ஆட்டுப்பால் புட்டு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 14,567 
 
 

இது எல்லாம் நடந்தது சிலோனில்தான். ‘ஸ்ரீலங்கா’ எனப் பெயர் மாற்றம் செய்யும் முன்னர். அப்போது எல்லாம் ‘தபால் தந்தி சேவை’ என்றுதான் சொல்வார்கள்; அலுவலகம், அஞ்சல் துறை, திணைக்களம் போன்ற பெரிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தினம் ‘யாழ்தேவி’, கொழும்பில் இருந்து சரியாக காலை 5:45 மணிக்குப் புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு ஓடியது; பின்னர் அதே நாள் திரும்பியது. தபால், தந்தி சேவையில் அதிகாரியாக வேலைசெய்த சிவப்பிரகாசம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்தேவியைப் பிடித்துப் புறப்பட்டு, மதிய உணவுக்கு யாழ்ப்பாணம் போய்விடுவார். பின்னர், ஞாயிறு மதியம் அங்கே இருந்து கிளம்பி, இரவு கொழும்பு வந்துவிடுவார். திங்கள் காலை வழக்கம்போல கந்தோருக்கு அதிகாரம் செய்யக் கிளம்புவார்.

யாழ்ப்பாணத்தில் அவருடைய மனைவி நாற்சார் வீட்டையும், பெரிய வளவையும் பரிபாலித்துக்கொண்டிருந்தார். அவர்களுடைய ஒரே மகள் மணமுடித்து சிங்கப்பூர் போய்விட்டாள். வீட்டிலே அவர்கள் வளர்த்த ஒரு மாடு, இரண்டு ஆடுகள், மூன்று நாய்கள், 20 கோழிகள், வளர்க்காத எலிகள், சிலந்திகள், கரப்பான்பூச்சிகளும் அவர்களை ஓயவிடாமல் வேலை கொடுத்தன. சிவப்பிரகாசம் அடிக்கடி வருவது, மனைவியைப் பார்ப்பதற்கு மட்டும் அல்ல… வீடு, வளவுகளைப் பராமரிக்கவும் தான். அப்படித்தான் அவர் மனைவியும் நினைத்தார். ஆனால், இன்னொரு ரகசியக் காரணமும் இருந்தது.

ஆட்டுப்பால் புட்டுயாழ்ப்பாணத்திலே தேங்காய்ப் புட்டு பிரபலம்; தேங்காய்ப்பால் புட்டு இன்னும் பிரபலம். மாட்டுப்பால் புட்டையும் சிலர் விரும்பி உண்பது உண்டு. ஆனால், சிவப்பிரகாசம் சாப்பிடுவது என்றால், அது ஆட்டுப்பால் புட்டுத்தான். தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அரிசி மாவையும் உளுத்தம்மாவையும் சரிசமமான விகிதத்தில் கலந்து குழைத்து, முதலில் புட்டு அவிக்கவேண்டும். அதை இறக்கியவுடன் சூடாக்கிய ஆட்டுப்பாலில் கிளறி, சர்க்கரை இரண்டு கரண்டி சேர்த்து சுடச்சுடச் சாப்பிட்டால், அதன் ருசியே தனி என்பது சிவப்பிரகாசத்தின் அபிப்பிராயம். மனைவி ஏற்றுக்கொள்ளாத கருத்து அது. ஆட்டுப்பாலில் கொழுப்புச்சத்து குறைவு; ஆனால், புரதச்சத்து அதிகம். அது காந்தியின் உணவு என வாதம் செய்வார் சிவப்பிரகாசம். யாழ்தேவியில் இறங்கி வீட்டுக்கு வந்து சேரும் நேரம், அவர் மனைவி ஆட்டுப்பால் புட்டைச் சுடச்சுடத் தயாராக வைத்திருக்கத் தவறுவதே இல்லை.

ஒருமுறை அவர் வீட்டு மாடு, கன்று ஈன்றது. ‘நீங்கள் வந்த நேரம்’ என மனைவி, அவரைப் புகழ்ந்தார். மனைவி, கணவரைப் பாராட்டுவது அபூர்வமானது. சிவப்பிரகாசத்துக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவசர அவசரமாகக் கன்றைச் சுற்றிவந்த இளங்கொடியை, உமலிலே போட்டுக்கட்டினார். உடனுக்குடன் அதை ஆலமரத்தின் உச்சியில் தொங்கவிட வேண்டும். அந்த ஊரில் இப்படியான வேலைகளைச் செய்வதற்கு ஒருவன் இருந்தான். வேலி அடைப்பது, விறகு தறிப்பது போன்ற வேலைகள். அழகான வாலிபன். அவனுடைய தாய், தமிழ் ஆசிரியை. படிப்பு ஓடாதபடியால் அதை நிறுத்திவிட்டு இப்படியான வேலைகளை ஊருக்குள் செய்தான். பெயர் நன்னன்.

”ஆலமரத்தின் உச்சியில் கட்ட வேண்டும். அப்பதான் மாடு நிறையப் பால் கறக்கும். வேறு ஒருவருடைய உமலும் அதற்கு மேல் இருக்காமல் பார்த்துக்கொள்” என்றார்.

அவன் ”தெரியும் ஐயா. இந்த ஊர் முழுக்க பால் கறப்பது என்னால்தான்” எனச் சொல்லியவாறு போய் கட்டிவிட்டு வந்தான். அடிக்கடி வீட்டுக்கு வந்து அவர் கொடுக்கும் வேலைகளைச் செய்தான். குணசாலி. குடிப்பது கிடையாது. சீட்டு விளையாடுவது இல்லை. ஒருவித கெட்ட பழக்கமும் அவனிடம் இருப்பதாகச் சொல்ல முடியாது. வேலை முடிந்ததும் காசை வாங்கிக்கொண்டு போவான். எண்ணிக்கூடப் பார்ப்பது இல்லை.

ஒருநாள் சிவப்பிரகாசம் கேட்டார், ”உனக்கு இந்தப் பெயர் யார் வைத்தது?” அவன் சொன்னான், ”அம்மாதான். அது பழைய மன்னனின் பெயர்.”

”அவன் கொடூரமானவன் அல்லவா?” என்றார்.

அவன் சொன்னான், ” ‘எந்த மன்னன்தான் கொடூரம் இல்லாதவன்?’ என அம்மா சொல்வார்.”

பெயர்தான் நன்னன் என இருந்ததே ஒழிய, அவனுடையது சாதுவான முகம். எப்போதும் ஏவலை எதிர்பார்க்கும் கண்கள். நாளை என ஒன்று இருக்கிறதே என்ற யோசனை அவனுக்குக் கிடையாது. கொஞ்ச நேரம் தீவிரமாகச் சிந்திப்பதுபோல முகத்தைக் கோணலாகப் பிடித்தபடி நின்றான். பின்னர் அவர் ஆச்சர்யப்படும் விதமாக ஒன்றைச் சொன்னான். ”அரசன் என்றால் அவனுக்கு ஒரு கொடி இருக்க வேண்டும். இந்த ஊர் ஆலமரத்தைப் பார்த்தால் அது தெரியும். எனக்கு எத்தனை இளங்கொடிகள் தொங்குகின்றன என்று.”

ஆட்டுப்பால் புட்டு2ஒவ்வொரு முறையும் சிவப்பிரகாசம் வரும்போது, நன்னனுக்கு ஏதாவது வேலை இருக்கும். இந்தத் தடவை அவர் வந்தபோது ”நன்னன் மணமுடித்துவிட்டான்” என மனைவி சொன்னார். அன்று அவன் மனைவியை அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்க வந்தான். பெண், அழகில் அவனுக்குக் கொஞ்சமும் குறைந்தவள் அல்ல. கண்களைப் பார்த்தபோது துணுக்கென இருந்தது. இமைக்க முடியாத பாம்பின் கண்கள்போல அவை நீளமாக இருந்தன. அதில் கொஞ்சம் தந்திரமும் தெரிந்தது. அவருடைய முதல் நினைப்பு, ‘இவன் அப்பாவியாக இருக்கிறானே… இவளை எப்படிச் சமாளிக்கப்போகிறான்?’ என்பதுதான். பின்னர் யோசித்தபோது இவள்தான் சரியெனப்பட்டது. அப்பாவி யானவனை இவள் எப்படியும் முன்னேற்றிவிடுவாள். வெற்றிலையில் காசு வைத்து, மணமக்களிடம் கொடுத்து, சிவப்பிரகாசம் வாழ்த்தி அனுப்பினார். அவள் முன்னே போக, இவன் பின்னால் குனிந்தபடி இடது பக்கமோ வலது பக்கமோ பார்க்காமல், அவள் காலடியை மட்டுமே பார்த்து நடந்தான். மணம் முடிக்கும் முன்னர் அவன் எப்படி நடந்தான் என்பது அவனுக்கே மறந்துவிட்டது. அவள் கொஞ்சம் உதட்டைக் குவித்தால் அவன் கிணற்றுக்குள் குதித்துவிடுவான் என சிவப்பிரகாசம் எண்ணினார்.

அடுத்த நாள் காலை அவர் முட்டைக் கோப்பியை ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தபோது நன்னன் தனியாக வந்தான். அவனைப் பார்க்க வேறு யாரோபோல இருந்தது. அவன் அணிந்து இருந்த டெர்லின் சட்டை பொக்கற்றுக்குள் த்ரீரோஸஸ் சிகரெட் பாக்கெட் இருந்தது. தலையை ஒட்ட வாரி, மேவி இழுத்திருந்தான். சுருட்டிய தினகரன் பேப்பர் கையில் கிடந்தது.

”என்ன நன்னா… பேப்பர் எல்லாம் படிக்கிறாய்போல இருக்கு?” என்றார்.

”ஐயா, எல்லாம் பத்துமாவின் வேலை. கையிலே பேப்பர் இருந்தால்தான் ஆட்கள் மதிப்பார்களாம்!”

”சிகரெட்டும் பிடிப்பாயா?”

”அதுதான் ஸ்டைல் என பத்துமா சொல்கிறாள். அவளுடன் வெளியே போகும்போது நான் சிகரெட் பிடித்தே ஆகவேண்டும். பழகிக்கொண்டு வருகிறேன்” என்றான்.

”இப்ப என்ன வேலை செய்கிறாய்?”

”அதுதான் பிரச்னை ஐயா. என்னை வீட்டு வேலைகள் செய்ய வேண்டாம் என்கிறாள். இப்ப நான் சைக்கிள் கடையில்தான் வேலை பழகுகிறேன். அது மதிப்பான வேலை. ஆனால், சம்பளம் குறைவு. போதிய வரும்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என பத்து சொல்கிறாள்.”

அவர் வீட்டு பலாமரத்தில் ஒரே சமயத்தில் பழுத்துத் தொங்கிய மூன்று பழங்களை, காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. சிவப்பிரகாசம், நன்னனிடம் பலாப்பழத்தை இறக்கித் தரச் சொன்னார். அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு, ”ஐயா, பத்துவுக்குத் தெரிந்தால் என்னைக் கொன்னுபோடுவா. நான் வாறேன்” எனப் புறப்பட்டான்.

சிவப்பிரகாசம் ”நீ ஒரு பழத்தை எடுத்துக்கொள். இரண்டை எங்களுக்குத் தா” என ஆசை காட்டினார். அவன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

வழக்கமாக ஞாயிறு அன்று கொழும்புக்குப் பயணமாகும் சிவப்பிரகாசம், திங்கள் மதியம் யாழ்தேவியில் திரும்புவதாகத் திட்டமிட்டு இருந்தார். ஞாயிறு இரவு, அவருடைய இரண்டு ஆடுகளில் ஒன்றை யாரோ திருடிவிட்டார்கள். இரவு ஆடு கத்திய விவரத்தை மனைவி காலையில் சொல்லி என்ன பிரயோசனம்? மூன்று நாய்கள் இருந்தன. ஆனால், அவை ஒன்றுமே குரைக்கவில்லை. சிவப்பிரகாசம் பயணத்தைத் தள்ளிவைத்தார். ஆடு கட்டிய கயிறு அவிழ்க்கப்படாமல் வெட்டப்பட்டு இருந்ததால் ஆட்டை யாரோ களவாடியிருப்பது உறுதியானது. அந்தக் கிராமத்தில் இப்படியான திருட்டு நடப்பது இல்லை. எனவே, முழு கிராமமும் ஆட்டைத் தேடியது.

ஊர் பெரியவர், ”ஆட்டைத் திருடியவன் இந்தக் கிராமத்தில் விற்க மாட்டான்; அடுத்த கிராமத்திலும் விற்க மாட்டான். இன்று சந்தை கூடும் நாள். ஆட்டை அங்கேதான் விற்பான்” எனக் கூறினார்.

சிவப்பிரகாசம், ஊர் பெரியவரை அழைத்துக்கொண்டு சந்தைக்குச் சென்று தேடினார். அவர் சொன்னது சரிதான். அங்கே அவருடைய ஆடு ஏற்கெனவே கைமாற்றப்பட்டு கசாப்புக் கடைக்குச் செல்வதற்கு ஆயத்தமாக நின்றது. அவர் ஆட்டைக் கண்ட அதே சமயம் அதுவும் அவரைப் பார்த்தது. அதன் பழுப்புக் கண்கள் அவரை அடையாளம் கண்டுவிட்டதுபோல ஈரமாக மாறின. ஊர் பெரியவர், போலீஸுக்கு அறிவிக்கும் காரியத்தைச் செய்தார்.

வீடு திரும்பியபோது மூன்று நாய்களும் ஓடி வந்து அவர் மேல் பாய்ந்து புரண்டன. அவற்றின் வால் மட்டும் ஆடாமல் முழு உடலும் ஆனந்தத்தில் துள்ளியதைப் பார்க்க அவருக்கு ஆத்திரமாக வந்தது. திருடனை விட்டுவிட்டு அவர் மேல் பாய்வதற்கா நாய்களை வளர்த்தார்? அவர் வீட்டினுள் புகுந்து ஒருவன் ஆடு திருடியதை யோசிக்க யோசிக்க, அவர் மனம் சினம்கொண்டது. அந்த ஆடு வேறு குட்டித்தாய்ச்சியாக இருந்தது. இரண்டு ஆடுகளும் மாறி மாறி குட்டி போட்டு, அவருடைய ஆட்டுப்பால் புட்டுக்குத் தடங்கல் வராமல் பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு குட்டித்தாய்ச்சி ஆட்டை வெட்டி இறைச்சி ஆக்குவதற்கு எவ்வளவு கல்மனசு வேண்டும்!

சென்ற வருடத்து இலைகள், வளவை நிறைத்துக்கிடந்தன. நன்னன் உதவிக்கு வரப்போவது இல்லை. மனைவி கூட்டிச் சருகுகளைக் குவித்துவிட, சிவப்பிரகாசம் அள்ளி குப்பைக்கிடங்கில் கொண்டுபோய்க் கொட்டினார். இரண்டு தரம் கொட்டிவிட்டு, மூன்றாவது தரம் வந்தபோது காற்று சுழன்றடித்தது. குப்பைகள் சிதறும் முன்னர் அள்ளிவிடலாம் என ஓடினார். ஆனால், காற்று வென்றுவிட்டது. அந்த நேரம் வெளியே பெரும் ஆரவாரம் கேட்டது. படலையைத் திறந்து வீட்டுக்குள்ளே சனம் வந்தது. பின்னர் ஆடு வந்தது. பின்னால் போலீஸ்காரர் வந்தார். அவரைத் தொடர்ந்து கைகளைப் பின்புறம் கட்டிய நிலையில் நன்னனைப் பிடித்து இழுத்தபடி ஒருத்தன் வந்தான்.

”ஐயா, என்னை விட்டுவிடுங்கள். பத்துமா சொல்லித்தான் செய்தனான்” என அவன் கெஞ்சினான். அவன் ஏதோ சிங்களம் பேசியதுபோல சிவப்பிரகாசம் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார். அப்பாவியான ஒருத்தனை சில மாதத்துக்குள் இப்படி ஒருத்தி மாற்றிவிட்டாளே என நினைத்தார்.

”ஆடுதான் கிடைத்துவிட்டதே. அவன் பாவம், விட்டுவிடுங்கள்” என்று அவர் வேண்டினார்.

ஆட்டுப்பால் புட்டு3போலீஸ்காரர் மறுத்துவிட்டார். ”இது போலீஸ் கேஸ் ஆகிவிட்டது. கோர்ட்டுக்குப் போனால், நூறு ரூபாய் அபராதம் விதிப்பார்கள். அல்லது இரண்டு கிழமை சிறைத் தண்டனை கிடைக்கும். அதை அனுபவித்தால்தான் திருடனுக்குப் புத்திவரும். நாளைக்கே கோர்ட்டுக்கு ஆட்டைக் கொண்டுவாருங்கள்” எனச் சொல்லிவிட்டு, போலீஸ்காரர் நன்னனை இழுத்துப்போனார்.

அன்றில் இருந்துதான் சிவப்பிரகாசத்துக்கு நினைத்துப்பார்த்திராத சிக்கல் ஒன்று முளைத்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்தேவியைப் பிடித்து வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு கொழும்பு திரும்புகிறவர், அப்படி எல்லாம் செய்ய முடியவில்லை. ‘வழக்கு இத்தனையாம் தேதி. உடனே வரவும்’ என மனைவி தந்தி கொடுப்பார். சிவப்பிரகாசம் அவசரமாகப் புறப்பட்டு யாழ்தேவியில் வருவார். கோர்ட்டுக்கு மாட்டுவண்டியில் ஆட்டை ஏற்றிக்கொண்டு போவார். வழக்கை தள்ளிவைப்பார்கள். அவர் கொழும்புக்குத் திரும்புவார். மறுபடியும் தந்தி வரும். கோர்ட்டுக்கு வருவார். வழக்கை ஒத்திவைப்பார்கள். பல தடவை இப்படி அலையவேண்டி நேர்ந்தது.

ஒருமுறை கோர்ட்டுக்கு ஆட்டையும் அதனுடைய இரண்டு குட்டிகளையும் வண்டியில் ஏற்றிப்போனார். வழக்கறிஞர், குட்டிகளையும் கொண்டுவரச் சொல்லி கட்டளையிட்டதால் அப்படிச் செய்தார். கோர்ட்டிலே பத்துமாவின் கையில் ஒரு குழந்தை இருந்தது. எட்டாம் வகுப்பு நன்னனும் பத்தாம் வகுப்பு பத்துமாவும் ஒரு குழந்தையை உண்டாக்கிவிட்டார்கள். அதற்கு, பட்டப்படிப்பு ஒன்றும் தேவை இல்லை. வழக்கை மறுபடியும் தள்ளிவைத்தது, சிவப்பிரகாசத்துக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. பத்துமா மரத்திலே சாய்ந்தபடி குழந்தையுடன் நின்றாள். கோர்ட்டுக்கு அவசரமாகப் போனவர்கள் அவளைத் தாண்டும்போது வேகத்தைப் பாதியாகக் குறைத்தார்கள். அவள் முகம் சந்திர வெளிச்சத்தில் பார்ப்பதுபோல வெளிறிப்போய் காணப்பட்டது. அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

நன்னனிடம் ”சாப்பிட்டாயா?’ எனக் கேட்டார்.

அவன் ”இல்லை” என்றான். பாலைவனத்து ஒட்டகம்போல அவள் தலையை அலட்சியமாக மறுபக்கம் திருப்பினாள்.

சாப்பாட்டுக் கடையில் நன்னன் கைக்குட்டையை எடுத்து வாங்கு மேலே விரிக்க அவள் உட்கார்ந்தாள். இப்போதுதான் அந்தப் பெண்ணை சிவப்பிரகாசம் நேருக்கு நேர் பார்த்தார். அவள் உடம்பு அசையாமல் இருக்க அவள் தலை மட்டும் ஒரு நடனக்காரியுடையது போல இரண்டு பக்கங்களும் அசைந்தது. அவள் ஓயாமல் பேசினாள். வாய்க்குள் உணவு இருக்கும்போதும், அதை விழுங்கிய பின்னரும், அடுத்த வாய் உணவு வாய்க்குள் போகும் முன்னரும் அவள் வாயில் இருந்து வார்த்தைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி நிறுத்தாமல் வெளிவந்தன. எல்லாமே கணவனுக்கான கட்டளைகள்தான். அவன் உணவை அள்ளி வாயில் திணித்தபடியே தலையை மட்டும் ஆட்டினான்.

”பஸ்ஸுக்கு காசு இருக்கிறதா?” எனக் கேட்டார்.

அவன் ”இல்லை” என்றான். அதையும் தந்து அவர்களை அனுப்பிவைத்தார். அவர் படும் அவதியிலும், அந்த இளம் தம்பதி அனுபவிக்கும் துன்பத்தைப் பார்க்க அவரால் முடியவில்லை.

அன்று கோர்ட்டு கலையும் வரை காத்திருந்தார். அரசு வழக்கறிஞர் காரை நோக்கிச் சென்றபோது குறுக்கே போய் விழுந்தார்.

”நான் ஓர் அரசாங்க உத்தியோகஸ்தன். ஆட்டைத் திருட்டுக் கொடுத்ததால் கடந்த 18 மாதங்களாக கொழும்பில் இருந்து வழக்குக்கு வருகிறேன். ஆட்டையும் குட்டிகளையும் வழக்கு நாட்களில் கொண்டுவர வேண்டும் என்பது உத்தரவு. ஆட்டின் விலை 60 ரூபாய். ஆனால், நான் செலவழித்தது 600 ரூபாய்க்கும் மேலே. ஆட்டைத் திருடியவன்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், திருட்டுக் கொடுத்தவன் திருடனிலும் பார்க்கக்கூடிய தண்டனை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்? அடுத்த தடவையாவது வழக்கை முடித்துவையுங்கள் ஐயா”.

வழக்கறிஞர் ஒன்றுமே பேசவில்லை. அவரை விலத்திக்கொண்டுபோய் காரிலே ஏறினார்.

வழக்குத் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே சிவப்பிரகாசம் கிளம்பி யாழ்ப்பாணம் வந்துவிட்டார். வீட்டு வளவு வேலைகளை முடித்துவிட்டு இரவு ஓய்வெடுத்தபோது மனைவி சொன்னார், ”இப்ப எல்லாம் மாடு முன்னைப்போல கறப்பது இல்லை. பால் குறைந்துவிட்டது.”

ஆட்டுப்பால் புட்டு4சிவப்பிரகாசம் ஒரே வெறுப்பில் இருந்தார். ”இந்த வழக்கு என்னை அலைக்கழித்துவிட்டது. எவ்வளவு நாட்கள் வீணாக ஓடின. எவ்வளவு காசு நட்டம். இல்லாவிட்டால், இன்னொரு மாடு வாங்கிவிட்டிருப்பேனே!” என்றார்.

அடுத்த நாள் காலை. மாஜிஸ்ட்ரேட் வழக்குக்கு ஒரு நிமிடம் மட்டுமே எடுத்து போதிய சாட்சியங்கள் இல்லாதபடியால் வழக்கை தள்ளுபடி செய்வதாகச் சொன்னார். இதை 20 மாதங்களுக்கு முன்னரே செய்திருக்கலாம். இத்தனை அலைச்சலும் தொல்லையும் பணமும் மிச்சமாகி இருக்கும்.

தீர்ப்பான பின்னர் நன்னனுக்குள் பெரிய மாற்றம் தெரிந்தது. சிவப்பிரகாசம் நம்ப முடியாமல் தலையைப் பின்னுக்கு இழுத்து மறுபடியும் பார்த்தார். அவன் கண்களில் வெளிச்சம் நடனம் ஆடியது. அரும்புமீசை. த்ரீரோஸஸ் சிகரெட் சட்டை பொக்கற்றுக்குள் தெரிந்தது. கையில் தினகரன் பேப்பரைச் சுருட்டிவைத்தபடி சிரித்துக்கொண்டே கோர்ட்டுக்கு வெளியே வந்தான். பத்துமா எங்கிருந்தோ வந்து அவன் கையை டெர்லின் சட்டை முடிந்த இடத்தில் பிடித்து இழுத்தாள். சிவப்பிரகாசத்துக்கு அவர்களைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. விடுதலை உணர்வு எல்லோருக்கும் பொதுதானே!

பத்துமா, ஒரு குழந்தையைத் தூக்க ஓடுவதுபோல குனிந்தபடி அவரை நோக்கி ஓடிவந்தாள். ‘காலிலே விழுந்து நன்றி சொல்லப்போகிறாள்’ என அவர் நினைத்தார். அவள் குனிந்து மண்ணை வாரி எடுத்து வீசி ”நாசமாப் போக” எனத் திட்டினாள்.

”உன் ஆடு நாசமாப் போக… உன் மாடு நாசமாப் போக… உன் குடி விளங்காது. இல்லாதவன் என்ன செய்வான்? இருக்கிறவன் இடத்துலதானே எடுக்கணும். இதையும் பெரிய வழக்கு என, கொழும்பிலே இருந்து வந்து நடத்தினாயே. ஆலமரத்து இளங்கொடியை எப்பவோ அறுத்துக் கீழே வீசியாச்சுது. அதுபோல நீயும் அறுந்துபோவாய். உன் அழிவுகாலம் இன்றுதான் ஆரம்பம். நீ புழுத்துச் சாவாய்” என வைதுவிட்டு நடந்தாள்.

திடீரென ஒரு வசவு விடுபட்டதை நினைத்து திரும்பி வந்தவள். அவர் புழுதியிலே குளித்து நின்றதைப் பார்த்து மனதை மாற்றி ஒன்றுமே பேசாமல் சென்றாள்.

சிவப்பிரகாசம் திகைத்துப்போய் நின்றார். அவர் மேசையில் விரல்களால் சுழற்றும் மூன்று டெலிபோன்கள் இருக்கும். நாலு பேர் வாசலில் எந்த நேரமும் அவர் கையொப்பத்துக்காகக் காத்திருப்பார்கள். மந்திரி அவருக்குக் கை கொடுத்திருக்கிறார். 20 வயதைத் தொடாத இந்தப் பெண்ணின் வாயில் இருந்து வந்த வசவுகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்தார். வண்டிக்காரன் ஆட்டையும் குட்டிகளையும் வண்டியில் ஏற்றித் தயாராக இருந்தான். அவன் நடந்ததைப் பார்த்ததாகக் காட்டவில்லை. அடுத்த நாள் ஊரிலே கதை பரவும். இரண்டு நாளில் கொழும்புக்கும் போய்விடும். தலைப்புழுதியை கைவிரல்களினால் தட்டியபடி ஆட்டைப் பார்த்தார். அது தன் பழுப்புக் கண்களால் அவரையே உற்று நோக்கியது. முழுக் கதையையும் அறிந்த அந்த ஜீவன் ஒன்றுதான் அவருடைய ஒரே சாட்சி. வண்டியில் ஏறி உட்கார்ந்தபோது, அவர் மனைவி ஆட்டுப்பால் புட்டுடன் காத்திருப்பதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது!

– ஆகஸ்ட் 2015

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

0 thoughts on “ஆட்டுப்பால் புட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *