத்து.

ஜுரோங் கப்பற் பட்டறையில் கப்பல் கட்டும், பழுது பார்க்கும் அமைப்பில் மின்னியல் தொழில் நுணுக்கத் துறையின் மேலதிகாரியாகப் பணியாற்றியவர் லியாவ் மெங்கின் கணவர் திரு ஓங் எங் குவான். வெடி விபத்துக்குள்ளாகி அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் கருகிச் செத்த முப்பத்து மூன்று பேரில் லியாவ் மெங்கின் கணவரும் அடங்கி இருந்தார் என்பது தான் அந்தத் துக்கச் செய்தி,

மகேந்திரனும் பாங்கும் ஆண் மக்கள் அல்லவா…? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு லியாவ் மெங்குக்கு ஆறுதல் சொன்னார்கள். காலத்தின் கரைசலில் துன்பங்கள் இளகிப் போவது தான் உலகத்தின் இயற்கை. ஆனால் லியாவ் மெங் இப்போதும் அழுதாள்.

சிங்கைத் திருநாட்டின் வரலாற்றுக் குறிப்பேடுகளில் இடம் பெறத் தக்க அளவு, வரலாறு காணாத ஒரு பெரும் கோர விபத்துக்குள்ளானவர்களில் லியாவ் மெங்கின் கணவரும் ஒருவர் என்பது: உண்மையாகவே மகேந்திரன் அறிந்திராத ஒரு செய்தி. பாங் அதை உறுதிப்படுத்திக் கூறினார்.

என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க திருமணத்துக்கு வந்திருந்த போது பார்த்த நான், அதன்பின் இன்றுதான் சந்திக்கிறேன்! என் கணவர் பற்றிய விபரம் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை தான் என்று கூறி, லியாவ்மெங் அந்த உண்மையை ஒப்புக் கொண்டாள்.

“மகேந்திரனைப் பார்த்து லியால் மெங் சொன்னாள்; நீங்கள் கால தாமதமாகத் தான் அலுவலகத்தை விட்டுச் செல்வீர்கள் என்று எனக்குத் தெரியும. அதனால்தான் தொலைபேசித் தொடர்பில்கூட முன்னறிவிப்பு எதுவும் செய்யவில்லை. நேரிடையாகச் சந்தித்து விடலாம் என்று வந்தேன். ஒரு பத்து நிமிடம் முன்பின் ஆகிவிட்டது. உங்கள் அலுவலகம் வரை சென்று விட்டுத் தான் திரும்பி வந்தேன்..!”

தன்னுடைய திட்டமிட்ட சந்திப்பு வருகையைத் தெளிவு படுத்தினாள்,

மகேந்திரனும் பாங்கும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு நிமிடப் பார்வைக்குப் பின், மகேந்திரன் தன் பார்வையை லியாவ் மெங் பக்கம் திருப்பினார். அந்தப் பார்வையில் வியப்பும் வினாவும் தெறித்துக் கொண்டிருந்தன.

லியாவ்மெங் மகேந்திரனுடைய முகத்தை ஒருமுறை கூர்ந்து பார்த்தாள். தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டாள். “யாசிப்பது” என்று வந்துவிட்ட பின் ஏனைய உணர்வுகளுக்கு இடம் கொடுக்கலாமா? என்று, அறிவு பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டாள்.

“எனக்குத் திருமணம் நடந்து ஏழாண்டுகள் ஆகிவிட்டன. ஆறரை ஆண்டுகள் வரை அடையப் பெறாத ‘மகப்பேற்றினை’ எனக்குத் தந்து விட்டு, என்னையும் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையையும் அனாதையாக்கி விட்டுப் போய் விட்டார்” என்று கூறிக் கொண்டிருந்த லியாவ் மெங் தன்னையுமறியாமல் “கோ வெனக்” கதறி விட்டாள். இப்போதும் மகேந்திரன், பாங் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். லியாவ் மெங் கண்களைத் துடைத்துக் கொண்டு மகேந்திரனைப் பார்த்து: “நான் உங்களிடம் ஒன்றை “யாசிக்க வந்தேன்” என்று கூறினாள். மகேந்திரன் சற்றும் தாமதியாமல், என்னைப் புரவலன் ஆக்கி விடாதே உரிமையோடு கேள்… என்று கூறினார்.

அப்படியா…? வியாவ் மெங் இப்போது மென்மையாகச் சிரித்துக் கொண்டாள். இதழ்க் கடையோரம் மென்னகை

குமிழ்ந்தது. குழிந்தது. மகேந்திரனையும், பாங்கையும் ஒரு முறை மிகவும் ஆழமாகக் கண்ணோட்டம் இடுவது போலப் பார்த்துக் கொண்டு, தன் விழைவைக் கூறலானாள்.

அவள் அப்படி என்னதான் கேட்கப் போகிறாள்…? என்று இருவரும் ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். மூவரும் சற்று நேரம்: மூன்று வேறு வகையான கோணங்களில் சிந்தித்துக் கொண்டிருந்தது போல ஓர் அமைதி நிலை..!

லியாவ் மெங் தன் கோரிக்கையைச் சொல்லத் தொடங்கினாள்; கேட்டு முடித்தார். பாங் உண்மையிலேயே அதிர்ந்து போனார். மகேந்திரன் சற்றும் எதிர்பாராததொரு விந்தையான “யாசிப்பு” என்று சிந்தித்துக் கொண்டாலும், அது குறித்து மிகவும் ஆழமாகச் சிந்தித்துக் கொள்ள எதுவும் இல்லை என்ற அமைப்பில்: “அதற்கென்ன அப்படியே ஆகட்டும்….!” என்று. சற்றும் தயங்காமல் பதில் சொன்னபோது, பாங் அவர்கள் வியப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தார்.

“இவன் மனிதனல்ல; மனிதருள் மாணிக்கம்; தெய்வ அருட் கருணை வாய்ந்தவன்…” என்றெல்லாம், பாங் தன் மனத்துக்குள் சிந்தித்துக் சிந்தித்துக் கொண்டு. மகேந்திரனை உள்ளுக்குள் பாராட்டிக் கொண்டிருந்தார்.

ஆம்; ஏறக்குறைய நிறைமாதக் கர்ப்பிணி நிலையில் நின்று கொண்டிருக்கும் லியாவ் மெங் கேட்ட கோரிக்கை இதுதான்..! எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை நாளடைவில் எனக்குத் தந்தை யார்? என்று கேட்கும் போது, நானும் அந்தப் பிள்ளைச் செல்வமும் வருந்தாமலிருக்க ஓர் உதவி செய்யுங்கள். பிறக்கப் போகும் பிள்ளைக்குத் தங்களின் பெயரைத் தந்தையின் பெயராகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பீர்களா?

இவ்வாறு லியாவ் மெங் திடங் கொண்ட நிலையில் ஒவ்வொரு வார்த்தையாக எண்ணி எண்ணி உதிர்த்த போது, அவளது தயக்கம் என்பது பிரித்துணர்ந்து கொள்ளத் தக்கதாயிருந்தது.

இவள் இதைத் தான் கேட்கப் போகிறாள் என்று, ஏதோ திட்டமிட்டு, ஏற்கனவே சிந்தித்து முடித்து வைத்திருந்த பாவனையில்; எந்தவித் தயக்கமும் கலக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டு விட்ட மகேந்திரனின் மனோபாவத்தைக் கண்டு லியாவ் மெங், பாங் வியந்து போய் நின்றார்கள்.

லியாவ் மெங் மன திருப்தியோடு புன்னகைத்தாள். பேருந்து வர அவளை வழிகூட்டி அனுப்பி வைத்து விட்டு, நண்பர்கள் இருவரும் மேலும் சிறிது நேரம் பேசியிருந்தார்கள்.

ஒரு சில வாரங்கள் ஓடிக் கழிந்தன. லியாவ் மெங்கின் தொலைபேசித் தொடர்பைப் பாங் எதிர்கொண்டார். மகேந்திரன் தன் கடமைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது, பாங் மிகவும் ஜாக்கிரதையாகத் தான் அணுகுவார். இன்று மாலை நாலரைமணி ஆகிய போது, பாங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரண்டு தேனீர் கொண்டு வருமாறு சொல்லி விட்டு, மெதுவாக மகேந்திரனின் தனியறைக்குள் நுழைந்தார். தன்னிடமிருந்த சில கோப்புகளின் விபரம் பற்றி விரித்துரைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது. தேனீர்க் கோப்பைகள் வந்து சேர்ந்தன. தேனீர் அருந்திக் கொண்டிருக்கும் போது பாங் தொலைபேசிச் செய்தியை மகிழ்ச்சியோடு அறிவித்தார்.

மகேந்திரனுக்குத் தலைகால் புரியவில்லை. அத்தனை மகிழ்ச்சி…! அலுவலக நேரத்தைக் காத்திருந்து, அது கடந்த பின்னர்; இருவரும் புறப்பட்டு வந்து “ஸ்ரீ சண்முக விலாஸ்” சென்று இனிப்பு, காரம் அவளுக்கு உணவு ஆகியவை வாங்கிக் கொண்டு மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தனர். இனிப்புச் செய்தி வழங்கியருளிய பாங் அவர்களுக்கு ஓர் அல்வாத்துண்டு; ஈன்றெடுத்து உவகையுடன் இனிது அமர்ந்திருக்கும் லிவாய் மெங்குக்கு ஒரு மைசூர் பாகு..! தன்னுடைய மகிழ்ச்சிக்கு ஒரு கேசரித் துண்டு..!

லியாவ் மெங் குழந்தையைக் கையிலேந்தி மகேந்திரனிடம் கொடுக்க, மகேந்திரன் முத்தமழை பொழிந்து கொண்டிருக்க, மகேந்திரனின் தாயாரும் தங்கை குடும்பத்தினரும் வந்து சேர, இனிப்புப் பண்டங்கள் விரும்பாத பாங் இப்போது இன்னொரு பாதாம் அல்வாவைச் சுவைத்து விழுங்கிக் கொண்டிருந்தார்.

“எனக்கு ஆட்சேபணையில்லை; இதோ இன்னொரு துண்டு பாதாம் அல்வா என்று மகேந்திரன் வேடிக்கையாகக் கூறிக் கொண்டே எடுத்துக் கொடுத்தபோது, இன்றைக்கு நான் எத்தனை அல்வாவும் சாப்பிடுவேன் என்று பாங் கூறிய போது, எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பாங் அவர்களின் பட்டறிவுப் பேச்சின் நுண்மையை உணர்ந்து கொண்டார்களா?

“சுகப் பிரவசம்” என்பதனால் அன்றே வீட்டுக்கு அனுப்பப் பெற்றிருந்த தாய், சேய் இருவரையும் அழைத்து வந்து, வாடகை வண்டி ஏற்பாடு செய்து மகேந்திரன் தன் தாயாரையும் துணையாக லியாவ் மெங்குடன் அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வாடகை வண்டி “விர்” எனக் கிளம்பி விரைந்து கொண்டிருந்தது. அந்த வண்டி சென்ற திக்கையே மகேந்திரன், பாங் ஆகியோர் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

– கற்பனை மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1995, தமிழவேள் நாடக மன்றம், சிங்கப்பூர்.

மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *