அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
அந்த நட்சத்திர ஓட்டல் எந்த வித ஆரவாரமுமில்லாமல் அடக்கமான அழகில் இருந்தது. ராகுல் இங்கு பல முறை வந்து பழக்கமானதால் மின் தூக்கியில் ஏறி மூன்றாவது தளத்திற்குச் சென்றான்.
அறை 247 முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினான்.
‘‘வாங்க..’’ உள்ளே இருந்து பெண்ணின் குரல் இனிமையாக ஒலித்தது. அறையைத் திறந்து உள்ளே சென்றான். கட்டிலில் அமர்ந்து முதுகு காட்டிக்கொண்டு அவள் உதட்டுக்குச் சாயம் தடவிக் கொண்டிருந்தாள்.
இவன் அருகில் செல்ல ஆசையாய் திரும்பினாள்.
ஐம்பது வயது மூதாட்டி. நல்ல உடல் பருமன். ராகுலுக்குக் குழப்பமாக இருந்தது.
‘‘ஜா…ஜான்சி……’’ தடுமாறினான்.
‘‘நான்தான்!’’
இவனுக்கு மயக்கம் வராத குறை.
‘‘மன்னிக்கனும்!’’ – திரும்பி இரண்டு அடி எடுத்து வைத்தான்.
‘‘ஏய் ! பணம் வாங்கி இருக்கே?’’ அந்த உடம்பை வைத்துக் கொண்டு அவள் பாய்ந்து வந்தாள்.
ராகுலுக்குத் தப்பிக்க வழி இல்லை. உல்லாசமாக வந்தவனுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு அவ்வளவு பணமும் கை வசமில்லை. கிடுக்கியில் மாட்டிய எலியாக விழித்தான். பரமசிவத்தை நினைக்க உள்ளுக்குள் ஆத்திரம் வந்தது. மனுசன் நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார்! கோபம் வந்தது.
‘‘வா கண்ணா!’’ அவள் இவனைக் கட்டிப்பிடித்து அணைத்தாள். ராகுல் காற்றுப் போன பலூன் போல தொங்கிப் போனான்.
ஆனால் அவளுக்கு இவன் மேல் ரொம்ப இஷ்டம்.
‘‘இதோ பார் கண்ணா! வீட்டுக்காரர் வயசாளி. சரி இல்லேன்னுதான் உன்னைப் பிடிச்சேன். நீ இப்படி ஏனோ தானோன்னு இருக்கிறது சரி இல்லே. இன்னும் ஆயிரம் வாங்கிக்க. என்னைச் சின்ன பொண்ணா நெனைச்சி பழகு.’’ – இறுக்கிப் பிடித்தாள்.
இவன் மூச்சு முட்டிப் போனான்.
அவள் கொஞ்சம் போதையும் ஏற்றி இருந்தாள். இவன் விழி பிதுங்குவதே அவளுக்கு உற்சாகமாக இருந்திருக்க வேண்டும். ரொம்ப படுத்தி விட்டாள்.
காலையில்… கசங்கி நொந்து போனவனாக ஓட்டலை விட்டு வெளியே வந்தான். உடல் முழுதும் எருமை புரண்ட வலி. அவள் அப்படித்தான் இவனைப் படுத்தி எடுத்தாள். அனுபவத்திலேயே இது மோசமான அனுபவம். காரை ஓட்டவே தெம்பில்லை. மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்து வீட்டில் விழுந்தான். ஷவரை நன்றாக திறந்து உடல் களைப்பு தெளிய குளித்தான். எவரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாதென்பதற்காக கைபேசியை அணைத்து வைத்தான். தொலை பேசியின் ஒலி வாங்கியை எடுத்து கீழே வைத்தான். வீடு பெருக்கிக் கொண்டிருந்த ஆயாவை விட்டு டிபன் வாங்கி வரச் சொன்னான். தோட்டக்காரன் பூச்செடி கொரியன் புற்கள் குரோட்டன்ஸ் செடிக்கெல்லாம் தண்ணீர் பாய்ச்சியதைக் கவனித்தான்.
இவர்களுக்கும் இவனுக்கும் சம்பந்தமே இல்லை. காலை மாலை ஆயா வீட்டைப் பெருக்கிவிட்டுப் போவாள். அதே போல் தோட்டக்காரனும் காலை மாலை தண்ணீர் பாய்ச்சி விட்டுச் செல்வான். மாதம் பிறந்து ஒன்னாம் தேதியானால் இவர்களுக்குச் சம்பளம். அந்த நேரத்தில்தான் ஒருத்தரை ஒருத்தர் முகம் பார்ப்பார்கள்.
டிபன் வர சாப்பிட்டு விட்டு படுத்தான். அடித்துப் போட்டாற் போல் தூக்கம். மாலை எழுந்தும் அசதி தீரவில்லை. மெல்ல நடந்து அருகில் இருக்கும் லூதி கார்டனுக்குப் போனான். எவரையும் கவனிக்காமல் பரமசிவத்தைத் தேடினான். ஆள் அகப்படவில்லை. திரும்பி வரும் வழியில் எதிர்பட்டார்.
‘‘ஐயா! கொஞ்சம் வீட்டுக்கு வரனும்!’’ – அழைத்தான்.
‘‘வர்றேன் தம்பி !’’ அவரும் அவன் பின்னால் உற்சாகமாக சென்றார். மனுசனுக்கு வெளிநாட்டு விஸ்கி நினைப்பு. சமயத்தில் ராகுலுக்கு அதிக சம்பாத்தியமென்றால் அழைத்து வந்த ஆளை வீட்டிற்கு அழைத்து இப்படி குளிர்விப்பான். வீட்டினுள் நுழைந்த அடுத்த விநாடி கதவைச் சாத்தி பரமசிவத்தைப் பிடித்து இரண்டு அறையைத் தள்ளினான். ‘‘என்ன தம்பி இப்படி ?’’- அரண்டு போன அவர் வலி தாங்க முடியாமல் கத்தினார்.
‘‘நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன். கெழவியைப் பிடிச்சுக்கொடுத்தே?’’ மேலும் அறையை விட்டான்.
‘‘தம்பி ! அடிக்கிறதை நிறுத்துங்க. நான் சொல்றதைக் கேளுங்க.’’ அலறினார்.
‘‘சொல்லு?’’
‘‘சத்தியமா ஒரு சின்ன பொண்ணுதான் நான் ஜான்சி எனக்கு நீங்க வேணும்ன்னு சொல்லி பணத்தை நீட்டினுது. அது இப்படி ஏமாத்தும்ன்னு நான் கனவுல நெனைக்கலை. என் மேல தப்பு இல்லே.’’ காலில் விழுந்தார்.
‘வெறி புடிச்ச பாட்டிக்கு எவளோ ஒருத்தி கை கூலி! பேத்தியா வேலைக்காரியா?!”
‘‘எவ அவ ?’’ – கூவினான். அந்த அளவிற்கு ஆத்திரம்.
‘‘தெரியலை தம்பி. அடுத்த முறை அவளை நான் சந்திச்சேன்னா அடையாளம் காட்டுறேன்.’’ – கதவைத் திறந்து கொண்டு ஓடினார்.
‘எவளாவது குறும்புக்காரி இப்படி செய்யவும் வாய்ப்புண்டு.’ – ராகுல் அடங்கிப் போய் பெருமூச்சு விட்டான். பரமசிவத்தை வேறு நாலு வாங்கு வாங்கி இருந்ததில் ஆத்திரம் தணிந்து போயிருந்தது, மிச்ச சொச்சமிருக்கும் அந்த மோசமான அனுபவத்தை மறக்க குளிரூட்டும் பெட்டியைத் திறந்து வெளிநாட்டு சரக்கை எடுத்தான்.
வெளியே வந்த பரமசிவத்திற்கு ஆத்திரம் அவமானம் தாங்க முடியவில்லை. எப்படி சமாதானப்படுத்தியும் மனசு ஆறவில்லை.
‘நானென்ன இவனைப் பழி வாங்கனும்ன்னா கிழவியை விட்டேன். குமரியைக் காட்டி கிழவி வருவாள்ன்னு யாருக்குத் தெரியும்? பையன் நல்லவன் சம்பாதிக்கட்டும்ன்னு விட்டா…. நடந்தது என்னனென்னு தெரியாம என் மேல பாயறான். வயசுல பெரியவர் என்கிற மரியாதைகூட அடிக்கிறான்னா என்ன அர்த்தம்? தைரியம்!’ – அவருக்குள் நெஞ்சு கொதித்தது.
‘இதுக்குப் பழிக்குப் பழி வாங்குறாப் போல ஏதாவது செய்தாதான் சரிவரும்!’ அவருக்குள்ளேயே சொல்லிக் கொண்டார். ‘ஆள் தொழிலே செய்யாத அளவுக்கு ஆளை வைச்சி அடிச்சி கையைக் காலை முறிச்சுப் போட்டா என்ன….?’ தோன்றியது.
‘அது பாவம்!’ சடக்கென்று மனசு மாறினார்.
அது மட்டுமில்லாமல் தன்னால்தான் தனக்கு இந்த பாதிப்பு என்று தெரிந்தால் எதிரி சும்மா இருக்க மாட்டான். திருப்பி அடிப்பான். அவனாவது.. மனைவி மக்கள் இல்லாதவன் நொண்டியாய்க் கிடந்தாலும், முடமாக இருந்தாலும், பசியாய்க் கிடந்தாலும், பட்டினியாய் இருந்தாலும், வாழ்ந்தாலும், செத்தாலும் அவனோடு போகும். தனக்கு ஒரு பாதிப்பு என்றால் வருமானத்திற்கு வழி இல்லாமல் குடும்பமே நாசம்!’ – நினைக்க நெஞ்சு நடுங்கியது.
‘அறியாத பிள்ளை தெரியாமல் செய்து விட்டான்! விட்டு விடலாம் !’ நினைக்கும் போதுதான் ‘கூடாது!’ மனசு முரண்டியது,
‘சரி. தன்னால் அவனுக்குச் சின்ன பாதிப்பாவது ஏற்படுத்தா விட்டால் வயசுக்கு என்ன மரியாதை!’ நினைத்தார். அதையே முடிவாகவும் எடுத்தார்.
‘யாரைப் பார்த்து என்ன செய்ய?’ என்று யோசிக்கும்போதுதான் சுரேஷ் மனக் கண் முன் வந்தான்.
சுரேஷ் என்கிற சின்னச்சாமி இவர் கைதூக்கிவிட வளர்ந்தவன். அவன் சென்னையிலிருந்து டெல்லிக்கு வேலை தேடி வரும் போது பஞ்சைப் பனாதை. கையில் சல்லிக் காசு கிடையாது. வந்த முதல் நாள் இன்டர்வியூவிற்குப் போய்விட்டு அது கிடைக்காத விரக்தியில் இனி வேலை செய்யாம இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்கிற வைராக்கியத்தில் கையிலுள்ள காசில் ஓட்டலில் தின்றுவிட்டு பிளாட்பாரத்தில் தூங்கும்போதுதான் பத்து மணிக்கு மேல் நகர் வலம் வந்த போலீஸ்காரர்கள் சந்தேக கேசில் ஸ்டேசனுக்கு இழுத்துச் சென்றார்கள்.
வழியில் காரில் வந்த ஒருத்தி இவன் மேல் பரிதாபப்பட்டு போலீஸ்காரர்களை நிறுத்தி, என்ன ஏதென்று விசாரிக்க…. அவர்கள், விபரம் சொல்ல…. ‘அடடா! நான் ஊர்லேர்ந்து வந்த இந்தப் பையனைத்தான் தேடி வர்றேன். வழி தவறி எங்கோ போய் உங்ககிட்ட மாட்டிக்கிட்டான். விட்டுப் போங்க..’ சொல்லி அவர்களிடமிருந்து மீட்டு அழைத்துச் சென்றாள்.
காரில் அழைத்துச் சென்று நல்ல வாசனை சோப் கொடுத்து நன்றாகக் குளிக்கச் செய்து, நல்ல சாப்பாடு போட்டு,படுக்கச் செய்தாள்.
ஆகா ! முன்பின் தெரியாத ஆளை என்ன அக்கரையாய் உபசரிக்கிறாள். எவ்வளவு நல்ல மனசு என்று நினைக்கும்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவள் இவன் மீது வந்து கை போட்டாள். அதிர்ந்தான். அவள் அவனை மடக்கி சுருட்டி…
பயணக் களைப்பு. உடல் சோர்வு. சின்னச்சாமி அவளுக்குத் தீனி கொடுக்க முடியாமல் துவண்டு போக.. அடுத்த வினாடி, ‘‘ச்சே! நாயே!’’ ஆத்திரத்தில் அறையைக் கொடுத்து வெளியே தள்ளிவிட்டாள்.
மறுநாள் முகம் வீங்கி திரிந்தவனை பரமசிவம்தான் கண்டெடுத்தார், கண்டுபிடித்தார்.
‘‘ஏம்பா மூஞ்சி முகம் வீங்கி கிடக்கு?’’என்று விசாரிக்க… இவன் தன் கதையைச் சொல்லி அவமானத்தில் தலைகுனிந்தான்.
இவருக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாகிப் போனது. ‘‘நீ ஒன்னும் கவலைப்படாதே! எந்த பொம்பளையையும் ஆம்பளை அவ்வளவு சுலபமா ஜெயிக்க முடியாது. அதுவும் இப்படி தின்னு கொழுத்து… ஆள் தேடி அலையுறவளை நிச்சயம் ஒரு சாதாரண ஆம்பளையால ஜெயிக்க முடியாது. அதிலும் நீ சின்ன பையன். இதுக்கெல்லாம் மாத்திரை இருக்கு. தினம் மூணு வேளையும் முட்டை சாப்பிடு பத்துப் பொம்பளையை ஒரே நேரத்துல ஒன்னா ரவுண்டு கட்டி அடிக்கலாம்.’’ தேற்றினார். அதுமட்டுமில்லாமல் தொழிலில் சில நீக்கு போக்குகளையும் சொல்லிக் கொடுத்தார்.
‘‘குடும்ப பொண்ணுங்களுக்கு வலை விரிச்சா செருப்படிதான் விழும். வீட்டுல புருசன் சரி இல்லாதவ, அவன்கிட்ட திருப்தி இல்லாதவளாய்த் தேடனும். அவளுங்க கண்களைப் பார்த்தாலே தெரியும். அலையும். அடுத்து, வீட்டுக்காரன் சரி இருந்தாலும் வியாபாரம், தொழில்ன்னு பொண்டாட்டியைக் கவனிக்காம இருப்பான். வெளிநாட்டுல வேலை செய்யிறவன் மனைவி இங்கே தின்னுட்டு திரிவா. கண்டுபிடிக்கனும்.’’
‘‘உனக்கு ஆள் புடிக்க தெம்பு, தைரியம், திறமை இல்லேன்னா எவளையாவது கூப்பிட்டு எசகுபிசகா மாட்டி அடிவாங்காதே. நாலு ‘ஆண், பெண் அழகு நிலையத்துக்கு’ நேரடியாய்ப் போய் நான் இப்படி. ஆள் இருந்தா அனுப்புங்கன்னு தகவல் சொல்லிட்டு வா. பார்ட்டி தானா தேடி வரும். மஜாஜ் வித்தை கத்துக்கோ. பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்.’’ – என்று தொழில் ரகசியங்களையெல்லாம் புட்டு புட்டு வைத்தார். சின்னச்சாமி இவர் சொன்னதையெல்லாம் பக்கென்று பிடித்துக் கொண்டான்.
அதிலிருந்து பரமசிவத்தை எங்கு கண்டாலும் சின்னச்சாமி, ‘‘தலைவா!’’ என்றுதான் அழைப்பான். இவருக்கு தேவைப்பட்ட உதவிகள் செய்வான்.
அடுத்து ஒரு தடவை சின்னச்சாமி இவரிடம், ‘‘நீலப்படவாய்ப்பு தேடி வருது. நடிக்கலாமா ?’’ என்று கேட்டான்.
அதற்கு இவர், ‘‘அந்த வேலை வைச்சிக்காதே! ஒரு படத்துல நடிக்க வைச்சி உனக்கு ஓராயிரம் குடுத்து அவன் ஒன்பதினாயிரம் சம்பாதிப்பான். உலகம் பூராவும் அந்த கேசட்டை வித்து உன்னை நாரடிப்பான்’’ என்று மறுத்தவர்…
அடுத்த நாளே வந்து, ‘‘நடி! பார்ட்டிங்களுக்கிட்ட போட்டு உன் திறமையை காட்டி வியாபாரத்தைச் சூடாக்கலாம்.’’ சொன்னார்.
பரமசிவம் சொன்னதையெல்லாம் அப்படியே செய்த சின்னச்சாமி இப்போது தொழிலில் நல்ல முன்னேற்றம். தொழில் முறையில் ராகுலுடன் சிறு உரசல். இவன் கொண்டு வந்த பணக்கார ஆள் ஒருத்தி அவனைப் பார்த்து மயங்கிப் போக கைக்கு வந்ததைத் தட்டிப் பறித்தான் என்கிற வருத்தம்.
பரமசிவம்…. அவன் மேன்சனுக்குக் கீழேயே சின்னச்சாமி இருக்கிறானா, அவன் புது டூ-வீலர் வண்டி கிடக்கிறதா என்று பார்த்தார். இருந்தது. நிம்மதியாக மாடிப்படி ஏறினார்.
அறை சுத்தமான யோக்கியன்வீட்டுப் பிள்ளைபோல சுவர் முழுக்க சாமி படங்களாக இருந்தது. பரமசிவமே பார்த்து அசந்து போனார். மேலும்…அவன் பக்தியாய் நெற்றியில் பட்டை இட்டிருப்பதைப் பார்த்து, ‘‘என்ன தம்பி!’’ பயந்தார்.
அவரை வரவேற்று உள்ளே அமர வைத்த சுரேஷ்… ‘‘இதெல்லாம் பக்கத்து அறைகாரங்களுக்காக போட்டிருக்கிற வேசம். நம்ம தொழில் இவனுங்களுக்குத் தெரிஞ்சுதுன்னா போலீஸ்ல போட்டுக் குடுத்து காட்டிக் குடுத்துடுவானுங்க. அது போகட்டும் வந்த விசயத்தைச் சொல்லுங்க?’’ தன் வேசத்துக்கான காரணம் சொல்லி…. கேட்டான்.
பரமசிவம் தட்டுத்தடுமாறி நடந்ததைச் சொன்னார். ‘‘அவனை எப்படியாவது பழி வாங்கனும் சுரேஷ்!’’ என்றும் தன் கோரிக்கையை வைத்தார்.
இவனுக்கு எட்டாப்பழம் கைக்கு வந்தாற் போல இருந்தது.
‘‘கவனிப்போம்!‘‘ உற்சாகமாக சொன்னான்.
அத்தியாயம்-5
மெல்லிய ஷிப்பான் சேலை. முன்னால் முடிந்த அளவிற்கு இறக்கி வெட்டப்பட்ட ஜாக்கெட். பின்னால் ஜன்னல். இருபது வயது அர்ச்சனா…. பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும் அழகில் நல்ல எடுப்பாக இருந்தாள். அவளை அழகிஇ அப்சரஸ் என்று ஆராதித்தவர்கள் ஆயிரத்திற்கும் மேல். இப்போதும் அந்த அழகில் கொஞ்சமும் குறைவில்லை. அவள் மையிட்ட கண்ணினால் ஒரு பார்வை பார்த்துஇ சாயம் பூசிய உதடுகளைக் குவித்து ஒரு வார்த்தை பேசினால் போதும். ஒரே சமயத்தில் ஓராயிரம் பேர் சாய்வார்கள்.
அவள் வாடிக்கையாளர்களைத் தேடிப் போகமாட்டாள். அவளைத் தேடி அவர்கள் வருவார்கள். அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை. இப்போதும் ஒரு பணக்காரன் வருகைக்காகத்தான் காத்திருக்கிறாள். அவன் வந்து இவளை காரில் அழைத்துச் செல்வான்.
அவன் வரும்வரை…. பொழுது போக வேண்டுமென்பதற்காக ரிமோட் கண்ட்ரோலைத் தொட்டு தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தாள்.
ஆங்கிலம்இ இந்திகளைத் தள்ளினாள். தமிழில் தொடர் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு மணித் துளியில் அந்த விளம்பரம் வந்தது.
‘தன் கட்டுமஸ்தான உடலை ஷவரில் நனைத்து பச்சை நிற சோப்பை தன் உடல் முழுக்க நுரையடித்து என் மேனி எழிலுக்கு….’ என்று காட்டி சிரித்தான் ராகுல்.
அர்ச்சனாவிற்கு அவனைப் பார்க்கப் பார்க்க உடலெல்லாம் பற்றி எரிந்தது. உள்ளக் கொதிப்பில் உடனே தலைவலியும் வந்தது.
அவளுக்கு எப்போதுமே இப்படித்தான். அவளுக்கு இந்த விளம்பரம் வரக்கூடாது. ராகுல் கண்ணில் படக்கூடாது. பார்த்தால் தலைவலி.
தொலைக் காட்சிப் பெட்டியை அணைத்தாள். நெற்றிப் பொட்டு இரண்டும் விண் விண்னென்று தெரித்தது. இரு கை கட்டை விரல்களாலும் அழுத்திப் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு எந்த மருந்து போட்டாலும் இந்த தலைவலி தீராது.
‘இவனை எப்படியாவது……..?’ நினைக்க நினைக்க அவளுக்குள் நெஞ்சு கொதித்தது.
‘எப்படி சந்திக்க ?’ அப்படியே சோபாவில் சரிந்து விட்டத்தைப் பார்த்து யோசித்தாள்.
இன்றைக்குத்தான்….
‘விளம்பரக் கம்பெனிக்குத் தொலை பேசி செய்து விலாசம் விசாரிக்கலாம் ?’ – புத்தியில் பட்டது.
‘கேட்டால் சொல்வார்களா ?’ என்றும் யோசனை வந்தது,
‘சொல்லாமல் என்ன ?’…. டெலிபோன் டைரக்டரியை எடுத்து எண் கண்டுபிடித்து தொலைபேசி அருகில் சென்றாள். அது தானாகவே ஒலித்தது.
எடுத்து, ‘‘ஹலோ !’’ – என்றாள்.
‘‘அர்ச்சனாவா?’’
‘‘ஆமாம்.’’
‘‘ரெடியா?’’
‘‘சாரி.’’ போனை வைத்தாள்.
அவளுக்கு இனி யாரையும் பிடிக்காது. தொழில் செய்ய புத்தி போகாது. இந்த ராகுல் இவள் மனதை விட்டு அகல நிச்சயம் ஒரு நாளாகும். அரை பாட்டில் விஸ்கியை விழுங்கி முழு போதையில் தூங்கி எழுந்தால்தான் அவன் நினைவு சுத்தமாக மறையும்.
இனியும் தாங்காது ! என்ற முடிவிற்கு வந்த அர்ச்சனா குளிரூட்டும் பெட்டியைத் திறந்து விஸ்கி பாட்டிலைத் தொட்டாள்.
‘கூடாது. இதற்கு முடிவு கட்டியாக வேண்டும்!’ – மனம் முரண்டு பிடித்தது. தொட்ட பாட்டிலை விட்டு மூடினாள். மறுபடியும் போனைத் தொட்டு எண்களை அழுத்தி…..காதில் வைத்தாள்.
‘‘நாங்க சுபம் விளம்பரக் கம்பெனி. நீங்க யாரு?’’
‘‘அர்ச்சனா.’’
‘‘சினிமா நடிகையா?’’
‘‘இல்லை.’’
‘‘வாய்ப்பு வேணும்ன்னா நேரா வாங்க. இல்லே புகைப்படம் அனுப்புங்க.’’
‘‘இல்லே. இது வேற விசயம்.’’
‘‘சொல்லுங்க?’’
‘‘எனக்கு ராகுல் விலாசம் வேணும்.’’
‘‘மன்னிக்கனும்….அவர் காதலி, மனைவி கேட்டாலும் நாங்க சொல்ல முடியாது.’’
‘‘ஏன் சொல்ல முடியாது?‘‘
‘‘இதுக்கு முன்னாடி ஒரு விளம்பரப்படம் எடுத்தோம். ஆள் நல்லவிதமா நடிச்சிருந்தார். நல்லா வியாபாரமாகி நல்லத்தனமாவும் ஓடிக்கிட்டிருந்துது, அடுத்து ஒரு தயாரிப்புக்கு அவரை வைச்சு அடுத்து ஒரு படம் எடுக்கலாம்ன்னு திட்டமிட்டு வேலை நடத்திக்கிட்டு இருக்கும் போது உங்களை மாதிரி பொண்ணு போன் செய்து அவர் விலாசம் வேணும்ன்னு கேட்டுச்சு. நாங்களும் எதார்த்தமா கொடுத்தோம். அடுத்த நாள் அந்த ஆள் கொலை. யார்கிட்ட விலாசம் கொடுத்தீங்கன்னு போலீஸ் எங்களை நோண்டி நொங்கெடுத்துடுச்சு. அன்னையிலேர்ந்து நாங்க யாருக்கும் விலாசம் கொடுக்கிறதில்லே. தொலைபேசி கைபேசி எண்களும் கொடுக்கிறதில்லே.’’ – போனை வைத்தார்.
அர்ச்சனாவிற்கு எரிச்சல், ஏமாற்றமாக இருந்தது, அடுத்து ஒரு கம்பெனி எண்ணை தேடி எடுத்து போன் செய்தாள். ‘‘ஹலோ யார் வேணும் ?’’
‘‘நான் அர்ச்சனா. எங்க சோப் விளம்பரப்படத்துல நடிக்க ராகுல் வேணும்.’’
‘‘அவர் விலாசம் போன் நம்பரெல்லாம் எங்ககிட்ட கிடையாதும்மா. ஆள் வாய்ப்பு தேடி அடிக்கடி இங்கே வருவார். கம்பெனி கம்பெனியாய் ஏறி இறங்குவார். வாய்ப்பு இருந்தா பயன் படுத்திக்குவோம் ஒரு நிமிசம் அவர் செல் நம்பர் இருக்கு. முடிஞ்சா புடிச்சுக்கோங்க.’’
‘‘சொல்லுங்க சார்.’’
சொன்னார்.
‘‘ஒரு நிமிசம் சார்.’’ என்ற அர்ச்சனா மேசை மேலிருந்த கால்குலேட்டரை எடுத்து, ‘‘இப்போ சொல்லுங்க சார் குறிச்சுக்கிறேன்.’’ என்றாள்.
அவன் சொல்லச் சொல்ல நம்பரை அழுத்தி பதிவு செய்து கொண்டாள்.
“நன்றி சார்” துண்டித்தாள்.
உடன் தன் கை தொலைபேசியை எடுத்து எண்களை நசுக்கினாள். அடிக்கடி நசுக்கினாள். பத்து தடவைக்கு மேல் அழுத்தி வெறுத்துப் போய், ‘‘படவா பழனிச்சாமி ! அணைச்சு வைச்சிருக்கான்!’’ முணுமுணுத்தாள்.
அத்தியாயம்-6
அர்ச்சனவுடன் கீதா, பிருந்தா, மேகலா அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
எல்லாருமே தோழிகள். பலான தொழிலைப் பணக்காரத்தனமாக செய்பவர்கள். ஓய்வு கால நேரங்களில் இப்படி சந்திப்பார்கள், பேசுவார்கள்.
‘‘நமக்கும் ஆபத்து !’’ பேச்சுக்கு நடுவே திடீரென்று குண்டைப் போட்டாள் கீதா.
‘‘என்னடி…? ’’ மூவரும் திடுக்கிட்டு அவளைப் பார்த்தார்கள்.
‘‘இத்தினி காலம் பொம்பளைங்க செய்ஞ்ச தொழிலை இப்போ ஆம்பளைங்களும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.’’ புரியாமல் பார்த்தார்கள்.
‘‘ஆம்பளைங்க அலைஞ்ச காலம் போய் இப்போ பொம்பளைங்களும் அலைய ஆரம்பிச்சாச்சு. கற்பு காணாம போச்சு. புருசன் சரி இல்லாதவ, கவனிப்பில்லாதவ, அவன் வெளிநாடு போய் ஏங்கிக் கிடக்கிறவளெல்லாம் யாருக்கும் தெரியாம இலை மறைவு, காய் மறைவா அப்பப்ப எவனையாவுது தொட்டு குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாங்க. வயித்துல வந்தாலும் ரகசியமா கலைச்சிக்கிட்டிருந்தாங்க. இப்போ அவுங்களும் துணிஞ்சு வெளியில வந்து ஆம்பளைப் புடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.’’
‘‘நிசமாவா சொல்றே?!’’
‘‘ஆமாம். இங்கே மக்கள் அதிகமா கூடுற இடங்கள்ல ஆண்கள் நிக்கிறாங்க. அடையாளம் தெரிஞ்சு பெண்கள் கூட்டிப் போறாங்க. இன்னும் கொஞ்ச காலத்துல நம்மை போல அழகை காட்டி பெண்களைக் கவர ஆண்கள் நிப்பாங்க. ஆண்கள் விபச்சாரம் செய்ற இடத்துக்குப் பெண் போவாள். நம்மை எப்படி ஆண்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ அப்படி…அவள் ஆண்களை வரிசை கட்டி நிக்க வைச்சு புடிச்சவனைக் கூட்டிப்போவாள்.’’ கீதா சொல்ல மற்றவர்களுக்கு இந்த கற்பனை இனிப்பாக இருந்தது.
அர்ச்சனாவிற்கு மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் பலான பெண்கள் அரையும் குறையுமாய் விதவிதமாய் உடை அணிந்து வாடிக்கையாளர்களைக் கவர வரிசை கட்டி காட்சி பொருட்களாய் நிற்பது போல் ஆண் ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு தன் ஆணழகை காட்டி நிற்பார்கள் போல் கற்பனை வந்தது.
அதோடு மட்டுமில்லாமல் தொழிலுக்கு ஆண்களையே ஆண்கள், பெண்கள் கடத்துவது போலவும் வழிக்கு வராத யோக்கியர்களை அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து கொடுமை படுத்துவதும், சோறு தண்ணி காட்டாமல் குற்றுயிராய் ஆக்கி நாலைந்து பெண்களை விட்டு அவனைக் கெடுப்பது போலவும் கனவு வந்தது. எல்லாம் சினிமாத்தனமான கற்பனை இல்லை. எல்லாம் இவள் கண்ணால் பார்த்தது அனுபவித்தது. பாவிகள் எத்தனை பேர்களை எத்துணைக் கொடுமைகள் செய்திருக்கிறார்கள்! நினைக்கவே அவளுக்கு நெஞ்சு நடுங்கியது. இவர்கள் கொடுமை தாளாமல் ஒருத்தி செத்தே மடிந்து விட்டாள். அதை மறைக்கப் போய்தான் போலீசுக்குத் தகவல் போய்… வந்து, புகுந்து ஒரே கலவரம். அந்த கலவரத்தைச் சாக்காய் வைத்து இவர்கள் தப்பிக்க வில்லையென்றால் ?…..அர்ச்சனா தலையை உலுக்கி கலைத்தாள்.
தினம் வீட்டில் தன் கையாலேயே சமைத்து குழந்தைகள்இ மாமனார் மாமியார். மற்றவர்களுக்கும் பரிமாறி அலுத்துப் போன பெண் ஓட்டலுக்குப் போய் மற்றவர்கள் பரிமாற உட்கார்ந்து சாப்பிட விருப்பப்படுவது போல் மேகலாவிற்குள்ளும் அந்த விபரீத ஆசை தோன்றியது.
‘‘ஏன்டி ! நம்மகிட்ட ஆண்கள் வர்றாப்போல நாம அவுங்ககிட்ட போனா என்ன?’’ தன் மனதிலுள்ளதை வெளியிட்டாள்.
மற்ற மூவரும் அவளை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள். ‘‘ஏன்டி என்ன தப்பு? நாம தினம் ஆண்கள்கிட்ட பணம் வாங்குறோம். இன்னைக்கு ஒரு நாளாவது நாம கொடுப்பேமே !’’ என்றாள்.
‘‘……………………………’’
‘‘ஆண்கள் எப்படி நடக்குறாங்க. கவனிக்கலாம்.’’ – மேலும் சொன்னாள்.
கேட்ட கீதா, பிருந்தா, அர்ச்சனாவிற்குள்ளும் இந்த ஆசைப் புகுந்து கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
‘‘செய்யலாம்டி!‘‘ – சேர்ந்து உற்சாகமாக கூவினார்கள். ‘‘எப்படி?’’ – கீதா ஆர்வமாக கேட்டாள்.
‘‘லோதி கார்டன் பக்கம் போனா நமக்குப் புடிச்சவனை இழுத்து வரலாம். இல்லேன்னா ஏதாவது ஒரு பெண்கள் அழகு நிலையத்துல போய் விபரம் சொன்னா அனுப்பி வைப்பாங்க.’’
‘‘என்னடி! எல்லாம் அனுபவப்பட்டவள் போல வரிசையாய்ச் சொல்றே?’’ பிருந்தா மேகலாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
‘‘இதுல ஆச்சரியப்படுறதுக்கெல்லாம் ஒன்னுமில்லே.எனக்கு அனுபவமுமில்லே. ராத்திரி வந்தவன் விபரம் சொன்னான். இன்னைக்கு நாங்க உங்களைத் தேடி வர்றாப்போல நாளைக்கு நீங்க எங்களைத் தேடி வருவீங்கன்னு சொன்னான். என்னன்னு விபரம் கேட்டேன் இதெல்லாம் சொன்னான்.’’ என்றாள்.
அர்ச்சனாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
‘நாடு எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது. எதையும் கவனிக்காமல் வாடிக்கையாளர்கள் திருப்தியிலும், ராகுல் நினைப்பிலும் இருந்திருக்கிறோம்!’ நினைத்தாள்.
‘‘பொம்பளைங்களுக்கு எப்படி அந்த மாதிரி ஆண்களைத் தெரியும்?’’ கேட்டாள்.
‘‘நம்மை ஆண்கள் கண்டுபிடிக்கிறாப்போலதான் கண்டுபிடிப்பாங்க. அர்ச்சனா! எல்லாருக்கும் எல்லா திறமையும் உண்டு. பெண்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்காங்கஇ அடக்கி வாசிக்கப்படுறாங்க அவ்வளவுதான்!’’ – கீதா விளக்கம் சொன்னாள்.
‘‘வித்தியாசமான அனுபவம்டி. நாமே களத்துல இறங்கலாம்டி …’’ மேகலாவிற்கு இப்பவே அங்க ஓடிப் போய் நிற்க ஆசை. கெஞ்சல் கொஞ்சலாக சொன்னாள்.
‘‘நம்மையெல்லாம் தரகர் வியாபாரம் பண்றாப் போல கை நிறைய பலான ஆண்கள் புகைப்படங்களை அடுக்கி வைச்சிக்கிட்டு ஆண் தரகரோ, பெண் தரகரோ… தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளா இருக்குன்னு முணுமுணுத்து நம்மைச் சுத்தி சுத்தி வருவாங்களா?’’ வியப்பாய்க் கேட்டாள் பிருந்தா.
‘‘அதெல்லாம் அங்கே போய் பார்த்தாதான் தெரியும்!’’ கீதா அவள் வாயை அடைத்தாள்.
பெண்களுக்குத்தான் என்ன கற்பனை! அடிமைப்பட்டவர்களுக்குத்தான் மற்றவர்களை அடிமைப்படுத்திப் பார்க்க ஆசை வரும். கஷ்டப்பட்டவர்கள்தான் மற்றவர்களையும் கஷ்டப்பட நினைப்பார்கள். – இதெல்லாம் மானிட மனதின் எதார்த்தங்கள்.
‘‘வேணாம்டி. நாம கம்முன்னு இங்கிருந்தே காரியம் முடிக்கலாம் !’’ சொன்னா கீதா கைபேசியை எடுத்து, ‘‘ஹலோ ! விந்தியா அழகு நிலையமா… ?’’ கேட்டாள்.
‘‘ஆமாம்!’’
‘‘உங்ககிட்ட ஒரு உதவி?’’
‘‘மணப்பெண்ணை அலங்கரிக்க ஆள் அனுப்பனுமா ?’’
‘‘இல்லே…’’
‘‘அலங்கார செலவு எவ்வளவு தெரியனுமா ?’’
‘‘இல்லே…’’
‘‘நாங்க மஜாஜும் செய்வோம்.’’
‘‘வந்து…. வந்து…’’.
‘‘சொல்லுங்க என்ன உதவி…. ?’’
‘‘வீட்டுக்காரர் வெளியில போயிருக்கார்…’’
‘‘நீங்க அழகா கவர்ச்சியாய் அவர் ரசனைக்கேத்தாப்போல இருந்தாத்தான் வெளியில போகமாட்டார். உடம்பைக் கொடி போல ஸ்லிம்மா வைச்சிருக்கனும். கண்ட இடத்துல சதை போடக் கூடாது. முகத்துக்கு எப்போதும் கிரீம் போட்டு பளிச்சின்னு வைச்சிருக்கனும். அடிக்கடி பேசியஸ் செய்துக்கனும். ஹெர்பல் முறையில நாங்க செலவு கம்மியா மக்களுக்குச் சேவை செய்யிறோம். எங்க சென்டர்ல நிறைய உடற்பயிற்சி சாதனங்கள் இருக்கு. யோகாவும் சொல்லித்தர்றோம்.’’
‘‘அதெல்லாம் வேணாம்…’’
‘‘பின்னே என்ன உதவி… சொல்லுங்க ? ’’
‘‘உடனே எனக்கு ஒரு பலான ஆண் தேவை. அனுப்பு முடியுமா ?’’ பளிச்சென்று சொன்னாள்.
‘‘போடி நாற முண்ட! வையிடி போனை.’’ எதிரில் அவள் சடக்கென்று எகிறி அணைத்தாள்.
கீதாவிற்கு முகம் இறுகிப் போனது.
‘‘என்னடி?’’ மேகலா அவளை ஆவலாய்ப் பார்த்தாள்.
‘‘இதெல்லாம் சரி வராது. நேரடியாய் நாம இடத்துக்கேப் போகலாம் !‘‘ அவள் எழுந்தாள்.
‘‘வேணாம்டி நம்மை எல்லாருக்கும் ஓரளவுக்குத் தெரியும். அங்கே போனா ஏதாவது பிரச்சனை வரும்!’’ பிருந்தா தடுத்தாள்.
அர்ச்சனாவிற்கும் கொஞ்சம் அச்சம் வந்தது.
மேகலா நிற்கவில்லை.
– தொடரும்…
– 13-10-2003 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.