கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 14,339 
 
 

பிறந்த மண்ணில் இரண்டு நாள் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் வண்டி கிளம்பிவிடும். அதற்குள் என் நினைவுகள் பின்னோக்கி வேகமெடுத்தன.

முப்பத்தெட்டு வருடங்கள் வேகமாக உருண்டோடிவிட்டன. மலைப்பாக இருந்தது. பணியில் இருந்தவரை எதற்குமே எப்போதுமே கலங்காத மனம், இப்போது சிறு காற்றுக்குக் கூட தலையசைக்கும் நாணல் போல் ஊசலாடுகிறது. ஒருகணம்.. ஒருகணம்தான் மீண்டும் மனதை இழுத்துப் பிடித்து என் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள முயல்வேன். இருந்தாலும் கைக்குழந்தை கையையும் காலையும் உதைத்துக் கொண்டு திமிறுவது போல்தான் அது ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

ஆசிர்வாதம்ஏழெட்டு கிலோமீட்டர் தூரம் கடந்திருக்கும். தீபாவளி, பொங்கல் மட்டுமின்றி அடிக்கடி முன்பெல்லாம் சொந்த மண்ணிற்குப் போய் வருவது போய், இப்போதெல்லாம் வரவரக் குறைந்தது ஆண்டுக்கொரு முறை இரண்டாண்டுக்கொரு முறை என்று தடம் புரண்டு போனது. தந்தையோடு கல்வி போகும். தாயோடு அறுசுவை போகும். அவர்கள் இருந்தவரை அவர்களுக்காக வேண்டியே கட்டாயம் போக வேண்டிய நிலை இருந்தது. இப்போது அது இல்லை. ஏனென்றால் அவர்களே இல்லை.

இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு போனால் திரும்பிவரக் கட்டாயம் ஒரு வாரமாவது ஓடிவிடும். அவ்வளவு சீக்கிரத்தில் அனுப்பிவிடமாட்டார்கள். அவர்களின் அன்பை உதறித் தள்ளிவிட்டு வந்துவிட முடியாது. மனைவியும் குழந்தைகளும் அங்குள்ள சூழ்நிலையோடு ஒன்றிவிடுவார்கள். சீக்கிரத்தில் கிளம்பிவர மனம் வராது. வீடே களைகட்டி நிற்கும். காலையில் தினமும் இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், இடியாப்பம் என்பதெல்லாம் நம்முடைய மெனு. கேழ்வரகு, கம்பங்கூழ், பழையது இவைதான் கிராமத்து மண்ணிற்குப் பிடித்தவை.

நாங்கள் போய்விட்டால் சாதாரண நாள்கூட அவர்களுக்குப் பண்டிகை நாள்தான். விதவிதமான பலகாரங்கள் செய்வார்கள். “”இதைத்தான் நான் அங்கு தினமும் சாப்பிடுகிறேனே.. இதற்கேன் நீ கிடந்து கஷ்டப்படுகிறாய் .. உன் கையால் கொஞ்சம் அந்தக் கூழைக் கரைத்துக் கொடு. அது போதும் எனக்கு..” என்று அம்மாவிடம் சொன்னால் கேட்கமாட்டாள்.

“இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தாய்?’ என்று சிரிப்பாள். இல்லேம்மா உன் கையால் பழைய சாதத்தை மோர் வீட்டுப் பிசைந்துக் கொடுத்தால்கூட அது அமுதமாகிவிடும். அதுவே போதும் எனக்கு என்றால்… “உனக்குப் போதும் எனக்குப் போதாதே… என் மனம் கேட்காதில்லையா’ என்பாள்.

விடுமுறைக் காலங்களில் என் குடும்பமும் அக்கா – மாமா குடும்பமும் சேர்ந்து போய்விடுவோம். ஒரே கொண்டாட்டம்தான். குதூகலம்தான். கும்மாளம்தான். இரவில் படுக்க வெகு நேரமாகிவிடும். இரண்டாவது ஆட்டத்திற்கு கிளம்பிவிடுவோம். சினிமாவைத்தான் சொல்கிறேன். இரவில் சாப்பாடு எப்படித் தெரியுமா?

ஒரு பெரிய வாயகலப் பாத்திரத்தில் சோறைக் கொட்டி சாம்பாரை ஊற்றி அம்மாவோ, அக்காவோ பிசைந்துப் பிசைந்து உருண்டை உருட்டி உள்ளங்கையில் வைப்பார்கள். உள்ளங்கை சோற்றின் நடுவே கூட்டோ, பொரியலோ, அவியலோ இருக்கும். நாங்கள் எல்லாரும் வட்டம் கட்டி அமர்ந்துவிடுவோம். வரிசையாக உருண்டை வரும். சந்தோஷம் உருண்டு உருண்டு விளையாடும். சாம்பார் சாதம், ரசம் சாதம், மோர் சாதம், வழக்கமாகச் சாப்பிடுவதைவிட குழந்தைகள் அப்போது கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். எத்தனை ஆனந்தம்..! எத்தனை சந்தோஷம்!! அனுபவித்தால் மட்டுமே அதனை உணரமுடியும். இதைத்தான் தேவாமிர்தம் என்று சொல்வார்களோ, என்னவோ அப்படியிருக்கும்.

தந்தையும் தாயும் மாறிமாறி நினைவில் ஓடிக்கொண்டிருந்தார்கள். “அம்மா லீவு இல்லேம்மா… நான் உடனே கிளம்பியாகணும்..’ என்றால் “ஒருவாரம்தானே ஆச்சு… இன்னும் ரெண்டு நாள் இருக்கலாமே…’ என்பாள். “”ஐயைய்யோ… சீட்டைக் கிழிச்சி வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. அப்புறம் நான் இங்கே வந்து நிரந்தரமா இருந்துட வேண்டியதுதான்… பரவாயில்லையா?” என்றால் பதறிவிடுவாள். “”அடுத்த முறையாச்சும் ஒரு பத்து நாள் தங்கிட்டுப் போற மாதிரி வாப்பா…” என்பாள். குரலில் சுரத்திருக்காது. கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும். எத்தனை நாள் இருந்தாலும் அவளுக்கு அலுக்காது. எங்களுக்காக இரவு பகலாக உழைப்பதிலும் அவளுக்கு அலுப்பிருக்காது.

“”போகட்டும். கட்டாயப்படுத்தாதே… பிழைப்பைப் பார்க்கட்டும்” என்று தந்தை சொல்வார். அவர் அப்படி அதை மனமாரச் சொல்லவில்லை என்பதை அவர் வார்த்தைகளே காட்டிக் கொடுத்துவிடும்.

“”இதைவச்சுக்கோப்பா…”

“”என்னப்பா இது… நான் என்ன சின்ன பையனா? சம்பாதிக்கிறேம்பா….”

“”தெரியும்பா.. வாங்கிக்கோ.. இல்லேன்னா என் மனசு கேக்காது…” என்பவர், ஒரு இருபது ரூபாயை எடுத்து என் சட்டைப் பையில் திணிப்பார். இருபது ரூபாய் என்பது அப்போது ஒரு பெரிய தொகை.

“”கண்ணு.. இந்தா இதை வாங்கிக்கோ…”

“”என்னம்மா..”

முந்தானையின் நுனியை அவிழ்த்து அம்மாவும் ஒரு பத்து ரூபாயை எடுத்துக் கொடுப்பாள். வாங்காவிட்டால் அழுதுவிடுவாள்.

அவர்களுடைய பாசத்தில் மனம் திக்குமுக்காடிவிடும். எப்படியோ அவர்களிடமிருந்து விடைபெற்று ஒருவழியாக ஊர் போய்ச் சேர்ந்தாலும் ஒரு பத்து நாட்களுக்காகவாவது அந்த நினைவுகள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு. ஒரு தவிப்பு மனதை வாட்டி எடுக்கும். வந்து சேர்ந்தவுடன் உடனே கடிதம் எழுதிவிடவேண்டும். நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டோம் என்று. இல்லாவிட்டால் அவ்வளவுதான். கோடி கோடியாய்க் கொடுத்தாலும் அந்த அன்புக்கு ஈடு இணை இருக்குமா?

பேருந்து ஓடிக் கொண்டிருந்தது. வழியெல்லாம் கரும்புத் தோட்டம். செழித்து உயர்ந்து வளர்ந்திருந்தது.

சட்டையைப் பையைத் தடவிப் பார்த்தேன். பணம் பத்திரமாக இருக்கிறதா என்று… என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் பிரகாஷுக்கும் துணி எடுத்துத் தரலாமென்று ஒரு பத்தாயிரம் ரூபாய் வைத்திருந்தேன். என்னை அன்பாகப் பார்த்துக் கொண்டவர்கள் அவர்கள். அதற்கான நன்றிக் கடன் இது. ஊரில் திருமணம். அதைப் பார்த்துவிட்டு அப்படியே அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வரலாம் என்றிருந்தேன். பாதி தூரத்திற்கும் மேல் வந்தாகிவிட்டது.

ஏறக்குறைய ஊரை நெருங்கிவிட்டது பேருந்து. ஊரே மாறிப் போயிருந்தது. பஸ் ஸ்டான்ட் வந்துவிட்டது. வண்டியை விட்டு இறங்கினேன். எதிரில் இருந்த கடையில் இனிப்பு, காரம், பூ வாங்கிக் கொண்டு நடந்தேன். ஐந்து நிமிட நடை. பக்கத்தில்தான் வீடு. தெருவை அடைந்துவிட்டேன். வீட்டைக் காணவில்லை. பழைய வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய பங்களா புதிதாக நிமிர்ந்து நின்றிருந்தது.

“”என்னடா வீட்டைத் தேடறியா? இதுதான்.. இதுதான்.. உள்ளே வா…!” என்று அண்ணன் என்னை வரவேற்றார். நான் உள்ளே நுழைந்தேன். வீட்டைச் சுற்றும்முற்றும் பார்த்தேன். நவீனமயமாக வீடு கட்டப்பட்டிருந்தது.

“”என்னண்ணே வீடு புதுசா கட்டியிருக்கீங்க.. எனக்குச் சொல்லவே இல்லை…”

“”அதெல்லாம் ஒண்ணுமில்லடா… பணம் கொஞ்சம் வந்தது… பழைச இடிச்சுத் தள்ளிப்புட்டு புதுசாக் கட்டிட்டேன்…”

“”எப்படியும் கட்டிமுடிக்க ஒரு பத்து பதினைஞ்சு லட்சம் ஆகியிருக்கும் போலத் தெரியுதே..”

“”சரியாச் சொன்னே… பதினாறுக்கு மேல தாண்டிப்புடுத்து….”

“”அப்படியா…” என்று நான் அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டேன்.

அந்தளவுக்குப் பணம் எப்படி வந்தது? என்று எனக்குள் பல கேள்விகள் இருந்தாலும் சட்டென்று அதை அவரிடம் கேட்டுவிடவில்லை. அவராகச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன். அவரே சொன்னார்.

“”ஆமாடா… இந்த டிவி.யில ஏதோ நடத்துறாங்களே நீ கூடப் பார்த்திருப்பியே… அதிலே நம்ம பிரகாஷ் கலந்துக்கிட்டான்.. அதில் ஒரு இருபத்தைஞ்சி லட்சத்த சுளையா அடிச்சிட்டு வந்தான்… அதை வச்சித்தான்…”

“”அப்பிடியாண்ணே… ரொம்ப சந்தோஷம்… எங்கே அவனைக் காணோம்?”

“”இங்கிட்டுதான் இருந்தான்… பக்கத்திலே எங்காச்சும் போயிருப்பான்… வந்துடுவான்…”

அண்ணி காபி கொண்டுவந்து கொடுத்தார்கள். குடித்தபடியே சுற்றும்முற்றும் பார்வையை ஓட்டினேன். வீட்டைப் பார்த்தபோது, கிரஹப்பிரவேசம் நடந்து இரண்டொரு நாள்கள்தான் ஆகியிருக்கும் போலத் தெரிந்தது. அண்ணனைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார்.

“”என்ன.. சடையாண்டி.. கிரஹப்பிரவேசமெல்லாம் அமர்க்களப்படுத்திட்டியாமே… இந்தா இதில ஒரு ஐயாயிரம் ரூபாய் இருக்கு. வச்சுக்கோ.. என்னோட அன்பளிப்பா இருக்கட்டும்…”

அண்ணனின் முகம் திடீரென்று மாறியது.

“”சே..சே.. பணமெல்லாம் எதுக்கு? இவ்வளவு தூரம் நீங்க வந்து இப்படி வாழ்த்தினதே போதும். அதை பத்திரமா எடுத்து வையுங்க..”

வந்தவர் போனதும் அண்ணியிடம் கூறினார்.

“”அஞ்சாயிரத்தக் கொண்டாந்து கொடுத்திட்டு அப்புறம் ஒரு அம்பதினாயிரம் குடு ஒரு லட்சம் கொடுன்னு வந்துடுவாங்க… இவங்ககிட்டேல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்….”

அண்ணி சொன்னாள்.

“”ஆமாங்க… மொதல்ல ஒரு பெரிய பூசணிக்காயாப் பார்த்து வாங்கிட்டு வாங்க.. சுத்திப் போடணும். என்னம்மா மொறைச்சி மொறச்சிப் பார்க்குறாங்க…” என்றபடி முகத்தை ஒரு திருப்புத் திருப்பினாள்.

சுருக்கென்று நெருஞ்சி முள் ஒன்று என் நெஞ்சில் தைத்தது போல் துடித்துப் போனேன். பிரகாஷ் வந்தான்.

“”வாடா பிரகாஷ்! எப்படியிருக்கே… அண்ணா சொன்னார்… டிவி கேம் ஷோவில் இருபத்தைஞ்சி லட்சம் நீ வின் பண்ணினேன்னு.. வாழ்த்துகள்.. வாழ்த்துகள்….. ”

“”இப்பச் சொல்றத அப்பவே ஃபோன் பண்ணியாவது சொல்லியிருக்கலாமுல்லே..”

“”என்னடா சொல்றே… இப்பத்தான் எனக்குத் தெரிஞ்சது…”

“”ஏன் டிவியெல்லாம் பார்க்கமாட்டீங்களோ..?”

“”இல்லடா.. அதுவந்து நடுவில டி.வி. கொஞ்சம் ரிப்பேர். அந்த நேரத்தில நீ கலந்துக்கிட்டு இருந்திருப்பே. நாங்க பார்க்க முடியாமப் போயிருக்கலாம். இன்னொன்னு ஆளுக்கு ஒரு சேனல் மாத்தி மாத்தி பார்க்கறாங்க… இதுல நான் என்ன பண்ணமுடியும்? எப்டியோ நீ லட்சாதிபதியா ஆனதில எனக்கு ரொம்ப சந்தோஷம்டா..”

பேசிக்கொண்டிருக்கும்போதே வெளியே இன்னொரு குரல் கேட்டது. பழக்கப்பட்ட குரல். அதுவும் நண்பனின் குரல். வெளியில் வந்தேன். என்னைப் பார்த்தவுடன் அவன் ஓடிவந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“”எப்படா வந்தே… எப்படி இருக்க.. வீட்டில எல்லாரும் செüக்கியமா… என்றவன், “”என்னை உனக்கு ஞாபகத்தில் இருக்கா?” என்றான்.

“”என்னடா இப்படி கேட்டுட்டே… இப்பக் கூட பஸ்ஸில வரச்சே… நான் உன்னைப் பத்திதான் நெனைச்சேன்.. உன்னைப் பார்த்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம்டா….”

“”என்னடா வீட்டில மனைவி குழந்தைங்க நல்லாருக்காங்களா?”

“”இ…ருக்காங்கடா…”

“”என்ன உன் குரல் ஒருமாதிரியா இருக்கு…?”

“”என்னத்த சொல்றது… சோதனைக்கு மேல சோதனை… அவளுக்கு உடம்பு முடியல.. பணம் தண்ணியா செலவழியுது… கொஞ்சம் கஷ்டத்திலதான் வண்டி ஓடுது… இதில என் பேரனை வேறே அடுத்த மாசம் ஸ்கூல்ல சேர்த்தாகணும்.. அதை விடுடா… பலகாலம் கழிச்சி இப்பத்தான் பாக்குறோம்… இப்பப்போய் என் கஷ்டத்தை சொல்லிக்கிட்டு.. மன்னிச்சுக்கோடா… ஆமா நீ ரிட்டயர்ட் ஆயிட்டதா கேள்விப்பட்டேன். உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலியே…”

“”ஆமாம்… இங்க பக்கத்துல ஒரு கல்யாணம். அதப் பார்த்துவிட்டு எங்க அண்ணன், அண்ணி, பையன் மூணு பேருக்கும் துணி எடுத்துக்கொடுத்திட்டு அப்படியே அவங்க ரெண்டு பேரிடமும் ஆசீர்வாதம் வாங்கலாம்னு வந்திருக்கேன்… என்ன அப்படிப்பார்க்குறே…?”

“”நீ என்னமோ அவங்களை இன்னும் மறக்காம நினைச்சிக்கிட்டிருக்க, ஆனா அவங்க முன்னேமாதிரி இல்லடா.. முழுசா மாறிட்டாங்க.. லட்சாதிபதியா ஆனதிலேர்ந்து அவங்க யாரையும் மதிக்கிறது கிடையாது.”

கொஞ்ச நேரத்துக்கு முன்பு ஒருவர் வந்ததும் ஒரு ஐயாயிரம் கொடுக்க வந்ததும் மீண்டும் என் நினைவுக்கு வந்தது.

“”சரிடா… நீ வீட்டுக்குப் போ.. நான் என் அண்ணன் அண்ணிக்கிட்டச் சொல்லிட்டு உன் வீட்டுக்கு வந்துட்டு அப்படியே நேரா நான் கல்யாணத்துக்குக் கிளம்பணும்…”

வீட்டை அடைந்து உள்ளே நுழையும்போது அண்ணனும் அண்ணியும் பிரகாஷிடம் சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

“”டேய் பிரகாஷ்.. அந்த ஸ்வீட்டை எடுத்து பிச்சைக்காரன் எவனாவது வந்தா தூக்கிப்போடு.. இங்கே யாரு ஸ்வீட் வேணும்னு அழறாங்க… எதையாவது ஒண்ணைப் பிடிச்சிக்கிட்டு வந்துடறாங்க…”

இரண்டாவது முறையாக மறுபடியும் ஒரு நெருஞ்சி முள் நெஞ்சைக் குத்திக் கிழித்தது. அண்ணன் குடும்பத்துக்குத் துணியெடுத்துக் கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கலாம் என்பதற்காக சட்டைப் பையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் திடீரென்று கனத்தது. ஒன்றும் பேசாமல், அங்கிருந்து கிளம்பி நண்பன் வீட்டுக்கு வந்தேன்.

“”நண்பன் என்னை நன்றாக புரிந்து வைத்திருந்தான். விடுடா… விட்டுத் தள்ளுடா…” என்று எனக்கு ஆறுதல் கூறினான்.

“”சரிடா… நான் கிளம்பறேன். இந்தா இதை வச்சுக்கோ…”

“”என்னடா இது?”

“”உன் கஷ்டத்துக்கு மொத்தமா என்னால் உதவ முடியலேன்னாலும் இது கொஞ்சம் உனக்கு உதவியா இருக்கும்லே.. ஒரு பத்தாயிரம்தான்….”

“”டேய்.. டேய்… வேண்டாம்டா…”

“”இதுதானே வேண்டாம்கிறது… வச்சிக்கோ நான் வர்றேன்…”

அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினேன். அந்தப் பத்தாயிரம் ரூபாய் சரியான இடத்திற்குத்தான் போனது என்ற திருப்தி எனக்கு. என் நண்பனது பேரனின் படிப்புச் செலவுக்காக அது உதவப் போகிறது.

ஊரின் எல்லை வந்ததும் திரும்பிப் பார்த்தேன். இந்த ஊருக்கு வருவதற்கு இனி எனக்கு என்ன இருக்கிறது? என்று தோன்றியது.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *