வட்ஸபில் வாப்பா அனுப்பியிருந்த விஷயத்தை பார்த்ததும் அயானாவின் உள்ளம்
ஏதோ ஒரு பரவசத்தில் மகிழ்ச்சி அடைந்தது.
அயானா அதிகமாக படித்தவளோ, நிறைய திறமைசாலியோ அல்ல! பத்தாம் வகுப்பு வரையில்தான் படித்திருந்தாள். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவள்.
அவள் நிறைய நூல்களையும்,பத்திரிகைகளையும் வாசிப்பாள்.ஆனால் அது அப்போது! இளம் பருவநங்கையாய் இருக்கும் போது ! இன்று அவள் என்ன? குமரியா? இல்லத்தரசி.
நான்கு பிள்ளைகளுக்கு தாய். அவளுக்கு எங்கே நேரம்.
ஏதோ ஓய்வுள்ள நேரங்களில் நூல்களை வாசிப்பதோடு, போஃனில் குரூப்களில் வருகின்ற கவிதைகளையும், சிறுகதைகளையும், இன்னும் நல்ல நல்ல இஸ்லாமிய விடயங்களையும் ஆர்வத்துடன் பார்ப்பாள். அவளும் ஓரளவுக்கு கவிதைகள், கதைகள் எழுதக் கூடியவள்தான். கவிதை என்றால் அவளுக்கு நிறையப் பிடிக்கும். கற்பனை வளமும், ரசனை உணர்வும் அவளோடு ஒட்டிக் கொண்டே இருந்தது எனலாம்.இளமைப்
பருவத்தில் சிறுகதைகளும், கவிதைகளும் ஓரளவுக்கு எழுதியிருக்கிறாள். அவளது வாப்பாவும் எழுத்தாளர்தான். அவர் நிறைய எழுதுவார். அவரின் திறமையான எழுத்தாற்றல்தான் அவரின் மூத்த மகளான இவளுக்கு வந்தது போலும்!
அவளின் திருமணத்திற்கு சில வருடங்களுக்கு முன்னர் அவளின் வாப்பா ஸலீம் ,மாதம் ஒரு முறை வெளியாகும் சஞ்சிகையோன்றை வெளியிடத்தொடங்கினார். அதில்
ஒவ்வொரு மாதமும் இவளின் ஆக்கம் வரத் தவறியதில்லை. வாப்பாக்கு உதவியாக சஞ்சிகை திருத்த வேலைகளில் ஈடுபடுவாள். அவளின் எழுத்துக்களைப் பாராட்டி எப்போதும் ஊக்குவித்துக் கொண்டே இருப்பார் அவளின் வாப்பா ஸலீம். அதனால் ஒரு சில பத்திரிகைகளுக்கும் தனது ஆக்கங்களை அனுப்பி வைத்தாள். அவற்றில் அதிகமானவை வெளிவராவிட்டாலும் ஒன்றிரண்டு வெளிவந்ததும் அவளுக்கு சந்தோசம்தான்.
ஆனாலும் அவளது முயற்சிகள் தொடர்ந்தன. அவளது வாப்பாவின் சஞ்சிகை
பத்து இதழ்களோடு நிருத்தப்பட்டன. குடும்ப பொருளாதார நெருக்கடியினாலும் நேரமின்மையாலும் மேற்கொண்டு புத்தகத்தை வெளியிட அவரால் முடியாமட் போய்விட்டது. அயானாவுக்கு அது மிகவும் வருத்தமளித்தது. அயானாவின் எழுத்துப் பணிக்கு நீண்ட இடைவெளி கொடுக்கப்பட்டது.
அவள் மணவாழ்கையில் இணைந்து குடும்பப் பொறுப்பில் ஐக்கியமானாள். ஆனாலும் திரண்டு வரும் கற்பனைக் குதிரையைக் கட்டிப்போட முடியுமா?
அவ்வப்போது கற்பனைக் குதிரைகளை எழுத்து வரிகளாக்கி ஓடவிட்டாள் கதைகளாக, கவிதைகளாக கடதாசித் தாழ்கழிலே!
அவளுக்கு தான் எழுத்துத் துறையில் வளர்ந்து நிற்கவேண்டும் என்கிற ஆசையிருந்தாலும் அதிகமாக எழுதுவதற்கான நேரங்கள் குறைவாகவே இருந்தது. இருந்தாலும் நேரம் அமையும் போது எழுதலாம் என்று நினைத்தால் நேரம் நமக்காக காத்திருக்குமா? அதனால் நாம்தான் நேரத்தோடு போராடி காலநேரங்களை நமதாக்கிக் கொள்ளனும்.
அவள் காலத்தோடு போராடினாள் நேரத்தை அமைத்துக் கொள்ள.அப்படியிருக்கும் போதுதான் வாப்பாவின் வட்ஸப் மெசேஜ் அவளை ஒரு நிமிடம் மகிழ்ச்சிப் படுத்தியது. வட்ஸப் குழுமம் ஒன்று நடாத்தும் மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டி விபரம் அதில் அறிவித்து இருந்ததே அவளின் மகிழ்ச்சிக்கான காரணம். அவள் அக்கனமே மனதில் உறுதி பூண்டாள் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்று!
போட்டி முடிவுக்கான காலம் ஒன்றரை மாதகாலம் கொடுக்கபட்டிருந்தது. முதல் பரிசு பத்தாயிரம், இரண்டாம் பரிசு ஐயாயிரம், மூன்றாவது பரிசு மூவாயிரம் மற்றும்
பன்னிரண்டு பேர்களுக்கு ஆயிரம் ரூபா, இன்னும் போட்டியில் கலந்து கொண்டோருக்கு அதிரடிப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் இருந்தது.
அவள் உள்ளமதிலும் ஆசைகள் அலைபாய்ந்தன.தானும் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களில் ஒருத்தியாக தான் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தாள்.
இப்படியே மூன்று நாட்கள் கழிந்தது.அதற்கான எந்தவிதமான முயற்சிகளும் அவள் எடுக்கவில்லை. ஆனாலும் அவள் நினைவுகளில் அந்த எண்ணங்கள் பதிந்தே இருந்தன. அவள் வீட்டுவேலைகளில் அதிகமான நேரத்தைக் கடத்தினாலும் அவள் கற்பனையில் கதைக்கான எண்ணக்கருவை உருவாக்கியிருந்தாள்.
ஆனாலும் அதற்கான ஆரம்பம் இன்னும் தயாராகவில்லை. கதையை டைப்செய்ய போனை கையில் எடுக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கள் வந்துவிடுகின்றது.
‘இன்று இன்ஷா அல்லாஹ் எப்படியாவது இரவைக்கு கதைய டைப்பண்ண ஆரம்பிக்க வேண்டும்’ என்று உறுதி கொண்டாள்.
நேரம் இரவு பத்து மணி. வீட்டில் பிள்ளைகள் உறங்கிவிட்டனர். கணவன் அக்ரம் கையில் போனுடன் சாய்ந்து படுத்திருந்தார்.
அவர் கவனம் முழுக்க போனில் பதிந்திருந்தது. “அஸ்ஸலாமு அலைக்கும்”என்று கூறியவாறு கையில் இருந்த கோபி கப்பை அவரிடம் நீட்டினாள் அயானா. “வாலைக்கும் ஸலாம் “என்று கூறியவாரே அதை வாங்கிக் குடிக்கிறார். கோப்பையைத் தந்துவிட்டு மறுபடியும் போனில் மூழ்கினார் அவர். கோப்பையை கழுவி வைத்து விட்டு வந்தவள் கால்களை நீட்டி கட்டிலில் சாய்ந்து கொள்கிறாள். ம் என்று நிம்மதிப் பெருமூச்சை விடுகிறாள்.”ஹா வந்துடீங்களா? ஏன்ட கால் கைகளெல்லாம் ரொம்ப வலிக்குது. கொஞ்சம் அமுக்கி விடுங்கவன். “என்றார் பக்கத்தில் இருந்த கணவர். அவளுக்கும் காலையில் இருந்து செய்த வேலைகள் களைப்பையும், உடல் வலியையும் தந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் கணவரின் கைகால்களை அமுக்கி விட்டாள். சிறிது நேரத்திலே அவர் அயர்ந்து தூங்கினார். ‘பாவம் வேலைக் களைப்பு போலும் தூங்கிவிட்டார் ‘ என்று நினைத்தவாறு போஃனைக் கையில் எடுத்தாள் அயானா.
ஊரே உறங்கிவிட்டிருந்த அமைதியான நேரம் எந்த விதமான இடைஞ்சலுமின்றி தனது வேலையை செய்வதற்கு இலகுவாக இருந்தன. இரவின் அமைதியில் கற்பனைகள் அருவியாய் ஊற்றெடுத்தது.அவள் டைப்பிங்கில் மும்முரமாக இருந்தாள்.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு அவள் எழுதத் துவங்கிய முதல் காலகட்டம் பேனா மை தாழ்கழிலே கதைக், கவிதை என்று தாளம் போட்டன.
ஆனால் இன்று புதுயுகம் எவ்வளவு மாற்றங்களை மனிதனுக்காக இலகுவாக்கியுள்ளது.
பேனாக்கள், தாழ்கள் இருந்தாலும் போனை வைத்தே எழுத்தில் சாதனை படைக்கிறார்கள். இன்று மனிதனின் விரல்கள் எழுத்துக்களை அழுத்தி அழுத்தி போனில் தாளம்போட மனிதனின் கற்பனைகள் கதைகளாக, கவிதைகளாக இடம்பெருகின்றன.என்றெல்லாம் சிந்தனை செய்தவளாக தனது கதைக்குள் கவனத்தைச் செலுத்தினாள் அயானா.
அரைமணிநேரம் ஆகியிருக்கும் தூக்கம் அவள் கண்களை மெல்ல எட்டிப் பார்க்கவே அதற்கு மேலேயும் விழித்திருக்க முடியாது போனை பக்கத்தில் உள்ள டீப்போவில் வைத்து விட்டு , இறைவனுக்கு நன்றி கூறி, பிரார்த்தனைகளை ஓதியவளாக உறங்கினாள் அவள்.
மறுநாள் காலை பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று விட்டார்கள். கணவர் அக்ரம் பகல் உணவுக்கு தேவையானதை வாங்க மார்க்கெட் போய் விட்டார். அவள் அவசரமாக வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டு அவர் வருமுன் நிறுத்திய இடத்திலிருந்து தனது கதையை தொடர்ந்தாள்.
ஐந்து நிமிடங்கள்தான் சென்றிருக்கும் அவளது மூத்த சகோதரனின் தொலைபேசி அழைப்பு.
அவர் தூரத்தில் இருப்பதால் அவரை அதிகமாக காணமுடிவதில்லை. அவ்வப்போது போனில் கதைப்பார்.அதனால் நீண்ட நேரம் அவரோடு பேசவேண்டி இருந்தது. நாநாவுடன் போன் பேசிவிட்டு போனை வைக்கும் போதே மார்க்கெட் சென்றிருந்த அக்ரம் வீடுவந்து சேர்ந்தார். அவர் காலை உணவை சாப்பிட்டதும் அவருடைய கடைக்கு சென்று விட்டார்.
அயானா பகலுணவை சமைப்பதற்கு ஆயத்தமானாள்.
அன்று நாள் முழுவதும் ஓய்வில்லாத வேலை என்பதால் அவளுக்கு டைப்பிங் பண்ண நேரம் கிடைக்கவில்லை. அசதியால் அன்று இரவு வழமையை விட சற்று நேரகாலத்துடன் தூங்கிவிட்டாள். மறுநாள் பகல் உணவுக்குப் பின் கொஞ்சம் ஓய்வு கிடைக்கவே டைப் செய்தாள். இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து முழுவதுமாக டைப்செய்து சிறுகதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். பின்னர் கதையில் திருத்தங்கள் பார்த்தாள். எல்லாம் சரியாக இருந்தது. நிம்மதிப்பெருமூச்சு விட்டாள்.தூங்கலாம் என்று நினைத்து தலையணையில் சாயும் போது “அயானா இன்னும் படுக்கல்லயா? அப்படி என்னதான் டைப்பண்ணி சாதிக்க போற? தேவையில்லாத வேலை செய்து நேரம்தான் வீணாகுது. அப்படித்தான் நீங்க கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு வெற்றி கிடைத்திடுமா? இதல்லாம் வச்சுட்டு படுங்க “என்று தூக்கக் கலக்கத்தோடு பேசினார் அக்ரம். அயானாவுக்கு அந்த வார்த்தைகள் மனதுக்கு கவலையளித்தாலும், அமைதியாக இருந்து விட்டாள். ஒருவரின் திறமையை ஊக்குவிக்க தெரியாதவர்களிடம் பதில் கொடுப்பதில் பயனில்லை என்பதால் தான் அவள் மெளனமாகி விட்டாள்.அவள் அதிகமாக படிக்காதவள்தான். இருந்தாலும் ஓரளவு திறமையுள்ளவள். அவளுக்குள்ள திறமைகளை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதற்கான மரியாதையை கொடுக்காமல் இருப்பதும் அவளுக்கு மிகவும் வேதனையளித்தது.
கணவர் மட்டுமா? அவளது குடும்ப உறவினர்கள்,பாடசாலைத் தோழிகள் என்று யாரும் அவள் திறமையை கண்டும் காணாதவர்கள் போல்தான் இருந்தார்கள். அவளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒன்றை டைப் செய்து அவளது திறமையை வெளிப்படுத்தும் விதமாக குரூப்களில் போடுவாள். ஆனால் குடும்ப குரூப்களிலோ, நண்பிகளின் குரூப்களிலோ ஒரு சிலரைத் தவிர அதிகமானோர் லைக் பண்ணவோ கருத்துக்களை தெரிவிக்கவோ மாட்டார்கள். கண்ட கண்ட விடயங்களை லைக் பண்ணும் அவர்கள் இந்த மாதிரியான விடயங்களை ஏன் ?கண்டு கொள்வதில்லை. திறமை என்பது எம்மைப் படைத்த ரப் நம் ஒவ்வொருத்தருக்கும் கொடுக்கும் மிகப் பெரும் பாக்கியம். எல்லாருக்கும் ஏதாவது ஒரு வகையில் திறமையிருக்கும். ஆனால் திறமையில் கூடியவர்கள், நன்கு படித்தவர்கள் மற்றவர்கள் திறமைகளை ஊக்குவிக்கும் போதுதான் அவர்கள் வாழ்க்கையில் முயற்சிப்பார்கள். அதிகமாக படித்தவர்கள் கூட இன்று அடுத்தவர்களுடைய திறமையை கண்டு கொள்வதில்லை. இந்த விடயம் அயானாவின் மனதை ஏதோ பாதித்திருந்தது. அவளின் இளைய மகள்கள் அவளது பெற்றோர், உடன் பிறப்புக்கள் அவளது எழுத்து விடயங்களை பாராட்டத் தவறியதில்லை. அவளுக்கு பக்க பலமாய் இருந்தார்கள்.
அவளின் ஆசை எழுத்துத் துறையில் அவள் சாதனைகளைக் குவிக்க வேண்டும் என்பதும் தன்னை கண்டு கொள்ளாதவர்கள் வியந்து நோக்க வேண்டும் என்பதுமே.
அதற்காகத்தான் அவள் இத்தனை முயற்சிகளை எடுக்கிறாள். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பது கஷ்டம்தான். பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு மத்தியில் தன்னால் போட்டி போட முடியாதுதான். மற்ற பன்னிரண்டு பேர்களுக்குள்ளாவது வந்தாலே போதும். என்பது அவளது எண்ணம். ஆனாலும் மூன்றாவதுக்குள் வருவதற்கு ஆசைதான் அவளுக்கு.
மறுநாள் விடிந்தது. வேலைகளையெல்லாம் முடித்தாயிற்று. சிறுகதையை வாப்பாவுக்கு போனுக்கு அனுப்பி வைத்தாள். வாப்பா மிகவும் நல்லா இருக்கு என்று பாராட்டினார். பிறகு கதையை அவர்கள் தந்த முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தாள். சில மணிநேரத்தில் அவர்களது பதில் வந்தது. போட்டியில் கலந்து கொண்டமைக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துகிறோம். என்றிருந்தது.
இப்படியே நாட்கள் நகர்ந்தது.போட்டியின் முடிவுக்காய் ஆவலோடு காத்திருந்தாள் அயானா.
ஒரு நாள் காலைநேரம். பிள்ளைகள் பாடசாலைக்கும் ,கணவர் அக்ரம் வேலைக்கும் போயிருந்தார்கள். அவள் மட்டுமே வீட்டில் இருந்தாள். சமையல் வேலைகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தாள். போஃனைக் கையில் எடுத்து நேரத்தைப் பார்த்தாள். நேரம் பதினொரு மணியாகியிருந்தது.
அப்போதுதான் கவனித்தாள் அவள்.
அவளுக்கு இணையத்தில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அது அவள் போட்டிக்கு அனுப்பிய குழுமத்தில் இருந்து வந்தது. அவள் அதை வாசித்தாள். சகோதரி அவர்களே! நீங்கள் சிறுகதைப் போட்டியில் மூன்றாவது வெற்றியாளராக தெரிவு செய்யப் பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். பரிசில்களுக்கான விபரங்களை பின்னர் அவசரமாக அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவும் அதில் இருந்தது. உடனே நன்றி தெரிவித்து பதில்
அனுப்பினாள்.
அயானா சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த வெற்றியை அவளின் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அத்தனை குதூகலம் அவளுக்கு. குடும்பம், நண்பிகள் தெரிந்தவர்கள் என்று எல்லோரும் வியந்து பாராட்டினார்கள். அவளது பெற்றோர், உடன் பிறப்புக்கள், கணவன், பிள்ளைகள் என்று எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவளது கணவர் அப்போது தான் புரிந்து கொண்டார் மனைவியின் திறமையை!
அவள் கதையை அவள் வாயாலையே வாசிக்க வைத்து பாராட்டி மகிழ்ந்தார். அவளது வாப்பா ஸலீம் எப்போது ம் போல் மகளின் சிறுகதையை அவர் உள்ள அத்தனை குரூப்களிலும் போட்டார். கருத்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து கொண்டேயிருந்தது. இத்தனைக்கும் அவள் முதலிடமல்ல! மூன்றாவது இடம். ஆனாலும் அவளது திறமைக்கு கிடைத்த முதல் வெற்றியல்லவா!
அவள் இதைத்தானே எதிர்பார்த்தாள். அவள் தன் திறமைகளை எல்லோரும் அறியச் செய்வதில் ஆர்வமாயிருந்தாள். அது இப்போது நடந்தும் விட்டது. அவளுக்கு இப்போது நிறையவே நம்பிக்கை துளிர்விட்டு வளர ஆரம்பித்தது. பிற்காலத்தில் இன்ஷா அல்லாஹ் அவள் பெயர் சொல்லும் அளவிற்கு எழுத்தாளர்களில் ஒருவராக வரலாம் என்று நினைத்தவளாய் இறைவனைப் பிரார்த்தித்தாள்.
(யாவும் கற்பனை)