(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இந்த வாகனம் அதியாச்சரியமானதா யிருக்கிறதே வாயுவேகம், மனோ வேகமென்றெல்லாம் உபசாரமாக சொல்லுவார்களே, அந்த வார்த்தை நிஜந்தான் போல் இருக்கிறதே?” என்றார் தாத்தா.
அவரை நான் வேறு எப்படிச் சொல்வது? எனக்கும் பாட்டனாரல்ல. பாட்டனாருக்குப் பாட்டனாருக்குப் பாட்டனார் இருந்தாரே …… அவருக்கும் முந்தினவர். கிறிஸ்து பகவான் திருஅவதாரம் செய்து ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து அவதரித்தவர் அவர்!’அஹிம்சா பரமோ தர்ம:” என்ற வேத வாக்கியத்தை ஒவ்வொரு மூச்சிலும் கலந்து வாழ்ந்தவர். நான் இருபத்தைந்தாவது நூற்றாண்டில், அதாவது அந்தத் தாத்தாவுக்கு அப்புறம் ஆயிரம் வருஷங்களுக்குப் பின் வாழ்பவன். அவருக்குத் தெரிந்தது எனக்குத் தெரியாது; எனக்குத் தெரிந்தது. அவருக்குத் தெரியாது.
“இது எப்படியப்பா ஓடுகிறது? மாடு இல்லை, குதிரை இல்லை. சக்கரம் உருளுவதுகூடத் தெரியவில்லை. துளி கூடச் சத்தம் இல்லை. எப்படி இது இவ்வளவு வேகமாக ஓடுகிறது?”
அவர் இப்படிக் கேட்பது சிறிது பரிகாசமாகக் கூடப் பட்டது. வான வெளியில் தட்டாரப் பூச்சியைப் போலப் பறக்கும் ஆகாய விமானங்களையே எங்கும் பார்க்கும் என் காலத்தில் இந்தக் கர்நாடக மரவட்டையை, காரென்று சொல்லுகிற பொம்மை வண்டியை, நான் வைத்துக் கொண்டு ஓட்டுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது. அதை அந்தத் தாத்தா குத்திக் காட்டும்போது நான் தலை குனிந்து கொண்டேன். பிறகுதான் தெரிந்தது, அவர் ஒன்றும் விகற்பமாக எண்ணவில்லை என்று.
“ஜலத்தினால்தான் ஓடுகிறது. முன் காலத்தில் ஒரு விதமான எண்ணெயால் ஓட்டினார்களாம். இப்போது. ஜலமே போதுமானதா யிருக்கிறது” என்றேன்.
என் பக்கத்தில் தாத்தா உட்கார்ந்திருந்தார். அவர் காரின் வேகத்தை பூரணமாக அனுபவித்தார். நடு நடுவே. சில வார்த்தைகளைப் பேசினார்,
“அப்படியானால் இந்தக் காலத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி ஒன்றும் இல்லையா?”
“அதென்ன அது? மாட்டு வண்டியென்றால்! மாடு ஓடுமா?”
அவர் இடி இடியென்று சிரித்தார். “நீங்களெல்லாம் தர்மாத்மாக்கள். மாட்டு வண்டியென்றால் இன்னதென்று தெரியாத புண்ணியசாலிகள் என்று ஸ்தேர்த்திரம் செய்தார்.
“மாட்டை வண்டியில் கட்டி ஓட்டுவது எங்கள் காலத்து ஸம்பிரதாயம். குதிரையையும் கட்டி ஓட்டுவது வழக்கம். மாட்டு வண்டியைவிடக் குதிரை வண்டி வேகமாகப் போகும்.”
“அப்படியா! மணிக்கு நூறு மைல் போகுமா?”
“மைலென்றால் என்ன?”
ஒருவிதமாகத் தாத்தா புரிந்துகொள்ளும் படி விளக்கினேன்.
“நூறு மைலா! மணிக்கு இருபது மைல் போனால் உயர்ந்த ஜாதிக் குதிரை என்பார்கள்.”
“பூ! இவ்வளவுதானா?”
“அது கிடக்கட்டும். நான் அந்த வண்டிகளிலேயே ஏறி அறியேன்.”
“ஏனோ?”
“அது மகா பாபமல்லவா? அஹிம்சைக்கு விரோத மல்லவா? மாட்டின் கழுத்தில் நுகத்தடியைப் பூட்டிப் பாரம் இழுக்க வைப்பது எவ்வளவு கொடுமை! எங்கேயாவது ஸ்தல யாத்திரைக்குப் போகிறோமென்று வைத்துக் கொள். அங்கே போய்ப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்வதற்கு முன்னே, இந்த வாயில்லாப் பிராணியை வதைக்கும் பாவத்துக்கல்லவா ஆளாக வேண்டும்? சிவ சிவா! அதுவும் சில வண்டிக்காரர்கள் ஈவு இரக்கமில்லாமல் சவுக்கையும் தார்க் குச்சியையும் பிரயோகம் செய்யும் போது பார்த்து விட்டால், கண்ணைக் குத்திக் கொள்ள வேண்டுமென்று தான் தோன்றும். இப்போதும் நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது. குதிரைகளைத்தான் கொஞ்சம் பாடுபடுத்தி வைத்தார்களா? நல்ல வேளை, இந்த இம்சையான காரியங்களெல்லாம் உன் காலத்தில் இல்லையென்பதை உணரும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது தெரியுமா?”
“உங்கள் காலத்தில் ஆகாசத்தில் பறக்கம் விமானம் இல்லையா?”
“கதைகளில் தான் கேட்டிருக்கிறோம். புஷ்பக விமானமென்று சொல்வார்கள். அதெல்லாம் கிடக்கட்டு மப்பா! இந்த வாயில்லாப் பிராணிகளுக்கு விடுதலை கிடைத்ததே! இந்தப் புண்ணியம் உங்கள் தலைமுறையைக் காப்பாற்றும். என்ன என்னவோ தர்மங்களைச் செய்கிறார்கள். அஹிம்சையைக் காட்டிலும் ஒருதர்மம் உண்டா?”
“இப்படித்தான் பல வருஷங்களுக்கு முன் காந்தி என்ற ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தாராம்.”
“வேதமே கோஷிக்கிறதே. என் காலத்தில் ஸந்நியாசிகள் வண்டியேற மாட்டார்கள். சில பெரியவர் களும் ஏற மாட்டார்கள். என்னுடைய கல்யாணத்தில் ஒரு பல்லக்கு ஏற்பாடு செய்தார்கள். இரண்டு மாடுகள் கட்டி இழுக்கத் திட்டம் போட்டிருந்தார்கள். நான் சிவ பூஜை செய்பவன். ‘சிவபெருமான் வாகனமாகிய ரிஷபதேவரின் சந்ததியை வருத்தி நாம் ஊர் வலம் போவதா? என்ற நினைவால் அதில் ஏற மறுத்து விட்டேன். இந்த மாதிரி ஒரு வாகனம் கிடைத்திருந்தால் எவ்வளவு சுகமாக ஊர்வலம் போயிருப்பேன்!”
நகரத்தின் பிரதான வீதியில் கார் போய்க் கொண்டிருந்தது. தென்றல் காற்று, சுகமாக வீசியது. “என்ன சுகம்! அஹிம்சைக்கு அஹிம்சை, சுகத்துக்குச் சுகம்!” என்று தாத்தா சொல்லி வாய் மூடவில்லை; சதக்கென்ற ஒரு சத்தம், கீச் என்ற அழுகுரல்-இரண்டும் ஒரு விபத்து நேர்ந்து விட்டதைக் குறித்தன. வண்டியை நிறுத்தினேன்.
‘’என்ன அது?” என்று கிழவர் கேட்டார்.
“ஒரு சம்பவம்'” என் று சொல்லி என் காரில் அடி பட்டு மண்டையுடைந்த ஒருவனை எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டு நேரே ஆஸ்பத்திரிக்கு ஓட்டினேன்.
“என்ன அப்பா இது? இவனுக்கு என்ன?’’ என்று நடு நடுங்கிக் கொண்டே விசாரித்தார் அந்த அஹிம்சை விரதி.
“வண்டியில் அடிபட்டான்’” என்றேன்.
”ஐயோ! கொலையா! நீயா கொன்று விட்டாய்?”
“பேசாமல் இருங்கள்! கொலையும் இல்லை, கிலையும் இல்லை.”
“என்னடா இது? மகா பாபி! என் கண்முன்னே இவனைக் கொன்று விட்டு இல்லையென்று சாதிக்கிறாயே!”
ஆஸ்பத்திரிக்குப் போய் அடிபட்டவனை விட்டு விட்டு நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைச் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன். அதற்குள் அந்தக் கிழவர் தவித்த தவிப்புக்குக் கணக்கில்லை.
”அட பாவி! கொலைகாரா! சண்டாளா!” என்று வைதார். “அவன் செத்துப் போய் விட்டானா?” என்று மகா துக்கத்தோடு கேட்பார். “‘கொலைக் குற்றம் செய்த உனக்கு மரண தண்டனையல்லவா கிடைக்கும்?” என்று பயமுறுத்துவார். நான் எல்லாவற்றையும் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டே இருந்தேன்.
“அடிபட்டவன் இறந்து விட்டான்” என்று ஆஸ்பத்திரி யிலிருந்து தகவல் வந்தது. “நன்றாக வேண்டும்; வேறு வழி இருக்கும்போது ரோட்டு விதியை மீறினால் இது தான் கிடைக்கும்” என்று சர்வ சாதாரணமாக நான் சொன்னேன்.
“அடே கொலைகாரப் பாவி! கொன்றது கொன்று விட்டு அந்த அப்பாவியைக் குறை சொல்லுகிறாயே! இது தெய்வத்துக்கு அடுக்குமா?” என்று புலம்பினார் தாத்தா.
அரை மணி நேரத்தில் நான் கோர்ட்டுக்குப் போய் வந்தேன். நான் வரும் வரையில் எனக்கு என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டே ஆவலாகக் காத்திருந்தார் தாத்தா. என்ன இருந்தாலும் நான் அவர் சந்ததி அல்லவா?
“நீ எப்படித் தப்பி வந்தாய்?” என்று படபடப்போடு கேட்டார் தாத்தா.
“தப்புவதா? நான் என்ன செய்தேன்?”
“நீதிபதி இந்தக் குற்றத்திற்காக உன்னைத் தண்டிக்க வில்லையா?”
நான் சிரித்தேன்; “குற்றமா? குற்றம் செய்தவன் தான் உடனே தண்டனையை அடைந்தானே? ரோட்டு விதியை மீறினதால் நேர்ந்த சம்பவமென்று நீதிபதி தீர்ப்புக் கூறி விட்டார்.”
“அட பாபிகளா!” என்று கிழவர் மூர்ச்சையாகிப் படீரென்று கீழே விழுந்தார்.
விழித்துக் கொண்டேன். 1942-ஆம் வருஷத்தில் நான் இருந்தேன். என் கையில் பெரிய புராணம் இருந்தது. அதில் மனுநீதிச் சோழன் கதையைப் படித்தபடியே நான் தூங்கி விட்டேனென்பது தெரிய வந்தது.
– 1932-42, ஆனந்த விகடன் தீபாவளி மலர்.
– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.