(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலையில் கண்விழித்தபோதிருந்து அவன் பின்னால் – அவன் பின்னாலா முன்னாலா அல்லது அவனுள்ளிருந்தா – ஏதோ நூலாய் இழுபடுகிறது.
எங்கிருந்தென்று தெளிவாகத் தெரியாவிட்டாலும் அது அவனைச் சூழ, ஒரு புகைத்திரளாய், புகைவளையங்களாய் இழுபட்டுக்கொண்டிருப்பதுபோல…
அது அவனோடு இழுபடுவது அவனுக்கு ஏதோ அசௌகரி யத்தைத் தருவதாய், காலையில் ஆனந்தப் பள்ளிடும் பறவைகளின் கீதத்தோடு அவன் மிதப்பதைத் தடுத்துக் கீழ் இழுக்கும் ஓர் மர்ம விசையாய் நிற்கிறது.
அவனுக்கு அதில் நல்ல பரிச்சயம்.
அவனுக்கு வேலை ஆயிரம் இருந்தபோதிலும் அதை மறந்த வனாய் வீட்டு வாசலில் நின்றவாறே தூரத்தெரியும் வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். இடைக்கிடை கவியும் முகில் திட்டுக்களிடையே விரிந்துகொண்டிருக்கும் வான்பரப்பு.
அவன் நெஞ்சை அது அள்ளுகிறது,
அவன் எங்கெங்கோ காற்றுவெளியில் அள்ளுப்பட்டுச் செல் கிறான்.
அந்நிலையிலும், உயர உயரப் பறக்கும் பட்டத்தின் பின்னால் இழுபடும் கண்ணுக்குத் தெரியாத நூல் இழையாய் அவன் பின்னால் ஏதோ ஒன்றின் உணர்வு இடைக்கிடை தலைகாட்டவே செய்கிறது.
அது அவனுக்கு அவன் கால்களைக் கட்டிப்போடுவது போலவே பட்டது.
அவன் நெஞ்சின் அழுத்தங்கள் எதுவுமின்றி உயர உயரப் பறக்க முனையும் ஒவ்வொருசமயமும் அவன் இறக்கைகள் மேல் சுமை இறங்கிக் கீழ் இழுப்பதுபோல்… இது, அடிக்கடி அவனிடம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தது.
அன்று அவனுக்கு வேலையில்லை. ஆகவே, அவன் வீட்டி லிருந்தான். வழமையாக அவன் அமரும் மேசைக்கு முன்னால் போய் மிக ஆறுதலாக அமர்ந்தான்.
கொஞ்சநேரம் அவன் கையில் இருந்த விலங்குகள் நீக்கப் பட்டவனாய் உணர்ந்தான். வேலை என்பது ஒருவனுக்கு விலங்கா? அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்த விடுதலை உணர்வு கொஞ்சநேரந்தான். அதற்குமேல் அந்தச் சுகம் இருக்க வில்லை. காரணம், அவன் தோள்மேல் ஏதோ ஒரு பாரம் சொல்லிவைத்து இறங்குவதுபோல் அந்தரம். அது, அவன் வேலைப் பழுவைவிடப் பாரமாக இருந்தது. காலையில் அவன் விழித்தபோது நூலாய் இழுபடுவதுபோல்பட்ட அந்த உணர்வு, இப்போ தோளில் சுமையாய் இறங்குவதுபோல் பட்டது.
அவன் இருக்கையை விட்டெழுந்தான்.
அப்படித்தான் அவன் அந்த அழுத்தம் வரும்போதெல்லாம் நடந்துகொள்வான்.
அவன் தன் இருப்பிடத்தை விட்டெழுந்து அங்குமிங்கும் நடக்கத் தொடங்கினான்.
இப்படி அவன் நடந்துகொள்வதில் அவன் மனைவிக்கு நல்ல பரிச்சயம்.
“இப்ப என்னப்பா உயிர்போனமாதிரி யோசிச்செண்டு..?” அவள் எரிச்சலோடு கேட்டாள். அவன் அதற்கு பதில் அளிப்பதாய் இல்லை.
“நீங்க வீட்டில் இருந்தா இப்படித்தான். எதையோ பாரத்தைத் தூக்கித் தலையில் வைச்செண்டு இருக்கிறமாதிரி முழிச்செண்டு…?”
அதற்கும் அவன் எதுவும் சொல்வதாய் இல்லை.
திடீரென எதையோ நினைத்துக்கொண்டவன்போல் தன் மேசையில் அரைகுறையாக வாசித்துவிட்டு வைத்த நாவலை எடுத்துப் படிக்கத் தொடங்கினான். சிறிது நேரம் படித்திருக்க மாட்டான். அவன் கண்களுள் தூக்கம் சுழன்றது. மெல்ல எழுந்து தன் படுக்கையில் போய் விழுந்தான்.
அவன் தலையில் இருந்து பாறாங்கல்லாக அழுத்திய பாரம் அவனைவிட்டு மெல்லமெல்ல அகல, அவன் கண்களைத் தூக்கம் கௌவுகிறது.
ஆனால், ஆழ்துயில் அல்ல. அவன் கனவுலகில் மிதந்தான். அங்கும் அவனைத் தொடர்ந்து கயிறெறியும் அந்த உணர்வு… பாம்புகள் மாதிரி அவன்முன்னே நெளிந்து வளைந்தன.
அவனை வளைத்து, அவனைப் போகவிடாது வட்டமிட்டு நின்றன.
அவன் முதலில் பயப்பட்டான். பிறகு திடீரென வீரியம் கொண்டவனாய் அவனை வளைத்த பாம்புகளைக் காலால் மிதித்துக் கொல்ல முயன்றான்.
ஆனால், அவை அவன் கால்களுக்கு அகப்படாது நெளிந்தன. பின்னர் அவற்றை இரண்டு கைகளாலும் பிடித்து நசிக்க முயன்றான்.
ஆனால், அவை கைக்குள் அகப்படாத இன்மைப் பொருளாய் மாறின. அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது, அவை வெறும் தோற்றங்களென்று. அவன் உற்சாகம் கொண்டு மேலே நடந்தான். திடீரென அவன்முன் நெளிந்த பாம்புகள் இரும்பு வளையங்களாக மாறி அவனைச் சுற்றிவளைத்தன. அவன் இரும்புக்கூடொன்றுக்குள் அகப்பட்டவனாய்த் திகைத்தான். பயம் அவனைத் தாக்கியது. அவன் பயந்தவாறே தன்னைச் சூழ்ந்துநின்ற கம்பிக்கூண்டை உதைத்தான். என்ன ஆச்சரியம்! வெறும் காற்றுவெளியை உதைத் தவனாய் முன்னால் தள்ளப்பட்டான். அந்தக் கம்பிக்கூண்டு வெறுந்தோற்றமே என்பது மீண்டும் உணர்த்தப்பட, அவன் வியந்தான். ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தோடு முன்னேற முயன்றான்.
ஆனால், திடீரென அவன்முன்னே உருளை ஒன்று முளைத் தெழுந்தது!
நெடுஞ்சாலைகளைச் செப்பனிடும் உருளைபோல் அவன் பாதையை மறைத்தெழுந்தது. அதை உருட்டித்தள்ளி அவனால் முன்னேற முடியுமா?
அப்படி அவன் நினைத்தபோது அந்தப் பேருருளை அவனை இடித்துத்தள்ளுவதுபோல் அசைந்து வந்தது. அவன் என்ன செய்வதென்று அறியாது, எப்படி அதிலிருந்து தப்புவது என்று தெரியாது மலைத்து நிற்கையில், அது அவனைக் கீழே தள்ளி நசித்துவிடுவதுபோல் நெருங்கிவிட்டது… ஐயோ…
அவன் திடுக்கிட்டவனாய் விழித்தெழுந்தான்.
அவன் உடல் வேர்த்துக்கொட்டியது.
அவன் எதிலிருந்து தப்ப முயன்றானோ அது, அவன் கனவிலும் அவனைத் தொடர்வதுபோல் பட்டது.
அவனுக்கு இப்போ வரவர, தான் ஏதோ அந்தரத்தில் தொங்குவதுபோல் பட்டது. வேலையில்லாத லீவு நாட்களில் அவன் வீட்டில் இருக்கும்போது யாரோ அவனைக் கட்டித் தொங்கவிட்டதுபோலவும் அவன் அதிலிருந்து விடுபடமுடியாமல் தவிப்பதுபோலவும் அவன் அவஸ்தைப்பட்டான்.
இவ்வேளைகளில் அவன் தனக்கு விருப்பமான இசைப்பாடல் களைக் கேட்டு மகிழ்வான். அல்லது நல்ல இலக்கிய நூல்களையோ, தத்துவ நூல்களையோ வாசித்துத் தன்னை மறப்பான்.
ஆனால், இது எல்லா நேரமும் சாத்தியப்படுவதில்லை.
அந்த நேரங்களில் அவன் ஏதோ பாரவண்டியொன்றைத் தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டிருப்பவன் போன்ற அவஸ்தை.
அதிலிருந்து மீள்வதற்கு அவன் படும் பாடு பரிதாபகரமானதா கவே இருக்கும். எப்பொழுது வேலைநாட்கள் வரும் என்பதுபோல் காத்திருப்பான்.
காலையில் அவன் கண்விழிக்கும் ஒவ்வொருசமயமும் அவன் மனம் எந்தவித விகாரங்களாலும் சூழப்படாது நிர்மலமாய் விரிய அவன் மனம் களிகொண்டு குதிக்கும். ஆனால், கொஞ்சநேரந்தான்.
அதன் பின்னர் அவன் பின்னால் நூலிழையாக இழுபடத் தொடங்கும் ‘அது’ அவனைச் சகஜ நிலையிலிருந்து தள்ளிவிட, அவன் அந்தரப்படத் தொடங்கிவிடுவான். வேலை அவனை அழைக்கும்.
முடுக்கிவிட்ட பொம்மைபோல் சாப்பிட்டது பாதி, சாப்பிடா தது பாதியாக விரைவான். பின்னர் வேலையில் மூழ்கிவிட்டால் எல்லாம் மறந்துபோய்விடும். சாப்பாட்டு இடைவேளை நண்பர் களோடு அரட்டை அடிப்பதில் கழிந்துவிடும். மீண்டும் வேலை யெல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகப்போகிறோம் என்கிற எண்ணம் வரும்போது, காலையில் எழும்போது ஏற்படும் எந்தவித மனவிகாரங்களாலும் பீடிக்கப்படாத ஆனந்தம். அந்த இனிமை யின் வியாபிப்பில் அவன் வீட்டுக்குப் போவதற்காக பஸ்ஸுக்காகக் காத்து நிற்கையில், சொல்லிவைத்தாற்போல் ‘அது’ அவன் பின்னால் இழுபடத் தொடங்கிவிடும். பின்னர் வீடும் நரகமாகிவிடும்.
ஒரு நாள் அவன் வீட்டில் தலையைப் பிய்த்துக்கொள்வது போல் யோசித்துக்கொண்டிருந்தான்.
அவன் மனைவி வழமைபோலவே, “என்னப்பா துவங்கியிற் றீங்களா?” என்று தொணதொணக்கத் தொடங்கினாள்.
அவனும் வழமைபோலவே அவளுக்குப் பதில் அளிக்கவில்லை. அன்று வழமைக்கு மாறான அந்தரம்.
தன்னைச் சூழ்ந்து இறுக்கிக்கொண்டு வருவது போலிருக்கும் இரும்புக்கூண்டை உடைத்தெறிய வேண்டும் போன்ற அந்தரம் அவனுக்குள். காலையில் படுக்கையை விட்டெழுந்தபோது வழமை போலவே அவனோடு இழுபடத்தொடங்கிய ‘அது’ நேரம் செல்லச் செல்ல அவனைச் சூழ்ந்து பேயாட்டம் ஆடத் தொடங்கிற்று. அவனை எங்கும் செல்லவிடாது மறிப்பதுபோல் அதன் விஸ்வ ரூபம். “இதெல்லாம் வெறும் மனக் கற்பிதம்” என்று அவன் அதை உதறிவிட முனையும் ஒவ்வொரு கணமும் அது இன்னும் இன்னும் பூதாகரமாக விரிந்தது.
அவன் கைகள் இரண்டிலும் தலையைத் தொங்கவைத்த வனாய் இருந்த பாணி, நிச்சயமாக பைத்தியம் பிடித்தவன்மாதிரியே தோற்றம் அளித்தது.
அவன் மனைவி பயந்தேவிட்டாள்.
“என்னப்பா உங்களுக்குச் செய்யுது, என்னப்பா உங்களுக்கு?” என்று பதறியவாறு அவள், அவனை உலுக்கினாள்.
அவன் பதிலளிக்காது அவளை ஒருதரம் வெறித்துப் பார்த்து, “என்னைக் குழப்பாதே” என்று கூறிவிட்டு, தான் விட்டுவந்த வெளியில் பார்வையை ஓட்டினான்.
அங்கே அவன் கண்முன் ஒரு பிரமாண்டமான காட்சி விரிந்துகொண்டிருந்தது.
பென்னம் பெரிய கோளம்போல் ஒரு வலை உப்பி ஊதிச் சுழன்றுகொண்டிருந்தது. அதற்குள் எண்ணிறந்த பறவையினம் அடைபட்டுச் சத்தமிட்டவாறு பறந்து திரிகின்றன. ஒன்றை யொன்று புணர்வதும் விடுபடுவதும் தனித்திருப்பதும் ஏகாந்தமாய் இருந்து பாடிக் களிப்பனவாயும் இருந்தன. அவற்றுள் ஏதாவது ஒன்றிரண்டு இடைக்கிடை வலையை அறுத்துக்கொண்டு வெட்ட வெளியில் ஆனந்தமாய்ப் பறந்தன. அவனுள் பரவசம் எழுவது போல் இருந்தது.
அவன் தனக்குள் பெரிதாய்ச் சிரித்தான்.
அவன் மனைவிக்கு வயிற்றில் நெருப்பைக் கொட்டுவதுபோலி ருந்தது.
“இனிமேலும் தாமதிக்கக்கூடாது. ஆளை டொக்டரிட்டை கொண்டுபோய்க் காட்டவேணும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அயலவர்களும் அவளுக்கு அதையே கூறினர்.
கிளினிக் ஒன்றிற்கு அவன் கொண்டுபோகப்பட்டான்.
மனோவியல் மருத்துவ நிபுணரின் அறைக்கு முன்னால் அவனும் அவளும் காத்திருந்தார்கள். மேசை அழைப்புமணிச் சத்தம் கேட்டது. அவர்களை உள்ளே வருமாறு நேர்ஸ் அழைத்தாள்.
அவனும் அவளும் எழுந்து உள்ளே போனார்கள்.
‘சைக்கியாற்றிஸ்ற்’ முகத்தைச் சிறிது கடுமையாக வைத்துக் கொண்டு அவர்களை அமரவைத்தார்.
“உங்களுக்கு ‘அப்பொயின்ற்மென்ற்’ 9.30க்கு. ஆனால், நீங்கள் 10.30க்கு வந்திருக்கிறீர்கள். ஏன் இவ்வளவு லேற்?” டொக்டர் சிறிது கடுகடுப்பாகவே கேட்டார்.
டொக்டரின் கேள்விக்கு மனைவி பதிலளிக்க முன் அவன் தான் பதிலளித்தான்.
“இல்ல டொக்டர், நீங்கள் சொல்வதுபோல் எனக்கு நேரம் ஓடுவதாய் தெரியவில்லை.”
டொக்டர் ஒருமுறை அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
அவன் மனநோயாளி என்பதைப் புரிந்துகொண்டவர்போல், அவன் மனநிலையை மேலும் அறிய விரும்புபவர்போல் அவனிடம் பின்வருமாறு கூறினார்.
“இல்லை உங்கள் நேரத்தைப் பாருங்கள், இப்போ சரியாக 10.40.நீங்கள் கிளினிக்கு வந்தது, 10.30க்கு. ஆகவே, நேரம் ஓடுது. இல்லையா?”
“கடிகாரத்தின் முள் சுற்றினால் நேரம் ஓடுவதாகக் கொள்கிறீர் களா, டொக்டர்?”
“டொக்டர், அவர் இப்படித்தான் கதைப்பேர். அவர் கொஞ்சம் குழம்பியிருக்கிறேர். அதுதான், அவரை நான் உங்களிட்டை கூட்டிக்கொண்டு வந்தேன்.” அவன் மனைவி பதில் அளித்தாள். அதைக்கேட்டு அவன் சிரித்தான்.
“நீங்கள் குறுக்கிடாதீர்கள், அம்மா” என்று அவன் மனைவியை அமைதிப்படுத்திய டொக்டர் அவனைப் பார்த்துக் கேட்டார்:
“அது சரி, நேரம் ஓடுவதாய் தெரியவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்?”
“எனக்கு சும்மா இருக்கும்போது நேரம் ஒடுவதாய் தெரிய வில்லை. என்மேல் சுமையாய் இறங்கி கழுத்தை நெரிக்குது.” அவன் கூறினான்.
“நீங்கள் வேலை செய்கிறீர்களா?”
“ஓம்”
“என்ன வேலை?”
“ஆசிரியர் வேலை”
“அப்போ நீங்கள் வேலை செய்யும்போது, அதாவது நீங்கள் படிப்பிக்கும்போது, நேரம் ஓடுவதுபற்றித் தெரிவதில்லையா?” டொக்டர் ஆர்வமாகக் கேட்டார்.
“அப்போதும் அது ஓடுதோ நிற்கிதோ என்று எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது சும்மா இருக்கும்போது ஏற்படும் சுமையின் அழுத்தம் எனக்கு ஏற்படுவதில்லை.” அவன் தெளிவாகப் பதில் கூறினான்.
டொக்டர் சிறிது யோசித்துவிட்டுக் கூறினார்.
“உங்கள் பிரச்சினை இதுதான். நீங்கள் நேரம்பற்றிய ஒருவித குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்.”
“நேரம் ஓடுவதுபற்றிய பிரக்ஞை உடையவர்களுக்கு நான் குற்றவாளியாக படலாம்.” அவன் பதில் அளித்தான்.
“என்ன சொல்கிறீர்கள்?” அவன் பதிலின் விளக்கத்தை டொக்டரின் கேள்வி கோரியது.
“இல்லை டொக்டர், என்ர வியாதி இல்லை, எங்கட வியாதி என்றுகூடச் சொல்லலாம். எனக்கு நேரம் ஓட மறுத்து சுமையாய் இறங்குது. அதனால், நான் அந்தரப்படுகிறேன். உங்களைப் போன்ற வர்களுக்கு நேரம் வேகமாக ஓடுது. நீங்க அதன் பின்னால் ஓடுறீங்க. அப்படி ஓடுவது உங்களுக்கு அந்தரமாக, அவஸ்தையாக இருப்பதில்லையா?”
“ஏன்?” டொக்டர் அவனைக் கேட்டார்.
“அதனால்தான் நான் நீங்கள் குறித்த அப்பொயின்ற்மென்ற் நேரத்துக்கு வரேல்ல எண்டு கோபப்பட்டீர்கள், இல்லையா?”
டொக்டர் லேசாகச் சிரித்தார்.
“டொக்டர், இவர் இப்படித்தான் கதை சொல்லுவேர். ஆனால், எனக்கெண்டா அவருக்கு ஏதோ வியாதி பிடித்துவிட்டது மாதிரித்தான் தெரியுது.” அவன் மனைவியின் குரலில் ஒருவித பயம் வெளிவந்தது.
“நீங்கள் கொஞ்சம் அமைதியாய் இருங்க” என்று அவன் மனைவியை சாந்தப்படுத்திய டொக்டர், அவன் பக்கம் திரும் பினார்.
“இங்கே பாருங்கள், நீங்கள் நேரத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம். அதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அதைப் பெரிதாக எடுக்க வேண்டாம்.”
“நான் அதுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இருக்கட்டும். ஆனால், நான் இங்கே வந்ததும் அதை என்மேல் அழுத்தியது நீங்கள்தான். அதனால்தான் என்னைக் கண்டித்தீர்கள்?” அவன் சிரித்துக்கொண்டே கூறினான்.
“ஓம், அது வேறானது, நான் நேரத்துக்கு கொடுக்கும் முக்கி யத்துவம் என் வேலை தொடர்பானது.” டொக்டர் விளக்கினார்.
“ஆனால், நான் நேரம்பற்றி பிரஸ்தாபிப்பது இன்னும் ஆழ மானது. அது என் வாழ்க்கை தொடர்பானது” என்று கூறியவன் டொக்டரைப் பார்த்து லேசாகச் சிரித்துக்கொண்டே கூறினான். “நீங்கள் நேரத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் நேரத்தைப் போற்றுகிறது. என்னுடையதோ நேரத்தைக் கடக்க முயல்கிறது. நேரம் இல்லாத இடத்தைத் தேடுகிறது.”
“நேரமில்லாத இடமா?” என்று சிரித்துக்கொண்டு கேட்ட டொக்டர், அவன் மனைவியை ஒருவிதமாகப் பார்த்துவிட்டு, “கொஞ்சம் குழம்பியிருக்கிறார். இந்த மாத்திரைகளை வாங்கிக் கொடுங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறி, பிறிஸ்கிறிப்ஷனை எழுதிக்கொடுத்தார்.
அதை எடுத்த அவன், மனைவியின் கையில் ஒப்படைத்த வாறே டொக்டரைப் பார்த்து, “டொக்டர் இந்த மாத்திரைகள் நேரத்தைப் போற்ற உதவுமா அல்லது நேரத்தைக் கடக்க உதவுமா?” என்று கேட்டுவிட்டு, சிறிது வாய்விட்டுச் சிரித்தான்.
டொக்டருக்கு தான் எழுதிக்கொடுத்த பிறிஸ்கிரிப்ஷன் மாத்திரைகள் தன் தொண்டைக்குள்ளேயே இறங்குவதுபோல் குமட்டல் எடுத்தது.
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.