அவள் விழித்திருந்தாள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2024
பார்வையிட்டோர்: 1,014 
 
 

(1987ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

கூடம் பூராவும் பூ மணந்தது. தட்டு நிறைய ஜாதி மல்லிகை அரும்புகளை வைத்துக்கொண்டு நெருக்கமாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டுப் பூரணி. தூக்கம் கலைந்து எழுந்துவந்த நர்மதாவைப் பார்த்து அவள் விஷமமாகச் சிரித்துக்கொண்டே, “என்ன இன்னிக்கே இப்படிப் பகல்லே தூங்கறே!” என்று சேட்டாள். 

நர்மதாவுக்கும் அவள் கேள்வி புரிந்தது. அவளும் வெட்கத்துடன் சிரித்துவிட்டு கொல்லைப்பக்கம்போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். லேசாகப்பவுடர் போட்டுக்கொண்டு, குங்குமம் வைத்துக் கொண்டாள். 

“காப்பி சாப்பிட்டுட்டு வா. தலை பின்னி பூ வைக்கிறேன். ராத்திரி அசட்டுப் பிட்டுன்னு இருக்காதே உம்.. போ” என்றாள் பூரணி. 

“என்னது…” என்றாள் நர்மதா. 

“என்னதா? ஒன்றும் தெரியாதமாதிரி” 

இருவரும் சேர்ந்தே சிரித்தார்கள். அதற்குள் பூரணியைத் தேடிக்கொண்டு அவள் கணவன் பாலு வந்தான். பகல் சாப்பாட்டுக்கு ‘பாக்டரி’ யிலிந்து லேட்டாக வந்திருக்கிறான்.

ஆள் நல்ல உயரம். வாட்டசாட்டமான தேகம். அரும்பு மீசை. சுருட்டை கிராப் இத்யாதி. 

அவன் மனைவியைப் பார்த்துக்கொண்டே ஓரக்கண்ணால் நர்மதாவை அளந்தான். தலையிலிருந்து படிப்படியாக அவன் பார்வை மார்பில் இறங்கி அங்கே நிலைத்து நின்றது. 

பூரணி இதை கவனித்து விட்டாள். 

“நர்மதா? இவர்தான் எங்காத்துக்காரரி”

சட்டென்று நர்மதா குனிந்து அவரை நமஸ்கரிக்கவும், “ஓ ஹோ! பட்டப்பாவின் மனைவியா?” என்று கேட்கவும் சரியாக இருந்தது. 

“த்தோ வந்துட்டேன். கங்கம்மமா பூக்கட்ட கூப்பிட்டா” என்றபடி பூரணி கிளம்பும்போது கங்கம்மாவே அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள். 

“இங்கதான் சாப்பிடறது. பட்டப்பா கல்யாணத்துக்கு தான் நீ வரலை. இங்கே சாப்பிடேன். இலைபோடுடி நர்மதா” 

இலை போட்டாயிற்று. நர்மதாவே சாப்பாடும் போட்டாள்.

“இப்படி வாழைத்தண்டு மாதிரி கைகளா? நீண்ட நீண்ட விரல்களா? நெற்றியிலே தவழும் கூந்தலா? அதிர்ஷ்டம் சிலபேரை எப்படி வளைச்சு பிடிக்கிறது பார்த்தியா? இந்த நோஞ்சான் பட்டப்பாவுக்கு இப்படி வெண்ணெய்ச் சிலை மாதிரி வழ வழன்னு ஒரு மனைவி கிடைச்சிருக்காளே” 

“சரியாச் சாப்பிடுங்கோ. பாயசம் எங்கயோ ஓடறது” பூரணியின் குரலில் கடுமை ஏறியது. மனைவியின் கடுமையான குரலையும், முகத்தையும் பார்த்தவாறு பாலு சாப்பிட்டு முடித்தான். 

இருந்தாலும், அவன் பார்வை அடிக்கடி நர்மதாவின் பக்கமே சென்றது. 

நர்மதா வெற்றிலைத்தட்டில் அழகாக இரண்டு “பீடாக்கள்” செய்து எடுத்து வந்து, 

“பூரணி அக்கா! உங்களுக்கும், அவருக்கும்…” என்று கொடுத்தாள். 

இதற்குள் வெளியே போயிருந்த பட்டப்பா ஒரு கட்டு மல்லிகைப் பூவோடு வந்து சேர்ந்தான். 

“பூரணி அக்கா! இந்தாங்க. ஜடை தைக்க”

“யாருக்குடா பட்டப்பா” 

அவன் நெளிந்து கொண்டே சிரித்தான். “உக்கும்…ஒண்ணும் தெரியாதாக்கும்” என்றான். 

பாலுவும், பூரணியும் கண் சிமிட்டி சிரித்துக்கொண்டார்கள். 

நர்மதா வெட்கத்தால் சிவந்துபோனாள். 

அன்று இரவு எல்லா இரவுகளையும்போல் அல்லாமல் புதுமையாக இருந்தது. நிலவு, மலர்கள், சந்தணம் என்று மனசுக்குப் போதையை ஊட்டும் எல்லாமே அந்த அறையில் இருந்தன. ஜன்னல் பக்கமாக வைத்திருந்த கண்ணாடியில் பிறைச்சந்திரன் தெரிந்தது. 

அவள் வெகுநேரம் நின்றிருந்தாள். பட்டப்பா ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். நர்மதா மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள். பாலை எடுத்து அவனிடம் கொடுத்தாள். பூரணிதான் காலையிலிருந்து “முதலில் பாலைத் தரவேண்டும்” என்று படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறாளே. 

பாலை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டான் அவன். 

ஒரு வேளை உடம்பு சரியில்லையோ? 

“உடம்பு சரியில்லையா? களைப்பா இருக்கா” என்று அவன் நெற்றியில் கை வைத்துப்பார்த்தாள் அவள். அந்த ஸ்பரிசம் கொஞ்சமும் அவன் உடலிலோ, உள்ளத்திலோ சிலிர்ப்பை ஏற்படுத்தவில்லை. 

நர்மதா அலுப்புடன் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அடுத்த வீட்டு மாடியைப் பார்த்தாள். திறந்த மாடியில் பூரணியும், பாலுவும் உட்கார்ந்திருந்தார்கள். பாலுவின் மடியில் அவள் படுத்துக்கிடந்தாள். அந்த நெருக்கம் தரும் சுகத்தில் அவன் மயங்கிக்கிடந்தான். 

“சே! என்ன வந்தது இந்த மனுஷனுக்கு?” 

அவன் திரும்பிப் பார்த்தபோது, நர்மதாவும் அவனைப் பார்த்தாள். இருவர் பார்வைகளும் மோதின. அவன் தன் பூனைக் கண்களால் அவளை ஊடுருவிப் பார்த்தான். 

“சரிதான், கல்யாணத்தன்றே அவள் மன்னி  ‘உன் ஆத்துக்காரருக்குப் பூனைக்கண்ணுடி. ராத்திரியிலே பார்த்து பயந்துக்கப் போறே… நீ பார்க்கலைன்னு கேட்டது’ சரியாகத்தான் இருக்கு. இனிமே கண்களை மாத்தமுடியுமா? எப்படியோ இருந்துட்டுப்போகட்டும். அன்பா இருந்தாச்சரி.” 

அவள் சிரித்தபடி அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பால் கிண்ணத்தை அவனிடம் கொடுத்தபடி, “ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச் சிருக்கு. பெரிசா, அழகாருக்கு. ஒண்டுக் குடித்தனத்துலே இருந்து அலுத்துப்போச்சு” என்று பேச ஆரம்பித்தாள். 

அவள் அவனிடம் எதிர்பார்ப்பதை மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அலுத்துப்போனவளாக “மணி ரொம்ப இருக்குமே…” என்று அவனிடம் மிகவும் நெருங்கி உட்கார்ந்தாள். 

அப்போது பட்டப்பா கண்களில் நீர் ததும்ப அவளை இரக்கத்துடன் பார்த்தான். அவளை அப்படியே இறுக அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போலத் தேம்பித் தேம்பி அழுதான். 

“நர்மதா! நீ ஏமாந்துட்டே. எனக்கிருக்கிற பலஹீனத்தைப்பத்தி உங்கிட்ட சொல்லவே வெக்கமா இருக்கு. பணத்தைப்பாத்து மயங்கி உங்கம்மா உன்னை என் கழுத்தில் கட்டிட்டாங்க. நீ எங்கேயோ எப்படியோ வாழவேண்டியவ. இதைக் காலையிலே எடுத்துப்போய் படி. ராத்திரி ராத்திரி இந்த அறைக்குள்ளே பல ஆசைகளோட வராதே.” 

அவள் முன்பாகக் கிடந்த அந்தக் கடிதத்தை அவள் வெறுப்புடன் பார்த்தாள். கணவனும், மனைவியும் முதன் முதலில் சந்திக்கும்போது கடிதம் என்ன வேண்டிக்கிடக்கிறது? 

மறுபடியும் அவள் அடுத்த வீட்டு மாடியைப்பார்த்தாள். 

பூரணியும், பாலுவும் அறையில் மங்கிய ஒளியில் படுத்திருப்பது தெரிந்தது. எத்தனை நெருக்கம்? முடிவற்ற குழப்பமான சிந்தனைகள் அவளை வாட்டி எடுத்தன. என்ன கடிதமாக இருக்கும்? ஒரு வேளை அவன் யாரையாவது காதலித்து இருக்கலாம். 

நீண்டு கொண்டே வந்த இரவு எப்போது தொலைந்தது என்பது தெரியாமல் அவள் தூங்கிவிட்டாள். விழித்தபோது பட்டப்பா அறையில் இல்லை. 

முதல்நாள் ஸ்வப்பனபுரியாகக் காட்சிதந்த வீடு இன்று அவள் வரைக்கும் வெறுமையாக இருந்தது. 

அத்தியாயம்-5

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவளை கங்கம்மா கனிவுடன் பார்த்தாள். தம்பியின் மனைவி. தனக்கு அப்புறம் இந்த வீட்டை நிர்வகிக்கப்போகும் எஜமானி. முத்து முத் தாகக் குழந்தைகள் பெற்று, தன்னை ‘அத்தை’ என்று அழைக்க வைக்கும் பெண். அவளை உள்ளம் நலுங்காமல் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைபட்டாள். பரிவுடன் சிரித்தபடி, “ நர்மதா! மொதல்லெ வாசல்லே ஒரு கை ஜலம் தெளித்து கோலம் போட்டுடு. நீதான் இந்த வீட்டு கிருஹ லட்சுமி. அப்படியொரு சம்பிரதாயம் இருக்கு.. இந்தா… என்று வாளியில் ஜலம் கொண்டு வந்து வைத்தாள். 

நர்மதா கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டுப் பார் த்தாள். கண் இரப்பைகள் சிவந்து கிடந்தன. பேசாமல் வாளி ஜலத்துடன் வாசலுக்குப் போய் ஜலம் தெளித்து, இழை இழையாகக் கோலம் போட ஆரம்பித்தாள். 

அப்போது பக்கத்து வீட்டு வாசற்கதவு திறந்தது. பாலு பாக்டரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான். இவளைப்பார்த்துச் சிரித்தபடி “அதுக்குள்ளே எழுந்தாச்சா? பூரணி இன்னும் எழுந்திருக்கலை.’ என்று சொல்லிக் கொண்டே அவளைத் தாண்டி நடந்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். நெடிய உருவம், கப்பீரமான உருவம். ஓர் ஆணின் ஆளுமை முழுமையாகத் தெரியும் தோற்றம். இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தவள் உள்ளே திரும்பி பட்டப் பாவின் தோற்றத்தையும் நினைத்துப் பார்த்தாள். 

நர்மதா கொல்லைப்பக்கம் போனாள். தோட்டம்பூராவும் எலுமிச்சை, நார்த்தை, மற்றும் மலர்ச்செடிகள் நிரம்பிக் கிடந்தன. கம்மென்று மணம் வீசிக்கொண்டிருந்தது. கிணற் றில் பாறை இடுக்குகள் வழியாக நீர் குபு குபுவென்று கசிந்து கொண்டிருந்தது. 

முகம் கழுவினாள். சில்லென்று நீரை வாரி வாரி முக மெங்கும் வழிய விட்டு முதல்நாள் ஏற்பட்ட மன உளச்சலை தீர்த்துக்கொள்ள முயன்றாள். உள்ளே வந்தாள். 

கங்கம்மா சுடச்சுட காப்பி கலந்து எடுத்து வந்தாள் “இன்னும் பால், சர்க்கரை ஏதாவது வேணுமாச்சொல்லு” 

“சரியா இருக்கு. நான் இவ்வளவு பெரிய டம்ளரிலே காப்பி சாப்பிடறதில்லை. ரொம்பப்பெரிய டம்ளர்” 

“நன்னா சாப்பிடணும். அரை வயித்துக்குச் சாப்பிடறதை இனிமே விட்டுடு. உனக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லை. வீட்டிலே சகல சாமானும் கொட்டி வச்சிருக்கு- நானே சமையல் பண்றேன். நீ கடந்து கஷ்டப்படாதே. கூட மாட ஒத்தாசை பண்ணு போறும். என்ன சமைக்கலாம்?” என்று சொல்லிக் கொண்டே கூடை நிறைய காய்கறிகளை எடுத்து வந்து வைத்தாள். 

கறிகாய், சமையல் என்று எதிலும் பற்று இல்லாமல், “உங்க இஷ்டம் போல பண்ணுங்க. எனக்கு எல்லாமே பிடிக்கும். பிடிக்கிறதும் பிடிக்காததும் மனசைப்பொறுத்த விஷயம்” என்று ஏதோ பேசினாள். 

“அப்படியில்லைடி நர்மதா! எனக்கு இருக்கிறது ஒரே தம்பி. அவனும் நீயும் சந்தோஷமா இருக்கிறதுதான் எனக்கு முக்கியம். அவன் கொஞ்சம் அசடு. இந்தக்காலத்து பிள்ளைகள் மாதிரி இருக்க மாட்டான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பொறுத்துண்டு போகணும்.” 

நர்மதா குனிந்தபடி கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்தாள். 

‘கொஞ்சம் முன்னே பின்னே என்றால், புரியமாட்டேன்கிறது. அழகின் பரவலாய், ஒரு ஆடவனை மயக்கும் சக்தி இந்த கண்களுக்கு, அதரங்களுக்கு இருக்கிறது. அவள் படுக்கையில் சாய்ந்து கிடந்தபோதும், ஒருக்களித்து இருந்த போதும் அவன் விலகி விலகி ஒதுங்கிப்போகக்கூடிய அசடனாகவா இருக்கிறான்? ஐயோ கடவுளே! இந்ந அசடை எப்படி சமர்த்தனாக்குவது?’ 

கங்கம்மா ஏதேதோ ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாள். பெரிய அளவில் வெங்கடாஜலபதியின் படம் மாட்டியிருந்தது. மிக சாந்நித்தியமாக இருந்தது அவர் தோற்றம். வெள்ளிக்குத்து விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி இருந்தாள். 

“இந்தப் படம் என் புருஷன் திருப்பதியிலேருந்து வாங்கிண்டுவந்து கொடுத்தார். அவருக்கு ஒரு புள்ளை வேணும்னு ரொம்ப அசை. ஆனா, என்னவோ அவருக்கு சபல புத்தியே இல்லை. நான் ஆசை ஆசையாய் காத்திருந்த நாட்களில் அவர் ஏகாதேசி, அமாவாசை என்று சொல்லிண்டு வாசல் திண்ணைக்குப் போயிண்டிருந்தார். நான் அலுப்போடு இருந்தப்ப அவர் ஆசையோடிருந்தார், என்னவோ பொறக்கலை. பொறி இருந்தாத்தான் பிள்ளை பிறக்கும். எத்தனை வயசானாலும் விடாது. எப்படியோ உன் வயத்துலே நாலு பொறந்தாச்சரி. நீ பிரசவத்துக்கு உங்க வீட்டுக்குப்போக வேண்டாம். நான் செய்யறேண்டி” 

நர்மதா வேதனையுடன் கங்கம்மாவைப் பார்த்தாள். அவள் கண்களை மூடிக்கொண்டு மிகுந்த பரவசத்துடன் சுவாமியின் எதிரில் நின்றிருந்தாள். பகவானே! எப்படியும் நீ இந்த பொண்ணுக்கு நாலைஞ்சு குழந்தைகள் அனுக்ரகம் பண்ணனும் என்று கேட்கிற தோரணையில் இருந்தாள். 

ஆஹா! இந்த நம்பிக்கைதான் மனிதனை எப்படியெல்லாம் நடக்க வைக்கிறது? சிந்திக்க வைக்கிறது? செயல்பட வைக் கிறது? மனித சக்திக்கே நம்பிக்கைதான் மூலகாரணமாக இருக்கிறது? 

நேற்றிரவில் கணவன் கொடுத்தகடிதத்தை இடுப்பில் சொருகி யிருந்த இடத்தில் தேடினாள் நர்மதர். பத்திரமாக இருந்தது. உறுத்திக் கொண்டேயிருந்தது. உடனே படித்துவிட வேண் டும்என்று மனசைத் துடிக்க வைத்துக்கொண்டு புடவையின் மடிப்பில் ஒளிந்து கொண்டிருந்தது. 

ஏதோ பூச்சி ஊர்வது போல் ஒரு சமயம் வேதனையைத் தந்தது. “கடுதாசி யாவது ஒண்ணாவது! தாலி கட்டிய பொண்டாட்டி கிட்டே வாயைத்திறந்து பேசாம கடுதாசி என்ன வேண்டிக்கிடக்கு? எந்த அந்தரங்கமும் அவர்களிடையே அந்தரங்கமாக இருக்க முடியாதே! மனம், வாக்கு, காயத்தால் பிணைக்கப்பட்டவர் களிடையே கடுதாசியாவது இன்னொண்ணாவது? 

கறி காயை நறுக்கி வைத்துவிட்டு தயிர்கடைய ஆரம்பித் தாள். வெண்ணெய் திரண்டு பொங்கிவந்தது. அதைவழித்து வெள்ளிக்கிண்ணத்தில் போட்டு சுவாமி கிட்டெ கொண்டு வந்து வைத்தாள் கங்கம்மா. 

“சமத்தா எல்லாக் காரியமும் செய்யறே. உங்கம்மா நன்னா காரியம் செய்வா, நன்னா சமைப்பா. ஊறுகாய் போடுவா” 

திரும்பத் திரும்ப சமையலும், சாப்பாடும் பற்றியபேச்சு அவலுக்கு அலுப்பைத்தந்தது. எழுந்து வெளியே வந்தாள். பட்டப்பா குளித்துவிட்டுவந்தான். பளிச்சென்று நெற்றியில் சந்தனப் பொட்டுடன் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணினான். 

”நீ குளிக்கலை”

”இல்லை” 

“என்னடா இப்போ குளிக்க அவசரம்?” என்று சொல்லி கங்கம்மா நர்மதாவுக்குப் பரிந்து பேசினாள். 

நர்மதா குளிக்கப்புறப்பட்டாள். குளியளறைக்கதவைச் சாத்திக்கொண்டு இடுப்பில் இருந்த கடிதத்தை எடுத்தாள். மேலே இரண்டு குருவிகள் சல்லாபம் புரிந்து கொண்டிருந்தன பெண்குருவி நொடிக் கொருதரம் தன் உடம்பைக் கோதிக் கோதி அழகுபடுத்திக்கொண்டு தலையைச் சாய்த்து ஆண் குருவியை ′கீச் கீச்’ என்று அழைத்தது. ஆண் குருவி வேகமாக கூடு கட்ட வைக்கோலைத் தூக்கிக்கொண்டு பறந்து வந்தது. 

“கீச் கீச்” என்று பெண் குருவி கத்தியது. கூடு கட்டுதற்காக வைக்கும் புல்லும், வைக்கோலும் கீழே உதிர்ந்து கொண்டிருந்தன. “அழகா இருக்கே நீங்க கூடு கட்டற லட்சணம். இந்த லட்சணத்தில் காதல் வேறே” என்று அது “கீச் கீச்” என்று கத்தியது. 

ஆண் குருவுயும் பலத்த சத்தத்துடன் “காச் காச்” என்று கத்தித்து. 

“ரொம்பத்தான் துள்ளாதே. உட்காந்த இடத்துலே என்ன அதிகாரம் வேண்டி இருக்கு. காதலியாச்சேன்னு பார்க்கிறேன். இல்லைனா தொலைச்சுப்புடுவேன்.” 

பிறகு இரண்டும் சல்லாபிக்க ஆரம்பித்தன. 

நர்மதா வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

பெண் குருவியே ரொம்பதுணிச்சலாக நடந்து கொண்டது. அதுவே வலுவில் போய் ஆண் குருவியைச் சீண்டியது. பிறகு இரண்டும் பறந்து போயின. 

நர்மதா கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள். 

அன்புள்ள நர்மதா, 

உன்னைப் பார்க்கும்போது மனசில் ஏற்படுகிற பரவசம் அப்படியே தேங்கித் தடைபோட்டதுபோல் நின்றுவிடுகிறது. பிறவியிலேயே ஆண்மையற்ற என்னைப்பற்றி யாருக்கும் தெரியாது. ஆசைகளைத் தேக்கி வைத்திருக்கும் உன்னை, கோழையாக்கி ஏமாற்றிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. உனக்கு விருப்பமில்லாவிட்டால் என்னை விட்டுப்போய்விடு. 

பட்டப்பா. 

நர்மதா சிலையாக நிள்றாள். மரமாகிப்போனாள். கண்கள் வரண்டு போயின ஆண்மையற்றவன்… ஏன்தான் இந்த ஆண்கள் எதிலுமே இப்படி மெத்தனமாக இருக்கிறார்களோ? பெண்களை குரூரமாக வதைக்கிறார்களோ? 

இனிமேல் என்ன செய்யவேண்டும்? புருஷன் உதவாக்கரை என்று இரைந்து சொல்லிக்கொண்டு வாசல்லே இறங்கி நடந்துவிட முடியுமர்? சமையல்காரியின் பெண்ணாகிய தனக்கு கோர்ட்டும், கொத்தளமும் ஏற முடியுமா? இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும்? 

“நர்மதா! பூரணி வந்திருக்கா பார். குளிச்சாச்சோ இல்லையோ?” என்று கங்கம்மா குரல் கொடுத்தாள். 

அன்று அவள் அவசரமாகக் குளித்தாள். சோப்பு தேய்த் துக்கொள்ளவில்லை. வாசனை என்ன வேண்டிக்கிடக்கு? 

புடவையை அரைகுறையாகச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவளை பட்டப்பா ஆவலுடன் பார்த்தான், மனைவி என் கிற முறையில் அவளை சுவாதினமாகப் பார்த்துச் சுவைக்க அவன் காத்திருப்பதுபோல ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான். 

பூரணி வழக்கம்போல பூச்சரம் கொண்டு வந்திருந்தாள். 

“குளியல் என்ன வெண்ணீரிலேயா, பச்சைத்தண்ணியா?” 

“நெருப்பிலே” 

“சீ பைத்தியம்! உளர்றியே” 

“ஆமாம் இப்படி உள்ளே வாங்க” 

இருவரும் உள்ளே போனார்கள். 

“ராத்திரி ரொம்ப நாழி முழிச்சிண்டு இருந்தாப்பலே இருக்கே” 

“நீ பார்த்தியா என்ன? எங்களையா கவனிச்சிண்டு இருந்தே” என்று கேட்டாள் பூரணி. 

“ஆமாம்… மத்தவங்களை கவனிச்சுதானே ஆகணும்? இங்கதான் ஒண்ணும் இல்லியே” 

“என்னடி சொல்றே” 

நர்மதா மிக ரகசியமாகப் பட்டப்பாவின் அலட்சியத்தைப்பற்றி கூறினாள். 

“போடி. மொதல்லே சில ஆண்கள் வெட்கப்படற மாதிரி இருக்கும். நீதான் சரிகட்டணும். மெதுவாக கிட்ட நெருங்கி உம் புருஷனைத் தொட்டுப்பாரு” 

“அவரே என்னைத்தொட்டு அணைச்சுக்கிட்டாரு” 

“அப்புறம்?” 

“அப்புறம் ஒண்ணுமில்லே. உங்க வீட்டு மாடியைப் பார்த்து உட்காந்து இருந்தேன். அவர் தூங்கிட்டார். நீங்களும், உங்க அவரும் கட்டில்லே ரொம்ப நெருக்கமா…” 

“சீ சீ, மறந்துபோய் ஜன்னலை சாத்தாம இருந்துட்டேன் போல இருக்கு. ராத்திரி முழிப்பு வரும்போதெல்லாம் உன் ஞாபகம்தான் எனக்கு. பட்டப்பா ஒருமாதிரிபையன் ஆச்சே. பொம்பளை மாதிரி இருப்பானே…ன்னு நெனச்சுகிட்டேன்” என்றாள் பூரணி, 

என்ன காரணமோ நர்மதா பூரணியிடம் பட்டப்பா கொடுத்த கடிதத்தைக்காட்டவில்லை. ஒரு மனுஷன் ஆண்மையற்றவனாக இருப்பதுபற்றி அவள் நடுத்தெருவில் நின்று கூச்சல்போட முடியுமா? வீட்டுக்குள்ளேதான் இரைந்து கத்தி ரகளை பண்ணமுடியுமா? 

கடவுளே! இப்படியும் நடக்குமா? எங்கேயோ யாத்திரை போய்விட்டு வந்த அம்மா வரனைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்தாள். 

அவளுக்கு அந்த சாயிராமின் பேரில் சந்தேகம். இவளைச் சுற்றி சுற்றி வருகிறானே. என்னிக்காவது தன் தலையில் கல்லைப் போட்டுவிட்டு இவளை இழுத்துக்கொண்டு போய் நாலு மாசம் வைத்திருந்து நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போய்விடுவானே என்று அம்மா மடியில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருந்தாள். வறுமைச் சேற்றில் மலர்ந்த தாமரைப் போல பழையது சாப்பிட்டே பளபளவென்று வளர்ந்து நின்றாள் நர்மதா. 

கங்கம்மா இரட்டை வடம் சங்கிலியும், நாலு வளையல் களும், முத்துத்தோடும் எடுத்து வந்து நிச்சயதார்த்தம் நடத் தினாள். வெங்குலட்சுமி நகைகளின் மதிப்பில் மயங்கிப்போ யிருந்தாள். எப்படியாவது சாயிராமின் பார்வையிலிருந்து தப்பி நர்மதா கல்யாணமாகிப்போனால் போதும் என்கிற நிலை.

முதலில் அம்மாவின் பேரில் வந்த ஆத்திரம் படிப்படியா கத்தணிந்தது. 

அத்தியாயம்-6

இப்படியே பல இரவுகள் போயின. வெறும் நெருக்கம் தான். வேறே ஒண்றும் இல்லை. அத்துடன் அவன் தூங்கி விடுவான். இவள் தனக்குள் வெந்து கொண்டிருந்தாள். பெருமூச்சுகள் கண்ணீர், விரக்தி என்று அவளை வாட்டி எடுத்தது. புதுச்சேலை கட்டுவதில்லை. அதிகமாய் பூ வைத்துக் கொள்வதில்லை. முகத்திலே ஏக்கம் ததும்பி நின்றது. 

ஊரிலிருந்து அம்மா கடிதம் போட்டிருந்தாள். 

“நீ குளிச்சிண்டு இருக்கியா? சமத்தா நடந்துக்கிறியா? கங்கம்மாவின் மனசு கோணாமல் நடந்துக்கோ… நான் முடியறச்சே உன்னை வந்து பார்க்கிறேன். உன் அண்ணாவும் மன்னியும் இப்போ சினிமா பார்க்கிறது அதிகமாயிடுத்து. ஒரு நாளைக்குக் கொறஞ்சது இரண்டு படத்துக்காவது போயிண்டிருக்கா” 

நர்மதா கொல்லையில் உட்காரும் போதெல்லாம் கங்கம்மா முகம் சிணுங்கினாள். “ஏழுமலைவாசா! இப்படி என்னை சோதிக்கிறியே. இந்த வீட்டிலே ஒரு குழந்தை விளையாடக்கூடாதுன்னு உன் எண்ணமாக்கும்?” 

பூரணி மசக்கை என்று சொல்லிக்கொண்டு ஏகப்பட்ட ரகளை பண்ணிக் கொண்டிருந்தாள். கங்கம்மா மாங்காய்த் தொக்கும், மிளகாய்ச் சட்டினியுமாய்ப் பண்ணி நர்மதாவிடம் கொடுத்தனுப்புவாள். 

“பாத்துக்கோ! அவளுக்குக் கல்யாணமாகி இரண்டு வருஷம்தான் ஆச்சு. அவள் சமத்தைப் பாத்துக்கோ… அவளண்டைகேட்டுத் தெரிஞ்சுக்கோடி புருஷன் கிட்டெ எப்படி நடந் துக்கிறதுன்னு.. அவன் வேணும்ங்கச்சே நீ வேண்டான்னு இருப்பே. நீ வேணுங்கச்சே அவன் வேண்டாம்னு இருப்பான் போல இருக்கு. ஏறக்கொறைய எங்கதைதான்… பண்ணின பாவம். என் தலைலே இப்படி விடிஞ்சிருக்கு’ 

நர்மதா பூரணியிடம் நாத்தனார் பேசுவதைச் சொல்லி அழுதாள். 

“சீ.. சீ… அந்த அம்மாவுக்கு நீ இன்னும் ‘உண்டாகலை’ யேன்னு இருக்கு. கல்மிஷமில்லாத ஜன்மம். தப்பா எடுத்துக்காதே” 

பாலு வழக்கம் பேர்ல பகல் சாப்பாட்டுக்கு வரும்போது பூரணி மசக்கை மயக்கத்தில் படுத்திருப்பாள். 

“நீங்களே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுங்கோ…” 

“நீ தயிர் வச்சிருக்கிற இடம், ஊறுகாய் வச்சிருக்கிற ஜாடி, நெய் இதெல்லாம் தேடிண்டு இருக்க வேண்டியிருக்கு..உன்னாலே முடியலைன்னா எல்லாத்தையும் எடுத்து ‘டைனிங்’ டேபிள்ளே வச்சுடறதுதானே?” 

“நான் போடட்டுமா பூரணி அக்கா?” என்று நர்மதா கேட்டாள். 

“போடேன்”

பாலு கை கால் அலம்பிக்கொண்டு வந்து உட்கார்ந்தான்.

நர்மதா பரிமாறினாள். அவன் அவளை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டே சாப்பிட்டான். 

“நீ என்ன சோப்பு ‘யூஸ்’ பண்றே”

நீ என்று சொல்லும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது 

“கேமி” 

“ஃபாரினா ?” 

“ஆமாம் அவர் வாங்கிண்டு வந்தார்.”

“பேஷ்…அப்படித்தான் இருக்கணும். எஞ்ஜாய் யுவர்ஸெல்ப்” 

நர்மதா சோகமாகச் சிரித்தாள். மிளகாய் சட்டினி, தொக்கு எல்லாம் பரிமாறினாள். 

“பூரணி அக்காவுக்காக எங்க நாத்தனார் பண்ணி அனுப்பினது. மசக்கையோன்னோ” 

இவளுடைய வெகுளித்தனம் ஊரில் சாயிராமுக்குப் பிடித்திருந்தது. இப்போது பாலுவுக்குப்பிடிக்க ஆரம்பித்திருந்தது. 

“உனக்கும் கூடிய சீக்கிரம் மசக்கை வரணும்னு ஆசீர்வாதம் பண்ணவா? இல்லை லேட்டா வரணும்னு ஏதாவது ஃபாமிலி ப்ளானிங்லே இறங்கி இருக்கீங்களா?” என்று துணிச்சலாகக் கேட்டான் பாலு. 

நர்மதாவுக்கு வாயைவிட்டு ஓவென்று அழவேண்டும் போல இருந்தது. எப்பவுமே ஃபாமிலி ப்ளானிங்தான்னு கத்தவேண்டும் போல இருந்தது. வெட்கமாக இருந்தது. வேதனையாக இருந்தது. சில விஷயங்கள் நெஞ்சுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டு வெளியே வரமுடியாமல் முரண்டு பண்ணும். இந்த விஷயம் அடி வயிற்றிலேயே புகுந்து கொண்டு கிடந்தது. 

பூரணி ‘ஹோவ்’ என்று கொட்டாவி விட்டாள். விரல்களைச்சொடுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். பெண்களுக்கு மசக்கை வந்து விட்டால் புருஷனைக் கவனிப்பது குறைந்துவிடும். வயிற்றில் வளரும் சிசுவின் மீதே ஞாபகம். ஆணா, பெண்ணா, கருப்பா சிவப்பா? ரொம்ப வலிக்குமா? கத்த வேண்டியிருக்குமா? என்று பல கேள்விகள். ஆராய்ச்சிகளில் நினைவு மோதிக்கொண்டிருக்கும். 

“சாப்பிட்டாச்சா?” என்று கணவனைக் கேட்டாள். 

” ஓ! உன் சிநேகிதி பரிஞ்சு பரிஞ்சு சாதம் போட்டாள்”

“அப்படியாடி? எனக்கும் கையிலே பிசைந்து போடேன்”

நர்மதாவும், பூரணியும் சாப்பிட்டார்கள்.

“ஏண்டி! ஒரு மாதிரியா இருக்கே”

“ஒண்ணுமில்லே” 

“எங்கிட்டே மறைக்கிறே. பட்டப்பா உங்கிட்டே ஆசையா இருக்கானோல்லியோ?” 

அவள் மௌனமாக இருந்தாள். பாலு படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். 

“சொல்லேண்டி…ரொம்ப இளைச்சுப்போயிட்டே” 

“போனாப்போறேன். எப்படியோ இந்த உலகத்திலேருந்து போனாச்சரி…” 

“சீ…சீ…வாயப்பாரு… எங்கிட்டே செல்லேண்டி” 

“ஒரு ஆசையுமில்லை. ஒரு மண்ணுமில்லை. கல்லுக்காவது கசிவு இருக்கும். ஈரம் இருக்கும். இந்த மனுஷன் ஒண்ணும் பிரயோஜனமில்லை.” 

பாலு தூங்குவதுபோல இருந்தான். 

‘அடடா! காட்டிலே காய்கிற நிலாதான்.. அதான் இந்தப்பொண் வாடி வதங்கிப்போயிருக்கு’ என்று நினைக்துக் கொண்டான். 

பூரணி திடுக்கிட்டுபோய் உட்கார்ந்திருந்தாள். பெண்கள்தான் பல விதங்களிலும் கோளாறுகள் உள்ளவர்கள் என்று தீர்மானித்து இந்தச்சமூகம் அவர்களையே ஏசிக்கொண்டிருக்கிறதே. ஆண்களின் சரீர அமைப்பிலும் எத்தனையே கோளாறுகள் இருக்கக்கூடும் என்பதை வைத்தியர்கள் தவிர மற்றவர்கள் தெரிந்து கொள்வதுமில்லை. அதைப் பற்றி சந்தேகப்படுவதுகூட இல்லை. 

கொஞ்சநேரம் அங்கே மௌனம் நிலவியது. 

“நான் போயிட்டு வரேன்” என்றபடி நர்மதா கிளம்பினாள்.

பாலு அரைக் கண்களால் அவளை முழுமையாகப் பார்த்தான். நன்றாகப் பார்த்தான். 

பூரணிக்கு திகைப்பு அடங்கவே சிறிது நேரம் பிடித்தது. ரொம்பவும் முன்னேறி விட்டோம். ‘விமன்ஸ் லிப்’ என்றெல்லாம் வாய் கிழிய பேசும் இந்த நாட்களில்கூட படித்த பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் என்றால் பூம் பூம் மாடுகள் மாதிரி பிள்ளை வீட்டார் கேட்கிற அசட்டுக் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு, பாடத்தெரியாவிட்டாலும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கோ ஒன்றிரண்டு பெண்களுக்குத்தான் துணிச்சல் இருக்கிறது. ‘பாடத்தெரியாது’ என்று சொல்கிறார்கள். 

நர்மதா பட்டப்பாவிடம் என்ன கேள்விகள் கேட்டிருக்கப்போகிறாள்? 

நன்றாக மூன்று வேளைகள் சாப்பிட, விதவிதமான துணிகட்ட, நகைகள் பூட்டிக்கொள்ள வசதியான குடும்பம். பையன் வெளித்தோற்றத்தில் பெண்மை கலந்த ஆணாக இருந்தான். ஆண்மை கலந்த பெண்கள் இல்லையா என்ன? அட்டமும் சட்டமுமாய் உயரமாய் எத்தனை பெண்கள் ஆண்களை மிஞ்சிய ஆண் தோற்றத்துடன் இல்லை. அப்படி ஆணும் பெண்களைப்போல இருக்கிறான். 

இனிமேல் இந்தப் பொண்ணுக்கு விடிவு காலம் ஏற்படப் போறதா? எப்படி? இவனை விட்டு விட்டு ஓடிப்போவதா? வாழா வெட்டியாகப் பிறந்த வீட்டுக்குப் போய்விடுவதா? அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறது? 

கழுத்திலே தாலியும், காலிலேமெட்டியும் குலுங்கினால்கூட அந்தப்பெண் வேறு இடத்தில் ஓதுங்கினால் ‘சைட்’ அடிக்கிற காலம் இது. 

ராமராஜ்யமா பாழாய் போகிறது? 

பூரணி குலுங்கி அழுதாள். பல விதங்களில் வெள்ளைக்காரர்கள் தேவலை. உண்டு இல்லை என்று கத்தரித்துக்கொள்வார்கள். இங்கே தர்மம் என்று ஒன்று இருக்கிறது. அதுவும் பெண்களுக்கு என்று பிரத்யேசமாக விதிக்கப்பட்ட ஸ்திரீ தர்மம். இதன் பெயரில் இதன் நிழலில் எண்ணற்ற கொடுமைகள் பெண்களை எதிர் கொள்கின்றன. 

பாலு இப்போது நன்றாக விழித்துக் கொண்டான். அவன் சாப்பிட்டு அரையோ முக்கால் மணியோ ஆகியிருந்தாலும் “பாக்டரி” க்குக் கிளம்புமுன் சூடாகக் காப்பி சாப்பிட வேண்டும். 

பூரணி பொன் நிறத்தில் நுரை தளும்ப காப்பியை ஆற்றியபடி. முத்து முத்தாக வியர்க்கும் வியர்வை நெற்றியுடன் அவனிடம் காப்பி தரும்போது அவன் அவள் அழகில் லயித்துப் போவான். லேசாக ‘சென்ட்’ கமழும் கை குட்டையால் வியர்வையை ஒற்றி விடுவான். கன்னத்தைக் கிள்ளுவான். இன்னும் இத்யாதி இத்யாதி. 

இன்று பூரணி கண்களில் கண்ணீர் பெருக உட்கார்ந்திருந்தாள். 

பாலு எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்தான். உடுத்திக்கொண்டான். 

“காப்பி டியர்..” 

“கான்ட்டீன்லே சாப்பிடுங்கோ. எனக்கு உடம்பு சரியில்லே” 

“சிநேகிதியோட பேசிண்டிருக்கச்சே நன்னாத்தானே இருந்தே. கமான்! நீ போடற காப்பிதான் வேணும்” 

“என்னாலே முடியாது முடியாது. இதென்ன நொள்ளை அதிகாரம்?” 

“பொம்மனாட்டினா புருஷன் அதிகாரம் பண்ணித்தான் தீரணுமா?” 

“காப்பி கேட்டால் அதிகாரமா? ப்ச்… உனக்கு ‘மூட் அவுட்’ . நீயும் உன் சிநேகிதியும் பேசின ரகசியம் எனக்கும் கேட்டுது, பட்டப்பா ஈஸ் நாட் பிட் இனப்” 

“ஐயோ, ஐயோ! இரைஞ்சு பேசாதீங்கோ. நர்மதா வந்து தொலையப்போறா…பாவம்” 

“என்ன பாவம்? போடா முண்டம்! என்று விட்டு வெளியே நடக்கட்டும். இஷ்டமானவனோட இருந்துட்டுப் போறா…” 

“என்ன? என்ன? இஷ்டமானவனோட இவள் இந்த முண்டம் கட்டின தாலியோட இருந்துட்டுப் போகட்டும்.. எத்தனை நாளைக்கு, எத்தனை மாசம், எத்தனை வருஷங்களுக்கு? அப்புறம்?-” 

பூரணியின் கண்களில் ஆத்திரம் கொந்தளித்தது. 

விவாக பந்தத்தில் தோற்றுவிட்ட ஒரு பெண்ணின் எதிர்காலம் எத்தனை இருள் சூழ்ந்ததாக இருக்கிறது? அவள் தன் நியாயமான ஆசைகளை கருக்கிக்கொண்டு படித்து வேலைக்குப் போய்ப்பிழைத்துக் கொண்டால், ஒரு வேளை இந்த சமூகம் பாலு சொல்வதைப் போல ஒத்துக் கொள்ளலாம். இருப்பதை… 

“காப்பி நான் போடறேன்” என்று பாலு காஸைப் பற்றவைத்தான். பாலைச்சுட வைத்து இரண்டு தம்ளர்களில் காப்பி எடுத்து வந்தான். கோபப்பட்டு சிவந்து போயிருந்த மனைவியை பரிவுடன் அணைத்தவாறு காப்பியை அவளிடம் கொடுத்தான். இருவரும் சிரித்தார்கள். 

அன்று அரைநாள் “பாக்டரி”க்கு மட்டம். வாசலில் நிழல் தட்டும் போதெல்லாம் அவன் நர்மதாவை எதிர் பார்த்தான்.

– தொடரும்…

– அவள் விழித்திருந்தாள் (நாவல்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1987, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *