”இத்தனை கரிச்சுக் கொட்டறியே உன் மாமியாரை, அப்படி என்ன பண்ணினாங்க?”
கேட்ட தோழியிடம் பொருமித் தள்ளினாள் கமலி.
“பின்னே என்ன, அவருக்கு நாலு நாள் புவனேஷ்வரில் ட்ரெயினிங் வந்தது. எனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டிருந்தார். கடைசி நேரத்தில் எனக்கு அந்த ஊர் கோயில் பார்க்கணும்னு ஆசையா இருக்குடான்னு சொல்லி என் டிக்கெட்டை கேன்சல் செய்துட்டு அவரோட கிளம்பிட்டாங்க. அதான் எரிச்சல்ல இருக்கேன். நாளைக்கே எங்கம்மாவைப் போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.”
அதே நேரம் ரயிலில்…
“என்னம்மா, அண்ணாவோட ஒரிசா பயணமா ?” என்று செல்லில் கேட்ட மகளிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலியின் அத்தை.
“அதுவா ? கமலியோட அம்மாவுக்கு கொஞ்ச நாளா உடம்புக்கு முடியாம இருந்தது. போய் நாலு நாள் பார்த்துட்டு வரலாம்னு அவ கேட்டால் உங்கண்ணன் விட்டால்தானே ? அதான் வலுக்கட்டாயமா நான் கோயிலுக்கு வரணும்னு சொல்லி டிக்கெட்டை மாத்திடச் சொல்லி அவ ஊருக்குப் போயிட்டு வர்றதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொடுத்துட்டேன்.”
– கே.பி.ஜனார்த்தனன்