(1987ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
அயல் நாட்டு சென்டின் மணம் குபீரென்று வீடெங் கும் பரவியது. அந்த வாசனை அவன் வரும்போது மட்டும் வரும் வாசனை. ஊரெங்கும் விளக்கேற்றி விட்டார்கள். அந்த வீடு மட்டும் இருண்டு கிடந்தது. ‘வீட்டில் ஏன் அஸ்தமித்த பிறகு கூட விளக்கு ஏற்றவில்லை’ என்று தன்னையே சேட்டுக் கொண்டு பட்டப்பா ஜன்னல் வழியாகக் காமரா அறைக்குள் வருகிற வெளிச்சத்தில் அங்கு கிடந்த மேஜை மீது பூப்பொட் டலத்தையும், பலகாரங்களையும் வைத்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தான். காரை பெயர்ந்த சுவரில் ‘ஸ்விட்ச்’ லொட லொடவென்று ஆடிக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக அதைத் தட்டிவிட்டதும் அறையில் விளக்கு எரிந்தது.
கூடத்தைத்தாண்டி வெனிச்சம் லேசாய்ப்பரவி சமையல் றையில் அவள் தரையில் படுத்திருப்பதைக் காட்டிக் கொடுத்தது. சரிந்து கிடந்த மலர்க்குவியல் மாதிரி இருந்தாள் அவள். பின்னல் தரையில் புரள, அதிலிருந்து மலர்ச்சரம் துவண்டு விழ, ஒரு சித்திரம் போல் இருந்தாள் நர்மதா. இனிமேல் ஒளிந்து கொள்வதில் லாபமில்லை என்று நினைத்து நமர்தா வெளியே வந்து நின்றாள். அவனிடமிருந்து வீசும் வாசனையை முகர்ந்து முகம் சுளித்தாள் அவள். பட்டப்பா மட்டும் தன்மனைவியை ஆசையோடு, ஆவலோடு ஏற இறங்கங் பார்த்தான். வெட வெட வென்று ஒரு கொடிபோல செக்கச் செவேல் என்று சிலைமாதிரி இருந்தாள். அவள் வெடுக்கென்று மூகத்தைத்திருப்பிக்கொண்டாள்.
“என்ன நர்மதா வந்திருக்கிறவனை வாங்கன்னு சொல்ல மாட்டேங்கறே-“
அவள் முகம் சிவந்தது.
“உங்களை இங்கே வரச்சொல்லி யார் கூப்பிட்டது?”
“உன்னைப் பாக்கணும்னு ஆசையா இருந்தது நர்மதா எப்பப்பாத்தாலும் ஒன் நெனப்புத்தான் எனக்கு—’
அவள் சூள் கொட்டினாள். கைகளைத் தூக்கி நெட்டி முறித்தாள்.
“பாத்தாச்சோல்லியோ? போங்களேன்-”
பட்டப்பா அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். மேஜை மீது வைத்திருந்த பூவையும், பொட்டலங்களையும் எடுத்து வந்து, “இந்தா! இதை வாங்கிக்கோ. பூ வைச்சுக்கோ. நீ தலை நெறய பூ வச்சுண்டா ஜம்முன்னு இருக்கு. நாம ரெண்டு பேருமாவே டிபன் சாப்பிடலாம். இன்னிக்கி புதுப்படம் ரிலீஸ். உன் அண்ணாவும் மன்னியும் போயிருப்பான்னுதான் தைரியமா வந்திருக்கேன்-”
நர்மதா பரிதாபமாக அவனைப்பார்த்தாள். ஓட்டிப் போயிருக்கும் கன்னங்கள். சோகை வெளுப்பாக ஓர் அசட்டு வெளுப்பு. பூனைக்கண்கள். மழ மழவென்ற முகம். வளைந்த மூக்கு. செம்பட்டை பறக்கும் கிராப்பு வேற ஆண்மையின் கம்பீரம் லவ லேசமும் இல்லாமல் ஆணாகப் பிறந்து விட்டிருந் தான் அவன். தொள தொளவென்ற ஷர்ட்டும், தெருவைப் பெருக்குகிற வேஷ்டியும் கட்டியிருந்தான்.
அவன் அவளுக்கு அருகில் நெருங்கி வந்து நின்றான். மேலும் சென்டின் மணம் குபீரென்றுவீசியது. அவள் நகர்ந்து நின்றாள். எதுக்கு இபபடி நாட்டுப் புறத்தான் மாதிரி செண்டை ஊத்திண்டு வரேள்? சாராய நெடியே தேவலாம் போல இருக்கு-‘,
“அப்ப நாளைலேருந்து குடிச்சிட்டு வாங்கறயா?”
“உக்கும்… இதுக் கொண்னும் கொறச்சல் இல்லை-”
அவனுக்கு ஆசை அடித்துக்கொண்டது. அவளைத்தொட் டுப்பார்க்க வேண்டும். அந்த நீண்ட பின்னலை வருட வேண்டும். கொழு கொழு வென்றிருக்கும் கன்னங்களை வருட வேண்டும்.
அவள் ஜன்னல் வழியாக. வெளியே பார்த்துக் கொண்டி ருந்தாள். கோவிலிலிருந்து நாதஸ்வர ஒலி கேட்டது.
“கடவுளே! கடவுளே! என்னை ஏமாத்தினது போதும் இதை இந்தஜடத்தை இங்கேயிருந்து போகச்சொல்லேன்-” அவள் திடீசென்று உரத்தக்குரலில், “வந்தாச்சு, பாத்தாச்சு போங்க இங்கேயிருந்து” என்றாள்.
கையில் பிரித்து வைத்துக் கொண்டிருந்த அல்வாப் பொட்டலம் பிரித்தபடியே இருந்தது.
அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
நர்மதாவின் மனசில் ஒரு சலனம் ஏற்பட்டிருக்கவேண்டும். “சாப்பிட்டுட்டுப்போறேளா?” என்று மெதுவாகக்கேட்டாள்.
“உம்” என்றான் பட்டப்பா.
அலமாரியின் கீழே இருந்த தட்டை எடுத்து வைத்துப்பரி மாறினாள் அவள். பரிந்து பரிந்து சாதம் போட்டாள். மள மளவென்று சாப்பாடு ஆயிற்று.
“கிளம்பட்டுமா நர்மதா?”
“உம்… கிளம்புங்கோ … இன்னும் கொஞ்ச நாழியானா எங்கம்மா வந்துடுவர். அப்புறமா அண்ணாவும், மன்னியும் வருவா…” மறுபடியும் அவன் அவள் அருகில் நெருங்கி வந்து நின்றான்.
ஓ! இது என்ன ஆசை? ஆண்பிள்ளை என்று உருவத்தில் இருந்து விட்டால் போதுமா? நர்மதா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு வாசற்கதவைத்திறந்தாள்.
அவன் படியிறங்கி, தெருவில் நடந்துசென்றபோது அவள் மனம் வேதனைப்பட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது. ஒரு ஆண்மகனின் நெருக்கம் அவள் மீது நெருப்பாகத் தகிப்பதை அவள் உணர்ந்தாள். மட மடவென்று பலகாரப் பொட்டலங்களை எடுத்துத் தெருவில் வீசினாள். புஷ்பத்தை எடுத்து எங்கோ வைத்து விட்டாள். பட்டப்பா வந்ததோ போளதோ தெரியாமல் கும்மட்டியைப் பற்றவைத்து குறைந்திருந்த சாதத்துக்குப்பதிலாக சமைத்தும் வைத்தாள்.
அம்மா, அண்ணா, மன்னி வருவதற்கு வெகுநேரம் இருந்தது. காமரா அறைக்குள் சென்று ஜன்னல் ஓரமாகச் சாய்வு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள், கடைத்தெருவிலிருந்து போகிறவர்கள் பூப்பொட்டலங்களும், காய்கறிகளும் வாங்கிப் போனார்கள். வீட்டிலே மகளுக்கோ, மனைவிக்கோ, தாய்க்கோ எல்லோரும் பூ வாங்கிப் போகிறார்கள்.
அம்மா ஆசை ஆசையாக இந்தக் கல்யாணத்தை அந்த அழகான புருஷனோடு நட த்தி வைத்தாள். அவள் கண் டாளா பட்டப்பாவின் குறையைப்பற்றி?
நர்மதாவின் நெஞ்சத்தில் அந்த நினைவுகள் பொங்கி எழுந்தன. சில நினைவுகள் மனதில் நிலைப்பதில்லை. சிலநிலைத்து நின்று விடுகின்றன. கண்ணீர் பெருகத் தேம்பித் தேம்பி அழுதாள். இந்த மனுஷன் எதற்காக என்னைத்தேடி வரு கிறான்.? என்னைத்தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிறான்? அதற்கு மேலே இந்த உடம்புக்கு ஒரு தேவை இருக்கிறதே. அதை அதை…இவனால்?…
வாழ்க்கையைச் சுவையோடு அனுபவிக்க அவளுக்கு ஆசை. நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும் அவளுக்கு காரில்போக ஆசை. நகை நட்டுகள் பூட்டிக்கொள்ள ஆசை. பட்டுப்பட்டாக உடுத்திக்கொள்ள விருப்பம். கண்ணும், மன மும்நிறைந்த கண்வனை அடைய விருப்பம்.
இத்தனை எண்ணங்களும், கனவுகளும் சரிந்து போயின. திடும்மென்று அம்மா கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக் கொண்டு வந்தாள். நம்ப அந்தஸ்த்துக்கு இந்த வரன் கிடைச் சதேபெரிய பாக்கியம் என்றாள்.
நர்மதாவின் நெற்றியெங்கும் வியர்வைத்துளிகள் அரும்பின. முந்தானையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டு அழிந்துபோன பொட்டைச் சரி செய்து கொண்டாள்.
தெருவில் போவோர் வருவோர் குறைந்து விட்டது. யார் வீட்டிலிருந்தோ ரேடியோவில் பாடல் கேட்டது. எதிர் வீட்டுத் தென்னை மரத்தின் கீற்றுகளுக்கிடையே நிலா தெரிந்தது.
அந்தத்தனிமையும், இரவும் அவளுக்குக் கசந்தது. அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அத்தியாயம்-2
அவளுக்குத் திருநீர்மலையில் கல்யாணம் நடந்தது. முதன் முதலில் பட்டப்பா அவள் கையைப் பிடித்தபோது அது ஒரு பெண்ணின் கையைப்போல மெத் மெத்தென்று மிருதுவாக இருந்தது. ஆண்மகனின் அழுத்தமான பிடியாக இராமல் தோழிப்பெண் ஒருத்தி மிக நளினமானக் கையைப் பிடித்து வருடுவதுபோல இருப்பதை உணர்ந்தாள். பட்டப்பா அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. விளையாட்டுப் பையன் போல எதை எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தான். நர்மதாவுக்கு பிள்ளைவீட்டார் போட்டிருந்த நகை களைப் பார்த்து பூரித்துப்போனாள் அவள் அம்மா.
சிவப்புக்கல் நெக்லஸ், இரட்டைவடம் சங்கிலி, காதில் நவரத்தினத்தோடுகள், கையில் நாலைந்து தங்க வளையல்கள், ஒரே சமயத்தில் ஐந்தாறு பட்டுப்புடவைகள். என்னவோ திடீரென்று அஷ்டலெஷ்மிகளின் சாந்நித்தியம் தன் வீட்டில் ஏற்பட்டு விட்டமாதிரி அந்த அம்மாள் மனம் நெகிழ்ந்து போயிருந்தாள்.
கல்யாணத்தன்று பகலே திருநீர்மலையிலிருந்து எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். திடீரென்று ஓர் அதிஷ்ட தேவதை தன் மீது ஈருணை மழை பொழிந்து தன்னைப் பணக்காரியாக்கி விட்டதை நி னைத்து மலைத்துப் போயிருந்தாள் நர்மதா. எல்லாப்பெண்களையும் போல அவள் புக்ககம் புறப்படும்முன் கண்கலங்கினாள்.
அவள் அம்மாவும், மன்னியும், அண்ணாவும் அழுதார்கள். நர்மதாவால் தனக்கு விடிவுகாலம் வந்து விட்டது என்று அவள் அம்மா பெரிதும் நம்பினாள்.
வளைந்து வளைந்து போகும் அந்தச்சாலையில் எல்லோரி டமும் விடைபெற்றுக்கொண்டு தன் கணவனுடன் அவள் பஸ்ஸில் புறப்பட்டாள். கொஞ்சம், கொஞ்சமாக திருநீர் மலையின் தோற்றம், கோயில் எல்லாம் பின் தங்கின.
அடுத்து ஒரு ஊரில் பஸ் நின்றபோது பட்டப்பா அவளுக்கு ஆசையாக ஒரு பந்து மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தான். பான்ட்டா உடைத்து எடுத்து வந்தான். பழம் வேண்டுமா என்று கேட்டான்.
அவள் எதிர்பார்த்தது வேறு. அவனிடம் ஒரு நெருக்கம். ஒரு ஆவலானபார்வை. குறைந்தபட்சம் மேலே ஒட்டியாவது உட்காருவான் என்கிற எதிர்பார்ப்பு. ஊஹும்…
பஸ்ஸின் ஆட்டத்தில் பட்டப்பா தூங்கி வழிந்தான். அந்த சமயங்களில் அவன் தலை லேசாக அவள் தோளின் மீதும், கன்னங்களின் மீதும் சாய்ந்து சாய்ந்து நிமிர்ந்தது. அவள் சிலிர்த்துப்போனாள். அவன் சட்டென்று விழித்தபோது அவளைப்பார்த்து அசடு வழியச் சிரித்தான். ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்ட குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்துத் தலை குனிந்து கொண்டான்.
ஒரு பெண்ணின் இயல்போடு கூடிய ஆண்மகனாக அவன் இருப்பதை அவள் தெரிந்து கொண்டாள்.
எதிர் பெஞ்சில் இருந்த அந்த நடுத்தரவயதுத்தம்பதிகள், அவர்களின் பேச்சு, பார்வை பறிமாறல், நெருச்கம், கம்பீர மான அவன் தோற்றம், வலுவான அந்தக்கரங்கள், தீட்சண்மான பார்வை.
நர்மதாவின் கழுத்தில் இருந்த அத்தனை நகைகளும், உடலைச்சுற்றிக் கொண்டிருந்த பட்டுப்புடவையும் சுமையாக இருந்தது.
ஆயிற்று, ஊர் வந்தது. ஊருக்குப்பெயர் என்ன வைத்து வாழுகிறது? ஏதோ ஒரு ஊர். தெருவே அவளையும், அவனை யும் வேடிக்கை பார்த்தது. “பட்டப்பா பெண்டாட்டியைப் பாருடி… ராஜாத்தியாட்டம் இருக்கா. இதுக்குப்போய் ப்படி ஒருத்திவந்து வாச்சிருக்குப்பாரு…”அவர்கள் உரக்கப் பேசாவிட்டாலும் ‘கிசு கிசு’ வென்று பேசிக்கொண்டார்கள்.
பட்டப்பாவின் அக்கா விதவை. பக்கத்து வீட்டுப்பூரணி வாய் கொள்ளாச்சிரிப்புடன் தட்டுநிறைய ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்தாள். வாசலில் பெரிசாகப் படிக்கோ லம்போட்டு, செம்மண் இட்டிருந்தது. குலையோடு வாழை மரங்கள் சாய்ந்து நின்றன. மாவிலைத் தோரணங்கள் அசைந்தன.
“பெண்டாட்டி கையைப் புடிச்சுக்கோ பட்டப்பா…… கிழக்கே பார்த்து நில்லுங்கோ” என்றபடி பூரணி வந்தாள். அவள் மெட்டி குநிங்கியது, தாளமிட்டது. ஆரத்தியைச் சுழற்றிக்கொண்டே நர்மதாவை நிமிர்ந்து பார்த்தாள். சொக்கிப்போனாற்போல ஒரு பார்வை. சந்திரகலை மாதிரி வளைந்த நெற்றி. அதில் படிந்த சுருட்டைக் கூந்தல். எடுப் பான மூக்கு. வைரம் மின்னியது. மூக்குத்தி சில பேருக்கு உடம்போடு பிறந்த மாதிரி ரொம்பப் பொருந்திப்போய் விடுகிறது.
கங்கம்மா தம்பியையிம், தம்பி மனைவியையும் ஆசைதீரப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் அரும்பு கட்டிவிட்டது.
“வலது காலை எடுத்து வைச்சு வாம்மா-”
நர்மதர் உள்ளே வந்தாள். கூடத்தில் பளபளவென்று சங்கிலிகள் கோத்த ஊஞ்சல் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. சுவர் நிறைய தஞ்சாவூர் படங்கள். எதிர் பக்கத்து அறையில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. புது மெத்தைகள் சுருட்டி வைத்திருந்தார்கள்.
”உள்ளே வாம்மா… மொதல்லெ காப்பி சாப்பிடு…அப்பு றமா வீட்டைச்சுத்தி பாக்கலாம்” என்று பரிவோடு கங்கம்மா நர்மதாவை உபசரித்தாள்.
நுரை ததும்பும் காப்பி கொண்டுவந்து வைத்தாள். பட்டப்பா இவளைக்கவனிக்காமல் என்னவோ பேசிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.
சமையலறையிலிருந்து கம்மென்று பாயசம் மணத்தது. கசகசர் தேங்காய் அரைத்த பாயசம். கூடவே நெய்யும் விட் டிருப்பார்கள் போலிருக்கிறது.
நர்மதா குளிக்கப் புறப்பட்டாள். ஊர் நாட்டுப்புறம் மாதிரி இருந்தாலும், கங்கம்மா தன் வீட்டில் எல்லா வசதிக ளும்செய்திருந்தாள். குளியலறை வசதியாக இருந்தது. அங்கே, அம்மா ஊரில் விடிய நாலு நாழி முன்பே எழுந்தி ருந்து யாரானும் வராளா வராளான்னுபார்த்துண்டு அளிசர அவசரமா குளிச்சுட்டு வந்து பழக்கம். ஆசை தீர ஜலமா கொட்டிண்டு குளிக்கணும்னு அங்கே தொட்டியில் தளும்பிய தண்ணீரைப் பார்த்ததும் நினைத்துக் கொண்டாள் நர்மதா. கிணற்றிலிருந்து இரைத்துக் கொட்டினால் உள்ளே தொட்டி யில் குபு குபுவென்று ஜலம் விழும்படி கட்டி இருந்தார்கள்.
பட்டப்பா உள்ளே இருந்து ‘பாரின்’ சோப்புக்கட்டி ஒன்று எடுத்து வந்தான். ரேழியிலேயே அந்தச் சோப்பு கம் மென்று மணந்தது ‘இந்தா’ என்று கொடுத்தான். அவளுக்கு லஜ்ஜையாக இருந்தது. விரல்கள் அவன் கையை வருடுகிற மாதிரி சோப்பை வாங்கிக்கொண்டாள். “மஞ்சள் பூசிக்கிற வழக்கம் உண்டா” என்று கேட்டான்.
அவள் தலையை ஆட்டியவுடன் உள்ளேயிருந்து ஒரு டப்பா நிறைய கஸ்தூரி மஞ்சள் பொடியை எடுத்துக்கொண்டு வந் தான். “பட்டணத்துலே கந்தசாமி கோயில்கிட்டே வாங்கி னது, தண்ணி போறுமா இல்லை இன்னும் இரண்டு வாளி இரைச்சு ஊத்தட்டுமா” என்று கேட்டான்.
அவளுக்கு உடம்பை என்னவோ செய்தது. தண்ணி வரும் அந்த இடுக்கு வழியாக அவன் அவள் குளிக்கிறதைப் பார்க்க ஆசைப்படறான் போல இருக்கு… என்று நினைத்துக் கொண்டாள்.
“வாண்டாம்…நிறைய தண்ணி இருக்கு-“
அவள் உள்ளேபோய் கொஞ்சம் கொஞ்சமாகக் கதவைச் சாத்திய படி கதவின் இடைவெளி வழியாக அவனைப் பார்த்தாள்.
உஹும்… ஒரு வேலைக்காரன்-இல்லை ஒரு வேலைக்காரி கேட்கிற மாதிரி தண்ணிவேணுமா, மஞ்சள் வேணுமா என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டான்.
வெற்று உடம்பில் சோப்பைக் குழைத்துப் பூசி நுரை வழியும் தன் உடம்பிலே லயித்துப்போனாள். அப்படியொரு நிறம். செந்தாழைபோல ஒரு மஞ்சள் மினுமினுப்பு. வெறும் பழயதுக்கும், எரிச்சக்குழம்புக்குமே இப்படி ஒரு மினுமினுப்பு படர்ந்து கிடந்தது.
தலையைச்சுற்றித் துண்டைக்கட்டிக்கொண்டு, புடவையைச் சுற்றியபடி உள்ளே வந்தாள். கங்கம்மா அவள் கால்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். வாழை மரத்தின் அடித் தண்டுபோல் உறுதியாக, வர்ளிப்பாக இருந்தன. கல்யாணத் தில் இட்டிருந்த நலங்குப்பூச்சு லேசாகக் கலைந்திருந்தது.
“இந்த உள்ள போய்க் கட்டிக்கோ. சுவாமிகிட்டே தட்டில் புதுப்புடவை, ரவிக்கை இருக்கு-“
வெள்ளித்தட்டில் தாமரை வர்ணத்தில் ஜரிகைக்கரை போட்ட புடவை இருந்தது. ரவிக்கை இருந்தது.
நெற்றிக்கு இட்டுக் கொண்டவுடன் திரும்பி சுவாமி படங் களைப்பார்த்தாள். மூக்கில் நத்து சிரிக்க சாரதாம்பிகை நடு நாயகமாய்க் கொலுவிருந்தாள். சந்திரகலை, அக்ஷமாலை, சுவடி ஹே அப்பா! அம்பாளின் கரங்களில் எதுதான் பொருந்த வில்லை. கரும்பு வில்லும், கிளியும், பாசாங்குசமும் எல்லாமே பொருத்தம்தான்.
நெற்றி தரையில்பட விழுந்து நமஸ்கரித்தாள். படத்தில் தொங்கிய சண்பக மாலையைக்கிள்ளி எடுத்து முடிந்த கூந்த லில் தொங்கவிட்டபடி வெளியே வந்தாள்.
அந்தத்தெருவின் பெண்கள் ஏதோ சாக்குவைத்துக் கொண்டு வந்து வந்து போனார்கள். கங்கம்மாவின்கிட்டே போய் தாழ்ந்தகுரலில் நர்மதாவின் அழகை வர்ணித்தார்கள். கூடத்தில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பட்டப்பாவை ஒருத்தி சீண்டினாள்.
இன்னிக்கி எங்காத்துலே பூக்கற குண்டு மல்லிப் பூவைப் பறிச்சுண்டு வந்து…”
”ஹீ..ஹீ…” என்றான் பட்டப்பா,
“வாடி போகலாம். அதுக்கு ஒண்ணும் புரியலை-” என்றாள் இன்னொருத்தி.
“இவனுக்குப் புரிஞ்சர் என்ன புரியாட்டா என்ன? அவ புரியவச்சுட மாட்டா? ஹும் தங்கசிலையாட்டமா அப்படி ஒரு மினு மினுப்புங்கறேன்-”
சாப்பாடுஆயிற்று. கட்டித்தயிரைஊற்றி கைவழிய சாப்பிட்டு எழுந்தபோது நர்மதாவுக்கு ஊரில்அம்மாவின் நினைவுவந்தது. யார் வீட்டிலோ அடுப்படியில் நாள் பூராவும் வேகு வேகு என்று வெந்து கொண்டிருக்கிறாளே.
பகல் தூக்கத்தில் சுனா கூட வந்தது. பட்டப்பா அவளிடம் நெருங்கி வந்து.. அப்பாடா! எப்படி வேர்த்துக்கொட்றது?…
அத்தியாயம்-3
நர்மதாவுக்குக் கல்யாணம் நடந்ததே ஒரு கனவு மாதிரி இருந்தது. “இந்தப் பொண்ணுக்கு எப்பவிடியப்போறதோ” என்று சொல்லிக்கொண்டே தான் நர்மதாவின் தாய் வெங்கு லட்சுமி காலையில் எழுந்திருக்கிற வழக்கம். பழையதுக்கும் எரிச்ச குழம்புக்கும் இப்படியொரு வளர்த்தி இருக்க முடியுமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். பத்து குடித்தனங்களுக்கு நடுவில் நர்மதாவை இளவட்டங்கள் கண்களாலேயே கொத்திக் கொண்டிருந்தனர். அதிலே சாயிராம் என்று ஒருத்தன். இவளை எப்படியாவது சினிமாவில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்.
“நர்மதா! ஒரு டம்ளர் பானை ஜலம் கிடைக்குமா? நர்மதா! சூடாகாப்பி இருந்தா கொடேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்து உட்காருவான். வெங்குலட்சுமிக்கு பற்றிக்கொண்டு வரும். சந்தனச்சிலைக்கு தைத்துப்போட்ட மாதிரி கைப்பிதுங்கி வழிய ரவிக்கை போட்டுக் கொண்டு அவ னுக்கு பானை ஜலமும், சூடான காப்பியும் கொண்டு வந்து கொடுப்பாள் நர்மதா. அவன் தயவு அவர்களுக்கு வேண்டி இருந்தது. பெரிய பெரிய புள்ளிகள் அவனுக்கு சிநேகம். அவர்களின் வீட்டில் சமைக்க பொரிசு செய்து அனுப்புவான்.
“நீயும் கூப்போயேன் நர்மதா” என்பான் சாயிராம்.
“எல்லாங்கிடக்க அவ எதுக்கு…”
“வரட்டும் மாமி! நாலு பெரிய மனுஷாளை தெரிஞ்கண்டா நல்லதுதானே?”
“அவ எந்த மனுஷாளையும், தெரிஞ்சுக்க வாண்டம்…”
நர்மதாவுக்கு சினிமா என்றால் உயிர். ஓசிப் பாஸ் கொண்டு வந்து கொடுப்பான் சாயிராம்.
ஒரு தடவை வெங்குலட்சுமி தலையில் மடேர் மடேர் என்று போட்டுக் கொண்டு ஊமை அழுகையாக அழுதாள்.
“பாவிப்பெண்ணே! உடம்பும், நீயும் செதுக்கின பொம்மை மாதிரி இருக்கியே. அதைப்பாத்துட்டு அவன் இளிச்சிண்டு இளிச்சிண்டு வராண்டி. ஏமாந்துடாதேடி சினிமாவும் வேண் டாம். இனிமே அவன் பாஸ் குடுத்து நீ போனே…”
நர்மதா பயத்துடன் தாயைப் பார்த்தாள்.
“நான் ஒரு முழம் கயித்துலே தொங்கிடுவேன்-” என்று முடித்தாள் வெங்குலட்சுமி.
“இதெல்லாம் என்னம்மா அமர்க்களம்? சினிமாவுக்குப் போனால் என்னவாம்?” என்றான் நர்மதாவின் அண்ணா கிச்சாமி.
“போவேடா! நீ ஒலகத்தாரைப்போல கல்யாணம் கார்த்தீன்னு பண்ணின்டு போறே. இவளுக்கு ஒரு வழி பொறக்க வாண்டாமா?”
தங்கையின் அழகை முதலர்க வைத்து கிச்சாமியும், அவன் மனைவியும் தங்கள் சினிமா அபிலாஷைகளை பூர்த்தி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால், சிச்சாமி சாயிராமின் பாஸில் சினிமா பார்க்க முடியவில்லையே என்று வருந்தவில்லை. எப்படியோ அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். வெங்குலட்சுமி எங்கேயோ க்ஷேத்ராடனம்கிளம்பிப்போனாள். பத்து நாளைக்கு ஹாய்யா பகவத் தரிசனம் பண்ணிண்டு “இந்தப் பொண்ணுக்கு ஓரு நல்ல வழியைக் காண்பிடா” என்று கடவுளை வேண்டிக்கொள்ளக் கிளம்பிவிட்டாள்.
திரும்பி வரும்போதுதான் கங்கம்மாவை ரயிலில் சந்தித் தாள். முதலில் அவள் தானா என்பதே சந்தேகமாக இருந்தது. ஓடிசலாய் இருந்தவள் சதை போட்டிருந்தாள். விதவைக் கோலம் வேறு. பட்டுச்சுங்கடிப் புடவை, நவரத்தினமாலை, புதையப் புதைய தங்க வளையல்கள் என்று அமர்க்களமாக இருந்தாள் கங்கம்மா. “நீங்க எந்த மட்டும்?” என்று கேட் டாள் கங்கம்மா. குரலும் கங்கம்மா குரல்தான்; ஒரு மாதிரி ‘கீச் கீச்’ சென்று
“நீங்க… கங்கம்மா இல்லே?”
“ஆமாம். நீ வெங்குதானே? அப்பவே நெனச்சேன். இந்த மாதிரி பரங்கிப்பழம் போல ஒரு சிவப்பை நான் அப்புறம் யார்கிட்டேயும் பார்க்கலை.”
இருவரும் நெருங்கி வந்து உட்கார்ந்தார்கள்.
“சிவப்பாவது மண்ணாவது! எல்லாம் போச்சு. அவர் போனப்பறம் எத்தனையோ திண்டாட்டம். கிச்சாமியைத் தான் உனக்கு தெரியுமே. சரியாப்படிக்காம இப்ப பலகாரம் போட்டு டவுன் ஸ்டால்லே கொண்டுபோய் விக்கறான். அவ னுக்குக் கல்யாணம் ஆயிடுத்து. எம் பொண் நர்மதாவை நீ பாத்திருக்கமாட்டே…”
“பொண் பொறந்துதா?”
“பொறந்து, சாறகாலத்துலே எங்கழுத்தை அறுத்துண்டு இருக்கு-”
”சீ..சீ அப்படியெல்லாம் பேசாதே. படிக்க வக்கிறது தானே. வேலைக்குப்போயி சம்பாதிச்சுட்டுப்போறா-”
“படிப்பு ஏறினாத்தானே? கதை புஸ்தகம்தான் படிப்பர் அதுவும் சினிமா கதை புஸ்தகம். நன்னா சினிமா பார்ப்பா”
கங்கம்மா சிரித்துக் கொண்டாள்.
“இப்ப யார்தான் சினிமாவுக்கு போகாம இருக்கா? அதை விடு. நான் உன்மாதிரி இல்லை. வசதியா இருக்கேன். நீதான் ரெண்டாந்தாரமாபணக்காரனுக்குவாழ்க்கைப்படறதைவிட பால்யமா இருக்கிறவனுக்கு மொதல் தாரமா வாழ்க்கைப் பட்டே வறுமை, இல்லாமைன்னு அனுபவிக்கிறே. நான் அப்படியில்லே. அறுபது வயசுக்காரருக்கு மூணாந்தாரமா கமுத்தை நீட்டினேன். ஐஞ்சாறு வருஷம் வாழ்ந்திருப்பேன். வாழ்க்கைனு என்னஅனுபவிச்சேன்? ஒன்னுமே இல்லை. அவர் தெருக்குறட்டிலே படுக்கையும், நான் கூடத்து உள்ளே படுக் நையுமா கழிஞ்சுது. எனக்கு உடம்புக்கு தேவைங்கற ஆசை ல்லை… நகை நட்டு, பூமி காணிங்கற ஆசைதான் அதிகம். இரண்டு தாரங்களும் கழட்டி வச்சுட்டுப்போன நகைகளை அப்படியே எடுத்து எங்கிட்டே குடுத்தார். எங்கேட்டேர்ந்து ஒண்ணையும் எதிர்ப்பார்க்கலை”
வெங்குலட்சுமி ஆச்சர்யமாக கங்கம்மாவைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“வயசுக்காலத்துலே தனக்கு சிச்ருஷை செய்ய பெண் டாட்டின்னு ஓருத்தி இருந்தாத்தான் ஊருக்கும், தர்மத்துக் கும்பயந்து நடப்பான்னு என்னைக்கல்யாணம் பண்ணிண்டா ராம். வாய்க்கு ருசியா சமைச்சுப்போட்டேன். கம்பீரமா அவ்ளோ பெரிய வீட்டுலே மகாராணி இரும்புச்சாவிகள் குலுங்க வளையவந்தேன். நெல்லும், வாழையும், பலாவும், மாவும் கொட்டிக் கிடக்கிற வீட்டிலே நடந்து வளைய வறதே ஒரு பாக்கியமா பட்டுதுடி வெங்கு. நான் என் பொறந்தாத் துலே பாதி நாள் பட்டினியர் இருந்தவ. இப்படி அஷ்டலட் சுமிகள் நர்த்தனமிடும் வீட்டிலே நான் மகாலட்சுமியா இருந் தேன். அவர் நன்னாந்தான் இருந்தார். திடும்னு உடம்புக்கு முடியாமப் போயிடுத்து “கங்கம் மா! உன் மாதிரி ஒரு திட வைராக்கிய சாலியை நான் பார்த்ததில்லை. சரீர சுகம்தான் பிரதானம்-ஏன் அது இயற்கையானதும் கூட என்று நினைக் கிற பால்ய வயசு உனக்கு. அந்த ஆசைகளை பொசிக்கிண்டு ஆறேழு வருஷமா நீ நெறஞ்ச மனசோட எங்கிட்டே இருக்கியே”ன்னு அழுதார். “வேண்டிய பணம காசு இருக்கு நீ இஷ்டபடி இருக்கலாம்”ன்னு வேற சொல்லிட்டுப்போனார்.
ரயில் ஏதோ ஒரு ஐங்ஷனில் நின்றது. மேலே பலசையில் படுத்திருந்த பையனைகங்கம்மா எழுப்பினாள். பையன் பூஞ்சை யாகஇருந்தான். “போயி, நாலு பொட்டலமும், காப்பியும் வாங்கிண்டுவாடா…” என்று வெள்ளிக்கூஜாவைக் கொடுத்து அனுப்பினாள். “என் தம்பி… எங்கம்மா அப்பாவுக்கு நான் மூத்தவ. இவன் கடைசி. இவன் பொறக்கறத்துக்கு முன்னா டியே நீ ஊரை விட்டுப்போயிட்டே.”
“படிக்கிறானா?’
“ஏதோ படிச்சான். சிலபேருக்கு எங்கே படிப்பு ஏர்றது, என்னோட துணையா இருக்கான். என் சொத்தையெல்லாம் யார் ஆளப்போறா, அவனுக்குத்தானே?…”
வெங்குலட்சுமி சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
சினிமா பாஸ் கொடுத்து அவளை வளைக்கப்பார்க்கும் சாயிராம். எதிர் வீட்டு காலேஜ் பையன் வீசும் கண் வீச்சு. கல்யாணமான பக்கத்து வீட்டுக்காரர் ‘அடியே நர்மதா! இங்க சித்தே வந்துட்டுப்போயேன். மாமி ஒண்டியா அடுப்ப டியிலே கஷ்டப்படறா பாரு. தொட்டில்லே குழந்தை கிடந்து கத்தறது பாரு என்று விடுக்கும் அழைப்பு. அவர் மனைவிக் குத்தெரியாமல் வாங்கி வந்து கொடுக்கும் மல்லிகைப்பந்து.
“ஏதுடி இவ்வளவு பூ?”
அவள் விழித்திருந்தாள்
“பக்கத்து வீட்டு மாமா வாங்கிக்கொடுத்தார்”
“அவர் ஏண்டி உனக்கு பூ வாங்கித்தரனும்? அப்படி யெல்லாம் வாங்கப்படாதுடி…”
“வாங்கிண்டா என்ன? அவர் ஆசையா வாங்கிண்டு வந்து குடுக்கறார். மாமிக்கு சொல்லாதே. என்னைக்கொன்னுபுடு வாங்கறார். நான் ஏன் சொல்லப் போறேன் மாமான் னுட்டேன். நீதான் ஒரு முழம் பூ வாங்கி எனக்கும் மன்னிக்கும் கிள்ளிக் குடுக்கிறியே” தலை நிறைய பூ வைத்துக்கொள்ளும் ஆசையில் இந்தப்பாவிப் பொண் ஏமாந்துட்டு நிக்கப்போ றதே” என்று எத்தனை நாளைக்கு மருக முடியும்?
கங்கம்மா கூடையிலிருந்து பழங்களை எடுத்து வைத்தாள். தம்பி வாங்கி வந்த பொட்டலங்களைப்பிரித்தாள்.
“என்ன வெங்கு! ரயில்லே ஒண்ணும் சாப்பிடமாட்டியா? மடி ஆசாரமெல்லாம் வச்சுண்டு இருக்கியா?”
“சே…சே… அதெல்லாம் ஒண்ணும் இல்லேடி.”
“அப்ப சாப்பிடு…”
இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். மெதுவாக வெங்கு லட்சுமியே பேச ஆரம்பித்தாள்.
நர்மதா ஒருத்திதான் தனக்குப் பாரமாக இருப்பதாகச் சொன்னாள். பெண்ணின் அழகைப்பற்றி வர்ணித்தாள். அவளை கல்யாணம் பண்ணிக்கொடுத்து விட்டால் வேறு எதுவும் தனக்குத் தேவையில்லை என்று பேசினாள்.
பட்டப்பா அவசர அவசரமாகத்தின்று விட்டு காப்பியைக் குடித்தான். அழகான பெண் என்று காதில் விழுந்ததும் அக்கர்வையும், வெங்குலட்சுமியையும் மாறி மாறிப் பார்த்தான்.
ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வருவதாகவும் கங்கம்மா சொன்னாள்.
பெண் பார்க்க வந்த அன்றே கங்கம்மா தன் பணப்பெரு மையைப் பறைசாற்றிக்கொண்டாள். தட்டு தட்டாகப் பழமும் புஷ்பமும், உயர்தரமான ரவிக்கைத் துண்டும், எட்டு குடுத்தனங்களும் மூக்கில் விரலை வைத்தார்கள். சட்டென்று திருநீர்மலையில் கல்யாணமும் ஆயிற்று. செலவெல்லாம் கங்கம்மாவினுடையது. பெண் வீட்டார் கைகளை வீசிக் கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
சாயிராமும் வந்தான். பட்டுப்புடவையும், ப்ளவுஸும் ஆசீர்வாதம் பண்ணினான். “மாப்பிள்ளை சார்! நீங்க கொடுத்து வச்சவர் பூஜை பண்ணியிருக்கனும் எங்க நர்மதாவைக் கல்யாணம் பண்ணிக்க. கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தா அவளைப் பெரிய ஹுரோயின் ஆக்கி இருப்பேன்… ஹும்…” என்று நெடிய மூச்சு விட்டான்.
உண்மையிலேயே அழகியான நர்மதா அந்த அழகைத் தான் ஆராதிக்கப் போகிறான் என்று பகலெல்லாம் கனவில் லயித்திருந்ததில் ஓன்றும் ஆச்சர்யமில்லை. அந்த வயதுக்கே உரிய போக்குதான் அது.
– தொடரும்…
– அவள் விழித்திருந்தாள் (நாவல்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1987, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.