மாடிப் பால்கனியிலிருந்து ஹரிணியின் பெற்றோர் எதிர் வீட்டு ரோமியோ ‘ஹரனை’க் கண்காணித்தார்கள்.
மகள் ஹரிணி ஆபீஸ் கிளம்புகிற போது அவளைப் பார்த்து ஹரன் செய்யும் சேட்டைகளை செல்போனில் வீடியோ எடுத்தார் தகப்பன் குரு.
“ஹரனோட தகப்பனுக்கு இந்த வீடியோவை அனுப்பி. இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்.!.” என்று கருவினார்.
அப்போது ‘க்ளிங்..’ என வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்தது குருவிற்கு.
‘அரசு உயர் பதவி வகிக்கும் என் மகனை வளைத்து போடப் பார்க்கும் உங்கள் மகளைக் கண்டித்து வளர்க்கவும்.!’ என்ற ஹரனின் அப்பா அனுப்பிய மெசேஜ் உடன் இணைக்கப்பட்ட வீடியோவில், கிறங்கிய கண்களுடன் எதிர் வீட்டு ஹரனுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கும் ஹரிணியைக் கண்டு ஆடிப்போனதோடு திருடனுக்குத் தேள் கொட்டியது போல அடங்கியும் போயினர் பெற்றோர்.