ஆதம்பூர்க்காரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,125 
 

‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் ‘ என்று கண்ணபிரான் சொன்னபொழுது, நானுந்தான் என்று அரையாண்டுத் தேர்வும் சேர்ந்து கொண்டது.

தமிழ் ஐயா நீலமேகம் அட்டவணையைப் படித்ததற்கு அடுத்த பத்து நாளும் முதலாம் பானிப்பட் யுத்தமாகவும், பத்து வரியில் கண்ணகி மதுரையை எரித்ததாகவும், ஆப்பிரிக்காவில் பச்சையிலைக் காடுகளின் தட்பவெட்பமாகவும், மை உலர்ந்த விரல் இடுக்காகவும் நகர்ந்து போக மனசில்லாமல் விடுமுறை விட்டார்கள்.

எல்லா மார்கழியிலும் பரீட்சை வருகிறது. வயதானவர்கள் இறந்து போகிறார்கள். ‘ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா ‘ என்று ஓலைக்கொட்டானில் பிடியரிசி விழப் பாடிக்கொண்டு பஜனை ஊர்வலம் ஊர்ந்து போகிறது. ஐயப்ப சாமிகள் சரணம் விளித்துக்கொண்டு தெப்பக்குளத்தில் குளித்துக் கரையேறுகிறார்கள். டெல்லி பகதூர் ஏலக்கடையும் மார்கழி தவறாமல் ஊருக்கு வருகிறது.

எப்போதுமே பூட்டிக்கிடக்கிற பண்ட் ஆபீஸுக்குப் பக்கத்து வீட்டில் ராத்திரியோடு ராத்திரியாகப் பைஜாமா அணிந்தவர்கள் மூட்டை முடிச்சுகளோடு குடியேறுகிறார்கள். விடிந்ததும் மாயாஜாலமாகப் பளிச்சென்று சிரிக்கிற திண்ணையும், அதில் சாத்தி வைத்த ‘பிரதி தினம் ராத்திரி ஏழு மணிக்கு ஏலம் ஆரம்பம் ‘ என்கிற போர்டும், வாசலில் பந்தல்கால் ஊன்றிக் கட்டியிருக்கிற கூம்பு கூம்பான ஒலிபெருக்கியும், திருப்பள்ளி எழுச்சி தரிசனத்துக்குக் கோவிலுக்குப் போகிறவர்கள் கண்ணில் படும்போது லாலாவும் வாசலில் தென்படுவார்.

ஆறடி உயரம். தலை பாதி வழுக்கை. லாலா இல்லாத ஏலக்கடை உப்பு இல்லாத பெருமாள் கோவில் பொங்கல் மாதிரி.

ஏலக்கடை வந்து இரண்டு நாளாகிறது. நேற்றும் இன்றும் காலையில் டமாரத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு ‘மேரா ஜூத்தா ஹை ஜப்பானி ‘ என்று கட்டைக் குரலில் பாடிக்கொண்டு விளம்பர நோட்டாஸ் கொடுத்தபடி லாலா தெருவோடு நடந்து போனார்.

கூட நடந்து போன பையனை இப்பொழுதுதான் முதல் தடவையாகப் பார்த்தோம். எங்களை விடப் பெரிய பையன்.

ஏலக்கடையில் வருஷா வருஷம் புதியவர்கள் தட்டுப்படுகிறார்கள். லாலாவும், நீல பைஜாமாவும் தலைப்பாகையுமாக இருக்கிற நானா என்ற கிழவரும் மட்டும் எப்போதும் இருக்கிறார்கள்.

உள்ளே எட்டிப் பார்த்தால், கிழவர் பிரிமணை மாதிரி தலைப்பாகையை மடியில் வைத்துக்கொண்டு எதற்காகவோ அதில் குண்டூசி குத்திக் கொண்டிருந்தார். புதிய ஐம்பது பைசாவில் நேரு மாதிரி, தலைப்பாகை இல்லாத அவர் தலையைப் பார்க்க என்னவோ போல் இருந்தது.

‘தம்பிகளா, ஏழு மணிக்கு வாங்கடா .. ‘

அம்மாக்களுக்கு ஏலக்கடையை ஏனோ பிடிப்பதில்லை.

‘லீவு விட்டா புஸ்தகத்தைத் திறக்கறதே கிடையாது. சும்மா ஏலக்கடையிலே போய்ப் பெரியவங்களும் வேட்டியைச் சுத்திட்டுக் கனகாரியமா ஏலம் எடுக்கப் போய் நின்னாறது.. ‘

சாதாரணமாகவே விடுமுறை நாட்கள் வித்தியாசமானவை. சிவன் கோவில் நந்தவனத்தில் காவல்காரன் பார்க்காதபோது துளசி பறித்துப் பெருமாள் கோவிலில் பட்டாச்சாரியாரிடம் சேர்த்து விட்டு – ‘உங்க வீட்டுலே கொல்லைப் பக்கம் சிமிண்ட் தரைன்னாடா.. ‘ ‘தொட்டியிலே வளர்க்கறோம்.. ‘ – பிரசாதம் வாங்கிக் கொண்டு மட்டையும் பந்துமாகக் கிளம்பினால் விளையாடி முடிக்கிறதுக்குள் பள்ளிக்கூடம் திறந்து விடுகிறார்கள்.

ஏலக்கடை வருகிற பொழுது விளையாட்டு இரண்டாம் பட்சம் தான். பகலில் லாலாவைச் சுற்றி ஒரு கூட்டம். தூசு பறக்கிற தெருவில் கேஸ் கட்டுகளோடு வக்கீல் குமாஸ்தாக்களும், கொண்டு வந்த கீரை முழுவதும் விற்காமல் சுற்றி வருகிற கீரைக்காரியும், பூஜை முடிந்து கோவில் குருக்களும் வியர்வை வழிய நடந்து போக, நாங்கள் பனி மூடிய மலைப் பிரதேசங்களில் குளிருக்கு இதமாகக் கம்பளி உடைகளுடன் ஆதம்பூர் சமஸ்தானப் புதையலைத் தேடி லாலாவோடு நடந்து போகிறோம்.

‘லாலா, பெட்டி கிடைச்சுதா ? ‘

ஒவ்வொரு வருஷமும் லாலாவை நாங்கள் சந்திக்கிற முதல் நாள் கேட்கிறது இதுவாகத்தான் இருக்கும்.

‘எங்கே போ .. போன வருஷம் பூரா புறப்படவே முடியலே .. நானா கையைப் பிடிச்சுக்கிட்டுப் போகாதே போகாதேன்னு அழுவறாரு.. ‘

நானா உள்ளே இருமுகிற சத்தம். கோடி கோடியாகக் கிடைக்கப் போகிற ஒருத்தரை இப்படிப் பிடித்து வைத்துக் கொண்டு இந்தக் கிழவர் ஏன் அழிச்சாட்டியம் செய்ய வேண்டும் ?

ஆதம்பூர் பெட்டி. இரண்டு பூட்டு போட்டு, உருக்கில் வார்த்து, மேலே சூரியன், சந்திரன் எல்லாம் முத்திரை குத்தி, நான்கு ஆள் கனத்துக்கு ஒரு பெட்டி. இமய மலையில் எங்கேயோ பனிப்பாறைகளுக்கு நடுவே கிடக்கிறது. கொண்டு போய் வைத்தவர்கள் திரும்பியே வரவில்லை. இருநூறு வருஷம் ஆகிறது. பெட்டிக்குள்ளே ..

‘நகை .. தங்கம், வைரம் .. தங்கத்தாலே அடிச்ச காசு .. ஜெய் மாதாஜின்னு எழுதி தேவி படம் போட்ட தங்கப் பாளங்கள் … கோகினூர் வைரத்தோட தோண்டி எடுத்த ஒரு வைரக்கல் . எங்க தாத்தாவுக்குத் தாத்தா ஆதம்பூர் திவானா இருந்தாரே, அவருக்கு ரத்தன் சிங்க மகாராஜா கொடுத்தது. சும்மா இல்லே. வாரிசு இல்லாத சொத்து .. வெள்ளைக்காரனுக்குப் போகக் கூடாது. நீ சத்தியவான். பெரிய புத்திசாலி. நீயே இதையெல்லாம் ஆண்டு அனுபவிச்சுத் தானதருமம் செஞ்சு நல்லா இருன்னு கொடுத்துட்டுச் செத்துப் போனார் அந்தப் புண்ணியாத்மா. ‘

லாலா இரண்டு கையையும் வானத்தை நோக்கி உயர்த்தி ஒரு நிமிஷம் மெளனமாக இருக்கிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் பார்த்த மாதிரி கேவா கலர் வெள்ளைக்காரர்கள் சொத்தை எப்படியும் அடைய வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். வெள்ளைக் கால் சராயும், வாரன் ஹேஸ்டிங்ஸ் தலையுமாக சாரிசாரியாக அவர்கள் குதிரைகளில் திவானைத் துரத்துகிறார்கள்.

லாலா ஒரு கணம் குதிரையாகிறார். வெள்ளைக்காரக் கவர்னராகி, சுடச்சொல்லி யாரிடமோ உத்தரவு தருகிறார்.

‘பயர் ‘

வாசலில் தயிர்க்காரி திடார்ச் சத்தத்தால் திடுக்கிட்டு ஒரு நிமிஷம் நின்று கவனித்துவிட்டு, ‘என்ன கோராமையோ ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டு போகிறாள்.

திவானின் ஆஸ்தி எல்லாம் ஒரு பெரிய இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்படுகிறது. நான்கைந்து விசுவாசமான ஊழியர்கள் பின்தொடர வாயு வேகத்தில் போகிற வண்டி. உள்ளே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு திவான். பைஜாமா போட்டவர்கள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இமயமலை அடிவாரத்தில் ஓடுகிற காட்சி.

உள்ளே இருந்து நானா கூப்பிடுகிற சத்தம்.

‘சனியன் பிடிச்ச மாதிரி அங்கேயும் வெள்ளைக்காரங்க .. நாலு பக்கமும் சுத்தி வளைச்சுக்கிட்டு .. ‘

லாலா பக்கத்தில் ஒரு துணிப்பையிலிருந்து ஒரு கட்டு நோட்டாசை எடுத்துத் தனியாக வைக்கிறார்.

‘ஒரே வழி பெட்டியைத் தூக்கிக்கிட்டு மலைமேலே ஏற வேண்டியதுதான். ஏறினாங்க மேலே .. மேலே .. மேலே .. குளிரில் விறைச்சு திவான் செத்துட்டார் .. எல்லோருமே போய்ட்டாங்க .. எப்படியோ, எங்கேயோ மனுஷன் தொடாத உயரத்துலே .. கோடி கோடியா ஆதம்பூர் சொத்து இன்னும் காத்துக்கிட்டிருக்கு. எங்க பரம்பரை சொத்து.. மூணு தலைமுறையாத் தேடிக்கிட்டு இருக்கோம் .. ‘

உள்ளே இருந்து நானா கிழவரின் சத்தம் இன்னும் பலமாக ஒலித்தது.

‘ஹாங்ஜீ ‘

‘பெட்டி கிடைக்கட்டும். இது மாதிரிப் பத்துக் கடை நடத்துவேன் ‘

லாலா ரகசியம் போல் எங்களிடம் விரலை ஆட்டிக்கொண்டு சொல்கிறார்.

நடத்தக் கூடியவர்தான். குலகுரு சொல்லியிருக்கிறார். சீக்கிரம் இமயமலை ஏறுகிற வாய்ப்புக் கிடைக்குமாம். ஒரே ஒரு தடவைதான். அப்போது ஆதம்பூர் பெட்டி கைக்கு வரலாம். இல்லையோ, அடுத்த தலைமுறையில்தான் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமாம்.

‘தாத்தா முயற்சி செஞ்சாரு, கிடைக்கலே. அப்பா நாப்பது வருஷம் முன்னே ஒரு குளிர்காலத்துலே மலை ஏறினார். நான் உங்க மாதிரிப் பையனா இருந்தேன். ஒரு மாசம் அலையோ அலைன்னு அலஞ்சு .. பனிக்கரடி எல்லாம் பார்த்தோம் .. ‘

கிழவர் வெளியே வந்து இரைய, லாலா டிபன் காரியரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

‘லாலா, மலைப் பிரதேசத்தில் உங்களுக்கு வழி தெரியுமா ? ‘

சாப்பிட்டுவிட்டு வந்து திரும்பவும் புதையல் வேட்டை.

‘ஏன் தெரியாது ? எங்க அப்பா கூடப் போனபோது எல்லாம் பாத்து வச்சிருக்கேன். கூட வரத்தான் தோதா ஆள் தேடிக்கிட்டிருக்கேன். ‘

‘முழுப்பரீட்சை லீவுக்குப் போகலாமா ? நாங்களும் வரோம். ‘

‘வீட்டிலே தேட மாட்டாங்களா ? ‘

தேடுவார்கள். கடலை எண்ணெய் வாங்கிக் கொண்டு வர. சர்க்கரைக்கு ரேஷனில் நிற்க. வாரச்சந்தைக்கு அப்பாவோடு பையைத் தூக்கிக்கொண்டு போக. அம்மா ரேழியில் ஒதுங்குகிற நாள்களில் பாட்டு மாமி மெஸ்ஸில் வேகாத இட்டிலியும், வெந்நீர் கொட்டிய சாம்பாரும் தூக்குப் பாத்திரத்தில் வாங்கி வர..

‘கிரிதர் .. ஹேய் கிரிதர்.. ‘

‘பாபா .. ‘

அந்தப் பையன் உள்ளே இருந்து வந்தான். அவன் எங்களைக் காட்டி ஏதோ கேட்டான். லாலா அவனுக்குச் சுருக்கமாக ஏதோ சொல்ல, இரண்டு பேரும் சிரித்தார்கள். எதற்கு என்று தெரியாமல் நாங்களும் சிரித்து வைத்தோம்.

‘என் மகன்.. ‘

லாலா தோளில் கிடந்த துண்டால் கிரிதரின் முகத்தைத் துடைத்து விட்டார்.

‘ஆதம்பூர்லே இருந்து வந்திருக்கான். ஸ்கூல் லீவு விட்டிருக்காங்க. ‘

‘விச் கிளாஸ் ஆர் யூ ஸ்டடியிங் ? ‘

சீதரன் கேட்டான். இன்னார் பிள்ளை என்று அறிமுகப்படுத்தி வைக்கும்போது மூக்குக் கண்ணாடி அணிந்த பெரியவர்கள் தவறாமல் கேட்கிறது இது.

இதற்கும் சிரித்தான். அவனுக்குச் சிரிக்க மட்டும் தெரிந்திருந்தது. அடுத்த வருஷம் பெட்டியைத் தேடி லாலா பனிப் பிரதேசங்களில் அலையும்போது இவனும் கூடப் போவான்.

இப்போதைக்கு அவன் டமடமா என்று தட்டிக்கொண்டு நடக்கிற லாலா கூடப் போனான்.

ஏழு மணிக்கு ஏலம் தொடங்கி ஐந்து நிமிஷம் முன்னால் லாலா ஒரு மடக்கு நாற்காலியைத் திண்ணையில் ஓரமாகப் போட்டுவிட்டுக் காணாமல் போய்விடுவார். கிழவர் அதில் இருந்து கொண்டு தினசரி நடவடிக்கைகளைக் கவனிக்க, சீப்பும் கண்ணாடியும் தான் முதல் ஏலம்.

‘நல்ல அருமையான வேலைப்பாடு உள்ள, ராஜாக்களும் ஜமீந்தார்களும் உபயோகிக்கிற அஜ்மீர் கண்ணாடியும், ஜெஸ்ஸூர் சீப்பும் ஒரு ரூபா .. ஒரு ரூபா .. ‘

ஆதம்பூர் பெட்டியிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்திருப்பார்களோ ?

புடவையும், சட்டைத் துணியும், அடுக்குப் பாத்திரமும், குடையும், இங்க் பாட்டிலும், கொண்டை ஊசியும், கடிகாரமும், ரூல்தடியும், பேனாக்கத்தியும், சாமி படமும், குண்டூசி டப்பாவும் என்று உலகில் படைக்கப்பட்ட சகலவிதமான பொருள்களையும் மணியை அடித்து அடித்துக் கொடுக்க, கண்ணாடிக்காரரும், நீலச்சட்டைக்காரரும், கழுத்தில் மப்ளர் சுற்றி இருக்கிறவரும், வலது கோடியில் உசரமாக நிற்கிற அண்ணாச்சியும் வாங்கிக் கொண்டு கூட்டத்தில் கலக்க, ராத்திரி பத்து மணியானதே தெரியாது.

டம்டம் என்று லாலா மரபெஞ்சுகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குகிற சத்தம் எழுகிற போது ஊர் அடங்கி இருக்கும். தூக்கத்தில் நாங்கள் புரியாத மொழியில் பேசிக் கொண்டு, பைஜாமா போட்டுக் கொண்டு, பனிக்கரடிகள் எதிர்ப்படும் மலை முகடுகளில் திரியும் பொழுது பள்ளிக்கூட வாத்தியார்கள் வழியை அடைத்துக் கொண்டு உருட்டி விழிப்பார்கள்.

***************************************************

குளிர்காலம் முடிந்து பள்ளிக்கூடம் திறந்தபொழுது, கோலத்தில் நடுவில் வைத்த பரங்கிப் பூக்களோடு ஏலக்கடையும் காணாமல் போயிருந்தது. லாலாவும், ஆதம்பூர் பெட்டியும் எங்கள் பேச்சிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைய, கவனத்தை ஈர்க்கப் புதியதாக வேறு விஷயங்கள்.

ஜான் ஆசிர்வாதம் சாரை எட்டாவதிலேயே விட்டுவிட்டு ஒன்பதாம் வகுப்பில் அப்புறம் நுழைய, சத்தியகிரிராஜன் சார் ‘பட்டன் அப் .. பட்டன் அப்.. ‘ என்று பேயறை அறைந்து சாத்வீகமாவதற்குள் இன்னொரு மார்கழி. இன்னொரு அரை வருஷப் பரீட்சை. டெல்லிபகதூர் ஏலக்கடை விஜயம்.

சாய்வு நாற்காலி இருந்தது. நானா கிழவரும். பைஜாமா ஆசாமிகளும், காண்டாமணியும், கண்ணாடி சீப்பும் எல்லாம் உண்டு. லாலாவைத்தான் காணோம்.

ஆதம்பூர் பெட்டியைத் தேடி மலை ஏறிக் கொண்டிருக்கிற ஓர் ஆறடி உருவம் மனதில் வந்தது.

‘டமடமா … டமடமா . ‘

லாலா பையன் தான். கழுத்தில் டமாரமும், கையில் மெகபோனுமாக வந்தான்.

லாலா எங்கே ?

‘செத்துப் போயிட்டார் ‘

‘இமய மலையிலேயா ? ‘

‘திண்டுக்கல்லிலே. தருமாஸ்பத்திரியிலே வச்சு. ‘

‘நீ.. நீங்க.. அந்தப் பெட்டி .. ‘

அவன் வழக்கம் போலச் சிரித்தான். பச்சையும், சிவப்பும், மஞ்சளுமாக ஆளுக்கொரு நோட்டாஸ் எடுத்துக் கொடுத்தான். ‘மேரா ஜூத்தா ஹை ஜப்பானி ‘ கொஞ்சம் குரல் நடுங்கப் பாடிக்கொண்டு டமாரம் முழங்க நடக்க ஆரம்பித்தான்.

(இரா.முருகன் – ‘ஆதம்பூர்க்காரர்கள் ‘ தொகுப்பு – ஸ்நேகா பதிப்பகம், சென்னை வெளியீடு – 1992).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *