செல்வராஜ் தனது பேரக் குழந்தையோடு வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரம் அதற்கு மேலேயும் அங்கு நின்று தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது.
“பாப்பா போதும்டா.. விளையாடியது. வெயிலா இருக்குப்பா. நாம அப்புறமா விளையாடலாம் சரியா” என்று அந்தப் பிஞ்சுக் குழந்தையிடம் கெஞ்சலாகக் கேட்டார் அந்த வயதான தாத்தா.
“இல்ல இன்னம் விளாடனும். வாங்க தாத்தா வாங்க. போல் போடு தாத்தா” என்று விளையாட்டை நிறுத்த மனமில்லாமல் தனது மழலை மொழியில் கெஞ்சியது அந்தக் குழந்தை .”தாத்தா பாவம்மில அப்புறமா விளையாடலாம் கண்ணு.” என்று அவரும் பதிலுக்கு கெஞ்ச..
பேரனும் விடுவதாக இல்லை விளையாடித்தான் ஆகனும் என்று அடம்பிடித்தான். வேறு வழி ! விளையாடலானார்.
நல்ல வேளை வீட்டு கேட்டருகே ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து அவரது ஒரே மகள், அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தவள் இறங்கினாள்.ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்து விட்டு திரும்புகையில் “ஹை அம்மா வந்தாச்சு “என்று ஓடிச் சென்று அவளது கால்களை கட்டிக் கொண்டது அந்தக் குழந்தை.
“என்னப்பா இந்தவெயில்ல விளையாடுறீங்க? பேரன் கூட விளையாடரது அவ்வளவு இஷ்டமா? “என்று மகள் உஷா சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“நீ வேற, எனக்கும் வெயில்ல விளையாட வேண்டுதல் போலும், உன் பிள்ளை என்ன சும்மா இருக்க விட்டானா? கால் கடுக்க மிச்ச நேரம் விளையாடுறன்.
“அப்பா நீங்களும் என்ன சின்னப் பிள்ளையா? அவன் சொல்றன்டு நீங்களும் விளையாடனுமா? போய் ஓய்வெடுங்கப்பா. ” என்ற மகளிடம் “இல்லம்மா பாவம் புள்ள. அவனுக்கும் போர்ரடிக்காதா? எவ்வளவு நேரம்தான் தனியா இருக்க முடியும்?
அக்காமார் ஸ்கூல் போயிடுறாங்க. நீயும் வேற ஸ்கூல் போய்விடுவ.. உங்கம்மா உடம்புக்கு முடியாம எப்பவுமே வீட்டுக்குள்ள கிடக்கிய.. அவளால கூட இவன் கூட விளையாடவா முடியும். உன் புருஷன் காலைல போனா நைட்ல லேட்டாகித்தான் வீட்டிற்கே வார, நான் சரி அப்பப்ப டைம் கிடைக்கிறப்பதான் அவன் கூட விளையாடுறன். எனக்கும் என் பேரனோடு டைம் செலவழிக்க ஆசைதான். அதான் நான் மறுக்காமல் விளையாடுறன்.” என்று பெரியதொரு விளக்கம் கொடுத்தார்.குழந்தை
குமரன் தாயின் பின்னாலையே உள்ளே சென்றான்.
செல்வராஜ் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய பணக்காரன். நாலைந்து தலைமுறைக்கே சொத்து சேர்த்து வைத்துள்ளார். பிடவைக் கடையே இருபது பிரான்ஞ்சுகள் அவரிடம் உள்ளது. ஒரே பொண்ணுதான் உஷா. அவள் கணிதப் பாட ஆசிரியை. அவளின் கணவர் பெரிய டாக்டர்.
இப்படியிருக்க உஷா உத்தியோகம் பார்க்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. வீட்டில் இருந்து கொண்டே பிள்ளைகளை வளர்க்கலாம். செல்வராஜும் எத்தனையோ முறைகள் மகளிடம் கூறியிருக்கிறார். “உஷாமா நீ எதுக்குமா வேலைக்கு போற? நமக்கிட்ட இல்லாத பணமா? நாலைந்து தலைமுறைக்கே சும்மா இருந்து சாப்பிடலாம். மாப்பிள்ளை வேறு டாக்டர் வேலைல இருக்காரு.. நீ எதுக்குமா உத்தியோகம்
பாக்கணும். பேசாம பசங்கள பாத்துகிட்டு வீட்ல இருந்திடலாம்தானே?”
அப்பா நீங்க இன்னுமா புரியாம பேசுறீங்க? எனக்கு பணமா முக்கியம். நான் பட்டப் படிப்பெல்லாம் படிச்சது அடுப்பங்கரையில கிடக்கவா? இல்ல வீட்ல சும்மா இருக்கவா? சின்னவயசு லட்சியம்பா…! சும்மா இருக்கிறதுக்கு டீச்சராகி நல்லா சேவை செய்யனும். அதில கிடைக்கிற ஊதியம் எனது சொந்த உழைப்பு. நீங்க சம்பாதித்த பணமோ,பரம்பரை சொத்தோ அல்ல. அதில கிடைப்பதை வைத்து இல்லாத பசங்களுக்கு உதவுவது எவ்வளவு இன்பம் தெரியுமா? என்பாள் அவர் அருமை மகள்.
அவர் மகளாச்சே! அவரை மாதிரிதான் யோசிப்பார். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவளாச்சே!
அவளின் நல்ல பண்புகளை தடுத்து நிறுத்த பெற்றவரின் மனசு இடம்கொடுக்குமா? அவரும் அதை ஆதரித்து ஒத்துழைப்பு வழங்கினார். அதனால்தான் அவள் உத்தியோகம் பார்ப்பதில் கவனமாய் இருந்தாள். அவளது மூத்த மகள்கள் இரண்டு பேர்களும் தனியார் ஸ்கூலில்தான் படிக்கிறார்கள். ஆனால் உஷா அரசாங்க ஸ்கூலில் படிப்பிக்கின்றாள். இளையமகன் குமரனுக்கு மூன்று வயதுதான் ஆகின்றது.
எல்லாரும் அவரவர் தேவைகளின் நிமித்தம் காலையில் வெளிக்கிட்டு போன பின்பு குமரன் பாட்டியோடுதான் இருப்பான். வீட்டு வேலைகளுக்கும், குமரனைப் பார்த்துக் கொள்ளவும் இரண்டு வேலைகாரப் பெண்கள் வேறு அவர்கள் வீட்டில் உள்ளார்கள். வீட்டின் கேட்டருகே ஸெக்யூரட்டி ஒருவரும் இருக்கிறார்.
அவர்களோடு குமரனுக்கு விளையாடவா முடியும்? அவர்கள் அவர்களது கடமையை செய்ய வேண்டுமல்லவா! அவனைப் பார்த்துக் கொள்ள வைத்த வேலைக்காரியோடும் விளையாடமாட்டான் அவன். பாட்டியும் அவனுக்கு சரி பட்டுவராது. அக்காமார் பாடசாலை விட்டு வந்த பிறகு சிறிது விளையாடுவான். பெரிய வீட்டுப் பிள்ளை எல்லா வசதிகளும் இருந்தும் அவனோடு நேரம் செலவழிக்க யாருக்கும் அதிகமாக நேரம் தான் பத்தவில்லை. அதனால்தான் செல்வராஜ் தனது ஒரே பேரனுக்காக தன்னால் முடியுமான நேரத்தை செலவழிக்கின்றார். தனது பேரக் குழந்தை குமரனைப் பற்றிய சிந்தனைகளோடு அமர்ந்திருந்த செல்வராஜ் மகள் உஷாவின் குரல் கேட்டு திரும்பினார்.
“அப்பா சாப்பிடலாம் வாங்க.” என்றாள்.
“இல்லம்மா எனக்கு இப்ப பசிக்கல்ல. நீயும் உங்கம்மாவும் சாப்பிடுங்க. நான் என் பேத்தீங்க வந்தபிறகு சாப்பிடுறன். குமரனுக்கு பசிக்குதாக்கும் அவனுக்கு ஊட்டி விடு. ” என்று செல்வராஜ் கூறிக்கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நின்றது. பேத்திகள்தான் வந்திறங்கினார்கள். சிறிது நேரத்தில் எல்லோரும் ஒன்றாகவே பகலுணவை உண்டார்கள்.
வீட்டிலுள்ள அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார் செல்வராஜ். “அப்பா இந்தாங்க காபி “என்று கூறியவாறே உஷா காபியைத் தந்தையிடம் நீட்டினார்.அதை வாங்கிப் பருகியபடியே மகளிடம் பேசலானார். “மக நான் சொன்னத செஞ்சிட்டியா? உங்க ஸ்கூல்ல இருக்குற வரிய குடும்பத்து பிள்ளைங்க பற்றின லிஸ்ட் எடுத்திட்டியா? “
“ஆமாம்பா இதோ இருக்கு. உங்க மேசையில் அப்பவே வச்சிட்டன். நன்றாக கஷ்டப்படுற குடும்பத்தில் இருந்து நாற்பது பிள்ளைகள் இதில இருக்கு ” என்றாள் உஷா.
இது சம்பந்தமான விடயங்களை அப்பாவும் ,பொண்ணும் சில மணிநேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். உஷா ஐந்தாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி கவிதாவைப் பற்றி கூறலானாள். “அப்பா நான் பாடம் எடுக்கும் கிளாஸ் பொண்ணுதான் கவிதா. நல்ல தங்கமான பிள்ள.நன்றாகப் படிக்கும் கெட்டிக்காரப் பொண்ணு.இந்த முறை புலமைபரிசில் பரீட்சையில் இலங்கைக்கே முதலிடம் வரலாம் என எல்லோராலும் நம்பப்படுகிறாள்.ஆனால் வறுமையின் கோரப்பிடியில் தத்தளிக்கின்றது அவள் குடும்பம். வீட்டில் மொத்தம் ஏழு பிள்ளைகள். நான்கு அக்காமார்கள், ஐந்தாவது இவள். கடைக்குட்டி ரெண்டும் தம்பிமார்கள். அம்மா இறந்து போய் இரண்டு வருடமாகிறது. அப்பா கூலிவேலை பார்த்து மிகவும் சிரமத்துடன் தனியாளாக நின்று பிள்ளைகளை வளர்க்கிறார். சொந்த வீடுமில்லை. சிறிய கூலிவீடு. நான்காவது அக்கா எட்டாம் வகுபிலும்,அவளுக்கு அடுத்துள்ள தம்பி மூன்றாம் வகுபிலும் படிக்கின்றார்கள். இளையவன் நமது குமரன்ட வயதுதான் ஆகிறது. மூத்த அக்காமார் மூன்று பேரும் பாடசாலை போவதில்லை. அவர்களுக்கு படிப்பும் சரியாக வராததால் வீட்டில் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்குதுகள். ரொம்ப கஷ்டப்படுதுகள் . நானும் என்னால் ஆன உதவிகளை செய்துள்ளன். அந்தக் குடும்பம் பரம்பரை ஏழைகள். ஏதாவது பெரிசா பாத்து செய்யனும்ப்பா.. ”
“சரி ஓகேமா பார்த்துச் செய்யலாம். நீ சொல்லிட்டல்ல.. அப்பா பாத்துக்குவன் சரியா? அந்த குடும்பத்தை கைத்தூக்கி விடலாம்.” செல்வராஜ் உறுதியாகக் கூறினார்.
உண்மையில் செல்வராஜ் சிறந்த மனிதர். எல்லோரையும் மதித்து சகஜமாக நடத்துபவர். பணம் அவரிடம் எவ்வாறு குவிந்துள்ளதோ அதைவிட மேலதிகமாக குணம் நிறைந்துள்ள மாமனிதர். கொடை வள்ளல். அவர் தான்.. வசிக்கும் ஊரில் உள்ள பாடசாலைகளுக்கு அடிக்கடி உதவுவதோடு, வரியகுடும்பத்து பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து வருடத்திற்கு மூன்று தடவைகள் உதவிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அது சம்பந்தப்பட்ட விடயங்களைத்தான் மகளோடு கருத்துப் பரிமாறிக் கொண்டார்.
மறுநாள் விடிந்தால் வரிய குடும்பத்து பிள்ளைகளுக்கு கொடுப்பதற்குத் தேவையான உணவுப் பொருட்கள், உடுதுணிகள்,கல்வி சம்பந்தமான உபகரணங்கள் பொதி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன. எல்லாம் ஒழுங்காக உள்ளதா? என்று சரிபார்த்தாள் உஷா. அவளும் அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்பது போல் எடுத்துக் காட்டாக விளங்கினாள். உதவிகள் செய்வதில் அவளும் சளைத்தவளில்லை. அவ்வப்போது அவளால் முடிந்த உதவிகளை செய்வாள் எளியவர்களுக்கு!..
காலை முதல் வேலையாக தனது தர்ம பணிகளை முடித்தார் செல்வராஜ். மகளிடம் கூறியதுபோல் கவிதா என்கிற ஏழைச் சிறுமியின் குடும்பத்துக்கு நிலையானதொரு உதவியைச் செய்வதற்கு உத்தேசித்தார். அக்குடும்பத்தைப் பற்றி நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டார். அப்பிள்ளையின் தகப்பன் கணேஷ் பரம்பரை ஏழைகள் வரிசையில் ஐந்தாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர்கள் வாழையடி வாழையாக ஏழை நாடோடிகள். ஊர் மக்களால் ‘பரம்பரை ஏழைகள்’ என்கிற ஏளனப் பெயரால் இன்று வரை அழைக்கப்பட்டு வருகின்றவர்கள்.
செல்வராஜ்ஜின் முப்பாட்டன் ஒருவர் கணேஷனின் ஆரம்ப தலைமுறை பாட்டனோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்திருக்கிறார். அப்போது கூட அவர்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்தவர்கள்தான். இந்த விடயம் செல்வராஜுக்கு புதிதல்ல!.இதை ஒருவர் கூறி தெரிந்து கொண்டாலும் ஒரு முறை இதுபற்றி அவரது அப்பாவும் கூறியிருக்கிறார். செல்வராஜ் அப்பா அதைக்கூறிவிட்டு தான் கணேஷின் பாட்டனோடு ஒன்றாகப் படித்திருப்பதாகவும் கூறியிருப்பது செல்வராஜுக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்தது. இந்த விடயம் ஏற்கனவே தெரிந்திருந்தாலும் மகள் உஷா கூறும் போது இவர்களைப் பற்றிதான் என்பது தெரியாமல் இருந்தது. இப்போது எல்லாம் புரிந்தது.
செல்வராஜ் இரண்டு நாள் கழித்து தன்னை வீட்டில் வந்து சந்திக்குமாறு கணேஷனுக்கு தொலைபேசியில் கூறியிருந்தார்.சொன்ன நாளும் வந்தது. எதற்காக தன்னை அழைத்திருப்பது என்று கூடப் புரியாமல் செல்வராஜின் வீட்டு வாசலில் வந்து நின்றான் கணேஷன். ஸேக்யூரட்டியிடம் தான் வந்திருப்பதாக செல்வராஜ் ஐயாவிடம் கூறும்படி கேட்டுக் கொண்டார்.உள்ளே போனவர் அதே வேகத்தில் வெளியே வந்து கேட்டை திறந்து விட்டார். “ஐயா உங்களை வரச்சொன்னார் “என்று கூறி உள்ளே அழைத்துப் போனார். அவர் பின்னால் அவசரமாக நடந்தார். வீட்டின் உள்ளே காலடி வைக்கும் போதே பெரிய அரண்மனையில் நுழைந்தது போல் உணர்வை ஏற்படுத்தியது. எங்கு பார்த்தாலும் விலையுயர்ந்த கதிரைகள் ஷோபாக்கள், சுவர் அலங்காரங்கள் என்று பிரம்மிக்க வைத்தது. கதவுபோல் திறந்து கொள்ளும் கண்ணாடி ஜன்னல்கள் ஆங்காங்கே காணப்பட்டன. அதை மறைப்பதற்காக கயிர்கள் போன்ற நூல்களால் கையால் உயர்த்தவும், பணிக்கவும் கூடிய திரைச்சீலை. அவனுக்கு இவையெல்லாம் புதுசு. அவன் வாழ்நாளில் கண்டிராத காட்சிகள் என்றே கூறலாம். அவன் வசிக்கும் வீடு இவ்வீட்டின் அறைகளை விடச்சிறியது. அதுவும் கூலிவீடு வேறு!..
ஏக்கப் பெருமூச்சோடு வீட்டை ..இல்லை இல்லை அம்மாளிகையை சுற்றும்முற்றும் நோட்டமிட்டவாறு நின்று கொண்டிருந்தான் கணேஷன். “ஐயா உங்களை உள்ளே வரச்சொன்னார் “என்று ஒரு அறையைக் காட்டி விட்டு போய்விட்டாள் வீட்டு வேலைக்காரப் பெண்.அவ்வறையின் அருகில் சென்று கதவை லேசாகத் தட்டினார்.
“யெஸ் கமிங்”என்றது உள்ளிருந்து வந்த குரல்.
கதவைத் திறந்து கால்களை உள்ளே வைத்தான். கதவு மீண்டும் மூடிக்கொண்டது. ஏசியின் குளிர் அறைமுழுவதும் பரவியிருந்தது. உடல்முழுவதும் ஜில்லென்று குளிர்ந்து விட்டது. பழக்கமில்லாததால் கை, கால்கள் லேசாக நடுங்கியபடி நின்றிருந்தார் கணேஷன்.ஆனாலும் அந்தக் குளிர்மையும் அப்போது இதமாகத்தான் இருந்தது.” உட்காருங்க தம்பி “முன்னாலுள்ள இருக்கையை காண்பித்தார் பெரியவர். தயங்கியபடி நின்றிருந்தார் கணேஷன். “பிளீஸ் தயங்காம உட்காருங்க தம்பி. “என்றார் மீண்டும்…
தயங்கியவாறு உட்கார்ந்தார் கணேஷ். அப்பெரிய மனிதர் முன்னிலையில் தானும் சரிக்குச்சமன் அமர்ந்திருப்பது என்னவோ போலிருந்தது .
“தம்பி ஏதாவது குடிக்கிறீங்களா? கூல்லாக இல்ல ஹொட்டாக “என்று கரிசணையோடு விசாரித்தார்.வேண்டாம் என்று மறுத்த போதும் அவர் விடவில்லை. ஏசியின் குளிரால் அவன் உடல்நிலை படும் அவஸ்தையைப் புரிந்து கொண்டவராய் சூடாக ஸ்ட்ரோங் டீ கப் வரவழைத்தார். கூடவே வடை, பெட்டிஸ், றோல்ஸ், பண் ,வாழைப்பழம் என்று வரவழைத்து அன்போடு உபசரித்தார்.
கணேஷனுக்கு நடப்பது எல்லாம் அதிசயமாகத்தான் இருந்தது. உபசரிப்பு முடிந்ததும் அப்பெரியவர் பேசலானார். “தம்பி கணேஷ் நான் எதற்காக உங்களை வரச்சொன்னன் தெரியுமா? “
“தெரியல்ல ஐயா”என்று தலையை உயர்த்தி அவரை நோக்கி பதிலுரைத்தான்.
“தம்பி நீங்க என்கிட்ட வேலைபார்க்கிறியா? வேலை போட்டு தரட்டுமா? “என்று உரிமையோடு கேட்டார்.
அவனால் பேச வார்த்தைகள் வரவில்லை. சந்தோச மிகுதியால் வார்த்தைகள் தொண்டைக் குழியை அடைத்தது. கண்கள் குளமாகின.
“தம்பி உன் நிலமையெல்லாம் எனக்கு தெரியும். நீங்க மனைவியை இழந்து பிள்ளைகளை வளர்க்க படும் கஸ்டங்களும் தெரியும். உன் குடும்ப விபரம் முழுவதும் எனக்குத் தெரியும். நீங்கள் பரம்பரை பரம்பரையாக உள்ள ஏழைகள் என்பதும் தெரியும். என்பொண்ணுதான் முதல்ல உங்களைப் பற்றி சொன்னாள். பிறகு நானும் சிலரிடம் விசாரித்து அறிந்து கொண்டேன். இதுவரை கூலிவேலை பார்த்து பட்டகஷ்டம் எல்லாம் போதும். நீங்க நன்றாகப் படிச்சிருக்கீங்க! ஆனால் உங்களால படிப்பை தொடர முடியாத சூழ்நிலை. இளம் வயதிலே கூலித்தொழிலை ஆரம்பித்து இன்று வரைக்கும் செய்றீங்க.நான் உங்களுக்கு எனது புடவைக் கடையொன்றில் ஸுபைஸராக வேலை போட்டுத்தாரன். மாதம் எண்பதாயிரம் சம்பளம் தாரன். உங்க உழைப்ப பாரத்து பதவி உயர்வு மற்றும் சம்பளம் அதிகரிப்பு கிடைக்கும்.கூடவே இரண்டு மாடிவீடு, போகவர கார் அதை ஓட்டிச் செல்ல டிரைவர் போன்ற எல்லா வசதிகளையும் செய்து தாரன். இன்றோடு பரம்பரை ஏழைகள் என்கிற ஏளனப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். உங்க பிள்ளைகளும் அந்தப் பெயரை சுமக்கத் தேவையில்லை. பிள்ளைங்கள நன்றாகப் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு ஆளாக்க வேண்டும். நீங்களும் பசங்களும் நன்றாக வாழ வேண்டும். இனி நீங்க பரம்பரை ஏழையில்ல. புரியுதா? தம்பி…” என்று நிறுத்தினார் செல்வராஜ்.
எல்லாவற்றையும் கேட்டும் ஒன்றும் புரியாது நின்றான் கணேஷ். அவனுக்கு நடப்பது எல்லாம் கனவா என்றிருந்தது.
தன்னை ஒரு முறை கிள்ளிப் பார்த்தான். வலித்தது. கனவில்லை நிஜம் என்பது புரிந்தது.
ஒரு கணம் பேசமுடியாமல் அமைதியாக இருந்தான். கண்களில் வெள்ளம் போல் திரண்டு வந்தன கண்ணீர் துளிகள்.
“ரொம்ப நன்றிங்க ஐயா. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியல்ல. இருளாக இருந்த என் வாழ்க்கைல ஒளியேற்றிவிட்டீங்க.நீங்களும்,உங்க குடும்பமும் நல்லா இருக்கனும். நான் உயிர் உள்ளவரை இந்த உதவிய மறக்கமாட்டேன். காலம் பூரா நன்றிக் கடன் பட்டுள்ளன். உஷா டீச்சருக்கும் எனது நன்றியை சொல்லுங்க. ” சொல்லி முடிக்கும் போது அழுதேவிட்டார்.
“சரிப்பா இந்தாங்க வீட்டுச் சாவி.. அப்புறம் கார் சாவியை வேலைக்கு வரும் போது
ஒப்படைக்கிறன். புதிய வீட்டுக்கு அவசரமாக குடிவாங்க. ஒரு வாரத்தில் வீட்டை உன் பெயருக்கு எழுதித்தாரன். ஒரு வாரத்திற்கு பிறகு வேலைக்கு வாங்க தம்பி “என்று கூறி கையில் பணக் கட்டொண்றை வைத்தார்.
“இதில ஒருலட்சம் இருக்கு செலவுக்கு தேவைப்படலாம். இத பசங்களுக்கு கொடுங்க
ஸ்வீட், பழங்கள் இருக்கு “மறுகையில் பார்சல் ஒன்றை கொடுத்தார் செல்வராஜ். “தம்பி உன் சைக்கிள் இங்கிருக்கட்டும் அப்புறம் எடுத்துக்கலாம். என் டிரைவர் காரில் கொண்டு போய்விடுவார்”.என்றவரிடம் விடைபெற்றுச் செல்லுகையில் கூட பலமுறை நன்றிகள் தெரிவித்தார் கணேஷன். வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார் செல்வராஜ். காரில் சென்று கொண்டிருந்த கணேஷனின் உள்ளமதில் அந்தப்பெரியவரான செல்வராஜ் எனும் மாமனிதர் உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டார். மனதினால் தன்னை படச்சவனுக்கு நன்றிகளைத் தெரிவித்தான்.
கணேஷனின் மனத்திரையில் அவன் பிள்ளைகளோடு புது வீட்டில் வாழும் காட்சிகள் வந்து போயின.
கணேஷனுக்கு அப்பெரியவர் செய்த உதவி ஆச்சரியத்தை கொடுக்கவே செய்தது.
ஆனால் செல்வராஜுக்கு இவ்வுதவிகள் ஒன்றும் புதிதல்ல. இதைப் போல் நிறையஏழைகளின் வாழ்க்கையை கைதூக்கி விட்டிருக்கிறார் .
“அப்பா ரொம்ப நன்றி. “என்று கூறியவாறு செல்வராஜ் பக்கத்தில் வந்தாள் மகள்உஷா.அவள் தனது தந்தையை நினைத்து பெருமிதம் அடைந்தாள். “அடப் போம்மா…எதற்கு நன்றி? ஏழைகளுக்கு உதவுவதற்காகத்தான் இறைவன் நமக்கு பணத்தை வாரிக் கொடுத்துள்ளான். இது நமது கடமை என்று கூறிப் புன்னகைத்தார் அந்த நல்லமனிதன். அந்தப் புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருந்தன.
குறிப்பு : உதவிகள் என்பது அப்போதைய தேவைகளை மட்டும் நிறைவேற்றி வைப்பதல்ல. மீண்டும் விழுந்து விடாமல் கைதூக்கி நிறுத்தி விடுவது! அப்படியானவர்களில் செல்வராஜ் போல் உயர்ந்த குணமுள்ளோரும் இருக்கத்தான் செய்கின்றன.
(யாவும் கற்பனை)