அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-10
இரண்டு நாள் கழித்து….
‘‘என்ன தம்பி இப்படி ஏமாத்திட்டீங்க ?’’ – கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் தர்மலிங்கம். ராகுலுக்கு அவர் சொன்னது காதில் விழுந்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து கண்களை எடுக்காமல் இருந்தான்.
‘‘அதுங்க ரெண்டும் ஓட்டல் அறையில காத்திருந்துஇ காத்திருந்து வெறுத்துப் போய் திரும்பிடுச்சுங்க. ‘என்ன சார் உங்க ஆள் இப்படி பண்ணிட்டார். எங்களுக்காக எத்தனையோ பேர் காத்திருந்தாலும் நாங்க ஆசைப்பட்டு காத்திருந்தா கெடைக்கலைன்னு அந்த பெண் அர்ச்சனாதான் ரொம்ப புலம்பல்.!’’ சோன்னார்.
அர்ச்சனா அப்படித்தான் சொல்லி இருந்தாள். தான் மட்டும் வந்து இருவர் வந்திருந்ததாக கூறி இருந்தாள். ஓட்டலில் காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போய்தான் திரும்பி இருந்தாள். நேரம் ஆக ஆக ராகுல் தன்னை அடையாளம் கண்டு கொண்டதால் வரவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. இனி தான் அழைத்து வரமாட்டான் என்பதும் அவளுக்குப் புரியும்.
‘‘அந்தப் பெண் அதுக்காக ரொம்ப கவலைப்படலை. சார் விலாசம், போன், செல் நம்பர் குடுங்க. நான் பேசிக்கிறேன்னு சொல்லிச்சு. குடுத்து வந்தேன். ’’அமர்ந்தார்.
‘‘குடுத்து வந்தீங்களா ?’’ ராகுல் இப்போதுதான் சுரணை வந்தவன் போல் திடுக்கிட்டான்.
‘‘ஆமாம் தம்பி. ஏன், என்ன தப்பு?’’ – இவரும் விபரம் புரியாமல் கேட்டார். இவர் எத்தனையோ பெண்களிடம் கொடுத்து நேரடியாக மோதவிட்டிருக்கிறார். கமிசன் தொகையையும் பெற்றிருக்கிறார்.
இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உறைந்து போய் இருந்தான்.
ராகுல் முகம் மாறி மூடு மாறி விட்டதை உணர்ந்த தர்மலிங்கம்…‘இனி பேசி பலனில்லை!’ என்று தெரிந்து ‘‘வர்றேன்..!’’ கிளம்பினார்.
அவர் சென்று வெகுநேரம் கழித்தும் ராகுல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
‘விலாசம், தொலைபேசி எண், செல் எண் எல்லாம் சமார்த்தியமாக கண்டுபிடித்து விட்டாள்!…. எந்த நேரத்திலும் தொல்லை. தலைக்கு மேல் ஆபத்து !’ – நினைக்க பயமாக இருந்தது.
‘எந்த நேரத்திலும் அவள் வாசலில் நிற்கலாம் இரவில் வந்து சுற்றுச்சுவர் பக்கம் மறைந்து நிற்கலாம். ’ – நினைக்க திகிலாய் இருந்தது.
இது என்ன சோதனை ? தன்னையே நொந்தான்.
இனி வெளியில் சென்றால் கூட ஆபத்து ! – நினைக்கும் போதே நெஞ்சு நடுங்கியது. கைபேசி அடித்தது.
எடுத்தான். எவர் எண்ணோ அதில் தெரிந்தது, அர்ச்சனாவா பயந்து காதில் வைத்தான்.
‘‘என்ன ராகுல் எப்படி இருக்கீங்க ?’’ ஒரு பெண்ணின் இனிமையான குரல். அடையாளம் தெரியாமல் தடுமாறினான். ‘‘யா…யார் ?’’ கேட்டான்.
‘‘கீர்த்தனா !’’
அது அர்ச்சனா போல் கேட்டது.
மிரண்டு போய்….‘‘யார் ?’’ கேட்டான்.
‘‘என்ன ராகுல் என்னைத் தெரியலையா? சுதர்சன் எம்.டி மகள்!’’
‘‘ஓ…..! ’’அடையாளம் தெரிந்தான்.
ஒரு நாள் அவள், இவனை காக்டெயிலுக்கு அழைத்து… டிஸ்கெதே ஆடச் சொல்லி, ஆடி… அன்று இரவு முழுதும் அதே நட்சத்திர ஓட்டலில் தங்கி… பத்தாயிரம் பணமும் கொடுத்து ரொம்ப தாராளம்.
‘‘இதெல்லாம் தப்பில்லையா?’’ – இவனே மனசு பொறுக்காமல் கேட்டான்.
‘‘எது தப்புன்றீங்க ?’’
‘‘திருமணம் ஆகாமல் இப்படி…..’’
‘‘நான் யோக்கியமா இருப்பேன். வர்றவன் என்னை மாதிரி இருப்பானா? இருந்தாலும் இருக்க விடுவான்களா விடுவாள்களா ? ஆண்னு சுலபமா ஒதுக்கி தப்பை சரியாக்கிடுவீங்க. சரி விடுங்க நான் அதையும் பொறுத்துக்கிறேன். நான் இப்போ டாக்டருக்குப் படிக்கிறேன். நாளைக்கு ஆயிரமாயிரமாய் சம்பாதிப்பேன். வர்றவன் என்கிட்டே இருந்து பைசா எதிர்பார்க்காம கலியாணம் முடிப்பானா ?என் அம்மா அப்பா வலிய செய்தாலும் வேண்டாம்ன்னு ஒதுக்குவானா ? அகப்படுறவரை ஆதாயம்ன்னு சுருட்டுவான். அப்படியெல்லாம் ஆம்பளை நடக்கும்போது பொம்பளை ஏன் கற்பு, கட்டுசெட்டாய் இருக்கனும்..? ’’ கேள்வி கேட்டாள்.
‘‘ஆக ஆம்பளை யோக்கியமில்லே. நீங்களும் யோக்கியமில்லே. அப்படித்தானே ?!’’
‘‘நிச்சயமாய்.’’
‘‘ஆம்பளை நீ தப்பானவள்ன்னு ஒதுக்கிப் போனால் ?!’’
‘‘பணம் அவனைப் புடிச்சி இழுக்கும். அவன் வாயை அடைக்கும். ராகுல் ! ஆம்பளைங்களும் பொம்பளைங்க யோக்கியமில்லேன்னு புரிஞ்சுகிட்டாங்க. ஆண்களைப் போல பெண்களுக்கும் அது சின்ன வயசு தப்புன்னு தெரிஞ்சுகிட்டாங்க. இப்போ வாழ்க்கை சுலபமா ஆயிடுச்சு.’’
ராகுல் அதற்கு மேல் பேசவில்லை. அவளும் பேசவிடவில்லை.
அந்த கீர்த்தனா ! – புரிந்தான்.
‘‘என்ன விசயம் ?‘‘ கேட்டான்.
‘‘இன்னைக்குப் பாரீஸ் ஓட்டல்ல டிஸ்கெதே இருக்கு வர்றீயா?’’
‘‘மன்னிக்கனும். முடியாது!’’
‘‘என்னப்பா இது! வாழைப்பழம் வேணாத குரங்கா இருக்கே?! ’’
‘‘மூடு இல்லே ’’ – வைத்தான்.
‘போன் செய்யலாமா, கைபேசியில் பேசலாமா, நேரடியாய்ச் சென்று சந்திக்கலாமா ? ’ – தொலைபேசி எண்கள், விலாசத்தை வாங்கி வைத்துக் கொண்ட அர்ச்சனாவால் சும்மா இருக்க முடியவில்லை. வீட்டில் குட்டிப் போட்ட பூனையாகச் சுற்றி சதா அதே சிந்தனையாக இருந்தாள்.
அர்ச்சனா என்றால் தெரியாது. ஆயுர்வேதவள்ளி என்றால்தான் தெரியும். என்ன பேச?அடையாளம் தெரிந்ததும் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? – வைப்பான்.
நேரில் சந்தித்தால் மிரள்வான் ! எங்கே வந்தே ? ஓடுவான். அர்ச்சனாவிற்கு நினைக்க நினைக்க சிரிப்பாகவுமிருந்தது வேதனையாகவுமிருந்தது,
பழசையெல்லாம் மறந்துட்டேன். மறந்துடலாம் சொன்னாலும் நம்ப மாட்டான். எப்படி சந்திக்க ? எப்படி அவன் கதையை முடிக்க ? – இதே யோசனையில் உழன்றாள்.
சடக்கென்று மனசுக்குள் வெளிச்சம் அடித்தது. கீதாவும், பிருந்தாவும் நினைவிற்கு வந்தார்கள். உடனே வாடகை காரில் ஏறி பறந்தாள். கீதா வீட்டின் முன் நின்றாள். சாத்தி இருந்தது. அழைப்பு மணியை அழுத்தினாள். கதவு திறந்தது. பேண்ட் ஜிப்பை இழுத்து சரி செய்து கொண்டு ஒரு ஜீன்ஸ் வெளியேறினான்.
‘இதுக்கெல்லாம் நேரம் காலம் கிடையாது போல.’ மனசுக்குள் கடித்தாள். நுழைந்தாள்.
‘‘வா..வா.’’ இவள் தலையைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றாள்.
‘‘உட்கார்! என்ன இவ்வளவு தூரம்?’’ அவளுடன் சோபாவில் அமர்ந்தாள்.
‘‘வந்து…. வந்து….’’ அர்ச்சனாவிற்கு எப்படி ஆரம்பிப்பது என்ற தெரியவில்லை.
‘‘என்ன விசயம் சொல்லுடி..?’’
‘‘போட்டோ ஸ்டுடியோவுக்கு வராம அன்னைக்கு எங்கே போனீங்க ?’’
‘‘சுத்தி வலைக்க வேணாம் நேரடியா விசயத்துக்கு வா.’’
‘‘எனக்கு ஒரு உதவி கீதா? அந்த ராகுலை நீ அழைக்கனும்.’’
‘‘மேகலா அந்த சேதியெல்லாம் சொன்னாள். வேணாம்.’’
‘‘வேணாம்ன்னா?’’
‘‘அவனைவிடு. விதி வந்துட்டோம். கொலையெல்லாம் வேணாம்,’’
இவள் அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
‘‘நிசம்தான்டி.நீ நானெல்லாம் ஏழை. கஷ்டத்தை விடு. எல்லாருக்கும் எல்லாத்திலேயும் கஷ்டமிருக்கு. கஷ்டப்படாத ஜென்மமே இந்த உலகத்துல இல்ல. அன்னைக்கு அந்த ராகுல் உன்னைத் தொடலைன்னா இன்னைக்கு நீ இந்த அளவுக்கு நல்லா இருக்க முடியாது, கற்பை பொத்தி பொத்தி வைச்சி, எவனோ ஒரு ஏழையைக் கலியாணம் செய்துஇ நாலு பெத்து, உடுத்த நல்ல துணி இல்லாம, காட்டுலேயும் மேட்டுலேயும் கஷ்டப்பட்டு இகஞ்சித் தண்ணிக்குக்கூட வழி இல்லாம இருப்பே. விதி! படாத வேதனையெல்லாம் பட்டு இப்போ நல்லா இருக்கிற இந்த வாழ்க்கையைக்கூட அனுபவிக்காம நாம ஏன் வீணா ஒரு கொலையைச் செய்துட்டு சிறைக்குப் போய் கஷ்டப்படனும் ?! நீ இந்த கொலையைச் செய்யுறதுனால இதைவிட உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்ன்னா நான் இந்த நிமிசம் உதவி செய்ய தயார்.’’ கீதா கறாராக சொல்லி நிறுத்தினாள்.
அர்ச்சனா பதில் சொல்லத் தெரியாமல் மௌனமாக இருந்தாள்.
‘‘அன்னையக் கதை அன்னையோட முடிஞ்சு போச்சு. அதுக்குப் பிறகு அந்த ராகுலால இன்னைக்கு வரை உனக்கு தொந்தரவு கிடையாது. தொந்தரவு, தொல்லை கொடுத்தாலாவது நீ அவனை கொலை செய்யிறதுல அர்த்தம் இருக்கு. உனக்கும் அவனுக்கும் இப்போ சம்பந்தமே இல்லே. ஏன் அவனைக் கொல்லனும் ? வீண் வம்பை விலைக்கு வாங்கனும் ? நீ அன்னைய நிலையை மறந்துடு. இன்னைய நிலையை நினை. இப்போ இருக்கிற இடத்திலேர்ந்து நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நினை. எது சௌகரியம் அசொகரியம்ன்னு அலசு. அப்போ தெளியும் புத்தி.’’ நிறுத்தினாள்.
அர்ச்சனாவிற்கு அவள் சொல்வதெல்லாம் நியாயமாக இருந்தது.
‘‘நீ சொல்றதெல்லாம் சரிதான் கீதா. ஆனா ஒரு அயோக்கியனைக் கொன்னா ஒன்பது அயோக்கியன் திருந்துவான்னு நான் எதிர்பார்க்கிறேன்.’’ என்றாள்.
‘‘இன்னைக்கு ராகுல் அயோக்கியன் இல்லே.‘‘
‘‘நேத்து அயோக்கியன்.! தினசரிகள்ல அவன் வயசுக்கு வராத பொண்ணைக் கெடுத்த அயோக்கியன். அவள் வஞ்சம் வைச்சு கொன்னாள்ன்னுதான் சேதி வெளியாகும். நான் நடந்ததை வாக்குமூலம் கொடுப்பேன்.’’ என்றாள்.
கீதா அவளை வெறுப்பாக பார்த்தாள்.
‘‘நீ புடிச்ச பிடிவாதத்துலதான் நிக்கிறே.’’ சொன்னாள். ‘‘சரி. என் பிடிவாதத்தைத் தளர்த்திக்கிறேன். இப்போ நான் என்ன செய்யனும்னு சொல்லு ?’’ அர்ச்சனா தானாக இறங்கி வந்தாள்.
‘‘நீங்க ரெண்டு பேரும் சமாதானமாப் போகனும்.’’
இவள் துணுக்குற்றுக் கீதாவைப் பார்த்தாள்.
‘‘நிசம்தான். அந்த ஆளும் உன் புகைப்படத்தைப் பார்த்து தலைக்கு மேல் ஆபத்துன்னு நடுங்கி கிடக்கான்.’’
‘‘உனக்குத் தெரியமா ?’’ திகைப்பாய்க் கேட்டாள்.
‘‘அப்படித்தான் இருக்கனும். இல்லேன்னா அவன் ஓட்டலுக்கு வந்திருப்பான். நீ ஏமாந்து திரும்பி இருக்க மாட்டே.’’
‘‘இந்த விசயமெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ?’’
‘‘அன்னைக்கு கம்பெனிக்கு ஆள் வேணும்ன்னு ரெண்டு திடீர் பார்ட்டி மொளைச்சாங்க. அவசரத்துக்கு உன்னைத் தேடினேன். வீடு பூட்டி இருந்துது. அப்புறம் மேகலாவை கூட்டிப் போனேன். அங்கே அவள் நீ இங்கே போயிருக்கலாம்ன்னு சொன்னாள். ஓட்டலுக்குப் போன் போட்டேன். வரவேற்புல இருக்கேன்னு சொன்னாங்க.’’
‘‘ராகுல் வராதது எப்படி தெரியும்?’’
‘‘தர்மலிங்கம் சொன்னார். வரலைன்னு சொல்லி நீ அவர்கிட்ட குறை பட்டிருக்கே. நடந்தது விபத்து அர்ச்சனா. ராகுல் உன்னை கெடுக்கனும்ன்னு கெடுக்கலை. சினிமா ஆசையால வேறொருத்தன் கெடுக்கச் சொல்லி கெடுத்திருக்கான். எல்லாம் உன் வாக்குமூலம்தான். நான் ஒன்னும் இட்டுக் கட்டி சொல்லலை. அடுத்து அவன் இதே வேலையாவும் இல்லே. வீண் கொலை, சிறை வேணாம். நீங்க சமாதானமாப் போகனும்.’’.
அர்ச்சனா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள்.
சிறிது நேரத்தில் தெளிவு வர, ‘‘சரி. அதுக்கு ஏற்பாடு செய்.’’ என்றாள்.
‘‘அப்படின்னா …..?!’’
‘‘நீ எனக்காக அவர்கிட்ட தூது போ. சமாதானப்படுத்து.’’
கீதாவிற்கும் இது சரியாக இருந்தது,
அர்ச்சனாவின் உள் மனம் தெரியாமல், ‘‘செய்றேன் !‘‘ சம்மதித்தாள்.
அத்தியாயம்-11
நான்கைந்து நாட்களாக லோதிப் பகுதியில் ராகுலைக் காணாதது தர்மலிங்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. பெண்கள் அதிகமாக இருக்கும் வேறு இடங்களிலும் போய் பார்த்தார். ஆள் இல்லை.
‘என்னாச்சு. ஒட்டு மொத்தமா எவளுக்காவது குத்தகைக்குப் போய்ட்டானா ?! ரெண்டு மூணு பார்ட்டிங்க அவன்தான் வேணும்ன்னு ஒத்தகால்ல தவம் இருந்து திகைச்சுப் போவுது ?! என்ன ஆனான் ?’ குழம்பினார்.
எஸ்.டி.டி பூத்திற்குள் நுழைந்து அவன் வீட்டிற்கு எண்களைச் சுழற்றினார்.
ராகுல் எடுக்க வில்லை.
ஆள் கேட்டு வந்த நாப்பது வயசு பொம்பளையிடம் கைபேசி வாங்கி ஓசியில் அடித்தார்.
அவன் தொடவில்லை.
‘என்னாச்சு. உடம்பு கிடம்பு சரியில்லியா ? எய்ட்ஸ் வந்து யாருக்கும் தெரியாம படுத்தப் படுக்கையாக் கிடக்கானா ?!’ – நினைக்கவே அவருக்குச் சொரக்கென்றது.
நேராக அவன் வீடு நோக்கியே நடையைக் கட்டினார். அவன்தான் அவருக்கு வருமானத்தில் பாதி. தேடி கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் ! – சென்றார்.
போர்டிகோவில் அவன் கார் நின்றது.
‘அப்பாடா ! ஆள் இருக்கான் !’ மனசக்குள் சின்ன நிம்மதி வந்தது. நுழைந்தார்.
ராகுல் நாலைந்து நாள் தாடியில் சோபாவில் சரிந்திருந்தான். ஆள் ரொம்ப துவண்டு சோகமாய் இருந்தான். ஆளைப் பார்த்ததும் இவருக்குப் பக்கென்றது.
‘‘என்ன தம்பி ! உடம்பு சரி இல்லியா ?’’ பரிவுடன் கேட்டு பக்கத்தில் அமர்ந்தார்.
‘‘இல்ல சார். மனசு சரி இல்லே….’’ மெல்ல…சொன்னான். குரல் கிணற்றுக்குள்ளிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.
‘‘அம்மா மறுபடியும் கலியாணம் காட்சின்னு கடிதம் போட்டாங்களா ?!’’
‘‘இல்லே…’’
‘‘வேற என்ன மனசு கஷ்டம் ?’’
‘‘எல்லாம் நீங்க செய்ஞ்ச வேலை,!’’
‘‘என்ன தம்பி சொல்றீங்க ?’’ தர்மலிங்கம் இதை எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டார்.
‘‘ஆமாம்.! என் போன், செல் நம்பர், விலாசம் குடுத்து என் தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டீங்க.’’
‘‘என்ன ராகுல் சொல்றே….?!’’ அதிர்வாய்ப் பார்த்தார். அர்ச்சனா விவகாரத்தை ராகுல் ஆதியோடந்தமாய் போட்டு உடைத்தான்.
‘‘அவ என்னை இப்போ தேடிக்கிட்டிருப்பாள். எவ ரூபத்துல ஆபத்து வரும்ன்னு சொல்ல முடியாது.’’ சொல்லும்போதே அவன் குரல் உடைந்தது. கண்கள் கலங்கியது. கொஞ்ச நேரம் திகைத்த தர்மலிங்கம்..
‘‘அட ! இதுக்காகவா கவலைப்படுறே ? வீட்டுல உட்கார்ந்து விசனப்படுறே ? கை காலை நீட்டி தைரியமா வெளியே வா. பொட்டக் காக்கா எட்டிக் கொத்த முடியாது ! ’’ தேற்றினார்.
‘‘கொத்தும் சார். இவ எல்லா தரத்து ஆம்பளையையும் பார்த்திருப்பா. உடம்பு எதுக்கும் துணிஞ்சிருக்கிறாப் போல மனசும் துணிஞ்சிருக்கும். ஏன்…. என்னை ஆள் வைச்சுக்கூட அடிக்கலாம், கொலையும் நடக்கும். ! ’’ – ராகுல் விரக்தியாய்த் தீர்க்கத்தரிசி போல் சொன்னாள்.
‘‘அப்படியெல்லாம் நடக்காது. அவ ஆள் வைச்சு அடிச்சா நாம ஆள் வைச்சு திருப்பி அடிப்போம்.!’’ தைரியம் சொன்னார்.
‘‘சரிக்குச் சரி. பழிக்குப் பழி ! மல்லுக்கு நின்னு பிரச்சனையை வளர்த்துப் போறதுல பிரயோசனமே இல்ல சார். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.’’
‘‘என்ன ?’’
‘‘இதையெல்லாம் வித்துட்டு கோவா பக்கம் போகலாம்ன்னு இருக்கேன். டெல்லிக்கு முன்னாலேயே முதன் முதலா கோவாவுலதான் இந்த ஆண் விபச்சாரம், வியாபாரம் ஆரம்பம். இப்பவும் கொடி கட்டி பறக்குது,’’ என்றான்.
‘‘அட. என்னப்பா ! மூட்டைப்பூச்சிக்குப் பயந்துகிட்டு வீட்டைக் காலி பண்றே. ? இதெல்லாம் தூசு.!’’ தர்மலிங்கத்திற்கு அவனை விட மனசில்லை. தேற்றினார்.
‘‘அவள் தூசில்லே சார். என் உசுரை எடுக்க வந்த எமன் ! கோடாரி. !! ’’
ராகுல் ரொம்ப பயந்து போயிருக்கிறான் ! என்பது தர்மலிங்கத்திற்குத் தெளிவாக தெரிந்தது, யாராய் இருந்தாலென்ன ? உயிருக்கு ஆபத்தென்றால் பயந்துதானே ஆக வேண்டும்.?!
இவனைச் சரி செய்ய என்ன வழி ? யோசித்தவருக்குள் சட்டென்று ஒளி பிறந்தது,
‘‘நான் ஒன்னு சொல்றேன். கேட்கனும்..’’ என்றார்.
ஏறிட்டான்.
‘‘அர்ச்சனா எனக்குத் தெரிஞ்சு நல்ல பொண்ணு. நான் அவளைச் சந்திச்சு… அவள் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சு நீங்க ரெண்டு பேரும் சமாதானமாக போக வழி பண்ணவா ?’’ கேட்டார்.
ராகுல் பலகீனமாக அவரைப் பார்த்தான்.
‘‘இதுல தப்பே இல்லே. சண்டைக்காரங்க என்னைக்கும் சண்டைக்காரங்களாவே இருந்ததில்லே. வெளிக்கு முள்ளாவும் உள்ளே பழமாவும் இருக்கலாம். பேசுற விதத்துல பேசினா எல்லாம் சரியாப் போகும்.’’ சொன்னார்.
ராகுலுக்கும் அது சரியாகப் பட்டது. இருந்தாலும் அவள் ஒத்துக் கொள்வாளா ?! நினைக்க பயம் வந்தது. கலவரமாக அவரைப் பார்த்தான்.
‘‘இரு உன் எதர்க்கயே அவகிட்ட பேசறேன் !’’ என்ற தர்மலிங்கம் சட்டைப்பையிலிருந்து… மற்றவர்கள் தொலைபேசி, கைபேசி எண்கள், விலாசம்… எழுதி வைத்திருக்கும் தன்னுடைய சின்ன குறிப்பு நோட்டை எடுத்தார். அதில் அர்ச்சனா பேரை தேடி எடுத்து அருகிலுள்ள தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தினார்.
தொலைபேசி அடித்தது யாரும் எடுக்கவில்லை. மறுபடியும் முயற்சி செய்தார். தொடவில்லை.
ஆளில்லை என்ற முடிவிற்கு வந்து மேகலா எண்ணை தேடிப் பிடித்து அழுத்தினார்.
‘‘ஹலோ !’’ அவள் எடுத்தாள்.
‘‘நான் தர்மலிங்கம் பேசறேன்ம்மா. அர்ச்சனா இல்லியா ?’’ ‘‘இல்லே சார். வெளியூர் போயிருக்கா.’’
‘‘எந்த ஊர்?’’
‘‘சிம்லா. அமெரிக்கா ஆள் ஒருத்தர் அழைச்சிப் போயிருக்கார்.‘‘
‘‘எப்போ போனாள் ?’’
‘‘அவள் போய் ஒரு வாரமாகுது.’’
‘‘எப்போ திரும்புவாள்?’’
‘‘அனேகமா அடுத்த வாரமா இருக்கலாம். சரியாத் தெரியலை. கீதாவைக் கேளுங்க.’’
கீதாவுக்குப் போன் செய்தார்.
‘‘நான் தர்மலிங்கம். என்னம்மா சவுகரியமா ?’’
‘‘உங்க புண்ணியம் சார்.’’
‘‘அர்ச்சனா எப்போ திரும்புவாள் ?’’
‘‘நாளன்னைக்கு சார். என்ன விசயம் ?’’
‘‘அவளைப் பார்க்கனும் …பேசனும்…’’
‘‘என்ன விசயமா ?’’
‘‘ராகுலைப் பத்தின விசயம்…..’’
‘யாரைப் பிடித்து ராகுலை அணுகுவது..’ என்று யோசித்து குழம்பிக் கிடந்த அவளுக்கு இவரது பதில் பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல் இருந்தது.
‘‘அதைப் பத்தி நானும் பேசனும் சார். நீங்க உடனே வாங்க நாம பேசலாம்.’’ போனை வைத்தாள்.
தர்மலிங்கமும் போனை வைத்துவிட்டு எழுந்தார்.
‘‘சீக்கிரம் உனக்கு நல்ல சேதி சொல்றேன் !’’ ராகுலிடம் கூறி நடந்தார்.
நேராக கீதாவிடம்தான் சென்றார். அவளும் இவரை எதிர்பார்த்து இருந்தாள்.
‘‘நாம அர்ச்சனாவையும் ராகுலையும் ஒன்னு சேர்க்கனும்…’’ நேரடியாகவே விசயத்தைச் சொல்லி அமர்ந்தார்.
‘‘ரொம்ப சரியாச் சொன்னீங்க சார். நானும் இதைப் பத்தி அவள் கிட்ட நிறைய பேசி சமாதானத்துக்குச் சரி சொல்ல வைச்சுட்டேன். ’’ இவளும் அவருக்கு இணக்கமான பதிலைச் சொன்னாள்.
‘‘அப்புறம் என்ன! ரெண்டு பேரையும் கை குலுக்க வைச்சிடுவோம் !’’ தர்மலிங்த்திற்கு உற்சாகம் தலை தூக்கியது. ‘‘கை குலுக்க வேணாம் சார். நீங்க மொதல்ல சொன்னதைச் செய்யலாம்.’’
‘‘என்ன சொன்னேன்…?’’ குழப்பமாகப் பார்த்தார்.
‘‘அவுங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சிடலாம்.’’
‘‘செய்யலாம் நல்ல யோசனை. ஆனா சரி வருமா ? சரியா வருவாங்களா ?!’’ யோசனையுடன் கேட்டார்.
‘‘ஏன் சார். என்ன தப்பு. ஒருத்தர் ஒருத்தரால பாதிக்கப்பட்டாலும் இன்னைக்கு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஒரே தொழில்ல இருக்காங்க. கொஞ்சம் வசதி வாய்ப்பாவும் இருக்காங்க. சேர்த்து வைக்கிறதுல ஒரு குறையும் வராதுன்னு தோணுது.’’ – கீதா தன் மனதில் பட்டதை ஒளிமறைவில்லாமல் பளிச்சென்று சொன்னாள்.
‘‘ரெண்டு பேரும் சம்மதிக்கனும்….’’ இழுத்தார்.
‘‘நாம பேசுற விதத்துல பேசினா நல்லது நடக்கும்ன்னு என் மனசுல படுது.’’ என்றாள்.
‘‘எனக்கு ஆட்சேபணை இல்லே. சமாதானமாகி திருமணத்துக்குப் பிறகு அவுங்க திருந்தி வாழ்ந்தா நமக்குச் சந்தோசம். நல்லது செய்த திருப்தி.’’ மனம் நிறைவாக சொன்னார்.
‘‘திருந்தறதும் திருந்தாததும் அவங்க விருப்பம் சார். மொதல்ல பேசிப் பார்ப்போம்!’’
‘‘சரி ’’ எழுந்தார்.
‘நடக்குமா ?…’ யோசனையுடன் நடந்தார்.
அத்தியாயம்-12
சிம்லா குளிர், கூத்து, கொண்டாட்டம். டெல்லிக்கு வந்ததும் அர்ச்சனாவிற்குத் திடீர் ஜுரம், தலைவலி.
இரண்டு நாட்கள் வீட்டில் படுத்தப் படுக்கையாக இருந்தாள். அந்த இரண்டு நாட்களும் டாக்டர் சந்திரசேகரன் இடைவிடாது வந்து மருத்துவம் பார்த்துப் போனார். அர்ச்சனா ஒரு வாரத்திற்குப் பிறகுதான் பழைய நிலைக்கு வந்தாள்.
அதன் பிறகுதான் கீதா அவளை நெருங்கினாள். திருமணப்பேச்சு பேசாமல் தங்கள் சமாதான ஏற்பாட்டைச் சொன்னாள்.
கேட்டவளால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் முகம் மலர்ந்தாள்.
அதே போல் தர்மலிங்கமும் திருமணத்தைப் பற்றி சொல்லாமல் சமாதான விசயத்தை மட்டும் சொல்லி கீதா சொல்லி வைத்தபடி ராகுலுடன் வந்தார்.
அர்ச்சனா உடைந்து ஓடாக இருப்பதைப் பார்த்த ராகுலுக்கே அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
‘‘எ….என்னை மன்னிச்சுடு அர்ச்சனா !’’ தழுதழுத்தான்.
அர்ச்சனாவிற்கு அவன் வீடு தேடி வலிய வந்து பேசியது மனதிற்கு திருப்தியாக இருந்தது. மலர்ந்தாள்.
‘‘அப்புறமென்ன? வேலை சுலபமா முடிஞ்சுது. திருமணத்தை எப்போ முடிக்கலாம் ?’’ தர்மலிங்கம் சந்தோசமாக சொன்னார்.
கேட்ட ராகுல், அர்ச்சனா திடுக்கிட்டார்கள்.
‘‘ஏன்? என்ன தப்புங்குறேன்.?! தப்பு செய்யிறது, மன்னிக்கிறது, மறக்கிறதெல்லாம் மனுச சுபாவம். இப்போ எல்லாம் முடிஞ்சு போச்சு. திருமணம் முடிக்கிறது ஒன்னுதான் குறை. அதையும் முடிச்சு நீங்க சந்தோசமா இருந்தீங்கன்னா எனக்குச் சந்தோசம்.’’ மனதில் எந்தவித விகல்பமுமில்லாமல் சொன்னார். அர்ச்சனா கீதாவை ஏறிட்டாள்.
‘‘எனக்கும் அதுதான் விருப்பம் !’’ இவள் தலையசைத்தாள்.
இந்த திடீர் விருப்பம் திருப்பம் அர்ச்சனா ராகுலைத் தாக்கியது. ஒருவரையொருவர் அதிர்வாய்ப் பார்த்தார்கள்.
‘‘என்ன சார் உங்க முடிவு?’’ கீதா ராகுலை நேரடியாகவேப் பார்த்துக் கேட்டாள்.
‘‘அர்ச்சனாவுக்குச் சம்மதம்ன்னா என் தப்புக்குப் பிராயச்சித்தம் செய்ய நான் தயார். !’’ என்றான்.
‘‘உன் முடிவு என்னம்மா ?’’ – தர்மலிங்கம் அர்ச்சனாவைப் பார்த்தார்.
கொஞ்ச நேரம் யோசித்த அர்ச்சனா ‘‘அவர் விருப்பம் என் விருப்பம்!’’ சொன்னாள்.
‘‘அப்புறம் என்ன கெட்டி மேளம்! கெட்டி மேளம்!’’ கீதா சந்தோசத்தில் கூவினாள்.
எல்லோரும் சிரித்தார்கள்.
அடுத்த நாளே நல்ல நாள். திருமணப்பதிவு அலுவலகத்தில்…தர்மலிங்கம்இ மேகலாஇ கீதா, பிருந்தா இருந்து திருமணத்தை முடித்தார்கள்.
முதலிரவு கட்டிலில் ராகுல் அடக்கமாக அமர்ந்திருந்தான். பால் சொம்புடன் அறை உள்ளே நுழைந்தாள் அர்ச்சனா.
‘நான் இன்னைக்கு என் சபதத்தை முடிக்கப் போறேன் ராகுல். எனக்கு அமெரிக்காகாரன் குடுத்துட்டுப் போன எய்ட்ஸை உனக்குக் குடுக்கப்போறேன். பால்ல விஷம் வேற கலந்திருக்கேன். என்னைக் கெடுத்ததால நீயும், உன்னைக் கொன்னதால நானும் சேர்ந்து சாகப் போறோம்.. நோயை வெளியில சொல்ல வேணாம்ன்னு கெஞ்சி கேட்டதால ரகசியத்தைக் காப்பாத்தின டாக்டருக்கு நன்றி.’ – என்று மனசுக்குள் சொல்லியபடி கணவனை நெருங்கினாள்!
முற்றும்
– 13-10-2003 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.