கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 4,476 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அறைக்குள்ளே அகமும் புறமுமாய் இயங்கிய வர்த்தினி, அந்த அறையின் எல்லைக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு, ஒரு கையில் சின்ன சூட்கேஸோடு வராந்தாவிற்கு வந்தாள். சுவருக்கு மதில் போல, சுவரோவிய வண்ணக் காகித நிறத்தில் தோற்றம் காட்டிய சோபா செட்டில் உட்காராமல், ஒரு மூலையில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, விரித்துப் பிடித்த செய்திப் பத்திரிகை ஒன்றிற்குபடி “தலைமறைவான”வனைப் பார்த்து வர்த்தினி சிறிது பரபரப்போடு பேசினாள்.

“ராமசாமி. நேரமாயிட்டு”

அரசியல் சட்டம் 356 – சம்பந்தப்பட்ட செய்தி நிகழ்வுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இ.பி.கோ சம்பந்தப்பட்டதும், சுவை படுத்தப்பட்டதுமான சம்பவங்களை படுசுவையாக படித்துக் கொண்டிருந்த டிரைவர் ராமசாமியின் காதுகளில், ஒரு நடிகைக்கும், அவளது காதலனுக்கும் இடையே நடக்கும் மகா யுத்தமே முரசொலித்துக் கொண்டிருந்தது. ஆகையால் ராமசாமிக்கு, வர்த்தினி “ரிமைண்டர்” போட்டாள்.

‘ராமசாமி… ஒன்னத்தான் ராமசாமி… இந்நேரம் நாம் ஆழ்வார்பேட்டை போயிருக்கணும்…’

இளம் டிரைவரான ராமசாமி, அலறியடித்து எழாமல், நிதானமாக எழுந்து, செய்தி பத்திரிகையை மடித்து வைத்துவிட்டு, வர்த்தினியிடமிருந்து சூட்கேஸை வாங்கிக் கொண்டு, வெளியேறப் போனவன், ஏழு கோணங்களில் எட்டு கோணல்களாய் நெளிந்தான். அவசர அவசரமாக சட்டையின் முதலாவது பொத்தானை மாட்டினான். சட்டைக் காலர் தற்செயலாகக் கூட நிமிர்ந்திருக்கக் கூடாது என்பதுபோல் இடது கையை வளைத்து பிடரியைத் தடவி விட்டபடியே சூட்கேஸை கவ்விய வலது கையைத் தூக்கி நெற்றி மட்டத்திற்கு கொண்டு வந்து, சல்யூட் அடித்தான். இப்ப்டி அவனைக் காரியப்படுத்திய காரணகர்த்தாவான நிர்வாக அதிகாரி தனசிங் ‘ஏய்யா.. யூனிபாரம் போடுறதில்லியா… அரசாங்கம் பணம் கொடுத்து துணி வாங்கிக் கொடுக்குது. தைக்கிறதுக்கு காசும் தருது. அந்தத் துணியையாவது வைத்திருக்கியா, இல்ல வித்திட்டியா…’ என்று கேட்டபடியே உள்ளே வந்தார். ராமசாமி ஏதோ தைத்தது போல் படியிறங்கி ஓடினான்.

வர்த்தினிக்கு, நிர்வாக அதிகாரி, ராமசாமியை அவமானப் படுத்துவதுபோல் பேசியது பிடிக்கவில்லை. கண்டித்தாக வேண்டும். ஆனாலும் மென்மையான கண்டன வார்த்தைகளை விடுவதற்கு முன்பாக வில்லாய் வளைந்து கேட்டாள்.

‘என்ன மிஸ்டர் தனசிங் திடுதிப்புன்னு…

‘ஊர்ல இருந்து மாமனார் வந்திருக்கார்… ஒரு நாள் லீவு வேணும் மேடம்’.

‘மாமனாருக்காக லீவு போடுற ஒரே மாப்பிள்ளை நீங்கதான்னு நினைக்கேன்’.

“அவரோட மாமனார் வெறுங்கையோட வந்திருக்க மாட்டார்”.

மேற்குப் பக்கமாக உள்ள அறையிலிருந்து சூட்டு கோட்டோடு வெளிப்பட்டு, அக்காவின் அருகே போய் நின்றபடியே, தனது “வெறுங்கை” தந்தையை விமர்சித்த கணவனுடன் சொல்லாட, சமையல் கட்டிலிருந்து கீதா வெளியே வந்தாள். கம்ப்யூட்டர் இன்ஜீனியர் மாதம் முப்பதாயிரம் சம்பளம். அப்படியும் மாமனார் கையை எதிர்பார்க்கிற பிச்சைக்காரத்தனம். மனைவியானவள். முகபாவனைகளால் கணவனுடன் போர் தொடுத்தபோது, வர்த்தினி, நிர்வாக அதிகாரியை புன்னகைக்காமலே கேட்டாள்.

‘ராமசாமியை நீங்க இவ்வளவு கடுமையா பேசியிருக்கப்படாது…

நிர்வாக அதிகாரியான தனசிங், இன்கிரிமென்ட் கட்டானதுபோல் பதறியபோது, அவனுக்குப் பதிலாக வர்த்தினியின் தம்பி ரவிக்குமார், பதிலளித்தான்.

சொல்றேன்னு தப்பா நினைக்காதக்கா… தனசிங் சார்! நீங்களும் தப்பா நினைக்கப்படாது. இந்த தனசிங் உங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிற அதிகாரி. ஆனாலும் நீங்க உட்காருவது வரைக்கும் உட்கார மாட்டார். அப்பேர்ப்பட்ட இவரப் பார்த்துட்டு குலை நடுங்கிப் போகிற டிரைவர் ராமசாமி, உங்களப் பற்றிக் கவலை படாமல், கால்மேல் கால்போட்டு அலட்சியமாய் உட்காருறான்… அவன் மட்டும் டிரைவர் சீட்ல இருக்காட்டால் இந்த தெருக்காரங்களுக்கு நீ ஆபீசரா. அவன் ஆபீசரான்னு சந்தேகம் வந்துடும்…’

‘என்னடா ரவி… சின்ன வயசுல எங்கிட்ட வம்புக்கு வந்தது மாதிரியே இப்பவும் வாரியே… நாம எல்லாரும் அடிப்படையில் மனுசங்கடா… டில்லியில் இந்த மாதிரியெல்லாம் அந்தஸ்து பேதம் கிடையாது. மேலதிகாரிகிட்டே, பியூனே, சிகரெட் பற்றவைக்க லைட்டர் கேட்பான். அந்த அளவுக்கு ஒரு தோழமை…’

‘இது டில்லி இல்ல அண்ணி… தமிழ்நாடு, கெஞ்சினால் மிஞ்சுவான் — மிஞ்சினால் கெஞ்சுவான். தலையைப் பிடித்தா காலைப் பிடிப்பான் – காலைப் பிடித்தால் தலையைப் பிடிப்பான். நீங்க மாநில அதிகாரி. இருபது ஆபீசுகளை மேற்பார்வை செய்கிறவர். அவன் கேவலம் டிரைவர். ரொம்பத்தான் இடம் கொடுக்கிங்க. நீங்க பெரிய அதிகாரியா இருந்தாலும் அவனுக்கு பெண்ணுன்னு இளக்காரம்’.

இந்த மாதிரியான இனிய சந்தர்ப்பத்திற்காக ஏங்கி நின்ற தனசிங் புன்னகைப் பொங்கப் பேசினார். தன்னையும் இளக்காரப் பட்டியலில் சேர்த்து விடக் கூடாதே என்கிற எச்சரிக்கையும் கூட. கணவனை எள்ளும் கொள்ளுமாகப் பார்த்த கீதாவிடம் பேசுவது போல், வர்த்தினிக்கு சேதி சொன்னார்.

‘நீங்க நினைக்கிறது மாதிரி பெரிய பெரிய அதிகாரிகள ஆண் பெண்ணுன்னு பிரிச்சு பார்க்கிறது கிடையாது. அதனால இளக்காரமும் இல்ல. அடுத்ததெரு அபிராமி இருக்காங்களே. அவங்க பெல்லடிச்சால் சாப்பிடறவங்ககூட வாயைத் தொடச்சிக்கிட்டே உள்ளே போகணும். இல்லன்னா தண்ணி இல்லாக் காடுதான். நம்ம மேடத்துக்குத்தான் வெளுத்ததெல்லாம் பால்… பாலுல கள்ளிப் பால், எருக்கலைப் பால் இருக்கது தெரியல. இங்கே உள்ளவங்களுக்கு தராதரம் தெரியாது என்கிறதும் மேடத்துக்கு தெரியாது’.

வர்த்தினி இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி, தோள்களைக் குலுக்கியபடியே சலிப்போடு பதில் சொன்னாள்.

“என்னை விடுங்கப்பா… புரமோஷனாச்சேன்னு சென்னை வந்தேன். இப்பவே அவரு ‘தம்பி வீடு வசதியா இருக்குதுன்னு அங்கயே இருக்க திட்டமிட்டிட்டியான்’னு டெலிபோன்ல கிண்டலடிக்கார்… இன்னும் மூணு மாதத்தில டெல்லிக்குப் போகப் போறேன்”

‘ஒரு நாளே இருக்கட்டும் அக்கா. அதிகாரி அதிகாரியாத்தான் நடக்கணும். இந்த தமிழக அரசுல கலெக்டரப் பார்த்து கீழே இருக்கவர் நீங்கன்னு சொல்ல முடியாது. கலெக்டர் சொன்னார்னுதான் கலெக்டர்கிட்டயே சொல்லணும். இதனாலதான் தமிழ்நாட்டு அரசாங்க யந்திரத்துக்கு நாடு முழுக்க நல்ல பேரு. எவன எங்க வைக்கனுமோ, அவன அங்கதான் வைக்கணும். உன்னவிட நான் வயசுல ஜூனியர் – ஆனால் தமிழ் நாட்டு அனுபவத்தில சீனியர். யானையைக் கூட தவளைகள் கிண்டல் அடிக்கிற மாநிலம் இது. சொல்ல வேண்டியதச் சொல்லிட்டேன். ஏன்னா உன்ன அவங்க இளக்காரமாப் பார்க்கிறது என்னை என்னமோ செய்யுது’.

வர்த்தினியின் புருவங்கள் சுழித்தன. தலை தானாய் நிமிர்ந்தது. உடம்பில் ஒரு முறுக்கு தம்பி சொல்றதும் ஒரு வகையில சரிதான். இந்தத் தம்பி, அக்கா பெரிய அதிகாரியா இருக்கிறதுல பெருமிதப்படுறதா நினைத்தது தப்பாப் போச்சே. இந்த தனசிங்கிட்ட கைகட்டி நிற்கிற ஊழியருங்க என்னை சிரிப்பும் கும்மாளமுமாத்தானே பார்க்கிறாங்க? இவங்களுக்கு அதிகமா இடம் கொடுத்திட்டேனோ. ஆனாலும் அலுவலகத்தில கறாராத்தானே இருக்கேன். கள்ள பில்லுகள கண்டுபிடிச்சு திட்டியிருக்கேனே. இப்ப அவங்க திருந்தினது மாதிரி தெரியுதே… திருந்துனாங்களோ திருந்தலேயோ… நான் என்னோட அந்தஸ்த கட்டிக்காத்தாகணும்….

வர்த்தினி, மடமடவென்று படியிறங்கித் தரையிறங்கினாள். இரும்புக்கிராதிக் கதவை இருபிரிவாக்கி கிரீச்சிட வைத்து, காரருகே போனாள். அவளைப் பார்த்தும் இருக்கையில் இருந்து இறங்காத ராமசாமியை ஏற்ற இறக்கமாய் பார்த்தபடியே முன்னிருக்கையில் ஏறிக் கொண்டாள். வழக்கம் போல், பின்பக்கம் சாயாமல் தலையை நிமிர்த்தி, கண்களுக்கு மானசீகமாக லகான் போட்டு, குதிரை மாதிரி எதையும் பார்க்காமல் சூனியத்தை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டாள். அந்தக் காரை, முதலில் நகர்த்தி, பிறகு நடத்தி தெரு முனையில் நிறுத்தி, பின்னர் பிரதானச் சாலையில் திருப்பி, வண்டியை சீராக ஒட்டியபடியே, ராமசாமி சாவகாசமாகக் கேட்டான்.

‘அய்யாவும் தம்பியும் டில்லியிலிருந்து வரப் போறதாய் சொன்னீங்களே. எப்போம்மா வாராங்க’.

‘இதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?… அப்புறம் இன்னொரு விஷயம் – நாளையிலேருந்து யூனிபார்ம் இல்லாம ஆபீஸ் வரப்படாது’.

ராமசாமி, தன்னையறியாமலே இருக்கையில் இருந்து அரையடி மேலே போனான். இதனால் தாறுமாறாக ஓடி, அந்தக் கார் பாதசாரிகளை நெருங்கி விட்டது. எப்படியோ அதை சரியாக்கிவிட்டு, வர்த்தினியைப் பார்த்தான். இன்னும் இளமை போகாத வயதுதான். ஆனாலும் அந்த இளமையை, தாய்மையால் சுமப்பது போன்ற தோரணைக்கார அம்மா. வட்ட வடிவமான முகத்தின் பின்தளத்தில், அதற்கு முரண்பாட்டு எழிலைக் கொடுக்கும் நீள வாக்கிலான மோவாய். அது உயரும் போதும், தாழும்போதும் கருணையை உருவகப் படுத்திக் கொள்ளலாம். எதையும் தலையாட்டிக் கேட்கும் லாகவம். பேசும் போது சம்பந்தப்பட்டவரை நேருக்கு நேராய் பார்க்கும் புன்னகை முகம். ஆனால் இப்போதோ அபயம் அளிக்கும் அந்த முகம், அபாயகரமாய் தோன்றியது. கழுத்தில் ஏன் அத்தனை நரம்புகளும் புடைத்து நிற்கின்றன. உள் முகமாய் செல்லும் உதடுகள் இப்போது ஏன் துருத்தி நிற்கின்றன? ஒருவேளை குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதால் அம்மா மென்டலாகி இருப்பாங்களோ — அம்மாக்கிட்டேயே பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்

‘காரை சர்வீஸுக்கு விடணும் அம்மா’.

‘எது பேசணுமுன்னாலும் ஆபிஸுல வந்து பேசு.’

பெண் கான்ஸ்டபிள் மாதிரி பேசிய வர்த்தினியைப் பார்த்து ராமசாமி பயந்து விட்டான். அவள் மேடமானதால், இவனும் டிரைவர் ஆகி விட்டான். அந்த வண்டிகூட இந்த மாற்றத்தை அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தது.

சாஸ்திரி பவனின் பின் தளத்தில் உள்ள அலுவலக வளாகத்திற்குள் வந்த வர்த்தினி, வழக்கம் போல் பராக்குப் பார்க்காமல், வணக்கம் போட்ட ஊழியர்களுக்கு ஒரு விரலைக் கூட அசைக்காமல், தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் கம்பீரமாய் ஊடுறுவி, அழுத்தம் திருத்தமாய் நடந்து தலைக்கு மேல் பாம்பாய் சுருண்ட சுழல் மெத்தை நாற்காலியில் சாய்வாய் உட்காராமல் அதை சாய்த்து உட்கார்ந்தாள். இந்த இடைக்கால மாற்றத்தில் இன்பம் இல்லையானாலும், ஒரு கம்பீரம். இவ்வளவு நாளும் இப்படி இல்லாமல் போனோமே என்கிற குற்றவுணர்வு. இதற்கு வட்டியும் முதலுமாய் கணக்குத் தீர்க்க வேண்டும் என்கிற வைராக்கியம். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு, தான் எந்த விதத்திலும் சளைத்தவலில்லை என்பதை காட்டத் துடிக்கும் கங்கணம்.

அந்தச் சமயம் பார்த்து கடைநிலை ஊழியரான கேசவன் கைகளில் ஒரு சுமை காகிதக் குவியலோடு வந்தார். வந்ததும் வராததுமாய் அப்படி வந்ததுக்கு விளக்கமும் வழங்கினார். உடையும் சரி, உடம்பும் சரி யூனிபாரம் அற்றவர்…

‘எல்லாம் தீபாவளி லோன் விண்ணப்பங்க — சீக்கிரமா கையெழுத்துப் போடுங்கம்மா. இன்னிக்குப் போனாத்தான், பி.ஏ.ஓ ஆபீஸ்ல பில் போடுவாங்களாம்’.

‘இந்தா பாருங்க கேசவன் ஒங்களோட தீபாவளி அட்வான்ஸ், ஸ்கூட்டர் அட்வான்ஸ், எல்.டி.சி அட்வான்ஸ், டி.ஏ. அட்வான்ஸ், டிரான்ஸ்போர்ட் அட்வான்ஸ், பேங்க் கடன், கூட்டுறவு சங்கக் கடன், வீடு கட்டும் கடன், இதுங்களுல கையெழுத்துப் போடுறதுக்கு மட்டும்தான் இருக்கேன்னு நினைக்கிங்களா? இனிமே அந்த நினைப்பே வேண்டாம். நிர்வாக அதிகாரி மேஜையில வையுங்க… அவரு குறிப்பெழுதி அனுப்புவார்’.

‘அவரு கையெழுத்து போடும் முன்னால அடுத்த தீபாவளி வந்துடும்மா’.

‘இப்படி ஏடாகூடமா பேசினால், உங்கள ராமனாதபுரத்துக்கு மாற்ற வேண்டியதிருக்கும். அப்புறம்.. இதுக்கு மேல ஆபீசுக்கு வாரவங்கள என்னைப் பார்க்கச் சொல்லுங்க. நீங்க போகலாம்’.

‘அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவது…

‘நான் நல்லாத்தான் இருக்கேன். உங்களுக்குத்தான் குளிரு விட்டிட்டு. சரி நீங்கப் போகலாம்’.

கேசவன், வர்த்தினியை அதிர்ந்து பார்த்தார். பிற்கு அளந்து பார்த்தார். ‘வாங்குற சம்பளத்தில குப்பை கொட்ட முடியாதுன்னு தெரியும். தீபாவளி விண்ண்ப்பங்கள நேரா எங்கிட்ட கொண்டுவாங்க என்று முந்தா நாள் சொன்ன அம்மாவுக்கு என்னாயிட்டு? கடவுளே… கடவுளே… இவங்களுக்கு ஏதும் ஆயிடப்படாது’.

‘கேசவன். நீங்க போகலாமுன்னு தமிழிலதானேச் சொன்னேன்’.

கேசவன் தலையற்ற முண்டம்போல் நடந்து உள்ளே வந்த நந்தினியின் மேல் முட்டியபோது, அவள் ‘ஒங்களுக்கு என்னாச்சு நாயினா செல்லமாக கேட்டபடியே, வர்த்தினியின் முன்னால் வந்து நின்றாள்.. மேடமோ எள்ளும் கொள்ளுமாய் கேட்டாள்.

‘ஏன் லேட்டு’

‘அப்பவே வந்துட்டேம்மா… வீட்ல அவரும் மாமியாரும் கூட்டணி வச்சு என்னப் படாதபாடு படுத்திட்டாங்க’.

‘ஆபீஸ் விஷயத்த மட்டும் பேசுவோமா, ஏன் லேட்டு’

‘கேன்டின் போனேம்மா’.

‘சம்பளம் வாங்கிறது வேலை பார்க்கத்தான். சாப்பிடறதுக்கு இல்ல. அப்புறம் ஒரு விஷயம். இது தலைமை அதிகாரியோட அறை. இங்கே நின்னுக்கிட்டு சகஊழியர்கிட்ட நயினா கியினான்னு குசலம் விசாரிக்கப்படாது. நாளைமுதல் சரியான நேரத்தில வரணும். நீங்க போகலாம். அப்புறம் யாரும், இண்டர்காம்ல என்கிட்ட அனுமதி வாங்காம உள்ளே வரப்பிடாது. எல்லார்கிட்டயும் சொல்லிடு, சாரி சொல்லிடுங்க…

சராசரி உயரத்துக்கும் அதிக உயரமான நந்தினி, குள்ளப் பெண்ணாய் குமைந்தபடியே கால்களை நகர்த்தினாள். மாமியார் படுத்தும் பாட்டை இவள் சொல்லாமலே இந்த அம்மாவே கேட்டு ஆறுதல் சொல்கிறவர். தனது மகனைப் பற்றி அடிக்கடி விசாரிப்பவர். இந்த அம்மாவுக்கு என்னாச்சு?

வர்த்தினி, கோப்புக்களை கடிகாரத்தின் பெரிய முள்ளாக பார்த்து. வினாடி முள்ளாக இயங்கிக் கொண்டிருந்தாள். பகல் உணவு வேளை வந்தது. கேன்டினில் கேட்ட ஓசையினால் மட்டுமே புரிந்தது.

வர்த்தினி, உணவு பறிமார வந்த கேசவனை கையாட்டிப் போகச் சொல்லிவிட்டு, கேரியரைத் தூக்கிக் கொண்டு அந்த அறைக்குள்ளே குட்டி போட்ட இளைப்பாரும் அறைக்குள் போனாள். அவளை அவளையும் மீறி கடந்த கால நிகழ்ச்சிகள் நினைவு படுத்தின. இந்நேரம் நந்தினி ஒரு சப்பாத்தியை கொண்டு வந்து கொடுப்பாள். பட்டிலும் மென்மையானது. கேசவன் அவளுக்குப் பிடித்த நார்த்தங்காய் ஊறுகாயை கொண்டு வருவார். ராமசாமி ஒரு கைப்பிடித் தயிர்ச் சாதத்தை கொண்டு வந்து தட்டில் வைப்பான். அவன் மனைவிக்கு என்ன மாயம் தெரியுமோ, மந்திரம் தெரியுமோ பார்ப்பதற்கு பரம சாதுவாக தெரியும் தயிர்ச் சாதம், வாய்க்குள் போனவுடன் காரமாகும்… மணமாகும்… உண்டறியாச் சுவையாகும். ‘சாப்பிடுங்கம்மா… சாப்பிடுங்கம்மா…’ என்ற கெஞ்சல்கள் எழும்.

மேடம் வர்த்தினி சுதாரித்துக் கொண்டாள்… அவள் சாப்பாட்டு ராணியல்ல. அலுவலக அரசி… அதுகள சாப்பாடு போட்டே தன்னைச் சாப்பிட அனுமதிக்க முடியாது — சாப்பாட்டை விட முக்கியம் அந்தஸ்து. ஒப்புணர்வைவிட பெரியது பதவி — அதன் கவுரவத்த காப்பாத்தனும்.

வர்த்தினி, சுழல் நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள். அந்தக் குளிர்சாதன அறையிலும் அவள் உடல் வேர்த்தது. நேரம் ஆகஆக, எதையோ ஒன்றை இழந்தது போன்ற பாதிப்பு. சுதந்திரமாய் சக இனத்துடன் உயரப் பறந்து திரிந்த பறவை ஒன்று, திடீரென்று புலியாக உருமாற்றம் பெற்று குகைக்குள் இருப்பது போல் ஒரு பிரமை. அந்த அறையே அவளுக்கு ஒரு காடானது. ஆள் அரவமற்ற சூனியம். ஆனாலும் சூனியத்தில்தான் சூட்சுமம் இருப்பதை கண்டதுபோன்ற பிடிவாதம்…

இதற்குள் தொலைபேசி குரலிட்டது. அந்தக் குரலை கையால் அடக்கியபடியே வர்த்தினி பேசினாள்.

‘இது அரசாங்க போன். சொந்த விஷயங்கள பேசக்கூடாது. சரி இதுதான்… கடைசித் தடவை. என்ன விஷயமுன்னு சொல்லுங்க. நான் நந்தினிகிட்ட பாஸான் செய்கிறேன். என்ன — ராமுவுக்கு வலிப்பா — என்ன மாமியார் நீங்க — ஆஸ்பத்திரியில சேர்க்காமல் மருமகளுக்காக காத்துக் கிடக்கிறீங்களே. பேரனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல — மருமகள் சீரழிஞ்சா போதும் என்கிற நினைப்பா? சரி சரி போன வையுங்க’.

வர்த்தினி, சேதி சொல்வதற்காக இண்டர்காமை தொட்ட கரங்களை சுருக்கிக் கொண்டாள். நந்தினியோட ஐந்து வயதுப் பயல் ராமுவுக்கு வலிப்பாம் — சரியான சுட்டிப் பயல். விஜயதசமியோட, நந்தினி இந்தப் பயல இங்கே கூட்டி வந்தாள். நேத்திரம் பழ நேர்த்தி, கொடி முல்லை போன்ற லாவகம் — அழகான மனிதக் குட்டி. இதே மேஜையில் ஏறி உட்கார்ந்த படியே ‘ஆன்டி… ஆன்டி.. – நீ நல்லவள்னு மம்மி சொல்றாள் — நெசமாவா?’ என்று கேட்டு அவளை குறுக்கு வெட்டாய் பார்த்த பயல். டில்லியில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மகனின் ஐந்து வயது சாயல்.

வர்த்தினி, துண்டித்துக் கிடந்த தனியறையிலிருந்து வெளியேறி, பரந்து விரிந்த அலுவலகத்திற்குள் போனாள். பயத்தோடு எழுந்த அத்தனை பேரையும் கையமர்த்தி உட்கார வைத்துவிட்டு, நந்தினியின் முன்னால் போய் நின்று மேஜைமேல் கையூன்றி குவிந்தபடியே சேதி சொன்னாள். உடனடியாய் எழுந்து கீழே விழப்போன நந்தினியை தாங்கிக் கொண்டாள். அவள் மீது போட்ட பிடியை விடாமலே சுற்று முற்றும் பார்த்து ஆணையிட்டாள். அவளை அவளாக்கிய ஆணை.

‘அழாதே நந்தினி. இப்ப வலிப்பு நின்னுட்டாம். ஆனாலும் ஆஸ்பத்திரியில சேர்த்துடுவோம் — இந்தாப்பா ராமசாமி காரை ரெடி பண்ணு — இந்தமாதிரி சமயத்துல ஆபீஸ் காரை பயன் படுத்துறதுக்கு விதிகள் இருக்கு. கேசவன்! நீங்களும் என்னோட வாங்க. சீதா நந்தினியை கூட்டி வா. இந்தாப்பா நாடிமுத்து — தீபாவளி விண்ணப்பங்கள என் டேபிள்ல வச்சுடு’.

– அவள் விகடன் – ஜனவரி, 1999

– சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *