(1987ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-10
பட்டப்பாவுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பூரணி உண்டாகி மசக்கையாகப் பிறந்த வீட்டுக்குப்போய் இருக்கிறாள். நர்மதா மட்டும் மரம் மாதிரி நிற்பது கங்கம்மாவுக்கு வேதனையை அளித்தது.
அன்று பொல்லென்று பொழுதுவிடியும்போதே நர்மதா கொல்லையில் கிணற்றங்கரையில் கல்லில் உட்கார்ந்திருந்தாள். கங்கம்மாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
“உக்காந்தாச்சா?”
அவள் பேசாமள் இருந்தாள்.
“ஊருக்குப் போயிட்டு வந்தியே, எங்கேயர்வது நல்ல டாக்டரிடம் காட்டி ஏதாவதுவழி கேட்டுண்டு வரதுதானே?”
பாலுவின் தலை அந்தக் காலை நேரத்தில் பக்கத்து வீட்டு வேலி வழியாக எட்டிப்பார்த்தது. அர்த்தத்தோடு புன்னகைத்தான். அவள் மேலும் பேசாமல் இருக்கவே கங்கம்மா பக்கெட்டை நக்கென்று வைத்தாள். ஆத்திரத்துடன் தண்ணீரை வாரி வாரி முகத்தில் அடித்துக்கொண்டாள்.
“பாக்கறதுக்கு உடம்புதான் தளதளன்னு நன்னா இருக்கு. அத்தனையும் மலட்டுச்சதை…”
பாலு வேலிக்கு மேல் தலையைத் தூக்கிப் பார்த்தான். பாவமாக இருந்தது. கண்களால் ஏதோ ஜாடை செய்தான். “வாயைத் திறந்து ஏதாவது சொல்லு” என்று அதற்கு அர்த்தமாக இருக்கலாம்.
கங்கம்மா உள்ளே போய்விட்டாள். நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தன.
வேலியோரமாக வந்து நின்ற பாலு, “உங்க தம்பியைக் கேளுன்னு சொல்லேன், பயந்து சாகறியே” என்று வெடித்தான்.
அப்போதும் நர்மதா பேசாமல் இருக்கவே, “பொம்மனாட்டிகளுக்கு இருக்கிற நெஞ்சாழம் எங்களுக்குக் கிடையாது. நல்ல ஜன்மங்கள்!” என்று சொல்லிவிட்டுப்போனான்.
நர்மதா வேதனைப்பட்டாள். பூரணியிடம் அந்தரங்கமாக நம்பிக்கையுடன் இந்த ரகசியத்தைச் சொல்லிக்கொண்டது வினையாகப்போயிற்றே என்று நினைத்தாள். அதனால்தான், பாலு பஸ்ஸில் மிக உரிமையோடு பக்கத்தில் நெருக்கமாக உட்காரும் அளவுக்கு துணிச்சலும் பெற்றான் என்பதும் தெரிந்து போயிற்று. தன்னுடைய கணவனும் அவனிடம் போய் தன் குறையை, இயலாமையைச் சொல்லியிருக்கிறான் என்று இவளுக்குத்தெரியாது.
படுக்கை உள் அலமாரி பூராவும் பஸ்பங்களும், லேகியங்ளும் அடுக்கி வைத்திருந்தது. பட்டப்பா காலையில், பகலில் இரவில் என்று எதையாவது (மருந்து) சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாதாம்பருப்பை அரைத்து பாலில் கரைத்துக் குடித்தான். உடம்பு தள தளன்னு ஆயிற்று.
அன்றும் அதிகாலையில் ஒரு வைத்தியரைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு வெளியே போயிருந்தான், கிணற்றங்கரை பாரிஜாதம் பொல்லென்று பூத்துக் கொட்டியிருந்தது. ராத்திரி முழுக்கப் பெய்த மழையால் மழை நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
டம்ளரில் காப்பி கொண்டுவந்து நர்மதாவுக்குச் சற்று தொலைவில் வைத்தாள் கங்கம்மா.
“சொல்றேன்னு கோவிச்சுக்காதே. இந்த நாள்ளே கல்யாணம் ஆன சுருக்கில் குழந்தை பிறந்துடணும். இல்லைன்னு ஆனா அப்புறமா பிறக்கறதேயில்லை. அதான் எனக்கு வேதனையா இருக்கு. உன் வயித்துலே ஒண்ணு பிறந்து பாத்துட்டேன்னா போறும்.”
அவளுடைய ஆசை நியாயமானது என்று அவளுக்குப் பட்டது. காப்பியை எடுத்துக்குடித்தாள். பக்கத்து வீட்டில் கிணற்றடியிலேயே பாலு குளித்துக் கொண்டிருந்தான். பாட்டு வேறே கேட்டது. திரும்பிப் பார்த்தாள். கரணை கரணையாய் அந்தக் கைகளும், ரோமம் அடர்ந்த மார்பும், நீண்டகால்களும் நர்மதாவுக்கு ஏதோஒரு வேகம் ஏற்பட்டது.
“இந்த மாதிரி ஜோடி சேர்ந்திருந்தா தேவலை”
இப்படியே மூணு நாளும் கங்கம்மா ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள். அப்புறம் ஒய்ந்து விடுவாள். இந்த கெடுவுக்கு மேல் இனிமேல் குளிக்கமாட்டாள் என்று நினைப்போ என்னவோ.
குளித்த அன்று தலை கொள்ளாத ஜாதி மல்லிகையும், அலங்காரமுமாகத் திகழ்ந்தாள் அவள். “ஸ்வாமிக்குப்பால் நைவேத்யம் பண்ணிட்டு அவன் பிரசாதமாக உள்ளே எடுத்துண்டு போ. சரியா நடந்துக்கோ.”
கொஞ்சம் கூட தம்பியின் மேல் சந்தேகம் வரவில்லை அவளுக்கு. எல்லா பழி பாவங்களும் பெண்களைச் சார்ந்தவை என்கிற குருட்டு நம்பிக்கையாகவும் இருக்கலாம்.
பாலு வேலைக்குப் போகாத நாட்களில் இவர்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தான்.
“பூரணி இல்லாம ரொம்ப இளைச்சுட்டே” என்று கங்கம்மா அவனுக்கு உபசாரம் செய்தாள்.
“உன் பொண்டாட்டியோட இவளும் போட்டிபோடணும்னு பார்க்கிறேன். இவளானால் மாசம் தவறாம கொல்லையில் போய் உட்காந்துடறாள்.”
“கொஞ்ச நாள் போட்டமே. இப்ப என்ன அவசரம்? கொஞ்சம் ப்ரீயா இருந்துட்டுப்போறா” என்றான் பாலு அழுத்தமான சிரிப்புடன்.
“போகலாம்தான். ஆனாக்க எனக்கு வயசாயிண்டு வரதேப்பா. அடிக்கடி தலையைச் சுத்தறது. படபடப்பா வேறே இருக்கு. எதுவுமே காலத்துலே பூக்கணும்,காய்க்கணும். கொல்லையிலே பாரிஜாத மரத்தைப் பார்த்தியோ? ஒரு தூத்தல், வர்ஷிக்க வேண்டியதுதான். பூவாப் பூத்துக்கொட்டறது. என் கதை வேறே. கிழவனைக்கட்டிண்டு…என்னத்தைக்கண்டேன். இவா இப்படியில்லையே.”
பாலுவிக்கு அவள் பேரில் இரக்கமாக இருந்தது. “பகவான் தான் வழி காட்டணும்” என்று பரமார்த்தமாக, சாதுவாகச் சொல்லிக்கொண்டே கிளம்பினான்.
அன்றைக்கு என்னவோ விசேஷம். போளி பண்ணியிருந்தாள் கங்கம்மா. சமையலறைக்குள் போனவள், “அடடே! அந்தப் பையனுக்கு நாலு குடுத்திருக்கலாமே! மறந்து போச்சே, நீ போய்க் குடுத்துட்டு வாயேன்” என்றபடி தட்டில் எடுத்து வந்தாள்,
“நான் போகலை…”
“போனா என்னடி? உன் கூடப்பொறந்தவன் மாதிரி”
நர்மதா பாலுவின் வீட்டுக்குள் போனாள்.
அவன் அவளை எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் பார்த்து, “என்ன கொண்டு வந்திருக்கே?”
“போளி.. அக்காதான் அனுப்பினா”
மேஜை மீது வைத்தாள். “நான் போயிட்டு வரேன், பூரணி அக்கா எப்போ வருவா?” என்று கேட்டாள்.
“மசக்கை, மயக்கம் எல்லாம் தெளிந்தப்புறம்தான். என்னை நாலஞ்சுமாசமா பட்டினி போட்டுட்டா…”
“மத்தியானம்கூட எங்க வீட்லே சாப்பிட்டீங்க. பட்டினியா?”
“நான் அந்தப் பட்டினியைச் சொல்லலே. வேறே பட்டினி!”
நர்மதாவுக்குப் புரிந்தது.
“போளிக்கு நெய் போட்டுண்டா நன்னா இருக்கும். சமையல் உள்ளே இருக்கு”
நர்மதா போனாள். அலமாரியிலிருந்து நெய் புட்டியை எடுக்கும்போது பாலுவின் கரம் அவள் தோளைப்பற்றி அழைத்தது.
“வேண்டாங்க”
”என்னது”
“வேண்டாங்க. உங்களைப் பார்க்கச்சேயெல்லாம் மனசாலே பாவம் பண்ணிண்டு இருக்கேன்”
“அதுதான் பெரிய்யதப்பு”
கைகளின் அழுத்தம் அதிகமாகியது. இருவரும் போளி, நெய் என்கிற விஷயங்களை மறந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நர்மதா கனவில் நடப்பது போல அவனுடன் படுக்கை அறைக்குள் சென்றாள். அவளுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு பலிஷ்டனான ஓர் ஆணின் ஸ்பரிசத்தால் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
பாலு அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை தீர்க்கமாகப் பார்த்தான்.
“நர்மதா! ஏன் இப்படி ஏமாந்தே?”
“எனக்கு என்ன தெரியும்? இதையெல்லாம் கல்யாணத்துக்கு முன்னே எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?”
அவள் அழுதாள். கண்களின் மை கரைந்து கன்னத்தில் கோடாக இறங்கியது.
“இப்ப ஒண்ணும் முழுகிப்போகலை. நீயும், நானும்…”
“அதெல்லாம் பாவம்க…பரம சாதுவாக, ஒண்ணும் தெரியாத மனுஷனை நான் ஏமாத்த விரும்பலே”
“நீ எப்படியும் யார்கிட்டேயாவது ஏமாறத்தான் போறே”
பாலுவின் கரங்கள் அவளை வலுவாகப்பற்றிக் கொண்டிருந்தன. மங்கிய விளக்கொளியில் அவள் தேவதையாகத் திகழ்ந்தாள். சினிமாவில் தொட்டுப்பார்த்த அவன், பஸ்ஸில் நெருங்கி உட்கார்ந்த அவன், இப்போது வெகுசுவாதீனமாக அவளை நெருங்கிக்கொண்டிருந்தான்.
அப்போது பட்டப்பா உள்ளே மனைவியைத் தேடிக் கொண்டு வந்தான்.
இருவருக்கும் நெருப்பில் சுட்டுக்கொண்டமாதிரி இருந்தது.
“நீ இங்கயா இருக்கே?”
“அக்கா போளி குடுத்துட்டு வரச்சொன்னா”
அவள் பயந்தாள். நாக்கு உலர்ந்து விட்டது.
“ஒண்ணுமில்லை பட்டப்பா! பூரணிகிட்டேருந்து கடுதாசி வந்திருக்கு. அதைத் தேடிண்டு இருந்தோம்.”
நர்மதா போய்விட்டாள். இரவு கங்கம்மா, “சுவாமி பாலை எடுத்துண்டு போ… குருவாயூரப்பனுக்கு தொட்டில் வாங்கிவைக்கறேன்னு வேண்டிருக்கேன்” என்றாள்.
பகவானின் நைதேத்யமான பாலை எடுக்க அவள் கூசினாள்.
“அப்பனே! நீயும் சேர்ந்துதானே என்னை ஏமாத்தி இருக்கே”
உள்ளே பட்டப்பாவின் முகம் வாடிக்கிடந்தது.
“இந்தாங்க பால் சாப்பிடுங்கோ”
”நீ”
“நான் சாப்பிடக்கூடாது. இனிமே அதைத் தொடக் கூட எனக்கு அருகதை இல்லை”
அவன் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தான்.
“எனக்கு உன் மேலே கோபமே இல்லை. நீ ப்ரீயா இருந்திருக்கலாம். எத்தனை நாளைக்குதான் உன்னையே நீ எரிச்சுக்க முடியும். காமம் தீ போன்றது. அது அணு அணுவாக உன்னைத் தின்று விடுமே..”
அவள் மிகுந்த வியப்புடன் அவனைப்பார்த்தாள்.
ஆண்களிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பெண்கள் கற்புள்ளவர்களாய், தங்கள் உணர்ச்சிகளை அழித்துக்கொண்டு சன்னியாசிகளாய், பவித்ரமாய், கண்ணகியாய் இருக்க வேண்டும் என்கிற நியாயம கற்பிக்கப்பட்டு செயல் முறையில் பல ஓட்டை உடைசலோடு செயல்பட்டு வரும் இந்த நாட்களிலே இப்படி ஒரு மனுஷனா?
“நான் பலவீனப்பட்டுப்போனேன். என்னை ஒரு மயக்க நிலை ஆட்கொண்டிருந்தது. நான் ஒரு தப்பும் பண்ணலை. அவருடைய ஸ்பரிசம் ஒன்றைத்தான் அனுபவித்தேன்”
பட்டப்பா ஆதுரத்துடன் அவளைப்பற்றி தன் அருகில் அமர்த்திக்கொண்டான்.
“இப்ப ஒண்ணு சொல்றேன் கேப்பியா?”
“உம் சொல்லுங்கோ”
“நீ இங்கே இருக்கச்சே பாலுவோட சிநேகமா இருக்கலாம். ஊருக்குப்போனா சாயிராமோடு சிநேகமா இருக்கலாம். நான் உன்னை ஏமாத்தினதுக்கு இதுதான் பரிஹாரம். இதனாலே பிரளயமோ பூகம்பமோ, ஊழிக்காற்றோ வந்துடாது. எல்லாம் அனுபவிக்கிறவாளே இப்படி அப்படி இருக்கிறதா கேள்விப்படறேன் நீ வந்து…”
அவள் அன்று முதன் முதலாகக் கணவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவன் கைகளைப்பற்றி வருடினாள். “இத்தனை மருந்து சாப்பிடறேளே. குணம் தெரியறதா?” என்று கேட்டாள்.
அவன் சலிப்புடன் “ஊஹும்” என்று தலையை ஆட்டினான்.
“அதனால என்ன? நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் குழந்தையா இருந்துட்டுப் போறோம். உங்கக்கா நச்சரிப்புதான் தாங்கலை”
“நீ குழந்தை பெத்துக்கலைன்னா அவ எனக்கு வேறே பொண்டாட்டி கட்டி வைக்கப்பார்ப்பா. ஆனா உனக்கு வேறே புருஷன்கிறதை இந்த சமூகம் ஒத்துக்காது”
மனைவி தனக்குள் தான் தீய்ந்து கருகி வருகிறாள் என்பதும், அதற்குத் தானே தான் காரணம் என்பதும் பட்டப்பாவுக்குப் புரிந்தது.
வெகுநேரம்வரை இருவரும் பேசாமல் இருந்தார்கள். பிறகு தூங்கிப்போனார்கள்.
அத்தியாயம்-11
இப்போது கங்கம்மாவின் மனசில் நிராசை நிரம்பி விட்டது. பூரணி பிரசவித்து அழகான ஆண் குழந்தையோடு கணவனிடம் வந்து சேர்ந்தாள். பெருமை முகத்தில் கொப்பளிக்க அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு அடிக்கடி நர்மதாவைத்தேடி வருவாள். குழந்தையும் நர்மதாவிடம் ஒட்டிக்கொண்டது.
வழக்கம்போல அந்த மாசத்தில் நர்மதா வெளியில் உட்கார்ந்தவுடன் கங்கம்மா வெடித்துச் சீறினாள்.
“கர்மம்…கர்மம்! என்னிக்கி என்னுடைய ஆசை விடியப் போறது? உக்காந்தாச்சா? உடனொத்தவள் திரும்பவும் குளிக்காம இருக்கா. குழந்தைக்கு ஏழெட்டு மாசம் கூட ஆகலை. பூக்கிறதுதான் பூக்கும். காய்க்கிறதுதான் காய்க்கும். ‘எட்டி பழுத்தா என்ன’ ங்கற மாதிரி தள தளன்னு இருந்துட்டா போதுமா? வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகலை.”
பட்டப்பா ரொம்பவும் வேதனைப்பட்டான். காரணமில்லாமல் மனைவி ஏச்சு கேட்கிறாளே என்று வருந்தினான்.
அன்று அவனுக்குச் சாப்பாடு போட்டுக்கொண்டே, “நான் சொல்றேன்னு நெனக்காதே. இவ இனிமே உண்டாவான்னு எனக்கு நம்பிக்கை போயிடுத்து. வேறே நல்ல பொண்ணா பார்க்கிறேன்”
நர்மதா கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஆமாண்டா! பொண் அழகிலே கொறச்சலா இருந்தாலும், வயிறு திறந்து இரண்டு பெத்தாப்போறும். நான் தான் இப்படி நின்னுட்டேன். நீயும் இப்படி நிக்கமுடியுமா?”
பட்டப்பா சாதத்தை அளைந்து கொண்டு உட்கார்ந்திருந்தான்.
“என்ன சொல்றே? அவ அழகிலே, உடம்பிலே மயங்கிக் கிடக்கிறே. என்ன பிரயோஜனம்? பேர் சொல்ல ஒண்ணு இல்லே”
நர்மதா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“‘அடுத்த வீட்டுக்காரனோட சிநேகமாயிரு. ஊரிலே இருக்கிறவனோட எப்படி வேணா இரு. இல்லைன்னா எங்கக்கா எனக்கு இரண்டாந்தரம் கட்ட ஆரம்பிப்பான்னு’ முழங்கின வீரதீரப்பரதாபன் வாயடைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.
அவள் ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.
“நான் சொல்றதைக் சொஞ்சம் கேளுங்கோ. உண்மையைச் சொல்லித்தானே ஆகணும்? எத்தனை நாளைக்கு மறைச்சு வச்சு மன்னாட முடியும்? நான் நன்னாத்தான் இருக்கேன். எனக்குப் பத்து குழந்தைகள் கூடப்பொறக்கும். உங்க தம்பிதான் அதுக்குலாயகேயில்லை. நான் என்ன பண்ணட்டும்?”
கங்கம்மா அப்படியே நின்றவள் நின்றவள்தான். எப்போதோ சின்ன வயசில் அவள் அம்மா பட்டப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் இந்த பையன் பெரியனாகிக் குழந்தை குட்டி பெத்தால்தான் இவனை ஆம்பளைன்னு ஒத்துக்கமுடியும் என்று சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அம்மா எப்படியோ கண்டுபிடித்திருக்கிறாள். அக்கா இதையெல்லாம் புரிந்து கொள்ளுமுன் பட்டப்பாவும் வளர்ந்து விட்டான்.
பட்டப்பா பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டான். அவன் நன்றியோடு நர்மதாவைப் பார்த்தான். மனம் லேசாகி விட்டதை உணர்ந்தான். மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை எத்தனை லாவகமாக இறக்கி வைத்து விட்டாள்?
கங்கம்மா ஏழுமலையான் படத்தின் முன்பு போய் நின்றாள்.
“இனிமே உனக்கு பாலும் கிடையாது ஒண்ணும் கிடையாது. கொஞ்ச பசும்பாலா, கல்கண்டா, குங்குமப்பூவா சாப்பிட்டிருக்கே? நன்னா என்னை மொட்டை அடிச்சாச்சு. உனக்கு அதுவே வழக்கமாயிடுத்து.”
டம்ளர் பாலை எடுத்து சாக்கடையில் வீசினாள். இளம் மஞ்சள் நிறத்தில் பால் கசிந்து கசிந்து முற்றத்தில் வழுந்தது.
அந்த வீட்டில் மயான அமைதி நிலவியது. கங்கம்மா அடுத்த இரண்டு நாட்கள் ஸ்னானம் செய்யவில்லை. ஜபதபங்கள் இல்லை. சாவிக்கொத்தை ஆணியிலிருந்து இடுப்பில் சொருகிக் கொள்ளவில்லை. பூரணியோடு பேசவில்லை. பாலுவை நிமிர்ந்து பார்க்கவில்லை. “அத்தே” என்று வரும் பூரணியின் குழந்தையை தூரத்தள்ளிவிட்டு பிரமைபிடித்த மாதிரி இருந்தாள். தலைவலி என்று படுத்தாள். ஒரு கையும் காலும், வாயின் ஒரு பக்கமும் கோணலாகி பேசும் சக்தியை இழந்தாள்.
சிறுவயதிலிருந்து தன்னை வளர்த்தவள் பேசும் சக்தியை இழந்து படுக்கையில் கிடந்தபோதுதான் பட்டப்பா தன் தவற்றை முழுமையாக உணர்ந்தான். இவன் தன் சங்கோசத்தை விட்டு அக்காவிடம் பேசியிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காதே.
விதவிதமாகச் சமைத்துப் பரிமாறியவள், பாலை விழுங்கும் சக்தியையும் இழந்திருந்தாள். மெதுவாக மிகுந்த சிரமத்துடன் பாலை சிறிதளவே சாப்பிட முடிந்தது.
டாக்டர் வந்து பார்த்துவிட்டு, “ஸ்ட்ரோக்” என்று சொல்லி மருந்து கொடுத்தார். ஊசி போட்டார். நாள் கணக்கிலும் இருப்பாள், மாசக்கணக்கிலும் இருப்பாள் என்று சொன்னார்.
பாலு அடிக்கடி வர ஆரம்பித்தான். ஆனால் நர்மதாவின் மனதில் மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. அவனிடம் அதிகம் பேச்சு கொடுக்காமல் இருந்தாள்.
“என்ன? வீட்டுப்பக்கம் வரதேயில்லை. பூரணியால் ஒண்டியாகக் குழந்தையை சமாளிக்க முடியலெ”
“அக்காவை விட்டுட்டு எங்கே வரது?”
“நீ ரொம்ப மாறிப்போயிட்டே. முன்னே மாதிரி இல்லை”
“மாறத்தானே வேண்டும்? ஆரோக்யமா நடமாடிண்டு இருந்த அக்கா இப்படி படுத்தப்புறம் எனக்கு ஒண்ணும் பிடிக்கலை.”
பாலுவுக்குச் சப்பென்று போய்விட்டது. திடீரென்று இந்தப்பெண் ஏனிப்படி மாறவேண்டும்? அவளுடைய சிரிப்பு எங்கே போயிற்று? இவனிடம் சரண் அடைந்து விடுவாள் என்று நினைத்த அவளுடைய வெகுளித்தனம் எப்படிமாறியது.
சில நாட்களில் நன்றாக உடுத்திக்கொள்கிறாள். பல நாட்கள் ஏனோதானோ என்று இருக்கிறாள்.
ஓயாமல் கங்கம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து பணிவிடை பண்ணிக்கொண்டிருக்கிறாள். அவனுக்குப் புரியவில்லை.
ஊரிலிருந்து அம்மாவை வரவழைத்தாள் நர்மதா. ரயிலில் தன்னுடன் கொள்ளைப்பேச்சு பேசிய சிநேகிதி வாயடைத்துப் போய் முகம்கோணி படுக்கையில் கிடப்பதைப் பார்த்தாள். அவ்வளவு பெரிய வீட்டையும், அதில் நிறைந்திருந்த செல்வத்தையும் பார்த்து அதிசயித்தாள்.
“கங்கம்மா இவ்வளவு பணக்காறியா? பட்டப்பாவுக்குத் தான் இத்தனை சொத்தும் சேரப்போகிறதா? உக்கிராண உள் பூராவும் அரிசி மூட்டைகளும், மற்ற சாமான்களும் நிறைந்திருந்தன.
கொல்லையில் பூவாய்ப் பூத்தது. எலுமிச்சை, நாரத்தை என்று காய்கள் குலுங்கின.
தன் அருகில் உட்கார்ந்திருந்த சிநேகிதியின் கைகளை சுவாதீனமாக இருந்த ஒரு கையினால் பற்றினாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. நர்மதாவையும் பட்டப்பாவையும் மாறி மாறிப் பார்த்தாள். பார்வையில் மன்னிப்பு கேட்கும் பாவம் தெரிந்தது.
“உனக்கு தெரிஞ்சா பண்ணினே? அதெல்லாம் எனக்குக் கோபம் இல்லே வருத்தப்படாதே” என்றாள் வெங்குலட்சுமி.
நர்மதாவுக்குத்தான் கஷ்டமாக இருந்தது. நாம சொல்லாம இருந்திருந்தா இந்த மனுஷி நன்னா இருந்திருப்பாளே. வாக்குலே சனியன் மாதிரி உளறி வைச்சோம்.
வெகு நாட்களுக்குப் பிறகு அன்றிரவு நர்மதா படுக்கை அறைக்குள் போனாள். கங்கம்மா நோயாய்ப் படுத்த பிறகு அவள் உள்ளே போய் படுப்பதில்லை. தாபத்தீயினால் உடலைப் பொசுக்கிக் கொள்வதில்லை.
பூரணி மட்டும் இவளிடம் ரகசியமாகக் கேட்டாள்.
“இப்படியே உங்காலத்தை ஓட்டப்போறியா?”
“பின்னே”
“ரொம்ப கஷ்டம். வாழ்ந்து அனுபவிச்சவாளாலேயே முடியாது.”
“முடியத்தான் இல்லே. அதுவும் அந்த மனுஷன் அடிக்கடி ஞாபகப்படுத்தி விடறார்; தன் இயலாமையைச் சொல்லிச் சொல்லி.”
“பாவம் பேசாம இருந்திருக்கலாம்”
“உம் . இப்படி எத்தனையோ பேர் ஏமாந்திருப்பா. அதுலே நானும் ஒருத்தி, இல்லை ரகசியமர் யாரோடயாவது சிநேகம் வச்சிண்டிருப்பா”
பூரணி பல்லைக்கடித்தபடி சொன்னாள்.
“அப்படித்தாண்டி செய்யணும். இவன் என்ன பண்ணிப் பிடுவான்.”
இருவரும் மாலை மங்குகிற நேரத்தில் கிணற்றங்கரையில் பேசிக்கொண்டிருந்ததை பட்டப்பா கேட்டுக் கொண்டு வந்தான்.
“உண்மைதான், அவள் எப்படி நடந்துக்கொண்டாலும் கேட்பதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கு. அவ பாலுவோட சிநேகமா இருக்கலாம். ஊரிலிருக்கிற சாயிராமோடவும் இருக்கலாம். தப்பே கிடையாது. மனைவி பிரசவத்துக்குப் போயிருந்தால் ஊர்மேயும் ஆண்கள் கூட்டத்தை மன்னிக்கும் சமூகம், இதைக் கேட்டால் அலறித்துடிக்கும்.”
நர்மதா வழக்கம்போல பால் டம்ளருடன் உள்ளே வரவில்லை. அந்த நாடகமெல்லாம் ஓய்ந்துபோய் மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது.
படுக்கையை எடுத்துத் தரையில் போட்டுக்கொண்டாள்.
“நர்மதா!”
“உம்…”
“உங்கிட்டே ஒண்ணு சொல்லணும். உனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன். நீ இஷ்டபடி இருக்கலாம். இப்ப அக்காவுக்கும் வாயடைச்சுப்போச்சு”
“என்ன சொல்றேள்?”
“கொஞ்ச நாளைக்கு உன் அம்மாவோட ஊருக்குப் போயிட்டுவாயேன்”
“எதுக்கு”
“ஒரு மாறுதலுக்கு”
“இங்கே அக்காவை யார் பாத்துப்பா?”
“ஒரு ஆளைப்போட்டு நான் கவனிச்சுக்கறேன்”
“நான் போகலை”
“ஏன்?”
“பிடிக்கலை…அக்காவை விட்டுட்டுப்போறது பாவம்.”
“நான் பண்ணியிருக்கிற பாவத்துக்கு முன்னாடி இதெல்லாம் பாவமில்லை. போயிட்டு வாயேன்”
நர்வதா விருட்டென்று எழுந்தாள். கணவனிடம் சென்று அவனை நெஞ்சாரத்தழுவிக்கொண்டாள். அவள் இந்தமாதிரி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. குமுறி அமுதாள்.
அத்தியாயம்-12
கங்கம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகியது. பனி கொட்டும் காலைப்பொழுதில் அவள் இறந்து விட்டாள். கடைசியில் எதுவும் பேசாமல், மனசில் எண்ணக் குமுறல்கள் பொங்கி வழிய அவள் ஆத்மா பிரிந்துவிட்டது.
பட்டப்பா துடிதுடித்துப்போனான். தாயைவிடப்பரிந்து வளர்த்தவள். இவனிடமிருந்து ஒரு குழந்தையை, எதிர்ப்பார்த்து, அது நிறைவேறாமல் நிறைவேறாது என்று உறுதியாத்தெரிந்து கொண்டு அதிர்ந்து போய், பேசும் சக்தியை இழந்து அவள் நாலைந்து மாதங்கள் உணர்வுகளுடன் போராடினாள். பிறகு, ஓய்ந்தும் போனாள்.
பெரிய வீடு. கங்கம்மா அதில் ஒரு பட்டத்தரசிபோல் சாவிகள் குலுங்க வளைய வருவாள். பூரணிக்கு, எதிர் வீட்டுக்கு என்று பக்ஷணங்கள் செய்வாள். பூ தொடுத்துக் கொடுப்பாள். பாலுவுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது கொடுத்து உபசரிப்பாள். இப்படி, அவள் கார்வார்த்தனம் அவளோடு அடங்கிப்போயிற்று.
நர்மதா ஆழாக்கு அரிசி சமைத்தாள். இஷ்டமிருந்தால் சுவாமிக்கு விளக்கேற்றினாள். முடிந்தால் பக்கத்துவீட்டுப் பூரணியோடு பேசினாள். பட்டப்பாவோடு பேசுவதையும் குறைத்துக் கொண்டாள். தன்னைத்தானே தண்டித்துக் கொண்டு பாதி உடம்பாக மெலிந்துபோனாள் நர்மதா.
வெங்குலட்சுமி மூலமாக எல்லா விஷயங்களையும் கேள்விப்பட்ட சாயிராம் ஒரு தடவை நர்மதாவின் வீட்டுக்கு வந்தான்.
வீட்டையும் வாசலையும் நோட்டம் விட்டான். ஒரு லட்சத்துக்குக் குறையாது என்று மதிப்புப் போட்டான். நிலபுலன் வேறே இருக்கிறதையும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தான். எல்லாவற்றுக்கும் மேலே பக்கத்து வீட்டு பாலு அந்த பரமரகசியமான விஷயத்தை இவனிடம் தெரிவித்தான்.
“அப்படியா?’ என்று வியந்து போனான் சாயிராம்.
“பின்னே … அவ எங்கூட சினிமாவுக்கு வந்திருக்கிறா. எம் பொண்டாட்டி பிரசவத்துக்குப் போனப்ப சாப்பாடு போட்டிருக்கிறா அப்ப அவ கையைக்கூடப் பிடிச்சுப்பார்த்தேன்.” விஷயம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.
ஊர்க்காரன் ஆயிற்றே என்று இரண்டு வேளைகள் சாப்பாடு போட்டாள். பட்டப்பா வெளியில் போயிருந்த சமயங்களில் கொல்லையில் மரம் செடி கொடிகளுடன் உட்கார்ந்திருந்தாள்.
“என்ன இப்படி வெளியே உக்காந்துண்டு? ஆனந்தமா ஊஞ்சல்லே உக்காந்து ஆடமாட்டியோ”
“வாண்டாம்…அதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்லே”
“ஏன்னு கேக்கிறேன்? ஊர் உலகத்துலே நாத்தனார் செத்துப்போறதில்லையா? இப்படி அதுக்காக விரக்தியா இருந்துட முடியுமா?”
நர்மதாவுக்கு எரிச்சலாக இருந்தது. தன் அம்மாவின் மீது கோபமாக வந்தது.
“வாயை வச்சுண்டு பேசாம இருக்கமாட்டா…”
பட்டப்பா வெளியே இருந்து வந்ததும், “என்ன சார்! நர்மதா இளைச்சிருக்கா?” என்று கேட்டான்.
“அதான் தெரியலை. ஊருக்கு வேணா போயிட்டு வான்னு சொல்றேன். கேக்கலை”
“என்னோட அனுப்புங்கோ”
“பேஷா…எல்லாத்துக்கும் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தாச்சு. அவதான் இப்படி இருக்கா.”
“எனக்கு ஊர்லே என்ன வச்சிருக்கு? நீங்க கிளம்பிப் போங்க. எப்ப வரணும்னு அவசியம் ஏற்படறதோ அப்ப வரேன்.”
சாயிராம் கிளம்பிப் போய்விட்டான்.
“நாய் ஜன்மங்கள். ஏன்தான் இப்படி கிடந்து அலையறதுகளோ தெரியலை.”
இங்கேயானால் பாலு ஜாடைமாடையாகத் துரத்துகிறான். பூரணிக்குத் துரோகம் பண்ணிக்கொண்டு எப்படி இவனால் இப்படி இருக்க முடியறதோ? ஊருக்குப்போனால் சாயிராம் வந்து விடுவான். அரசல் புரசலாக இல்லாமல் தன் வாழ்க்கையில் குறிக்கிட்டிருக்கும் இந்த இரண்டு ஆண்களும் விஷயத்தை அப்பட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எங்கேயாவது கண்காணாத ஊருக்குப் பட்டப்பாவுடன் போய்விடவேண்டும். இப்போதெல்லாம் ஒரு விரக்தி மனசில் படிந்து விட்டது.
எவனைப் பார்த்தாலும் மனம் மரத்துக்கிடக்கிறது.
நர்மதா யோசித்தாள்.
– தொடரும்…
– அவள் விழித்திருந்தாள் (நாவல்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1987, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.