அவள் பெண்ணல்ல!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 11,414 
 
 

வடபழனியில் உள்ள பிரபல திரையரங்குக்கு நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருந்தேன். திகில் படம். இருந்தாலும் முதல் பாதிவரை சிரிப்பாகத்தான் போச்சு. இடைவேளையில் நண்பன் பத்ரனுடன் காபி அருந்திக் கொண்டிருந்தேன்.

“”என்னடா பத்ரா திகில் படம்னே.. சிரிப்புப் படமாக இருக்கே?”

“”இல்ல நண்பா செகண்ட் ஆஃப் பூரா திரில்லிங்காத்தான் இருக்கும்..” என்றவன் தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தான். நான் வேண்டாம் என தடுத்தும் படத்தின் சஸ்பென்ûஸ உடைத்துவிட்டான். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது.

“”டேய் நான் ரூமுக்குப் போறேன்..”

“”ஏன்டா என்னாச்சு?”

“”ஏன்டா திரில்லர் படத்தை சஸ்பென்úஸாடு பார்த்தாதான் சுவாரஸ்யமா இருக்கும். உன் ஓட்ட வாயால எல்லாத்தையும் சொல்லிட்டே.. உன்னப் போய் படம் பாக்க கூட்டியாந்தேனே” என்றவாறே திரையரங்கை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

அவள் பெண்ணல்லவடபழனியிலேயே 4 நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து தங்கியிருந்தோம். பத்ரன் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிகிறான். மற்ற இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர்களாக உள்ளனர். நான் மின்னணு நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரிவு பிரதிநிதியாக இருந்தேன். அங்கே இங்கே என்று அலைந்து திரியும் வேலைதான். கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து இங்கே சென்னைக்கு வேலைக்கு வந்தபோது மாநிறமாகத்தான் இருந்தேன். இப்போது மாப்பிள்ளை கொஞ்சம் கறுப்புதான் என்று பெண் வீட்டார் சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறேன். பத்தாவது படிக்கும்போதே அப்பா சிவலோகப் பதவி அடைந்துவிட்டார்.

அம்மா பள்ளி ஆசிரியை. ஒரே அண்ணன். கல்யாணம் ஆகி சென்னையில் இருக்கிறான். அவனுக்கு ஒரே ஒரு குழந்தை. 4 வயசு. திரைத்துறையில் புகைப்படக் கலைஞராக இருக்கிறான். அவன்தான் சுமார் மூஞ்சி குமாரான என்னை ஒரு பீரியட் ஃபிலிம் ஹீரோ ரேஞ்சில் விதவிதமான போஸில் ஸ்டில் ஃபோட்டோ எடுத்து பெண் வீட்டாருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படியும் ஓரு ஆஃபரும் இன்னும் வரல்ல.

இந்தக் காலத்துப் பொண்ணுங்க ரொம்ப விவரமாக இருக்காங்களே. சம்பளம் குறைஞ்ச பட்சம் ரூ. 30 ஆயிரம் இருக்கணும். மாடர்னா இருக்கணும். சிகரெட், ரோஜா பாக்குக்கூட போடக்கூடாது என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோட இருக்கறதா தரகர்கள் சொல்கிறார்கள். இந்த நிலமையிலே எனக்கு எவ வந்து மாட்டுவாளோ-

சலிப்புடன் ரூமுக்கு வந்து சேர்ந்தேன். சோர்வாக

சோஃபாவில் சரிந்தேன். அப்போது செல்லிடப் பேசியிலிருந்து அழைப்பு. எடுத்தேன். அண்ணனின் குரல்.

“”கண்ணா உனக்கு பெண் பார்க்கப் போறோம். நாளைக்கே லீவு போட்டுட்டு கோபிக்குப் போவோம். அங்கே அம்மாவை கூட்டிக்கிட்டு வடவள்ளிக்குப் போகணும். பெண் வீடு அங்கதான் இருக்கு. பெண் கோவையில் ஐ.டி. நிறுவனத்துல பொறியாளரா இருக்கா. போட்டோவை வாட்ஸ்அப் அல்லது மெயிலில் அனுப்பி வைக்கிறேன்”.

“”அதெல்லாம் ஒண்ணும் வேணாம்”.

“”ஏன்டா?”

“”இல்லேண்ணா சில பேர் போட்டோவில் நல்லா இருப்பாங்க. ஆனா நேர்ல நல்லா இருக்க மாட்டாங்க. சில பேர் நேர்ல சுமாரா இருப்பாங்க. போட்டோவில் அழகாத் தெரிவாங்க. உனக்கு இதப்பத்தி நல்லாவே தெரியும். என்னைப் பத்தியும் உனக்குத் தெரியுமே எனக்கு எதிலும் ஒரு த்ரில் வேணும். நேரா பாக்குறதில இருக்குற த்ரில் போட்டோவில கிடைக்காதில்ல”

“”டேய் நீ சொல்றதும் சரிதான். காலையில் வீட்டுக்கு வந்துடு. ஒண்ணா போயிடலாம்”

“”சரிண்ணே” என்றவாறே கொஞ்ச கொஞ்சமாக உற்சாகம் பரவ ஃபிரிட்ஜில் இருந்து பவன்டோவை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தேன். முதன்முதலாக பெண் பார்க்கப் போறோம், பெண் எப்படி இருப்பாளோ என்று என் மனம் கற்பனையில் விரிய ஆரம்பித்தது. அதற்கு முன் என் பேக்ரவுண்டையும் கொஞ்சம் கேளுங்களேன்.

கோபியில் இருந்து வந்த ஓராண்டிலேயே நான் பக்கா சென்னை பையனா ஆயிட்டேன். ஃபேஸ்புக், வாட்ஸ்அஃப், ட்விட்டர், பர்கர், கிட்டார்னு எல்லாத்துலயும் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தேன். இருந்தாலும் லைஃப்ல எதிலயும் ஒரு த்ரில் இருக்கணும்னு நினைக்கிறவன். சின்ன வயசுலேயே ரிசர்வ் செய்து சினிமா பார்க்க மாட்டேன். கூட்டத்துல கியூவிலே நின்னு டிக்கெட் எடுக்கறதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். க்யூ மெது மெதுவா நகர..டிக்கெட் கவுண்ட்டரை நெருங்கும்போது டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்று த்ரில்லோடு நகரும் அந்த நொடிகள் இருக்கிறதே அதை முழுசா அனுபவிச்சு ரசிக்கற ரகம் நான். இப்போ 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நம்ம ஊர்ல ஒரு பையனுக்கு 25 வயசாகி, சுமாரான வேலையும் கிடச்சுட்டா போதும். உடனே அக்கம்பக்கத்துலயும் நட்பு வட்டாரத்துலயும் சொந்தக்காரங்க வகையிலும் என்ன மாப்ளே எப்ப கல்யாணம்னு கேட்டு நச்சரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்படித்தான் என் நிலைமையும். இவங்க தொந்தரவு தாங்காமலே ஏதாவது ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணும். அதுக்குன்னு.. நமக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு.. கொள்கை எல்லாம் இருக்கே. அதை விட்டுக் கொடுத்தா கல்யாணம் பண்ணிக்க முடியும்

இரவு மணி 10.30. சினிமா முடிந்து பத்ரன் வந்துட்டான். அவன் கையில் சில உணவுப் பொட்டலங்கள்.

“”நீ சாப்பிட்டிருக்க மாட்டேன்னு தெரியும். அதான் வாங்கியாந்தேன்” என்றவாறே பொட்டலங்களை என் முன் பிரிக்க ஆரம்பித்தான். தான் சாப்பிட்டுவிட்டதாகவும் சொன்னான்.

“”பத்ரா நாளைக்கே நான் பெண் பார்க்க ஊருக்குப் போறேன்”.

“”அட்றா சக்கை. அதான் இன்டர்வெல்லில் ரூமுக்கு வந்துட்டியா. சஸ்பென்ஸ் உடைச்சேன்னு என் மீது பழியப் போட்டியே..”

“”டேய் சும்மா இர்றா. அண்ணன் இப்பதான் போன் பண்ணி எனக்குச் சொல்லுச்சு..”

“”பொண்ணு யார்றா?”

“”போயிட்டு வந்து சொல்றேன்”

“”டேய் சஸ்பென்ஸ் பிரியனே.. எனக்கே சஸ்பென்ஸ் வச்சுட்டுப் போறியா?”

-என்று சிரித்தவாறே பத்ரன் லுங்கிக்குள் புகுந்தான். அடுத்த 10வது நிமிடத்திலேயே அவனது கொடூர குறட்டை கச்சேரி ஆரம்பமாகிவிடும். நான் உயர்தர சைவ உணவகத்தில் இருந்து வந்திருந்த உணவுப் பொட்டலங்களைப் பிரிக்க ஆரம்பித்தேன்.

கோபியில் அண்ணனுக்கு சொந்தமான கார் ஒன்று எப்போதும் தயாராக வீட்டில் இருக்கும். அந்தக் காரில் அம்மா, அண்ணி, அண்ணன் மகன் விமல் ஆகியோருடன் பெண் பார்க்க வடவள்ளிக்குக் கிளம்பினோம். ஓரிரு மணி நேரங்களில் பெண் வீட்டை அடைந்தோம்.

பெண் வீட்டில் நாங்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்கு எதிரே பெண்ணின் அப்பா, சொந்தக்காரங்க சில பேர் உட்கார்ந்திருந்தாங்க. முதன்முதலாக பெண் பார்க்கும் படலத்தில் இருந்ததால் எனக்கு கொஞ்சம் படபடப்பு. அண்ணியின் பக்கத்தில் அமர்ந்திருந்த விமலை எனது மடியில் இருத்திக் கொண்டேன். கொஞ்சம் படபடப்பு குறைஞ்ச மாதிரி இருந்தது.பெண்ணின் தாயார் எதிர்ப்புற அறை வாசலில் நின்றிருந்தார்.

“பெண்ணை வரச் சொல்லலாமே’ என்றார் என் அம்மா.

பெண் வந்தாள். நான் எதிர்பார்த்திருந்த பட்டுப்புடவையில் அவள் இல்லை. சுடிதாரில் வந்தாள். கூந்தலில் மட்டும் முழம் கணக்காக மல்லிப்பூ சரங்கள். நெற்றியில் சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு. முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தாள். அதே நொடியில் என்னையும் பார்க்கத் தவறவில்லை. கெட்டிக்காரி என்று மனதில் சொல்லிக் கொண்டேன். என்னுடைய கற்பனைக்குப் பெரிதும் பங்கம் நேராதபடி சுமாரான அழகுடன் இருந்தாள்.

“”பெயர் என்னம்மா?”

அம்மா கேட்டாள்.

“”சுமித்ரா…”

இதழ்களைப் பூப்போலப் பிரித்து சொன்னாள்.

“”சரிம்மா உள்ளே போம்மா”

அம்மா அவளை உள்ளே போகச் சொல்லிவிட்டு என் முகத்தை ஊடுருவிப் பார்த்தாள்.

“”என்னடா சொல்றே பொண்ணு லட்சணமாத்தானே இருக்கா?”

கேள்வியையும் பதிலையும் அம்மாவே சொல்லிக்கொண்டாள்.

நான் ரெடிமேடாக ஒரு புன்சிரிப்பை உதிர்த்தேன்.

அந்த நொடியில் அம்மா உள்பட அனைவரின் முகங்களும் மலர்ந்தன.

காஃபி, காரப் பணியாரம் எல்லாம் வந்தது. சாப்பிட்டுக் கிளம்பினோம்.

“”மத்ததை அப்புறம் பேசிக்கலாம்” என்றவாறே பெண் வீட்டாரிடம் சொல்லிக்கொண்டு அம்மா விடைபெற்றுக்கொண்டாள்.

அப்போது ஒரு 10 வயதுப் பெண்..பாவாடை தாவணி சரசரக்க பரபரவென ஓடி வந்து என் கையைப் பிடித்துக்கொண்டாள்.

“”அங்கிள்.. சுமித்ரா அக்கா உங்ககிட்ட பேசணுமாம்.”

எனக்கு திடுக்கென இருந்தது. த்ரில் பிரியனான எனக்கு அது ரொம்ப த்ரில்லா இருந்தது. என்னைச் சார்ந்தவர்களுக்கும் பெண் வீட்டாருக்கும் கூட திகைப்பாகத்தான் இருந்திருக்கும்.

இருப்பினும் பெண்ணின் அப்பா சுதாரித்துக்கொண்டு, “”தப்பா நினைச்சுக்காதீங்க. என் பொண்ணு கொஞ்சம் போல்டு டைப். பிரியப்பட்டா அவ கிட்ட பேசுங்க. இல்லன்னா பரவாயில்ல”

என்றவாறே என்னைப் பார்த்து தயங்கினார். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா சரி என்பது போல தலையசைத்தார். அந்தக் குட்டிப் பெண் பின்புற வராந்தாவுக்கு என்னைக் கூட்டிச் சென்றாள்.

“”வாங்க மிஸ்டர் கண்ணன்”

சுமித்ரா என்னை வரவேற்றாள். அவள் குரலில் துடுக்குத்தனம் தெரிந்தது. அதைவிட தூக்கலாக மிடுக்குத்தனமும் இருந்தது.

“”என்னய பிடிச்சிருக்கா?” இது அவள்.

“”ஓ. பியூட்டிஃபுல்.”

“”நான் போல்டானவள் கூட”

“”ஓ! அப்படின்னா போல்ட் அண்ட் ப்யூட்டிஃபுல்” இதுநான்.

“”சரி கண்ணன். என்னயப் பத்தி என்ன நினைக்கிறீங்க எங்கிட்டே ஏதாவது பேசணும்னா பேசுங்க..”

“”இப்ப நான் உங்கள பெண் பார்க்க மட்டும்தான் வந்திருக்கேன். இன்டர்வியூ பண்ண வரல்ல”

“”நானும் உங்கள இன்டர்வியூ பண்ணச் சொல்லல இன்ட்டராக்ட் பண்ணலாம்னுதான் கூப்பிட்டேன். அது சரி நீங்க என் பெயரையோ போட்டோவையோ கூட பார்க்க ஆர்வம் காட்டலைன்னு கேள்விப்பட்டேனே”

“”ஆமா அதுதான் என் கேரக்டர்.”

“”ஆனா.. உங்களப் பத்தின அவ்வளவு விவரமும் என் விரல் நுனியில்.. சாரி.. நாக்கு நுனியில் என்கிட்ட இருக்கு. சொல்லவா”

“” சொல்லேன்”

அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

“”உங்க பெயர் கண்ணன். படிப்பு எம்.சி.ஏ., பார்ப்பது எலக்ட்ரானிக் நிறுவனத்துல சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ். வயசு 30-ஐத் தொடப் போவுது. அடுத்த மாதம் ரூ. 3 ஆயிரம் இன்க்ரீமெண்ட் போடப் போவதாக உங்க சி.இ.ஓ. சொல்லியிருக்கிறார். அதனால உங்க சம்பளமும் ரூ. 30 ஆயிரத்தைத் தொடப் போவுது. வாரம் ஒரு சினிமா. அடிக்கடி டீ ஸ்டால் போவீங்க. நல்ல வேளை கேர்ள் ஃப்ரண்டோடு காஃபி ஷாப் போறதில்ல. ஃபேஸ் புக்ல மத்தவங்கள கலாய்க்கிறது உங்களுடைய பொழுதுபோக்கு. வாட்ஸ் அஃப், ட்விட்டர்னு எதையும் விடறதில்ல. உங்களுடைய பலகீனம் என்னன்னா.. பேஸ்புக்ல எந்தப் பொண்ணு ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தாலும் உடனே அக்செப்ட் பண்ணிக்குவீங்க. நான் கூட ரிக்வெஸ்ட் கொடுத்தேன். அடுத்த நொடியே அக்செப்ட் பண்ணிட்டீங்க..”

“”அப்படியா.. உங்க பேரு?”

எனக்கு திகைப்பாக இருந்தது.

“”சுஜாங்கிற பேர்ல என் பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கு”

“”ஆங் இப்ப ஞாபகம் வருது. ஆனா உங்க ஃபோட்டோ அதுல இல்லியே..”

“”உண்மைதான். நான் என் ஃபோட்டோவை அப்லோடு பண்ணல. அதுக்குப் பதிலா டார்லிங் பட ஹீரோயின் நிக்கி கல்ரானி படத்தை பேஸ்ட் பண்ணியிருந்தேன்”

“”அப்படின்னா திகில் படம் உங்களுக்குப் பிடிக்குமா?”

“”ஏன்! உங்களுக்கும் கூட த்ரில்லர்னா ரொம்பப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்”

இப்ப நான் உண்மையிலேயே திகில் அடைந்தேன்.

“”என்ன பெண் இவள்?”

“”சரி இன்னும் என்னென்னதான் உனக்கு என்னப் பத்தித் தெரியும்”

வியப்பு மேலிட நான் தொடர்ந்தேன்.

“”நீங்க தினமும் என்னென்ன பண்ணிக்கிட்டிருக்கீங்கன்னு சொல்றதுக்கு எனக்கு ஆள் இருக்கு”

“”யார் அது?” திகைப்பின் உச்சத்தில் நான்.

“”உங்க நண்பர்களில் ஒருத்தர்தான் அவர்”

“”யார்னு இப்பவே சொல்லு”

“”கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேனே..”

அவள் தீர்மானமாக சொல்ல.. எனக்கோ தீக்குள் தலையை விட்டது போலிருந்தது.

“”உங்களுக்குத்தான் த்ரில், சஸ்பென்ஸ்னா ரொம்பப் பிடிக்குமே. கல்யாணம் வரை அப்படியே மெயின்டென்ட் பண்ணிக்கிக்கிட்டிருங்க.. இப்ப போயிட்டு வாங்க. ரிலாக்ஸ்” என்றவாறே அவள் வழியனுப்பி வைத்தாள்.

நான் பேயறைந்தாற்போல் வெளியே வந்தேன்.

காரில் டிரைவர் சீட்டில் அண்ணன். பின் சீட்டில் அம்மா, அண்ணி. முன்சீட்டில் நான் வந்து அமர்ந்ததும் விமல் என் மடியில் வந்து அமர்ந்துகொண்டான். கார் புறப்பட்டது. 10 நிமிடம் வரையிலும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. விமல் கூட வெறுமனே வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தான்.

அண்ணணுக்கு எப்படியாவது இந்தக் கல்யாணம் நடந்துவிட வேண்டும். ஒரு பெரிய பொறுப்பு, கடமை முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருப்பான். அம்மாவுக்கும் சின்ன பிள்ளைக்கு கல்யாணம் ஆகிவிட்டால் போதும். நிம்மதியாக கண்ணை மூடலாம் என்ற நினைப்பு. அண்ணி மட்டும் இயல்பாக இருந்தார்கள்.

“”என்ன கண்ணா அந்தப் பொண்ணு உங்கிட்ட என்ன பேசினா நல்லா பேசறாளா?” அண்ணியே மவுனத்தைக் கலைத்தாள்.

“”நல்லா மட்டுமில்ல. ரொம்ப ஓவராவும் பேசறா அண்ணி”

“”இந்தக் காலத்துப் பொண்ணுங்க அப்படித்தான். அதனால என்ன உனக்கு அந்தப் பொண்ணை புடிச்சிருக்கில்ல”

“”பெண்ணா இருந்தா பிடிச்சிருக்கும்”

“”என்னடா சொல்றே? புரியலையே..”

அண்ணன் அவசர அவசரமாக குறுக்கிட்டான்.

“”அண்ணா நான் ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். ஆனா.. ஒரு உளவாளியை…சி.ஐ.டி.யை மனைவியா ஏத்துக்க முடியாது”

என் பதிலைக் கேட்டதும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் அண்ணன். அதே வேகத்தில் திகைப்புடன் என்னைப் பார்த்தான். அதே திகைப்புடன் அம்மாவும், புதிருடன் அண்ணியும் என்னைப் பார்த்தார்கள்.

– ஜூன் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *