ஆட்டோக்ராப் – 2

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 7,795 
 
 

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே அமெரிக்கா அமெரிக்கா என்னும் குபேரப்பட்டிணத்துலே தேச்சு தேச்சுன்னு ஒரு வாலிபப்பையன் இருந்தான்.

தேச்சுவோட பூர்வீகம் பூலோக வைகுண்டம் ..என்ன முழிக்கறேள்? இப்படிசொன்னா புரியாதா ?..தென்னீர் பொன்னி பாயும் ஊர்..இதுவும் புரியலயா? சரியாபோச்சு போங்கோ ?..உபந்நியாசம் பண்ணவந்த இடத்துல என்னை சினிமா பத்தில்லாம் பேச வைக்கப் பாக்றேள் போல்ருக்கு பரவால்லே, லோகம் மாறிண்டு தானே வர்து இப்போ? சரி இன்னொரு க்ளூதரேன் கண்டுபிடிக்கப் பாருங்கோ…இந்த ஊர் தலைப்பில் எழுத்தாளர் சுஜாதா தேவதைக்கதைகளை எழுதி இருக்கார். இன்னும் தெரில்லயா சரி கடேசியா இதக் கேளுங்கோ…

‘ரன்’படத்துல மாதவன் சென்னைக்கு வர்த்துக்கு முன்னாடி இருந்த ஊர். ஆங்…இப்போ கண்டுபிடிசிருப்பேளே மனசுல தேரடி வீதியில தேவதை வந்தா பாட்டு காட்சியா ஓடுமே? என்னவோ போங்கோ சினிமா பத்தி நேக்கு அவ்ளோ தெரியாது தெரிஞ்சமட்டுல சொன்னேன். இப்போ புரிஞ்சிருக்குமே..ஆமாம் அதான்…

அதான் ஸ்வாமீ..ஸ்ரீரங்கம். செந்தமிழ்ல திருவரங்கம்.

தேச்சுங்கறது பிற்காலத்துல தேஞ்ச பேரு,குழந்தேபூமில ஜனிச்சதும் பெத்தவா பதினோராம் நாள் அதுக்குநாமகரணம் பண்ணபோதுல தாய்மாமா,கிடாம்பிகிருஷ்ணமாச்சாரி நெல்லுல்ல அழகா விரல் தேய நீளமா எழுதின பேரு என்ன தெரியுமோ?

நிகமாந்த மகாதேசிகன். அப்றோம் அது மகா தேசிகனாகி பிற்பாடு தேசிகனாகி கடசில தேச்சுவாயிடுத்து.

நேக்குக் கூட அழகா முதல்ல கோதண்டபாணி அப்டீன்னு பேர் வச்சா அப்றொம் கோதண்டம். கொஞ்ச நாளைக்கு. பிறகு அது தண்டபாணி யாச்சு’ தண்டம்பா நீ ‘அப்டீன்னு நாலுபேரு சொல்ல ஆரம்பிச்சா.

நாளாவட்டத்துல தண்டம் மட்டும் பேர்னு ஆச்சு. ஆனா இப்போ கொஞ்ச தினமா தேச்சு கதை காலட்சேபத்துல சொல்ல ஆரம்பிச்சதும் எனக்கு ஆட்டோகிராஃப் பாகவதர்னு பேர் வந்துடுத்து அதுகிடக்கட்டும் விடுங்கோ .. இப்போ இந்த கதைக்கு வருவோம்.

ஏகச்செல்லம் கொடுத்துக் குழந்தையை குட்டிச்சுவர் ஆக்கின பெருமை தேச்சுவோடபாட்டி ஸ்ரீவரமங்கையையே சேரும். பத்துவயசுவரை மம்மு ஊட்டி, தெற்குவாசல்கடைக்கு அழைச்சிண்டுபோயி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனை ஒருவழி பண்ணி வச்சிட்டா.

இவன் இப்படி இருந்தா உருப்படமட்டான்னு தேச்சுவின் பதினாலவ்து வயசுல அவன் தோப்பனார் தூப்புல் ராமானுஜம் ஒருதிட்டம் போட்டார் … கும்பகோணம்வேத பாடசாலைல சேர்த்து வேதம் படிடா அம்பீன்னார்.பையனும் சிரத்தையா குடுமி வச்சிண்டு வேதமும் திருவாய்மொழியும் சொல்லிண்டான் லீவுக்கு ஸ்ரீரங்கம் வருவான், ரங்கநாதப்பெருமாள் வீதி உலா வரச்சே வேத கோஷ்டிகளோடு சேர்ந்து வேதம் சொல்ற அளவு ப்ராபல்யமானான்…பள்ளிக்கூடத்துல படிசிண்டே வேதமும் கத்துண்டான்…சதஸ்க்கெல்லாம் போயி கல்ந்துண்டான் காலெஜெல்லாம் போகல… . நாலுவருஷம் ஆத்தோடு இருந்தவனை அமெரிக்கால நம்மபக்கத்துக்காரா கட்டின கோயில் ஒண்ணூ வேலைக்கு அழைக்கவும் .பையன் பொறப்பட்டான்.ஆச்சு அவனும் அமெரிக்கா போயி அஞ்சுவருஷம். கோயில் வேலை பார்த்துண்டே சீமந்த புண்யாவஜன கல்யாண திவசக் காரியமெல்லாம் பண்ணி அம்பி டாலர்ல காசை சேர்க்க ஆர்ம்பிச்சான்.அங்கெல்லாம் ஒரு புண்யாவஜனத்துக்கு 200 டாலராம் நம்மூர்பணம் கிட்டத்தட்ட பத்தாயிரம் ஸ்வாமி!சரி யாரார்க்கு எது ப்ராப்தமோ அதான் நடக்கும் எனக்கு தேங்காமூடிதான்னு தெய்வம் எழுதிவச்சிருக்கு அதவிடுங்கோ..நம்ம கதாநாயகன் தேச்சு,வாரம் ஒரு தீவும்(ஹவாய் இன்னபிற) மாசம் ஒரு காசினோ(முக்கியமா லாஸ்வேகாஸ்)வுமாக பொழுதைக் கழித்தவன் ஒரு சுபயோக சுப வேளையில் லிசாவைக் கண்டுட்டான்.

ஃபாரின் போகத் தேவை விசா
என் வாழ்க்கைக்குத்தேவை லிசா

அப்டீனு அச்ட்டுபிசட்டுப் புதுக்கவிதையெல்லாம் எழுதினான். எல்லாம் காதல்ங்கற மூணெழுத்து செய்ற ஜாலந்தான்…

லிசா கேமார்ட் மாலில் கணிணியில் கணக்கு தட்டும் கன்னிபெண்(என்று தேச்சு நினைத்தான்) வழக்கம் போல் வாங்கி ஒருமாதம் உபயோகித்து வேண்டாமெனத் திருப்பிகொடுக்க ஒரு ரேசருடன் மாலுக்குப்போனவனின் மனதில் லிசா இடம்பிடிக்கக் காரணம்., அமெரிக்கப் பெண்களுக்கே உரிய அட்டகாச உயரமும், களையான முகமுமாயிருக்கலாம் யார் கண்டது? காதலுக்குக் கண் கிடையாதுன்னு பெரியவா சொல்லி இருக்கா….

லிசா சின்ன வய்சுல அவ அம்மாகூட இந்தியா வந்த்ருக்காளாம்…தமிழ் நாட்டு கோயில் குளமெல்லாம் தெரிஞ்சி வைச்சிருந்தாள்.. தமிழ்ல ஒண்ணு ரெண்டு தெரியுமென தேச்சுவிடம் சொல்ல தேச்சு அகமகிழ்ந்தான். ‘இரண்டுக்குப் பிறகு மத்ததை நான் சொல்லித்தரேன்’ ந்னு ரண்டு அர்த்தத்துல அவகிட்ட பேச லிசா அதுக்கு.’ யூ ..யூ.. லவ்லீ ராஸ்கல்”ன்னு கொஞ்சலா கன்னத்துல தட்ட…லிசாவுக்கு தனக்கு தமிழ்ல ஒண்ணு ரண்டு சொல்லிக் கொடுத்ததேச்சு மேல அன்பு பொங்கிக்காதலா மாறினது… இப்படியாக அவா காதல் தேர்தல் நேரத்து வாக்குறுதியாக வளர்ந்தது.

எப்படியோ காதல் கலிஃபோர்னியாவில் பிறந்து கார்நகரமான டெட்ராய்ட்ட்ல வளர்ந்து கடைசில சிகாகோல சிக்கல் இல்லாமல் திருமணத்துல முடியறதுக்கு வேளை வந்தது. லிசா விருப்பப்படி சிகாகோ சர்ச் எதிலியோ கல்யாணம்னு தேதில்லாம் போட்டு பத்ரிகையெல்லாம் அடிச்சான் அம்பி.

அம்மா அப்பாக்கு கடுதாசி எழுதி விஷயத்தை தெரிவிச்சான் .

அவா உடனேயே ஐஎஸ்டி செலவைப்பாக்காம போன் போட்டு நன்னா திட்டிட்டு

‘போடாபோ நீ எங்களுக்கு பையனே இல்ல…உனக்காக உன்னை வேதமெல்லாம் படிக்க வச்சி சிரோன்மணியாக்கி முன்னேத்தி அமெரிக்கால கோயில்ல பெருமாள் கைங்கர்யம் பண்ண அனுப்பினோம். அமெரிக்கையா அங்க போன நீ எப்போ இப்படி கெட்டு சீரழிஞ்சி போய்த்தொலஞ்சே? ஏண்டா அங்க போயி வெள்ளத்தோலுல மயங்கிட்டுயா நாசமாபோறவனே?

இங்க நம்ம ஐய்யெங்கார் பொண்ணுகிட்ட இல்லாத சேப்பாடா அவாள்ளாம்? காவேரில தலைமுழிகிட்றோம் உனக்கு..கொடியாலம் தோப்பு, மேலூர்பண்ணை, புலியூர்புஞ்சை நெலம், ஸ்ரீரங்கத்து உத்தரவீதி ரங்ககிருபா இல்லம் எதுவும் உனக்குக் கிடயாதுபோடா.. எல்லாம் தர்மத்துக்கு எழுதிடறேன். குலக்கோடாரி.?’.அப்டீப்டின்னு திட்டித்தீர்த்துட்டா…

அம்பி அதுக்கெல்லாம் கொஞ்சமும் அசரல. காதலுக்காக சாம்ராஜ்யமே இழந்தவர்களின் கதை அவனை தேற்றியது.

கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசமிருக்கறச்சே தேச்சுக்கு ஒரு நாள் வாஷிங்டனில் (60ஆம்) திருமணம் ஒண்ணு நடத்த அழைப்புவரவும் கிளம்பினான்…அம்பதுவருஷமா அங்கேயே கொட்டைபோட்டுக் குடித்தனமிருக்கிற வசதியான குடும்பமாம்..ஜார்ஜ் புஷ் ஆத்துல அப்பப்போ விருந்துக்கு கல்யாணப் பிள்ளைசடகோபன் போறது வழக்கமாம்..பத்துகோடிரூபால செண்ட்டர்வில் என்கிற இடத்துல பங்களாவாம்.. பின்கட்டுல ஏரி படகு இத்யாதிவசதிகளோட..

லிசா வேற ஆபீஸ் விஷயமா ஸ்பெயினுக்கு ஒரு மாசம் போயிட்டா…அதனால வந்த இடத்துல கல்யாண மந்திரம் சொன்னதும் உடனே வழக்கம்போலக் கிளம்ப்றாப்ல கிளம்பாம அம்பீ அவாளும் கேட்டுண்டதால ஒரு நா தங்கிப்போக தீர்மானிச்சான்… வாழ்க்கைல யாரார்க்கு எப்பப்போ திருப்புமுனை வருமோ பகவானுக்கே அது தெரியும்…தேச்சுக்கு அது வாஷிங்க்டனுக்கு வந்த இடத்துல வந்தது

இவன் தங்கின ஆத்துல பசங்க எல்லாம் சேர்ந்து தமிழ் சிடீக்கள் போட்டு பார்க்க ஆரம்பிச்சா…’வாங்க மிஸ்டர் தேசிகன்..நீங்களும் பாருங்க” அப்டீன்னு அவன் வயசுப் பசங்க அன்பா அழைச்சா..பையனும் படங்கள் பார்த்தான் அதுல அந்த ஆட்டோகிராஃப் என்கிற படம் பார்க்கைல அவன் மனசு அப்டியே மகிழ்ந்துபோயிடுத்து.. என்ன ஆச்சர்யம்! என் கதைமாதைரியே இருக்கே நேக்கும் மூணு தோழிகள் ஸ்ரீரங்கத்துல இதே போலத்தான் சே.. எப்படி அவாளை மறந்தேன்? எனக்குக் கல்யாணம்னா அவா சந்தோஷப்படுவாளே.. என மனசு நினைக்க உடனே ஒரு திட்டம் போட்டான் செல்லுல தன் செல்லத்தை அழைச்சான்..”பேபி…நான் நேடிவ்ப்ளேஸ் போயிட்டுவரட்டுமா? என் ஓல்ட் ஃப்ரண்ட்ஸுக்கெல்லாம் பத்திரிகை கொடுக்கணும்”என்றான்

ஜீன்ஸ் பாக்கெட்டுலேந்து ஏதோ ஜவ்வு மிட்டாய் மாதிரி சமாசாரத்தை வாயில் போட்டுண்ட லிசா “ரியலி ? போயிட்டுவாடா…எஞ்சாய்! ஹாவ் ஃபன்'” அப்டீன்னு சொல்லிட்டா..

தோள்ள பை மாட்டிண்டு ஆட்டோகிராஃப் படத்து கதாநாயகன் மாதிரி தன் பழைய தோழிகளைப் பாக்கறதுக்கு தேச்சுவும் ப்ளேன் ஏறிட்டான்.

சீட்ல சாஞ்சதும் பையனுக்கு ஃப்ளாஷ் பேக் ஆரம்பமாறது

ஞாபகம் வருதே ஞ்யாபகம் வருதேன்னு

அவன் உதடுகள் மெதுவாப்பாட்றது. மனசில அவனோட சிறுப்ராயத்து தோழிகள் காமினி பாமினி பத்மினி மூணுபேரும் உலா வரா.

“காமினி உன் மூஞ்சியக் காமி நீ” அப்டீன்னு சின்னவய்சுல மேற்குரங்கா பள்ளிக்கூடத்துல அவளை கூடப்படிச்ச பசங்க கிண்டல் பண்றது வழக்கம், ஆனா தேச்சுமட்டும் அப்போ தேமேன்னு தான் உண்டு தன் படிப்பு உண்டூன்னு இருப்பான்.

இந்த மாதிரிப் பசங்களை சீண்டிப் பாக்றது பொண்ணுகளோட வேலையா ஆதி காலத்லேந்தே இருக்கு பாருங்கோ. சும்மா இருந்த ராமரைப் போயி டிஸ்டர்ப் பண்ணீனா ராவணன் தங்கை….தவம் பண்ணிண்டு இருந்த விஸ்வாமித்ரரை டான்ஸ் ஆடிகலைக்கப் பாத்தா மினுக்கு மேனகை.

காமினி ஒண்ணும் மேனகை மாதிரி அத்தனை அழகு இல்லேன்னாலும் சுமார் அழகு. லட்சணமான முகம். ஆனா படிப்புதான் பூஜ்யம்.

ட்யூஷன் வச்சிக்க அவா ஆத்துல வசதி கிடயாது ..ஏழைக் குடும்பம்..அப்பா கோயில்ல மடபப்ள்ளில வேலை உண்டக்கட்டிதான் தினப்போதுக்கு சாப்பாட்டுக்கு.

காமினிக்குப் பின்னாடி வத்சலா பத்மஜா சுதர்சனம் ஸ்ரீதரன்னு குட்ஸ் வண்டியா குடும்ப பாரம்வேற. அவ அப்பா மடப்பள்ளீல தளீகை வேலை அதிகம் செய்யல போலும் என்னவோ போங்கோ. கேட்டா மரம் வச்சவான் தன்ணி விடுவான்னு கைவிரிப்பா.

அது கிடக்கட்டும் இந்தக்காமினியப்பத்தி பேசுவோம். காமினிக்கு கணக்கு தகறாரு மத்ததெலாம் ஏதோ பாஸ் மார்க் பக்கதுல தேறும் அதனால உதவிக்கு தேச்சுவை அண்டினா…அவனோட மென்மையான மனசை சாதகமா எடுத்துண்டா…

ஏழாம் க்ளாஸ் பரிட்சைல காப்பி அடிக்க தேச்சுவை உதவி செய்யக் கேட்டுண்டா அதுக்கு நன்றியா அவன் கையப் பிடிச்சி உன்னை வாழ் நாள்ள மறக்க மாட்டேண்டா என்றாள்..

அம்பீ சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை இல்லையோ? காத்துல பறந்தான்…கொள்ளீடத்துல அவ குளீக்க போனா இவனும் போக ஆரம்பிச்சான் அவசக்கரத்தாழ்வார் சந்நிதியை சுத்தினா இவனும் சுத்தினான். என்னவோ அவகிட்ட சடன்னா ஒரு ஈர்ப்புவந்தது வார்த்தையெல்லாம் கொட்டி லெட்டர் எழுதிப்போட்டு பதிலுக்கு காத்திருந்தான் ஒன்னும் வரல ஒரு நா அதுக்கு போனான் தங்கை பத்துகிட்ட கேட்டான் அவள்தான் சொன்னாள்” அக்காபம்பாய்க்கு யாராத்துக்கோ சமையல் வேலைக்குபோயிட்டா..”ன்னு..

பயலுக்கு பொசுக்குனு போயிடுத்துஅப்றோம் ரண்டுவருஷம் அவ வரவே இல்ல அம்பிஅப்றொமா வேத பாடசாலைக்கு படிக்கபோய்யிடான்.அப்றோம் அவன் வாழ்க்கை பாதையே மாறிப்போச்சே?

இப்போ எங்க இருக்காளோ கல்யாணமாகி எந்த ஊர்போனாளோ முதல்ல அவள் வீட்டுக்குப்போயி கேட்டுத் தெரிஞ்சிக்கணும்

அம்பி சிங்காரசென்னைக்கு வந்தவன் ராக்ஃபோர்ட் பிடிச்சி சொந்த மண்ணை மிதிச்சான்..

தாய் மண்ணே வணக்கம் என்றான் கும்பிடபோன தெய்வம் குறுக்க வந்த மாதிரி அவன் நண்பன் ரங்காச்சு ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தான். யாரோ உறவுக்காராளை ரிசீவ் பண்ண வந்தவன் இவனைபாத்து,”நீங்க.. நீங் ..நீ..தேச்சு இல்லே?’ என சந்தேகமாய் கேட்க இவன்” ரங்காச்சூ ஊஊஊ”ன்னு சினிமால வர ஹீரோ மாதிரி ரயில்வே லைன்ல ஓடிபோய் அவனை ஆறத்தழுவிண்டான்.

ரங்காச்சுவிடம் காமினி பாமினி பத்மினி பத்தின விவரம் கேட்டான்

காமினி உள்ளூர்லதான் கல்யாணமாகி இருக்காளாம் பாமினிக்கு கல்யாணம் ஆகலயாம் அவள் உண்டு அவ ஜோலி உண்டுனு இருக்காளாம்

” பத்மினி ….பத்மினிதான்….”

நா தழுதழுத்தான் ரங்காச்சு,,

“என்னடா பத்மினிக்கு? என் உயிர் ஸ்னேஹிதி..எனக்கு அமெரிக்கலேந்து அழைப்பு வந்ததும் ஆசி கூறி அனுப்பிவைத்த அன்புதெய்வம்டா அவ அவளுக்கு என்ன ஆச்சு?” அம்பி பதறினான்

“அட்ரஸ் தரேன் நீயே போய்ப்பார்த்துக்கோடா”

தேச்சு முதல்ல காமினியாத்துக்கு உத்தரவீதிக்குபோனான்

திண்ணைல காத்துவாங்கி படுத்துண்டுருந்த பெருசுகள் எல்லாம்.யார்ராது ஜீன்ஸ்போட்டுண்டு குடுமி வச்சிண்டு வயசுப்பையன் போறானேன்னு ஆக்ஷ்சர்யமா பாக்றா

அம்பி யாரையும் லவலேசம் ஏறெடுத்துப்பாக்ல அவன் சிந்தையெல்லாம் காமினிதான் அவகிட்ட பத்ரிகை கொடுக்கணும்..கல்யாணம் அமெரிக்கால பண்ணிண்டா நாங்க எப்டிடாவர்துன்னு கேப்பா காமினி..’.சமயம் கிடைக்கற்ச்சே லிசாகூட இங்கவரேண்டி வரவேற்பு வைக்கிறேன்’னு சொல்ணும்…. காமினி பாமினி பத்மினிக்கு மட்டுமாவது ட்ரீட் கொடுத்தே ஆகணும்

அம்பி நினைச்சபடி காமினி ஆத்துக்கு நுழையறான் உத்தரவீதில ரங்கநிதி ஒண்டுகுடித்தனத்துல சின்ன போர்ஷனில் அவ இருந்தா இவனைக்கண்டதும் உற்சாகத்துல துள்ளீனா..கைல இடுப்புல வயத்துலனு மூணு கோந்தைகள்..”வாடா தேச்சு..உன்னை நான் மறக்கமுடியுமாடா?’ ந்னு ஒரு உடைசல் முக்காலியை இழுத்துப்போட்டாள்.தளிகை உள்ளில் ஈயச்சொம்புரசம் எட்டூருக்கு வாசனை பரப்பிண்டிருக்க அம்பி அவகிட்ட,” நானும் மறக்கலைடீ காமினி அதான் பாக்க வந்தேன்”ன்னான். மூஞ்சூறு ஒண்ணுகாலடில சர்வ சகஜமா ஓடிண்டுருந்தது. சின்னகுழந்தை,”அம்மா…பிசிக்கேட்டு நேணும்” ன்னு சிணுங்கினது

“தேச்சு வந்துட்டான் என் தேச்சு வந்துட்டான்! ..பிசிக்கேட்டு என்னடிம்மா அந்த அமெரிக்கா பில்கேட்சையே கொண்டுருவான்” சிரிச்சா காமினி. லேசா தேச்சுவப்பாத்து கண் அடிச்சா. தேச்சுக்கு திக்குனுது. பத்திரிகை கொடுக்கறதுக்கு முன்னாடி

‘எங்க உங்கத்துக்கார்?’

கேட்ட தேச்சுகிட்ட “அவரெங்கடா ஒழுங்கா ஆத்துக்கு வரார்.. தளிகை வேலை ஊர் ஊரா போயிட்றார்…காசுபணம் ஒழுங்காதர்தில்ல…ஒரு சாமர்த்தியம் கிடையாது அசட்டு ஆம்படையான் எனக்கு…பிச்சிண்டுவர்லாம் போல்ருக்கு முன்னே நீ ஏழாம்க்ளாசில எனக்கு லவ் லெட்டர்தந்தப்போ பயமா இருந்ததுடா இப்போ அதெல்லாம் போயி ஆசைதான் முன்னாடி இருக்கு ..தேச்சு உன்கூட வரேண்டா அமெரிக்கால நானும் நீயும் ஒண்னா வாழ்லாம்டா….குழந்தைகளை வேணும்னா தங்கைகள்கிட்ட விட்டுட்றேன் என்ன சொல்றே?” என்று உளற ஆரம்பிச்சா

தேச்சு திடுக்கிட்டபடி “காமினி நேக்கு கல்யாணம்டி ..அமெரிக்கா பொண்ணு”னு பத்ரிகையை நீட்டினதும் காமினி கோபமா” போடா இதைக்கொடுக்கவா இங்க வந்தே…இதுக்கு நீ வரமயே இருக்கலாம்”னு கழுத்தபிடிச்சி தள்ளாத குறையா அவனை அனுப்பிட்டா

விட்டாப் போதும்னு பாமினியப் பாக்க சாத்தாரவீதிக்கு வந்தான்

பாமினி இவன் வீதிஉலாவில் பெருமாள் பின்னாடி வேத கோஷ்டியில் வேதபாராயணம் செய்யும்போது அதைப்பார்த்து மகிழ்ந்து சின்ன வயதிலெயே இவன் தோழியானவள்…அப்போதே இவளுக்கு அவர்கள் குலவழக்கபடி பொட்டுகட்டி நடன மாடவிட்டுவிட்டர்கள் எனக்கேள்விப்பட்டான். ஓரிருமுறை அவளுடைய வீட்டுக்கும் டான்ஸ் பாக்கப் போய் வந்துருக்கிறான். கைமணிக்கட்டில் மல்லிப்பூ சுத்திக்கொண்டு சில வடக்காத்தி ஆசாமிகளும்’ வாரேவாஷ்” என்று சொல்வதை பார்த்திருக்கிறான்.

“நன்னா ஆடறே பாமினி ” அப்டீம்பான் தேச்சுவும்.

ஆசையா இருக்கும் அவகைய பிடிக்க ஆனா பயமாருக்கும் ஒருதடவை உறையூர்பண்ணையார் யாரோ அவளை பெண்கேட்டுவந்ததை பாமினியே அவ்ன்கிட்ட சொன்னா…கல்யாணமாச்சோ இல்லையோ ரங்காச்சுவும் சரியா சொல்லலையேனு சந்தேகமா அவாத்துக்குபோய் கதவைத்தட்டினான்.

கதவைத் திறந்த பாமினி “வா வா” ன்னு வாய்நிறைய அழைச்சா…

எப்டி இருக்க பாமினின்னான் அம்பி.

“ஏதோ இருக்கேண்டா…எங்ககுலத் தொழிலை விடமுடில்ல பிடிக்கலேன்னாலும் செய்யவேண்டி இருக்கே..உறையூர் பண்ணையாருக்கு கல்யாணம் பண்ணீவச்சாங்க.. ஆளு வயசானவரு நோயாளி வேற ஒரே வருஷத்துல போயிட்டாரு பழையபடி தொழிலுக்கே வந்துட்டேன் அதுகிடக்கட்டும்.. நீ எங்க இருக்கே இப்போ?” விசாரிச்சா பாமினி. பழைய களையான முகம் மாறவே இல்லை டான்ஸ் ஆட்றவாளுக்கே உரிய அலைபாய்ற கண்கள். பண்ணிவைத்தமாதிரி பருவ உடம்பு. ஆனாலும் அம்பி அவளை சைட் அடிக்கல அவன் நெஞ்சுல லிசாதான் எப்போதும் தமிழ்ல ஒண்ணு ரண்டு சொல்லிண்டுருந்தா. அதனால பாமினி கேள்விக்கு பதிலா “அமெரிக்கா”ன்னான்.

பாமினி உடனே ஆன்னு வாயப்பிளந்துட்டா

அமெரிக்காவா? தேச்சு..என்னைமாதிரி டான்சர்சை அங்க என்கரேஜ் பண்ணுவாங்களே! ப்ளீஸ் கூட்டிப்போடா. என் அழகுக்கு சினிமால அழைச்சங்க நான்போல. உன்கூட அங்கே வரேன் உன் மனைவியா வேணாலும் வரேன் கல்யாணம் பண்ணிக்கறியா என்னை?” அப்டீன்னு அவன்கை பிடிச்சி கெஞ்சினா.

தேச்சு அவசர அவ்சரமா தன் கல்யாணப் பத்ரிகையை நீட்ட பாமினி அதைப் பிரிச்சிப் பார்த்தவள் கோபமாய்” ஏண்டா ஒரு அமெரிக்க பொண்ணுகிட்ட உன் மனசை பறிகொடுத்தியாக்கும்? என்னவிட பெரிய அழகா அவ? டான்ஸ் ஆடுவாளா? உனக்கு டான்ஸ் பிடிக்குமேடா அவளுக்கு பரத நாட்யம், தேவதாசிகள் ஆட்ற தெய்வ நடனமெல்லாம் தெரியுமாமா? இப்பகூட லேட் ஆயிடல பத்ரிகையை வீசி காவேரில போட்டுட்டு என்னைக் கட்டிக்கோடா…” ன்னா லஜ்ஜையே இல்லாம..எதேஷ்டத்துக்கு அழகு இருக்கு பாமினிக்கு அறிவுதான் மழுங்கிபோச்சு இல்லேன்னா இப்டி வெக்கம் கெட்டு வந்தவன்கிட்ட வாய்விட்டுக் கேப்பாளோ ஒருத்தி?

தேச்சு தலையில் அடிச்சிக்காத கொறையா வெளில வந்துட்டான். என்னாச்சு என் தோழிகளுக்கெல்லாம் பாரதப் பண்பாட்டையே மறந்து துறந்து என்கூட வரேங்கறா? சேசே..இதப்பாக்கவா இந்தியா வந்தேன் ? தேச்சு திகச்சிபோயி நின்னுட்டான்

பத்மினியை இனியும் பார்க்கணுமா அப்டீன்னு மனக் கிலேசம் ஆனாலும் அமெரிக்கா போறதுக்குமுன்னாடி ஆத்துல நாலுவருஷம் இருந்தப்போ பக்கத்தாத்திலிருந்தவள் பாசமும் நேசமும் ஆன உண்மைதோழியா பழகினவள்..இவன் இடறிவிழ இருந்த சந்தர்ப்பங்களில் இவனை திருத்திவாழவைத்த உத்தமி அவளைப் பார்க்காமல் ஊர் திரும்பக்கூடாதுன்னு நினச்சான்

பத்மினி கவுன்சிலிங் செய்பவள். பலரது மனோ வியாதியை குணப்படுத்தியவள் இப்போ அவளே பைத்தியமாய் தென்னூர் பைத்தியக்கார ஆஸ்பித்திரில இருக்றதா ரங்காச்சு சொன்னப்போ தேச்சு நம்பல ஆனா நேர்ல போயி பாத்தவன் அதிர்ந்துபோனான்….

“பத்து..பத்மினீ?” னு நா தழுதழுத்தான்.இருபது வய்சுலயே அறிவுமுதிர்ச்சியா பேசின பத்மினியா இது? உடையை கிழிச்சிண்டு கண்ணை உருட்டிண்டு பைத்தியக்காரக் கோலத்துல இருக்கா?

“வாடா தேச்சு..நீ வருவாயென நான் இருந்தேன் ஏன் மறந்தாயென நான் அறியேன்…” அப்டீன்னு பாடினாள்

“மறக்கலபத்மினி…என்னை ஆளாக்கின தெய்வம் நீ..உன்னை மதிச்சி ஒரு நல்ல விஷயம் சொல்லத்தான் நேர்ல வந்தேன்”

“தெய்வம் அதுஇதுன்னு என்னை மேல தூக்கி வைக்காதடா…எனக்கும் இதயம் இருக்குனு யாருமே புரிஞ்சிக்கல…எல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்?”

“நான் இருக்கேன் பத்மினி….உன்னைப் புரிஞ்சிண்ட தேச்சு இருக்கேன் ஊர் உன்னை பைத்தியம்னு சொல்லலாம் …ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..உலகம் அறிந்துகொண்ட குழந்தையம்மா நீ..” இவனும் பாட பைத்தியமாயிருந்த பத்மினிக்கு குஷி தாங்கல…உடம்பைப் பிணைச்சிருந்த சங்கிலியை அறுத்துண்டு ஓடிவந்து அவன் கைபிடிச்சா…..”கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா ஓடிபோயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?’ன்னு பாட ஆரம்பிச்சா
தேச்சுக்கு கதிகலங்கிப் போச்சு என்னடாது நிஜமாவே பைத்தியமாயிட்டாளா பத்மினி? ஐய்யெயோ? அலறினான்.

அதுக்குள்ள ஆஸ்பித்ரி சிப்பந்திகள் வந்து அவனை விடுவிச்சா..

அம்மாடீன்னு பெருமூச்சுவிட்டு பையன் அம்மா மண்டபம் காவேரிபடித்துறைக்கு வந்து ஆசுவாசமா உக்காந்தான்

என்னவோ லிசாக்கு துரோகம் பண்ணிட்டு இவாளையெல்லாம் பாக்கவந்தமாதிரி தோணவும் வருங்கால மனைவியின் வசந்த நினைவில் செல்லை எடுத்து”செல்லமே”ன்னு அழைச்சான்

ஸ்பெயினிலிருந்த அவனோட ஸ்வீட்டார்லிங், “ஹலோ? தேச்சு நானே கால் பண்ண நினச்சிருந்தேன்”அப்டீன்னா

“கண்ணே ஒருவாரப்பிரிவு என்னைப்போல உனக்கும் தங்கலையாடி அம்மா?’ன்னு ஆசையும்தாபமுமா அம்பி கூவினான்

லிசா அலட்சியமா “அதெல்லாம் இல்ல. இங்க ஒரு ஸ்பானிஷ் பேசற இளைஞனைப்பாத்தேன் நல்ல பர்சனாலிடி நல்ல வேலை நல்லசம்பளம்.. ஆமா, உன்னைவிட எல்லாத்திலயும் க்ரேட்! அவனைப் பிடிச்சிபோச்சு, அவனையே கல்யாணம் செய்துக்கப் போறேன்.”ன்னா.

தேச்சு வீறிட்டு”அடப்பாவி…என்மேல காதல் வச்சிட்டு கட்சிமாறலாமா, இது நியாயமா?”ன்னு கத்தினான்

“ஷ்..காதல் எப்போவேணாலும் யார்டவேணாலும் வரும் போகும். இப்போ இவனிடம் வந்த்ருக்கு தேச்சு உன்கிட்ட தமிழ்ல ஒண்ணு ரண்டு மூனு கத்துட்ட மாதிரி இப்போ இவன்கிட்ட நான் ஸ்பானிஷ்கத்துக்கறேன். ஒன் டூ த்ரீ ஸ்பானிஷ்ல சொல்லட்டுமா? ஊனோ டோஸ் ட்ரேஸ் ……” லிசா சொல்லிண்டே போகவும்

தேச்சு அதிர்ச்சியில் புத்தி பேதலிக்லப்படியே நின்றான். செல்போனை வீசி காவேரில எறிஞ்சான். அப்டியே படிக்கட்டுல உக்காந்து தேம்பித்தேம்பி அழ ஆரம்பிச்சான்..காவேரியோட காவேரியா அவன் கண் ஜலமும் கலந்தது.

ரங்காச்சு ஓடிவந்து “போனாபோர்து விடுடா. ஏமாத்தினவளை நினைச்சி மருகணுமா வாடா. சக்கரத்தாழ்வார் சந்நிதிய ஒருமண்டலம்சுத்து நல்ல பொண்ணா அமையும்” அப்டீன்னு அழைச்சு பாத்தான், ஊஹூம், இடத்தைவிட்டு எழுந்துக்கவே இல்ல. பிரமைபிடிச்சாப்ல எங்கயோ பாத்துண்டு இருந்தான்.

தேச்சுவை இப்போவும் நீங்க ஸ்ரீரங்கம் போனால் அம்மா மண்டபம் படித்துறைல பாக்லாம் சித்தபிரமைபிடிச்சி பரிதாபமாய் இருக்கான்.

வாய்மட்டும் ஊனோ டோஸ் ட் ரேஸ்… ஒண்ணு ரண்டு மூணு …ஒன் டூ த்ரீ ஃபோர் அப்டீன்னு உளறிண்டே இருக்கு,,,

தேச்சு கதைகேட்டவாளுக்கு இப்போ புரிஞ்சிருக்குமே வாழ்க்கைவேற சினிமா வேறன்னு

என்னவோபோங்கோ எல்லாரும் நன்னாருந்தா சரி…
சர்வோஜனா சுகினோபவந்து….
– ஜூன் 22, 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *