அவசரப்படாதே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 5,807 
 
 

கண்ணன் முடிவு செய்து விட்டான், இனி இவரிடம் வேலை செய்வது என்பது முடியாத காரியம். என்னைப்போல நாணயஸ்தர்கள் இவருக்கு தேவையில்லை. நாளொரு தினம் இவரை புகழ்ந்து பேசி தன் காரியத்தை சாதித்து கொள்பவர்களுக்குத்தான் இங்கு மரியாதை. என்ன உழைத்து என்ன பயன்? நன்றி இல்லாத முதலாளி.

இன்று முப்பது பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருக்கும் இந்த முதலாளி ஆரம்பத்தில் எப்படி இருந்தார். நானும், என்னோடு இன்னொருவரையும் வைத்துக்கொண்டுதான் இந்த கம்பெனியை ஆரம்பித்தார். அப்பொழுதெல்லாம், நீங்க இரண்டு பேருதான் எனக்கு எல்லாம் என்று அடிக்கொருதரம் சொல்லி வேலை வாங்குவார். கம்பெனி நன்றாக வளர, வளர இவருடைய நடவடிக்கைகளும் மாறி விட்டது. எனக்கு பின்னாடி வந்தவங்க எனக்கு ஜூனியர்னா, நான் தான் இவங்களுக்கு சூப்பர்வைசரா இருக்கணும், ஆனா இவரு இஞ்சீனியரிங் படிச்சவன் சூப்ரவைசரா இருந்தாத்தான் கம்பெனிக்கு நல்லா இருக்கும் அப்படீன்னு ஒருத்தனை கொண்டு வந்தாரு. அவன் படிச்ச் பையன், நான் படிக்காதவந்தான், ஒத்துக்கறேன் அந்த பையன் என்ன பண்ணான்? ஒரே வருசம் தான் நடையை கட்டிட்டான். இவருக்கு நல்லா மூக்கு உடைஞ்சிருக்கும் அப்படீன்னு நினைச்சிருந்தேன், அப்பவும் என்னைய சூப்பர்வைசரா போடலையே, திரும்ப இன்னொரு பையனைத்தான் வேலைக்கு எடுத்தாரு. அப்படி இது வரைக்கும் இருபது இஞ்சீனியருங்க வந்துட்டு போயிட்டு தான் இருக்காங்க. நானும், என்னோட,சேர்ந்து மத்த இருபது பேரும் இன்னும் மாடாட்டம் உழைச்சுட்டுதான் இருக்கோம். எனக்கு இந்த கம்பெனியில இருபத்தி அஞ்சு வருசம் சர்வீஸ் போட்டாச்சு, எல்லாத்துக்கும் சீனியர் டெக்னீசியன் அப்படீங்கற பதவிய மட்டும் கொடுத்துட்டாங்க. சம்பளம் கொஞ்சம் அதிகம் பண்ணிட்டாங்க, ஒத்துக்கறேன், அது மட்டும் போதுமா? நானும் கெளவரமா ஒரு பதவிய சொல்ல வேண்டாமா?

வேற கம்பெனியில இருந்து என்னைய கூப்பிட்டுட்டு தான் இருக்காங்க. அண்ணே நீங்க மட்டும் எங்க கம்பெனிக்கு வாங்க, உங்களை ராசா மாதிரி வச்சுக்குவேன் அப்படீங்கறாங்க, இதெல்லாம் இந்த முதலாளிக்கு தெரியாம இருக்குமா? தெரிஞ்சாலும், இவன் எப்படியும் நம்மை விட்டு போக மாட்டான், நன்றியுள்ள நாய் அப்படீன்னு நினைச்சுட்டு பேசாம இருந்திருப்பாரு. எனக்காவது சூடு வேண்டாமா, இத்தனை வருசம் ஆகியும் இந்த ஆளு கிட்டயே வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்னு.

கண்ணன் இப்படி புலம்பிக்கிட்டு இருக்கறதை கேட்டுகிட்ட இருந்த அவன் வீட்டுக்காரி உடனே பெரிய தத்துவத்தை சொல்ற மாதிரி பேசறா “அவசரப்படாதே” வேணும்னா முதலாளிகிட்ட பேசு, நமக்கு இரண்டு குழந்தைங்க இருக்கு, அவங்க படிப்பு முடிய இன்னும் அஞ்சாறு வருசம் இருக்கு. பாத்து முடிவு எடு அப்படீன்னு. இவளுக்கென்ன? மாசமானா பணம் கொண்டு வந்து கொடுக்கறவன் நான்தான? எவ்வளவு கேவலப்பட்டுகிட்டு வேலை செய்யறேன்னு இவளுக்கு புரியுமா? கண்ணன் மனதுக்குள் புலம்பினான்

அண்ணே வெளியில யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு ! வீட்டுக்காரி கிட்ட பேசிகிட்டு இருந்தவன் சத்தம் கேட்டு வெளிய வந்து எட்டி பார்த்தான்..

அண்ணே என்னை தெரியுதா?

நம்ம ராமசாமிய தெரியாமா இருக்குமா? என்ன விசேசம்? எங்க வீட்டுக்கு வந்திருக்கே.

அண்ணே உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசிட்டு போலாமுன்னு, தயங்கினான்

உள்ளே வா ராமசாமி, எதுவானா தயங்காம சொல்லு, வீட்டுல குழந்தைங்க ஸ்கூலுக்கு போயிடுச்சு, சம்சாரம் மட்டும்தான் இருக்கா, வா உள்ளே.

வந்து உட்கார்ந்தவுடன்,கண்ணன் கண்களால் மனைவிக்கு சாடை காட்ட டீ கொண்டு வர சமையலறைக்கு செல்ல திரும்பியவளை, வேண்டாம் அண்ணீ , இப்பத்தான் டீ குடிச்சுட்டு வந்தேன்.

அண்ணே உங்களை மாதிரி நானும் இருபது வருசத்துக்கு மேல கம்பெனியில உழைச்சுட்டேன், இப்ப வேறோரு கம்பெனிக்கு கூப்பிட்டிருக்காங்க, ஆனா அது திருப்பூருல இருக்கு, அப்புறம், அவங்க நல்லா எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆளுங்க இருந்தா கூப்பிடறாங்க, சம்பளம் இப்ப வாங்கறத விட கூட தர்றாங்களாம், அதுதான் நீங்க வர்ற மாதிரி இருந்தா உங்களை கேட்டுட்டு போலாமுன்னு வந்தேன்.அப்புறம் இன்னொன்னையும் சொன்னாங்க, சொன்னவன் சுற்றி பார்க்கிறான், சொல்லு ராமசாமி, தயங்காம சொல்லு, அவனை தூண்டினான் கண்ணன். ஒண்ணுமில்லை உங்க கம்பெனியில இருந்து இரண்டு மூணு “டிராயிங்க்” கேக்கறாங்க, இப்ப தயாரிச்சு வெளி வந்துச்சில்லை அந்த மோட்டார், அதோட டிராய்ங் கிடைச்சா எவ்வளவு கேட்டாலும் கொடுப்பாங்களாம், நான் சொல்லிட்டேன், அண்ணன் நாணயமானவரு, அந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய மாட்டாரு அப்படீன்னு. இருந்தாலும் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு சொல்லணுமில்லை, பத்து ரூபாயுக்கு மேல கொடுக்கறேன்னு சொன்னாங்க, கண்ணன் மனைவியின் முகத்தை பார்த்தான். அவள் சட்டென ராமசாமி அண்ணே, இவரு யோசிச்சுட்டு சொல்லுவாரு, என்று இவள் சொன்ன தோரணை “இப்ப நடையை கட்டு என்பது மாதிரி இருந்த்து. இதை புரிந்து கொண்டானோ என்னவோ, அப்ப நான் வர்றேண்ணே, அண்ணி வாறேன், விடை பெற்றான்.

கண்ணனின் மனைவி எதுவுமே நடக்காத மாதிரி சரி நீங்க ஷிப்டுக்கு கிளம்புங்க, சொன்னவுடன் கம்பெனிக்கு கிளம்பினாலும், மனதுக்குள் ஒரு குதூகலம் வந்து உட்கார்ந்து கொண்டது.சரியான சந்தர்ப்பம், என்னுடைய உழைப்பை சுரண்டி கொண்டிருக்கும் இந்த முதலாளிக்கு வேட்டு வைக்க போகிறேன். எப்படியும் எல்லா டிராயிங்கும் என்னுடைய பாதுக்காப்புலதான் இருக்குது. அதை என்னுடைய அலமாரியிலதான் வைச்சிருப்பேன், அதுல ஒண்ணை எடுத்து வந்து இவங்கிட்ட கொடுத்தா என்ன குறைஞ்சு போகுது. பத்தாயிரம் பணமும் கிடைக்குது, முதலாளிக்கு நாம தண்டனையும் கொடுத்த மாதிரி இருக்கும். மனசுக்குள் கறுவிக்கொண்டே கம்பெனிக்குள் நுழைந்தான் கண்ணன்..

எடுக்கவேண்டும் என்ற நினைப்பு சுலபமாக இருந்தாலும், அதை எடுக்க பெரும் போராட்டத்தை மனசுக்குள் சந்திக்க வேண்டி இருந்தது. கடைசியில் மதியம் அனைவரும் சாப்பிடும் வேளையில் அலுவலகத்துக்குள் நுழைந்த கண்ணன் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த டிராயிங்க் கட்டுக்குள் ஒரே ஒரு டிராயிங்க்கை மட்டும் எடுத்து உள் சட்டை பைக்குள் வைத்து விட்டான். மாலை வரை தாக்கு பிடித்தால் போதும், வழியில் வாட்ச்மேனை சமாளிக்க வேண்டும், பார்க்கலாம், முடிவு செய்து கொண்டு கம்பெனிக்குள் நுழைந்தான்.

மாலை நாலு மணி இருக்கும், ஊழியர்களூக்கு மெசினில் ஒரு சில வேலைகளை கொடுத்துக்கொண்டிருந்தவனை அலுவலக சிப்பந்தி “முதலாளி கூப்பிடுகிறார்” என்றவுடன் அப்படியே உடல் வேர்த்து விட்டது. கண்டு பிடித்து விட்டார்களா? ஐயோ மானம் மரியாதை எல்லாம் போகப்போகிறதே. மனசுக்குள் “பயம்” என்னும் பேய் வந்து ஆட்ட ஆரம்பித்தது.

நடை பிணமாய் முதலாளியின் அறைக்குள் நுழைந்தான். அங்கு முதலாளியுடன் இன்னும் நான்கைந்து ஆட்கள் இருந்தனர். வா கண்ணா, முதலாளி கூப்பிட்டார், அவர் குரலில் கடுமை எதுவும் தென்படவில்லை, மனதுக்குள் ஒரு தைரியம் வந்த்து. அவர் முன்னால் நின்றான்.

“நம்ம டிராயிங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றியா? இந்த கேள்வி கண்ணன் மனசுக்குள் ஒரு பிரளயத்தை உண்டு பண்ணி விட்டது. திடீரென்று எதற்கு டிராயிங்க் எடுத்து வர சொல்லுகிறார்? நான் ஒன்றை எடுத்து ஒளித்து வைத்தது தெரிந்து விட்டதா? கடவுளே காப்பாற்று, இனிமேல் மனதால் கூட இப்படி ஒரு செயலை செய்ய மாட்டேன்.

கண்ணா ஏன் நின்னுகிட்டு இருக்கே? போய் எடுத்து வா? மீண்டும் முதலாளியின் குரல் அவனை உசுப்ப, அப்படியே நடந்து அலுவலகத்துக்குள் வந்தான். அலமாரியை திறந்து மறைத்து நின்று கொண்டு உள் சட்டையில் வைத்திருந்த டிராயிங்கை வெளியே எடுத்து மற்ற டிராயிங்குக்குள் வைத்து, ஒன்றும் அறியாதவன் போல் அலமாரியை பூட்டி விட்டு முதலாளியிடம் வந்து எல்லா டிராயிங்கையும் அவர் டேபிளின் மேல் வைத்தான்.

பரபரப்பாய் ஒவ்வொன்றாய் பிரித்து தேடியவர், இவன் திருட்டுத்தனமாய் எடுத்து மீண்டும் அந்த கட்டுக்குள் வைத்திருந்த ட்ராயிங்கை கையில் எடுத்தவர் “இதுதான்” ஏன் இப்படி நனைஞ்ச மாதிரி இருக்கு? கேட்டு விட்டு கண்ணனை பார்க்க நான் வரும்போது இது தவறி டேபிள் மேல சிந்தியிருந்த தண்ணி மேல விழுந்துடுச்சு. பொய் சொன்னான்.

பார்த்து செய்ய கூடாதா? சொல்லியவர், அந்த டிராயிங்கை விரித்து எதிரில் உட்கார்ந்தவர்களுக்கு விளக்கி சொல்ல ஆரம்பித்து விட்டார். கண்ணன் அப்படியே நின்று கொண்டிருந்தான். உட்கார் கண்ணா, என்று அலுவலக சிப்பந்தியை கண்காட்ட, அவன் ஒரு நாற்காலியை கொண்டு வந்து போட்டான். கண்ணன் தயக்கத்துடன் அதில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொள்வதை கவனிப்பது போல பாசாங்குதான் செய்ய முடிந்தது, காரணம் மயிரிழையில் அவன் செய்த இழி செயலிலிருந்து தப்பி இருந்த பட படப்பே மனசுக்குள் இன்னும் அடங்காமல் இருந்தது.

பத்து நிமிடங்கள் பேசியிருப்பார்கள், பேசி முடிந்தவுடன் சட்டென எழுந்தார். கண்ணனின் கால்களும் தானாக எழும்பின. எதிரில் இருப்பவர்களிடம் கை குலுக்கி “ஓகே” இவர்தான் மிஸ்டர் கண்ணன் என்று அவனை அறிமுகம் செய்ய, அவர்கள் அவன் கையை பிடித்து குலுக்கினர். கண்ணன் புரியாமல் அவரை பார்க்க “கண்ணா” நாம் இன்னொரு யூனிட் தொடங்க போறோம், அதுக்கு நீதான் முழுக்க முழுக்க பொறுப்பு. அங்க இந்த டிராயிங்க் மெட்டீரியல்தான் முதல்ல தயார் பண்ண போறோம். இவங்க இஞ்சீனியர்ஸ், இனிமேல் இவங்களை நீதான் ஹேண்டில் பண்ண போறே. நாளைக்கு நாம எல்லாரும் அந்த யூனிட்டுக்கு போய் மத்த்தெல்லாம் ஏற்பாடு செய்ய போறோம். நாளைக்கு காலையில, வீட்டுல ரெடியா இரு, நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன். அவர் சொல்லிக்கொண்டே போக கண்ணனின் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

உன் மேல் கொஞ்சம் வருத்தம் உண்டு கண்ணா “இத்தனை வருசமாய் நான் நாசுக்காக சொல்லி காட்டியும் நீ உன் படிப்பை ஓய்வு வேலைகளில் தொடர்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மிடம் வரும் இளைஞர்களை வேலை வாங்கும் அளவுக்கு நமக்கும் அறிவு விருத்தியாயிருக்கும். சரி போனது போகட்டும் உனக்கு கீழ் ஒரு யூனிட்டே வர போகுது, உனது அறிவை வளர்த்துக்கொள்வதும் முக்கியம். புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்.

கண்ணனுக்கு அவன் தவறு எதுவென புரிந்தது அது மட்டுமல்ல,அவன் மனைவியின் வார்த்தை “அவசரப்படாதே” தெய்வ அசீரரியாய் கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *