அவன் அங்கே, நான் இங்கே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 1,817 
 
 

வசந்தி கேட் அருகிலேயே ரொம்ப நேரம் நின்றிருந்த்தால்,”உள்ளற வாராமே அங்கே ஏன் நின்னுட்டு இருக்கே” என்று அவள் கணவன் ராமநாதன் உரக்க்க் குரல் கொடுத்தார்.

”சும்மா தான் நின்னுகிட்டு இருக்கேன் என்று கூறிக்கொண்டே வசந்தி வீட்டின் உள்ளே வந்தாள். அவள் கணவர் ராமநாதன் ஹாலில் உட்கார்ந்திருந்தார். கையில் செய்தித்தாள். . முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஒரு வரி கூட விடாமல் படிப்பது அவர் இயல்பு. மனைவியின் குணத்துக்கு  நேர்மாறாக  எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாத ஜாலியான நபர். உயர்நிலை பள்ளியின்  தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவியிடம்  மிகவும் அன்பாக இருப்பவர். அவளுக்கு சமையலறையில் கூட மாட உதவி செய்வார். அவர்களுக்கு பசங்க இரண்டு பேர். பொண்ணு நித்யா , பையன் விக்னேஷ்  நித்தியாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி. பையன்  ஐஓசியில் வேலை. கல்யாணம் செய்யற வயசு . அதாவது இருபத்தி ஆறு.

”கேட்டீங்களா விஷயத்தை? நம் பெண் நித்யா அவ மாமியார் மாலதி கிட்டே ரொம்ப கஷ்டப் படுறா. அவளை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”. என்று வசந்தி புலம்பினாள். அவள் மிகவும் உணர்ச்சி வசப்படும் டைப்.

அதைக் கேட்டு சிரித்த ராமநாதன், ”என்னம்மா சொல்றே? அவளுக்கு என்ன கஷ்டம். பிஈ படித்திருக்கிறாள். டிசிஸ் கம்பெனியில் வேலைசெய்கிறாள். மாப்பிள்ளைக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம். அவங்களுக்கு  நாலு வயசில் அழகான சுட்டிப் பயல் ராகுல். மாமனார் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவர் கதைகள் விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் வருகின்றது.  எதில் குறை அவங்களுக்கு?. எல்லாம் நிறைவா தானே இருக்கு.

”நாசமா போச்சு. மாமானார் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.. எப்போதும் ஏதாவது யோசனையில் இருப்பாராம். பிரச்சனை அவரால் அல்ல. எல்லாம் அந்த மாமியாரால்…. ரொம்ப டாமினேடிங் கேரக்டர். அவ சொல்றபடிதான் எல்லாரும் கேட்கணும் என்ன சமையல் என்று அவளிடம் பர்மிஷன் கேட்டு விட்டுத்தான் செய்யணும். மாப்பிள்ளை சரியான அம்மா கோண்டு. மாமனார் எப்போதும் புத்தகமும் கையுமாய் இருப்பார். இல்லா விட்டால் கதை எதாவது எழுதிக் கொண்டிருப்பார். உங்க சம்பந்தி எழுதற கதையிலே பெண்களைப் போற்றி எழுதுவார். வீட்டிலே மருமகளுக்கு எள்ளவும் சுதந்தரம் கிடையாது. இதைச் சொல்லித்தான் நித்யா கண்ணீர் விடறா. எனக்கும் ரொம்ப கஷ்டமாயிருக்கு.

அவ என்ன தனிக் குடித்தனம் வைக்கணும்னு சொல்றாளா?

ஆமாம். மாப்பிள்ளை மோகன்  அதுக்கு ஒப்புக் கொள்ளலை. அம்மா கூடவே இருக்கணும்னு சொல்றார்.

இருந்துட்டு போகட்டுமே. அதனாலே உனக்கு என்ன?

வசந்தி கணவனை முறைத்தாள்.

உனக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நம்ம பையன் விக்னேஷ் ஜாதகம் நிறையப் பேரிடம் கொடுத்து வைச்சிருந்தேன். இன்னைக்கு அது சம்பந்தமா ஒருத்தர் பேசினார். அவர் பெயர் தியாகராஜன். பேங்க்ல வேலை செஞ்சு ரிடையர் ஆனவர். அவர் பொண்ணு ஜாதகம் நம்ம விக்னேஷ் ஜாதகத்தோடு பொருந்தியிருக்காம். போட்டோவை மொபைலிருந்து காண்பித்தார்.

பொண்ணின் போட்டோ பார்த்து திருப்தி அடைந்த வசந்தி ஓகே. பார்க்கிறதுக்கு அழகா இருக்கா.

அவர்கள் எந்த ஊர்?

சொந்த ஊர்  சேலம். ஆனால் இப்போ இருக்கிறது மாம்பலம் சென்னை.  சொந்த ஊரை விட்டு வந்து ரொம்ப நாளாச்சு.

பொண்ணு பேர் என்ன? என்ன பிடிச்சிருக்கா?

பேர் தாரிணி. பிஈ பிடிச்சிருக்கா. சாப்ட்வேர் கம்பெனியான இன்போசிஸ் கம்பெனியில் வேலை.

விக்னேஷ் கிட்டே காண்பித்து அவன் விருப்பத்தைக் கேட்போம் என்றவள், ”விக்னேஷ் இங்கே வா” என்று கூப்பிட்டாள்.

எதுக்கம்மா கூப்பிட்டே என்று வெளியே வந்தவனிடம் ராமநாதன் மொபைலில் இருந்த போட்டோவைக் காண்பித்து பொண்ணு பிடிச்சிருக்கா இன்போசிஸ்பே வேலை செய்யறாங்க” என்று கேட்டார்.

நன்றாக பார்த்து விட்டு,” எனக்கு ஓகே. உங்களுக்கு சரின்னா எனக்கு நோ அப்ஜெச்சன்.”

”அப்படி சொல்லுடா, கண்ணா” என்று வசந்தி சிரித்தாள்.

”உனக்கு ஏதாவது கண்டிஷன் இருக்கா விக்னேஷ் ?” என்று ராமநாதன் கேட்டார்.

”குடும்பத்தை அனுசரிச்சு போகணும் . அது தவிற எனக்கு வேறு எதுவும் நிபந்தனைகள் இல்லையப்பா.”

”வசந்தி நீ என்ன சொல்றே?”

”நா என்ன சொல்றதுக்கு இருக்கு. விக்னேஷ்க்குப் பிடிச்சிருந்தா எனக்குப் போதும்.”

”எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு” என்றார் ராமநாதன்

உங்களுக்கா? என்று கண்கள் விரிய கேட்டாள் வசந்தி

”ஆமாம், கல்யாணம் ஆனப்பிறகு நம்ம சொந்த ஊரான கும்பகோணத்துக்குப்  போயிடலாம். விக்னேஷ் அவன் பெண்டாட்டியோடு இங்கே தனிக் குடித்தனம் நடத்தட்டும். நாம்ப எப்பவாது வந்து பத்து நாள் இருந்துட்டு போகலாம். உன் பெண் ரொம்ப கஷ்டப்படறா என்று அடிக்கடி புலம்புவே. நாம் வேலூரில் இருப்போம்.  உன்னுடைய மருமகள் கஷ்டமில்லாமல் இருக்கட்டும்” என்றார் சிரித்துக்கொண்டே.

என் பையனை விட்டு என்னைப் பிரிக்கிறீங்களே. இது நியாயமா? என்றாள் வசந்தி..

அப்பா என்னப்பா இப்படி பேசறீங்க. இன்னும் பொண்ணே பார்க்கலை. அதுக்கு முன்னாடியே தீர்மானம் செஞ்சா எப்படி.

சரி. வர்ற ஞாயிற்றுக் கிழமை பொண்ணு பார்க்கப் போகலாம். அதுக்கு முன்னாடி நீ சம்மதம் கொடுக்கணும்னு சொன்னார் தன்  மனைவியைப் பார்த்து.

அவளுக்குத் தன் மகனின் மீது அலாதிப் பிரேமை . இருந்தாலும் தன் கணவனின் விருப்பத்துக்கு மாறாக நடக்க அவளுக்கு மனமில்லை.

”எனக்கென்ன நீங்க எங்கே இருக்கீங்களோ எனக்கு அது தான் சொர்க்கம். எனக்குப் பூரண சம்மதம்.”

அவர்கள் போய் பெண் பார்த்தார்கள். பொண்ணை எல்லாருக்கும் குறிப்பா விக்னேஷ்க்கு ரொம்ப பிடித்துப் போய் விட்டது.

அவன் ஓகே சொல்லி விட்டான் கல்யாணம் மிக விமரிசையாக நடந்தது.

திருமணத்துக்கு ராமநாதனின் சம்பந்தியும் அவரது மனைவியும் வந்தார்கள்.

கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்பு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்து விட்டது. சம்பந்தி வீட்டு அம்மா மாடி படிக்கட்டில் தவறி விழுந்து விட்டதால் இடுப்பில் அடிப்பட்டது ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். அவர்கள் கீழே விழுவதை பார்த்துக் கொண்டிருந்த அவங்க வீட்டு வேலைக்காரி உதவிக்கு வராமல், ஒன்று இரண்டு மூன்று …. படிக்கட்டில் புரண்டு விழுவதை எண்ணிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உடனே சீட்டு கிழிந்து விட்டது. சம்பந்தி அம்மாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள்.

கல்யாணத்துக்குச் சம்பந்தி, சம்பந்தி அம்மாளைத் தவிர எல்லாரும் வந்திருந்தார்கள். ராமநாதனின் நெருங்கிய நண்பர்  ஜெயபிரகாசம் தன் மனைவியுடன் கோயம்பத்தூரிலிருந்து வந்திருந்தார். ராமநாதனுடன் ஒன்றாக வேலைப் பார்த்தவர். கோயம்பத்தூரில் இருக்கும் நானா நானி என்னும் சீனியர் சிடிசன் ஹோமில் வசிக்கிறார்.

கல்யாணம் முடிந்ததும் விக்னேஷ் ஊட்டிக்கு ஹனிமூன் போய் விட்டு வந்தான். மருமகள் குடும்பத்தோடு அணுசரித்துப் போனாள். மாமனாரை அப்பா என்றும் மாமியாரை அம்மா என்று கூப்பிட்டு இருவரையும் மகிழ்வித்தாள். . அவளை வசந்திக்கு மிகவும் பிடித்து விட்டது. கிராமத்துக்குப் போக வேண்டாம். எங்க கூடவே இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தாள். ராமநாதன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

நித்யா நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து அம்மாவைப் பார்த்து விட்டுத் தன் மாமியாரைப் பற்றிக் குறை சொல்லி விட்டுப் போவாள். அவள் போனவுடன் வசந்தி தன் கணவரிடம் வருத்தப்பட்டுக் கொள்வாள்.

நாட்கள் வேகமாக ஓடி இரண்டு மாதம் ஆகி விட்டது.

ஒரு அரசன் தன் குதிரையை யாராவது பேச் வைக்க முடியுமா என்று தண்டோரா போட்டு அறிவித்தான். ஒரு சிறை கைதி நான் பேச வைக்கிறேன் என்று கூறி சிறையை விட்டு வெளியே வந்தான். அவன் அரசனிடம், அரசே எனக்கு இரண்டு வருடங்கள் வேண்டும். நான் குதிரையை பேச வைத்து விடுகிறேன் என்றான். அரசனும் அதுக்குச் சம்மதித்தான். கைதி ஒரு குடிலில் தங்கிக் கொண்டு குதிரை பேசப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான். அவனிடம் ஊர் மக்கள், நீ சரியான பைத்தியமா இருக்கிறாயே? குதிரை எங்காவது பேசுமா? நீ தப்பு செய்து விட்டாய் என்றார்கள். அதற்கு அவன்  இரண்டு வருடம் என்பது அதிக காலம். என்ன வேணுமானாலும் நடக்கும். இரண்டு வருடம் கழித்து அரசன் உயிருடன் இருப்பானோ என்பது தெரியாது. ஏன் குதிரையே பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றான்.

இரண்டு வருடம் அதிக காலம்தான். என்னவெல்லாம் நடக்குமென்பது உண்மை. ஆனால் .  இரண்டு மாதத்தில் என்ன என்னமோ நடந்து விட்டன என்பது ஆச்சரியம் !

ராமநாதன் தன் மனைவியுடன் கும்பகோணத்தில்  தன் சொந்த வீட்டில் வசிக்கிறார்.

நித்யாவின் கணவருக்குச் சிங்கப்பூரில் வேலை கிடைத்து அவருடன் நித்யாவும் சிங்கப்பூர் போய் விட்டாள். தன் மகளின் மாமியார் பிரச்சனை நீங்கியதில் வசந்திக்கு மிகவும் சந்தோசம்.

ராமநாதனின் சம்பந்தி சென்னை வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊரான கோயம்பத்தூர் போய் விட்டார்கள்.

விக்னேஷ், தாரிணி இருவரும் சென்னையில் சந்தோஷமா குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர். விக்னேஷ்  அடிக்கடி  தன் தாய் தந்தையுடன் பேசுவான்.

வசந்தி மகனை விட்டு கும்பகோணம் வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக ஆகி விட்டாள். மகள் பேசா விட்டால் கூட அவள் பொருட்படுத்தவில்லை. ஆனால் மகன் ஒரு நாள் பேசாவிட்டால் அவள் நொறுங்கிப் போவாள்.

வசந்திக்குக் கும்பகோணம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாகத் தான் இருந்தாள். தன் மகனை விட்டுப் பிரிந்திருப்பது அவளுக்கு மிக்க வேதனையைக் கொடுத்தது. பத்து நாள் ஆனதும் சென்னைக்குப் போய் மகனை பார்த்துவிட்டு வரவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். ராமநாதன் அதுக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

அவர் கும்பகோணத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் போய் தரிசனம் செய்து விட்டு வருவார். அவர் நேரம்  திருவாசகம், திருப்புகழ்  என்று கழிந்து கொண்டிருந்தது.

பிரியமான மகனை விட்டுப் பிரிந்திருப்பதால் மன அழுத்தம் அதிகம் ஆகி கோபத்தில் கத்துவது, எரிச்சல் ஆவது, ரொம்ப நேரம் புலம்பித் தீர்ப்பது ,உற்சாகம் குன்றி இருப்பது போன்ற மன நிலைகளிலிருந்தாள். போதாதக்குறைக்குத் இளைத்தும் போய் விட்டாள்.

இருக்குமிடத்தை விட்டு வேறு இடத்துக்குப் போய் வந்தால் ஒருவேளை அவள் மனசு நிம்மதி அடையும் என்று நினைத்த  ராமநாதன், கோயம்பத்தூர் போய் நம் சம்பந்தியைப் பார்த்து விட்டு அப்ப்டியே என் நண்பன் ஜெயபிரகாசத்தையும் பார்த்து விட்டு வந்து விடலாம். அவன் ரொம்ப நாட்களாக கூப்பிட்டுக்கொண்டிருக்கான். நானும் வாரேன்னு பல முறை சொல்லி விட்டேன். இப்போது போய் விட்டு வந்து விடலாமென்றார். 

கோயம்புத்தூரில் நானா நானி குடியிருப்பில் நண்பர் ஜெயபிரகாசத்தின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் வீட்டில் சமையல் இல்லை. பொது சமையலில் இருந்து அவருக்குச் சாப்பாடு வந்து விடும். பெருக்குவது துடைப்பது எல்லாம் அதற்குரிய ஆட்கள் வந்து சுத்தம் செய்து விட்டுப் போய் விடுகிறார்கள். அருமையான சாப்பாடு, தூய காற்று, சுவையான நீர்   என்று எல்லாமே பிரமாதமாக இருந்தது. அவரும் ஒரு சுற்றுப் பருமனாகியிருந்தார். ”கொஞ்சம் குண்டாயிட்டிங்களே” என்று அவரிடம் சொல்ல வேண்டி வந்தது. அவர் சிரித்தார்.

அங்கிருந்து  கிளம்பும்போது அவர்  பக்கத்து  வீட்டிலிருந்து வெளி  வந்த நபரைப் பார்த்து ஆச்சரியமடைந்த ராமநாதன், சம்பந்தி நீங்களா…? என்று சந்தோஷத்துடன் கத்தினார். இங்கிருந்து உங்களைப் பார்க்க போக வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தோம். கும்பிடப் போன தெய்வம் எதிரில் வந்தது போல் நீங்கள் வந்து விட்டீர்கள்.

“உங்களைப் பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்க இங்கே வந்து இரண்டு மாசம் ஆகிறது. கதை எழுதுவதில் என் நேரம் செலவழிகிறது. என் மனைவிக்கு ஹெல்த் இஷ்யு இருக்கிறது. அவளால்  நடக்க முடியாது. படுக்கையிலே இருக்கிறாள். இங்கு எல்லா செளகரியங்களும் இருப்பதால்  இங்கு வந்து விட்டோம். உள்ளே வாங்க, என்று இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் சம்பந்தி.

சம்பந்தி அம்மா சாய்ந்தவாறு படுக்கையில் இருந்தார். ”வாங்க வாங்க” என்று அவர்களை வரவேற்றாள்.

”முதுகுத் தண்டில் அடிப்பட்டதால் எழுந்து நடமாட முடியல.நான் இங்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது. இந்த இடம் செடி கொடிகளுடன் ரம்மியமா இருக்கிறது. முக்கியமா அருமையான சாப்பாடு அதனால் இங்கு வசிப்பது மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொல்லி விட்டு ”தன் கணவரிடம் காபி போட்டு எடுத்துட்டு வாங்க” என்று கூறினாள்.  

”காபி எதுவும் வேணாம். இப்போதுதான் ஜெயபிரகாசம் வீட்டில் சாப்பிட்டு வந்தோம். நீங்க இங்கு இருப்பது தெரியாது. தெரிஞ்சிருந்தா உங்க வீட்டிலேயே சாப்பிட்டு இருப்போம். உங்க உடம்பு எப்படி இருக்கிறது?”

”அதுதான் பாக்கறீங்களே. முன்னே விட இப்போ பரவாயில்லை.”

”மாப்பிள்ளை சிங்க்ப்பூர்லே இருக்கிறாரே.. இங்கிருந்து உடனே போய் பார்க்கலாம்னா முடியாதே. விசா, டிக்கெட் புக் பண்ணி போகணுமே?  உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?”  என்றாள்.

சம்பந்தி சிரித்துக் கொண்டே சொன்னார்.

அவளுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் மகனைப் பற்றியே சிந்தனை. காலையிலும் மாலையிலும் மகன் மோகனுடன் மொபைலில் ரொம்ப நேரம் பேசுவாள். மருமகள் நித்யாவிடமும் எப்போதாவது பேசுவாள். வாட்ஸ் அப் இருக்கிறதாலே ரொம்ப செளகரியமாக இருக்கிறது.

சம்பந்தி அம்மா நிமிர்ந்து உட்கார்ந்து கூறினாள்.

சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாற வேண்டும் .  எது கிடைக்கிறதோ அதை வைத்து சந்தோசப் பட வேண்டும். நான் எப்போது வேண்டுமானாலும் என் பையனுடன்  பேசுவேன். நித்யாவையும் என் மகள் மாதிரிதான். அவங்க  சிங்கப்பூரில் இருப்பது எனக்குத் தூரமா தெரியலை. அவன் அங்கே. நான் இங்கே. இருந்தாலும்  பக்கத்திலே இருப்பது போல் தான் இருக்கிறது. அன்புக்குத் தூரம் ஒரு தடையே அல்ல”.

”நீங்கள் சரியாக சொன்னீங்க” என்றாள் வசந்தி தெளிந்த மனதுடன். கணவனின் காதோரம் மெல்லிய குரலில் “நாம் இனி கும்பகோணத்திலேயே இருக்கலாம்” என்றாள் தீர்மானமாக.

ராமநாதன் வியப்போடும்  மகிழ்ச்சியோடும் அவளை நோக்கினார்.  

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *