ஆகாசக் கோட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 2,259 
 
 

விடியற்காலம் நாலரை மணி இருக்கும். ஜானகி மாமியின் முனகல் சத்தத்தை கேட்டு பாமாவுக்கு விழிப்பு வந்தது.

பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த தன் கணவன் சங்கரிடம், ”ஜானகி மாமி வலியால் துடிக்கிறாள் போலிருக்கு. நான் போய் பார்த்து விட்டு வருகிறேன்” என்றதும் அவன் தூக்க கலக்கத்தில் ”சரி” என்று சொல்லி திரும்பி படுத்ததைக் கவனித்துக் கொண்டே அவள் அறையை விட்டுக் கிளம்பி வெளியே வந்து வீட்டின் முன் பக்கம் வந்து கதவைச் சாவியால் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அவளிடம் எப்போதும் ஒரு சாவி இருக்கும். வீட்டின் சொந்தக்காரியான ஜானகி சொல்லொணா துயரத்துடன் துடித்துக் கொண்டிருந்தாள்.

”மாமி என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டுக் கொண்டே மாமி அருகில் வந்தவள், மருந்து டப்பாவை திறந்து ஒரு மாத்திரையை எடுத்து அவளீடம் கொடுத்துக் கூடவே ஒரு தம்பளர் தண்ணீரையும் கொடுத்தாள்.

”நிரம்பவும் வலி. என்னால் தாங்கமுடியவில்லை.கருக்கலில் வரவழைத்து உனக்குத் தொந்தரவு கொடுத்து விட்டேன். என்னை மன்னித்து விடு”.

எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை. உங்க குரல் கேட்டு நானே தான் வந்தேன். உங்களுக்கு ஆர்லிக்ஸ் போட்டுக் கொண்டு வரேன் என்று சொல்லி சமையலறைக்குள் நுழைந்து கேசை பற்ற வைத்து ஆர்லிக்ஸை போட்டு ஒரு தம்பளிரில் கொண்டு வந்து கொடுத்தாள்.

”மாமி,மணி நாலரை தான் ஆகிறது. நீங்க தூங்குங்க” என்று சொல்லி விட்டுப் பாமா தன் இருப்பிடத்துக்குச் சென்றாள்.

ஜானகி மாமி வீட்டின் சைட் போர்ஷனில் பாமா குடியிருக்கிறாள் பாமா. நிரம்பவும் ஏழையான குடும்பம்.அவள் கணவனுக்கு ஒரு வங்கியில் பியூன் வேலை. அவளுக்கு ஒரே பையன். இரண்டாம் கிளாஸ் படிக்கும் மாதவன். ரொம்ப சமத்து.

ஜானகி பணக்காரி. அறுபது வயதைக் கடந்தவள். கேன்சர் நோயால் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறாள். குழந்தை இல்லை. கணவனை விவாகரத்து செய்து விட்டாள். அவளுக்கு ஒரு தம்பி இருக்கிறான். தம்பி ரவியுடன் சண்டை. அதனால் அவள் எப்போதும் அவன் உதவியை நாடியதில்லை. பாமாதான் ஜானகிக்குக் குளிக்க உதவி செய்வது சமையல் செய்து கொடுப்பது, வசந்தா கேன்சர் ஆஸ்பிடல் என்னும் பிரைவேட் நர்சிங் ஹோமுக்கு அழைத்துப் போவது போன்ற எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருக்கிறாள். மாதம் பத்தாயிரம் வாடகை பெறும் போர்ஷனை குறைந்த வாடகைக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு பாமாவுக்கு விட்டதற்கு முக்கிய காரணமே ஆதரவு இல்லாமல் இருக்கும் தனக்கு உதவி செய்ய ஒருவர் வேண்டுமென்பதுதான். பாமாவைப் பார்த்தால் நல்ல மாதிரியாய் தெரிந்தது. சின்ன குடும்பம். கணவன் மனைவி ஒரு குழந்தை. அவளை ஜானகிக்கு நிரம்ப பிடித்துப் போய் விட்டது ஜானகிக்கு.. அவளிடம் தாராளமாய் நடந்து கொண்டாள். குழந்தைக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கிக் கொடுப்பாள். சமைக்கும்போது மீந்து விட்டால், ”நீ வீட்டுக்கு எடுத்துட்டு போ” என்பாள். பழங்களைக் கொஞ்சம் கொடுத்து, ”நீ எடுத்துக்கோ” என்பாள்.

பாமா தன் வீட்டுக்குப் போனதும் படுத்துக்கொண்டாள். காலை கணவன் சங்கர் காபி குடிக்கும்போது அவனிடம் சொன்னாள்.

“நேற்று நான் போகும்போது மாமி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். நான் மருந்து கொடுத்து ஆர்லிக்ஸ் போட்டுக் கொடுத்து விட்டு வந்தேன். நம்மளை விட்டா மாமிக்கு வேறு யார் இருக்கா?

”நோயாளிக்கு உதவுவது மிகவும் நல்லது. அவங்களுக்கு யார் இருக்காங்க? நீ செய்ததுதான் சரி.”

சங்கர் ஒரு அசடு. அவனுக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள், முன்னேற வேண்டும் என்னும் துடிப்பு, கடின உழைப்பு ஆகிய மூன்றும் கிடையாது. வீட்டு விஷயங்களில் பட்டும் படாத்துமாக இருப்பான். வேலைக்குப் போய் விட்டு வந்த பிறகு சீட்டாட்டத்தில் தன் நேரத்தைச் செலவழிப்பான். பாமாவுக்குத் தான் பணக்காரியாக வேண்டும் என்னும் ஆசை உண்டு. சங்கரின் அண்ணா தாமோதரன் கோர்ட்டில் மாஜிஸ்டிரேட் உத்தியோகத்தில் இருக்கிறான். அவன் மனைவி பத்மா பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவள். கையில் தங்க வளையல், காதில் வைரத்தோடு. முகத்தில் வைர மூக்குத்தி போட்டுக் கொண்டு ஜொலிப்பாள். பாமா வெள்ளை நெஞ்சம் கொண்டவள். பத்மாவோ கபடு சூது நெஞ்சம் கொண்டவள், ஒரு துரும்பு கூட மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டாள். பாமா அவள் வீட்டுக்குப் போகும்போது எல்லாம் அவளை இளக்காரமாகப் பார்ப்பாள். உன்னால் முடியாது என்று சிரிப்பாள். பாமாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். ஆனால் எதுவும் பேச மாட்டாள். மெளனமாக தன் வீட்டுக்கு வந்து விடுவாள்.

சங்கர் குளித்துச் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போனதும் பாமா ஜானகி மாமி வீட்டுக்குப் போய் சமையலைச் செய்து முடித்து மாமியைச் சாப்பிட செய்தாள். பிறகு பாத்திரம் தேய்க்கும்போது அவள் கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் சப்தம் செய்தன. வளையல்களைப் பார்த்து பாமா எனக்கு எப்போது விடிவு காலம் வரும். நான் எப்போதும் இப்படியே இருக்க வேண்டியதுதானா? என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது வாசலில் பேச்சுக் குரல் கேட்டது. யாரோ வந்திருக்கிறார்கள் என்று அவள் வாசலை நோக்கிச் சென்றாள். ஒரு முதியவர் ஒருவர் நின்றிருந்தார். வயது அறுபதுக்கு மேல் இருக்கும்,. முகத்தில் கண்ணாடி.. அவரது வழுக்கைத்தலை தேய்த்து வைத்த பாத்திரம் போல் பளபளவென்று மின்னியது. வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார்.

”ஜானகி இருக்காளா?”

“நீங்க…?”

”நான் விஸ்வநாதன். ஜானகியைப் பார்க்கணும்.” கம்பீரமாய் சொன்னார்..

பாமா உள்ளே போய் கேட்டாள்.

” மாமி, விசுவநாதன் என்பவர் உங்களை பார்க்கணும்னு வந்திருக்கார்.

”அந்த பாவி வந்துட்டானா? அவனைப் பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் யாரையும் சந்திக்க முடியாது என்று சொல்லி அனுப்பி விட்டு கதவை சாத்திட்டு வா “என்றாள் ஜானகி கோபத்துடன்.

பாமா வெளியே போய், ”அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நீங்க போயிட்டு வேறோரு சமயம் வாங்க”. என்றாள்.

விசுவநாதன் ஏமாற்றத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

”யாரம்மா அந்த ஆள் ? அவர் பெயரைச் சொன்னவுடன் உங்களுக்குக் கோபம் வந்து விட்டதுதே.” என்றாள் பாமா.,

அந்த கடன்காரன் தான் என் மாஜி கணவன். எங்களுக்கு விவாகரத்து ஆகி விட்டது. இப்ப எதுக்கு வந்தான்னு தெரியலை. அவனைப் பார்த்து பிரச்சனையை வரவழைப்பதற்குப் பதில் அவனைப் பார்க்காமலே இருந்துடறது உசிதம். இன்னொரு தடவை அந்த ஆள் வந்தான்னா அவனை உள்ளே விடாதே,

”நீங்க எத்தனை வருஷம் அவனோடு வாழ்ந்தீங்க? எதுக்காக அவனை விவாகரத்து செய்ஞ்சீங்க?”

”நான் சின்ன வயசிலே கல்யாணம் செஞ்சுக்கலை. கன்னியாக நாற்பது வயசு வரைக்கும் வாழ்ந்திட்டேன். எங்க அப்பாவோட கம்பெனியை நான் நிர்வாகம் பண்ணிக் கொண்டிருந்தேன். என்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் இவன் அங்கே மேனேஜரா சேர்ந்தான். நிரம்பவும் நல்லவன் போல் நடித்து என்னை ஏமாற்றி என்னைத் திருமணம் செஞ்சுண்டான். அவன் ஒரு பெண் பித்தன் என்று பின்னால்தான் தெரிந்தது. ஆசைக்கு ஒரு மனைவி, செலவுக்கு ஒரு நாயகி என்று

இன்னொருத்தியை வைத்திருந்தான். என்னுடைய பணத்தில் அவளுக்கு வீடு, நகை எல்லாம் வாங்கிக் கொடுத்து என் ஆஸ்தியைக் கரைத்தான். அவள் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பிச்சுக் கொடுத்து என்னுடைய கம்பெனியின் பிஸினஸை குறைக்கச் செய்தான். என்னுடைய கையெழுத்தைப் போல் போட்டு வங்கி காசோலையில் போர்ஜரி செய்தான். அவனைப் பற்றி முழுமையாய் அறிவதற்குள் பத்து வருடம் ஓடி விட்டது. சொத்தில் இரண்டு கோடி ரூபாயை அவன் செலவழித்து விட்டான். கம்பெனியை விற்க வேண்டிய நிலைமைக்கு வந்துட்டேன். இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம். நான் முழித்து கொண்டு அவனை விவாகரத்து செய்து விட்டேன். நல்ல காலம் எனக்குப் பிள்ளை குட்டி எதுவுமில்லை. பத்து வருடங்கள்தான் அவனுடன் வாழ்ந்தேன். ஆனாலும் எனக்குப் போதும் என்றாகி விட்டது. அந்தக் கயவனை நான் மறந்து விட்டேன். அவன் சகவாசம். இனிமேல் வேண்டாம்.அவன் முகத்தில் விழிக்க எனக்குப் பிரியமில்லை.”

”நீங்க சொன்னது எனக்குப் புரிஞ்சதம்மா. அவர் உங்களை நிறையக் கஷ்டப்படுத்தி இருக்கார். நிரம்பவும் மோசமான ஆட்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்தது. நான் இனி அவரிடம் ஜாக்கிரதையாய் இருப்பேன்.”

”நான் நிரம்பவும் உருக்குலைந்து வாழ்க்கையின் அஸ்தமனத்துக்கு வந்து விட்டேன்.. எனக்கு எப்ப வேண்டுமானாலும் எது வேணுடுமானாலும் நடக்கலாம். எனக்கு ஏதாவது ஆயிட்டால் நீ ஓடிப் போய் இந்தத் தெருவின் கடைசியில் 52ம் நம்பர் வீட்டில் இருக்கும் வழக்கறிஞர் சிவராமன் வீட்டில் போய் விஷயத்தைச் சொல்லு. அவர் என்னை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாட்டையும் செய்வார்.” என்று கூறி மோனாலிசா புன்னகை செய்தாள்.

”அப்படியே செய்யறேன். உங்களுக்கு எதுவும் ஆகாது. நீங்க எதிர்மறையாய் பேசாதீங்க.”

”நெருப்புன்னா நாக்கு வெந்து போகாது. எனக்கு வந்திருப்பதோ இரத்த புற்று .நோய். என்னிக்காவது ஒரு நாள் நான் இந்த உலகத்தை விட்டு போய் தானே ஆகணும். அதனாலே முடிவை எதிர்பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியங்களை இப்பவே செஞ்சுட்டா பின்னாலே சவுகரியாமாக இருக்கும் இல்லையா?”

அதன் பிறகு ஒரு நாள் மாமிக்கு உடம்பு சரி இல்லை. பாமா மாமியை ஆஸ்பத்திரிக்குப் போய் இரத்தம் ஏற்றி விட்டு திரும்பி அழைத்து வந்தாள். அவள் அன்புடன் சேவை செய்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த ஜானகி, ”நீ என் பெண் மாதிரி உனக்கு இந்த வீட்டை கொடுத்தாலும் தகும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

”நீங்க என்ன சொல்றீங்க? எனக்கா இந்த வீடு?என்னாலே நம்ப முடியலை.”

”இது என் சொந்த வீடு. நான் யாருக்கு வேணுமானாலும் எழுதி வைப்பேன். நீ எனக்கு எவ்வளவோ செய்யறே. அம்மாவைப் பார்த்துக்கிற மாதிரி என்னைக் கவனிச்சுக்கிறே. உன்னை எனக்கு நிரம்ப பிடிச்சிருக்கு.உனக்கே இந்த வீட்டை கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கேன்.”

”நிஜமாகவா சொல்றீங்க மாமி.?”

” உனக்கு ஏதாவது செய்யணும்னு எனக்கு ஆசை.”

பாமா தன் கணவனிடம் மாமி வீட்டை தனக்கு கொடுத்து விடப் போகிறாள் என்று சந்தோசமாக சொன்னாள்.

சங்கர் அதை தன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

தனக்கு மட்டும் அந்த வீடு கிடைத்து விட்டாள் தன் ஓரகத்தியைப் போல தானும் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரி என்னும் நினைப்பு அவளை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்தது. இனிமேல் ஏழ்மை பறந்து விடுமென்று உறுதியாக நம்பினாள். அந்த வீடு தனக்குச் சொந்தமாகி விட்டது போல் அதிகாலையில் ஒரு நாள் பாமா கனவு கண்டாள். வீடு தனக்குத் தான் என்னும் எண்ணம் அவளின் ஆழ் மனதில் வேரூன்றி விட்டது.

வீடு அவள் கைக்கு வரவில்லை. அதற்குள் வீடு கிடைத்து விட்டது போலவும் தான் வீட்டின் முன் புறத்துக்கு மாறி விட்டதாகவும், இப்போது குடியிருக்கும் போர்ஷனை வாடகைக்கு விட்டு அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வங்கியில் மாதாந்திர கணக்கில் சேமிப்பது போலவும் அவள் மனம் இறக்கை கட்டி பறந்தது.

இப்போதெல்லாம் அவள் மாமிக்காக விழுந்து விழுந்து வேலை செய்தாள். ஒரு நாள் காலை பதினோறு மணி இருக்கும். மாமிக்கு சாப்பிட்டப் பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரைகளைக் கொடுத்தாள். மாமி மாத்திரைகளை மிகவும் கஷ்டப்பட்டு விழுங்கினாள். அவளுக்கு மூச்சு விட நிரம்பவும் கஷ்டப் பட்டாள்.

மாமி, இந்தாங்கோ. கொஞ்சம் தண்ணீர் சாப்பிடுங்கோ என்று ஒரு குவளையில் தண்ணீர் விட்டு மாமியிடம் பருகக் கொடுத்தாள் பாமா,.

அதைக் குடித்துவிட்டு, ”எனக்கு மூச்சு வாங்கறது. நான் பிழைக்க மாட்டேன் நீ போய் இதே தெருவின் கோடி வீட்டில் இருக்கும் வக்கீல் சிவராமனை சீக்கிரம் அழைத்து வா” என்று கஷ்டப்பட்டுச் சொன்னாள் ஜானகி.

பாமா விரைந்து சென்று சிவராமனை அழைத்து வந்தாள். சிவராமன் நேர்மையானவர். தேவாரம் திருவாசகம் தினமும் படிப்பவர். அவர்கள் வந்தப்போது ஜானகியின் தலை சரிந்து விழுந்திருந்தது.

”அச்சச்சோ,உயிர் போயிடுத்து போல இருக்கே” என்று பதறினார் சிவராமன்.

டாக்டர் உடனே வந்து பார்த்து, ”அவள் உயிர் போய் விட்டது” என்று அவள் இறப்பை உறுதி செய்தார். வக்கீல் வந்ததும் பிரயோசனமில்லை. பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ஜானகியின் இறுதி சடங்கிறகு வேண்டிய ஏற்பாடுகள் செய்தார்.

கழுகுக்கு மூக்கில் வியர்ப்பது போல் அந்த சமயத்தில் மாஜி கணவன் விஸ்வநாதனும் ஜானகியின் தம்பி ரவியும் வந்து விட்டார்கள்.

”பரவாயில்லையே பகமை பாராட்டாமே இறுதி சடங்கின் போது எல்லாரும் வந்து விட்டீர்களே” என்று சந்தோஷத்துடன் கூறினார் வக்கீல்.

நான் ஜானகியின் மாஜி கணவன். இப்போது அவள் போய் விட்டதால் இந்த வீடு எனக்குத்தான் சொந்தம். நான் இந்த வீட்டை எடுத்துக் கொள்ள போகிறேன் என்றான் விசுவநாதன்.

” இது அக்கா வீடு. நான் தான் அவளுக்கு வாரிசு. அதனால் எனக்கு மட்டும்தான் இந்த வீட்டின் மேல் உரிமை இருக்கிறது.” என்றான் ரவி.

நாம் நினைப்பது ஒண்ணு நடப்பது ஒண்ணு என்பதை அறியாத பாமா, ”மாமி எனக்குப் பிறகு இந்த வீட்டை உனக்குத்தான் தருவேன்” என்று உறுதி அளித்திருக்கிறார். அதனால் எனக்குத்தான் இந்த வீடு சொந்தம் என்றாள்.

சிவராமன் முகத்தில் புன்முறுவல் படர்ந்தது. அவர்களைப் பார்த்துச் சொன்னார்.

”ஆறு மாசத்துக்கு முன்னமே ஜானகி அம்மா உயில் எழுதி ரெஜிர்டர் பண்ணிட்டாங்க. அந்த உயிலை படிக்கிறேன் கேளுங்க” என்றவாறு தன் பெட்டியிலிருந்து ஒரு பழுப்பு நிற காகித உறையை எடுத்து அதிலிருந்த உயிலைப் படித்தார்.

சென்னையில் மாம்பலத்தில் ராமன் தெருவில் வீட்டு எண் 15ல் வசிக்கும் சாம்பசிவ ஐயரின் மகள் ஜானகி சுய நினைவோடு திங்கட்கிழமை 25ம் தேதி மே மாதம் 2020 எழுதிய உயில்.

எனக்கு வயது 62 ஆகிறது. நான் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று தெரியாததால் இந்த உயிலை எழுதுகிறேன்.

எனக்கும் காசி விசுவநாதன் என்பவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆனபிறகு இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் சட்டப்படி விவாகரத்து ஆனவள். நான் விவாகரத்து ஆனவள்.

மாம்பலத்தில் ராமன் தெருவில் 15ம் நம்பர் வீடு என்னுடைய தந்தையார் எனக்கு எழுதி வைத்த வீடு. இரண்டாயிரம் சதுர அடி கொண்ட வீடு. அதை நான் தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகு அந்த வீட்டை வசந்தா கேன்சர் ஆஸ்பிடலுக்குத் தானமாக கொடுத்து விடுகிறேன்.

வழக்கறிஞர் சிவராமனை இந்த தானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய நியமிக்கிறேன்.

என்னுடைய பெட்டியில் வைத்திருக்கும் பணத்தில் என் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டியது. பிறகு மீதமாகும் பணத்தில் பத்தாயிரம் ரூபாயை என்னைக் கவனித்துக் கொண்டிருந்த பாமாவுக்குக் கொடுத்து விட வேண்டியது. அதுப் போக மிச்சமாகும் பணத்தை பிச்சைக்கார்களுக்குக் கொடுத்து விட வேண்டியது.

இது நான் சுயமாய் எழுதிய உயில். இதை மாற்றவோ அல்லது திருத்தவோ யாருக்கும் அதிகாரமில்லை.

என்று படித்து நிறுத்தினார்.

விசுவநாதன் தன் வழுக்கை மண்டையின் பின் உச்சியைத் தடவியவாறு, ”பாதகி, முன்னெச்சரிக்கையுடன் உயில் எழுதி வைத்து விட்டாள்” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார்.

”அக்கா என்னை மோசம் செஞ்சுட்டா ,வீடு எனக்குக் கிடைக்குமென்று நம்பியிருந்தேன். எல்லாம் போச்சு” என்று சொல்லியவாறு வாசலை நோக்கிச் சென்றார்.

பாமா கட்டிய ஆகாசக் கோட்டை இடிந்து விட்டது அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவள் சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு வக்கீலை பார்த்து, ”போன வாரம் மாமி எனக்கு இந்த வீட்டை தரேன்னு சொன்னாளே. அவங்க சொன்னதுபோல் எனக்கு வீட்டைத் தர முடியாதா?” என்று கண்கள் கலங்க வினவினாள்.

வக்கீல் சிவராமன் புன்னகை செய்து, ” ஜானகி அம்மாள் உனக்கு வீட்டைத் தர வேண்டுமென்று நினைத்து. உன்னிடம் சொல்லி இருப்பார்கள். எழுதி வைத்த உயிலை மாற்றனும்னு நினைத்திருப்பார்கள். அதற்குள் அவர் உயிர் நீங்கி விட்டதால் இப்போது எதுவும் செய்ய முடியாது. ஆறு மாசம் முன்னாலேயே ரெஜிடர்ட் ஆன உயில். சட்டப்படி அதில் எழுதப்பட்டதுதான் செல்லும். உங்களுக்கு உயிலில் எழுதி வைத்தபடி

ரூபாய் பத்தாயிரம் கிடைக்கும்.. அதுதான் என்னால் செய்ய முடியும் என்றார்.

கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காமல் போய் விட்டதால் உண்டான ஏமாற்றதால் சோகத்தில் மூழ்கிய பாமா கதறிக் கதறி அழுதாள்.

”அழாதேம்மா. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா? யார் யாருக்கு என்ன கொடுப்பினையோ அதுதான் கிடைக்கும். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவைக் கடவுள் திறப்பார். உனக்கு வேறு ஒரு வாய்ப்பு வந்து வசதியோடு இருப்பாய். கவலைப் படாதே.”

ஆசை படுவது நம் தேவையை அடிபடையாக கொண்டாலும் அவை நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதை அவள் உணரவில்லை. நெஞ்சில் தாங்காத துக்கத்துடன் அவள் தன் இருப்பிடத்துக்கு அகன்றாள். அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவராமன், ” தர்மம், அதர்மம் என்பதைப் பார்க்காது எப்போதும் தான் நினைத்ததையே சரி என்று எண்ணுவது மனதின இயல்பு போலும். மனம் எவ்வளவு விந்தையானது ! ” என்று வியந்தார்.

பாமா தன் போர்ஷனுக்குள் நுழைந்தும் அங்கிருந்த குழந்தை மாதவன் கட்டிய பொம்மை வீட்டைப் பார்த்துத் திகைத்து நின்றாள். அதை பில்டிங் செட்டை வைத்து கட்டியிருந்தான். மாதவன் சிரித்துக் கொண்டே ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு “அம்மா இந்த வீடு கட்டினேன். பெரியவன் ஆனதும் நிஜ வீட்டைக் கட்டித் தரேன்” என்று கையை நீட்டி மழலையில் சொன்னதைக் கேட்டு அவள் முகம் மலர்ந்தது. அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ கண்ணு, நீ சமத்து ” என்று கொஞ்சினாள். அவள் மனம் லேசானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *