மூன்றாவது மகள் பள்ளியிலிருந்து திரும்பியதும், புன்னகையுடன் கேட்டாள், ஞானம்: ‘இன்னிக்கு யாரோட சண்டை?”
வலியப்போய் சண்டை போடமாட்டாள் என்று தெரியும்தான். வேடிக்கையாக இருந்தாலும், சற்று சலிப்பும் ஏற்பட்டது. எந்த வேளையில் அவளுக்கு வீரலட்சுமி என்று பெயர் வைத்தாளோ!
“பின்னே என்னம்மா? `மூணும் பொண்களா!’ன்னு எங்களைப் பார்த்து சலிச்சுக்கிட்டா? அவங்களா எங்களுக்கு சாப்பாடு போடப்போறாங்க?”
தாய் அதிர்ந்தாள். “ஒன்னைவிட பெரியவங்களோடேயா சண்டை போட்டே?”
“சண்டை போடலேம்மா. நான் என்ன சொன்னேன், தெரியுமா?” அவள் குரலில் பெருமை.
“இன்னும் நிறைய பொண்ணுங்க பிறக்கும் எங்க குடும்பத்திலேன்னு சொன்னேன்”.
நிலைமை இன்னும் மோசமாக ஆகிவிடாது காப்பதுபோல், இரண்டாமவள் ஒரு பெரிய தாம்பாளம் நிறைய மாம்பழங்களைக் கொண்டுவந்தாள். “எல்லாம் நம்ப தோட்டதிலேருந்தும்மா!”
அவளுடைய பூரிப்பு தாயையும் தொற்றிக்கொண்டது. “ரெண்டு கிலோ இருக்கும்போல இருக்கே!”
“பள்ளிக்கூடம் லீவுதானே! எங்கேயாவது போகலாம்பா!” என்று கொஞ்சிய மகளைப் பார்த்துப் புன்னகைத்தார் நாராயணன்.
“எங்கே போகலாம்? நீயே சொல்லு!”
“குவால காண்டா (Kuala Gandah)!” என்றபடி வந்தாள் இந்திரா. முதலிலேயே பேசி வைத்துக்கொண்டு, தைரியமான தங்கையைத் தூது அனுப்பியிருக்கிறாள்!
கர்ப்பிணியான மனைவி! “அம்மாவுக்கு முடியுமா?” என்று சற்று தயங்கினார்.
“எல்லாம் முடியும்!” என்று உள்ளேயிருந்து குரல் எழும்பியது.
யோசிக்க ஆரம்பித்தார். கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் போனால், கோலாலம்பூரிலிருந்து இரண்டே மணிதான். யானைகள் ஆற்றில் குளிப்பதைப் பார்க்கலாம். மரங்கள் அடர்ந்த இடமும் ரம்மியமாக இருக்கும்.
சில வருடங்களுக்குமுன், யானை ஒன்றின் முதுகில் குழந்தைகளை ஏற்றுவார்கள். அந்த யானை ஆற்றில் நடந்து, பிறகு சாய்ந்துவிடும். எதிர்பாராவிதமாகத் தண்ணீரில் விழுந்த குழந்தைகளின் சிரிப்பும் அழுகையும்!
பழைய நினைவுகளால் உற்சாகம் ஏற்பட, “புறப்படுங்க,” என்றார்.
அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்த இடத்தில் இன்னொரு மகள் பிறப்பாளென்று.
“கஜலட்சுமின்னு எனக்கு ஏன் அக்கா இந்தப் பேர் வெச்சாங்க? எல்லாரும் கஜா, கஜான்னு கூப்பிடறாங்க! நான் யானைமாதிரியா குண்டா இருக்கேன்?” என்று சிணுங்கிய தங்கையிடம், “அப்படி இல்லேடி! யானைங்களைப் பாக்கப்போன இடத்திலே நீ பிறந்துட்டே. அதனால..!” என்று சமாதானப்படுத்தினாள் இந்திரா. முதல் குழந்தைகளுக்கே உரிய பொறுமையும் கருணையும் அவளிடமிருந்தது.
“நல்லவேளை, ஜூவில சிங்கத்தைப் பாக்கப் போனப்போ நான் பிறக்கலே!” என்று சிரித்தாள் சிறுமி.
ஒரு வருடத்துக்குள் பிறந்த விஜயலட்சுமி தான்மட்டுமல்லாது, அக்காள் நால்வரும் கல்வி, பேச்சுப்போட்டி, ஆடல், பாடல் என்று எதிலாவது சிறக்க தன்னாலானதைச் செய்தாள்.
ஞானத்திற்குப் பரம சந்தோஷம். ஒவ்வொரு மகளும் பெயருக்கு ஏற்றாற்போல் வளர்கிறார்கள்.
வயிற்றிலிருக்கும் ஆறாவது குழந்தை சந்தானலட்சுமியா?
ஆனால், பிறந்ததோ ஆண்குழந்தை. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. தன் கனவு பலிக்காமல் போய்விட்டதைக் கணவரிடம் கூறி வருத்தப்பட்டுக்கொண்டாள்.
“சந்தானம்னு பேர் வைக்கலாம்!” என்று அவர் ஓர் உபாயம் கூறினார்.
“இனிமே பிள்ளை பிறந்தா இவங்க உயிருக்கே ஆபத்து!” என்று டாக்டர் மிரட்டலாகக் கூற, வேறு வழி புலப்படாது, கருத்தடை சிகிச்சைக்கு உடன்பட்டாள் ஞானம்.
அவளைப் பார்க்க வந்த கணவருக்கு மனம் பொறுக்கவில்லை. “இந்தச் சமயத்திலே அழக்கூடாதும்மா. பேத்தி பிறக்காம போயிடுமா? அந்தக் குழந்தைங்களுக்கு வித்யாலட்சுமி, தனலட்சுமின்னு பேர் வெச்சா போச்சு! அப்போ ஒன் ஆசைப்படியே நம்ப குடும்பத்துக்கு அஷ்டலட்சுமியும் வந்துடுங்க இல்லே?” என்றார்.
மகள் எப்போது பெரியவளாகப் போகிறாள், எப்போது கல்யாணமாகி, தான் எப்போது பேத்திகளைப் பார்க்கப்போகிறோம் என்று புதிய கவலையில் ஆழ்ந்தாள் ஞானம்.