ஆண் துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 8,644 
 

தெருவெல்லாம் ஒரே புகை. வழக்கம்போல் குப்பை கூளத்தை வீட்டு வாசலில் எரிந்ததால் அல்ல. சுவாசிக்கும்போது மூக்கிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்திய பட்டாசுப் புகை தீபாவளி நெருங்கி விட்டதை நினைவுபடுத்தியது.

நாசித் துவாரத்தினருகே ஒரு கையால் விசிறியபடி நடந்தான் சாமிநாதன். ஒருவழியாக வீட்டை அடைந்தபோது, உள்ளே கேட்ட ஆண்குரல் அவனைக் குழப்பியது.

யாராக இருக்கும்?

தங்கைகளில் யாராவது வந்துவிட்டார்களா, குடும்பத்துடன்? அவர்களைத் தவிர எவரும் அவ்வீட்டுக்குள் நுழைந்ததில்லை. எல்லாம், தலைவன் இல்லாத குடும்பம்தானே என்ற அலட்சியம்!

`நம்பளையெல்லாம் விட்டுட்டு எங்கேயோ போயிட்டாருடா அந்த மனுசன்!’ துக்கத்தில் ஸ்ருதி மேலே போக, அம்மா தெரிவித்தபோது அவன் நான்காவது படிவம் படித்துக் கொண்டிருந்தான். பதினாறு வயதுக்கு இன்னும் இரண்டு மாதங்களிருந்தன.

முதல் நாள், வழக்கத்துக்கு மாறாக, அப்பாவுடன் அம்மா சண்டை பிடித்துக்கொண்டிருந்தது நினைவில் எழ, அலுப்பாக இருந்தது. தெரிந்த சமாசாரம்தான். மனைவியும், பிள்ளைகளும் இருக்கிறபோது, ஒரு மனிதனுக்கு இன்னொரு பெண்ணுடன் என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது!

தலைச்சன் பிள்ளையாகப் பிறந்துவிட்ட பாவம், படிக்கும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குடும்பச் சுமையை ஏற்க வேண்டியிருந்தது.

அவர் தங்கள் குடும்பத்துக்கு இழைத்த துரோகத்திற்குப் பரிகாரமாக, தனக்குப் பெண்வாடையே கூடாது என்று முடிவு செய்தான்.

`அந்த மனிதர்’ ஒரு வழியாக செத்துத் தொலைந்திருந்தால், நிம்மதியாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வான். இந்த இருபது வருடங்களாக, அவன் எவ்வளவோ முயன்றும் அம்மாவின் முகத்தில் சிரிப்பை மட்டும் வரவழைக்க முடியவில்லை.

நாள் தவறாது, தாலிக்கயிற்றில் மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்பவளிடம் எரிச்சல்தான் மூளும் சாமிநாதனுக்கு. அத்தாலியைக் கட்டியவனே இல்லையென்று ஆகிவிட்டது. இன்னும் என்ன பதிபக்தி வேண்டியிருக்கிறதாம்!

ஆனால், வாய்திறந்து அவன் எதுவும் சொன்னதில்லை. பாவம், ஏற்கெனவே நொந்து போயிருக்கிறாள்! தான்வேறு அவள் மனத்தை மேலும் ரணமாக்க வேண்டுமா?

திறந்திருந்த கதவின்வழி உள்ளே நுழைந்தவனுடைய கால்கள் பூமியிலேயே புதைந்து போயின.

“யாரு வந்திருக்காங்க, பாத்தியா சாமிநாதா?” அம்மாவின் புலம்பல்களையே கேட்டு வளர்ந்திருந்தவனுக்கு, அன்று அக்குரலில் தொனித்த பெருமையும், பூரிப்பும் வித்தியாசமாகக் கேட்டன.

“நம்ப சாமிநாதனா! என்னைவிட அதிகமா தலையெல்லாம் நரைச்சுப் போயிருக்கே!” என்று அட்டகாசமாகச் சிரித்தவரைக் குரோதமாகப் பார்த்தான்.

`ஒங்க பொறுப்பையெல்லாம் என் தலையில கட்டிட்டுப் போயிட்டு, கேக்க மாட்டீங்க?’ என்று சுடச்சுட கேட்க நா துடித்தது.

இவ்வளவு காலமாகப் பேசுவதையே மறந்தவனாக, கடமையிலேயே கடவுளைக் கண்டவன்போல் வாழ்ந்தாகிவிட்டது. இந்த உபயோகமற்ற மனிதருக்காக அந்தத் தவத்திலிருந்து பிறழுவானேன்! தொலைந்து போகிறார்!

அவர்களிருவரையும் பார்க்கவும் விரும்பாதவனாக, உள்ளே நடந்தான் விறுவிறுவென்று.

குளியலறைக்குள் நுழைந்தபின் தோன்றிற்று, அப்படியே வெளியே நடந்திருக்க வேண்டுமென்று.

தனக்கு நினைவு தெரிந்த நாளாய், கஷ்டத்தைத் தவிர வேறு எதுவும் அனுபவித்து அறியாத அம்மா மேலும் நோகக்கூடாது என்று தான் சின்ன வயதிலேயே வேலைக்குப் போனதென்ன, பொறுப்பாகத் தம்பி தங்கைகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டு, அம்மாவுக்குக் காவல் நாயாய் தன்னை மாற்றிக்கொண்டு, அதற்காகவே பிறவி எடுத்ததுபோல் வாழ்ந்து வந்ததென்ன! எல்லாவற்றுக்கும் அர்த்தமே இல்லாது போய்விட்டதே!

இனி தான் எதற்கு? அதுதான் வேறொரு ஆண்துணை கிடைத்துவிட்டதே! இப்படி ஒரு சமயத்திற்காகத்தான் அம்மா காத்திருந்தாளோ?

தலையை அளவுக்கு மீறி குனிந்துகொண்டு வெளியே வந்து, வாயிலை நோக்கி நடந்தான் சாமிநாதன்.

அம்மா எழுந்து ஓடி வந்தாள். “திரும்ப எங்கேப்பா போறே? அப்பா ஒனக்காக சாப்பிடாம காத்துக்கிட்டு இருக்காரு, பாரு!”

அம்மாவின் பரிதவிப்பான முகத்தால் சற்றே இளகிய மனத்தை இரும்பாக்கிக்கொண்டு, ஒரு தீர்மானத்துடன் வெளியே போனான்.

எல்லாரும் தூங்கியிருப்பார்கள் என்று உறுதியானதும், மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தான்.

கதவு திறக்கும் சப்தத்திற்காகவே காத்திருந்ததுபோல் அம்மா ஓடி வந்தாள். “சாமிநாதா..!” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.

அவளைப் பார்க்கவும் மனம் இடங்கொடுக்காது, “தூக்கம் வருது!” என்று முணுமுணுத்தபடி, தன் அறைக்கு ஓடாதகுறையாகப் போய், கதவைத் தாளிட்டுக்கொண்டான் சாமிநாதன்.

சட்டையைக் கழற்றும்போது யோசனை வந்தது. அழையா விருந்தாளியாக வந்தவர் போய்விட்டாரா, இல்லை, அம்மாவின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டாரா?

அப்படியென்றால்.., இப்போது எங்கே படுத்திருப்பார்?

அந்த எண்ணம் எழுகையிலேயே உடலெல்லாம் எரிந்தது.

வெட்கம் கெட்டவர்கள்!

இந்த அம்மாதான், `இத்தனை வருஷங்களாக எங்கே, எவளுடன் இருந்தீர்களோ, அங்கேயே போய்த் தொலையுங்கள்!’ என்று முகத்தில் அடித்தமாதிரி சொல்லிவிட்டு, அப்படியே கதவை அவர் முகத்தில் அறைந்து சாத்தியிருக்க வேண்டாம்?

`எனக்கு நீங்கள் யாரும் தேவையில்லை!’ என்பதுபோல், சுயநலமே பெரிதென ஓடிப்போனவரை வரவேற்று, நடுக்கூடத்தில் உட்காரவைத்து உபசாரம் என்ன வேண்டியிருக்கிறது!

ஐம்பது வயதுக்கு மேலும் இந்தக் கிழவிக்குப் புருஷ சுகம் கேட்கிறதோ?

சே! தனக்கு எப்படி இவ்வளவு கேவலமான அம்மாவும், அப்பாவும் வாய்த்தார்கள்!

கஷ்டப்பட்டபோது எல்லாம் ஏதோ வைராக்கியத்துடன் இருந்து விட்டவனுக்கு அன்று முதன்முறையாகத் தன்மீதே கழிவிரக்கம் பிறந்து, அது கண்ணீராகக் கொட்டியது.

சுமார் பத்து வருஷங்களுக்குமுன் ஒரு கோடீஸ்வரர், `உங்களைமாதிரி பொறுப்பான மாப்பிள்ளையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,’ என்று, அவர் மகளை ஏற்று, வீட்டோடு தங்கும்படி காலில் விழாத குறையாகக் கெஞ்சியபோது, அவர் பின்னாலேயே போயிருக்க வேண்டும், `விட்டது சனி’ என்று. அவர் சொன்னபடி கேட்டு நடப்பது `துரோகம்’ என்று அப்போது நினைத்தது மடத்தனம். அது என்னவோ, இந்த உலகில் சுயநலம் உள்ளவர்கள்தாம் பிழைக்கிறார்கள்.

முடிவற்ற யோசனையில், எப்போது கண்ணயர்ந்தோம், எப்போது விழித்தோம் என்று ஒன்றும் புரியவில்லை சாமிநாதனுக்கு.

மறுநாள் காலையில், அறைக்கு வெளியே வருவதற்குக்கூடத் தயக்கமாக இருந்தது. விடிந்ததும் விடியாததுமாக, அந்தப் பாவி மனிதரின் முகத்தில் விழிக்க வேண்டுமா?

அயோக்கியத்தனம்!

இளமை இருந்த நாளெல்லாம் பொறுப்புக்குப் பயந்தோடி, இப்போது முடியாத காலத்தில் ஆதரவு நாடி, சம்பாதிக்கும் மகனிடம் வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கிறார்!

என் ரத்தம்தானே, என்னைப்போலவே ரோஷம் கெட்டவனாகத்தான் இருப்பான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது!

நான் யாரென்று இவர்களுக்கெல்லாம் காட்டுகிறேன்!

வழக்கத்துக்கு மாறாக, நீர்யானை உள்ளே புகுந்ததுபோல் மிகுதியாகச் சத்தப்படுத்தினான் குளிக்கும்போது. வேண்டுமென்றே தண்ணீர் மொள்ளும் சொம்பை இரண்டு முறை கீழே தவறவிட்டான்.

துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம்போல் சமையலறைக்குப் போய், பசியாற உட்காருவதா, வேண்டாமா என்று யோசித்தபடி நின்றபோது, அம்மா வெளிப்பட்டாள்.

“நீ பயப்படாம சாப்பிடு, வா. அவர் இல்ல. போயிட்டாரு!”

அக்குரலில் சிறிதும் கோபமிருக்கவில்லை. ஆனால், அவன் இதுவரை என்றுமே கேட்டிராத சோகம் — நிராசை — சாமிநாதனை என்னவோ செய்தது. பரிதாபகரமாய் நின்றவளைத் தான் ஏதேதோ அசிங்கமாக நினைத்ததை எண்ணி அவமானம் ஏற்பட்டது.

நேற்று என்றுமில்லாத கலகலப்புடன் பேசிய தாய் ஒரே இரவில் இவ்வளவு மூப்படைந்து போனது எதனால்? யாரால்?

“இத்தனை காலமா நீ போட்ட உப்பைத் தின்னுட்டு, ஒன் மனசுக்குப் பிடிக்காத காரியத்தை எதுக்குச் செய்யறது? அதான்..!” எதுவுமே நடக்காததுமாதிரி, ஒப்பிப்பதுபோல் பேசினாள் அம்மா.

அவனை அறைந்திருந்தால்கூட அவ்வளவு வேதனையாக இருந்திருக்காது என்று தோன்றியது.

அம்மாவின் முகத்தில் எப்படியாவது சிரிப்பைப் பார்த்துவிட வேண்டும் என்று முன்பு எப்போதோ தைப்பூசத்தின்போது பத்து மலையில் ராட்டினத்தில் உட்காரும்படி வற்புறுத்தியதும், இன்னொரு முறை தன் சக்திக்கு மீறி, விலையுயர்ந்த புடவை ஒன்றை வாங்கி வந்ததும் ஞாபகம் வந்தது.

எதுவுமே பலனளிக்காது போனபின், அம்மாவைப் போலவே தானும் சிரிப்பை மறந்து வாழக் கற்றுக்கொண்டதை நினைத்துக்கொண்டான்.

அம்மாவின் முகத்தில் இனியும் மலர்ச்சியை வரவழைக்க முடியுமென்றால், அது ஒருவரால்தான் முடியும். அவர் போக்கியதை அவரேதான் மீட்டுத் தர முடியும். இது புரிந்தோ, புரியாமலோ, அவர் கட்டிய தாலியை அவராகவே பாவித்து, அவ்வளவு அக்கறையாகப் பாதுகாத்து வந்திருக்கிறாள்!

கணவனால்தான் ஒரு பெண்ணின் அந்தஸ்து சமூகத்தில் நிர்ணயிக்கப்படுகிறது என்று நம் பெண்களுக்கு யார் விதித்தார்கள்! கோபம் எழுந்தது சாமிநாதனுக்கு.

அதை மீறி மேலெழுந்தது, அம்மாவின் நலத்தையே நாடிய கடமை உணர்வு.

“அப்பா எங்கே தங்கி இருக்காராம்? போய் கூட்டிட்டு வரேன்!” என்றபடி புறப்பட ஆயத்தமானான்.

`வெடி’ என்று பயந்திருந்தது புஸ்வாணமாகப் போன நிம்மதி அம்மாவின் முகமெல்லாம் பரவியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *