(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து அரைமணி நேர மாகிறது. என்னோடு பகல் உணவிற்குச் சென்று திரும்பிய வர்கள் எல்லாரும் வேலையைத் துவங்கிவிட்டனர். எல் லாரும் வேலையில் ஈடுபாடு காட்டுகின்றனர்.
தட்டெழுத்து இயந்திரத்தின் “தட் தட் ” ஓசை, கணக்கு இயந்திரத்திலிருந்து தாளை “டர்ர்…” என்று கிழிக்கும் ஓசை, அதிகாரி அலுவலர்களையும் பணியாட்களை யும் அழைக்கப் பயன்படுத்தும் மணியின் “கிண் கிணி” ஓசை யாவும் இடைவிடாது ஒலித்து ஓர் அப்பட்டமான அலுவலகச் சூழலை உருவாக்குகின்றன.
”அடடா, எவ்வளவு சுறுசுறுப்பாக இவர்கள் காரியம் ஆற்றுகிறார்கள்! தினந்தோறும் அரைத்த மாவையே அரைக்கும் இவர்களுக்குச் சலிப்பே ஏற்படாதா? எனக்கு ஏற்படுகிறது.”
நான் மற்றவர்களை ஏறிட்டுப் பார்க்கிறேன். படிக் காமல் பரீட்சையில் வந்து அமர்ந்துவிட்ட மாணவன், அசையாமல் அக்கறையோடு எழுதிக்கொண்டிருக்கும் ஏனை யோரை ஏக்கத்தோடு பார்ப்பது போலிருக்கிறது. எனக்கு அந்த அனுபவம் உண்டு.
நான் பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்; நாற்காலியை மேசைக்கருகில் இழுத்துப் போட்டுக் கொள்கிறேன்: பேனாவை எடுத்து வைத்துக் கொள்கிறேன். வேலையில் மனது செல்லாவிட்டாலும், செய்வது போல் பாவனை யாவது காட்டலாமல்லவா?
“ம்…ம்…முடியவில்லை. அப்படி என்னால் போலியாய் நடிக்க முடியவில்லை. என்னால் இப்பொழுது செய்ய முடிகிற தெல்லாம், கண்ணை மூடிக்கொண்டு மேசையின் மேல் குப்புற கவிழ்ந்திருப்பது மட்டும் தான். அப்படிச் செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? நான் தூங்குவதாக எண்ணிவிட மாட்டார்களா? இல்லை? இல்லை. அப்படி ஒன்றும் தவறான முடிவுக்கு வந்துவிட மாட்டார்கள். என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியாதா? இப்படி எல் லாம் நான் நெளிவு எடுப்பதில்லை என்பதுதான எல் லாருக்கும் தெரியுமே. ஏதோ உடம்பிற்கு ஆகவில்லை என்று தான் கருதுவார்கள். ஆமாம் அப்படி நினைப்பதோடு எனக் காக வருந்தவும் செய்வார்கள். அடடா! மற்றவர்கள் நம் மீது கொண்டிருக்கும் நல்ல எண்ணம், நம்மை எப்படியெல் லாம் கேடயமாய் இருந்து காப்பாற்றுகிறது. அதனால்தான் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கு நாளாகிறது போலிருககிறது!”
நான் கண்ணை மூடிக்கொண்டு மேசையில் கவிழ்ந் திருக்கிறன். ஆறு நாட்களுக்கு முன்பு என் மனைவி கேமரன்மலைக்குச் சென்றது றிழலாடுகிறது.
என் அடிவயிற்றில் என்னவோ செய்கிறது. குமட்டிக கொண்டு வாந்தி வருவதுபோல் நெஞ்சில் வலி ஏற்படு கிறது. கடந்த ஆறு நாட்களாய் என்னால் வெளியே துப்ப முடியாமலும் உள்ளே விழுங்க முடியாமலும் தலை வேதனை கொடுத்துக் கொண்டிருக்கும் அச்சம்பவத்தை என்னால் விலக்க முடியவில்லை.
மீனா…. அதுதான் அவள் பெயர்!
அவளை நினைத்தால்! …
எனக்குப் பிடிக்காத எதையாவது அவள் செய்து விடு வாள். அதில் எவ்விதத் தயக்கமும் காட்ட மாட்டாள். கணவன் என்று ஒருவன் இருக்கிறானே- அவன் என்ன நினைப்பான். என்ற எண்ணம் துப்புரவாக அவளிடம் இருக் காது. இது ஒன்றும் புதியது இல்லை; வழக்கமானதுதான். என்றாலும், எங்கள் முரண்பாட்டினால் என் கடமை தடை பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதுவே கடைசி முறை யாக இருந்துவிட்டார்று நான் கொடுத்து வைத்தவன்தான். இந்நிலையை நீடிக்க விடக் கூடாது.
அவள் புறப்படுவதற்கு முதல் நாள். நான் படுக்கை யறைக்குள் நுழைகிறேன். மீனா மெத்தையில் சரிந்து கிடக்கிறாள். மல்லாந்துபடுத்தபடியே அவள் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை ஏந்திப் படித்துக் கொண்டிருக்கிறாள். ஓர் ஆங்கில நாவல். அவளுக்குத்தான் தமிழ் எழுத்துக்களைக் கண்டாலே அருவருப்பாய் இருக்குமே!அப்படிப்பட்ட பிறவி அவள். ஆனால் நானோ!… தமிழால் பிழைப்பு நடத்துபவன். எனக்குத் தமிழ்தான் வாழ்வு கொடுக்கிறது; வாழ வைக்கிறது.
தூங்கச் செல்லுவதற்கு நான் அவளுக்காதக் காத்திருப் பதோ,அவள் எனக்காகக் காத்திருப்பதோ தொடக்க முதலே கிடையாது. கல்யாணம் ஆகி மூன்று வருடங்களாகி யும் இல்லாத வழக்கம் இனிமேல் திடீரென்று வரப் போகிறதா? கட்டிலில் நான் உட்காருகிறேன். அவள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இலேசாகக் கனைப்பது எனக்கும் கேட்கத்தான் செய்கிறது. “மகாராணி என்னிடம் ஏதோ சொல்லணும்போல இருக்கிறது.”
“எங்க கம்பெனியில ஒரு “குரூப் டூர்” ஏற்பாடு செய் திருக்காங்க. கேமரன் மலைக்குப் போகப் பேறாங்களாம். செலவில பாதியைக் கம்பெனி ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி இருக்காங்க… சிங்கப்பூர்ல இருந்து தனியா நாம போய்விட்டு வருவதென்றால், கூடுதலாகச் செலவாகும். ” அவள் திடீரென்று பேச்சை நிறுத்துகிறாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ஓ!…” என்று மட்டும் சொல்கிறேன். வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவள் மேலும் தனக்குன் பேசிக் கொள்வதைப் போல தொடர்கிறள்.
“நல்ல ஏற்பாடு. என் தோழிகள் எல்லோரும் போகிறார் கள். என்னையும் கேட்டார்கள். “அவள் டக்கென்று பேச்சை நிறுத்திவிட்டு என்னை நோக்குகிறாள்.
எனக்கு “திக்” என்றாகிவிட்டது. சரியென்று சொல்லி விட்டு வந்துவிட்டாளோ என்று மனத்தைக் குடைகிறது.
“எனக்கு இப்போது விடுமுறை கிடைக்காதே. எங்க கலாசார அமைச்சில் இம் மாதம் ஏகப்பட்ட வேலை. மொழி பெயர்ப்புக்காகக் கட்டுக் கட்டாய் வேலை குவிந்து கிடக் கிறது …” என்று தயக்கத்துடன் நான் சொல்கிறேன்.
“அது தெரிந்துதான், நான் மட்டும் வருவதாகக் கூறி விட்டு வந்திருக்கிறேன். நான் போகவா?” என்னையே பார்த்தபடி அவள் கேட்கிறாள்.
அவள் தன்மூப்பாக என்னையும் கூட்டிக்கொண்டு வருவ தாகக் கூறியிருந்தலும், அதிகாரியிடம் கெஞ்சி விடுப்பு வாங்கிவிட வேண்டும் என்ற நப்பாசை சற்று முன்தான் துளிர்விட்டிருந்தது. மீனா தன் முடிவைச் சொல்லியதும் நான் நொறுங்கிப் போனேன்.
அவள் முகத்தைப் பார்க்கவே எனக்கு வெறுப்பாய் வந்தது. சே! இவ்வளவு இனிமையான முகம் படைத்த இவளுக்கு, இப்படி ஒரு வன்மையான மனமா? போகவா என்று கேட்கறாள். அதை எப்போது கேட்டது? மற்றவர் களிடம் எந்தவொரு முடிவும் சொல்லாதிருந்தால் சரி. நான் வருகிறேன் என்று அங்கே சொல்லிவிட்டு, போகவா என்று இங்கே கேட்டால் என்ன அர்த்தம்? கணவனுக்கு, அளிக்கிற மரியாதையா இது? என் அனுமதியையோ, ஒப்புதலையோ பெற வேண்டுமென்ற நோக்கத்தில் அவள் இதைச் செல்லவில்லை. எனக்குத் தகவலைத் தெரிவிக்கிறாள். அவ்வளவுதான். எனக்குப் பற்றிக் கொண்டு வருகிறது. என்னால் ஒன்றும் பேச முடியவில்லை, பேசினால் அழுகையே வந்துவிடும்போல் இருக்கிறது. பொறுமலோடு குப்புறப் படுககிறேன்.
குறிப்பிட்டபடி அவள் பயணம் புறப்பட்டு விட்டாள். மலேசியாவிற்குத் தன் தோழிகளோடு சென்று விட்டாள். திரும்பிவர ஒரு வாரமாகுமாம். அவள்தான் சொன்னாள். அவளை நினைத்தால்… இறுமாப்புக்காரி.
“படீர்” என்ற ஒலிகேட்டு நிமிர்கிறேன். அலுவலகப் பையன் நல்லதம்பி சன்னல்களை மூடிக் கொண்டிருக்கிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறேன். யாருமில்லை எல்லாரும் போய் விட்டார்கள். கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். மணி ஐந்தரை. அலுவல்நேரம் முடிந்து அரைமணி ஆகிவிட்டதே! எழுந்து நடக்கிறேன். என் முதுகிற்குப் பின்னால் நல்லதம்பி கேலியாகப் பார்ப்பது போன்ற உணர்வேற்படுகிறது. திரும்பிப் பார்க்கத் துணிச்சலில்லை.
வீட்டிற்குள் நுழைகிறேன். என் மனத்தைப் போலவே வீடும் வெறுமை பூண்டு கிடக்கிறது. சட்டையைக் கழற்றிப் போடுகிறேன். முகத்தை அலம்பிக் கொள்கிறேன். படுக்கையறைக்குள் நுழைந்து மெத்தையில் சரியும்போதே என்ன செய்வது என்ற வினா எழுகிறது. ஒன்றும் புரியவில்லை. வானொலியின் விசையை அமுக்குகிறன். ஏதோ ஒரு திரைப் பாடலிசை ஒலிக்கிறது. வானொலி பாடும் போது யாரோ அருகில் இருப்பதுபோன்று ஆறுதல் ஏற்படுகின்றது.
நான் தனியே எங்கும் செல்லும் வழக்கமில்லை. அப்படி ஏற்படுத்திக் கொள்ளாதது தவறுதானோ? பொழுது போக் கிடங்களுக்குச் செல்வதுமில்லை-அவற்றில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதுமில்லை. வேலை-வீடு-புத்தகங்கள் படிப்பது என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டு பழகிவிட்டவன் நான். மேல் வகுப்பில் படிக்கும் போதே “சத்திய சோதனை” படித்ததன் விளைவு.
மீனா என்னைப் பற்றிக் கவலைப்படாமல் போய்விட்டாள். அவள் என் உணர்வுகளை மதிக்கிறாளா இல்லையா? ஆம் என்று சொல்லவும் முடியவில்லை, இல்லை என்று மறுக்க வும் முடியவில்லை. என் விருப்பங்களில் அவள் குறுக்கிடுவது மில்லை. அதே போல் அவள் விருப்பங்களில் என் தலையீட்டை அவள் விரும்புவதுமில்லை. மரியாதைக் குறைவாகவும் நடக்க மாட்டாள். ஆனால் என் பாட்டுக்கெல்லாம் அவள் தாளமும் போட மாட்டாள். உடன்பாடு இல்லை எனில் ஒளிக்கா மல் எதிர்ப்பைத் தெரிவித்துவிடுவாள்.
இது, தண்ணீர் இலை தாமரை போன்ற ஓர் உறவாகத் தான் எனக்குத் தோன்றியது. நான் அதையும் மீறிய அன்பால் ஒருவரையொருவர் இறுக்கமாகப் பிணைக்கக் கூடிய – ஓர் அசல் தமிழ் குடும்ப வாழ்க்கையை விரும்பு கிறேன் என்பது அவளுக்கு எவ்வாறு தெரியாமல் போயிற்று?
அவளை நான் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டேன். அவளும் அப்படித்தான். திருமணத்திற்கு முன்பு இருவருக்கும் நல்ல பழக்கமுண்டு. வேண்டுமென்றே அவள் இப்படி எல்லாம் செய்கிறாள்என்று சொல்லமுடியாது. என்னிடமிருந்து எதிர்ப்பு கிளம்பது என்ற துணிவில் அல்வாறெல்லாம் செய்கிறாள். இத்துணை புரிந்துணர்வுள்ள வனாக இருப்பதற்காக அவள் ஒரு தடவைகூட வாய் விட்டுப் பாராட்டியதும் இல்லை. ஒரு வேளை அவள் என்னைப் பெண் டாட்டிதாசன் என்று நினைத்துவிட்டாளோ? அவளிட மிருந்து எதையுமே தெரிந்து கொள்ள முடியவில்லையே!
அவள்…நெஞ்சழுத்தக்காரி.
திருமணம் ஆனவுடன் நீ வேலை செய்ய வேண்டாம். நிறுத்திவிடு என்றேன். அவள் வேலை செய்கிறாள். உடல் அயர்ச்சியின் காரணமாக எத்தனையோ நாட்கள் சமைக்கா மலும் இருந்திருக்கிறாள். சாப்பாட்டுக்கு என்னவழி என்று கேட்டால், கடையில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பாள். குடும்பக்காரர்கள் கடையில் சாப்பிட்டால் பார்க்கிறவர்கள் ஒரு மாதிரியாகப் பேசுவார்களே என்றால், பேசட்டுமே யாருக்குக் கவலை என்று முற்றுப்புள்ளி வைத்து விடுவாள். அளவுக்கதிகமாகச் சிக்கனமாக இருப்பாள். அவளிடம் ஏழெட்டுச் சேலைகள் தான் இருக்கின்றன. கூடுதலாக வாங்கிக் கொள்ளேன், வேலைக்குச் செல்பவளாயிற்றே என்றால், இருக்கிறது போதும் என்று அமைதியாகிவிடு வாள். அவளுக்குச் சரி என்று பட்டால்தான் செய்வாள். என் வற்புறுத்தலுக்காக இணங்கிப் போகவே மாட்டாள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அவளுடைய தோழிகள் இருவர் வந்திருந்தனர். “சாப்பிங்” போகப் புறப்பட்டார் கள். என்னையும் கூப்பிட்டாள். நான் மறுத்திருக்கலாம். தெரியாத்தனமாக அவர்களோடு கிளம்பிவிட்டேன். ஆச் சர்ட் ரோட்டிலுள்ள ” கோல் ஸ்டோரோஜ்” கடைத் தொகுதிக்குச் சென்றோம். எனக்கென்னவோ அந்த இடம் பிடிக்கவே இல்லை. அங்கு ஒரு பொருளை, வெளியே வாங்கு வதைவிட அதிகமாகப் பணம் கொடுத்து வாங்க வேண்டி யிருந்தது. ஆடம்பரமான இடம். விலை அதிகம் இருப்பதில் வியப்பில்லை. அங்கு நுழைந்த கொஞ்சநேரத்தில் எப்போது வெளியேறுவோம் என்றாகிவிட்டது எனக்கு ஆனால் மீனா விற்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது.
ஒரு பொருளை எடுப்பது,விலையைப் பார்ப்பது, தோழி களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது வைப்பது-பின்பு வேறோர் இடம் சென்று அவ்வாறே செய்வது-இவ்வாறு தோழிகள் மூவரும் உல்லாசமாய்த் திரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மீனா மட்டுமின்றி, அங்கு வலம் வந்து கொண்டிருந்தோர் அனை வரும் அப்படித் தான். முடிவில் மீனாவின் தோழிகள் பைகள் பைகளாகப் பொருள்களை வாரிச்செல்ல இவள் மட்டும் ஒரு சிறிய “ஆலிவ் ” எண்ணெய் பாட்டிலை மட்டும் வாங்கிக் கொண்டு ஒரூ வகையாக வந்து சேர்ந்தாள்.
“இந்தச் சிறிய பொருள் மட்டும்தான் வாங்கினாயா?” என்று நான் கேட்டேன்.
அவள் “ஆமாம் அதிகமான விலை. இங்கு எதற்கு வாங்க வேண்டும்?” என்றாள்.
“பின்பு எதற்காக வரவேண்டும்? பொருள் வாங்க வந்தாயா, பொழுது போக்க வந்தாயா?” என்று சூடாகக் கேட்டேன் .
“பொழுது போக்கத்தான். வீட்டிலிருந்துதான் என்ன செய்யப் போகிறோம்?” என்று மிகச் சாதாரணமாய் என்னையே திருப்பிக் கேட்டாள். எனக்கு வாயடைத்துப் போயிற்று.
“அட சங்கரா, இதற்குப் பெயர்தான் “சாப்பிங்கோ?” என்று நான் எனக்குள் பொறுமிக் கொண்டேன்.
அவள்…அவளை என்ன செல்வது?
நான் புரண்டு படுக்கிறேன். என் உடலெல்லாம் கொதிக்கிறது. அவள் போக்கே அலாதிதான். என்னிடம் மட்டுமில்லை. எல்லாரிடமும் அப்படித்தான். அவன் கர்வம் மிகுந்தவள் போல் நடந்து கொள்வாள். பிடிவாதக்காரி எங்கள் திருமணத்தில்கூட அப்படித்தான். அவள் பெற் றோர்க்கு என்னைப் பொறுத்தமட்டில் அவ்வளவு நிறைவு இல்லை. ஆனால் மீனா தயங்கினாளா, அதுதான் இல்லை. என்னையே திருமணம் செய்து கொண்டு எதிர்ப்பு ,தெரிவித் தோர் முகத்திலெல்லாம் கரிபூசினாளே பார்கூலாம். அது ஒன்றுதான் எப்போதும் என் மனத்தில் பசுமையாகத் தோன்றும். எனக்காக உற்றம் சுற்றம் அனைத்தையும் துறக்கத் துணிந்தாளே! அவள் மனம் கோண நான் நடந்து கொள்ளலாமா? அவளைக் கண்கலங்க விடலாமா? அதனால் தான் அவள்மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன்.
நான் பெண்டாட்டிதாசனாம்! “கூஜா” என்று சுருக்க மாகச் சொல்லி எல்லாரும் கிண்டல் செய்கிறார்கள். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஒரு மனிதனைப் பற்றி இன்னொரு மனிதன் முடிவெடுக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தன்னைப் பற்றி முற்றாகத் தெரிந்தவன் அவனையன்றி, வேறு யாராகவும் இருக்க முடியாது. இப்படி இருந்தாலும் இருக்கலாம் என்று அனுமானிக்க முடியும். ஆனால் அனுமானங்கள் இறுதித் தீர்வாகிவிட முடியுமா என்ன?
நான் மீனாவை மனதார நேசிக்கிறேன். அது என் கடமையுமாகும். அவளிடம் குறைகள்இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றனவே ஒழிய-அவை உண்மையில் குறைகள் தானா என்பதில் எனக்கே தடுமாற்றம். சரி குறையுள்ள வளாகவே இருக்கட்டும்! அதற்காக நான் அவளைவெறுத்து ஒதுக்க வேண்டுமா?
மனைவி என்றால் என்ன அர்த்தம்?தன் விருப்பப்படி எல்லாம் வளைந்து கொடுப்பவள்தான் மனைவியோ? நடை முறையில் எத்தனைபேர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
ஓர் ஆணின் எதிர்பார்ப்புகளைப் போன்றே பெண்ணும் எதிர் பார்க்க உரிமை பெற்றிருக்கவில்லையா? இரு வேறு உடல்களை, உணர்ச்சிகளை, சிந்தனைகளை தன்மைகளை உடைய உயிர்கள் திருமண உறவால் பிணைக்கப்படும்போது, சில இயல்புகள் ஒத்துப் போகலாம்: பல இயல்புகள் ஒத்துப்போகாமலிருக்கலாம். இல்லறம் என்பது ஒரு கூட்டு முயற்சிதானே? ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போக வேண்டியதுதான். மனைவியை அடக்கியான நினைப்பது எப்படி சரியாகும்? அடக்கு முறையால் அன்பை வளர்க்க முடியுமா?
என் மனைவிக்கு விருப்பமானவைகளுள் சில எனக்குப் பிடிப்பதில்லை. அதே போலத்தான் அவளுக்கும். எனக்குப் பிடிக்காமல் போவது சரி என்றால், அவளுக்குப் பிடிக்காமல் போவதும் தவறாகாது அன்றோ?
நான் எதிர்பார்க்கும் மனைவியாக நான் மீனாவைப் பார்க்கவில்லை மீனாவை நான் மீனாவாகத்தான் பார்க் கிறேன். அவள் அவளாகவே இருப்பதை விரும்புகிறாள். அதில் நான் எப்படித் தலையிடலாம். அது மானிட உரிமை யல்லவா?
மீனாவின் பல நடவடிக்கைகள் எனக்குப் புதிராக இருக் கலாம் . ஆனால் அவள் மனதார என்னைத்தான் நேசிக்கிறாள். சீசரின் மனைவி எப்படிச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வளோ, அதைப் போல் என் மீனாவும் பரிசுத்தமானவள். எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை அவள்மேல். எவரிடமும் அளவோடுதான் பழகுவாள். என் நண்பர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்தால், அங்கு நான் இல்லையாயின் “அவர் இல்லை… ” என்று பட்டென்று வைத்துவிடுவாள். அவர் எங்கு போயிருக்கிறார், எப்போது வருவார் என்று கேட்கும் தைரியம்கூட என் நண்பர்களுக்கு இல்லை எவ்வளவு பெரிய கொம்பனும் அவளிடம் எட்ட நின்றுதான் பேசவேண்டும்; நெருங்க முடியாது. அவளோடு பணிபுரியும் ஆண்களில் பலருக்கு அவளைக் கண்டால் உள்ளுக்குள் பயம் என்றுகூட கேள்வி. இவள் இதயத்தை எனக்கு முற்றாக அர்ப்பணித்துவிட்டாள் அதில் துளிகூட எனக்கு ஐயமில்லை அவள்…என் இனிய மனைவி மீனா என்மீது கொண்டிருக்கும் அன்பு நினைவுக்கு வந்தவுடனேயே, தாங்க முடியாத வெப்பம் மாறி சடசடவெனப் பெய்யும் மழைத் துளிகளைப் போல் என் இதயம் குளிர்கிறது அந்தக் குளிர்ச்சியில் மூழ்கி உறங்கிவிடுகிறேன்.
கலையில் வேலைக்குச் சென்றதும் அதிகாரியைப் பார்த்தேன். இரண்டு மணிநேரம் சலுகை பெற்றுக்கொண்டு புகைவண்டி நிலையத்திற்குச் சென்றேன் மீனாவை எதிர் கொண்டழைக்க வேண்டாமா? அவளைப் பார்த்து ஒரு வாரம் ஆகிறது. அவள் உருவம் கண்ணிலேயே நிற்கிறது, மீனா!..
– 1974, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.