அழுக்கு நோட்டு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 3,253 
 

கொஞ்சமாய் எண்ணெய் தேய்த்து நீண்ட ஜடையைப் பின்னலிட்டுக் கொண்டாள் மகமூதா. பெரிய பைகளுடன் உள்ளே நுழைந்த மெகரூனுக்கு வேர்த்துப் போய் இருந்தது. முந்தானையை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டே பார்வையை உள்ளே அனுப்பி மனிதர்கள் தென்படுகிறார்களா என்று விலாவத் தொடங்க, எங்கிருந்தோ பேத்தி தண்ணீர் குவளையுடன் வர, மனசு நீரைக் குடிக்காமலேயே குளிர்ந்து போனது.

“அல்ஹம்துலில்லா. என் கல்பே நிறையுது. உனக்கிருக்க இந்த பதவிசு, உன் அம்மாக்காரிக்கு இருக்கான்னு பாரு”தூணில் சாய்ந்து காலை நீட்டிக் கொண்டே கொண்டு வந்த நீரை தொண்டைக் குழியில் சரித்தார்.

காதை கூடத்தில் செலுத்தி இருந்த மகமூதாவுக்கு கோபத்துக்கு பதில் சின்னதாய் சிரிப்புத்தான் முளைத்துக்கொண்டது. அன்பிற்கு புன்னகை மட்டும் அடையாளம் அல்ல.

“என்னம்மா ரேசன்ல எல்லாம் இருந்ததா?”கேட்டபடி கைலியை இறக்கி விட்டுக் கொண்டு முன்னே அமர்ந்த மகனை கண்கள் ஒருநொடி வாஞ்சையாய் வருடினாலும், மறுநொடி வார்த்தைகள் எப்போதும் போல், எடுப்பாக துடிப்பாக வந்து விழுந்தது.

“ம்க்கும்… எல்லாம் இருந்தது, சந்தோசமும் நிம்மதியையும் தவிர. அதெல்லாம் எடை போட முடியாதாம்”அலுப்பாகச் சொன்னாலும், களிப்பாகச் சொன்ன அம்மாவின் முகத்தை சின்ன நிறைவோடு ஆராய்ந்தான் பஷீர்.

ஆற்காட்டில் ஒரு பிரியாணிக் கடையில் மாஸ்டர் வேலை. தினப்படி வருமானம் ஐநூறுக்கு மேல் வந்தது. ஆனாலும் அத்தனையும் வாழ்க்கை பாட்டுக்கும் வத்தைப்பாட்டுக்குமே சரியாக இருந்தது. கடலைச் சுண்ட வைத்து கஷாயம் காய்ச்சும் ஆகப் பெரிய சிரமம் தான் வாழ்க்கைக்கும் வசதிக்குமான தூரத்தை தொடுவதில். அந்த தூரத்தை தொடாமலேயே முடிந்துபோன பலருடைய வரலாறுகள் சட்டைப் பையில் பத்திரமாக இருக்கின்றன.

“நான் போய் வாங்கிட்டு வந்திருப்பனே… நீயேன்மா போய் சிரமப்படற?”கேட்ட மகனை மறுபடியும் வாஞ்சையாய் வருடித் தந்தாள் பார்வையால்.

“இருக்கட்டும் மவனே… ராத்திரி பிரியாணி கடையில வேலை முடிச்சிட்டு வந்து நாலு மணிக்குத்தான் படுத்தே. மறுபடியும் இன்னைக்குப் போகணும். அதுக்குள்ள உன்னை எழுப்பாட்டித் தான் என்ன? அதான் நானே போயிட்டேன்.”

“நான் வர்றேன்னு சொன்னேன். அதுக்கும் வேணாம்ட்டாக.”மகமூதா முக்காட்டை சரி செய்தபடி சொல்ல, மெகரூன் முறைத்த முறையில் கொஞ்சம் நடுக்கமாய்த்தான் இருந்தது.

“அதென்ன வயசுக் கொமரி எங்கே வேணா வர்றேன்னு சொல்றது?”

“நான் ஒண்ணும் வயசுக் கொமரியெல்லாம் இல்லை. ஏழு வயசு புள்ளை கையில இருக்கு”

“இருந்துட்டா பெரிய மனுசி ஆயிட்டீகளோ? போய் ஆத்தா வூட்டுக்கு கிளம்பற சோலியைப் பாரு. என்னத்தை சமைச்சு வச்சிருக்கே? சதா அடுப்பில வேகுறவனுக்கு தயிரை தாளிச்சு வச்சியா? காரம் அதிகம் சேர்த்தாம பச்சை மொளகா கிள்ளிப் போட்டு தானே செய்திருக்க?”

நேத்தும் இதையேதான் சொல்லி இருந்தார் மெகரூன். நாளைக்கும் இதையேதான் சொல்லப் போகிறார் என்பது மகமூதாவுக்கு நன்றாகவே தெரிந்ததால் தலையை குலுக்கியபடி உள்ளே நகர, சுமையின் கணமும், மூப்பின் கணமும் சேர்ந்து லேசாய்த் தடுமாற வைக்க, சுவரில் சாய்ந்து கொண்டார் மெகரூன்.

“முடியல இல்ல… ஏன்மா அவளைத்தான் கூட்டிட்டு போயிருக்கிறது?”என்றான் பஷீர் ஆதங்கமாக. திறந்து பார்த்த கண்களில், ஏதோ ஒரு கவலை அப்பிக் கிடந்தது.

“இல்லத்தா, யோசிச்சு பாரேன். அவ கூடப் பிறந்தவளுகளை புருச மக்கக நல்ல வச்சிருக்கானுக. எந்தக் குறையும் இல்லாம. நம்ம நேரம் நம்பால அம்புட்டு முடியலைன்னாலும், அலைகழிச்சு எதுக்கு நோகடிக்க? வேகாத வெயிலு. பாவம் எதுக்கு நடந்து சிரமப்பட மெல்லிய குரலில் சொன்னாலும் உள்ளுக்குள் துல்லியமாக கேட்டது மகமூதாவுக்கு. மென்மையாக சிரித்துக் கொண்டாள். சிரிக்கும்போதே கண்கள் ஏனோ கலங்கியது. வேலையை முடித்து வெளியில் வந்தாள். புர்கா அணிந்து தலையில் முக்காட்டை ஒதுக்கிக் கொண்டாள்.

“கிளம்பிட்டியா? பாபூவை இட்டுன்னா போறே?” என்றான் பஷீர்.

“வேணாம் வேணாம். அடுத்தமுறை பார்த்துக்கலாம்”- மெகரூன் குரல் கண்டிப்பாய் வந்தது.

“எங்க போனாலும் என் புள்ளையை கையில பிடிச்சுட்டு போக எனக்கு அனுமதி இல்லையா?” ஆதங்கமாய் வார்த்தைகள் தொண்டையில் இருந்து வெடித்துக்கொண்டு வர, முகம் பார்க்காமல் வாசலை வெறித்துக் கொண்டு பேசிய மருமகளை தீர்க்கமாகப் பார்த்தார் மெகரூன்.

“பாப்பு, இந்தா மல்லாட்டை உள்ளே போய் உரிச்சுத் தின்னு”பையில் கைவிட்டு பேத்தி கையில் தந்து உள்ளுக்குள் அனுப்பிவிட்டு கைகளை தரையில் ஊன்றிக் கொண்டு எழுந்து வந்தார். ஏதோ வேகத்தில் ஒரு வார்த்தை விசிறி விட்டாலும், மகமூதாவுக்கு உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொண்டது. பக்கத்தில் வந்து இடுப்பில் கை ஊன்றி, தீக்கங்கு போன்ற கண்களால் உற்றுப் பார்க்க, லேசாய் மிடறு விழுங்கினாள் மகமூதா.

“நீ உன் அத்தா அம்மாவைப் பார்க்கப் போகச் சொல்ல, யாரும் உன்னை பாப்புவை கூட்டிட்டு போக வேணாம்னு சொல்லல. இன்னைக்கு ராணிப்பேட்டை அக்கா, வாலாஜா அக்கா எல்லாரும் வர்றாக இல்ல? உங்க பெரிய அக்கா வூட்டுக்காரன், துபாய் போய் சம்பாதிச்சு வந்துல்ல எல்லாருக்கும் விருந்து வைக்கப் போறான்? இதுல எத்தனை ஆடம்பரம் காட்டுவாங்க? அவங்க துணிமணியும் பவிசும் பார்த்தா, பச்சை மண்ணு ஏங்கிப் போயிடாதா? அங்கே போனால், புள்ளை மனசு சுணங்கிப் போகாதா?

வசதிக்கும் வாழ்கைக்கும் உள்ள தூரம் புரியற வரைக்கும், இதுமாதிரியான இடங்களுக்கு லேப்பு சூப்பா போய்ட்டு வந்தாப் போதும். அதை ஒருதரம் சொன்ன புரிஞ்சுக்கிடணும். வாய்க்கும் மூளைக்கும் தூரம் அதிகம்கிற மாதிரி பேசக் கூடாது அங்கே போய் கண்டுட்டு வந்துட்டு நம்மகிட்ட அது இல்லை, இது இல்லைன்னு பச்சை மண்ணு ஏக்கப்பட்டா என்னத்தை பண்றது?”கண்டிப்பான குரலில் சொல்ல, மகமூதாவின் தலை தன்னால் மேல் கீழாய் ஆடியது.

நியாயம்தான். வியாசர்பாடியில் இருந்த பெரிய அக்கா வசதிக்கும் வனப்புக்கும் குறை இல்லாமல் இருந்தாள், மற்ற இரண்டு பேருக்குமே எந்த குறையும் இல்லை. வசதி வாய்ப்பில் முந்திக்கும், முழங்காலுக்கும் போதாத வாழ்க்கை மகமூதாவுக்கு மட்டும் தான்.

மகமூதாவை நிக்காஹ் பண்ணும் போது ஆற்காட்டு ரோட்டில் கடை வைத்துத்தான் இருந்தான் பஷீர். காசு காய்ப்பாய் காய்த்தது. எல்லாம் மூன்று வருசத்தில் முடிந்து போனது. ரோடு போட அரசாங்கம் கடையை எடுத்துக் கொள்ள, இடத்தோடு சேர்த்து பொழப்பும் போக, இடத்தை விற்ற காசில் வேற இடத்தில் கடை போட, அத்தனையும் நஷ்டத்தில் வந்து தன்னை நிறுத்திக் கொள்ள, மூணு பேரை வேலைக்கு வைத்து தொழில் நடத்தியவன், அவனை வேறிடத்தில் கொண்டு போய் வேலைக்கு நிறுத்தி வைத்திருந்தது.

“ராத்திரிக்குள்ள வந்துடுவ தானே? ராத் தங்கற வேலையெல்லாம் வேணாம். கிளம்பி வந்துடு. கிளம்பறதுக்கு முன்னாடி பஷீர்க்கு போன் பண்ணிச் சொல்லிடு, அவன் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துருவான்.”

“ஆவட்டும் மாமி”

“எதுவும் சொன்னால் கூனிக்க வேணாம். உதவி கேட்கறதுக்கு சந்தர்ப்பம் இருந்தா பாரு. இல்லாட்டி வந்துகிட்டே இரு. எங்கேயும் குறைச்சுக்கிட வேணாம். வெறுங்கையோட போகாத. புள்ளைங்களுக்கு தின்பண்டம் வாங்கிட்டு போ”

“அதெதுக்கு மாமி? அங்கென என்ன கொறை?”

“கொறைன்னாத் தான் வாங்கிப் போவணுமா? நாம யாருக்கும் கொறைஞ்சவுக இல்லைன்னு காட்ட வாங்கிட்டுப் போகணும். பஷீரு, தித்திப்பு வாங்கி தந்து பஸ் ஏத்து விட்டுட்டு வா.”

மெகரூன் சொன்னதும் பஷீர் சட்டை மாட்டிக் கொண்டு வர உள்ளே நகர, மகமூதா மாமியின் ஆளுமையான அதிகாரத்தில் லேசான எரிச்சலோடு முகம் சுணங்கிக் கொண்டு திரும்பி நின்றாள்.

பக்கத்தில் வந்த மெகரூன், சுருக்கு பையைப் பிரித்து கசங்கிப் போன இருநூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்ட, என்ன என்று தெரியாமல் மகமூதா முகம் பார்த்தபடி நின்றாள்.

“எதுக்கு மாமி இதுதெல்லாம்? பஸ்ஸýக்கு காசு இருக்கு”

“கெடக்கட்டும் நீ மவராசிதான். உன் கையில இருந்தா, என்கிட்ட வாங்க மாட்டியோ? வச்சிக்கிடு எதுக்கும். எதுனா அவசரம்னா உதவும்”அழுக்கேறிய ரூபாய்த் தாளை தந்துவிட்டு நகர்ந்தார் மெகரூன்.

வியாசர்பாடி மச்சான் துபாயில் வேலை பார்த்துவிட்டு சம்பாதித்து வந்த காசில், வீடெடுத்துக் கட்டி இருந்தார். நல்ல விசாலமான வீடு. இரண்டு மெத்தை வைத்துக் கட்டி இருந்தார். பிரியாணி ஆளை அசர வைத்துக் கொண்டு இருந்தது. மூன்று அக்காக்களின் பிள்ளைகளும் பளபளப்பாய் உடுத்திக் கொண்டு ஓடியாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனசு பாப்பூவை தொட்டு மீண்டது.

முச்சந்தியிலேயே மூக்கு நறுமணத்தில் நனைய, பாப்புவை அழைத்து வர விடவில்லையே என்று மாமியை மனசுக்குள் வைது தீர்த்தாள்.

இவள் நீட்டிய தித்திப்பை வாங்கி செல்பில் வைத்தார்கள். அதை எடுத்து தின்பார்களா’ என்ற கேள்வி இப்போது மகமூதாவுக்கு தோன்றத்தான் செய்தது.

“உன் மாமியார்க்காரி, புருசன் யாரையும் காணோம். வர வர புள்ளையக்கூட விடமாட்டேங்கிற அந்த கொடுஞ்சூர் கெழவி.”

“அப்படியெல்லாம் இல்லை. அவரு காலையில தான் வேலையில இருந்து வந்தாரு. பாப்புக்கு ரெண்டு நாளா தடுமன்ல சிரமமா இருக்கு. அதான் அவளை வச்சிட்டு மாமி வீட்டில இருந்துட்டாக”என்றாள் சன்னமான குரலில். அதற்கு மேல் யாரும் பெருசாய் விசாரிக்கவில்லை. அக்காமார்கள் மூன்று பேரும் ஆடியோடி அங்கும் இங்கும் அலைய, ஓரமாய் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் மகமூதா.

“கிலோவுக்கு எம்புட்டு” பிரியாணி செய்பவர் அருகில் சென்று விசாரித்துக் கொண்டாள். இப்படி தனியாக பிரியாணி செய்யப் போனால் ஓரளவு காசு பார்க்கலாம். வத்தைப்பாட்டு நினைப்பு வந்தது. ஆயிரம் இருந்தாலும் பஷீர் கைமணம் இவர்களுக்கு எல்லாம் வராது.

“என்ன தொழில் பாசமாக்கும்”உம்மா பக்கத்தில் வந்து கேட்க, அக்காக்கள் சிரித்துக் கொண்டார்கள். மெத்தை வீட்டைப் பார்க்கையில் மனசுக்குள் சின்னதாய் ஏக்கம் எட்டிப் பார்த்தது. ஆற்காட்டு வீட்டை கொஞ்சம் மராமத்து பார்க்க வேண்டும் என்று மனசிற்குள் கணக்கு போட்டுக் கொண்டாள்.

அதுசரி, முன்கை நீண்டால் தானே முழங்கை நீளும்? வருமானத்துக்கே வழியில்லாத வாழ்க்கையில் பகுமானதுக்கு எங்கே போக?

நார்க் கட்டிலை வாசலில் போட அத்தனை பேரும் சுற்றி மொய்த்துக் கொண்டார்கள். மகமூதாவுக்கு உள்ளுக்குள் சின்ன சஞ்சலமாக இருந்தது, எப்படி கேட்பது என்று?

வாப்பா டிம்பர் கடையில் இருந்து ஓய்வுபெற்ற போது, முதலாளி மஸ்தான் பாய் தந்த தொகை கணிசமாக இருந்தது. அதில் இருந்து ஒரு லட்சம் தந்தால், சின்னதாய் இடம் பார்த்து கடை போட்டுக் கொள்ளலாம். இவர்களும் நாலு பேரைப் போல கொஞ்சம் உயிர் பிடித்துக் கொள்ளலாம்.

உச்சியில் இருந்த சூரியன் மெல்ல கீழே சரியத் தொடங்கி இருந்தது. கொஞ்சமாய் திக்கு திசை பார்த்து விசயத்தை சொல்லி முடித்தாள். அத்தனை பேர் கண்களிலும், காசு என்றதும் அனுசரணையே இல்லை

“இதுக்குத்தான் உன்னைய மட்டும் அனுப்பிட்டு அவுக முகம் அத்து அங்கேயே உட்கார்ந்துட்டாகளாக்கும்”உம்மா இளப்பமாய்க் கேட்க, விளக்கம் சொல்ல பிரியமில்லாமல் அமர்ந்திருந்தாள்.

“எங்க வீட்டுல எல்லாம் முன்னேறுனாக. யார் கையை யார் முறிச்சா? எத்தனை நாளைக்கு கட்டுச் சோறு பசியை போக்கும்”என்றாள் மூத்த அக்கா.

“குடுத்துப் பழக்கினா, அடுத்து ஒவ்வொன்னுக்கு நம்ம நினைப்புத்தான் வரும். அந்த மனுசன் ஒரு வெளங்காத மனுசன். கல்யாணம் கட்டின நாள்தொட்டு செழிப்பு இல்லை. இதை குடுத்திட்டா மட்டும் முன்னேறிடப் போறாறாக்கும்”இது இன்னோர் அக்கா.

“அதுசரி நாம எதுக்கு பேசிக்கிட்டு? இது அத்தா கஷ்டப்பட்டு உழைச்சதுக்கு கெடைச்ச காசு. அவரே என்ன செய்யணும்னு முடிவெடுக்கட்டும். நானெல்லாம் இப்படி கூசாம வந்து கேட்க மாட்டேன். உங்க மச்சானும் அப்படித்தான். ஆனா என்ன செய்ய… நம்ம மகமூதா தான் பாவம்”என்று மற்றொரு அக்கா சொல்ல, நிஜமாலுமே மகமூதாவுக்கு அழுகை வந்தது.

அதற்குள் வாசலில் யாரோ வர, இவளுடைய கேள்வியைக் கிடப்பில் போட்டுவிட்டு அத்தனை பேரும் எழுந்து செல்ல அமைதியாக அங்கேயே ஆணியடித்தது போல் அமர்ந்திருந்தாள்.

ரொம்பவே அந்நியத்தனமாய் இருந்தது அந்தச் சூழல். பிரியாணியின் பிசுபிசுத்த மணம் நாசியில் புகுந்து கூசியது. வேலை முடித்துக் கொண்டு ஆம்பூர் பிரியாணிக்காரர் கிளம்ப, வெள்ளை பைக்குள் பிரியாணிக்கு இடையில் சுத்தி வைக்கப்பட்டு இருந்த தித்திப்புகள், துருத்திக் கொண்டு அடையாளம் காட்ட, ஒருகணம் கண்கள் குளமாகிப் போனது

‘காசில்லாதவன் தரும் இனிப்பு கசக்கும்’ என்று அப்போதுதான் புரிந்தது. வருமானத்துக்கு வழி தேடி வந்தவள், அந்த நிமிஷம் தன்மானத்துக்கு நிகரானது எதுவுமில்லை என்று உணர, வேகமாய் எழுந்து கொண்டாள்.

“அட, மகமூதா இருந்துட்டு நாளைக்கு போகலாம். என்ன அவசரம்”

“இல்ல உம்மா… நான் போறேன்”

“இரு பிரியாணி கட்டித் தர்றேன். பாப்பூக்கு கொண்டு போய் குடு.”

“அதெல்லாம் வேணாம். அவ அத்தாதான் நித்தமும் எடுத்துட்டுத் தானே வாராரு”புர்காவை அணிந்து கொண்டு முக்காட்டை சரிசெய்து கொண்டாள். அனிச்சையாய் கண்கள் அலமாரியைத் தொட, அதைச் சரியாய் புரிந்துகொண்ட உம்மா சங்கடமாய் சொன்னார், “உள்ளே எடுத்து வச்சிருப்பாங்க மகமூ. காசு கேட்டியே எதுவும் முடிவு பண்ணாம போறியே… உங்க அத்தா வரட்டும் பேசலாம்”

“முடிவு பண்ணிட்டேன்மா. காசெல்லாம் வேணாம். அல்லா குடுப்பான் எங்களுக்கு”

தெருவில் இறங்கி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். தாயும் மகளும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதான். சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்.

ஏனோ இந்த இரண்டு மணி நேரத்து பயணத்தை இரண்டு நொடிகளில் கடந்து, சிடுசிடுக்கும் மாமியின் முன்னால் நிற்க வேண்டும் என்று மனசு துடித்தது.

அங்கே அதிகாரத்தில் இருந்த அன்பும், இங்கே அன்பில் இருந்த அலட்சியமும் ஒரு சேர புரிய, உள்ளத்தில் ஓர் உருவமில்லாத பேரன்பு உருவாகிக் கொண்டது, அந்த அதிகாரத்தின் மீது. பேரன்பின் முகங்கள் எல்லாம் குளிராக மட்டும் இருக்க வேண்டியதில்லை. சிலநேரம் அவை இதமான கதகதப்பாகவும் இருக்கின்றது.

செம்மண்ணை சுட்டு செங்கலாக்கும் நெருப்பின் பொறுப்பின் மீது மரியாதை வந்தது. பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். நடத்துநர் வந்து பயணச் சீட்டு வாங்கச் சொல்லி கைநீட்ட, பர்ûஸத் திறந்தாள். முட்டிக் கொண்டு அழுக்கு இருநூறு ரூபாய்த்தாள் எட்டிப் பார்த்தது.

– ஜனவரி 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *