ஆண் பெண் மூளைகளின் செயற்பாடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 972 
 
 

ரேணுகா தனது கணவர் குமார் மீதுள்ள கோபத்தில் கொதிக்கிறாள். அவள் பட படவென்ற வேகத்தில் தனது துணிகளை ஒரு பையில் போட்டு “எங்கள் உறவு ஆரம்பித்து பல ஆண்டுகளாகியும் உங்களைநான் புரிந்து கொள்ளாததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என்று தனது கணவன் குமாரைப் பார்த்து வார்த்தை அம்புகளை வீசினாள்.

ரேணு அவனிடம் சொல்வதைப் புரியாமல் குமார் அவளைப் பார்த்தான்.

“உனக்கு என் மேல கோபமh?” என்று ஆச்சர்யமான குரலில் அவளிடம் கேட்டான் குமார்.

“குமார் மற்றவர்களைப் புரிந்துகொள்ளாமல் தன்னலமான இரண்டு வயதுப் பிள்ளை மாதிரி நம்ம கல்யாணத்திற்குப் பின்பும் உங்கள் இஷ்டப்படி நடக்கலாம் என்று நினைப்பது மிகவும் நாகரீகமில்லாத விடயம்.” அவள் கோபத்தில் இரைகிறாள்.

அவளின் கணவன் குமார் இவள் இப்படி ஆத்திரப் படுவதற்குக் காரணம் தெரியாமல் அவளை ஆச்சரியத்துடன் பார்ப்பதைப் பார்த்து அவளுக்கு மேலும் கோபம் வருகிறது. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

“உன்னை இவ்வளவு கோபப்பட வைக்க நான் என்ன சொன்னேன் அல்லது என்ன செய்தேன்” அவன் குரலில் சந்தேகத்துடன் கேட்டான்.

“உங்க அம்மாதான் உங்களின் துணிகள் துவைப்பது,உங்கள்அறையைச் சுத்தம் செய்வது என்று அடிக்கடி சொல்கிறீர்களே அப்படியே நானும் செய்யவேண்டுமென்று எனக்குச் சொல்கிறீர்களே அதுதான் எனக்குப் பிடிக்கல்ல.” இதைச் சொல்லும்போது ரேணுகாவின் குரல் ஆத்திரத்தாலும் அழுகையாலும் கரகரத்தது.

“அதனால்?” அவன் குரலை உயர்த்தினான்.

‘’என்னால நீங்க எதிர்பார்க்கிற மாதிரி அப்படிச் செய்யமுடியவில்லை.குமார் நாங்க ரெண்டு பேரும் டாக்டர்கள் நாங்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம். வீட்டுக்கு வந்ததும் களைப்பில நீங்க அப்படியே சோபாவில படுத்துக் கொண்டு டிவி பார்ப்பீர்கள். உங்களைத் சந்தோஷப்படுத்த நான் வீட்டுக்கு வந்து ஒரு சின்ன இல்லத்தரசி வேடத்துல நடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது நாகரீகமா?. அத்துடன் உங்கள் மனச் சாட்சிக்குச் சரியாகப் படுகிறதா நான் இதை மவுனமாக ஏற்றுக் கொண்டு போலியாகச் சிரித்துக்கொண்டு எங்கள் வாழ்க்கையைத் தொடர முடியாது”. அவள் இரைந்தாள்.

“ரேணு ஐ லவ் யூ. நான் உன்னை அப்செட் பண்ணவேணுமென்று நினைக்கல” அவன் உண்மையிலேயே குழம்பிப் போயிருந்தான். அவன் குரலிருந்த கெஞ்சலும் குழந்தைத்தனமும் ஒரு சில வினாடிகள்.அவளைப் பேசவிடாது தடுத்தது. அவள் அவனிடம் எதுவும் சொல்லவில்லை. ஒரு கொஞ்ச நேரம் அவளை ஏற இறங்கப் பார்த்தாள். கடந்த இரண்டு மாதங்களில் அவன் ஒரு கணவனாகத் தன்னைப் பார்க்கவில்லை. மற்றவர்களின் உபசரிப்பில் வாழும் ஒரு குழந்தைப் போக்கிலேயே இருந்தான் என்பது அவனுடைய கேள்விகளிலிருந்து அவளுக்குப் புரிந்தது.

அதன்பின் ‘உன்னோடு பேசி என்ன பிரயோசனம்’ என்ற தோரணையில்; பின் படபடவென்ற வேகத்தில் தன் பொருட்களைத் தொடர்ந்து திணித்துக் கொண்டே இருந்தாள்.

அவர்கள் மருத்துவக் கல்லூரியில் சம்பிரதாயத்துக்கு ஒன்றிரண்டு வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளும் வகுப்புத் தோழர்களாகப் பல வருடங்களுக்கு முன் சந்தித்தனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் கொஞ்சம் கூட விடயங்களைப் பேசிப் பழகும் நண்பர்களாக மாறினர்.

படிப்பில் ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். குமார் உடற்கூறியல் மற்றும் உடலியல் ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தான். ஏனெனில் அவர் உயிரியலில் மிகவும் ஆழமான கண்ணோட்டத்துடன் இருந்தான். இரத்த ஓட்டம் மற்றும் மூளை செல்கள் அதன் செயல்பாடுகள் என்று பலவற்றைப் புரிந்து கொள்ள இடைவிடாது படித்தான். அவன் ஒரு நாள் பிரபல மூளை அறுவை சிகிச்சை நிபுணரhக- அதாவது ‘ப்ரயின் ஸெர்ஜனாக’ வர விருப்புவதாகச் சொன்னான். மாணவனாக இருக்கும்போதே தன்னை ஒரு ‘நியுறோலயிஜ்ட்’ நினைத்துக் கொண்டு சகமாணவர்களிடம் நரம்பியல் மூளையின் வேலைப்பாடுகள் பற்றிச் சந்தோசத்துடன் உரையாடுவான்.

ரேணு நுண்ணுயிரியலில் படிப்பில் சிறந்து விளங்கினாள். ஏனெனில் அவள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை நன்கு கற்றுக்கொள்ள விரும்பினாள். தற்போதைய மக்களின் வாழ்க்கை நியதிகளால் தொழில் வளர்ச்சியின் தாக்கத்தால் இயற்கை மாற்றத்தால் அத்துடன் இலாபத்தை முன்னிறுத்தியுண்டாக்கிய அவசர தயாரிப்பு உணவுகளை உண்வதால் பெருகி வரும் பல்விதமான நோய்களுக்குக் காரணமான வைரஸ் பக்டிரியாக்களைக் கட்டுப் படுத்த அல்லது அகற்ற என்ன செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தனது படிப்பை முன்னெடுக்க யோசித்திருக்கிறாள்.

ரேணுகாவின் தந்தை ஒரு சமூக அறிவியல் விரிவுரையாளர்.மனித நேயம், சமத்துவ சமுதாயம்,பேராசை குறைந்த வாழ்க்கைமுறை தன்னலமற்ற பரந்த முன்னேற்ற சிந்தனைகள் பற்றி அடிக்கடி பேசுபவர். தனது குழந்தைகளைப் பன்முக சிந்தனைக்கு ஊக்கப் படுத்தியவர்.

ரேணுவுக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவுவார்கள். அவர்களின் வீட்டு வேலைகள் மற்றும் தோட்டத்தில் பெற்றோருக்கு உதவவும் தயங்குவதில்லை.

ரேணுவின் தாய் பகுதி நேர ஆசிரியையாக உள்ளார். அவள் பகுதி நேர வேலை செய்தாலும் வீட்டு வேலைகளை அவள் கணவர் சந்தோசத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.ரேணுவின் அம்மாதான்; குடும்பத்தின் நிர்வாகி.குழந்தைகள் சரிசமமாக வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்து பழகவேண்டும் என்று தனது குழந்தைகளுக்குச் சொல்பவள். லண்டனில் வாழும் பெரும்பாலான மத்தியதர தமிழ் குடும்பத்தினர் ஆங்கிலேயர் வாழ்க்கை முறையைத் தெரிந்தவர்கள். ஆங்கிலேய மத்தியதரக் குடும்பத்து ஆண் வாரமுறையில் தோட்டத்தைக் கவனித்துக் கொள்வார். வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் குடும்ப சகிதமாகச் சென்று வாங்குவார்கள். அப்படியே ரேணுவின் குடும்பமும் சந்தோசமாக ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து மகிழ்வுடன்; வாழ்கிறது.

மெடிகல் காலேஜ் நான்காம் ஆண்டு படிக்கும் போது குமார் ரேணுவிடம் அவளை காதலிப்பதாக சொன்னான்.அவளுக்கும் அவனில் ஈர்ப்பு இருக்கிறது என்பதை அவள் மறைக்கவில்லை.

அவள் சிரித்துக் கொண்டே அவனிடம் “ஏன் என்னை லவ் பண்றீங்க?” என்று கேட்டாள்.

“நீ எனது அம்மா மாதிரி அன்பானவள். பல வித்திலும் இங்கே படிக்கும் மற்றப் பெண்களை விடக் கொஞ்சம் திறமையானவள்” என்று பெருமையாகச் சொன்னான்.

“ம்ம் அன்பாக இருப்பது பல மருத்துவர்களின் இயல்பு. திறமையான பெண்ணும் கூட என்று சொன்னதற்கு நன்றி” என்றாள் ரேணுகா

தற்கால வாழ்க்கை முறையில் உலகத்தின் பல நாடுகளில் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சர்வசாதாரணம்.மிக வசதியான பெரிய இடத்துப் பெண்களில் சிலர் வேலைக்குச் செல்ல மாட்டார்கள். அத்துடன் சிலகணவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வாழ்ந்ததுபோல் லண்டனில் பலவேலைவாய்ப்புகள் உள்ள நிலையிலும்; அவர்களை வேலைக்குச் செல்ல விடாமல் தங்கள் மனைவியர் வீட்டைப் பார்த்துக் கொண்டால் போதும் என் நினைக்கிறார்கள்.அப்படியான குடும்பத்திலிருந்து வந்தவன் குமார் என்று ரேணுவுக்குத் தெரியும்.

குமாரின் தந்தையார் ஒரு டாக்டர். தாய் திருமணத்திற்கு முன் உள்ளூராட்சி சபையில் நிர்வாக உத்தியோகத்தராக இருந்தவள். திருமணமானதும் கணவரின் விருப்பத்திற்கிணங்கி வேலையை நிறுத்தி விட்டுக் குடும்பத்தைப் பராமரிக்கிறாள்.

தங்கள் ஒரே மகளை மிகவும் நேசிக்கும் குமாரையும் அவன் விரும்பிய பெண்ணைத் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்கும் அவனது குடும்பத்தையும் கண்டு ரேணுகாவின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். குமாரின் பெற்றோருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் மட்டுமே. குமாரின் சகோதரி திருமணமாகிக் குழந்தையுடன் இருக்கிறாள். பகுதி நேர வேலை செய்யும் டாக்டராக இருக்கிறாள்.

குமாரின் பெற்றோர் மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு பெரிய தோட்டத்துடனாக வீட்டைத் தங்கள் ஒரே மகனுக்கு திருமணப் பரிசாக வழங்கினர். குமார்-ரேணு திருமணம் லண்டன் வாழ் மத்தியதர தமிழர்களின் வழக்கப்படி மிகவும் கோலாகலமாக நடந்தது.

காதலர்களின் பூமியான பாரிஸில் தேனிலவின் போது இளம் ஜோடி ஒரு அற்புதமான நேரத்தை அனுபவித்தது. பின்னர் குமாரின் பெற்றோர்களால் புதிதாக வாங்கிய மிகவும் பெரும் செலவில் அலங்கரிக்கப்பட்ட அழகான வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். அவர்களின் முழு நேர வேலையும் தொடங்கியது. அவ்வாறே அவர்களின் வாதங்களும் தொடங்கின.

குமாருக்கு எந்த வீட்டு வேலைக்கும் ரேணுக்குஉதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதை அவள் எதிர்பார்ப்பதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ரேணு சில முறை சாடையாக அவனுடைய உடுப்புகளுகளை அயர்ன் பண்ணச் சொல்லிச் சொன்னாள். அவன் சிரித்துக் கொண்டே “அம்மாதான் எனக்காக அந்த வேலை செய்வாள்” என்றான்.

“நான் உங்க அம்மா இல்ல. உங்கள மாதிரி நான் முழு நேர வேலை செய்கிறேன். நாங்கள் இருவரும் எங்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன’ என்றாள்.

அவர்களின் வாக்குவாதம் குமாரின் சேர்ட்டை அயர்ன் பண்ணுவதிலிருந்து, அதன்பின் வீட்டுத் தோட்டத்தில் புல்வெளி வெட்டுதல் மற்றும் பிற விஷயங்களுக்கு நகர்ந்தது.

‘நாம் ஒரு தோட்டக்காரரை வேலைக்கு அழைத்து வர வேண்டும்’ என்று அவன் வாதிட்டான். ‘தோட்டத்தில் சில நேரம் செலவழிப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது’ என்று ரேணு சொன்னதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தோட்டக்காரனை அமர்த்தினான்.

வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், மற்றும் ரோபோ ஹூவர் ஆகியவை அவர்களின் வீட்டில் தங்கள் பங்கைச் செய்தன. சாப்பாடுகள் பல நேரங்களில் வெளியிலிருந்து எடுக்கப் பட்டன.

அயர்ன் பண்ணுவது பற்றிய வாதங்கள் அவர்களுக்குள் பெரும் போரை தொடர்ந்து ஏற்படுத்தின.

“நமக்கு குழந்தைகள் இருந்தால் என்ன ஆகும்? நான் ஒரு பகுதி நேர வேலையைச் செய்து கொண்டு மிகுதி நேரத்தில் வீட்டில் சமைத்து குழந்தையைக் கவனித்து அத்தோட துணிகளை அயர்ன் பண்ண வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று ரேணு கேட்டாள்.

குமார் அவளை எரிச்சலுடன் பார்த்தான். அவனுக்கு இருபத்தி ஏழு வயதாகப் போகிறது. இதுவரை அவன் சாப்பிட்ட தட்டத்தைக் கூடக் கழுவியது கிடையாது. தனக்குத் தெரியாத விடயங்களுக்குள் ரேணு தன்னை இழுப்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.

“நான் உங்க அம்மா இல்ல. நான் உங்க மனைவி. எனக்கு ஹெல்ப் வேணும். அதை நீங்க எப்பவும் புரிந்து கொள்ளப் போவதில்லை என்று தெரிகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் உடுப்புககை அயர்ன் பண்ணவது பற்றி போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் எந்த கேள்வியும் இல்லாமல் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். திருமணம் என்பது ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு வாழ்வது, வீட்டு வேலைகளைச் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகத்தான் எனது வீட்டில் பார்த்து வளர்ந்தேன்”. ரேணு அவனை நோக்கி கத்தினாள்.

“ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான கடமை இருக்கிறது அல்லவா?” என்ற வாதத்தில் ஜெயிக்க வேண்டும் என்று குமார் உறுதியாக இருந்தான். அவன் ஒரு நியுறோலயிஸ்ட் ஆகமேற்படிப்பைத் தொடங்கவிருக்கிறான்.

அவள் அவனை உற்றுப் பார்த்தாள். குடும்ப உறவும் கடமைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்குமென்று காலம் காலமாக நடைமுறைபடுத்தப் பட்ட பழைய கலாச்சாரத்துடன் தொடர்வதை குமார் போன்றவர்களால் மாற்றியமைக்க முடியாது என்று அவளுக்குப் புரிந்தது.

இருவரும் ஒரே மருத்துவக்கல்லூரியிற்தான் படித்தார்கள். மனித மூளை எப்படி வேலை செய்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். தங்கள் குடும்ப வேலையைப் பகிர்ந்து கொள்வது பற்றி அவனுக்குத் அவர்கள்; படித்தததைத் திருப்பிச் சொல்ல வேண்டும்போல் இருக்கிறது.

கிட்டத்தட்ட எண்பத்தாறு பில்லியனனுக்கு மேலான மூளைக்கலங்கள் ஒவ்வொருத்தின் மூளையிலும் இருக்கின்றன.இவை மூளையின் பத்து விகிதத்திலுள்ளதுஓவ்வொரு கலமும்இன்னொரு ஆயிரம் கலங்களுடன் மிக மிகச் சிக்கலான முறையில் இணைக்கப் பட்டுச் செயற்படுகின்றன.மூளைச்செயற்பாட்டைப் பொறுத்தவரையில் ஒரு ஆண் ஏழு விடயங்கள் செய்பவர்களாக இருந்தால் பெண்கள் பத்து வேலைகள் செய்யும் பன்முகத்தன்மை படைத்தவர்கள்.ஆனால் இருவரின் அணுகுமுறையும் திறமையும் வேறானவை.

பாலினம் மூளையின் செயல்பாடுகளை கணிசமாக பாதிக்கிறதுஆண் மற்றும் பெண் மூளைகளுக்கு இடையிலான சில வேறுபாடுகள் பின்வருமாறு.:

ஆண்கள் ஒற்றை வேலைகளைச் செய்வதில் சிறந்தவர்கள்பெண்கள் மல்டி டாஸ்கிங்கில் சிறந்தவர்கள்.

பெண்கள் கவனம் சொல் நினைவகம் மற்றும் சமூக அறிவாற்றல் மற்றும் வாய்மொழி திறன்களில் சிறந்தவர்கள்.

ஆண்கள் இடஞ்சார்ந்த செயலாக்கம் மற்றும் சென்சார்மோட்டர் வேகத்தில் சிறந்தவர்கள்.

பெண்கள் நீண்டகால நினைவகத்திலிருந்து தகவல்களை மீட்டெடுப்பதில் சிறந்தவர்கள்.

ஆண் மூளை கிட்டத்தட்ட மடங்கு அதிக சாம்பல் நிறப் பொருளை செயல்பாட்டிற்குப் பயன்படுத்துகிறது அதே நேரத்தில் பெண் மூளை கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக வெள்ளை விஷயத்தைப் பயன்படுத்துகிறது.

ஆண் மற்றும் பெண் மூளைகள் ஒரே நரம்பியல் இரசாயனங்களை செயலாக்குகின்றன. ஆனால் வெவ்வேறு அளவுகள் மற்றும் பாலின-குறிப்பிட்ட உடல்-மூளை இணைப்புகள் மூலம்.’ என்ற மருத்துவ உண்மைகள் அவனுக்கும் தெரியும்தானே?.

அவளின் வீட்டில் அவளது தந்தையார் ஆண்கள்வேலை பெண்கள் வேலை என்று பிரித்துப் பார்ப்பதில்லை. அம்மா சில வேளைகளைச் செய்யமாட்டாள். அதாவது>தனது காரில் ஏதும் பிழை என்றால் அம்மாவுக்கு அப்பாவின் உதவி தேவை. ஆனால் அதே நேரம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாதபோது அப்பா குழந்தைகளக்கு ஏதோ சமைத்துக் கொடுப்பார். ரேணுவின் சகோதரர்கள்; அவர்களின் அப்பா மாதிரியே வாழப் பழகியிருக்கிறார்கள்.

வாஷிங் மெஷனில் துணிபோடுவது. அவை மெஷினில் துவைத்து முடிந்ததும் அவற்றை எடுத்து மடித்து வைப்பது அல்லது தங்களுடைய உடுப்புக்களை அயர்ன் பண்ணுவது. அவர்களின் அறையைத் துப்பரவாக வைத்திருப்பது சாப்பிட்ட சமைத்த பாத்திரங்களை மெஷினில் அடுக்குவது, அவை கழுவப்பட்டதும் எடுத்து அடுக்கி வைப்பதெல்லாம் மூன்று குழந்தைகளும் செய்வார்கள். அம்மாதான் வீட்டு வேலை எல்லாம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அங்கு கிடையாது. பல தேவைகளைச் செய்ய வேண்டிய எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களைத் தயார் படுத்தும் ஒரு செயலகம் மாதிரி அவர்கள் தங்கள் வீட்டில் பன்னிரண்டு வயதிலிருந்து தாங்களாக வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்யத் தொடங்கி விட்டார்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் தாயின் உதவியுடன் வாழ்ந்த தனது இருபத்தி ஏழு வயதுக் கணவனுக்கு, ‘இணைந்த’ வாழ்க்கையின் சில கடமைகளை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? ரேணு யோசித்தாள்.

“வாக்குவாதங்களைத் தடுக்கவும் ஆரோக்கியமான உறவைப் பெறவும் முயற்சிப்பதில் நான் இவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் எங்கள் திருமணவாழ்க்கையில் என்னுடைய கடின உழைப்பில் பொறுப்பற்ற ஒரு ஒட்டுண்ணி போல இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நாங்கள் திருமணம் மற்றும் உறவு பற்றிய புரிதலில் ஒரே மாதிரியான வழிகளில் இல்லை எனவே நான் இந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறேன். மூளை அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற உங்கள் லட்சியத்துடன் நீங்கள் சிறப்பாக இருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைச் செய்வதற்கு முன் எங்கள் இருவரினதும் மூளை வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். குடும்பத்தில் உறவு சார்ந்த நெருக்கத்துடன் இணைவதற்குக் கொஞ்சம் இரக்க உணர்வும் அத்துடன் இணைந்த மனநிலையும் உங்கள் மனைவியிடம் இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்கள்’’ அவள் அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாள்.

குமார் மவுனமாகத் திகைத்து நின்றான். ‘தேவை என்றால் ஒரு உதவியாளரை அவ்வப்போது அழைத்து வேலை செய்யச் செய்யலாம்தானே?’ அவன் வியப்புடன் கேட்டான்.

‘’எங்களுக்குப் பல குழந்தைகள் இப்போது இல்லை. எங்களை பராமரிப்பில் யாரும் வயது போன எங்கள் பெற்றோர் இலலை. எங்களுக்கு ஏதும் அங்கவீனம் கிடையாது. நாங்கள் இருவரும் மிகவும் சுகாதராமான வாழ்க்கை வாழுகிறோம். இருவருடைய வாழ்க்கையையும் இனிய பயணமாக நினைக்க முடியாத தன்மையுடன் நீங்கள் வாழ்கிறீர்கள். நான் உங்களிடம் தோசையும் இட்டலியும் செய்து தரச் சொல்லவில்லை. சாதாரணமாக மற்ற வீடுகளில் ஆண்கள் செய்யும் வேலையை நீங்கள் செய்ய வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறேன்’’ அவள் சொன்னதும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது.

“ஏன் சின்ன விடயங்களுக்கு இவ்வளவு பெரிய பிரசங்கம் என்று எனக்குப் புரியவில்லை’’ அவன் முணுமுணுத்தான்.

‘’நீங்கள் என்னைக் காதலிப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் அதைத் தொடர்ந்த எங்கள் உறவில் உங்கள் படிப்பையும் எதிர்காலத்தில் என்னவாக வரவிரும்புகிறீர்கள் என்பதைத்தான் அடிக்கடி சொன்னீர்கள். நான் பக்டிரீயா வைரஸ்கள் பற்றிய ஆய்வில் மேலாராய்ச்சிகள் செய்ய வேண்டுமென்பதை மறந்து விட்டு நீங்கள் மட்டும் மேற்படிப்பு படித்து ‘ப்ரயின் சேர்ஜனாக’ வரவேண்டுமென்று துடிக்கிறீர்கள். ஏன் உங்கள் மூளை மற்றவர்கள் பற்றி-முக்கியமாக உங்கள் மனைவி பற்றி சமத்துவமாகச் சிந்திக்க மறுக்கிறது?’’அவள் கண்ணீருடன் கேட்டாள்.

ரேணுவின் காலடிகள் குமாரின் காதுகளிலிருந்து மறைந்து கொண்டிருந்தன. அவள் அவனின் வீட்டிலிருந்து வெளியேறுகிறாள்..பல வருட உறவு. இருமாதத் திருமண இணைவு அத்தனையும் ’அயர்ன்’ பண்ணாத போராட்டத்தில் பிரிந்து விட்டது.

(யாவும் கற்பனையே)

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *