(1987ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-7
மாலை நான்கு மணிக்கு பட்டப்பாவும், நர்மதாவுமே வந்தார்கள்.
“அக்கா எங்களை சினிமாவுக்குப் போகச்சொன்னா” என்றான் பட்டப்பா.
“நல்ல காதல் சினிமாவா கூட்டிண்டு போ…” என்றான் பாலு.
“காதல்லே நல்ல காதல், கெட்ட காதல்னு இருக்கா என்ன? ஓண்ணு காதல்னு இருக்கு, இல்லை காமம்னு கேட்டிருக்கேன். முந்தினது உயர்வானது. பிந்தியது மட்டமானது” பூரணி சிரித்தபடி சொன்னாள்.
“இப்ப சினிமாவிலே காதல் வரதில்லை. காமம்தான் ஜாஸ்தியா இருக்கு. அதுவும் ஆண்கள் கற்பழிக்கவே – அந்த ஒரு காரணத்துக்காகவே பிறந்தமாதிரி – பிறந்தவர்கள் என்கிற நிலையில், ‘ரேப்’ காட்சிகள் இல்லாமல் சினிமா இல்லை. நடிப்பாக இருந்தாலும் அந்தக் காட்சிகளில் எனக்கு வருத்தமாக இருக்கும். கடவுள் பெண் வர்க்கம் என்று ஒன்றை ஏன் சிருஷ்டி செய்தான் என்று நினைப்பேன். பொம்மனாட்டியை மிகவும் கேவலப்படுத்தற மாதிரி சம்பந்தமில்லாம இந்தக் கண்றாவியைப் பார்க்க வேண்டியிருக்கு” திரும்பவும் படபட வென்று பேசினாள் பூரணி.
பேச்சிலே அவள் ரொம்பக்கெட்டிக்காரி. நர்மதா அசந்து போய் நின்றாள். எந்த விஷயத்தையும் லஜ்ஜைப்படாமல், வெகுளித்தனமாய் அவள் பேசுவதை ரசித்தாள்.
“நீங்களும் வாங்கோ” என்று அழைத்தாள் நர்மதா.
“நீ போடி…நாங்க எதுக்கு? ஆட்டபாட்டமெல்லாம் ஓய்ஞ்சு ஓரு பிள்ளை பெத்துக்கப்போறேன். கொஞ்சம் நிம்மதியா படுத்துத்தூங்கணும். இவர்காப்பி காப்பின்னு உசிரை எடுத்துட்டார். நீ ஜாலியா போயிட்டு வா-”
“நீங்க வாங்களேன் சார்” பட்டப்பா பேசினான்.
“போயிட்டு வாங்க…கொஞ்சம் அவாளைத்தனியா விட்டுட்டு உட்காருங்கோ”
சினிமா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ஒரு வரிசையில் கடைசியில் ஒரு சீட் காலியாக இருந்தது. பின்புற வரிசையில் இரண்டு ‘சீட்’கள் இருந்தன. முதலில் பட்டப்பாவும், நர்மதாவும் பின்புற வரிசையில் உட்கார்ந்தார்கள். கடைசி ‘சீட்’ காலியாக இருந்ததில் பாலு உட்காரச் சென்றான். அந்த வரிசையில் பெண்களே இருந்ததால் இவன் வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நர்மதா அந்த இடத்துக்கு வந்து உட்கார்ந்தாள். தனியாக உட்கார்ந்திருக்க நர்மதாவுக்கு என்னவோபோல் இருந்தது.
விளக்குகள் அணைந்தன. படம் ஓட ஆரம்பித்தது. வழக்கமான ‘டூயட்’. ஓடிப்பிடித்தல், அனைத்தல். பின்புறமிருந்து ஓரு கை இருட்டில் அவள் தோளைத்தொட்டது. நர்மதா புல்லரித்துப்போனாள். கணவன்தான் என்று நினைத்தாள். அந்தக் கை அவள் கழுத்தில் சுருண்டிருந்த முடியை வருடி கொடுத்தது.
பிறகு சிறிதுநேரம் ஒன்றுமில்லை. திரும்பவும் தன்னை அந்தக்கரம் தொடவேண்டும் என்று ஏங்கினாள் அவள்.
இடைவேளையின்போது சீட்டில் பட்டப்பா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். இவளைக் குறும்புடன் திரும்பிப் பார்த்த பாலு “‘கூல் ட்ரிங்ஸ்’ சாப்பிடறியா?” என்று கேட்டான்.
நர்மதா குழப்பத்துடன் தவித்தாள். கணவன் தூங்குகிறான்.
“உம்” என்று தலையை ஆட்டி வைத்தாள். இதற்குள் பட்டப்பா விழித்துக்கொண்டுவிட்டான்.
“ரொம்ப நாழியா தூக்கமோ?”
”என்னவோ அப்படி அசந்து போச்சு…எனக்கு இதெல்லாம் பிடிச்சிறதேயில்லை. அக்கா தொந்தரவு பிடிக்காம வந்தேன்” என்றான் மனைவியிடம்.
“இருட்டில் தன்னைப்பரிவுடன் தொட்ட அந்தக்கை பாலு வினுடையதா? என்ன தைரியம் இருந்தால் இப்படித் தொட முடியும்? தொட்டா என்ன? எத்தனை நாளைக்கு இப்படி கருகிண்டுஇருக்கிறது? அந்த சாயிராமே தேவலை. அவர் பேச்சைக் கேட்டுண்டு சினிமாவிலே சேர்ந்திருந்தா எத்தனை பெரிய நடிகரெல்லாம் என்னைத்தொட்டிருப்பா…”
மறுபடியும் இருட்டு. இப்போ முதல் இரவு. வழக்கம் போல் பால் பழம். கஷ்டம் கஷ்டம். இதெல்லாம் காண்பிக்காவிட்டால் என்ன தலையா வெடித்து விடும்? பல வீடுகளில் இதெல்லாம் இப்போது கிடையாது. மனைவியை அழைத்துக் கொண்டு எங்கேயாவது கிளம்பி விடுகிறான். நர்மதா சலித்துக்கொண்டாள். பக்கத்தில் இருந்த பெண்களும் இதை விரும்பவில்லை. ‘நம்பப் பெண்ணுகூட உட்காந்து சினிமா பாக்கமுடியலை இப்போ. மானம் போவுது…’ என்று ரகசியக் குரலில் ஆங்காரமாகப் பேசினாள் அந்த மூதாட்டி.
முதல் இரவில் ஆரம்பித்த காட்சிகள் படிப்படியாக மனைவியைக் கொடுமைப் படுத்துவது வரையில் நீண்டன.
“என்ன கதைன்னு சினிமா எடுக்கிறான்கள்? ஒண்ணு காதலும் ஊதலும், இல்லைன்னா பொம்மனாட்டி பிழியப் பிரிய அழுதுண்டு நிக்கணும். அதைப்பார்த்துட்டு நாம்பளும் அழணும். ஆதியிலே சீதை, திரௌபதி அழுதது போறலை. இன்னி வரைக்கும் நாமும் அழணும்னே கதை எழுதி படம் படுக்கிறாங்க…” மூதாட்டியே பேசினாள்.
பாலுவுக்குப் படத்தைவிட நர்மதாவே சுவாரஸ்யமாக இருந்தாள்.
அவள் தலையிலிருந்து கட்டு மல்லிகை கும்மென்று மணத்தது. “பட்டப்பா! உம் பெண்டாட்டி ரொம்ப அழகுடா” என்றான், அவனை ரகசியமாகக் கிள்ளியபடி.
“அப்படியா?”
“அப்ப உனக்கு ஒண்ணும் தெரியலையா? ஆறு மாசத்துக்குமேலா அவளோட குடித்தனம் நடத்தறே. இந்த மாதிரி அழகு தெய்வத்தைக் கீழே நடக்கவே விடக்கூடாதுடா. கையிலே வச்சுண்டு தாங்கணும்…”
“அவகிட்டே நான் ஆசையாதான் இருக்கேன்”
அதற்குமேல் அங்கே அதிகமாகப்பேச முடியவில்லை. பக்கத்தில் எதிர் ‘சீட்’ பெண்களை ஏதோ ஒரு சாக்கில் காலால், கையால், விரல்களால் தொடவிரும்பும் ஆண்கள். ஒரு பெண் படீரென்று திரும்பி வெடுக்கென்று ஒருத்தனை முறைத்துப் பாத்துவிட்டு தன் பின்னலை எடுத்து முன்னே போட்டபடி ‘”தூ! மானங்கெட்ட ஜன்மம்” என்று சற்று உரக்கவே முணு முணுத்தாள்.
“திரையில் எத்தனை விகாரமான காட்சிகள் ஓடினாலும் மனதைக்கட்டுப்படுத்தத் தெரியாத விகார வக்ரபுத்தி மலிந்தவர்கள், நாட்டில் மலிவாக இருப்பதே இதற்குக் காரணம்” படித்தவள், மிகப்படித்தவள் மாதிரி இருந்த ஒரு அம்மாள், பின்னலைப் போட்டுக்கொண்ட பெண்ணிடம் சொன்னாள்.
பாலுவுக்கு சுரீர் என்றது. நர்மதா மறுபடியும் அந்தக் கரம் தன்னைத் தீண்டவேண்டும் என்று விரும்பி அடிக்கடித் திரும்பிப் பார்த்தாள். பட்டப்பா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் வீடு திரும்பும்போது பூரணியும், கங்கம்மாவும் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். கவிந்திருந்த பன்னீர் மரத்தில் வெள்ளை மலர்கள் வாசம் வீசீன. மரத்தில் அடைந்திருந்த குருவிகள் பொழுது விடிந்துவிட்டதாக நினைத்துக் கத்தின.
“அதோ வந்தாச்சு” என்றபடி கங்கம்மா கிளம்பினாள்.
“ரொம்ப சோந்துபோயிருக்கே, மோராவது சாப்பிட்டுத் தூங்கு” சொல்லிக்கொண்டே கங்கம்மா தன் வீட்டுக்குள் சென்றாள்.
பூரணி உண்டாகியிருப்பதுபோல் நர்மதாவும் இருக்க வேண்டும் என்று அவள் ஆசைபட்டாள்.
“ஏழுமலையானே! கண் திறடா அப்பா”
மங்கிய நெய் விளக்கின் ஒளியில் ஏழுமலையான் நகைசிந்திக்கொண்டிருந்தான். “ஸ்ரீயக் காந்தாய” என்று கங்கம்மா ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள்.
“நான் பலகாரம் பண்ணியாச்சு. நீங்க சாப்பிடுங்கோ. நர்மதா ! மறக்காம பாலை எடுத்துண்டு போ…”
படத்தின் முன்பாக சீனியிட்டு, ஏலம் போட்டு காய்ச்சிய நைவேத்தியம் பண்ணிய பால் மூடி வைக்கப்பட்டிருந்தது.
நர்மதா கணவனுக்குப் பரிமாறினாள். “நீயும் என்கூடவே உக்காந்துரு” என்று அவளை வற்புறுத்தி தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டான்.
“உனக்கு நல்ல புடவையா நாலு வாங்கலாம்னு பார்க்கிறேன். காஞ்சீபுரம் போய் பட்டுப் புடவைகளா வாங்கலாமா, இல்லை இங்கேயே வாங்கவா” என்று கேட்டான் பட்டப்பா.
“எனக்குப் புடவை வேண்டாம்.”
“ஏன்?”
“இருக்கிற புடவைகளே பீரோவிலே மக்கிண்டு இருக்கு. மேலே மேலே வாங்கி மக்க வைக்கணுமா?”
பட்டப்பா அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.
அளவற்ற சோகம், ஏமாற்றம் அந்த முகத்தில் அப்பிக் கிடந்தது. “இப்படியெல்லாம் என்னை ஏமாற்றமுடியாது. இனிமேல் இந்த உலகத்திலே நான் ஏமாறுவதற்கு என்ன இருக்கு? புடவையும், நகையும், வேளாவேளைக்குச் சோறும் வாழ்கையில் நிறைவைத் தந்து விடாது.”
நர்மதா கண்கலங்கியபடி எழுந்து விட்டாள்; பாதிச் சாப்பாட்டிலேயே.
“சாப்பிடு நர்மதா…ப்ளீஸ்…உக்காரு. தெரியாமக் கேட்டுட்டேன். உனக்கும் பசிக்கும் நர்மதா. ராத்திரி தூக்கமே வராது…”
அவளுக்குக்கோபம் வந்தது. பரபரவென்று எல்லாவற்றையும் எடுத்து மூடி வைத்தாள். சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணியப்பாலை மட்டும் சாப்பிட்டாள். அதில் கொஞ்சம் மீற்றி அவனிடம் கொடுத்தாள்.
“நீ சரியாச் சாப்பிடவில்லையே. பாலையாவது சாப்பிடேன்”
இப்போது இருவரும் படுக்கை அறைக்குள் இருந்தார்கள்.
“பகவானின் பிரசாதம் சாப்பிட்டாலாவது என்னுடைய தகிப்பு அடங்குமோன்னு பார்க்கிறேன்”
பட்டப்பா விக்கித்துப்போய் நின்றான். அவனுக்குப் புரிந்தது.
“நர்மதா! உன்னை நான் வேணும்னு ஏமாத்தலை. எனக்கு இப்படியொரு குறை இருக்குன்னு எங்க குடும்பத்திலே யாருக்கும் தெரியாது. வெளியிலே சொல்லக்கூடிய குறையில்லை இது. எனக்கு அம்மா அப்பா இல்லை. அக்கா வீட்டிலே வளர்ந்தேன். பெரிய படிப்பாளியுமில்லை. நிறைய சிநேகிதர்கள் என்கிற வியாபகமும் கிடையாது. பெண்களைக் கண்டால் மனசிலே ஒரு மலர்ச்சி ஏற்படும். அவர்களின் சௌந்தர்யத்திலே ஒரு ஈடுபாடு. அவ்வளவுதான். சரீர சுகத்திலே திளைக்கவேண்டும் என்கிற நினைப்பே எனக்கு எழவில்லை”
”எனக்கு ஆசை இருக்கிறதே. என்னை அது சுட்டுப் பொசுக்குகிறதே” என்று அவள் அலற நினைத்தாள். ஆனால், தேம்பித் தேம்பி அழுதாள்.
இரவு நகர்ந்து கொண்டிருந்தது. வெகுநேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
பூரணி பாலுவிடம், “பாவம்! அந்தப் பெண் எப்படி எப்படியோ இருக்க வேண்டியவள். இந்தக் குரங்கிடம் அகப்பட்டு கசங்கறது.” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். பாலு நர்மதாவின் நினைவாகவே இருந்தான். பூரணியின் பக்கத்தில் மிக நெருக்கமாக நின்றாலும், அவள் நர்மதாவைப் போலவே தோன்றினாள்.
திடும்மென்று நர்மதா கேட்டாள்.
“நான் எங்கம்மா ஊருக்குப்போயிட்டு வரேன்…”
“சரி… எம்ப வருவே?”
அவள் பதில் பேசவில்லை.
“வருவியா நர்மதா?”
“உம்…”
அவள் இப்போது கண் கலங்கினாள். அவள் திடீரென்றுக் குலுங்கிச்சிரித்தாள்.
“அம்மாவானா ஒவ்வொரு கடுதாசியிலேயும் ‘நீ குளிக்கிறியான்னு எழுதிண்டு இருக்கா. உங்கக்கா தினமும் ஏழுமலையானை என் வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகணும்னு வேண்டிக்கிறா. எனக்கு சிரிப்பா வரது…”
“பிள்ளைப்பேறு இந்தக் காலத்துக்கு அனாவசியமாக இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து மனுஷர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம்…அவா எதிர்பாக்கறதலே ஒரு தப்பும் இல்லை.”
மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம். பட்டப்பாவும் நர்மதாவும் படுத்து விட்டார்கள்.
பாலு பூரணியை நச்சரித்தான்.
“சே… சே… மசக்கையிலே சோறு தண்ணி இல்லாம அவஸ்தப்படறேன். இப்ப என்ன வேண்டிக்கிடக்கு” என்று விட்டு அவள் தள்ளிப்போனாள்.
பொழுதும் விடிந்தது.
அத்தியாயம்-8
கங்கம்மா விதவிதமாகப் பலகாரங்கள் செய்து நர்மதா வையும் பட்டப்பாவையும் ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
“மசக்கைன்னு பொறந்தாத்துத்குப்போவா. நீ வெறுமனே போறே. திரும்பி வரச்சேயாவது…”
நர்மதாவுக்கு கேட்டுக்கேட்டு இந்த வார்தைகள் அலுப்பைத்தந்தன. பூரணியும் இதைக்கேட்டு மனம் சலித்து நின்றாள்.
திடீரென்று வந்து நிற்கும் பெண்ணையும், மாப்பிள்ளையையும் பார்த்து வெங்குலட்சுமி பூரித்தாள். “நன்னாப்பெருத்துட்டேடி. புதுசிலே அப்படித்தான் இருக்கும்… அவன்தான். அப்படியே இருக்கான். அவனுக்கும் சேர்ந்து நீ பெருத்துட்டே”
நர்மதா எப்போதும் போலத்தான் இருந்தாள். மகளின் சோர்வைக்கூட அவள் கவனிக்கவில்லை.
அண்ணாவுக்குப் பணக்காரத் தங்கை வந்திருக்கிறாள். அவள் செலவில் நிறைய சினிமா பார்க்கலாம் என்று நினைத்தான். பட்டப்பா உடனே கிளம்பிவிட்டான். அங்கே இங்கே கடன் வாங்கி மாப்பிள்ளைக்கு விருந்து வைத்தாள் வெங்குலட்சுமி.
நர்மதா வந்திருப்பது எப்படியோ சாயிராமுக்குத் தெரிந்து விட்டது.
“என்ன சமர்ச்சாரம்?’ என்று கேட்டபடி உள்ளே வந்து உட்கார்ந்தான்.
“சொல்லுங்கோ”
“நீதான் சொல்லணும். புதுாச கல்யாணம் பண்ணிண்டு புருஷனோட இருந்துட்டு வந்திருக்கே, புதுப்புது அனுபவங்கள்”
“இந்த அனுபவங்களை அயலானோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்… சே… என்ன கேவலமான புத்தி…”
“என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறே? பெரிய பணக்காரியாயிட்டே. அப்படியே தகதகன்னு ஜொலிக்கறே. முன்னே மாத்திரம் என்ன? கொத்திண்டு பேர்ற லட்சணம். அடிச்சான் ப்ரைஸ்…”
“நீங்க வெளியே போங்க” என்று சுட்டு விரலை உயர்த்தி அவனுக்கு வாசலைக் காண்பித்து விடலாம். ஆனால், எதுக்கு இந்த அல்பனோட வியவகாரம்? என்று பேசாமல் இருந்தாள்.
“என்ன, வந்ததும் வராததுமா உன்புருஷன் கிளம்பிட்டார்?”
“அவருக்கு ஊரிலே எத்தனையோ ஜோலி…”
“உன்னை விட்டுட்டு”
நர்மதாவுக்கு அதற்கு மேல் கேட்கப்பிடிக்கவில்லை.
“அம்மா! கடைத்தெருவுக்குப் போகணும்னியே”
“அப்ப நான் வரேன்” என்றபடி சாயிராம் எழுந்தான் “உன்னை மறக்கலேடி நான்” என்று கருவிக்கொண்டு போகிற மாதிரி அவளை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே வெளியேறினான்.
வெங்குலட்சுமி அவள் சமைக்கிற வீட்டுக்குக் கிளம்பிச் சென்றாள்.
“இந்த உடம்பைப் பார்க்க எத்தனைபேருக்கு ஆசை? இங்கே சாயிராம். அங்கே பாலு. நடுவிலே தாலிகட்டிய கணவன் ஒன்றுக்கும் உதவாதவன்… ஆண்கள் மீதே பழி தீர்த்துக் கொள்ளலாமா? அவர்களை அணு அணுவாக வதைக்கலாமா? ஆசை காட்டி ஏமாற்றலாமா?” மனம் ரொம்பவும் விகாரப்பட்டுப் போயிற்று.
சாயிராமோ, பாலுவோ யாரோடாவது சிநேகிதமாக இருந்து ஒரு பிள்ளையைப் பெற்று கங்கம்மாவிடம் “இந்தாங்கோ உங்க மருமான்…” என்று மடியிலே போட்டு விடலாமா? “இந்தாம்மா உன் பேரன்” என்று அம்மாவின் மடியில் போடலாமா? தம்பி பிள்ளைன்னு அந்த அம்மாள் சீராட்டிட்டு சாகட்டுமே பெண் ஒழுங்காகப் பெத்தது என்று இந்த அம்மா சீராட்டிப் பாராட்டட்டுமே.
அவள் பாரதம் படித்திருக்கிறாள். “இப்படியும் உண்டா? எப்படி இதை ஒத்துக்கொண்டார்கள்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். அந்தப்பெண்களுக்கு ஏற்பட்ட துர்பாக்கியத்துக்கு விடிவு மோட்சம் இருந்தது. அவர்களையும் ஏசுகிறவர்கள் ஏசினார்கள். போற்றினவர்கள் போற்றினார்கள்.
இன்னும் கொஞ்ச நாழி மனசை இப்படி அலையவிட்டால் தானே போய் வலுவில் சாயிராமிடம் சரண் அடைந்து விடுவோம் என்று அவளுக்குத்தோன்றியது. அம்மாவுக்குத்தெரிந்தால் கன்னம் கன்னம் என்று அறைந்து கொள்வாள். “அடி தட்டுவாணிச் சிறுக்கி! உனக்குப் பழைய புத்தி போகலைடி. பணக்காரனா, சாயிராமவிட சின்னவனா புருஷன் கிடைச்சும் உன் ஈனபுத்தி போகலையே .” என்று மோதிக்கொள்வாள்.
“தேடினியே அழகான மாப்பிள்ளையை, பிணத்தைக் கொண்டுபோய் உடைப்பிலே போடு..” அதுக்கு மேல் என்ன சொல்லமுடியும்?
நர்மதா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள்.
நேராக அம்பாள் சன்னிதிக்குப் போனாள். எந்தக்கஷ்ட மும். குறையும் அம்மாவிடம் சொன்னால் தீர்ந்து போகும். பளு குறைந்துவிடும் என்கிற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்கிறதில்லையா? வெறும் அம்மாக்களே குழந்தைகளுக்குப் பக்க பலமாக இருக்கிறபோது ஜகன் மாதாவாக உலகத் துக்குத் தாயாக இருக்கிறவள் எப்படிப்பட்ட காருன்ய மூர்த்தியாக இருக்க வேண்டும்?
சன்னதியில் கூட்டமில்லை. ஒற்றை முல்லைர்சரம் கழுத் தில் துவள, தங்கப்பொட்டு மின்ன, அரக்குப் பாவாடை கட்டிக்கொண்டு பரம சாந்தமாக அவள் நின்று கொண் டிருந்தாள்.
விளக்குக்கு எண்ணெய் விட்டாள். திரியைத் தூண்டி விட்டாள்.
இரண்டு மூன்று சின்னப்பையன்கள் பிள்ளையார் சன்னதியில் யாரோ உடைக்கிற சிதர்க்காயைப் பொறுக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். குருக்கள் தூணில் சாய்ந்தபடி யாரோடோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
பெரிய மனுஷாளாத்துப் பையன் ஒருத்தன் வேறு ஜாதிப் பெண்ணோட சிநேகமாக இருக்கிற சமாச்சாரமாக இருக்கவே, குருக்கள் உம் போட்டு அக்கறையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நடு நடுவில் “நமக்கேன்யா வம்பு”ன்னு வேறே பேசிக்கொண்டிருந்தார்.
நர்மதா விளக்குச் சுடரில் அம்பாளைத் தீர்கமாகப்பார்த்தாள்.
“அடியே அம்மா! உன்னை எத்தனை தரம் சுத்திச் சுத்தி வந்திருக்கேன். எத்தனை பூ வாங்கிப் போட்டிருக்கேன். நல்ல ஆம்படையானா வருவான்னு இதோ உனக்குப் பூஜை பண்றாரே இந்த குருக்கள் மாமா எத்தனை தரம் சொல்லியிருக்கா? இவர் சொன்னதும் பொய், நீயும் பொய்”
யாரோ ஒரு பக்தர் பாடிக்கொண்டே வந்தார்.
வந்தெனது முன் நின்று-மந்தாரமுமாக
வல்வினையை மாற்றுவாயே…
ஆரமணி வாளினுறை தாரைகள் போல நிறை
ஆதி கடவூரின் வாழ்வே…
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாணி அபிராமியே.
பூர்விகல்யாணி குழைந்து குழைந்து தென்றலாக வீசியது. அம்பிகை மந்தகாச முகத்துடன் பக்தரைப் பார்த்தாள். நர்மதாவுக்கும் அவளுடைய சிரிப்பு புரிந்தது.
அவர் நகர்ந்தவுடன் மறுபடியும் இவள், “சிரிக்காதே! எதுக்கும் சிரிப்புதான். துன்பம், இன்பம், வாழ்வு, தாழ்வு எதுக்கும் சிரிப்புதான். இப்ப உன்னால நான் பாவம் பண்ணி டுவேனோன்னு பயந்து செத்துண்டிருக்கேன். ஒவ்வொரு நாளும் வெந்து தணியறேன். ஆம்பளைன்னா தேவடியா வீட்டைத்தேடிண்டு போயிடுவான். அதுக்கொரு நியாயம் சொல்லுவான். அவன் மேலே ஒண்ணும் ஒட்டறதில்லையாமே சாஸ்திரம் சொல்றதாம், பொம்மனாட்டி நெருப்பு மாதிரி இருக்கணும்னு… நெருப்பா இருந்தாத்தானே சட்டுன்னு எரிஞ்சும் போயிடலாம்.
நெஞ்சுக்குழி விம்ம விம்ம மனசுக்குள் அறற்றியவள் விம்மி அழுதாள்.
“அழறயா என்ன?”
இந்த ஊருக்கு வந்ததிலிருந்து யாருடைய நினைவு மளசைப் போட்டு உலுப்பறதோ அந்த சாயிராம் சிரித்துக்கொண்டே எதிரில் நின்றான்.
“இல்லியே. கண்ணிலே என்னவோ விழுந்துட்டாப்பல இருக்கு*”
சொல்லிக்கொண்டே தூணில் இருந்த குங்குமத்தை எடுத்து இட்டுக்கொண்டபடி வெளியே வந்தாள்.
சுவாமி சன்னதியை அதற்குள் பூட்டி விட்டார்கள். வரும்படி இருந்தால் சுவாமி சற்று நல்ல காற்றை சுவாசிக்க திறந்து வைப்பது வழக்கம். இல்லையெனில் அவரைக் கம்பிக் கதவுக்கு அப்பால் தள்ளி விடுவது.
அப்புறம் சுற்றுக் கோவில்களில் விளக்கே இல்லை. நல்லெண்ணெய் இருபது விற்கிறபோது யார் தீபம் போடப் போறா…ஒண்ணும் தெரியலை. பிள்ளையாரா, தணாக்ஷிணாமூர்த் தியா, துர்க்கையா? எல்லாம் ப்ரும்மம்தான்… என்று ஒரு கிழம் சொல்லக்கொண்டு போயிற்று.
“கொஞ்சம் உட்காருவோமே…” அங்கேயிருந்த கல்லில் உட்கார்ந்தான். அவளும் எதிரில் உட்கார்ந்தாள். இந்த மூக்கும், கண்களும், உதடுகளும் எப்படி இவ்வளவு அளவோடு இவளுக்கு வாய்ச்சுது…என்று அதிசயித்தான் சாயிராம.
“ஆத்துக்காரர் இல்லாம விட்டுட்டுப் போயிட்டான்னு அம்பாள்கிட்டே சொல்லிண்டு அழுதையாக்கும். எங்கிங்டே மறைக்கிறே…அவன் ஒரு ரசனை கெட்ட ஜன்மம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?”
அவள் கீழேகிடந்த குச்சியால் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
“அதானே கோபம்?”
“ஊஹும்…”
“பின்னே”
“அவர் எங்க இருந்தா என்ன?”
சாயிராமுக்கு சுவாரஸ்யம் தட்டியது.
“என்ன அப்படிச்சொல்றே. பணக்காரன். கனகாபிஷேகம் பண்ணியிருக்கான். கழுத்திலே, கையிலே, காதுலே பள பளன்னு போட்டுண்டு சாஷாத் அந்த அம்பாளாட்டமா ஜொலிக்கிறே…”
“ஐயோ! என்னைப்போய் அவளோட ஒப்பிடாதீங்கோ… நான் பாவம் பண்ணிய மனுஷ ஜன்மம். வெளியிலே பவித்ரமர் இருக்சிறாப்போல இருந்துண்டு மனசால கெட்டுண்டு இருக்கேன்”
“அப்போ அவனைப் புடிக்கிலையா உனக்கு. உனக்கு ஏத்தவன் இல்லைதான். உனக்குப் புடிச்சவனா என்னை மாதிரி இருந்தா இப்படி தங்கமா இழைச்சுக்க முடியுமா? நல்ல புடவையா வேணா வாங்கித்தருவேன். நகை நட்டு, ஏ அப்பா! இந்த விலையிலே என்னாலே வாங்கிப்போட முடியுமா?”
நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தது.
“நகையும் நட்டும்” என்று முணு முணுத்தாள். அதற்கு மேல் குருக்கள் வரும் சத்தம் கேட்டது. இருவரும் வெளியே வந்து விட்டார்கள்.
கோவில் வாசல்படியில் பூக்காரி இரண்டு முழத்தை வைத்துக்கொண்டு, “வாங்கிக்குடேன் சாமி’ என்றாள்.
வாங்கினான். அவளும் பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டாள்.
இருவரும் வெவ்வேறாகப் பிரிந்து நடந்தார்கள்.
அத்தியாயம்-9
ஊரில் பட்டப்பாவுக்கு நர்மதா இல்லாமல் ஒன்றும் பிடிக்கவில்லை. அவளை ஏமாற்ற வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. பெண்கள் ரொம்பவும் சரீர சுகத்துக்கு ஏங்க மாட்டார்கள். அவர்கள் கவனமெல்லாம் நகை நட்டு, வீடு வாசல் என்றுதான் இருக்கும் என்பது அவன் கணிப்பு. கங்கம்மா இல்லையோ? அத்திம்பேரும், அக்கவும் ஒரு நாள் உள்ளே சேர்ந்து படுத்திருந்து அவன் பார்த்ததில்லை. அவர் காற்றுக்காக வாசல் திண்ணையோ, மொட்டை மாடிக்கோ போய்விடுவார் அவள் இடுப்பில் சாவிகள் குலுங்க கார்வார் பண்ணிக்கொண்டு வீட்டிலே வளைய வருவாள். அறுவடையாகி நெல் வந்தால் களஞ்சியத்தில் கொட்டிக்கொட்டி மூடுவாள். பணத்தை எண்ணி எண்ணி பீரோவில் வைப்பாள். ஒவ்வொரு பண்டிகைக்கும் பட்டுப்பட்டாக வாங்கிக் கட்டிக் கொள்வாள், வித விதமாக சமைப்பாள். பலகாரங்கள் செய்வாள். அவ்வளவுதான்.
அத்திம்பேர் பக்கத்தில் வந்தால் கூட அவள் எட்ட நின்றே பேசுவாள். இப்படி ஒரு சூழ் நிலை.
வீட்டிலே பஜனை, பாட்டு என்று அமர்க்களப்படும்… அப்படியே அவள் காலம் போய்விட்டது. கணவன் இருந்ததற்கும், இல்லாததற்கும் அதிகமான வித்தியாசம் எதையும் அவள் உணரவில்லை.
நர்மதா ஒவ்வொரு இரவும் அழுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். பக்கத்துவீட்டு பாலுவை ஆவலுடன் பார்ப்பாள். வெறிபிடித்தவள்மாதிரி இவனை இறுக அணைத்துக்கொள்வாள். ஒன்றிரண்டு தடவை, “என்னை ஏமாத்தறயே. பாவி என்னை ஏமாத்தறயே, ஏழைன்னு என் தலையிலே நெருப்பை அள்ளிப் போட்டுட்டுயே. நான் வாசல்லே நின்னு சத்தம் போட்டு உன்னை அவமானப்படுத்தறேன் பாரு” என்று ஆங்கார ஹும்காரந்துடன் படுக்கையறையில் அவனை ஒருமையில் ஏசிப் பேசுவாள்.
அவனுக்குப் புரிந்தது; எவ்வளவு பெரிய தப்பு பண்ணி விட்டோம் என்று. அந்தரங்கமாக பாலுவிடம் போய்ச் சொல்லி இதற்கு வைத்தியம் கியித்தியம் செய்து பார்க்கலாம் என்று நினைத்தான். போய்ச் சொல்லவும் செய்தான்.
பூரணி எங்கோ போயிக்கும்போது அவன் பாலுவைத் தேடிப்போனான். வெகு நிதானமாக பாலு மாடியில் நாற்காலியில் சாய்ந்தபடி அறைகுறை நிர்வாணப் படங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.
பட்டப்பாவுக்கு வெட்கமாக இருந்தது.
”சீச்சீ . என்ன ஸார் இது? கண்டதுகளைப் போய்ப்பார்க்கிறீங்க”
அவன், ‘ஓஹ்ஹோ’ என்று சிரித்துவிட்டு, “கண்டதா? இதுதான் வாழ்க்கை. உங்கப்பா, உங்க தாத்தா, முப்பாட்டன் எல்லாரும் ரசித்த விஷயம். அவாள்ளாம் கோயிலுக்கு சுவாமி பாக்கவா போனா. இந்த மாதிரி சிற்பங்களைப் பார்க்கப்போனா. இப்ப ரொம்ப சௌகர்யமா ‘போட்டோ”வா வந்திருக்கு. வா உட்கார்ந்து நீயும் பாறேன்”
“இதையெல்லாம் பார்க்கறதிலே என்ன புண்ணியம் சார்?”
“புண்ணியமாவது பாவமாவது? இன்னும் ரசனையோடு வாழ்க்கையைச் சுவைக்கலாம்”
“எனக்கு ஓண்ணும் தோணலை சார், என் பிறவியே வேறே. இதிலெல்லாம் எனக்கு நாட்டமே இல்லை”
“புரியறது”
“என்ன சார்?”
‘உன்னைப்பத்தி புரியறது…பாவம்! அந்த அழகானப் பொண்ணை இப்படி ஏமாத்தி இருக்க வாண்டாம் முட்டாள்.”
“மருந்து கிருந்து இருக்கா சார்? சாப்பிட்டு பார்க்கிறேன்”
“அதான் போடறானே. முத்து பஸ்பம், தங்கபஸ்பம்னு டிரை பண்ணு”
“பொறவியே இப்படி..”
“அப்ப அவ கழுத்துலே ஏன் சுருக்கு கயிர் மாதிரி போட்டே”.
அவன் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். முகம் பூராவும் வியர்த்து விட்டது. மழ மழ வென்று பெண்மையான முகம்.
“மருந்து சாப்பிட்டா சரியாயிடும்னு சொல்றேளா?”
“எனக்குத் தெரியாது அப்பா. டிரை பண்ணுன்னேன். இந்த மாதிரி விஷயங்கள்ளே மனசைச் செலுத்திப்பாரு. கோயில் குளம், புராணம், இதிகாசம்னு போயிண்டிருக்காதே. இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போயிடும்”
“அப்ப அவளப்போய் அழைச்சுண்டு வந்துருவா?”
“பேஷா… அவ இல்லாம நன்னாவே இல்லை. இல்லியா?”
“ஆமாம் சார்… நாளைக்குப் போறேன்”
பட்டப்பா அயல் நாட்டு “சென்ட்” மணம் கமழ நர்மதாவைத் தேடி வந்தான். இதற்குள் இங்கே நர்மதாவின் வீட்டில் ஒரு பிரளயமே வந்தது. சாயிராம் தினம் வர ஆரம்பித்தான். ஜாதி மல்லிகையிலிருந்து புடவை ரவிக்கை என்று வாங்கி வந்தான்.
நர்மதா அவளையும் அறியாமல் மாலை நேரங்களில் அவன் வருகையை எதிர்பார்த்தாள். அழகு படுத்திக்கொண்டாள். அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
”ஒரு விதத்தில் நான் நன்றாக ஏமாந்தவள். இனி நான் என் உணர்ச்சிகளை ஏமாற்ற விரும்பவில்லை.”
சாயிராம் உயர் வகுப்புக்கு இரண்டு சினிமா டிக்கட்டுகள் வாங்கி வந்தான். “கிளம்பு கிளம்பு போகலாம்”
“அம்மா வர்ற நேரம்”
“அவபாட்டுக்கு வந்துட்டுப்போறா. நான் என்ன அசலா அன்னியமா? ஒண்ணும் சொல்லமாட்டா சீக்கிரம் கிளம்பு”
நர்மதாவுக்கு பயமாக இருந்தது. ஏதோ அசட்டுத் துணிச்சலில் உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டாள். அவள் வாசல் பக்கம் வரவும் நர்மதாவின் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
தெருக்கோடியில் போய் நின்றுகொண்டிருந்தான் சாயிராம்.
“எங்கேடி கிளம்பரே?”
“சினிமாவுக்கு”
“யாரோட…?”
அவள் பேசாமல் தெருவில் நிற்கும் அவனைச் சுட்டிக் காட்டினாள்.
“உன் சின்னபுத்தி, அல்பபுத்தி உன்னை விட்டுப்போகலையே. இப்ப நீ கல்யாணம் ஆனவ. அவனுக்குத் துரோகம் பண்ணப் படாதுடி”
“நான் யாருக்கும் ஒரு துரோகமும் பண்ணவில்லை…அவர் தான் எனக்குத் துரோகம் பண்ணியிருக்கார்”
“சொல்லுவேடி சொல்லுவே. நம்ப கெட்ட கேட்டுக்கு பணமும் காசுமா கிடைச்சான் பார். சொல்லுவே”
நர்மதா சீறினாள். “பணம், பணம் காசு, காசு! நீ சாகச்சே எல்லாத்தையும் எடுத்துண்ட போகப்போறே… இந்தா இப்பவே எடுத்துக்கோ” என்றபடி கழுத்திலிருந்த சங்கிலி, வளையல்கள் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டாள்.
“என்னடீ இது ..?” என்று மாய்ந்துபோனாள் வெங்குலட்சுமி.
“நீ பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சியே… மாசா மாசம் குளிக்கிறியான்னு வேறே கேட்டுத் தொணப்பறையே. அந்த மனுஷன் ஆம்பிள்ளையே இல்லை. எனக்கு இந்த ஐன்மத்துலே குழந்தை பிறக்கவே பிறக்காது”
முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் நர்மதா.
தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்தன. இனி நர்மதா சினிமாவுக்கு வரமாட்டாள் என்று நினைத்தபடி சாயிராம் கிளம்பினான்.
வெங்குலட்சுமி வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள்
கங்கம்மா எப்படி ஏமாற்றி விட்டாள் பார்த்தாயா? பணத்தையும், பவிஷையும் காட்டி!
இதைப்பற்றி யாரிடம்போய் விவாதம் பண்ணமுடியும்? வெளியே சொல்லச் சொல்ல நர்மதாவுக்குத்தானே கெடுதலாக முடியும்?
இந்தப் பெண்ணை இனிமேல் இங்கே வைத்திருக்கக்கூடாது. இன்னும் கொஞ்சநாளில் சந்தி சிரிக்க அடித்து விடுவாள். இல்லை ஒரு முழம் கயிற்றில், பாழும் கிணற்றில், மூட்டைப் பூச்சி மருந்தில் தன்னை மாய்த்துக் கொள்வாள். அவளை அங்கேயே அனுப்பிவிட வேண்டும்.
அம்மாவும் பொண்ணும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
“என்னவோ நடந்துபோச்சு. அதுக்காக நம்ப கெட்டுப் போறதா என்ன? நான் கூட சின்னவயசுலே வீணாப்போனவ தான்…அப்புறமா புருஷனைப்பத்தி நெனச்சிருப்பேனா”
நர்மதா பேசாமல் இருந்தாள். நாலு பெற்றவள் புருஷன் செத்துப்போனபிறகு புருஷனை நெனச்சுண்டு இருந்தேனா என்கிறாள்.
பட்டப்பா வந்தவுடன் உடனே கிளம்பிவிட வேண்டும் என்று நர்மதா நினைத்தாள். அவன் வெங்குலட்சுமியின் கண்களில் படுவதை இவள் விரும்பவில்லை. ஆகவே, அவன் வந்துவிட்டுப் போன மறுநாளே நர்மதா “நான் ஊருக்குப் போறேன்” என்று மொண்ணையாக அம்மாவிடம் சொன்னாள்.
“அங்கேதானே போறே?”
“பின்னே எங்கே போவேன்? எவனோடும் போயிடமாட்டேன். உனக்கு இருக்கிற நம்பிக்கையெல்லாம் எனகும் இருக்கு. நம்ப பெண்கள் நம்பற எல்லா தர்மங்களையும் நானும் நம்பறேன். இங்கே இருக்கப்பிடிக்கலை எனக்கு”
“சரி…”
பஸ் ஸ்டாண்ட் வரை வெங்குலட்சுமி வந்தாள். பிழியப் பிழிய அழுதாள். வழி நெடுக, “ஏமாந்துட்டேண்டி” என்று மன்னிப்பு கேட்பதுபோல பேசினாள். நர்மதாவுக்குப் பாவமாக இருந்தது. நினைவுதெரிந்த நாளாய் அம்மா யார் வீட்டிலோ அடுப்படியில் வெந்துகொண்டிருக்கிறாள். அவளை சுகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அண்ணா நினைக்கவில்லை.
“நீ ஏனம்மா இந்த வயசிலே வேலைக்குப்போகவேண்டும்? பேசாம நான் போடற கஞ்சியோ கூழோ சாப்பிட்டுட்டு இரேன்” என்று உரிமையாகப்பிள்ளை ஒருநாள் சொன்னதில்லை.
அவனும், அவன் மனைவியும் சினிமாவுக்கு, டிராமாவுக்குப் போவதென்ன வருவதென்ன என்று இருந்தார்கள். மாசக் கடைசியில் அம்மாவிடமே சில்லறை கேட்பான் பிள்ளை.
நர்மதா வந்திருந்தநாட்களில் அவளிடம் ஐந்து பத்தென்று கேட்டுக்கொண்டேயிருந்தான்.
பஸ் கிளம்ப ஆரம்பித்தது.
“போயிட்டு வரேன்”
”சரி” என்று தலையசைத்தாள் கிழவி. கன்னங்களில் கோடாகக் கண்ணீர் வழிந்தது. அவசரமாகப் பூ விற்றவளிடம் இரண்டு முழங்கள் பூ வாங்கி அவளிடம் கொடுத்தாள்.
அம்மா தூரத்தில் புள்ளியாக மறைந்துபோனாள். தன்னை மறந்து சிறிதுநேரம் நர்மதா வெளியே பார்த்துக் கொண்டி ருந்தாள்.
அன்று வந்திருந்த பட்டப்பாவை அவ்வளவு தூரம் விரட்டியிக்கவேண்டாம் என்று அவளுக்குத்தோன்றியது. அவனிடம் அந்தக்குறை ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இவளிடம் உயிராக இருக்கிறான்.
பஸ் ஏதோ ஊரில் நின்றது. அவளுக்கு பஸ்ஸின் உள்ளே திரும்பியவுடன் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
பாலு ஏறிக்கொண்டிருந்தான். அவனும் அதிர்ச்சியடைந்தான்.
“கோபம் தீர்ந்து வறாப்லே இருக்கு” என்றான் அவன் பக்கமாக நின்றுகொண்டு. அவனுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. முன்னாடி ஒரு கிராமத்தான் தூங்கிவழிந்தான்
“கோபமா? யார் சொன்னது?”
“பட்டப்பாதான். அவரமாகச் சாப்பாடு போட்டு விரட்டிட்டான்னான். பாவம்!”
நர்மமதாவின் பக்கத்தில் இருந்த பெண் இறங்குவதற்கு எழுந்தாள்.
“உட்காரலாமா?” என்று கேட்டான் பாலு.
“உம்” என்று நகர்ந்து உட்கார்ந்தாள் அவள்.
“எங்கே போயிட்டு வரேள்?”
“உன் பூரணி அக்காவை ஊர்லே கொண்டுபோய் வீட்டுட்டு வரேன்”
“ஏன் உடம்பு சரியில்லையா?”
“அவ ரொம்ப மாறிப்போயிட்டா. எப்பப்பாத்தாலும் படுக்கைதான். கங்கம்மாவும் இந்த சமயத்திலே பொறந்தாத்துலே இருக்கட்டும்பா… அனுப்பேன்னு சிபாரிசு பண்ணவே அழைச்சுண்டு போனேன்.”
வண்டியின் ஆட்டத்தில் இருவரும் நெருங்கவே ஆரம்பித்தார்கள். நர்மதாவின் மேலிருந்து லேசான மணம் கமழ்ந்தது. புடவைத்தலைப்பு அவன் மேல் உராசியது. இன்னொரு ஆளும் இருக்கிற இடத்தில் உட்கார வரவே, மூன்று பேர்கள் உட்காருகிற சீட் ஆனதால் பாலு மேலும் நெருங்கி உட்கார்ந்தான். அவள் உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பையும் உணர்ந்தான்.
இருவரும் இறங்கி ஏதோ ஓர் ஊரில் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டார்கள். அவள் பஸ்ஸில் ஏற அவன் கீழே நின்று அவளைப் பார்த்தபடி சிகரெட் பிடித்தான்.
மனசிலே ஏகப்பட்ட உளைச்சல். இப்படியே இரண்டு பேரும் எங்கேயாவது போய்விடலாமா? இந்த நிமிஷத்திலே நினைக்கிறதும், வாழ்கிறதும்தான் நிஜம். மற்றதெல்லாம் பொய். நர்மதாவும் புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பஸ்ஸில் ஓட்டுநர் வந்து உட்கார்ந்ததும் பாலு உள்ளே வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“ஊருக்குப்போய் ரொம்ப நாள் இல்லே போல இருக்கே? ‘போர்’ அடிச்சுதா? பட்டப்பாவை விட்டுட்டு இருக்க முடியலே இல்லே..”
அவன் ஆழம் பார்க்கிறான் என்பது இவளுக்குப்புரிந்தது.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லே. அங்கே இருக்கப் பிடிக்கலே. பூரணி அக்கா மாதிரி எனக்கு யாரும் பேச்சுத் துணைக்குக் கூட இல்லை…”
“முன்னே கல்யாணத்துக்கு முன்னே யார் இருந்தார்கள்?”
“சாயிராம்னு ஒருத்தர் வருவார். இப்ப அவர் வந்தா எங்கம்மாவுக்குப் பிடிக்கலை”
வெளியே வெயில் குறைந்து வந்தது. விளக்கேற்றுகிற நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தார்கள்.
வீட்டுக்குள் அவள் வந்ததும், “என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? நீ வரப்போறேன்னு பட்டப்பா சொல்லலையே” என்று கேட்டாள் கங்கம்மா.
பாலுவைப் பார்த்து, “நீயும் இப்பத்தான் வரியா? ராத்திரி இங்கேயே சாப்பிட்டுடு…” என்றாள்.
– தொடரும்…
– அவள் விழித்திருந்தாள் (நாவல்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1987, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.