ஆண்மேகம் பெண்மேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 6,793 
 
 

இந்த உலகம் இத்தனை சந்தோஷமானதா என அவளுக்கு ஆச்சரியமாய், திகைப்பாய் இருந்தது. உஷாவின் மறுபெயர் நெருப்பு அல்லவா… சற்று தள்ளி ஆண்களை நிறுத்தி, நிறுத்தி அவள் பேசுவதான உணர்வலைகளால் ஆண்கள் அவள் அருகில் தாக்கப்பட்டார்கள். அதனால் அவளைவிட- அவர்கள் அவளிடம் சிறு எச்சரிக்கையுணர்வுடன் பேசத் தலைப்பட்டார்கள்.

அலுவலகம் கலகலவென்று இல்லை. வெலவெலத்துக் கிடந்தது. சிரிக்கவே அங்கே முடியாதிருந்தது. எனினும் மெளனமும் பழகப் பழக அழகுதான். அநாவசியப் பேச்சு இல்லை. வம்பு இல்லை. அவரவர் வேலைகள் ஒழுங்காக விரைவில் நிறைவேற்றப்பட்டன. கெட்டிக்கார முதலாளி. அவருக்கு அது தெரிந்தது. ஆகவே அவள்-மேஜையிலேயே அலுவலகத் தொலைபேசியை வைத்தார் அவர்.

எப்படி உஷாவிடம் இந்த நெகிழ்ச்சி வந்தது என்பது அவளுக்கே ஆச்சரியம். சத்யா அவளைப் பெண் பார்க்க வந்திருந்தான். முதலில் புகைப்படம் அனுப்பச் சொல்லிக் கேட்டு வாங்கி வைத்திருந்தார் அப்பா. வாங்கிப் பார்த்தாள் அவள்.

‘என்னம்மா?’

‘ம்…’

‘பையன் எப்படி?’

‘ம்’ என்றாள் திரும்பவும். அவருக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்று விளங்கவில்லை. இறுக்கமான, எதையும் வெளிப்படுத்தாத முகம்.

‘உங்களுக்குப் பையனைப் பிடிச்சிருக்காப்பா?’

‘நல்வ படிப்பு. நல்ல சம்பளத்தில் நல்ல கம்பெனியில் வேலை. நல்ல குடும்பமாட்டம் தெரியுது… அண்ணா போய் விசாரிச்சிட்டான்… வேறென்னம்மா வேணும் நமக்கு…’

‘ம்’ என்றாள் திரும்பவும்.

‘பொண்ணு பாக்க வரச் சொல்லலாமா?’

‘சரிப்பா…’ என்று முகம் கழுவிக் கொண்டாள். அலுவலகத்தின் வேலையசதிக்கு அந்தக் குளிர்ச்சி சுகமாய் இருந்தது.

உள்ளூர்தான் மாப்பிள்ளை என்று முதல் நினைப்பு. உறையை நீட்டியதும் ஏதோ கடிதம் என்றுதான் வாங்கிப் பார்த்தாள் சிறு அலட்சியத்துடன். இன்னும் சற்று கவனமாய்ப் பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது. திரும்ப உறையை எடுத்துப் பார்க்க யோசனையாய், வெட்கமாய் இருந்தது. என்னவோ ஒரு கூச்சம். கண்ணாடிக்குப் போனாள். குனிந்து தன் முகத்தைப் பார்த்துக் கொண்டபடி சரியான அளவில் நேர்த்தியாய்ப் பொட்டு வைத்துக் கொண்டபோது மேஜைமேல் அந்த உறை படபடத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவள் மனசிலும் அந்தப் படபடப்பு தொற்றிக் கொண்டாற் போல சிறு அலைத்தாலாட்டு.
இது நானேதானா?… என முதல் திகைப்பு. எனக்கு ஏதோ ஆகிறது. சற்று வேடிக்கையான விநோதமான உணர்வுகள். கண்ணாடியிலிருந்த அவள் முகம் அவளைப் பார்த்து… ஆமாம், திடீரென்று சிரித்தது. கேலி பேசியது- ‘என்னாச்சிடி உனக்கு?’… எனக்குத் தெரியவில்லை. நீயே சொல்லேன், என முணுமுணுத்தாள். சட்டென்று ஒரு பயக்கவ்வல் உடனே. யாரும் கேட்டிருப்பார்களோ? என்னைப் பார்த்திருப்பார்களோ?

சத்யா. உஷா-சத்யாவா நான்?… சிரிப்பு வந்தது. பெயரின்கூட என்ன இது வால்போல? யார் செய்த ஏற்பாடு இது? அடடா மேஜைமேல் அந்த உறை இருந்துகொண்டு என்னமாய் இம்சைப்படுத்துகிறது. நிதானப்படுத்திக் கொண்டாள். போய் அந்த உறையை எடுத்துக் கொண்டபின், சட்டென்று என்ன தோணியதோ தன்னறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். உறையைப் பிரித்தாள். இப்போது நிதானமாய் அவனைப் பார்த்தாள். சற்றே சிரித்த நம்பிக்கையான முகம். அளவெடுத்துக் கத்தரித்த மீசை. ‘ஹல்லோ?’ என்றான் சத்யா. சட்டென்று உறைக்குள் போட்டாள் படத்தை. மீண்டும் அந்த உணர்வுமுயல் உள்ளே குதிக்கிறது. உறைக்குள்ளே யிருந்து!

அலாவுதீனும் அற்புத விளக்கும் என்கிறாப்போல… உஷாவும் அந்த உறையும்!

அலுவலகத்தில் பொது இடங்களில் எத்தனையோ ஆண்களைச் சந்திக்கிறாள். நேருக்கு நேர்ப்பார்வை பார்த்துப் பேசுகிறாள். ஆணித்தரமாய் வாதிடுகிறாள். இவனது ஒரு -ஹல்லோவைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

கதவு தட்டப்பட்டது. அடடா உடனே அவள் திறந்திருக்க வேண்டும். ஒரு ‘மாட்டிக்கொண்ட’ உணர்வு வெட்கம் அவளைப் பூசியது. அண்ணா. ‘என்னாச்சி உஷா? உடம்பு சரியில்லையா? படுத்திருக்கியா? ஏன் கதவைச் சாத்திக்கிட்டிருக்கே? உள்ள •பேன் கூடப் போட்டுக்கல… முகம் வியர்த்துக் கிடக்கு?’

எந்தக் கேள்விக்கு முதல் பதில் சொல்ல தெரியவில்லை. அவள் தனிமையை விரும்பினாள். ஓய்வெடுக்க விரும்பினாள்.

உலகம் அத்தனை ருசிகரமாய் இல்லாமல் இருந்தது இதுவரை. நியதிகளால் சங்கிலிநாய் போல அது கட்டமைக்கப் பட்டது. கட்டப் பட்டிருந்தது. நாய் எப்போது சங்கிலியை அவிழ்த்துக் கொண்டது? எப்படி? பேச்சொலிகள் அடங்கி மாலைப் பொழுது கண்டாப் போல ஒரு மெளனமும் இதமும். மொட்டைமாடியில் சிறிது உலாவலாமா காலாற? இதுவரை. நேற்றுவரை இந்த அண்ணா அவளிடம் காட்டிய சமிக்ஞைகளை அவள் சரியாய்ப் புரிந்து கொள்ளவில்லையோ என்றிருந்தது. இளையவளே எனினும் வீட்டில் எல்லாரும் அவளுடைய உத்தரவுக்குக் காத்திருக்கிற மாதிரியே வீட்டின் அமைப்பு இருந்தது. ஏன்? இந்த அப்பாகூட… அதுவும் அவளிடம் சற்றே யோசித்தாற் போலத்தானே பேசினார்? அளந்து பேசினார்? அண்ணாவின் இத்தனை கேள்விகள்… அதன் கரிசனம் முதல்முதலாக நெஞ்சைத் தொட்டது.

இரவு. தன்னறை. வழக்கமான தனிப்படுக்கை. என்றாலும் அதில் ஏதோ விநோத அம்சம்… வித்தியாசம் இருந்தாற் போலிருக்கிறது. சிறிது படுத்துக் கொள்ளலாம் என்று படுத்தால் தூக்கம் வரவில்லை. அண்ணி அப்போதுதான் அலுவலகம் விட்டுத் திரும்பியிருந்தாள். அவள் வீடுவர அநேகமாக ஏழரை முதல் எட்டு ஆகி விடுகிறது. அலுத்துக் களைத்தே வருவாள். வந்து காலை சமைத்த உணவுகளைச் சூடாக்கி எல்லாரையும் சாப்பிட அழைப்பாள். சரி, அண்ணிக்கு ஒத்தாசையாய் இருக்கும் என்று எல்லாவற்றையும் அவளே சூடாக்கி வைத்தாள். இந்த உதவியை முன்பிருந்தே அவள் செய்து அண்ணியை சந்தோஷப்படுத்தியிருக்கலாம். அண்ணியின் முகத்தில் சிரிப்பை வரவழைத்திருக்கலாம்.

அண்ணாவை அவளுக்குப் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் அப்பாவிடமானாலும் சரி, உஷாவிடமானாலும் சரி, வீட்டின் பிரச்னை பற்றிய பேச்சு வந்தால் அவன் அண்ணி முகத்தை ஒரு பார்வை பார்த்துக் கொள்வான். அது அவளுக்குப் பிடிக்காது. சுயமாய் முடிவெடுக்கத் தெரியாத மனிதன், என அவளுக்கு. எரிச்சலாய் இருந்தது.

அண்ணா அலுவலகம் கிட்டத்தில். வேலை முடிந்து சீக்கிரமே வந்து விடுவான் அவன். எத்தனை நேரம் இருந்தாலும் ஸ்கூட்டரைத் துடைத்து சுத்தமாய் வைத்துக் கொள்வதேயில்லை. கொஞ்சம் புத்தகப் பிரியன். வாசித்தபின் ஒழுங்கமைப்புடன் அவற்றை அடுக்கி வைத்தோ வேண்டாதவற்றை அப்புறப்படுத்தியோ, போய் அண்ணியை அவன் அவளது அலுவலகம் போய்க் கூட்டி வந்தோ பார்த்ததேயில்லை….

உஷா அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தாள். அண்ணாவின் அறையில் இருந்து புத்தகம் எதுவும் எடுத்து வரலாமாய் ஓர் எண்ணம். உள்ளே நுழையப் போனவள் சட்டென்று காலை இழுத்துக் கொண்டாள். அண்ணி வீடு திரும்பியிருந்தாள். உடை மாற்றிக் கொண்டிருந்தாள். அருகே அண்ணா. ஒரு கலவைச் சிரிப்பொலி.படபடப்புடன் தன்னறைக்குத் திரும்பி விட்டாள்.

அண்ணா கதவைச் சாத்திக் கொண்டிருக்கலாம். சத்யாவின் படத்தைப் பார்க்க தான் கதவைச் சாத்திக் கொண்டது ஞாபகம் வந்தது ஏனோ? மேஜைமேல் இன்னும் கிடந்தது அந்த உறை. எடுத்துப் பார்ப்போமா என நினைத்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அண்ணி வந்து அவளைச் சாப்பிடக் கூப்பிட்டாள்.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. தொலைபேசி ஒலிக்குந்தோறும் துணுக்கென்றது. அலுவலகத்தில் வேலை நிமித்தம் வரும் தொலைபேசிகள் தவிர மற்ற விஷயங்களையிட்டு எல்லாருக்கும் அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் தன்மை பொறுத்து எல்லார் முகபாவங்களும் பேசும்போது மாறியதை அவள் கவனித்திருக்கிறாள். அவளுக்கும் நட்புரீதியான அழைப்புகள் இல்லை. அவளும் யாரிடமும் பேசியதில்லை என்று திடீரென்று தோணியது.

‘ஹல்லோ’ என்கிறான் சத்யா உறைக்குள்ளிருந்து. அலாவுதீனின் பூதம். அவளுக்கு என்ன வேணாலும் செய்து தரும் பூதம்… ஆனால் அவளது சீசாவுக்குள் என்கிறது வேடிக்கைதான். வேலையே ஓடவில்லை. யோசிக்க என்னமோ நிறைய இருந்தாப்போல ஒரு மூச்சுத் திணறல். என்ன இது? வேலை செய்ய சரி, இப்படி யோசிக்க மூச்சுத் திணறுமா என்ன? சாயந்தரமாய்ப் பெண் பார்க்க வருகிறார்கள். அதை அவளிடம் சொல்லவே அண்ணாவுக்கு எத்தனை உற்சாகமாய் இருந்தது.

அண்ணாவின் சிரிப்பு அவளுக்குப் புதுசாய் இருந்தது. அதிகம் பேசாத உஷா. என்ன தோணியதோ சட்டென்று ‘என்ன அண்ணா, என்னை வீட்டை விட்டனுப்ப இத்தனை உற்சாகமா?’ என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். அடடா, எனக்கு நகைக்சுவை வராது. நான் அதுமாதிரியான சந்தர்ப்பங்களுக்கு லாயக்கில்லை.

‘ஏம்மா,’ என்றான் கவலையாய். அழுதுவிடுவான் போலிருந்தது. ‘இந்த இடம் பிடிக்கலியா?’ என்றான்.

‘அப்டில்லாம் எதுவும் இல்லை அண்ணா… ஜஸ்ட் டோன்ட் மைன்ட் இட்’ என்று புன்னகைத்தாள்.

உலகம் மாறியிருந்தது. வீட்டின் அடையாளங்கள் மாறியிருந்தன. அப்பாவின் வயதான தளர்ந்த முகம். அதன் புதிய மலர்ச்சி… ‘உனக்குக் கல்யாணம்னு ஆயிட்டா என் பொறுப்பு நிறைஞ்சா மாதிரிதானம்மா…’ என்று அவள் தலையைத் தடவித் தந்தார் அப்பா. அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. பேசாமல் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொள்கிறாள்.

‘என்ன விஷயம்? உடம்பு கிடம்பு சரியில்லையா?’ என்கிறார் முதலாளி. மெளனமாய்ச் சிரித்தாள். உடம்பெங்கும் ஒரு சாயப்பூச்சு குப்பென நிழல் பரத்தியது. ‘என்னைப் பெண்பார்க்க வருகிறார்கள்’ – என்று சொல்ல ஏன் இத்தனை தயக்கம் தெரியவில்லை. ஆனால் சில கணங்கள் சொல்லாமலே அர்த்தப்பட்டு விடுகின்றன.

‘அடேடே’ என்றார் அவர் யூகித்தாற் போல. ‘மாப்ளை உள்ளூர்தானா?’ என்கிறார். திகைத்துப் போயிற்று. ம், எனத் தலையாட்டினாள்.

‘அப்ப தொடர்ந்து வேலைக்கு வரலாமில்லே?’ என்கிறார்.

சிரித்தாள் அவள். ‘அதுக்குள்ள எங்கியோ போயிட்டீங்களே சார்… இன்னும் எத்தனை •பார்மாலிட்டிஸ் இருக்கு’ என்கிறாள். இத்தனை நீளமாய் நெகிழ்ச்சியாய் அவள் பேசியதேயில்லை. அவளுக்கே தன் சுய உற்சாகம் கலகலப்பு திக்குமுக்காட வைக்கிறது. வெயில் விலக ஆரம்பித்திருந்தது வெளியே. பஸ் நிலையத்தில் அவள் காத்திருந்தாள். வெளியொலிகள் இப்போது புதிதாய்க் கேட்க ஆரம்பித்திருந்தன. புதிதாய்ப் பறித்த அரும்புகளைத் தொடுத்தபடி பஸ்நிறுத்தத்தின் அருகே கடைபோட்டிருந்தாள் ஒருபெண்.

மடிக்குழந்தை அவளது புடவையை அசைத்தபடி உள்ளே குடைந்து கொண்டிருந்தது.

‘பூ வாங்கிட்டுப் போம்மா’ என்றாள் அந்தப் பெண். பஸ்ஸேறி வீடு வந்தபோது அண்ணி வந்திருந்தாள். வீடெங்கும் மணத்தது. எண்ணெய் காயும் மணம். மனம் டென்னிஸ் பந்தாய்த் துள்ளிக் கொண்டிருந்தது. வேலையில்லை என்றாலும் பரபரப்புக்குக் குறைவில்லை. கண் தன்னியல்பாய் கடிகாரத்தை, கடிகாரத்தைப் பார்த்தது. அண்ணா ஸ்கூட்டர் ஓசை கேட்டு வாசலுக்கு வந்தாள். ‘இந்தா’ என்று பெரிய பந்து பூவை அவளிடம் தந்தான் அண்ணா. ‘நானும் வாங்கிட்டு வந்தேன் அண்ணா’ என்றாள் உஷா.

‘பரவாயில்லை… வர்றவங்களுக்குத் தரலாமே’ என்று புன்னகைத்தான் அவளைப் பார்த்து. எவ்வளவு அழகாய்ப் புன்னகைக்கிறான்.

‘என்ன உஷா?’

‘ஒண்ணில்ல நீயும் இன்னிக்கு லீவா?’

‘பரவால்ல…’ என்கிறான்.

உடைகளைத் தேர்வு செய்ய, அலங்காரம் செய்துகொள்ள என்று பெண்கள் உள்ளே கலகலக்கிறார்கள். அண்ணா வாசலுக்கும் உள்ளேயுமாக அலைகிறான். அப்பா புதிய உடைகள் அணிந்து காத்திருக்கிறார். உள்ளே வீடே வெளிச்ச தேஜஸ் கொண்டிருக்கிறது. ஆறு மணிக்கு அவளைப் பெண்பார்க்க வந்தார்கள். முதலில் இறங்கியவள் கல்லூரி வயசு காயத்ரி. சத்யாவின் தங்கை அவளைப் பார்த்து கர்ச்சீ•ப் சுருட்டிய கையுடன் வாசலில் இருந்தே சிரித்துக் கையாட்டினாள் காயத்ரி. அந்த உற்சாகம் உஷாவுக்கும் தொற்றிக் கொண்டது.

சந்தன நிறச் சட்டையும் தூய வேட்டியுமாய் சத்யா. கைகூப்பி வணங்கியபடி உள்ளே வந்ததே அழகு. ப்ரிமியர் நம்பர் ஒன்- என்கிறாப்போல! வீடெங்கும் விரிக்கப்பட்ட மகிழ்ச்சிக் கம்பளத்தின் மீது சத்யா நடந்து வருகிறான். அவளது சீசாவுக்குள் அடைபடப்போகிற பூதம்- காற்றுக்கு மூங்கில்கள் தன்னைப்போல சங்கீதம் கண்டன.

பொழுதே பூச்சூடிக் கொண்டாற் போலிருந்தது.

ஆசைதீர ஒரு முழுப்பார்வை பார்த்து அவனை மனசெங்கும் நிரப்பிக் கொண்டாள். ஆண்கள் கலகலப்பாய்ப் பேசிக் கொள்ள, சத்யாவின் தாயாரும் அந்த காயத்ரியும் உள்ளறைக்கு வருகிறார்கள். அண்ணிதான் அவர்களை உள்ளே அழைத்தது. காயத்ரிக்கு அந்த ஜரிகையிட்ட சுரிதார் எத்தனை எடுப்பாய் இருந்தது. நெற்றியில் சிறு சந்தனம் பூசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் எல்லாரும். குடும்பப் பழக்கம் போலும்…

அந்த காயத்ரி தன்னை அண்ணி, என்று அழைத்தது இவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. ‘சத்யாவுக்கு என்ன சொக்குப்பொடி போட்டிங்க அண்ணி?’ என்றாள் காயத்ரி. ‘நேத்துவரை… என்னை எதுக்கெடுத்தாலும் திட்டிட்டே கத்திட்டே இருப்பான் எங்கண்ணா… சட்னு உங்க •போட்டோவைப் பார்த்ததும் பெட்டிப்பாம்பா மாறிட்டான்!’

பெட்டிப்பாம்பு இல்லடி… சீசாவுக்குள் பூதமான்னு சொல்லு… என்று சொல்ல நினைத்து, சொல்லாமல் உள்ளே ஆனந்த விக்கல். சிரிப்பை மறைப்பது எத்தனை கஷ்டம்! நிகழ்வுகள் அடிப்படையில் உள்ததும்பும் உணர்வுகள் மேகங்கள்போல… ஆணுக்கும் பெண்ணுக்கும் அவை பொதுவானவைதாம் போலும்… அவளுக்குச் சிரிப்பு வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *