ஆகாயத்தில் வாழ நினைப்பவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 8,711 
 

அக்காவின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். நலம் விசாரிப்புக்கள் முடிந்தவுடன், அக்கா மாமாவைப்பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டாள். இவரு சொன்னா கேட்க மாட்டேங்கறாரு,பக்கத்துல ஒரு “பிளாட்” விலைக்கு வருது வாங்கிப்போடுங்க, அப்படீன்னா மாட்டேங்கறாரு! அக்கா என்னிடம் சொன்னதும் நான் அவளுக்கு ஆதரவாய் பேசுவேன் என எதிர்பார்த்திருப்பாள் போலிருக்கிறது. ஆனால் நான் எதுவும் பேசாமல் அவள் வாயை பார்த்துக்கொண்டிருந்தேன்.ஏண்டா ஏதாவது சொல்லேன்? என்று கேட்பது போல இருந்தது அவள் கண்கள். நான் இதற்கு என்ன சொல்ல முடியும் என எதிர்பார்க்கிறாள்? உனக்குன்னு கொடுப்பினை இருந்தால் கண்டிப்பா அதை வாங்கிடுவக்கா, மேலோட்டமாய் சொல்லி அவளை திருப்தி படுத்த முயற்சித்தேன்.

ஆமா போ, கல்யாணமாயி இருபத்தி மூணு வருசமாச்சு. இன்னும் சொந்த வீட்டுக்கு வழிய காணோம். இன்னும் ஐந்து வருசம் தான் இருக்கு, அதுக்குள்ள ஒரு இடத்தை வாங்கி உட்லாரலாமுன்னா கேட்டாத்தானே. மாமாவுக்கு என்ன கஷ்டமோ? மெல்ல சொல்லவும் என்ன கஷ்டம்? குடும்பம்னு இருந்தா எல்லாம் இருக்கும். இவர் ஆபிசுல லோன் போட்டு ஒரு ஐந்து லட்சம் ரெடி பண்ணா கூட போதும், அப்படி இப்படின்னு புரட்டி ஒரு ஏழு எட்டு லட்சத்தை புரட்டிடலாம், சொன்னவளின் கண்களில் இப்பொழுதே இடம் வாங்கியதை போல கனவு.இந்த பேச்சிலிருந்து இப்பொழுது என்னால் விலக முடியாத சூழ்நிலையில் நானே சிக்கிக்கொண்டேன்.மாமா என்ன சொல்றாரு?

நீ அவர்கிட்ட பேசிப்பாரேன்.பசங்க இரண்டு பேரு இருக்காங்கன்னுதான் பேரு ஒருத்தனாவது அவங்கப்பாகிட்ட போய் சொல்லலாம்ல?அக்கா சொன்ன பசங்க பொறியியல் கல்லூரியில் இறுதியும்,மூன்றாவது வருடமும் படித்துக்கொண்டிருக்கும் பட்டதாரி மாணவர்கள்.அவர்கள் எப்படி சொல்வார்கள் மாமாவிடம்?எனக்கு புரியவில்லை!அக்காவிடம் சொல்லவும் பயம். சா¢ அக்கா நான் வேணா மாமாகிட்ட பேசிப்பார்க்கிறேன்.வரட்டா விடை பெற்றேன்.

யதேச்சையாய் அன்று மாமாவை கடை வீதியில் பார்க்க நேர்ந்தது. கொஞ்சம் மெலிந்திருந்தார். கண்களில் வயதின் தளர்ச்சி தெரிந்தது. எனக்கு தெரிந்து சிறு வயதில் அக்கா கல்யாணத்தன்று மாமாவை பார்த்த பொழுது நல்ல வாட்ட சாட்டமாய் எல்லோரிடமும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ஞாபகம். இன்று அந்த உருவத்தையே காணவில்லை.மாமா செளக்கியமா? டல்லா இருக்கறமாதிரி இருக்கு? மனசு தாங்காமல் கேட்டுவிட்டேன்.இருக்கேன், ஒற்றையாய் பதில் சொன்னவர், எனது அடுத்த கேள்விக்கு கொஞ்சம் யோசித்தவர், எப்படி சொல்றே டல்லா இருக்கேன்னு?என்னையே எதிர் வினாவால் மடக்கினார். இல்லை முகத்துல களைச்சுப்போன மாதிரி தெரியுது, அதான் கேட்டேன். சமாளித்தேன்.

சமாளித்து விட்டேன் என நினைக்கும் போது மாமா அந்த பேச்சை வளர்த்த அவர் கையாண்ட தந்திரம் என்பதை அடுத்த வார்த்தையில் புரிந்துகோண்டேன். வா காப்பி சாப்பிட்டுட்டே பேசலாம் என்று ஓட்டலை நோக்கி போக ஆரம்பித்து விட்டார்.

எனக்கு இந்த கடைவீதியில் என்ன வேலை என யோசித்து பார்த்து அரை மணி நேரம் மாமாவிடம் பேசுவதால் என் வேலைக்கு பாதிப்பு வராது என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டு அவர் பின்னால் செல்ல ஆரம்பித்தேன்.

சர்வா¢டம் காப்பி சொன்னவர் சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, உங்க அக்கா சொல்லியிருப்பாளே என்று ஆரம்பித்தார். நான் எதுவும் புரியாதது போல என்ன சொன்னாங்க? என்று கேட்டேன். அதுதான் அந்த “பிளாட்” விசயம், உங்கிட்ட பேசினேன், என் தம்பி கூட அந்த சைட் ரொம்ப நல்ல சைட், வாங்கிப்போட்டா ரொம்பா நல்லா இருக்கும் அப்படீன்னு சொன்னியாம்.

அக்கா என்னை வைத்து இந்த விளையாட்டை விளையாட விரும்புகிறாள். புரிந்து கொண்டவன், மாமா நான் அப்படி சொல்லலை, நீங்க ரிட்டையர்டு ஆகிட்டா இருக்கறதுக்கு ஒரு இடம் வேணும், அப்படீங்கற மாதிரி சொன்னேன். என்று அக்காவையும் விட்டுக்கொடுக்காமல், அதே நேரத்தில் என்னை வைத்து இவள் காரியத்தை நகர்த்துவதை விரும்பாமல் வந்த கோபத்தையும் காட்ட முடியாமல் பதில் சொன்னேன்.

சர்வர் கொண்டு வந்த காப்பியை எடுத்தவர் நீயும் காபி எடுத்துக்க, ஆறிடும், சொன்னவர் ஒரு பெருமூச்சு விட்டு ராஜா உங்க அக்காவுக்கு சொன்னா புரியாது, நான் வாங்கற சம்பளத்துல பசங்க இஞ்சீனியரிங் தான் படிக்கணும்னு ஆளுக்கு மூணு லட்சத்துக்கு மேல கடன் வாங்கி சேர்த்துருக்கேன்.அதுக்கே மாசமானா பதினைஞ்சாயிரம் கட்டிட்டு இருக்கேன். அப்பவே சொன்னேன் என்னால இரண்டு பேருக்கு இஞ்சீனியரிங் படிக்க வைக்க முடியாதுன்னு. கேட்டாத்தான?கடன் வாங்கியாவது படிக்க வைக்கணும்னு என்னைய வற்புறுத்துனா.பசங்க கூட நீ எதுல வேணா சேர்த்துவிடப்பா அப்படீன்னுதான் சொன்னாங்க, அப்படி சொன்ன பசங்களை திட்டி நீங்க எல்லாம் இஞ்சீனியரிங் படிச்சாத்தான் கெளரவம் அப்படீன்னு சொல்லி அவனுங்க வாயை அடைச்சுட்டு நகைய வச்சும், வட்டிக்கு வாங்கியும் பணத்தை கட்டி சேர்த்துருக்குது.மாசமானா இதை நினைச்சு நினைச்சு எனக்கு உயிர் போயி உயிர் வருது. இப்ப திடீருன்னு “பிளாட்”விலைக்கு வருது வாங்கு அப்படீன்னு சொல்றா. என்னமோ அஞ்சு லட்சம் லோன் வாங்கு வெளியில அஞ்சாறு லட்சம் புரட்டிக்கலாம்னு சர்வசாதாரணமா சொல்றா !ஏற்கனவே பசங்க படிப்புக்காக எனக்கு நாலு லட்சம் கடன் இருக்கு.மறுபடி கடன் வாங்குன்னா நான் எங்க போவேன்? அதுவும் அந்த “பிளாட்” விலை பதினைஞ்சு லட்சத்துக்கு மேல இருக்கும்.

சொல்லிவிட்டு காப்பியை உறிஞ்சியவரின் முகத்தை பரிதாபமாக பார்த்து டபராவில் மிச்சமிருந்த காப்பியை உறிஞ்சினேன். ஆறிப்போய் இருந்தது.

மெல்ல கனைத்து புரியது மாமா, நான் அக்காகிட்ட சொல்றேன்,ஆனா அக்கா நான் சொல்றதை கேப்பாளா அப்படீன்னு தெரியாது.அவளுக்கு ரிட்டையர்டு ஆகும்போது சொந்த வீட்டுல இருக்கணும்னு ஆசை, அதை நாம் குற்றம் சொல்ல முடியாது.நான் உங்க அக்காவை குற்றம் சொல்லலே, அந்த மாதிரி நினைப்பு இருக்கறவ நம்முடைய குடும்பத்துல நம்மால செய்ய முடியற செலவுகளை மட்டும்தாம் செலவு செய்யணும்னு இருந்திருந்தா இந்த மாதிரி லட்சக்கணக்குல கடனை வெளிய வாங்க வேண்டியதில்லையில்ல?.இப்ப சைட்டுக்கு பணம் ரெடி பண்றது கூட கஷ்டமாக இருக்காதில்லை.

இந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வது என் தெரியவில்லை. போலாம் வாங்க, நான் அக்கா கிட்ட அவசரப்பட வேண்டாம் அப்படீன்னு சொல்றேன். கொஞ்சம் நிம்மதி ஆனவர் போல் காப்பிக்கு பணம் கொடுக்க போனார். நான் அவர் கையை பிடித்து நிறுத்தி காசை எடுத்து கல்லாவில் கொடுத்து வெளியே வந்தோம்.

அதற்குப்பின் ஒரு வாரம் ஓடியிருக்கும். ஒரு நண்பனை பார்க்க அக்கா வீட்டு வழியாக போக வேண்டும். அப்படியே மாமாவின் நிலைமையை அக்காவிடம் எடுத்துச்சொல்லி மாமாவை அவசரப்படுத்த வேண்டாம் என்று சொல்ல வேண்டும். மனதுக்குள் நினைத்தவாறு வெளியே வந்தேன்.எதிரில் என்னை நோக்கி அக்காவின் இரண்டாவ்து பையன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தைப்பார்த்து எனக்கு கருக்கென்றிருந்த்து.

என்ன பாபு ஏன் இப்படி வேகமாக ஓடி வர்றே?

அப்பாவுக்கு திடீருன்னு நெஞ்சு வலி வந்து ஆஸ்பிடல்ல சேர்த்துருக்கோம், சொன்னவனை இழுத்துக்கொண்டு வேக வேகமாக மருத்துவமனையை நோக்கி நடந்தேன். மனதுக்குள் அக்காவின் “பிளாட்” கனவும், மாமாவின் கடன் பிரச்சினையும் வந்து போயின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *