அவளோடு அவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2024
பார்வையிட்டோர்: 1,567 
 
 

ஸம்ஹா இருபுறமும் திரும்பித் திரும்பிப் படுத்தாள். அவள் எவ்வளவுதான் தூங்க முயற்சித்தபோதும் உறக்கம் அவள் கண்களை எட்டிப் பார்க்கவில்லை. கடுமையான குளிர் வேறு அவளால் தாங்கமுடியாதிருந்தது. உள்ளால் கனமான ஆடையும், மேளால் ஸ்வேட்டர்ரும் அணிந்திருந்தாள். இருந்தபோதும் குளிர் அவளைப் பாடாய்ப் படுத்தின.  

விடிந்தது முதல் இரவு படுக்கைக்கு வரும் வரை ஓயாது செய்யும் வேலைகள் அவளுக்கு உடல் வலியை நன்றாகவே கொடுத்தது. இரண்டு பிள்ளைச் செல்வங்களுக்கு தாயானவள் இப்போது ஏழுமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். டாக்டரிடம் காட்டிய போது ஸ்கேன் முடிவு இரட்டைக் குழந்தைகள் எனக் காண்பித்தது. குழந்தைகள் என்பது படைத்தவன் எமக்கு வழங்குகின்ற மிகப் பெரும் பாக்கியமே!  

இருந்தபோதும் வயிற்றில் சுமப்பது பெண்ணல்லவா.. அவள் குழந்தையை பிரசவிக்கும் வரை எல்லா வலிகளையும் தனியாளாக அனுபவிக்கவேண்டுமே. ஸம்ஹாவும் மூன்றாவது முறையாக தாய்மையின் எல்லா வலிகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள். தாய்மை உடலால் கஸ்டங்களுக்கு முகம் கொடுத்தாலும், உள் உணர்வுகளுக்கு இதமாகத்தான் இருக்கும். அதனால் தான் என்னவோ எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள பழகிக் கொண்டாள்.

அவள் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. சாதாரண வசதியில் வளர்ந்தாலும், மிகவும் செல்லமாய் வளர்ந்தாள். அவள் அழகின் ராணியாகவும், பண்பில் வள்ளளாகவும், அறிவின் சிகரமாகவும் விளங்கினாள். ஆனால் வேலைகள் செய்து பழக்கப்பட்டவளல்ல. எல்லா நேரங்களிலும் தாயின் உதவி தேவைப்பட்டது அவளுக்கு.மகள் எவ்வளவு தான் பெரியவளாக வளர்ந்தாலும் அவர்களைப் பொருத்தமட்டில் குழந்தையாகவே தெரிந்தாள். 

திடீரென அவர்களின் மகளை பெண் கேட்டு வந்த போதுதான் அவர்களுக்குப் புரிந்தது மகள் வளர்ந்து விட்டாள் என்பது. அவளது வாப்பாவின் நண்பர் ஸலாம் ஹாஜியாரின் மகன் ஸல்மானுக்குதான் அவளை கேட்டு வந்தார்கள். ஸல்மான் நல்ல பொடியன். நன்றாகப் படித்தவன், மார்க்கமுள்ளவன், பண்பானவன். லண்டனில் பத்து வருடங்கள் நல்ல சம்பளத்தில் வேலை செய்பவர். நம்பிக்கையோடு மகளை மணமுடித்து வைத்தார்கள். திருமணம் ஆகிய சில நாட்களிலே கணவனோடு லண்டன் பயணமானாள் ஸம்ஹா. லண்டன் போன புதிதில் அவளுக்கு அவ்விடம் கஷ்டமாகத்தான் இருந்தது. வேலைகள் ஒன்றுக்குமே பழக்கப்பட்டவளல்ல அவள். அவள் கணவன் இதை அறிந்து அதற்கு ஏற்றாற் போல அனுசரித்துப் போனார்.வேலைகளை ஒவ்வொன்றாக தானே முன் நின்று சொல்லிக் கொடுத்தார். மிகவும் துரிதமாக அவளும் கற்றுக் கொண்டாள் அனைத்தையும். சமையல் வீட்டு வேலை என தனியாக நின்று சமாளித்தாள். ஸல்மான் வேலைக்கு போனதும் தனியாகவே இருப்பாள். வேலைகளை முடித்து விட்டு புத்தகம் படிப்பாள், அம்மா அப்பாவோடு போஃனில்  கதைப்பாள். 

இப்படியே வருடமொன்றானது. அழகிய பெண் குழந்தைக்கு தாயானாள் ஸம்ஹா. முதல் பிரசவத்தின் போது கணவன் அருகாமையில் இருந்தாலும் தாய் கூடவே இல்லாதது வருத்தமாகத்தான் இருந்தது அவளுக்கு.குழந்தைக்கு ஒன்றரை வருடமாகியபோது அவள் மீண்டும் தாய்மையானாள். இரண்டாம் பிரசவத்தில் மிகவும் சிரமங்களை அனுபவித்தாள். இப்போது இரட்டை குழந்தைகள் என்றதும் ஏதோ ஒரு பயம் அவளை ஆட்கொண்டது. நாட்கள் செல்ல செல்ல உடலில் பல வலிகளை உணர்ந்தாள். தூக்கமும் குறைந்தது. இப்படியே  பலவற்றை நினைத்தபடி படுத்தவளுக்கு உறக்கம் கண்களை எட்டிப் பார்க்க அயர்ந்து உறங்கினாள் அவள். 

அலாரம் மணியோசை அவள் செவிப்புலன்களுக்குள் சென்றடைந்தாலும்ஆழ்ந்த நித்திரையில் இருந்தால் அவள். சட்டென விழித்துக் கொண்ட ஸல்மான் “ஆ டைம் நாலு ஐம்பதா…. அவசரமாக எல்லா வேலைகளையும் முடித்தாகனுமே”என்று தனக்குள் சொல்லியபடி பக்கத்தில் படுத்திருந்த மனைவி ஸம்ஹா வை நோக்கினான். “பாவம் நல்ல தூக்கம்.. எவ்வளவுகஷ்டப்படுறா… தூங்கட்டும் தூங்கட்டும். புள்ளைங்க  வேறு நல்லா தூங்குறாங்க…புள்ளைங்க படுக்கும் போதுதான் அவளாலும் தூங்க முடியும். இப்பதான் அவளுக்கு நிறைய ஓய்வு தேவை” என்றபடி விலகியிருந்த போர்வையை எடுத்து அவளை நன்றாகப் போர்த்திவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். 

இளையமகள் தூக்கத்தில் சினுங்க ஸம்ஹா விழித்துக் கொண்டாள். மகளை தட்டிக் கொடுத்து தூங்கவைத்து விட்டு கட்டிலில் இருந்து எழுந்தாள். “ஸம்ஹா எழுந்தாச்சா… இன்னம் கொஞ்சம் படுக்கலாம்தானே… ஸுபஹ்ஹுடைய நேரம் முடிய இன்னம் நேரம் இருக்கு. பிறகு நானே எழுப்பியிருப்பேனே” என்று கூறியபடி கையில் டீ கப் போடு வந்தான் அவள் அன்புக் கணவன் ஸல்மான். “இல்லங்க எல்லாத்தையும் நீங்களே செய்வதா…. ? நான் எதற்கு இருக்கன்.நீங்க உங்க வேலைக்கு வேற தயாராகனும்… இதோ நானே வேலைகளை பார்க்குறன்” என்று கூறியவள் அவசரமாக பாத்ரூம் நோக்கி நடந்தாள். “ஸம்ஹா.. அவசரப்பட வேணாம் தொழுதிட்டு இந்த டீப்போவில் உள்ள டீய்ய  குடிங்க. அப்புறம்  நீங்க அமைதியாக ஓய்வு எடுங்க” என்றான் அவன். “என்ன…. காலையிலையே ஓய்வேடுப்பதா  நிறைய வேல இருக்கு பிள்ளைங்க எழும்ப…மொத.. செய்யனும் “என்று கூறியவாறு பாத்ரூம் கதவை மூடினாள்.

….ஸுபஹ் தொழுது விட்டு, கணவன் கொடுத்த டீ யைக் குடித்தாள். “ஸம்ஹா எல்லா வேலையும் முடிச்சாச்சு. உங்களுக்கு பிடிச்ச மக்ரூணி சமச்சன்…பகல் உணவுக்காக எல்லாம் வெட்டி வைத்து தயார் பண்ணி வச்சிருக்கேன்..அடுபுல வச்சி இரக்கினா போதும்.புள்ளைங்க எழும்பினா கொடுக்க பால் கரச்சி வச்சன்.டைமுக்கு சாப்பிட்டு புள்ளைங்களுக்கும் கொடுங்க. இன்ஷா அல்லாஹ் நான் இன்று வேலை முடிஞ்சு அவசரமாக வாரன். நைட்ல வெளியே போய் சாப்பிடலாம்…ஓகே யா?”  என்று கூறியவன் மனைவியின் பக்கத்தில் வந்தமர்ந்தான். கணவனின் பாசம் அவளை பிரம்மிக்க வைத்தது. கணவன் வேலைக்கு சென்றபிறகு அவர் வரும் வரை சின்னஞ் சிறுசுகளோடு கஸ்டப் பட்டாலும் கணவன் தன்னை குழந்தை போல் பார்த்துக் கொள்ளும் விதம் ஆறுதலாயிருந்தன. இப்போது தாய் பக்கத்தில் இல்லை என்ற கவலை கொஞ்சம் கூட அவளுக்கில்லை. தாய் போல் பார்த்துக் கொள்ளும் துணையுள்ள போது கவலைக் ஏது.. இடம். “என்ன யோசிக்கிற ஸம்ஹா “என்று மனைவியின் கரங்களைப் பற்றினான் ஸல்மான். “ஒன்றுமில்லை “என்று புன்னகைத்தவாறு வெட்கத்தோடு கணவனின் தோல்களில் முகத்தைப் புதைத்தாள் ஸம்ஹா. 

அவன் அன்போடு அணைத்துக் கொண்டான். சில நிமிட அமைதிக்குப் பின் “ஏங்க வாங்க சாப்பிட இப்படியே இருந்தா நீங்க வேலைக்கு கிளம்ப வேண்டாமா? “என்றாள் அவள். 

இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.”ஸம்ஹா நான் போய்ட்டு வாரன்.. நீங்க பத்திரமாய் இருங்க. தேவை ஏதாவது இருந்தால் கோல் பண்ணுங்க. கதவை உள்ளால் லொக் பண்ணுங்க ” என்று கூறியவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு பதில் முத்தத்திற்காய் காத்திருந்தான். அவளும் திருப்பிக் கொடுத்ததும் காரில் ஏறி அமர்ந்து அவளைப் பார்த்து சிரித்தவாறு காரை ஸ்டாட் செய்தான். கணவனுக்காக மனதினால் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கணவனின் கார் மறைவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸம்ஹா.

(யாவும் கற்பனை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *