கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 10,492 
 
 

வீட்டில் காலடி வைத்ததும் வழக்கமாய் எதிர் கொள்கிறவளைக் காணவில்லை.

சோர்வாய் போய் நாற்காலியில் விழுந்தான்.எதிர் நாற்காலியில் கால் நீட்டி,பின்கழுத்தில் கை செருகி மல்லாந்து கூரையை வெறிக்க…இந்நேரம் காபி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை.

இவனுக்குள் கோபம் எழுந்து புரண்டு படுத்தது.

“யேய்”என்று கூவினான்.பதிலில்லை.எரிச்சலாயிற்று.எழுந்து அடுக்களை வரை வந்து எட்டிப்பார்த்தான்.அங்கேதான் சதா இருப்பாள் என்ற கணிப்பு பொய்த்தது.” சே.முழுமாடு வீட்டை தொறந்து போட்டுட்டு எங்கதான் போய் தொலைஞ்சதோ.”

எரிச்சலாய் உடைமாற்ற திரும்பியபோதுதான் கவனித்தான்.கட்டிலில் படுத்திருந்தாள்.இழுத்து தலை வழியே மூடிக் கொண்டிருந்தாள்.தூங்குகிறாளோ.

‘எவ்வளவு கொழுப்பு.இங்கே ஒருத்தன் செத்து போய் வந்தது தெரியாத அளவுக்கு அப்படியென்ன தூக்கம்.’

வேகமாய் அருகே போய் போர்வையை விலக்கினான்.அவள் படக்கென்று விழித்துக் கொண்டு எழப் போனாள்.முடியாமல் சுருண்டு விழுந்தாள்.”லேசா உடம்பு வலிக்குதுன்னு படுத்தேன்.எப்படியோ தூங்கி…” என்று ஆரம்பித்தவள் வாய் நடுங்கியது.போர்வையை இழுது மூடிக் கொண்டாள்.

“என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா”

நெருங்கி அவளைத் தொட்டு பார்த்து திடுக்கிட்டான்.கொதித்தது.

‘இழுத்து மூடிட்டு கிடந்தா எல்லம் சரியாயிடுமா.மருந்து கிருந்து வாங்கி தின்னு தொலைக்க வேண்டியதுதானே.’

ஏனோ அந்த சூழ்நிலை வெறுப்பேற்றியது.

இந்த பதினோரு வருஷமாய் நோய் வந்து அவள் படுத்ததில்லை.இவளுக்கெல்லாம் நோய் வருமென்று நினைத்து கூட பார்த்ததில்லை.இப்போது இப்படி கிடப்பது கலக்கமூட்டியது. இவளை எப்படி கவனிப்பது.உடனே சரியாகிவிடுமா.மருந்து மாத்திரை என்று செலவழிக்க வைத்து விடுமா.எழுந்து நடமாடுவதுவரை வீட்டு வேலைகள்…?கேள்விகள் விஷ்வரூபமாய் எழுந்து பயமுறுத்தின.

மில்லின் இயந்திர கோளாறுகளை சுலபமாய் பதட்டமில்லாமல் சரிசெய்ய முடிகிறது.இன்று முழுவதும் உற்பத்தி நிறுத்திய இயந்திர கோளாறு,இவனால்தான் சரிசெய்யப்பட்டது.அந்த உழைப்பின் களைப்பும்,மன உளைச்சலும் சேர்ந்து இப்போது தலை வலித்தது.ஒரு காபி குடித்தால் நலமாயிருக்கும்.அவள் படுக்கையிலிருந்து ஏதோ முனகுகிறாள்.கிட்டே போகவே எரிச்சலாயிருந்தது.

ஸ்கூல் முடிந்து வந்த பையன் “அம்மா…அம்மா..”என்று வாசலிலிருந்தே கூவினான். புத்தகப்பையை தூக்கி எறிந்தான்.

“ஏண்டா தெருவில இருந்தே கூப்பாடு போடுற.”

இந்த நேரத்தில் அப்பா வீட்டில் இருப்பதை ஆச்சரியமாய் பார்க்கிறான் மகன்.

“இல்ல..வந்து..அம்மாகிட்ட…”

“ஏன் அப்பாகிட்ட சொன்னா செத்தா போயிடுவ..” இவன் கோபத்துக்கு பையன் பயந்தான்.” எனக்கு பசிக்குது..” என்றான்.

ஏதாவது நொறுங்கு தீனி வாங்கி டப்பா டப்பாவாய் வத்திருப்பாள்.எங்கேதான் கொண்டு வைப்பாளோ.இவன் கண்ணுக்கு தென்படவேயில்லை.

“அதெல்லாம் பீரோவில இருக்கும்பா..” என்று உள்ளே திரும்பிய குழந்தை அம்ம கிடப்பதைக் கண்டு பதைத்தான். “ஏம்மா” என்று அருகில் போய் கட்டிக் கொள்ள….”ஏயப்பா இப்படி சுடுது.காய்ச்சலா?” என்றான்.

அவள் “ம்” என்று முனகினாள். நெற்றி சுருக்கினாள்.

“வலிக்குதாம்மா,தடவி விடட்டுமா..”

“வேண்டாம் செல்லம்.எல்லாம் சரியாயிடும். நீ போய் படி”

“யார் சொல்லி தருவா.” என்றவன்,”சரிம்மா நீ படுத்துக்க.”என்றபடி அப்பாவிடம் திரும்பினான்.

“அப்பா மாத்ஸ் ஹோம்வொர்க் மட்டும் சொல்லி தரீங்களா..”என்றான் மிரட்சியுடன்.

இவனுக்கு அலுப்பாயிருந்தது.கொஞ்ச நேரம் சாய்ந்து படுக்கலாம் என்று தோன்றியது. இந்த நேரத்தில் படிப்பு சொல்லிக் கொடுத்து…அதை புரிய வைப்பதென்பது.. சே… தலைவலியில் உயிர் போய்விடும்.

‘சனியன் உடம்புக்கு ஏதாவது வரதுக்கு முன்ன மருந்த வாங்கி சாப்பிடாம ஏன் இப்படி உயிரை எடுக்கிறாளோ..மனுசன் இங்க செத்து வாரான். நிம்மதியா இருக்க முடியுதா’ யாரிடமோ சொல்வது போல் வார்த்தைகளை உதறினான்.

அவள் ஏமாற்றமாய் இவனைப் பார்த்தாள்.கண்ணீல் நீர் பெருகியது.

“ஆமா..கொஞ்சம் வந்திட்டா போதும் உடனே ஒப்பாரி வச்சிரு..”

குழந்தை முகம் வெளிறிப் போய் நின்றான்.

வெளியே யாரோ காலிங் பெல்லை அழுத்தும் ஓசைக்கு எழுந்து போனான்.

வெளியே நின்றவன், ” அம்மா இல்லீங்களா.” என்றான்.

“ஏன் அம்மாதான் வேணுமோ..என்னை மனுசனா தெரியலியா.”

வந்தவன் மிரண்டு பின்வாங்கினான்.”இல்ல.. நான் பிறகு வாரேன்” என்று காணாமல் போனான்.

உள்ளே வந்து உட்கார பக்கத்து வீட்டிலிருந்து குரல் கேட்டது.இவன் வெறுப்பாய் எழுந்து போய் எட்டிப் பார்த்தான்.

பக்கத்து வீட்டு பெண்ணுக்கு முகம் தொய்ந்தது. “அவங்க இல்லியா.” என்றாள்.

“அவ படுத்திருக்கா.என்ன விசயம் சொல்லுங்க.”

“ஏன் என்னாச்சி”

“ஒண்ணூமில்ல கொழுப்பு.” என்று படக்கென இவன் முகத்தை திருப்பிக் கொண்டதில் அந்த பெண் அறை பட்ட மாதிரி உணர்ந்திருப்பாள்.

சப்பென்று நாற்காலியில் வந்து விழுந்தான்.

‘எல்லாருக்கும் அம்மா,அம்மாதான் வேணுமா.அப்ப எனக்கென்று என்ன மரியாதை. சம்பாதிக்கிற எனக்கே இவ்வளவுதான் மரியாதையா’ கோபம் உடம்பெங்கும் பரவியது.

மறுபடி பையன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஏதோ கேட்க வந்தான்.புத்தகத்தை வாங்கி வீசி எற்ந்தான். “சனியனே நீ ஸ்கூல்ல ஒழுங்கா படிச்சிட்டு வராம இங்க வந்து ஏன் உயிரை வாங்குற.னீ படிச்சி கிழிச்சது போதும்.போய் படுத்து தூங்கு.” என்று முதுகில் அடித்ததில் இவனுக்கே கை வலித்தது.

பையன் ஓங்கி குரலெடுத்து அழ,இவனுக்கு கோபம் தலைக்கேறியது.”சத்தம் போடாத சனியனே” தலையில் குட்டினான்.

குழந்தை அழுது கொண்டே போய் கட்டிலில் விழுந்தான்.

இவனுக்கு எங்காவது ஓடிவிடலாம் போல் தோன்றியது…… இப்போது காபி குடித்தால் ஆசுவாசமாக இருக்கும்.என்ன செய்வது. அட.. நாம்தான் போட்டால் என்ன.காபி போடுவது பெரிய வித்தையா என்ன. பாக்டரியில் என்னென்னவோ பெரிய இயந்திரங்களையெல்லாம் இயக்குகிற தன்னால் இது கூட முடியாதா.என்று தோன்றவே அடுக்களைக்குள் நுழைந்தான்.

பால் இருந்தது.ஸ்டவ்வை பற்ற வைத்து சூடாக்கி விட்டால் போகிறது….தீப்பெட்டி….. தீப்பெட்டி எங்கே வைத்து தொலைத்தாளோ..ஒரு இடத்தில் ஒரு சாமான் இருக்கிறதில்லை.பத்து நிமிட தேடலில் கோபமும் வியர்வையும் பெருகியதுதான் மிச்சம்.

படுக்கையில் கிடந்தவளிடம் வந்து எரிச்சலானான். “தீப்பெட்டியை எங்கே வச்சி தொலைச்சே..”

“எதுக்கு.”

“எதுக்கா இருந்தா என்ன.”

“அந்த ஸ்டவ் மேலதான் இருக்கும்.”

இருந்தது.குச்சி உரசி பற்ற வைப்பதற்குள் வியர்த்தது.பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்தான்.சாதனை செய்து விட்ட மாதிரியிருந்தது..வெளியே கேட்டை யாரோ தட்டுவது போலிருந்தது.விழுந்தடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடினான்.பிச்சைகாரன்.”போ..போ..இங்க ஒண்ணுமில்ல…” விரட்டினான்.அவன் எதுவொ பேசிக் கொண்டே போனான்.

மறுபடி உள்ளே வந்தால் பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்திருந்தது.அவசரத்தில் பாத்திரத்தை தூக்கப்போக கை சுட்டது..வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.கை வலி உயிர் போயிற்று. சத்தம் கேட்டு பையன் வந்து எட்டிப்பார்த்தான். அப்பா ஏதோ வித்தை காட்டுகிறார் என்கிற மாதிரி பார்த்துக் கொண்டு நின்றான்.

“இத வச்சி பிடிங்க” பயந்து பயந்து ஒரு துண்டு துணியை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு வழியாக காபி போடும் சாகசம் முடிந்தது. வாங்கிக் குடித்த பையன் முகம் சுழித்தான்.ஏனென்று புரியாமல் இவனும் ருசி பார்க்க, குமட்டிக்கொண்டு வந்தது. காபி இப்படியா கசக்கும். இன்னும் கொஞ்சம் இனிப்புச் சேர்க்க வேண்டுமோ….

சேர்த்த பிறகும் ஏதோ கசாயம் மாதிரியானதுதான் மிச்சம்.

இவன் அப்பாடா என்று ஓய்ந்து நாற்காலியில் சாய்ந்தான்.ஒரு காபி கூட போட்டு குடிக்க சாமர்த்தியமில்லையா. நாக்கில் நீர் ஊறுகிற மாதிரி தினமும் போட்டுத் தருவாளே… அதில் அப்படி என்னதான் கலக்குவாளோ…

வாய்க்குள் நமநமவென்றிருந்தது தூரமாய் நின்ற பிள்ளை இவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ அப்பா..”

“என்னா…”

“கடையில போய் காபி வாங்கி வரட்டுமா.”

மைகாட்.. எனக்கு ஏன் தோன்றாமல் போயிற்று.எவ்வளவு எளிதான மாற்று வழி.இது கூட புரியாத முட்டாளா நான். தொழிற்சாலையில் இயந்திரங்களோடு பழகிப் பழகி புத்தியும் இயந்திரம் போலானதா….. யாராவது சாவி கொடுத்தால்தான் யோசிக்குமா…

சே… ஒரு காபி போடவே இவ்வளவு பாடுகளா. சமையலறையும் சாகச மேடைதானோ.

இப்போது நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. அதிகாலை ஐந்து மணிக்கே அடுக்களையின் உருட்டல் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்திருக்கிறான்.கோபமாய் கத்தியிருக்கிறான்.தரை பெருக்கி,பளிச்சென்று வாசல் தெளித்து கோலம் போட்டு, ஏழு மனிக்குள் காலை உணவு செய்து,குளிக்க வென்னீர் போட்டு,துணி அயர்ன் பண்ணி,குழந்தையை புறப்படச் செய்து… மதியத்திற்கு சாப்பாடு எடுத்து வைத்து…..எந்நேரமும் வேலை…. வேலைதான்….

இப்போது அவள் எழுந்து வந்தாள். அடுக்களை கிடந்த கோலத்தை பார்த்து புரிந்து கொண்டாள்.

“ நான்தான் பிளாஸ்கில காபி போட்டு வச்சிருந்தேனே.” என்று தளர்வாய் நடந்து வந்தாள்.பிளாஸ்கிலிருந்து சூடாய் ஊற்றிக் இவனிடம் நீட்டினாள். வாங்கி அருந்தியவனுக்கு தேவாமிர்தம் மாதிரி இருந்தது. இதுவரை அவள் தந்த எதையும் குறை சொல்லாமல் சாப்பிட்டதில்லை. இன்று நிறைவாய் பாராட்டலாம் போலிருந்தது.

அவள் நிற்க முடியாமல் கீழே உட்கார்ந்து, பின் அதிலேயே சுருண்டு படுத்தாள். பிள்ளை சட்டென்று அமர்ந்து அவள் தலையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். “அம்மா….அம்மா.. என்னாச்சும்மா.” என்றான் பதட்டத்துடன்.

வெடவெடக்கும் அவளைப் பார்க்க ,முதல்முறையாய், பரிதாபமாக இருந்தது. சாதாரண தலைவலி இவனுக்கு வந்தாலே வீட்டை இன்டன்சிவ் கேர் யூனிட் ஆக்கியிருப்பாள்.

ஆனால் அவளுக்கு இன்று.

பையன் அம்மாவை நெருங்கி, “ சாப்பிட்டியாம்மா? “ என்றான். அவள் நெகிழ்ந்தாள். பிள்ளையின் கையை இழுத்து பிடித்து முத்தினாள்.

இவன் விறைத்து போனான்.இந்த அனுசரணை தன்னிடம் ஏன் இல்லாது போயிற்று.அவளுக்கு ஆருதலாய் ஏன் பேச வரவில்லை. முட்டாள்தனம் செய்து விட்டது போல் உறுத்தியது.

உயிரற்ற இயந்திரங்கள் செயலிழந்தாலே அதை சரி செய்வதுவரை பசி தூக்கம் மறந்து போயிருக்கிறது. ஆனால் இது உயிர்.இது பழுதானால்… அவள் இல்லாத வீடு இயக்கமில்லாது போகுமோ…..

இனி எல்லாம் ஒன்றிலிருந்து தொடங்க வேண்டுமோ…. எல்லாம் புதிதாய்….

நெருங்கி அவளிடம் போய் அமர்ந்தான்.அவள் இவனை இத்தனை நெருக்கத்தில் பார்த்து வியர்த்தாள்.பேசத்தோன்றவில்லை. நெற்றியை தடவினான். தலை முடியை விலக்கி குனிந்து முத்தமிட்டான்.

பிள்ளை முகத்தை பொத்திக் கொண்டு சிரித்தான்.

– 23 ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *