(1987ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-13
கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்வதுதான் இல்லறம். அந்த வீட்டில் கருத்து ஒருமிப்பதற்கு இடமே இல்லை. நர்மதாவும், பட்டப்பாவும் வட துருவமும், தென் துருவமுமாக இருந்தார்கள். சரீர இச்சையைக் கடந்துவிட்ட ஞானி என்று சொல்லமுடியாது. அந்த ஏக்கம் அவளைத் தின்று கொண்டேயிருந்தது. மனைவி ரகசியத்தில் எப்படியோ இருந்துட்டுப் போகட்டும். அது ஒன்றும் தன்னை பாதிக்காது. ஊர் உலகத்தின் முன்னால் கணவன் மனைவியாக வாழவேண்டும்.
இப்படியொரு போலித்தனம். அவள் வர வர எதிலுமே பிடிப்பற்றுப் போனாள். தலை சீவிக்கொள்வதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. சில நாட்களில் ஊஞ்சலில் படுத்திருப்பாள். சில நாட்கள் சமயலறை வாசற்படியில் படுத்துத்தூங்கி விடுவாள். உள்ளே கட்டிலில் அவர்களுக்காக கங்கம்மா தைத்து வைத்த மெத்தை தூசு படிந்து கொண்டிருந்தது.
அந்த அறைக்குள் அவள் போவதில்லை. போனால்தானே பக்கத்து வீட்டு மாடியைப் பார்க்க வேண்டியிருக்கிறது? பூரணியும், பாலுவும் ஏகாந்தமாக இருப்பதும் கண்ணில் படுகிறது. அந்தப் பக்கத்து ஐன்னலை அறைந்து மூடினாள்.
இந்தத்தடவை பூரணி இரண்டாவது பிரசவத்துக்கு ஏழு மாசங்கள் கழித்துப்பிறந்த வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் முன் நர்மதாவைத்தேடி வந்தாள் அவள்.
“இங்கேயே இரேன் பூரணி அக்கா! நான் பிரசவத்துக்கு செய்யமாட்டேனா?” என்றாள் நர்மதா.
“அதெல்லாம் முடியாது நர்மதா அம்மா இல்லாமல் என்னால் தைரியமா இருக்கமுடியலை நான் போயிட்டுவறேன். எதுக்கும் நீ எந்தக் காரணத்தைக்கொண்டும் எங்க வீட்டுக்குப் போகவேண்டாம்.”
“ஏன்?”
“காரணம் உனக்கே தெரியும். நான் சொல்லணுமா?” நர்மதா தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். பூரணி அரை மனசோடு போகிறாள் என்பதும் புரிந்தது.
அன்று பட்டப்பா சாப்பிடும்போது, “நாம இரண்டு பேருமா எங்கேயாவது போயிட்டு வரலாமே. எனக்கு இங்கே இருந்து அலுத்துப்போச்சு” என்று நர்மதா கேட்டாள்.
“எங்கே போகிறது?”
“போறத்துக்கு இடம்தானா இல்லை? இப்படி காசி ராமேஸ்வரம்னு போறது. பணமா இல்லை. அக்கா போய் இரண்டு வருஷமாறது. வீட்டை விட்டு நகரலை”
“எனக்கு அதெல்லாம் பிடிக்கலை, இவ்வளவு பெரிய வீட்டைப் பூட்டிண்டு போறதும் கஷ்டம். குத்தகைகாரன் வருவான். அவனுக்கு பதில் சொல்லியாகணும். நீ வாணா போயிட்டு வாயேன். எந்தனையோ ‘டூரிஸ்ட்’ பஸ் போறது.”
அவள் தன்னிடம் நம்பிக்கையில்லாமல் கணவனைக்கூப்பிட அவன் தட்டிக்கழிக்க, இப்படியே நாட்கள் ஓடின.
முன்பு பூரணி இல்லாத நாட்களில் பாலு சர்வ சுதந்திரமாக இந்த வீட்டில் நுழைந்து சாப்பிட்டுவிட்டுப் போவான். இந்த தடவை நர்மதா வாசல் கதவை அடைத்தே வைத்திருந்தாள்.
“‘காரணம் உனக்கே தெரியும்’, சே! எத்தனை பெரிய வார்த்தை? இவள் புருஷனை இவளுக்குக் கண்டிக்க தைரியமில்லை. என் பேரில் பழியை போட்டுவிட்டுப் போகிறாள். நான் ஒரு நிமிஷத்தில் அவனை என் வலையில் சிக்கவைக்க முடியும். சே!…”
பாலு பல இரவுகள் நர்மதாவுக்காகக் காத்திருந்தான். தப்பித் தவறி வரமாட்டாளா?
கொல்லைப்பக்கம் அவளைப் பார்த்தால், “சாப்பாடு கிடைக்குமா?” என்று கேட்பான். “ஓ! ராத்திரி எட்டு மணிக்கு அவர் சாப்பிடச்சே வாருங்கோ. போடறேன்”
பட்டப்பா வருகிற நேரத்தில் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தாள் நர்மதா. தெரு விளக்குகள் எரியவில்லை. நிலவற்ற வானம். பொட் பொட்டென்று மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. பின் பலத்த மழையும் ஆரம்பித்தது. அந்த இருட்டில் நிற்க பயந்து கொண்டு ரேழிக்குள் நுழைந்தாள்.
சட்டென்று யாரோ தாழ்ப்பாள் போட்டார்கள். முரட்டுத்தனமாக அவள் உடலை அணைத்தார்கள்.
பாலு! பாலுதான்!
“அடப்பாவி! காரணம் எனக்கே தெரியும்னு பூரணி சொல்லிட்டுப் போயிருக்காளே. அவளுக்கு துரோகம் பண்ணச்சொல்றியா?”
“இதிலே என் ன துரோகம் இருக்கு? உனக்கு தேவை இருக்கா இல்லையா?”
“தேவை தேவையில்லை என்பதெல்லாம் மனசைப் பொறுத்த விஷயம். என்னைப்போல இன்னொரு பெண்ணை நான் ஏமாத்த விரும்பலே”
பாலு ஒரு மிருகம்போல தோற்றமளித்தான்.
நர்மதா அவன் பிடியிலிருந்து பலமாக விடுபட்டு படுக்கை அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.
“கதவைத்திற நர்மதா. இதுவரையில் ஒன்னும் நடக்கலே. நடந்தமாதிரி ஊர்ப் பூரா சொல்லுவேன்”
“சொல்லிக்கோ”
“நிச்சயமாகச்சொல்லிடுவேன். நீ மானத்தோட ஊரில் இருக்கமாட்டே.”
வாசற்கதவை யாரோ தட்டினார்கள். பாலு போய்த் திறந்தான் அவசரமாக வெளியே போய்விட்டான். நர்மதா அறையிலிருந்து வெளியே வந்தாள். தேம்பி அழுதபடி பட்டப்பாவிடம் வந்தாள்.
பட்டப்பா வேறு தினுசாகப்புரிந்து கொண்டான்.
“ஏன் அழறே! உனக்குத்தான் பூரண சுதந்திரம் குடுத்திருக்கேனே. நான் பண்ணின பாவத்துக்குப் பரிஹாரம் பண்ண வேண்டாமோ.”
“நீங்க நினைக்கிற மாதிரி இல்லை…” அவள் அழுதாள்.
“இருந்தாத்தான் என்ன மோசம்? ஏனிப்படி போராடிக் கொண்டே இருக்கே?”
அன்று இருவரும் சாப்பிடவில்லை. இரவு வெகுநேரம் பட்டப்பா யோசித்துக் கொண்டிருந்தான். நர்மதாவின் உள்ளத்தில் அவ்வப்போது எழும் சலனங்களை அவள் மாய்த்துக்கொண்டு இப்படிப் போலியாக வாழ்வதுபோல் தோன்றியது. அந்தப்பெண்ணை இப்படி மாய விடுவது மகத்தான துரோகமாகத் தோன்றியது அவனுக்கு.
கோர்ட், விவாகரத்து இதற்கெல்லாம் அவள் ஒத்துக் கொள்ளக் கூடியவள் இல்லை. என்ன பண்ணலாம்?
அவளுடைய வாழ்க்கையிலிருந்து தான் விலகிப்போய்விட வேண்டும். கொஞ்ச நாட்களாகவே தனக்கு தூக்கம் வருவதில்லை. மனம் சோர்ந்து போகிறது. எதிலும் பிடித்தமில்லாமல் இருக்கிறது. நர்மதாவைப்பார்த்தால் கூடப் பிடிக்கவில்லை.
கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது போய்விடலாமா? எங்கேபோவது? இந்த எண்ணங்களே தன்னை எங்கே போனாலும் துரத்திக்கொண்டு வருமே! அவள் அவனுடன் இருந்து கொண்டிருக்கிறாளே தவிர, அவள் மனதில் அவனுக்கு இடமில்லை. சமூக நியதிக்காக இப்படி ஒரு நெருப்பில் அவள் வெந்துகொண்டிருக்கிறாள்.
நாலைந்து வருஷங்களுக்கு முன் அவர்களுடைய முதல் இரவில் அவளிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தது. இன்று மறுபடியும் கடிதம் எழுதினான். மறுபடியும் கிழித்துப் போட்டான்.
“நான் ஊரைவிட்டுப் போகிறேன். உன் இஷ்டப்படி இருக்கலாம்.” இப்படி ஏழெட்டு முறைகள் எழுதி எழுதிக் கிழித்தான். அவள் மாறமாட்டாள். உணர்ச்சிகளுடன் போராடிக்கொண்டு, கணவனை நினைத்துக்கொண்டு அணு அணுவாகச் செத்துக்கொண்டிருப்பாள். இந்த மாதிரி சரீர இச்சைக்கு முக்யத்வம் கொடுக்கிறதானால் இந்த நாட்டில் இப்போதும் ஆயிரக்கணக்கான விதவைகள் சுத்தமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான விதவைகளிலே நூற்றுக் கணக்கில்கூட மறுமணம் நடைபெறுவதில்லை. ஏதோ ஓர் உன்னதமான உணர்வு அவர்களின் மனசில் நிலையாக இடம் பிடித்திருப்பதனால்தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது.
வெளியே வானம் நிர்மலாக இருந்தது. நஷத்திரங்கள் பொரிந்து கிடந்தன. சுகமான காற்று வீசியது. யார் வீட்டு ரேடியாவோ தன்யாசியை மீட்டிக்கொண்டிருந்தது. இரவின் முதல் ஜாமத்தில், ஊரடங்கிக் கிடக்கும்போது ஒலித்த சுஸ் ஸ்வரமான சங்கீதம் அவனை அழ வைத்தது. இறைவன் நாமத்தை மனமாறப் பாடிக் கேட்கும்போது ஏற்படுகிற உணர்வு இருக்கிறதே – சுகம் இருக்கிறதே – அதற்கு ஈடு இணை இல்லை. அவன் நாத வெள்னத்தில் லயித்துப்போயிருந்தான். இப்படி பாடிக்கொண்டு கோகுலம், பிருந்தாவனம், மதுரை என்று போய்விடலாமா? மேவாரின் அரசியாக இருந்த மீரா உலக பந்தங்களின் தளைகளை உடைத்துக் கொண்டு சுதந்திரமாக ஒரு பறவைபோல், காற்றுவெளியில் மிதக்கிற சுகானுபவத்தை நுகர்ந்து கொண்டு பிருந்தாவனத்துக் கண்ணனை தரிசிக்கப் போனாளாமே. அம்மாதிரி ஒரு உணர்வு தனக்கும் ஏற்பட்டு இப்போதே இந்த வீடு, வாசல், நர்மதா எல்லோரையும் மறந்து அவனை நாடிப்போனால் இதற்குப் பரிகாரம் கிடைக்குமோ!
நக்ஷத்திர ஒளியை, வைகறை என்று நினைத்து ஒரு பறவை ஜிவ்வென்று பறந்து போயிற்று. எல்லா ஜீவராசிகளையும்விட பறவை இனங்களுக்கு இயற்கையிலேயே ஒரு வரப்பிரசாதம் உண்டு. விண்வெளியில் சுத்தமான காற்றை உட்கொண்டபடி பறந்து திரியும் சுகம் அவைகளுக்கு உண்டு.
மேஐைக்கருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.
அத்தியாயம்-14
பொழுது விடிந்தது. பொழுது போயிற்று. இப்படியே மாதங்கள் ஓடின. இருவருக்கும் இடைவெளி அகலமாகிக் கொண்டிருந்தது. நர்மதா தன்னை விட்டுப் போய்விட வேண்டும். அவள் இஷ்டம்போல அவளுடைய யௌனவத்தையும், அழகையும் வைத்துக் கொண்டு ஜம்மென்று வாழலாம். ஏனிப்படி இந்த வீட்டில் நடைப்பிணமாக உலாவி வருகிறாள் என்பது அவனுக்கே புரியவில்லை.
ஒரு நாள் சாப்பிடும்போது சொன்னான், “உன் பேரிலே ரொக்கமா ஐம்பதினாயிரம் பாங்கில் போட்டிருக்கிறேன். ஊர்க்கோடி தென்னந்தோப்பை வித்தாச்சு.”
அவள் ஒன்றும் பேசவில்லை.
“நான் பண்ணினது சரிதானே?”
“தெரியலையே…நான் எப்படி இந்தச்சொத்தை அனுபவிக்கலாம்?”
‘”ஏன்? நான் உனக்குப் பண்ணிய துரோகத்துக்குப் பணத்தைக்கொடுத்து ஈடுகட்ட முடியுமா? என்னவோ தோணித்து உன் இஷ்டம்போல அதிலே வரவட்டியை வச்சுண்டு இருக்கலாம்.’
“என்னை எங்கே போகச்சொல்றீங்க?” அவள் கண்கள் கலங்கின.
“இஷ்டப்படி எங்கே வேணுமானாலும் போயிட்டு வரலாம். இப்படி எங்கிட்டே அடிமையா இருக்கணும் நீ என்று நான் எதிர்ப்பார்க்கலை. உனக்குன்னு எத்தனையே ஆசைகள் இருக்குமே”
“எனக்குப்பொதுவர் ஆம்பிள்ளைகளைக் கண்டாலே பிடிக்கலை”
“பாலுவை? சாயிராமை?”
“பாலுவையா? பொண்டாட்டியை ஏமாத்தறவனையா? அவனைப்பிடிக்கறதா?”
“சாயிராம்?”
நர்மதா பேசாமல் இருந்தாள். பட்டப்பா கை அலம்பிக் கொண்டு அவள் அருகாமையில் வந்தான். “நீ கல்யாணத்துக்கு முன்னே அவனைக் காதலிச்சே. அது உன் மனசில் புகைஞ்சுண்டே இருக்கு. ஊருக்குப்போனா எங்கேயாவது அவன்கிட்டே ஏமாந்துடப்போறோம்னு பயப்படறே. அதான் போகமாட்டேங்கறே.”
அவள் தன் எதிரில் இருந்த சுவரைப் பார்த்தபடி நின்றாள். வாஸ்தவம்தானே? சாயிராம் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவளுக்குள் ஒரு சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது. அவன் அவள் அழகை வர்ணித்த போதெல்லாம் அவள் மகிழ்ந்து போயிருக்கிறாள். அதற்கெல்லாம் ஒரு வடிவம் கொடுப்பதற்கு முன்பே அம்மா இந்தக் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக் கொண்டு வந்துவிட்டாள். சொப்பனம் போல கல்யாணமும் நடந்து விட்டது. “நான் சொல்கிறது உண்மைதானே?” என்று தூண்டித்துருவிக் கேட்டான் அவன்.
“ஆமாம் அவர் மேலே எனக்கு ஆசை இருந்தது. ஆனா, உங்களைக் கல்யாணம் பண்ணிண்ட அப்புறம் அதைப்பத்தி நினைக்கலை. நான் மறந்தே போயிட்டேன். அவர் இங்கே ஒரு தரம் வந்தப்ப கூட என் மனசிலே ஒன்றும் விகல்பமா ஆசை எழலை. எப்படியோ என் தலை எழுத்து இப்படியாயிடுத்துன்னு விரக்தி பண்ணிண்டாச்சு. திரும்பத் திரும்ப என் சரீர இச்சையைப்பத்தியே பேசிண்டிருக்கீங்க. எனக்குன்னு ஒரு சுத்தமான மனசு இருக்காதா? இருக்கக் கூடாதா? உலகத்துலே எத்தனையோ வித பசிகள் இருக்கு. அந்த மாதிரி உடற்பசியும் ஒண்ணு. இன விருத்திக்காக மிருகங்கள், மற்ற ஜீவன்களைப் போலத்தான் மனுஷன் பெண்ணை நாடிப்போகிறான். இதுக்குப்போய் இத்தனை கவலையும், குழப்பமும் ஏற்படுவானேன்?”
அவளை வியப்புடன் பார்த்தான் பட்டப்பா. வேடிக்கையான பெண் அதுவும் இந்தக் காலத்தில் தெருத்தெருவாய் கண்டபடி சினிமா போஸடர்கள் சீரழியும் இந்த நாட்களில் இப்படியும் ஒருத்தி!
“அப்ப என்னதான் பண்ணப்போறே?”
“இப்படியே இருக்கிறது. என்னைப்போல கல்யாணம் ஆன பெண்கள் சவரணையா இருந்தா மூணு குழந்தைகள் பெத்துண்டு இருப்பா. அதுகளுக்கு வியாதிவரும். டாக்டர் வீட்டுக்குப்போவாள் கணவன் தன்னை நெருங்கி வரும்போதெல்லாம் தன் மூணு குழந்தைகளைக் காட்டிக்காட்டி விலகிப் போயிண்டு இருப்பா. அவன் அடுத்த வீட்டிலே. எதிர் வீட்டிலே யாராவது கிடைப்பாளான்னு பார்த்திண்டிருப்பான். இப்போ எனக்கு இந்தச் பிள்ளையெல்லாம் இல்லை.” அவள் பளிச்சென்று சிரித்தாள்.
“நீ இப்படி இருக்கிறது எனக்கு சங்கடமா இருக்கே.”
“எப்படி இருக்கிறது? நன்னாத்தானே பளிச்சுனு இருக்கேன்?”
“அதான் என் மனசைச் சங்கடப்படுத்தறது; இத்தனை அழகும் வீணாப்போறதேன்னு.”
“அழகு எப்படி வீணாப்போகும்? அது பால்யத்திலே ஒரு தினுசா சரீரக் கவர்ச்சியோட இருக்கும். நடுத்தர வயசில் தாய்மையாகப் பிரகாசிக்கும். வயசானப்புறம் அனுபவமா முதிர்ந்துபோகும். எல்லா வயசிலும் அழகு நிலையாத்தான் இருக்கும். உங்கக்கா கங்கம்மா நன்னா அழகாத்தான் இருந்தா வியாதி வந்து படுத்துண்டப்புறமும் நன்னாத்தான் இருந்தா. பொணமானப்புறமும் பளிச்சுன்னு இருந்தா. அழகுங்கறது மனசிலே இருக்கு.”
பட்டப்பா அவளுடன் வாக்குவாதம் புரிவதை நிறுத்திக் கொண்டான். இவள் தன்னை விட்டு அகலமாட்டாள் என்பது திடமாகப்புரிந்தது. இனி தான் தான் இவளை விட்டுப்போக வேண்டும். அவள் புத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கணவனுக்கு எதிரில் தன்னை ஒரு பதிவிரதையாக. மகத்தானவளாக, ஒழுக்கமுள்ளவளாக இன்னும் எப்படியெல்லாமோ இருக்க ஆசைபடுகிற ஜன்மம் அவன் அந்த வீட்டில் இருக்கிற வரையில் நர்மதா தனக்குள் கருகித் தீய்ந்துதான் போவாள் என்பது அவனுக்குத் தெரிந்து போயிற்று.
வழக்கம்போல ஒரு நாள் காலையில் காப்பி சாப்பிட்டு ஊஞ்சலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் வட இந்திய யாத்திரை ஸ்பெஷல் ஒன்றைப்பற்றிப் படித்தான்.
“நான் ஏன் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு போய் விடக்கூடாது?” வெளியே புறப்பட்டுப்போனான். திரும்பி வந்தான். பையில் கொஞ்சம் துணிமணிகள். அவ்வளவுதான்.
அவன் எங்கே போனாலும், எப்போ வந்தாலும் அவள் அதிகமாகக்கேள்விகள் கேட்பது வழக்கமில்லை. “எங்கேயாவது போவார்” என்று நினைக்துக்கொள்வாள். அப்படியே அன்று சாப்பிட்டபிறகு கிளம்பினான். ஊஞ்சலில் தூங்கும் மனைவியை ஆசை தீரப்பார்த்தான். ஆறேழு வருஷங்களாக அறிமுகமான ஒருத்தரைப் பிரிந்துபோசிற அளவே அவனுள் ஒரு ஏக்கம் எழுந்தது. அவளிடம் ஒரு மரியாதை, பக்தி ஏற்பட்டது இன்றுவரை இவள் என்னுடையவள் என்கிற பெருமை ஏற்பட்டது.
கொஞ்சநேரம் நின்று பார்த்து விட்டு வாசற்கதவை லேசாகத் திறந்துகொண்டு வெளியே வந்தான். பக்கத்து வீட்டில் பூரணி பிறந்த வீட்டிலிருந்து மற்றொரு குழந்தையுடன் வண்டியில் வந்து இறங்கினாள். இவனைத் திரும்பிப் பார்த்தாள். பாலுவிடம் குழந்தையைக் கொடுத்தாள். இருவரும் உள்ளே போய்விட்டார்கள்.
அவன் தெருவில் இறங்கி ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். எதிலிருந்தோ விடுதலை பெற்ற உணர்வுடன் கிளம்பிப்போய்க் கொண்டிருந்தான்.
நர்மதா விழித்தபிறகு வழக்கம்போல் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டாள்.
பக்கத்து வீட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. பார்க்கப்போனாள். முதல் குழந்தையைவிட இது நன்றாக இருந்தது.
“எப்படி இருக்கேடி நர்மதா” என்று கேட்டாள் பூரணி.
“அப்படியேதான் இருக்கேன்”
“நீ எப்பப்பாத்தாலும் கதவை அடைச்சுண்டு கிடக்கிறயாமே…இவர் சொன்னார்.”
“பின்னே என்னபண்றது? எங்காத்துகாரர் வீட்டிலேயே தங்கறதில்லை. ஒண்டியா வாசக்கதவை திறந்து வச்சுண்டு உக்கார முடியுமா?”
“வாஸ்தவம்தான். கண்டவா உள்ளே வந்துட்டா?”
நர்மதா திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப்பார்த்தாள். அவள் இவளைக் கவனிக்காமல் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“நான் போயிட்டு வரேன்.”
“அப்பப்ப வந்துண்டு போயிண்டிரு…”
“பார்ப்போம்”
இருவரிடமும் முதலில் இருந்த நட்பின் ஆழம் குறைந்து ஏனோ தானோவென்றே பேச்சு நடந்தது.
மாலை வந்தது. விளக்கேற்றியாயிற்று. வாசலுக்கும் உள்ளுக்குமாகப் பலதடவைகள் அலைந்தாள். இரவும் வந்தது தனியாக அவ்வளவு பெரிய வீட்டில் இருக்கவே பயமாக இருந்தது.
மறுநாள். அதற்க்கடுத்த நாள். நாலு நாளைக்குமேல் ஆயிற்று. பூரணியைத் தேடிப்போனாள்.
“என்ன நர்மதா இப்படி இளைச்சுப்போயிட்டே. பட்டப்பா எங்கே காணோம்.”
”நாலு நாளுக்குமேலே ஆச்சு. ஒரு தகவலும் தெரியலை”
“நான் வந்தன்னைக்கு பை நிறைய சலவைத் துணியா பளிச்னு எடுத்துண்டு கிளம்பிப்போனாரே. எங்கேயாவது ஊருக்குப் போறாராக்கும்னு பாத்த்தேன். நாலு நாளாய்த் தனியாவாருந்தே. நீ ரொம்பவும் மாறிப்போயிட்டே. மனசை விட்டு எங்கிட்டே இப்பவெல்லாம் பேசறதில்லை…வரதில்லை”
“பேசறதுக்கு என்ன இருக்கு? நான வாழ்கையிேலே தோற்றுப்போனவ. ஆனால், ஒரு நிர்ணயத்தோடு அதில் எதிர் நீச்சல்போட்டு ஒழுங்கா வாழ நினைக்கிறேன். அவர்தான் என்னை அடிக்கடி ‘உன் இஷ்டம் போல யார்கூட வேணா இரு. நான் ஒண்ணும் கண்டுக்க மாட்டேன். நான் உதவாகரைன்னு தெரிஞ்சப்ப, உன்னை அடக்கி வைக்க எனக்கு உரிமையில்லைன்னு’ பேசிண்டிருக்கார். உங்காத்தக்காரர் மேலே கூட அவருக்கு சந்தேகம். ஊர்லே சாயிராம்னு ஒருத்தர். அவர் இங்கேயே என்னைத் தேடிண்டு வந்துட்டார். அவர் மேலேயும் சந்தேகம். நான்தான் இதிலெல்லாம் எனக்கு இருந்த ஆசை எப்போதோ போயிடுத்து. இப்ப நான் இந்த உடம்புக்கு பிரதானம் கொடுக்கலை. சுத்தமா இருக்க நினைச்சு அதைப் பழக்கப்படுத்திண்டு வரேன். என்னை அப்படியெல்லாம் தூண்டாதீங்கோன்னேன். அப்புறமா அவர் என்னோட இரண்டு நாள் பேசாம இருந்தார். என் புடவைகளோட இந்த பாங்க் புஸ்தகம் இருக்கு. ரொக்கமா ஐம்பதினாயிரம் எம்பேர்லே போட்டிருக்கார்.”
பூரணி திறந்தவாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“வேறே கடுதாசி கிடுதாசி ஒண்ணும் இல்லை.”
“எங்கே போயிருப்பார்?’
“அதானே புரியலை. நான் எப்படி தனியா இவ்வளவு பெரிய விட்டிலே இருக்கிறது? பயமா இருக்கு..”
“ஒண்ணு பண்ணு. ஊர்லேந்து உன் அம்மாவை வர வழைச்சு வைச்சுக்கோ. பாவம், இந்தத் தள்ளாத வயசுலே யாராத்துலேயோ சமைச்சிண்டிருக்கான்னு சொல்றியே…”
“அப்படித்தான் பண்ணனும்..”
இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது பாலு வந்தான். இப்போதெல்லாம் அவனுக்கு நர்மதாவைப் பற்றி ஒன்றும் சுவாரஸ்யப்படவில்லை. அன்று அவன் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டபிறகு அவளிடம் அவனுக்கு ஒரு பயமே ஏற்ப்பட்டது.
நர்மதாவும் சட்டென்று எழுந்து விட்டாள்.
நர்மதா விரிவாக அம்மாவுக்கு எழுதினாள். “உன் மாப்பிள்ளையை ஒரு வாரமாகக் காணவில்லை. நான் தனியாக இருக்கேன். கிளம்பி வரவும்…”
சிலரால்தான் ரகசியங்களை காப்பாற்றமுடியும். பலரால் காப்பாற்றமுடியாது.
வெங்குலட்சுமி எட்டு குடித்தனங்களுக்கும் தெரியும்படி இரைந்து கத்தினாள்.
“படுபாவி! எம்பொண்ணை கிளியாட்டமா இருக்கிற ஏமாத்திக்கல்யாணம் பண்ணிண்ட பாவம் போதாதுன்னு அவளை விட்டுட்டு ஓடியும் போயிட்டான்!”
சாயிராம் சிந்தித்தான். என்ன ஏமாற்றினான்? புரிந்து போயிற்று.
நர்மதா அன்று இருந்தது போலவே இன்றும் இருக்கிறாள். வாடாமல் வதங்காமல், கசங்காமல் அப்படியே புதியவளாக.
கிழவிக்குத் தான் துணை வருவதாகச் சொல்லிக்கொண்டு சாயிராம் வெங்குலட்சுயோடு வந்து சேர்ந்தான்.
நர்மதா அம்மாவைக் கொல்லைப்பக்கம் அழைத்துப்போய் ரகசியமாக, “அண்ணாவை அழைச்சுண்டு வரதுதானே? இவனைப் போய்த் துணைக்கு அழைச்சுண்டு வந்தியே” என்று கேட்டான்.
“அண்ணாவா? அவன் தான் பொண்டாட்டியோட் பட்டணம் போயிட்டானே. சினிமாவுக்கு ஆள் பிடிச்சுக்கொடுக்கிறதாம். அவன் பொண்டாட்டி சினிமாவிலே நடிக்கப் போறாளாம்.”
தன்னுடைய நிலைமை நர்மதாவுக்கு நன்றாகப் புரிந்தது. தகுந்த துணை என்று சொல்லிக்கொள்ள அம்மாவைத் தவிர வேறு யாருமே இல்லை.
சாயிராம் என்னென்னவோ கேட்டான்.
“எப்பப்போனான், என்னிக்கி வருவான்? பணம் காசு குடுத்துட்டுப் போயிருக்கானா? இல்லையன்னா கிளம்பு. அன்னிக்கே சொன்னேன். உன் லட்சணசதுக்கு இத்தனை நாள் பெரிய ஸ்டாரா ஆகியிருக்கலாம். ஹும்…”
அவள் இதெற்கெல்லாம் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
“நீங்க இந்த வீட்டிலே இருக்கிறது சரியில்லை. ஊருக்குப் போங்க”
போய்விட்டான். அம்மாவும் பெண்ணும் சமைத்தார்கள். சாப்பிட்டார்கள், பேசினார்கள். அவள் தினமும் அவனைப் பற்றி ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
பட்டப்பா அன்று கிளம்பியவன் நேராக வாரணாசிக்குப் போனான். மனம்போனபடி சுற்றித் திரிந்தான். அவனைப் போல அங்கு எத்தனைபேர்? மன சாந்தியைத்தேடி, கங்கா ஸ்னானம் பண்ணுவதற்கு, மூதாதையர்களுக்கு சிரார்த்தம் பண்ண, வாழ்க்கையை வெறுத்தவர்கள், ஊரில் வீடு வாசல் மனைவி குழந்தைகள் இருந்தும் ஏதோ ஒரு பிரமை தங்களைப் பிடித்து ஆட்டுவதுபோல் உணர்ந்து அதிலிருந்து விடுதலை பெறத்துடிப்பவர்கள்.
அவன் ஒருநாள் மணிகர்ணிகை கட்டத்தில் இருந்தான். இன்னொரு நாள் கேதர் கட்டத்தில் இருந்தான். அடுத்த நாள் ஹிச்சந்திர கட்டம். அப்புறம் ஹனுமான் கட்டம் இன்னொருநாள் அஸ்ஸி கட்டம், ஆஞ்சநேயர் கோயிலில் உட் கார்ந்திருந்தான்.
அந்தக் கட்டத்தில் பிணம் தின்னும் கழுகுகள் பிணங்களைக் கொத்தித்தின்பதை மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தான்.
“உடம்புக்கு இவ்வளவுதானா மதிப்பு? அதான் நர்மதா சொன்னாளே.” திடும்மென்று அவன் அவளுக்குக் கடிதம் எழுதினான்.
இரண்டு மாதங்களுக்குப்பிறகு அவளுக்குக்கடிதம் வந்தது.
“நான் உயிரோடு இருக்கிறேன். நீ சுமங்கலிதான் பயப்படாதே. நான் எங்கங்கோ அலைந்து கொண்டிருக்கிறேன். இதை ஒரு சோதனைபோல நடத்தவே அங்கிருந்து கிளம்பினேன். என்னுடைய பிரிவுக்கு அப்புறம் உன் மனசிலே படியப்போகும் எண்ணங்கள் வேறாக இருக்கலாம் என்று எனக்குள்ளே ஒரு அனுமானம். அது பொய்யோ, நிஜமோ, நான் கர்சிக்குப்போய் இருத்தேன். இந்த க்ஷேத்ரத்தில் சங்க மிருக்கும் மனோ விகாரங்கள், மனோ லயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனுஷாள்ளே முக்கால்வாசிப்பேர் நிம்மதிக்காக அலைவதும் புரிந்தது ஏதோ ஒரு குறை எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. எனக்கு எப்போதாவது திரும்பி வர வேண்டும்போல் இருந்தால் ஊருக்கு வருவேன். இல்லையென்றால் இல்லை. என் கையில் கொண்டுவந்த பணம் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு. அதுவும் செலவழிந்து விட்டால் அப்புறம் என்ன பண்ணுவேன் என்று யோசிப்பாய். பரந்த இந்த நாட்டில் என் பொழுது எப்படியோ போய்விடும். எங்காவது வேலைசெய்வேன். ‘கர்மண்யவே அதிகாரயை…’ என்கிறான் பகவான். வேலைக்குக் கூலிகிடைக்க அவன் பார்த்துக்கொள்வான். உன்னோடு வாழ்ந்த இந்த ஆறேழு வருஷங்கள் என் வாழ்க்கையில் இனிமையான காலம் அதற்கு முன்பும் நான் அவ்வளவு இனிமையோடு இருந்ததில்லை. பின்பு எப்படி இருக்க போகிறோனோ. நர்மதா! என் இனியவளே! புண்ணிய நதியின் பெயரைத் தாங்கியவளே! அவளைப்போல புனிதமானவள் நீ. நன்றாக இரு”
கல்லாசுச்சமைந்து உட்கார்ந்திருந்தாள் அவள் வெகுநேரம். தாபால்காரர் பதினோரு மணிக்குக் கடிதம் கொண்டு வந்து கொடுத்தார். ஒரு மணிவரை அந்தக் கடிதத்தையே திருப்பித் திருப்பிப் படித்தாள். பிறகு எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறது என்று கவரின் மேல் முத்திரையைக் கவனித்தாள். அழிந்த நிலையில் சந்த்ராபூரோ, சீதாபூரோ எதுவுமே சரியாத் தெரியாதபடி எழுத்துக்கள் காணப்பட்டன
வெங்குலட்சுமி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். உழைத்து உழைத்து ஓடாகிப்போன உடம்பு சுகம் இன்னதென்று அறியாத மனம். சுகமாக மகளின் வீட்டில் இரண்டொரு மாதங்களாகத் தங்கியிருப்பதில் மிகவும் சந்தோஷப்பட்டாள், விதவிதமாகச் சமைத்தாள். தேங்காயைப் பறிக்கச் சொன்னாள். நெற்களஞ்சியத்தில் நெல் நிரம்பி வழிவதைப் பார்த்து மகிழ்ந்தாள். பெண் இப்படி இருக்கிறாளே என்று அவளுக்குத் தோணவில்லை.
“ஊரை விட்டு ஓடிப்போனா அவ என்ன பண்ணுவாள்? இத்தனை சொத்தையும் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை.”
இதைக்கேட்டு பூரணி அதிசயித்தாள். ஊரிலே அவளுடைய சிநேகிதி ஒருத்தி பால்யத்தில் விதவையானபோது துக்கம் கேட்கவந்த ஒரு அம்மாள், “வெறுமனே அழுதுண்டிருக்காதே. கொஞ்சமாவா வச்சுட்டுப் போயிருக்கான்? மூணு லட்சமாமே? தங்கம் போல இரண்டு குழந்தைகள் இருக்கு ஹும்” என்று வெகு அழகாக துக்கம் விசாரித்தாள்.
இதெல்லாம் உலகத்தில் சகஜம் என்பது போல பூரணி சிரித்தபடி போய்விட்டாள்.
“இத்தனை சொத்தையும் கட்டி ஆள தன்னால் முடியாது. அம்மாவுக்கு வயசாகி விட்டது. அதோடு கங்கம்மாவின் காசை எடுத்து என் அண்ணனுக்கும், அவன் மனைவிக்கும் கொடுப்பது தர்ம விரோதம். இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்!”
மறுபடியும் அவள் பல மாதங்களுக்கு அப்புறம் பாலுவைத் தேடிப்போனாள். கடிதத்தைக்காட்டினாள். பாலு நெகிழ்ந்து போனான். தான் எத்தனை அற்பமானவன் என்று யோசித்தான். பட்டப்பாவால் ஆளமுடியாத பெண்ணை தான் அனுபவித்துவிட வேண்டும் எனறு தீவிரம் கொண்டிருந்தது அவன் நெஞ்சை அறுத்தது. அவனா ஆண்மையற்றவன்? உண்மையில் அவன் தான் நல்ல ஆண்மகன். மனைவியைப் பலர் முன்பாகக் கோர்ட் கொத்தளம் என்று கொண்டு வந்து நிறுத்தாமல், பெருந்தன்மையுடன் அவளுக்கு விடுதலை வழங்கியவன்.
நர்மதா தலைகுனிந்து நின்றிருந்தாள். சொட்டுச் சொட் டாகக் கண்ணீர் பூமியில் விழுந்து தெரித்துக் கொண்டிருந்தது. பூரணி நன்றாகத் தேம்பி அழுதாள்.
“இப்போ நான் என்ன செய்யணும்?” என்று கேட்டான் பாலு.
“ஒரு வக்கீலப்பாத்து, என் பேரில் அவர் போட்ட ரொக்கத்தைத்தவிர, மற்றதை கங்கம்மா பேரில் ஒரு டிரஸ்ட் ஆக மாத்தணும். ஆஸ்பத்திரிகளுக்கு, கல்வி நிலையங்களுக்கு, குழந்தைகள் விடுதிக்கு அந்த வருமானம் போகிற மாதிரி பண்ணணும்.”
“நீ என்னம்மா பண்ணப்போறே?”
அம்மா என்கிற சொல்லைக்கேட்டு அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“சினிமா போஸ்டர்களில் சீரழியும் பெண்கள், இரவில் கொஞ்சம் நேரம் கழித்து வீதியில் நடந்தால் ‘லிப்ட்’ கொடுப்பதாகச் சொல்லிக் கூப்பிட்டு, அவர்களைக் கேவலப்படுத்த எண்ணும் ஆண்கள். பெண்! அவள் தாயாக, அக்காவாக, மகளாக இன்னும் பலப்பல உறவுகளுடன் இருப்பவள். அவளை மனைவியாக மட்டும் நினைக்கிறதை, மதிக்கிறதை…”.
“நானும் அம்மாவும் வடக்கே போகலாம்னு இருக்கோம். பத்ரி வரை போய்ப்பார்க்கிறது. எனக்கு அதிர்ஷ்டமிருந்தால் அவரை எங்கேயாவது பார்க்கமுடியும்..”
பாலு கலங்கினான். இவள் தன்னிடம், தன் ஆண்மையிடம் சரண் அடைந்து விடுவாள் என்று நினைத்திருந்தவன், கண் கலங்க உட்கார்ந்திருந்தான்.
அத்தியாயம்-15
சொத்துக்களைப் பற்றிய ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க ஒரு மாதத்துக்குமேல் ஆயிற்று. இன்னொரு கடிதம் வராதா என்று எதிர்ப்பார்த்தாள். ஏமாந்தாள். ஒன்றும் தகவல் இல்லை. “இந்த மட்டும் தற்கொலையில் இறங்காமல் உசிரோட இருக்கேன் என்று கடுதாசி போட்டாரே” என்று சந்தோஷப் பட்டாள் நர்மதா.
வெங்குலட்சுமிக்குக் காசிக்குப் போகப்போகிறோம் என்றவுடன் உற்சாகம் பீறிட்டுக்கொண்டு கிளம்பியது. அங்கே சமைத்துச்சாப்பிட அது இது என்று நாலைந்து டப்பாக்களை நிறப்பிக்கொண்டாள். சிலருக்கு அதிக துக்கம் ஏற்பட்டு விட்டால் மனசு கல்லுப்பட்டுப் போய்விடுமாம்.
நாரத்தங்காயிலிருந்து சுண்டைக்காய்வரை எடுத்து வைத்தாள்.
நர்மதா சுத்தமாக எல்லா நகைகளையும் சழற்றி “பாங்க்கின்” பாதுகாப்பில் வைத்தாள். திருமாங்கல்யச் சரடு, கண்ணாடி வளையல்கள், ஒற்றை மூக்குத்தி, தோடுகள், நாலு நூல் புடவைகள்.
“என்னடி வேஷம் இது? அவன் எங்கேயாவது நன்னா இருக்கவேண்டாமோ?”
“இதோ” என்று திருமாங்கல்யத்தைக் காண்பித்தாள்.
“நன்னா இருக்கு! பளிச்சுனு இருந்தாத்தான் நாலுபேர் மதிப்பா. போற இடத்திலும் மதிப்பு கிடைக்கும்.”
அம்மாவோட என்ன தர்க்கம் வேண்டியிருக்கு. அவ மனசு அப்படி என்று அவள் அதிகம் பேசவில்லை.
“இரண்டு நாள் என்னோடு இரேன்” என்று பூரணி கூப்பிட்டாள்.
“உன்னை மறந்துடவா போறேன், எல்லாத்தையும் கவனிச்சுக்கோ… தேங்காய் பறிச்சுக்கோ… ஒரு நல்ல நாளாப் பார்த்துண்டு இந்த வீட்டுக்கு வந்துடுங்கோ. கங்கம்மா குழந்தைகளுக்கு ஆசைபட்டாள். ஒங் குழந்தைகள் தான் ஓடி விளையாடட்டுமே வேணா இன்னும் இரண்டு பெத்துக்கறது…” என்று கிண்டல் பண்ணினாள்.
“பெத்துக்க வேண்டியதுதான்!”
“பாரேன். நான் திரும்பி வரச்சே உனக்கு நாலுக்குமேலே இருக்கப்போறது!”
“போடி…”
பூரணி சிரிக்கவில்லை. துயரம் தாங்காமல் நர்மதாவைக் கட்டிக்கொண்டாள்.
கிளம்புகிறதற்கு முதல்நாள் வரையில் நர்மதா அம்மா கட்டி வைத்திருக்கும் மூட்டை முடிச்சுகளைக் கவனிக்கவில்லை. நாலைந்து தகரடப்பாக்கள். நார்மடிக்கூடை. பெட்டி வேறே.
“பெட்டியிலே என்னம்மா?”
“ஒனக்கு நாலு பட்டுப்புடவை எடுத்து வச்சிருக்கேன்.”
“போருமே. எல்லாத்தையும் எடுத்து உள்ளே வை. இல்லைன்னா யாரையாவது கூப்பிட்டுக் குடுத்துடுவேன்.”
கிழவி முணு முணுத்துக் கொண்டே எடுத்து வைத்தாள். கங்கா காவேரியில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்திருந்த நர்மதா வெகுநேரம் வரையில் பேசவில்லை. ரயில் கிருஷ்ணா நதியைத் தாண்டி, விரைந்து கொண்டிருந்தது பொங்கித் தளும்பி பிரவகிக்கும் தண்ணீரைக் கண் கொட்டாமல் பார்த்தாள். எத்தனை பேருடைய தாபக்கை, பாபத்தை இந்தப் புனிதநதி போக்கியிருக்கும்? ரயிலின் ஓரமாக மலைகள் வந்தன. சமவெளி வந்தது. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. இரவில் சந்திரிகை பிரகாசித்தது.
அவள் தன்னிடமிருந்து ஒரு பாரம் குறைவதை உணர்ந்தாள்.
வானத்து நிலவு தாவள்யமாகப் பிரகாசித்துக் கொண் டிருந்தது.
அவள் மனசில் ஒளிந்துகொண்டு ஆட்டம்போட்ட எண்ணங்கள், மனதை இருட்டாக அடித்த சபலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகவிலக அவளுக்குள் ஒரு விழிப்பு ஏற்பட்டது. பெட்டியில் எல்லோரும் தூங்க, அவள் விழித்திருந்தாள்.
(முற்றும்)
– அவள் விழித்திருந்தாள் (நாவல்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1987, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.