ஆத்தா – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,343 
 

அலமேலுபுரம். பசுமையான கிராமம். நாற்பது வீடுகள்,ஒரு ஆஞ்சநேயர் கோவில், ஒரு சிறிய நூற்ப்பாலை என்று அடக்கமான கிராமம். அந்த நூற்பாலையை நம்பித்தான் அந்த கிராமமே இருந்தது.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள மகிழ மரத்தடியில் வடை,பஜ்ஜி சுட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள் அனாதையான மீனாட்சி பாட்டி. அங்கு வரும் நூற்ப்பாலை தொழிலாளர்களுக்கு அன்போடு பரிமாறுவாள்.

அப்படி அங்கு சாப்பிட வருபவர்களுள் சண்முகமும் ஒருவர். நிறைய பேர் பிறகு காசு தருகிறேன்னு சொல்லி போய்விடுவர். ஆனால் சண்முகம் தானும் அனாதை என்பதால் ஆத்தா, ஆத்தா என்று பாசத்தோடு பேசுவார்.

“ஆத்தா…வேற எதாவது வேணுமா? என்னோட வந்து தங்குன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறே” என்பார்.

“வேண்டாம் ராசா…இப்படி அன்பா நாலு வார்த்தை பேசினா அதுவே இந்த அனாதைக்கு போதும்ப்பா” என்று கண் கலங்குவாள் பாட்டி. சண்முகம் பாட்டிக்கு நிறைய உதவ நெகிழ்ச்சியோடு படர்ந்தது பாசம்.

ஒரு நாள் வழக்கம் போல சண்முகம் மகிழமரத்தடி நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். ஒரே கூச்சலாய் இருந்தது. கூட்டத்தை விலக்கி சென்றவர் அதிர்ச்சியில் நின்றார். ஆத்தா, ஆத்தா என்று அவர் அழைக்கும் அந்த பாச ஜீவன் இறந்து கிடந்தது. கூட்டம் சிறிது நேரம் சலசலப்பை செய்து கரைந்தது. சண்முகம் தவிர வேறு யாரும் அங்கில்லை. கடைசியில் சண்முகமே தன் ஆத்தாவை தூக்கிக்கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வந்து மகிழ மரத்தடியில் அமர்ந்தார்.
கண்களை மூடியபடி மரத்தில் சாய்ந்திருந்தார்.

ஆத்தாவின் நினைவுகள் நெஞ்சுக்குள் ஓடின. “களைப்பா இருக்கியே…எதாச்சும் சாப்பிடுறியாப்பா” – ஆத்தா கேட்பது போல இருந்தது.

அவர் கண்களில் கண்ணீர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *