கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2022
பார்வையிட்டோர்: 4,033 
 
 

“பார்த்தவுடனே டெலீட் பண்ணிடணும். ”

“பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்!”

மௌனம். அந்த டிஎம்மின் (Direct Message) மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவை பார்த்து வரலாம். அவள் அப்ஸ‌ரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம்.ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸ‌ரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான்.

ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இன்னும் உருப்படியாய் ஜாவாவில் பேலிண்ட்ரோம் நிரல் எழுதத் தெரியாது; எழுதத்தெரியாது என்பதும் தெரியாது. ஆனால், இன்றைய தேதிக்கு ட்விட்டரில் அவளை இருபதாயிரத்துச் சொச்சம் பேர் தொடர்கிறார்கள். அவள் ட்வீட் நூறு ரீட்வீட் ஆவது சர்வசாதாரணம்.

அதாவது ப்ரியாவை இருநூறு பேருக்கும், அப்ஸராவை இருபதாயிரம் பேருக்கும் தெரியும். அதனால் அவளுக்குமே ப்ரியாவை விட அப்ஸராவைப் பிடிக்கும். நிஜத்தைவிட பிம்பங்கள் கொண்டாட்ட‌த்துக்குரியவை! ட்விட்டர் கணக்கு தொடங்கி, தீபிகா படுகோன் டிபி வைத்து, “நண்பர்களுக்கு உண்டு மரணம், நட்பிற்கில்லை” என்ற ரீதியில் சில தத்துவங்களை அவள் எழுதிய‌போது அவ்வளவாய் யாரும் கண்டுகொள்ளவில்லை.

பிறகு ‘வலைபாயுதே’வில் ஒரு ட்வீட் வந்தபோது புதிதாய் ஆயிரம் பேர் பின்தொடர்ந்தார்கள். ஒரு சுபதினத்தில் சட்டென முடிவெடுத்து தன் நிஜப்புகைப்படத்தை டிபியாய் வைத்தாள். அன்றிலிருந்து தினம் ஐம்பது பேர் புதிதாய் பின்தொடர்கிறார்கள். தன்னுடைய‌ புகைப்படம் பார்த்துத்தான் பின்தொடர்கிறார்கள் என்பது புரிந்தாலும் தன் கருத்தை நோக்கி ஈர்க்கவே புகைப்படம் பயன்படுகிறது, அப்படி வந்தவர்கள் தன் எழுத்துக்காகவே தொடர்கிறார்கள், ரீட்வீட் செய்கிறார்கள், மென்ஷன் இடுகிறார்கள் எனச் சுய‌சமாதானம் செய்துகொண்டாள்.

இன்னமும் தத்துவங்களைக் கைவிடுவதாய் இல்லை. அதோடு மாதமொரு புது டிபி!அவன் வருண். ட்விட்டரில் நடிகர் சத்யராஜ் டிபியோடு ‘தகடு தகடு’ என்ற பெயரில் இருக்கிறான். அவ்வளவுதான் அவளுக்கும் தெரியும். ஆறு மாதத்திற்கு முன் அவள் சொந்த டிபி படம் வைத்த மறுநாள் டிஎம்மில் “ஹாய், ஹவ் ஆர் யூ?” என்ற பீடிகை எல்லாம் இல்லாமல் “பேருக்கேத்த படம்” என வருண் ஒற்றை வரி அனுப்பியபோது ப்ரியாவுக்கு ஜிலீர் என்றிருந்தது. அதை எப்படி எதிர்கொள்வதெனப் புரியாமல் தடுமாறிப் பின் வேண்டுமென்றே அரை நாள் தாமதித்து “தேங்க்ஸ்” அனுப்பினாள்.

அவள் பன்னிரண்டாவது வரை படித்தது பெண்கள் பள்ளி யில். கல்லூரியில் ஆண்கள் பெண்களோடு பேசத்தடை. மீறினால் பெற்றோர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு “இனி இது போல் நடக்காது” என்ற உறுதிமொழியில் கையெழுத்துப் போட வேண்டும்.இந்தப் பின்புலத்தில்தான் உரிமை எடுத்துக்கொண்ட‌ வருண் அத்தனை இனித்தான்!வருண் தன் அப்பாவின் பிறந்த நாளன்று அவருடன் இருக்கும் படம் பகிர்ந்தபோது ரீட்வீட் செய்து மனதார வாழ்த்தினாள். அன்று வருண் ஐடி கொஞ்சம் பிரபலமானது!

பிறகு போடும் ட்வீட் குறித்து எப்போதாவது பேசினார்கள். பிறகு தினம் ஒரு முறை ஏதேனும் சாக்கு வைத்துப் பேசினார்கள். பிறகு குட்மார்னிங், குட்நைட், சாப்டாச்சா.நிறையச் சிரிக்க வைத்தான்; வெட்கப்பட வைத்தான். பரஸ்பரம் தேடிக் கொண்டனர். வாங்க போங்க தேய்ந்து, வா போ என மாறி, பின் வாடா போடி என்றாகி விட்டது.கல்லூரிப்படிப்பு முடித்தவுடன் பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்து விடுவது அவர்கள் சாதி வழக்கம். அவ்வளவு நம்பிக்கை! ப்ரியதர்ஷினிக்கு அதில் மறுப்பேதும் இருக்கவில்லை. சங்கத்தில் ஜாதகம் கொடுத்து சம்பள எதிர்பார்ப்பு போன்றவற்றை அடிக்கோடிட்டார்கள். ஒரே மகளுக்கு எழுபது பவுன் சேர்த்து வைத்திருந்தார்கள்.

மாப்பிள்ளை பார்ப்பதை தகவலாக மட்டும் அவனிடம் பதிந்து கடந்தாள். வருணும் பெரிதாய்ப் பொருட்படுத்தவில்லை. அன்றுதான் ஊமை மந்திரி ஜோக் சொன்னான்.ராதிகா ஆப்தேவின் செல்ஃபி கசிந்து பரபரப்பானபோது லிங்க் தேடிக் கிடைக்காமல் வருணிடம் தயங்கித் தயங்கிக் கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு அங்கலாய்த்தாள்.

“ச்சை, எப்படித்தான் இப்படி எல்லாம் எடுக்கறாளுகளோ!”

“ஏன், நீ எல்லாம் எடுக்க மாட்டியா?”

“டேய், பொறுக்கி. நல்ல குடும்பத்துப் பொண்ணுக இதெல்லாம் செய்வாங்களா?”

“ஏய், இதில் என்ன தப்பு இருக்கு? உன்னை நீ கண்ணாடில பார்க்கறதில்லையா? காலைல குளிச்சி முடிச்சிட்டு வந்து? ஈவ்னிங் வந்து ட்ரஸ் சேஞ்ச் பண்றப்ப?”

“ம்ம்ம்…”

அவ்வப்போது செல்ஃபி பற்றிய பேச்சு வந்தது – சில முறை அவளே தொடங்கியது.

“இதெல்லாம் இன்னும் கொஞ்ச காலம்தான். உன் அழகு உச்சத்திலிருக்கும் கணங்கள் இவை. ஆன்ட்டி ஆகிட்டேன்னா நீயா ஆசைப்பட்டு எடுத்தாலும் பார்க்க சகிக்காது!”

“எப்பவும் அதே நெனப்புதான்டா உனக்கு!”

“ஏய், நான் பார்க்கவா எடுக்கச் சொல்றேன். இஷ்டமிருந்தா எடு, இல்லன்னா போ…”

“தப்பில்லையா?”

“ம்ஹூம். எடுக்காம இருக்கறதுதான் தப்பு. உம்மாச்சி கண்ணைக் குத்திரும்…”

எடுத்துப் பார்த்துவிட்டு அழித்து விடும்படி ஊக்கப்படுத்தினான். அவன் மூன்றாம் முறை சொன்ன நள்ளிரவின் மறுநாள் காலை குளித்து முடித்து வந்த பின் அறைக் கதவைத் தாழிட்டு பூத்துவாலையில் உடம்பீரம் ஒத்தி எடுத்த பின் கண்ணாடியில் ஒத்திகை பார்த்து விட்டு தன் வாழ்வின் முதல் டாப்லெஸ் செல்ஃபியை எடுத்தாள்.பார்த்து வெட்கப்பட்டாள். சந்தேகமில்லாமல் தான் ஒரு பேரழகி என்று எண்ணம் எழுந்தது. ராதிகா ஆப்தேவைவிடவும் என்று அடுத்துத் தோன்றியபோது மறுபடி வெட்கப்பட்டாள். மறக்காமல் அழித்தாள். மறக்காமல் அவனிடம் சொன்னாள்.

“எனக்குப் பார்க்கணும்னு இல்லப்பா. ஆனா, நீயா அனுப்பினா மறுக்க மாட்டேன்…” கண்ணடிக்கும் ஸ்மைலி அனுப்பினான். அவன் அப்படிக்கேட்டது பிடித்திருந்தது. அடுத்த இரு மாதங்களுக்கு செல்ஃபி எடுத்தும் அழித்தும் மட்டும் கொண்டிருந்தாள். தவறாமல் அதைப்பற்றி பேச்சுவாக்கில் அவனிடம் சொல்லிச் சீண்டவும் செய்தாள்.முதலில் விட்டுப்பிடித்தவன் ஒரு கட்டத்தில் கெஞ்சத் தொடங்கி இருந்தான். அதை ரசித்தபடி அவள் நாட்களைக் கடத்திய வேளையில்தான் அடுத்த அஸ்திரம் வந்தது.

“அப்ப என் மேல நம்பிக்கை இல்லையாடி?”

“அப்படி இல்லடா. சொல்லப்போனா என் மேலதான் எனக்கு நம்பிக்கை இல்லை…”அஸ்திரம் வேலை செய்தது. குற்றவுணர்வு மேலோங்க அவனுக்கு செல்ஃபி அனுப்பத் தீர்மானித்தாள். பார்த்தவுடன் அழித்துவிட வேண்டும் என வெவ்வேறு சொற்களில் இருபது முறைக்கு மேல் சொல்லி விட்டாள். நிற்க. டிஎம் மௌனம் உடைபடுகிறது.சில நொடிகள் டிஎம்மில் டைப்பிங் சிம்பல் காட்டிய பின் செல்ஃபி வந்து விழுந்தது.

“ப்பா! ரெண்டும் கண்ணைக் குத்துது!”

“டேய்ய்ய்!”

“தினம் பாலில் குளிப்பியாடி?”

“போடா!”

“சான்சே இல்ல!”

“யாருமே என்னை இப்படிப் பார்த்ததில்ல. என் அம்மா கூட. நீதான் முதல்!”

“நான் மட்டும் என்ன? யாரையுமே நானும் இப்படிப் பார்த்ததில்லையாக்கும்…”

“புளுகாதே. தினம் பாக்கற சீன் படத்துல எட்டு கெஜம் புடவை சுத்திட்டா வர்றாளுக?”

“இன்சல்ட் பண்ணாதே. அதுவும் இதுவும் ஒண்ணாடி? நீ ஃப்ரெஷ் பீஸ் ஆச்சே!”

“ச்சீய்…”

தொடர்ந்தார்கள். தோய்ந்தார்கள். நான்காம் தலைமுறை அலைக்கற்றை நாணியது.தவறியும் எத்தருணத்திலும் காதல் என்ற சொல் அவர்களுக்குள் இடம்பெறவில்லை. தெளிந்த இத்தலைமுறையின் பிரதிநிதிகளாய்த் தம்மைக் கருதிக் கொண்டார்கள்.ப்ரியதர்ஷினிக்கு கல்யாணம் நிச்சயமானது. “இனி இதெல்லாம் தப்பு. இதுதான் கடைசி! சரியா?” என்று சொல்லி அதையும் செல்ஃபியுடன்தான் கொண்டாடினர்.

மாப்பிள்ளைக்கு பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் லட்சம் ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை. ரிசப்ஷனில் போட‌ பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கோட் வாங்கியபின், எட்டு பவுனில் தாலி செய்ய ஆர்டர் கொடுத்த பின், பரூஃப் பார்த்த பத்திரிகை அச்சுக்குப்போன மறுநாள்-கல்யாணத்துக்குச் சரியாய் மூன்று வாரம் இருக்கையில் – எல்லாவற்றையும் நிறுத்துமாறு மாப்பிள்ளை வீட்டில் சொன்னார்கள்.

நெஞ்சைப் பிடித்தபடி ப்ரியாவின் அப்பா காரணம் கேட்டார். வாட்ஸ் அப் பார்க்கச் சொன்னார்கள். திறந்து பார்த்து கட்டுவிரியன் கொத்தியதுபோல் அதிர்ச்சியுற்றார்.அது ப்ரியதர்ஷினியின் செல்ஃபி. டாப்லெஸ் செல்ஃபி. மாப்பிள்ளை தன் பள்ளி நண்பர்களுடனான வாட்ஸ் அப் குழுவில், தான் திருமணம் செய்யப் போகும் பெண் என்று ப்ரியதர்ஷினியின் படத்தைப் பகிர, அவர்களில் ஒருவன் தன் சேமிப்பிலிருந்து அந்த செல்ஃபியைப் பகிர்ந்து வாழ்த்துகள் சொல்லி இருக்கிறான். பூகம்பப்புள்ளி!

ப்ரியதர்ஷினியை வீட்டில் நையப்புடைத்தார்கள். காதல், கர்ப்பம் என்று சிக்கலோ எனத் துருவிக் கேட்டார்கள். முதலில் அது, தானே இல்லை என்று சாதித்தவள் – அப்படத்தில் வராகம் போல் வாயைக்குவித்து வைத்திருந்ததால் அப்படிச் சொல்ல முகாந்திரம் இருந்தது – அடி தாளாமல் கல்லூரி சினேகிதிகளுடன் விளையாட்டாய்ப் பகிர்ந்தது எப்படி வெளியே வந்ததெனத் தெரியவில்லை எனக் கூறிச் சமாளித்தாள்.

வனச் சினத்துடன் வருணிடம் விளக்கம் கேட்டாள். உண்மையாகவே அவன் அதை எவருக்கும் காட்டவோ பகிரவோ இல்லை. அதைச் சத்தியம் செய்தான். அழிக்காமல் வைத்திருந்தது மட்டுமே தன் தவறு என்றான். அவளதை நம்பத்தயாராய் இல்லை.“யூ பெர்வர்ட், பிட்ரேயர்…” என்று திட்டி அவனை ட்விட்டரில் ப்ளாக் செய்தாள்.ப்ரியதர்ஷினிக்குச் சத்தமில்லாமல் மீண்டும் ஒரு மாப்பிள்ளை தேடி – வாட்ஸ் அப் பயன்படுத்தாத மாப்பிள்ளை – அடுத்த மூன்று மாதத்தில் சிறப்பாய்க் கல்யாணம் முடித்தார்கள். சற்றும் மனந்தளராத வருண் அவளை ட்விட்டரில் மென்ஷனிட்டு வாழ்த்தினான். ப்ளாக் செய்திருந்ததால் அவள் அதைப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

வருணுக்கு இன்னும் புகைப்படம் எப்படி வெளியே போனது எனப் புரியவில்லை. அவனுக்குப் பெரிதாய்க் குற்றவுணர்வு ஏதுமில்லை என்றாலும், தான் செய்யாத பிழைக்குத் தண்டிக்கப்படுவது வருத்தமளித்தது. நண்பனின் வீட்டில் முட்டக்குடித்து மட்டையான இரவில் தன் செல்பேசியைத்திறந்து எவரும் எடுத்திருக்கலாம் அல்லது ஒருமுறை செல்பேசி மழையில் நனைந்து பழுதுபட்டபோது சர்வீஸ் சென்டரில் கொடுத்த அரை மணி இடைவெளியில் திருட‌ப்பட்டிருக்கலாம் எனச்சாத்தியங்களை யோசித்துக் குழம்பினான்.

அடுத்த முறை ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். இப்போது அவன் மோனலிசாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான்!ப்ரியதர்ஷினி இப்போது சந்தோஷமாய் இருக்கிறாள். அவள் செல்ஃபியானது வையக விரிவு வலையில் இன்று திரியும் பல்லாயிரங்கோடி ஆபாசப்படங்களில் ஒன்றாகக் கலந்து கரைந்து விட்டது. எப்போது வேண்டுமானாலும் அது வெளிப்பட்டு மீண்டும் தலைவலி தரலாம் என்ற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.

ப்ரியதர்ஷினி தன் ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டாள். கல்யாணத்துக்குப் பிந்தைய‌ பூரிப்பிலோ என்னவோ சற்றே பெருத்து விட்டாள். இனி அந்த செல்ஃபி வெளிவ‌ந்தாலும் அது தானில்லை எனச்சாதிக்க அனைத்து முஸ்தீபுகளையும் செய்து தயாராகி விட்டாள்.வருணின் ஆதார் அட்டையில் பிழைதிருத்தம் செய்ய‌ ஓடிபி கன்ஃபர்மேஷனுக்காக அவன் செல்பேசி வாங்கிச் சென்ற, ஸ்மார்ட்ஃபோன் அவ்வளவாய்ப் பழகாத‌ அவனது தந்தையின் மீது கடைசிவரை அவனுக்குக் கொஞ்சமும் சந்தேகம் எழவே இல்லை.

– Mar 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *