அவள் ஒரு தொடர்கதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 13,738 
 

நந்தினி பால்கனி கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டு இருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில் மங்கை வீட்டைப் பெருக்கித் தள்ளிவிட்டுப் போகும்போது எல்லாவற்றையும் அடைத்திருக்க வேண்டும்.

ஜன்னல் கர்ட்டன்களைக்கூட விலக்கி வைக்கவில்லை. எல்லாம் பழைய பழக்கம். பால்கனியில் நின்றுகொண்டாள் நந்தினி. இரண்டாம் மாடி. பால்கனியில் இன்னும் ஈரம் உலரவில்லை. மதியம் வரை மழை பெய்துகொண்டு இருந்தது காதில் விழுந்தது. தெரு முழுவதும் உலராத ஈரம். கார்களின் தலை மேல் பூக்கள் சிதறிக்கிடந்தன. தெருவின் இருபுறமும் வரிசை கட்டிய கார்கள். சிவப்பும் மஞ்சளுமாகப் பூக்கள்.

இன்று ஞாயிறாக இருக்க வேண்டும். தெருவில் மனித நடமாட்டமே இல்லை. தெருவில் காலை எட்டிப்போட்டு நடக்கலாம். எவரும் பார்க்க மாட்டார்கள்.

அவளுக்கே சிரிப்பாக இருந்தது. பார்த்தால்தான் என்ன? அவளை அடையாளம் காண்பவர்கள் குறைந்துவிட்டார்கள். கண்டுகொண்டாலும் அதிகபட்சம் உதிர்ப்பது சின்னப் புன்னகை. இயல்பாக மறுபுன்னகை சிந்திவிட்டு நகர்ந்துவிட முடிகிறது. பெரும்பாலும் கேள்விகள் இல்லை. தெரிந்தவர் களிடமிருந்து விசாரிப்புகள் மட்டுமே வரும். ‘பொண்ணு எங்கே படிக்கறா?’, ‘மெட்ராஸ்லயே வந்து செட்டிலாகிட்டீங்களா?’ கீழ் ஃப்ளாட் எம்.எம். குடுவா மட்டும் அம்மையும் அச்சனையும் சேர்த்துக் கேட்பார்.

கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டும் என்று இல்லை. இந்த விசாரிப்புகள் மூலம் மட்டுமே பெறப்பட்ட பல செய்திகள், முன்னர் பத்திரிகைகளை அலங்கரித்தது உண்டு. இப்போது நான் செய்திப் பொருளில்லை. அதனால் விசாரிப்புகளும் இல்லை.

அறைக்குள் வந்து துப்பட்டாவை எடுத்து மேலே அணிந்துகொண்டாள். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தாள். காலை முதல் ஓடுகிறது. ஒன்று மாற்றி ஒன்றாகக் குழந்தைகளின் சேனல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எவ்வளவு சேனல்கள்… எவ்வளவு கற்பனைகள்! தன் வயதுக் காலத்தில் இப்படிப்பட்ட வசதிகளைக் கண்டது இல்லை.

கதவைப் பூட்டிவிட்டு, சாவியைக் கையடக்கப் பர்ஸூக்குள் வைத்துக்கொண்டாள். உள்ளே அதிகப் பணம் இல்லை. என்ன செலவு இருக்கிறது? ஒன்றும் வாங்கப் போவதில்லை. கடைகளும் இந்த மழையில் திறந்திருக்கப் போவதில்லை. வாங்கிக் குவித்த காலங்கள் இப்போது அபத்தமாகத் தோன்றுகின்றன. வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனவை ஏராளம்.

வாசல் கூர்க்கா எழுந்து நின்றான். பக்கத்தில் அவன் மனைவி தேசலாகத் தெரிந்தாள். சிரித்தாள். கொஞ்சம் தள்ளி குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டு இருந்தது. சப்பை மூக்கு, வெளிறிய வெண்மை நிறம். ரோஸ் நிறத்தில் அவள் கட்டியிருந்த புடவை, அவ்வளவு இணக்கமாக இருந்தது.

‘சாவியைக் கொடுங்கள், காரை வெளியே எடுத்துத் தருகிறேன்’ என்றான் கூர்க்கா. சாவியைக் கொண்டு வரவில்லை. ‘பரவாயில்லை!’ என்பதுபோல் தலையசைத்துவிட்டு, கேட் அருகே போய் நின்றுகொண்டாள். சும்மா காலார நடக்க எதுக்கு கார்? சாலை முழுவதும் பூக்கள் கொட்டிக்கிடந்தன. எதிர் ஃப்ளாட்டில் இரண்டு பெண்கள் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். தெருவெங்கும் மரங்கள் மூடி வெளிச்சத்தை மையிட்டுக்கொண்டு இருந்தன.

‘குழந்தைக்கு ஸ்வெட்டர் போடு. அப்புறம் சளி பிடித்துக்கொள்ளும்!’ என்றாள் கூர்க்காவிடம். அவன் அரை உதடு விரித்துச் சிரித்தான். மனைவியிடம் என்னவோ கூறினான். அவள் லேசாக நந்தினியைப் பார்த்தபடி குழந்தையை அள்ளிக்கொள்ள எழுந்துகொண்டாள்.

அகலமான சாலை. இருபுறமும் கார்கள் நிறுத்திவைத்து, சாலையைக் குறுக்கியிருந்தார்கள். அதிசயமாக இந்த 20 ஆண்டுக் காலத்தில் அதிக மரங்கள் வெட்டப்படவில்லை. அவள் அந்தப் ஃப்ளாட்டை வாங்க வந்தபோது, எதிர்ப்புறம் முழுவதும் காலி மனைகள். வந்து இங்கே வாழ்வோம், இப்படியரு மாலைப்பொழுதில் நடப்போம் என்று யார் அன்று நினைத்துப் பார்த்தார்கள்? முதலீடு… அவ்வளவுதான்.

பல மாதங்கள், ஆண்டுகள்கூட ஃப்ளாட் பூட்டிக் கிடந்தது. வாடகைக்கு விடவும் பயம். வாடகையே தர மாட்டான், ஏமாற்றிவிடுவார்கள் என்று யாரோ சொன்னார்கள். அப்புறம் யார் அவன் பின்னால் அலைவது? அதுவும் ஓர் முன்னணி நடிகை, எவனோ குடித்தனக்காரன் பின்னால் அலைவதா? அந்த வாடகை வந்து என்னவாகிவிடப் போகிறது? பூட்டி வைப்பதே சாலச் சிறந்தது. இன்னொரு நடிகையும் ஃப்ளாட்டை வாடகைக்குக் கேட்டாள். அவள் இங்கே காலூன்றத் தொடங்கியிருந்த நேரம். சாதாரண ஆட்களுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம், சினிமாக்காரர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றார் அச்சன். பயம்!

சொல்லப்போனால், பயம்தான் எங்கும் எப்போதும் ஆட்டிவைத்தது. இதெல்லாம் உழைப்பின் சம்பாத்தியம் என்பதைவிட, ஏதோ அனாமத்தாக வந்ததைப் போன்றதொரு எண்ணம். அதனால், எப்போதும் இதையெல்லாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் இவை அபகரித்துக்கொள்ளப்படலாம் என்றும் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

எதிரே கார் ஒன்று அவசரமாகப் போய்க்கொண்டு இருந்தது. இவள் ஓரம் ஒதுங்கிக்கொண்டாள். ஞாயிறு மாலையிலும் யாருக்கோ இன்னும் அவசரம் மிச்சமிருக்கிறது. தன்னைப் போல பல சினிமாக்காரர்கள் இந்தத் தெருவிலும் அடுத்திருந்த தெருக்களிலும் வீடும் ஃப்ளாட்டும் வாங்கிக் குடியிருந்தார்கள். தங்கள் தலைமேல்தான் சினிமா உலகமே நடக்கிறது என்ற எண்ணமும் அது தரும் அவசரமும் அழகிய கற்பனை. தெரிந்த முகங்கள்கூட, சட்டென ஓர் அவசரத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு, விரைவாக விடைபெறுவது, இந்தக் கற்பனையின் தொடர்ச்சிதான்.

இந்த சுயமோகமும் முக்கியத்துவமும் இல்லையெனில், பலருக்கு இங்கே வாழ்க்கை சப்பென்று இருக்கும்.

திருமணமாகி அமெரிக்கா போய், விசாலமான ஒரு வீட்டில் குடித்தனம் நடத்தத் தொடங்கியபோதுதான், வெறுமை உறைத்தது. சுற்றி யாருமே இல்லை. உங்களை அறிந்த முகம் ஒன்றுகூட இல்லை. தூர தூர வீடுகள். அமெரிக்க முகங்களுக்கு நீ யாரென்றே தெரியாது. விழாக்கள் இல்லை. அழைப்புகள் இல்லை. பரிசளிப்புகள் இல்லை. அதனால் முகப்பூச்சு தேவையே இல்லை. கண்ணாடி ரொம்பக் குரூரமாகத் தோன்றியது. உச்சிவரை ஏறியிருந்த மயக்கத்தை, யாரோ தண்ணீர் தெளித்து, கலைத்துவிட்டாற்போல் இருந்தது. சட்டெனப் புற உலகில் வந்து விழுந்த குழந்தையின் வலி.

கண் திறந்து பார்க்க, விஸ்வம் மட்டுமே இருந்தான், காதலுடன், அரவணைப்புடன். பல ஆண்டுகள் அமெரிக்க வாசம் அவனைச் சுயசார்பு உள்ளவனாக ஆக்கியிருந்தது. கனவுகளை எங்கே நிஜத்தோடு பிணைக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது. மீண்டும் இந்தியா ஓடிவிட வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் தடுத்து நிறுத்தியது விஸ்வம்தான். கற்பனைக்கும் எதார்த்தத்துக்குமான இடைவெளியை அவனது காதலால் நிரப்ப முயன்றான். புரியவைக்க முயன்றான். புரிந்தும் ஏற்க முடியாமல் தவித்த தவிப்பு சொல்லில் வராது.

அதையும் மீறி, மீண்டும் இந்தியா வந்தது, உடனே நடிக்க வாய்ப்புக் கோரி அலைந்தது, நேற்றுவரை புகழோடு பார்த்த ஒருத்தி, இன்று வாசல் வந்து நிற்கிறாள் என்றவுடன் வன்மம் கொப்பளிக்க, எடுத்தெறிந்து பேசியது, வேண்டுமென்றே இழுத்தடித்தது, காக்கவைத்துக் கழுத்தறுத்தது எல்லாம் மற்றொரு மூன்றாண்டுக் கதை. தன்னைக் காலம் பழைய குப்பையில் அள்ளிப் போட்டு விட்டது என்று புரிய அந்த மூன்றாண்டுகள் தேவைப் பட்டன.

நெஞ்சு முழுக்க வெறுப்பு. எரிச்சல். கையாலாகாத்தனம். நடிக்க வந்தபோது இருந்ததைவிட, இப்போது நடிப்பு பற்றி நன்கு தெரியும். ஒவ்வொரு வசனத்தின் பொருள் உணர்ந்து, பாவத்தோடு இன்று திரையில் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியும். ஆனால் நல்வாய்ப்பு மட்டும் வரவே இல்லை. பத்திரிகைகளின் பத்திகளில் நக்கல் தொனித்தது. நேர்ப் பேச்சுக்களில் சமத்காரம் வழிந்தோடியது. உன் காலம் முடிந்தது என்பதை இவையெல்லாம் சொல்லாமல் சொல்லின.

பிணக்குகள் மறந்து, விஸ்வம் சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா அழைத்துப் போனான். வலிக்கும் ரணத்துக்கும் அன்பெனும் அருமருந்தால் நீவிவிட்டான். எந்த ஆர்வம் இந்தப் பதற்றங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்ததோ, அதற்கு மீண்டும் மடைமாற்றிவிட்டான். வீணை.

தோளில் தாங்கி, தந்திக் கம்பிகளைப் பிடித்தபோது, தனக்கான சாதனமாக வீணையை உணரத் தொடங்கினாள். மீண்டும் சந்தித்த தோழி போல் வீணை கொஞ்சத் தொடங்கியது. பதினைந்து பதினாறு வயது குறைந்துபோய் துள்ளல் காலங்கள் திரும்பிவரத் தொடங்கின. ஆதூரத்துடன், ஆவேசங்களை, அலைக்கழிப்புகளை, அபத்தங்களை எல்லாம் கேட்டுக்கொண்டது அவ்வீணை.

இசை மெள்ள அவளை ஒருமுகப்படுத்தியது. கூர்மைப்படுத்தியது. தன் தேடலின், அவசரத்தின், ஓட்டத்தின் லகானை இனம் காட்டியது. இழுத்துப் பிடித்து நிறுத்த வலு கொடுத்தது. முப்பத்தாறாவது வயதில், அந்த உண்மை விளங்கியது: காலகட்ட மாறுதல். இனி தன்னால் எப்படிக் குழந்தையாக ஆக முடியாதோ அதுபோலவே மீண்டும் நடிகையாக ஆக முடியாது.

தெரு முனையில் வந்து கையைக் கட்டிக்கொண்டு நின்றாள். எதிரே உயர்ந்த மேம்பாலம் எழுந்து நின்றது. விளக்குகள் போடப்பட்டு இருந்தன. ஓரிரு மோட்டார் பைக்குகள் மேம்பாலத்தின் மேலே போய்க்கொண்டு இருந்தன.

பெரிய மேம்பாலம். இரண்டு முனைகளை விரைவாகக் கடக்க உதவும் மேம்பாலம். யாரோ ஒருவர் மனைவி, குழந்தைகளோடு மேம்பாலத்தில் போய்க்கொண்டு இருந்தார். தன்னை உற்றுப் பார்ப்பதைப் போல் தோன்றியது. அவருடைய நினைவு மடிப்புகளில் என் இளமை முகம் ஞாபகம் வரலாம். வராமலும் போகலாம்.

அவருக்கு நினைவு வந்துவிட்டது போலிருக்கிறது. கையை அசைத்தார். அவசரமாகத் தன் மனைவியிடம் சொல்கிறார். அவளும் ஞாபகம் வந்தவள் போல் ஆச்சர்யம் பொங்கப் புன்னகைத்தாள். இவளும் புன்னகைத்தாள். வண்டி போய்க்கொண்டு இருந்தது.

ரசிகர்கள் உங்களை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் நடிக்க வரலாமே என்றாள் அந்த ஆங்கில நாளிதழின் சினிமா பெண் நிருபர். பழைய நட்பு. இந்த முறை சென்னை வந்தவுடன், ஒரு பேட்டி எடுத்து வெளியிடுகிறேன் என்று வந்து பார்த்தாள். சினிமாவும் வேண்டாம், பேட்டியும் வேண்டாம். நட்பாகச் சந்திக்க வருவதென்றால், எப்போதும் தன் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும் என்று மட்டும் சொல்லி அனுப்பினாள்.

நண்பர்களைச் சந்தித்தாள். தன்னை வைத்துப் படம் எடுத்தவர்களையும் டைரக்டர்களையும் போய் சந்தித்தாள். சிலர் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். ஏனென்று அவள் யோசிக்கவில்லை. கற்பனையில் கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. சந்தித்தவர்களும் பெரிதாக ஏதும் சொல்லிவிடவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

அவளை அறிமுகப்படுத்திய இயக்குநர் முரளி மட்டும் அதிக நேரம் பேசினார். கணவர், குழந்தைகள், ஆர்வங்கள் என்று எல்லாம் விசாரித்தவர், சென்ற முறை தன்னால் உதவ முடியாமல் போய்விட்டதற்கு வருந்தினார். தான் தொலைக்காட்சித் தொடர்கள் எடுப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் நடிக்க வர முடியுமா என்றும் கேட்டார் முரளி. புன்னகைத்தபடி மறுத்தாள். உன்னைப் போல் நடிகையின் பங்களிப்பு விணாகக் கூடாது என்றார். அவள் மறுபடி புன்னகைத்தாள். சட்டெனத் தோன்றிய கோபத்தை, என்ன நினைத்துக்கொண்டாரோ, மறைத்துக்கொண்டார் முரளி.

தான் நடிக்க வாய்ப்பு கேட்டு வரவில்லை, நண்பர்களை எல்லாம் சந்திக்கவே வந்ததாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபரும் இதையே சொன்னார். தொலைக்காட்சி இன்று பெரிய ஊடகமாக வளர்ந்து நிற்கிறது. உன் நடிப்பு ஆசைக்கு, திறமைக்கு, இங்கே நல்ல வாய்ப்பு என்றார். அப்போதும் புன்னகை சிந்தி மறுத்துவிட்டாள்.

உண்மையில் இது நிர்மலமான பயணம். எதிர்பார்ப்புகள் அற்ற பயணம். கற்பனைகள் அற்ற பயணம். எதார்த்த வாழ்வில் காலூன்றிய பின் மேற்கொண்ட பயணம். தன்னைத்தானே சோதித்துக்கொள்ள மேற்கொண்ட பயணம். எதிர்பார்ப்புகளோடு வந்த முந்தைய பயணங்கள் தந்தது வலியும் வேதனையும்தான். இம்முறை அப்படி இல்லை. மகிழ்ச்சியும் இனிய நினைவுகளுமே மிச்சம்.

வாசல் கேட் அருகே இருந்த அறையில் கூர்க்காவின் மனைவி குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கியிருந்தாள். கம்பளிக் கதகதப்பில், அம்மாவின் அரவணைப்பில் தன்னை மறந்து அக்குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. நிம்மதியான உறக்கம்.

ஃப்ளாட் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். செல்போனில் நான்கைந்து மிஸ்டு கால்கள். எல்லாம் அமெரிக்க எண்கள். கணவர், குழந்தைகள். புதிதாக ஒரு எண்ணும் மூன்று நான்கு முறை அழைத்திருந்தது. கூடவே ஒரு குறுஞ்செய்தியும் காத்திருந்தது. அதைத் திறந்தாள் அவள்.

Call immediately. You are my next heroine – Murali.

– 26th நவம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *