தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 9,265 
 

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நூல் வெளியீட்டு விழா நிறைவடைந்தபோது இரவு 10 மணியாகிவிட்டது.

வெக் வெக்கென எட்டு வைத்துப் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். நான் போவதற்கும் பம்மல் செல்லும் கடைசிப் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

எப்பதான் ஒட்டுவார்களோ? எப்பதான் கிழிப்பார்களோ? தெரியாது. பேருந்தின் பின்புறம் முழுவதும் சுவரொட்டியின் கிழிசல்கள்.

அழுகை

தாவிக் குதித்து நுழைந்தேன். அதிசயமாய் சன்னல் ஓரமாக உட்கார இடம் கிடைத்தது. கோடை வெப்பத்தில் உடம்பு கசகசத்துப் போயிருந்தது. பேருந்து ஓடத் தொடங்கியதும் காற்று வீசியது. உடம்புக்கு குளுகுளுவென இதமாக இருந்தது. காற்றின் விரல்கள் தலைமுடியைக் கோதிவிட்டன. ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டது போல நமது நகரப் பேருந்துகளில் உள்ள விளக்குகள் எப்போதும் மங்கலாகவே எரிகிறது. மங்கிய வெளிச்சம் மடியில் கிடந்தது. விழாவில் வாங்கிய புத்தகத்தைப் படிக்கலாமெனத் தோன்றியது. மங்கிய வெளிச்சம் பேருந்து ஓட்டம், வீட்ல போய்ப் படிக்கலாம் என தீர்மானித்தேன். புத்தக அட்டையில் இருந்த பெரியார் படம் மட்டும் பளிச்செனத் தெரிந்தது. கண்கள் சொக்கியது. சுகமான பயணம்.

“”ரெட்டைப் பிள்ளையார் கேட்டதாரு.. எறங்கு சீக்கிரம்…”

இரவு நேரமென்பதால் பம்மல் வந்து சேர்ந்ததே தெரியவில்லை. எங்களுக்குச் சொந்தமான தேனீரகத்தை நோக்கி நடந்தேன். என்னுடைய மூத்த சகோதரரின் கடை அது. எப்போதும் பரபரப்பாக இருக்கும். இரவு 12 மணிவரை கல்லாவில் இருப்பார். இன்று அண்ணன் கல்லாவில் இல்லை. கல்லாவில் இருந்த அந்தோணி என்னைக் கண்டதும் அவசரமாக ஓடி வந்தான். என்னைப் பார்த்தவுடனே எப்போதும் டீ போட்டு நீட்டும் டீ மாஸ்டரும் என்னைக் கண்டதும் ஈரக் கைகளை லுங்கியில் துடைத்துக் கொண்டு என்னருகே ஓடிவந்தார்.

“”சரி, என்னமோ நடந்திருக்கு” என்று தோன்றியது.

“”இப்பதான் வாரியளா? ஊர்லருந்து தந்தி வந்துச்சு. பெரியவர் தவறிப்போயிட்டாகன்னு. எங்கிட்டுப் போயிருக்கியன்னு, யாருக்கும் தெரியல. ரொம்ப நேரமா காத்துக் கிட்டிருந்தாங்க. அப்புறம் பஸ் கிடைக்காதுன்னு கெüம்பிப் போயிட்டாக.. உங்க மகளும் அக்காவும் அண்ணாச்சி கூடப் போயிட்டாங்க. உடனே உங்களை வரச்சொல்லிட்டு எல்லாரும் போயிட்டாக”
நான் நிதானமாக நின்று கொண்டிருந்தேன். மனசு நிகழ்கால எல்லைகளைத் தாண்டி கடந்த கால நினைவுகளில் மிதந்தது. எனக்கு அழுகை வரவில்லை. கவலை மனதைக் கவ்விக் கொண்டது.
“”ஒங்க அண்ணே இங்கனையே
கதறி அழுதுட்டாக…” பக்கத்துக் கடைகாரர் என் கண்களிடம் சொன்னார். நான் அழவில்லை.
அய்யாவிற்கு (அப்பா) அறுபது வயது. மெலிந்த உருவம். எண்பது வயது தோற்றம். என்னை நினைத்துக் கொண்டேதான் உயிர் பிரிந்திருக்கும். அய்யாவும் நானும் தகப்பன் – மகன் எல்லைக் கோடுகளைத் தாண்டி நண்பர்களைப் போல கலந்திருப்போம். போய்க் பார்க்கணும் என்று எண்ணம் இருந்தும், “போகலாம்.. போகலாம்’ என்று கடைசி வரை போகவேயில்லை. படுத்த படுக்கையாகிவிட்டார். நடமாட்டம் இல்லை. அதிக நாள் தாங்காது என தங்கையிடமிருந்து கடிதம் வந்தபோதே போயிருக்கணும். போயிருந்தால் அந்தப் பாட்டுக் கேசட்டையாவது ஒருதடவை போட்டுக் காட்டியிருக்கலாம். கேசட்டை அனுப்பி வைக்கலாமென்றால் ஊரில் யாரிடமும் டேப் ரெக்கார்டர் கிடையாது.

இரவு 12 மணி. திருச்சிவரை செல்லும் திருவள்ளுவர் விரைவுப் பேருந்து தாம்பரத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. நள்ளிரவு. என்னைத் தவிர எல்லாப் பயணிகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். திருச்சி போய் வேறு பேருந்து பிடிக்கணும். நேரத்தோடு புறப்பட்டிருந்தால் ஒரே பேருந்தில் கடலாடி போய் சேர்ந்திருக்கலாம்.

புழுதி மண் நிறைந்த கிராமத்துத் தெருக்களிலும், கூரைகளிலும், நிறுத்தி வைக்கப்பட்ட மாட்டு வண்டிகளிலும், அசைபோட்டுப் படுத்திருக்கும் மாடுகளிலும் நிலவு வெளிச்சம் போர்த்தியிருக்கும், பனியில் செய்த பாய்போல. கடலாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரம். இரவு நேரங்களில் நிலவு வெளிச்சம் நிறைந்த கிராமத்துத் தெருக்களில் நீந்தித் திரிந்த காலம். ஊர்ப் பொது மடத்திலும், தெருவோரங்களிலும் சோம்பல் முறிக்கும் கிராமத்து மனிதர்கள்.

“”ஏம்ப்பா எல்லாரும் பேசாம இருக்கிய, சின்னையாவ ஒரு பாட்டுப் படிக்கச் சொல்லுங்களேன்.. கேப்போம்” புகைந்துகொண்டிருந்த பீடியிலிருந்து குரல் வந்தது.

அய்யா நன்றாகப் பாடுவார்கள். நாட்டுப்புறப் பாடல்கள், சாயல்குடி காளியப்பாபிள்ளை அவர்களின் முத்துராமலிங்கத் தேவர் பாடல்கள், தட்டாப்பாறையில் சின்ன வயதில் பாடிப் பழகிய மார்கழி மாதப் பஜனைப் பாடல்கள் என நன்றாகப் பாடுவார்கள். அடிக்கடி அய்யாவைப் பாடச்சொல்லி ஊர் மக்களுக்குப் பழக்கம்.

விடியற்காலை 4.30 மணி. பேருந்து திருச்சியை நெருங்கியது. அங்கங்கே புள்ளிகளாக மின்விளக்குகள் தெரிந்தன. பேருந்து நிலையத்தில் இறங்கினேன். சிவகங்கை போய் அங்கிருந்து பரமக்குடி போய் பிறகு கடலாடிப் பேருந்தைப் பிடிக்கவேண்டும்.
போன வருடம் சென்னைக்கு வந்து பம்மலில் எங்கள் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தார். அப்போது புதிதாக டேப் ரெக்காருடன் கூடிய ரேடியோ வாங்கியிருந்தேன். நீண்ட நாட்களாக அய்யாவைப் பாடச் சொல்லி கேசட்டில் பதிய வேண்டும் என்ற எண்ணமிருந்தது. “இப்பப் பாடுவாரா?’ என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தது.

சிவகங்கையைப் பேருந்து நெருங்கியபோது காலை 9 மணியாகிவிட்டது. சிவகங்கையிலிருந்து பரமக்குடிக்குச் செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.

“”அப்பல்லாம் ஊரில் நிறைய பாட்டுப் பாடு வீங்களே, அதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இப்பப் பாடமுடியுமா?” அய்யாவிடம் மெதுவாகக் கேட்டேன்.

“”அதுக்கென்ன படிப்பேனே” என்றார்.

கதவு, சன்னல் எல்லாவற்றையும் மூடிவிட்டு ஒரு நாள் முழுவதும் அய்யாவைப் பாடச் சொல்லி ஒலிப்பதிவு செய்தேன்.

மறந்து போன பாடல்களை எல்லாம் நினைவு படுத்திப் பாடினார். உச்சரிப்பும் குரலும் தெளிவாகப் பதிவாகியிருந்தது. அய்யாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. திரும்பத் திரும்ப போடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். ஒவ்வொரு பாடலுக்கும் எப்பப் பாடியது அதன் பின்னணி என ஆர்வமாக என்னிடம் விளக்கம் சொல்லிக் கொள்வார். அந்த கேசட்டை ஊருக்குக் கொண்டு போக அய்யாவுக்கு அவ்வளவு ஆசை. ஆனால் ஊரில் யார் வீட்டிலும் டேப்ரெக்கார்டர் இல்லையே. நான் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். கேசட்டை எடுத்துச் சொல்லும் ஆசையை சென்னையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

பரமக்குடிப் பேருந்து நிலையத்தில் இறங்கும்போது மதியம் 12 ஆகிவிட்டது. ஊர் போய்ச் சேரவேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கியிருந்தது. பசிக்க ஆரம்பித்தது. பேருந்து நிலையத்திலிருந்த கையேந்தி பவனில் இரண்டு புரோட்டா வாங்கிச் சாப்பிட்டேன். கடலாடிப் பேருந்துக்காகக் காத்து நின்றேன்.

சரியாக பிற்பகல் 1 மணிக்குக் கடலாடிப் பேருந்து வந்தது. இப்போது பயணம் சொந்த மாவட்டத்தில் நிகழ்ந்தது. கடலாடியை நோக்கிப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது. ஊர் போய்ச் சேர்ந்ததும் எல்லோரும் கோவென அழுவார்கள். எந்த நிலையிலும் எனக்கு அழுகை என்பதே வந்ததில்லை. ஏனென்று விளக்கம் சொல்லவும் தெரியவில்லை. அய்யாவின் உடலைப் பார்த்தவுடன் அழுகை வருமா? அப்போதும் அழுகை வரவில்லையென்றால்… இந்தக் கவலை ஒரு பக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது.

சென்னையிலிருந்து கிராமத்திற்குச் செல்லும் காலங்களில் வீட்டைவிட்டு நான் வெளியே எங்குமே செல்வதில்லை. தாழ்வாரத்தில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அய்யாவும் நானும் பேசிக்கொண்டிருப்போம். நண்பர்களைப் போலதான் எப்போதும் எங்கள் பேச்சு அமைந்திருக்கும்.
“”தகப்பனும் மகனும் அப்படி என்னத்த பொழுதின்னிக்கும் பேசுறீங்க?” தண்ணீர்க் குடங்களுடன் செல்லும் எங்கள் உறவுக்காரப் பெண்கள் கிண்டலாகச் சொல்லிச் செல்வார்கள்.
இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிய நேசநாட்டுப் படையான இந்திய இராணுவத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியவர். 1945ல் போர் முடிந்ததும் விருப்பம் உள்ளவர்கள் வீட்டிற்குப் போகலாம் என்று அறிவித்தவுடன் அய்யாவும் வேலை வேண்டாமென்று வந்துவிட்டார்.

இராணுவத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்களை என்னிடம் விரிவாகச் சொல்லிக் கொண்டிருப்பார். நேசநாட்டுப் படையினரிடம் சரணடைந்த ஜப்பான் நாட்டு போர் வீரர்களிடம் சைகை மூலம் பேசியது, டின் டின்னாக வரும் மாட்டுக்கறி உணவுகளை உண்ண முடியாமல் தவித்தது (எங்கள் வீட்டில் அய்யா மட்டும் சுத்த சைவம்) தரையில் குழிவெட்டி அதில் பெட்ரோலை ஊற்றி தேனீர் தயாரித்துக் குடித்தது, போர் முகாம்களுக்கு அரிசி கோதுமை ஏற்றிச் செல்லும்போது, சாலைகளில் காத்துக் கிடக்கும் பர்மா நகர மக்களுக்கு அரிசி மூட்டையை யாருக்கும் தெரியாமல் தள்ளிவிட்டுச் செல்வது இந்தியில் பேசக் கற்றுக் கொண்டது என கதை கதையாகச் சொல்லி மகிழ்வார். நானும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
நான் பணியாற்றும் ஆங்கில நிறுவனம், நான் இயக்கும் கம்ப்யூட்டரின் திறன், சென்னை நிகழ்வுகள், கவியரங்கங்களில் பாடிய கவிதைகள், படித்த புத்தகங்கள், அண்ணா, பெரியார், பாரதிதாசன் பற்றி என் பங்கிற்கு நான் அள்ளிவிடுவதை அவ்வளவு ஆர்வமாக கேட்டு மகிழ்வார்.
மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகப் பேருந்து கடலாடிக்குள் நுழைந்தது. பேருந்திலிருந்து இறங்கியவுடனே என்னை ஊருக்கு அழைத்துப்போக இரண்டு உறவுக்காரப் பையன்கள் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். பேருந்து நிலையத்தில் காத்துக் கிடந்திருக்கிறார்கள்.
பனைக்குளம் கிராமத்தை நோக்கி வேக வேகமாக நடந்தோம். நான்கு கிலோ மீட்டர் நடந்துதான் போகவேண்டும்.

“”உங்களுக்காகத்தான் எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க, நீங்க வந்த பிறகுதான் அடக்கம் செய்யணும் என்று எங்களை அனுப்பினார்கள்” என்னை அழைத்துப்போக வந்தவர்கள் சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்து அய்யா இடது காலைச் சாய்த்து இழுத்து இழுத்து நடப்பார்கள். வாத நோய். இப்படி ஆனதற்கு ஊரில் பலரும் சொல்லும் காரணங்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நான் கேட்டிருக்கிறேன்.

எங்களுக்குக் குலதெய்வம் முனியசாமி. அம்மா பிறக்கும்போதே நெற்றியில் கரும்பச்சை நிறத்தில் பொட்டோடு பிறந்தார்கள். அதனால் எங்க ஆச்சி (செல்லமுத்து) முனியசாமிதான் பெண்ணாப் பொறந் திருக்கிறான் என்று முனியம்மாள் என்றே பெயர் வைத்துவிட்டார்களாம்.
இப்படியே பேசிப் பேசி அம்மாவிற்கு முனியன் மீது அளவுக்கு அதிகமாப் பக்தியும் பயமும் ஏற்பட்டு சில நேரங்களில் அருள் வந்துவிடும். முனியசாமியை நினைத்து ஏதேதோ பேசுவார்கள். கிராமத்தில் யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால், “”முனியம்மா ஆச்சிக்கிட்டப் போயி திருநீறு வாங்கிப் பூசு. சரியாப்போயிடும்”என்று கூறுவார்கள்.

அய்யாவிற்கு அம்மாவின் இந்தச் செயல்கள் எல்லாவற்றிலும் உடன்பாடு கிடையாது. ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் வைகாசி விசாகத்திற்குச் சென்று வருவார். ஓரளவிற்கு மூடத்தனங்களுக்கு எதிராகவே இருந்தார் என்பது எனக்கு இப்போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது.

அம்மாவிற்கும் அய்யாவிற்கும் சண்டை நடப்பதற்கு பெரும்பாலும் இந்த முனியசாமிதான் காரணமாக இருந்தார். அய்யாவின் கூடப்பிறந்த மூத்த சகோதரி அடிக்கடி வந்து அய்யாவைத் திட்டுவார்கள்.

“”ஏல சுப்பையா, உனக்கென்ன கோட்டியா, அது பொல்லாத தெய்வம்.. அவளை அப்படியெல்லாம் பேசாதே” எனக் கண்டித்துவிட்டுச் செல்வார்கள்.

முனியசாமி வழங்கிய தண்டனைதான் அய்யாவிற்கு வந்த வாத நோய் என கிராமத்தில் எல்லோரும் உறுதியாக நம்பினார்கள்.

மரத்தினால் செய்யப்பட்ட சாப்பாட்டுத் தட்டு அதற்கு மரவை என்று பெயர். அய்யா மட்டுமே அதில் சாப்பிடுவார். நாங்கள் யாரும் அதை உபயோகப்படுத்தமாட்டோம். காரணம் வீட்டில் அய்யா மட்டுமே சுத்த சைவம். கோழிக்கறி சமைக்கும் நேரங்களில் முதல் ஆளாக இந்த மரவையில் சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு போகும்போது, “”ம்… சாப்பிட்டாச்சு… ஆரம்பிங்க சாவக் கறிய வயித்துக்குத் தின்னுட்டு அப்புறமா ராத்திரிக்கு சாமியாடுங்க” என்று சொல்லிக்கொண்டே காலை இழுத்து இழுத்து நடந்து சென்றுவிடுவார்.
பேய்பிடித்து ஆடுவது, கோடாங்கி அடித்து குறி பார்ப்பது, சகுனங்கள் பார்ப்பது, கிளி ஜோசியம் என கிராமங்களில் செழிப்பாய் இருக்கும் மூட நம்பிக்கைகளை எல்லாம் அய்யா கிண்டல் செய்து பேசுவதை சின்ன வயதில் நான் கேட்டிருக்கிறேன்.

எங்கள் வீட்டு தாழ்வாரம் அகலமாகவும் விசாலமாகவும் இருக்கும். ஓடு போட்ட வீடு பெரியதாக இருக்கும்.

இரவெல்லாம் பேய் விரட்ட உடுக்கடித்த களைப்பில் கோடாங்கி எங்கள் வீட்டு தாழ்வாரத்திற்குத்தான் தூங்குவதற்கு வருவார்.

“”என்ன கோடாங்கி பேயி என்ன சொல்லுது?” அய்யா கேட்பார்

“”ஒரு காட்டுக்கழுத சாமானியமா நகரமாட்டேங்குது.. நாளக்கி அடிச்சு விரட்டிரமாட்டேன்” என்பார் கோடாங்கி.

“”நான் சொல்ற மாதிரி செய்ஞ்சீங்கன்னா ஊர்ல ஒரு பொம்பளைக்கும் பேய்பிடிக்காது. பேய் பிடிச்சவங்க சுண்டுவிரல்ல பாதிய வெட்டி எடுக்கணும் என்று சொல்லிப் பாருங்க. ஒருத்திக்கும் அப்புறம் பேயே பிடிக்காது” என்பார் அய்யா.
“”நல்ல யோசனைதான். ஆனா சுப்பையாபிள்ளை உமக்கு இந்த நக்கல்தானே போகமாட்டேங்குது?” என்று சிரிப்பார் கோடாங்கி.
ஊரை நெருங்கிவிட்டேன். கொட்டுச் சத்தம் கேட்கிறது. ஊருக்குள் நுழைகிறேன். பந்தல் போட்டு ஒரே பரபரப்பாக இருக்கிறது. என்னைக் கண்டதும் அம்மாவும் தங்கைகளும் ஓவெனக் கட்டிப் பிடித்து அழத் தொடங்கினார்கள். “”நீ வந்திட்டியா வந்திட் டியான்னு கேட்டுக்கொண்டே சீவன் போயிருச்சுடா” என்று அம்மா சொல்லி அழும் போதுகூட எனக்கு அழுகையே வரவில்லை. சும்மா கண்களைக் கசக்கினேன். முகத்தில் கண்ணாடி கையில் புத்தகம் என நாற்காலியில் அய்யாவை உட்கார வைத்திருந்தார்கள்.

எங்கள் கிராமப் பஞ்சாயத்திற்கு தேர்தலே நடக்காது. ஆலங்குளம் ம.இ.சு.இராமசாமித்தேவர்தான் ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்துத் தலைவர். அய்யாதான் துணைத்தலைவர். அதோடு பஞ்சாயத்துக் கணக்கர் வேலையும் அவரே செய்வார். கடிதங்கள் எழுதிக் கொடுப்பது, விதை வாங்க, உரம் வாங்க கடன் பெற ஏற்பாடு செய்வது, தெருவிளக்கு அமைப்பது போன்றவற்றை அய்யா செய்துகொடுப்பார். வயல்காடுகளுக்குப் போகவேமாட்டார். வாத நோயும் அதற்கு காரணம். அம்மாதான் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

கடலாடி ஒன்றியத்திலிருந்து வரும் அரசு சிப்பந்திகள், காவல்துறையினர், கிராமசேவகர்கள் என யார் ஊருக்குள் நுழைந்தாலும், “”சுப்பையாபிள்ளை வீடு எங்கேயிருக்கிறது?” என்றுதான் முதலில் கேட்பார்கள்.

இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்தன. மறு நாள் காலை வீடு அமைதியாக இருந்தது. இன்னும் ஒரு சிலர் அழுதுகொண்டிருந்தார்கள். பகல் நேரமாக இருந்தாலும் வீடு வெளிச்சமின்றி கொஞ்சம் நிழல் இருட்டாகவே இருந்தது. சுவரில் மாட்டியிருந்த அந்தக் காலத்துப் புகைப்படங்களை ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போதெல்லாம் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும். பழைய நினைவுகள் மலரும். அருகே, சுவரில் இருந்த ஒரு சின்ன ஜன்னல் கண்ணில் பட்டது. அதனருகே கடிகாரம் வைப்பதற்கான மரத்தாங்கி. கடிகாரம் கிடையாது. ஜன்னல் முழுக்க மண்ணெண்ணெய் விளக்கு, தீப்பெட்டி, காலி பவுடர் டப்பா, முக்கோண வடிவத்தில் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி, ஓலைக் கொட்டான், தீர்ந்து போன மருந்துப் புட்டிகள் என பொருட்கள் கிடந்தது. இந்தப் பொருட்களுக்கு நடுவே ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். அது அய்யா எனக்கு எழுதிய கடிதம். இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில்தான் அஞ்சலகம் உள்ளது. எப்போதாவது கடிதம் கொண்டுவரும் அஞ்சலக ஊழியரிடம் கொடுத்தனுப்புவார்கள். இந்தக் கடிதத்தை யாரிடம் கொடுத்து அஞ்சிலடச் சொன்னாரோ தெரியவில்லை. கடிதத்தில் உள்ள தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட கடிதம் என அறிவித்தது. அஞ்சலிடப்படாமல் அங்கேயே விடப்பட்டிருந்தது.
என்னதான் எழுதியிருக்கிறார் என்று அறிய மனம் ஆவல் கொண்டது. வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் கொண்டு வந்து படித்தேன்:

அன்புள்ள மகனுக்கு உனதன்பை என்றும் மறவாத அய்யா எழுதிய கடிதம்.
எனக்கு உடல் நிலை மோசமாகி வருகிறது. நீ அவசியம் ஒரு முறை வந்து அய்யாவைப் பார்த்துவிட்டுப் போக வேண்டும். அந்தப் பாட்டுக் கேசட்டை மறுபடியும் போட்டுக் கேக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது. நம்ம ஊரு பள்ளிக்கொடத்து வாத்தியார் வீட்டில் டேப் பெட்டி வாங்கியிருக்கிறார்கள். அம்பத்தூர் அய்யம்பிள்ளை நம்ம ஊருக்கு வருவதாகச் சொன்னாங்க. அவரிடம் அந்தக் கேசட்டை மட்டும் கொடுத்துவிட்டீன்னா அய்யா ஒரு முறை கேட்டு திருப்தியடைவேன். மறக்காம கொடுத்தனுப்பு… அய்யா உடல் நிலை மோசமாகி விட்டது. ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன். நான் படிச்ச பாட்ட ஒருதடவை கேக்கணும்னு ஆசையா இருக்கிறது….
இப்படிக்கு,
சங்கரசுப்புபிள்ளை,
10-4-1985 பனைக்குளம்

கடிதம் படித்து முடித்தவுடன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அடக்கவே முடியவில்லை. நான் தேம்பித் தேம்பி அழுதேன். ய்

– பம்மல் பூங்கணியன் (ஆகஸ்ட் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *