அவளுக்காக ஒருவன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 147 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அனிதாவின் மனத்திற்குள் எரிச்சலும் துன்பமும் பொங்கிக் கொண்டு வந்தன. வேலை முடிந்து எங்காவது செல்லாமல் வீட்டிற்குத் திரும்பி வந்தது தவறாகத் தோன்றியது.

அவள் தாயாரின் தொணதொணப்பு இன்னும் ஓய வில்லை. அனிதாவின் காதில் விழவேண்டுமென்பதற் காகவே, சமையலறையிலிருந்தபடி உரக்கப் பேசிக்கொண் டிருந்தாள் பாக்கியம்.

“என்ன படிப்பு படிச்சிட்டா? உலகத்தில இல்லாத படிப்பு. மனுசாளை மதிக்கத் தெரிய வேண்டாமா? எனக்கு அரைக்காசு மதிப்புண்டா இந்த வீட்டில்? எதைச் சொன்னா லும் எடுத்தெறிஞ்சு பேசிடுறாள். வயசு ஆயிக் கொண்டே போகுதே! நல்லதுவெல்லாம் காலாகாலத்தில நடக்க வேண் டாமா?…”

புகார்களாகத் தொடங்கி , மனக்குறைகளாகக் கடை விரித்து, இறுதியில் புலம்பலாய் முடித்தாள் பாக்கியம் . “பார்க்கிறவங்க எல்லாம் இதையே கேட்கிறாங்க. நான் என்ன சொல்வது, வெளியே தலைகாட்ட முடியல…” யாரோ தனக்குத்திருமணம் ஆகாமலிருப்பதைப்பற்றிக் குத்தலாகப் பேசி இருக்கிறார்கள் என்பதை உடனே புரிந்து கொண்டாள் அனிதா.

“என் கல்யாணம்தானே உங்க வருத்தத்திற்குக் காரணம்? ..” பொறுமை இழந்து கேட்டாள் அவள்.

“ஆமா. வேறு என்ன கவலை எனக்கு? அது ஆக வேண்டிய காரியம் இல்லையா?” பாக்கியம் பாய்ந்தாள். “அதுக்கு இப்ப என்ன அவசரம்? கொஞ்ச நாள் ஆகட்டுமே…” மகள் சலிப்புடன் கூறினாள்.

“இருபத்தைஞ்சு வயசாயிட்டதே? இப்ப செய்யாம பிறகு எப்போது செய்கிறது? எனக்கெல்லாம் பதினைஞ்சு வயசிலேயே ஆயிட்டது நான் வாழலையா? …”

“அது அந்தக் காலம்.” மகள் குரலில் ஏளனம் தொனித்தது, அது தாயாரின் ரோசத்தைக் கிளப்பியது. “இந்தக் காலத்தில அரைக் கிழவியான பிறகுதான் கல்யாணமோ? ” தாயும் சளைக்கவில்லை.

“என் மனசுக்குப் பிடிக்க வேண்டாமா? கண்டவங் கிட்ட கழுத்தை நீட்ட முடியுமா?”

“அது என்ன மனசு? சொந்தத்திலேயும் பிடிக்கல. பிறத்தியிலேயும் பிடிக்கல. எத்தனையோ பேர் வந்து கேட் டுட்டுப் போயாச்சு உன் முடிவுதான் என்ன? இன்னிக்கு எனக்கு இரண்டில ஒன்று தெரிஞ்சாகணும்…”

இன்று உடும்புப் பிடி போடுவதென்ற முடிவோடுதான் அம்மா இருக்கிறாள் என்பதை அனிதா தெளிவாகத் தெரிந்து கொண்டாள்.

‘அம்மா, மன ஒற்றுமைதான் வாழ்க்கைக்கு அடிப் படைத் தேவை. என் குணத்தோடு ஒத்துப் போகிற ஒருத் தரைச் சொல்லுங்க … பிறகு என் கருத்தைச் சொல் றேன்…” இப்போது மகள் சமாதானமாகப் பேசத் தொடங்கினாள்.

“அப்படி ஒருத்தன் வானத்தில இருந்து குதிக்கப் போறானா? …” மகள் யாரையாவது மனத்தில் வைத்துக் கொண்டுதான் பேசுகிறாளோ என்ற ஐயப்பட்டுடன் தாய் கேட்டாள்.

“அது எனக்குத் தெரியாது…” அனிதா எழுந்து குளிய லறையை நோக்கிச் சென்றாள்.

“தெரியாதா? எப்படித் தெரியும்? பதினைஞ்சு வருசமாக கண்ணுக்குள்ளே வைத்துப் பாதுகாத்துப் படிக்க வச்சது எனக்கில்ல தெரியும் ….”

அனிதா சாட்டையடி பட்டவள் போல் திரும்பிப் பார்த்தாள். இதை அம்மா எத்தனையோ முறை சொல்லி விட்டாள்.

அப்பா இறந்து போன பிறகு, அம்மா என்னை ஆளாக்கு வதில் ஓடாய்த் தேய்ந்து போனது உண்மைதான். அதை எத்தனை முறைக் குத்திக் காட்டுவது?

“அம்மா, என்னைப் படிக்க வச்சது கைநிறையச் சம்பா திக்கவும், கல்யாணம் பண்ணிக்கெள்ளவும்தானா? அறிவுக் கண்களைப் பெறுவதற்காக இல்லையா? உலகத்தைத் தெரிஞ்சு கொள்வதற்காக இல்லையா? …” அவள் நயமாகத்தான் கேட்டாள் .

பாக்கியம் வாயடைத்துப் போனாள். இனி மகளிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் மெளனியாய் எழுந்து போனாள்.

தன்கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்துக்கொண்டு விட்டது போல், முன்னிரவில் தொடங்கிய மழை அப் பொழுதுதான் ஓய்ந்திருந்தது.

அனிதா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். மனத்தில் அமைதியில்லாத போது உறக்கம் எங்ஙனம்வரும்? வாழ்க்கையைக் கேளிக்கை அரங்காக அவளால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. அப்படி இயன்றிருந்தால்

அம்மாவின் ஆசையை என்றோ பூர்த்திச் செய்திருப்பாள் ஏன் ஒன்றிரண்டு குழந்தைகளைக்கூட இதற்குள் ஈன்றிருக்கக் கூடும். அவளால் அவ்வாறு ஏற்க முடியவில்லையே!

அறிவின் முழுமை படர்ந்த வாழ்க்கையையே அவள் விரும்பினாள். தாகூரின் கவிதைகளிலும், திரு.வி.க. வின் தீந்தமிழ் நூல்களிலும், மேல்நாட்டு அறிவியல் தத்துவங் களிலும் மணிக்கணக்கில் உறந்து போகும் அறிவுப் பசியுடையவள் அனிதா. அவள் கரம் பற்ற வருகிறவன் குறைந்தபட்சம் நூல்களோடு தொடர்பு உடையவனாக வாவது இருக்க வேண்டாமா? இதுவரை அப்படி ஒருவரும் வராதது பாக்கியத்தின் போதாத காலம்தான் .

அனிதா அத்தகையவர்களை நிறையச்சந்தித் திருக்கிறாள், சந்திக்கவும் செய்கிறாள். ஆனால் அவர்களிடம் வலிந்து சென்று தாழ்ந்து போக அவள் தயாராயில்லை.

“ஒருவேளை அம்மா சொல்வது போல் என் மனத்திற்குப் பிடித்தமான ஒருவரை அடைவது குதிரைக் கொம்பு தானோ!”

மறுநாள்.

அனிதா தனது அலுவலகத்திற்குள் நுழைந்து, அலமாரி யிலிருந்து அன்று கவனிக்க வேண்டிய கோப்புகளை வாரி எடுத்தபோது, கறுப்புக் கோட்டும் தொப்பியும் கண்ணில் பட்டன.

இதைப் பெற்றதைத்தான் அம்மா பெரிய படிப்பு என்று சொல்லுகிறாள் என்று எண்ணிப் பார்த்தபோது அவளுக்குள்ளேயே சிரிக்கத் தோன்றியது. இந்தப் படிப்பு தான் அம்மாவிற்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.

முதல் நாள் இரவு அம்மாவின் மனம் நோகும்படி நடந்துவிட்டேனோ என்று ஒருதரம் சரியாகச் சிந்தித்துப் பார்த்தாள்.

அன்று அவளால் அலுவலைக் கவனிக்க முடியவில்லை. ஒரு கோப்பையும் மனம் ஒன்றிப் படிக்க முடியவில்லை. மதிய உணவருந்தவும் அனிதா போகவில்லை.

இதை எல்லாம் அருண் கவனித்துக் கொண்டுதானிருந் தான். அவன் அந்த அலுவலகத்தின் இன்னொரு பகுதியைப் பயன்படுத்தும் மற்றொரு வழக்கறிஞர்

அருண் அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அனிதா நிமிர்ந்து பார்த்தாள்.

“உள்ளே வரலாமா?…”

“வாங்க …”

“இதைக் கொஞ்சம் பார்த்துச் சொல்லணும்…”

“என்னது?….”

அவள் கேட்டு முடிப்பதற்குள் ஒரு கோப்பு வெகு சுதந்திரமாய் அவள் மேசை மீது விழுந்தது.

அனிதா அதைத் திறந்தாள். கத்தையான காகிதங்கள் இருந்தன. அவற்றிற்கு வால் ஒட்டியது போல் ஒரு துண்டுக் கடிதம் நழுவிக் கீழே விழுந்தது.

“என்னலா. இன்று சோர்வா இருக்கீங்க. நான்லா, உங்களை ரொம்ப நேரமா கவனிச்சுக் கொண்டே இருக்கேன்லா. சாப்பிடலையாலா? பசிக்கலையாலா?…”

முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல், அருண் எதிரிலேயே அவள் கலகலவென்று நெல்லிக்காய்கள் சிதறியதைப் பால் சிரிப்பைச் சிந்தினாள்.

அருண் சமயத்தில் அப்படித்தான் பகடி செய்துவிடு வான். இன்று, தான் தோழிகளிடம் செல்லமாகஉரையாடும் பாணியிலேயே எழுதி… இவர் பொல்லாதவர்.

“அனிதா, இன்றைக்கு வழக்கு மன்றத்திற்குப் போக வேண்டுமா? …”

“இல்லை. ஏன்?…”

“ம்… ம்… பொறுங்க… ” என்றவன் தன் நாள் குறிப்பை நிதானமாக நோட்டமிட்ட பிறகு, “நானும் ஓய்வாகத் தான் இருக்கிறேன். ஓர் ஓவியக் கண்காட்சி இருக்கிறது. போய் வரலாமா…?”

“எப்போ?….”

“இப்போ கூட கிளம்பலாம்… ”

“சரி….”

அருண் முகம் மலர்ந்தது. அவள் வாய் நிறைய “நன்றி” என்றான். அனிதாவுக்கும் வெளியில் செல்ல வேண்டும் போல்தானிருந்தது.

உலக வணிக மையம். அலைபாயும் கடல் முகப்பில் அமைந்திருப்பதற்குப் பொருத்தமாய் அலைஅலையாய் மக்கள் கூட்டம்!கண்காட்சியைப் பார்த்துப் பாராட்டாதவர்களே இல்லை.

அங்கு இடம்பெற்றிருந்த ஓவியங்கள் எல்லாவற்றையும் ஓவியர் தம் விரல்களாலேயே வண்ணங்களைக் கொண்டு தீட்டியிருந்தார்.

அருண் ஓவியங்களில் மணம் பறிகொடுத்து நின்ற போது, நான்கைந்து பெண்களுக்கு மத்தியில் அனிதா கலந்திருந்தாள்.

அத்தனை பெண்களுக்கும் நடுவில், அனிதா பணியில் நனைந்த ரோஜா மலர் போல் பளிச்சென்று தோன்றினாள். புதிதாய்ப் பார்ப்பவன் போல், அருண் தன் கண்களில் அனிதாவை நிரப்பிக் கொண்டான்.

மெதுவாய் நடந்து போய்க் கொண்டிருந்த அனிதா ஓர் ஓவியத்தின் முன் வந்ததும் அப்படியே அசந்துபோய் நின்று விட்டாள்.

எழுதுகோலைப் பிடித்த வண்ணம் ருசிய மேதை டால் ஸ்டாய்-வெண்ணிற தாடியும்-மீசையும், அறிவின் ஆழத்தை உணர்த்தும் அகலமான நெற்றியும்-விளக்கின் ஒளியைப் பழிக்கும் விழிகளும் …ஓ!… ஓவியன் சாதனை படைத்திருந்தான்.

அருண் அருகில் வந்தததுகூட அறியாமல் அனிதா மெய் மறந்து நின்று கொண்டிருந்தாள்.

அவன் அவளை அழைத்ததும் சிந்தனை கலைந்து , “எவ் வளவு இயற்கையாய் இருக்கிறது பார்த்தீர்களா அருண்? அறிவு உருவம் பெற்றால் இப்படித்தான் இருக்கும் என்பது போன்ற முகம் இல்லை…” ஒரு குழந்தை போல் குதூகலித் தாள்.

அதை விலை கொடுத்து வாங்க வேண்டுமென்று அனிதா அவா கொண்டாள். ” விற்று முடிந்தது” என்று தாள் ஒட்டப்பட்டிருந்தது. அவள் முகத்தில் ஏமாற்றத்தின் கோடுகள்.

அவர்கள் அவ்விடத்தை விட்டுத் திரும்பும் வரை, அனிதா அந்த ஒரு ஓவியத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் வீட்டை அடைந்ததும் அதைப் பற்றி மறந்தே போனாள்.

மறுநாள் அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பிய போது அவளுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது.

ஓவியம் அவளுக்கு அன்பளிப்பாக அனுப்பப்பட்டிருந் தது; அனுப்பியவன் அருண்.

அன்றிரவு பூராவும் அவளுக்கு மண்டை நிறை குழப் பங்கள். இருப்பினும் அருணை தொலைபேசியில் கூப்பிட்டுத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். அருண் வெகு இயல்பாக வீட்டிலிருந்து பேசினான்.

“நாம் போவதற்கு முதல் நாளே கண்காட்சிக்கு நான் போயிருந்தேன். டால்ஸ்டாய் ஓவியம் எனக்குப் பிடித்திருந் தது. முன்பணம் கொடுத்து விட்டேன் . பிறகு உங்களுக் கும் அதே ஓவியம் பிடித்திருந்தது தெரிந்தவுடன்…” அவன் முடிக்கவில்லை. ஆனால் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அனிதாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏற்கனவே அவள் நெஞ்சு படபடக்க ஆரம்பித்திருந்தது. “அந்தப் படம் உங்களை எப்படிக் கவர்ந்தது?…” அனிதா மிகவும் தயக்கத்துடன் கேட்டாள்.

அறிவின் திருவுருவங்களை நானும் நேசிப்பதுண்டு … உன்னைப் போல்… மன்னிக்கவும் உங்களைப் போல்…”

“……”

‘அனிதா, வருகிற புதன்கிழமை, என் பெற்றோர் உன்னைப் பார்க்க வர விரும்புறாங்க. வரச்சொல்லவா?…” அனிதாவுக்குக் காது மடல்கள் திடீரென்று சிவந்தன . அவளுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

“ஹலோ, உன் விருப்பத்தைச் சொல் …” மறுமுனையில் அருண் அவசரப்பட்டான் .

அனிதாவுக்கு இலேசாக உடல் எல்லாம் பதறத் தொடங்கியது. அவள் கைகள் நடுங்கின.

“ஹலோ !….ஹலோ!… ஹலோ !…..

அனிதா ஒரு கரத்தால் முகத்தைப் பொத்திக் கொண்டு, உயிரைப் பிடித்துக்கொண்டு பேசுபவள் போல் “சரி…..” என்று எப்படியோ சொல்லிவிட்டாள் .

மறுபுறத்தில் அருண் கலகலளென்று சிரித்துவிட்டான். பிறகு அவளை ஒரேயடியாகத் திணறடிக்க வேண்டாமென்று தொலைபேசியை ஒருவழியாக வைத்தான்.

திடீரென்று வெண்ணிற சிறகுகள் முளைத்து நீலவானத் தில் பறந்து திரிவதைப் போல் அனிதாவுக்கு உற்சாகம் வழிந்தது.

ஓடோடிச் சென்று “அம்மா;…” என்றழைத்தபடி பாக்கியத்தின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். “என்னடி சேதி!…” பாக்கியம் மகளின் மகிழ்ச்சிக் கான காரணத்தைக் கேட்டாள் .

“ஒன்றுமில்லை…” என்று முதலில் சொல்ல நினைத்த வள், அதை மாற்றி-பிறகு சொல்வதாகக் கூறிவிட்டுச் சிட்டென ஓடி மறைந்தாள்.

என்னதான் படித்துப் பட்டம் பெற்றவளாய் இருந் தாலும் அனிதாவும் பெண்தானே? வெட்கத்தைவிட்டுத் தாயாரிடம் உடனே இதை எப்படிச் சொல்ல முடியும்?

-1982, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

எழுத்தாளரைப் பற்றிய விவரங்கள் தமிழ் நாட்டில் 1947ஆம் ஆண்டு பிறந்து சிங்கப்பூர் வந்த பொன். சுந்தரராசு, வள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, பின்னர் செயிண்ட் ஜார்ஜஸ் தொடக்கப் பள்ளியில் தமது படிப்பைத் தொடர்ந்தார். உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, தமிழாசிரியர் பணியில் சேர்ந்து முதன்மை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றார். இதற்கிடையே தொலைக் கல்வி வழி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *