அழகே உன்னை ஆராதிக்கிறேன்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,780 
 
 

“”அம்மா இன்டர்வியூக்கு போய்ட்டு வர்றேன்மா,” ரேஷ்மா சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டாள் கலாவதி. மனதுக்குள், “உனக்கு இந்த வேலை கிடைக்கக் கூடாதுடி…’ என்று கோபமாக சொல்லிக் கொண்டாள்.
ரேஷ்மா சென்ற பின், கலாவதிக்கு இருப்பு கொள்ளவில்லை. மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவளாய், தன் தம்பிக்கு போன் செய்தாள்.
“”சொல்லுக்கா…” – தம்பி விஸ்வநாதன்.
“”வந்து… ஒரு விஷயம் நேர்ல சொல்லணும், இன்னைக்குள்ள வர்றியா?”
சிறிது யோசித்த விஸ்வநாதன், “”சரிக்கா… எனக்கு கூட, கரன்ட் பில் கட்டணும்… அப்படியே வர்றேன்…”
“அவன் வருவதற்குள், இந்த பிசாசு வராமல் இருக்க வேண்டுமே…’ என்று வேண்டிக் கொண்டாள் கலாவதி. நல்ல வேளையாக, கொஞ்ச நேரத்திலேயே வீட்டிற்குள் நுழைந்தார் விஸ்வநாதன்.
அழகே உன்னை ஆராதிக்கிறேன்!“”ரேஷ்மா இல்ல?” வந்து சோபாவில் அமர்ந்தவுடன் கேட்டார்.
“”நல்லா கேட்ட… அத பத்தி பேசத்தான் கூப்ட்டேன். சரி, வீட்ல உன் பொண்டாட்டி, பசங்க சவுக்கியமா?”
“”நல்லா இருக்காங்க, பையன் தான் பிளஸ் 2, ரொம்ப முனைஞ்சு படிக்க மாட்டேங்குறான்… எவ்வளவு தான் சொல்றது, சரி அத விடு… எதுக்கு கூப்ட?”
“”முதல்ல ஜூஸ் சாப்பிடு,” லெமன் ஜூசை நீட்டி விட்டு, தம்பி எதிரில் அமர்ந்தாள்.
“”இந்த காலத்து பொண்ணுங்கள, சரியா புரிஞ்சிக்க முடியல விசு… நாம ரொம்ப, “அட்வைஸ்’ பண்ணா, பிடிக்காம போய்டுது… பண்ணாம விட்டா, எங்க அது கெட்டுப்போய்டுமோன்னு பயமாவும் இருக்கு.”
“”சரிதான்க்கா… அதுக்காக, நம்ம கடமையிலேர்ந்து நழுவ முடியுமா… புடிச்சாலும், புடிக்காட்டாலும், நல்ல பாதைய நாமதான் காட்டணும். அப்படியும் அதுங்க மதிக்காம போனா, சரி விதின்னு விடத்தான் வேணும்… சரி எதுக்கு இவ்வளவு பீடிகை… ரேஷ்மா பத்தி பயப்படறியா?”
“”ஒரு வகைல சரிதான் விசு… அவளுக்கு அப்பா இல்லேன்னு செல்லம் கொடுத்தது தப்போன்னு தோணுது… நல்லாதான் பி.காம்., முடிச்சா, மேல ஏதாவது படிப்பான்னு பார்த்தா, “விருப்பம் இல்ல, இப்ப வேலைக்கு போறேன்’ங்கறா… அப்புறம், சில கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டா, அவங்களும் இன்டர்வியூக்கு வான்னு கூப்டிருந்தாங்க… மாதம் பத்தாயிரம் தான் தருவோம்ன்னு, தகவலும் தெரிவிச்சிருந்தாங்க. ஆனா, இவ அத, “சீப்’புங்குறா, அதே நேரம் எனக்கு தெரியாம, ஒரு பெரிய ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கும் அப்ளிகேஷன் போட்டிருக்கா… சம்பளம் முப்பதாயிரமாம். நான் பிடிக்கலேன்னு சொல்லியும், அதுக்காக இன்னிக்கு இன்டர்வியூக்கு போயிருக்கா…
“”நீயே சொல்லு… அது ஒரு வேலையா? இவளும் பார்க்க, மூக்கும், முழியுமா இருக்கா. ஓட்டலுக்கு வர்றவங்கக்கிட்ட பல்ல காட்டி, “வாங்க… வாங்க…’ன்னு கூப்பிடணும்… எனக்கு புரியல விசு,” கவலையும், இயலாமையுமாக, தன் மனதிலுள்ளதை இறக்கிவிட்டு, சோர்வானாள் கலாவதி.
விஸ்வநாதனுக்கு புரிந்தது. “ஒரு பெண் வேலைக்கு போனாலே, பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்; இதில், ரிசப்ஷன் வேலை வேறு! அக்கா பயப்படுவது நியாயம் தான்…’
“”அக்கா… உன் கவலை புரியுது. இந்த வேலை கிடைச்சிடவா போவுது. அதுக்குள்ள, நீ ஏன் பயப்படற. இப்ப ரேஷ்மா மாதிரி, நிறைய அழகான பொண்ணுங்க, அவளை விட நல்லா ஆங்கிலம் பேசற பொண்ணுங்க, வர மாட்டாங்களா என்ன?”
“”விசு… நான் சொல்றத புரிஞ்சுக்க. இது கிடைக்கலன்னா, இதே மாதிரி வேற ஒண்ணுக்கு முயற்சி பண்ண மாட்டாளா என்ன! இவ அழகே இவளுக்கு எமனா போய்டுமே விசு. பேப்பர பாரு… கடத்தல், ஈவ்-டீசிங் அப்படி இப்படின்னு, நிறைய செய்தி வருது. அதுவும், இந்த ஓட்டல் வேலைக்குப் போகணும்ங்கிற மனோபாவம், இவளுக்கு வரலாமா? அதுதான் கவலையா இருக்கு.”
சிறிது மவுனமாக இருந்தான் விசு.
“”ஏன்க்கா… ஒரு கல்யாணத்த பண்ணிட்டா என்ன?”
“”சரியா போச்சு… அதுக்கு அவ ஒத்துக்க வேண்டாமா? நாளைக்கு புருஷன் கிட்டையும் இது மாதிரி அடம்புடிச்சா… நீ கொஞ்சம் சொல்லு… போனா, நாலு சுவத்துக்குள்ள, சேர்ல உட்கார்ந்து பாக்கற வேலைக்கு போகட்டும்… இனிமே, இந்த மாதிரி இன்டர்வியூக்கெல்லாம் போக வேண்டாம்ன்னு சொல்லு விசு… உம் பேச்ச கேப்பான்னு தோணுது.”
“”சரிக்கா… கண்டிப்பா சொல்றேன். அது நல்ல பொண்ணுதான்; கேட்டுக்கும்.”
விசு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குஷியாக வீட்டிற்குள் நுழைந்தாள் ரேஷ்மா . ஐந்தரை அடி உயரத்தில், ரோஸ் கலர் சுடிதாரில், ரசிக்கும்படியான ஒல்லியான உடல்வாகில், தேவதை போல் இருந்தாள் ரேஷ்மா!
“”ஹாய் அங்கிள்…”
“”வாம்மா… இப்படி உட்கார்,” விஸ்வநாதன் சற்று நகர்ந்து உட்கார, அருகில் அமர்ந்தாள் ரேஷ்மா.
“”மொதல்ல ஸ்வீட் எடுத்துக்குங்க…”
ஸ்வீட் பாக்சை திறந்து நீட்டினாள் ரேஷ்மா. கலாவதிக்கு புரிந்து விட்டது! “”என்ன விசேஷம் ரேஷ்மா?” ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டபடி கேட்டார் விஸ்வநாதன்.
“”மாமா… நான் போன முதல் இன்டர் வியூவிலேயே, செலக்ட் ஆயிட்டேன். எஸ்… சிட்டில உள்ள டாப்கிளாஸ் நாலு பைவ்ஸ்டார் ஓட்டல்ல, ஓட்டல் பார்க்வேயும் ஒண்ணு அங்கிள்… அதுல சூப்பர் குட் செக்ஷன்ல, நானும் ஒரு ரிசப்ஷனிஸ்ட். சம்பளம் முப்பதாயிரம். தவிர, இன்சென்டிவ் பத்தாயிரம் வருமாம்…
“”சோ… நான் எதிர்பார்த்தபடி, என் மனசுக்கு புடிச்ச வேலை கிடைச்சிருக்கு. ஒரே ஒரு சின்ன ப்ராப்ளம். வேலை முடிய, “லேட் நைட்’ ஆகும். பரவால்ல… இந்த, பி.பி.ஓ.,வுல, நைட்பூரா கண் முழிக்கறதுக்கு, இது எவ்வளவோ பெட்டர். அப்புறம், அம்மா, “ஆய்… ஊய்…’ம்பாங்க. அது, போகப் போக சரியாயிடும்… என்ன மாமா, உங்களுக்கு சந்தோஷம் தானே?” வெகுளியாய் கேட்டாள் ரேஷ்மா.
சற்று அவளையே, அவள் சந்தோஷத்தையே ரசித்த விஸ்வநாதன், “”ரொம்ப சந்தோஷம் தான். ஆனா, நீ உன் விருப்பத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை, உன் அம்மாவின் விருப்பத்துக்கும் தர வேண்டாமா? சம்பளம் ஓ.கே., பட் வேலை… என்ன வேலைம்மா இது! ஓட்டலுக்கு வர்ற கண்டவங்களையும், பல்லக்காட்டி, “வாங்க… வாங்க…’ன்னு செயற்கையா இன்வைட் பண்ணனும்… ரொம்ப பவ்யமா கஸ்டமர்கிட்ட பேசணும்…
“”உன்னை அழகு படுத்திக்கணும்… நைட்ல வேற வேலை, ஏன் இதவிட கொஞ்சம் சம்பளம் கம்மியானாலும், பாதுகாப்பான ஒரு நல்ல வேலைய தேடிக்கலாமே. அப்ப உன் அம்மாவும், சந்தோஷப்படுவாளே!”
“”ஐயோ மாமா… நீங்க எந்த காலத்துல இருக்கீங்க… இந்த வேலைக்கே, எவ்வளவு போட்டி தெரியுமா? இப்ப நான் வேண்டாம்னா, அதுல வேற ஒரு பொண்ணு வேலை செய்யாமலா போய்டுவா…
“”கண்டவங்கள வா… வான்னு கூப்டற வேலையான்னு கேட்டா, அது கூட ஒரு வேலை தான் மாமா. ஒரு கல்யாணத்துல ரிசப்ஷன்ங்கறது, எவ்வளவு பெரிய விஷயம்… வீட்டுக்கு வர்றவங்கள, “வாங்க… வாங்க…’ன்னு கூப்படறது நல்ல விஷயமில்லையா!”
ரேஷ்மா கேட்க, சற்று அதிர்த்தார் விஸ்வநாதன். கலாவதி குறுக்கிட்டு எரிந்து விழுந்தாள்…
“”பாத்தியா விசு… நாம பழைய காலமாம். சீக்கிரமா, இவள ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்திட்டு, பேசாம காசில போய் செட்டில் ஆகலாம்ன்னு தோணுது.”
அம்மாவை ஏளனமாகப் பார்த்தாள் ரேஷ்மா.
“”மாமா… அம்மா இப்படித்தான், நீங்க கேளுங்க… நான் கன்வின்ஸ் பண்றேன்.”
“”சரி ரேஷ்மா… நாங்க பழைய காலம்ன்னு சொல்ற, நீ, இப்ப புது யுகத்துல இருக்கேன்னு வெச்சுக்க… இதுல பல விஷயங்கள், உதாரணமா காற்று, கடல், ஆகாயம், பெரியவங்க, சின்னவங்க, அன்பு, பாசம், நல்லது, கெட்டது இதெல்லாம் மாறிடுமா, அப்பவும் சரி, இப்பவும் சரி, அழகான பொண்ணுங்களுக்கு பாதுகாப்புங்கறது முழுமையா கிடையாது.
“”அதனால தான் உங்கம்மா பயப்படறா. நீயும் அதுக்கேத்த மாதிரி, அழக மூலதனமா வெச்சு வேலைக்குப் போறத பெருமையா சொல்ற… இத நாங்க எப்படி ஏத்துக்கறது?” பொறுமையாகக் கேட்டார் விஸ்வநாதன் .
“”ரைட் அங்கிள்… இது உங்க பார்வை. இப்பவும் நீங்க சொன்ன விஷயங்களோட அடிப்படை மாறல… அது உண்மை. ஆனா, அதுமேல உள்ள எங்க, அதாவது இந்த காலத்து யூத் பார்வை, ரொம்ப பயப்படற மாதிரி இல்ல. காரணம், கல்வி. இப்ப பெண்கள் நிறைய படிக்கிறாங்க, யோசிக்கிறாங்க… சாப்பாடு, போக்குவரத்து, கம்யூட்டர்ல ஒர்க் பண்றது, பேங்க், ஏ.டி.எம்., வசதி… இது மாதிரி நிறைய மாறியிருக்கு…
“”பெண்கள் வேலைக்குப் போகணும்ன்னு ஆசைப்படறாங்க… அதுலேயும், பெரிய மாற்றம், அதுலேயும், நான் எனக்குள்ள குவாலிபிகேஷனை, என் அழகை மதிக்கிறேன். அதாவது, சில பேருக்கு பாடற திறமை, விளையாட்டுத் திறமை, பாடங்களை புரிஞ்சு படிக்கிற திறமை… அது மாதிரி, கடவுளும், என் அப்பா, அம்மாவும் எனக்கு கொடுத்திருக்கற திறமை அழகு.
“”அத நான், என் வேலைக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்… தவறா பயன்படுத்தலையே… அந்த அழக பராமரிக்கிறேன். என்னால, என், அணுகுமுறையாலே, நாலு வாடிக்கையாளர், எங்க ஓட்டல்ல தங்க வந்தா, அது பெருமை தான்.”
விஸ்வநாதன் மேலும் அதிர்ந்தார்.
“”உன் அழக வெச்சு வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தறது, உன் ஓட்டலுக்கு சாதகமா இருக்கலாம். அது எல்லை மீறாதுன்னு நினைக்கிறியாம்மா?”
“”மாமா… எல்லை மீறும் விஷயங்கிறது, வேலை பார்க்கிற எல்லா இடங்கள்லயும், எல்லா அழகான பெண்களுக்கும் ஏற்படற ஒண்ணுதான். இதுல கொஞ்சம் வாய்ப்பு அதிகம்ன்னா, அத சமாளிக்கற தைரியம், என்னை போன்ற மனோபாவம் உ<ள்ளவங்களுக்கு உண்டு. இதுல என் தைரியம் தான் முக்கியம்.
“”நீங்கள்லாம் என்னை நம்பணும். எனக்கு இந்த வேலை புடிச்சிருக்கு. நாம எந்த ஒரு விஷயமும் அல்லது பொருளும் அழகா இருக்கணும்ன்னு நினைக்கறது தப்பா… கிடையாது. அந்த அழகு நம்மகிட்ட இருந்தா, அத மத்தவங்க ரசிக்கக் கூடாதுன்னு நினைக்கிறதுதான் தப்பு!
“”நூத்துல ஒண்ணு, வக்கிற புத்தியோட இருந்தா, அதுக்கு சவுக்கடி கொடுத்திடலாம். அதுக்காக, பயந்து பயந்து, மனசுக்கு பிடிச்சத செய்யாம வாழறது, போலித்தனமா இருக்காதா மாமா. இந்த அழகு கூட எத்தனை நாளைக்கு? ஒரு பத்து வருஷம்ன்னு வச்சுப்போம். அப்புறம்… அதுக்குள்ள அத வெச்சு, அது பிடிச்ச வேலைய, பணமும் கிடைக்கற வேலைய பாக்கறதுதான் புத்திசாலித்தனம்.
“”அங்கிள்… கடவுள் தந்த எந்த ஒரு பிளஸ் பாயின்டையும் தப்பா பயன்படுத்தினா, அது கேவலம், ஆபத்து, அநியாயம்ன்னு நான் நம்பறேன். இந்த வேலைக்கு நான் போறத பத்தி, நீங்களும் அம்மாவும், பயப்படுறீங்க… எனக்கு கர்வம் வந்து, அதனால, வம்பு வருமோன்னும் நெனைக்கிறீங்க.
“”புரியுது. ஆனா, நான் தெளிவா இருக்கேன். நிரந்தரமில்லாத அழகுல, நான் மயங்க மாட்டேன். அது எனக்கு ஒரு தகுதி. அந்த அளவுல, நான் நியாயமா நடந்துப்பேன். என் மனசில உள்ளத அப்படியே, ஒளிவு மறைவு இல்லாம கொட்டிட்டேன் மாமா… இனி நீங்கதான் பேசணும்!”
ரேஷ்மா ஸ்டைலாக சாய்ந்து கொண்டு, “”அம்மா… எனக்கு ஒரு காபி கொடேன்…” எனக் கேட்டாள்.
கலாவதி கோபம் மாறாமல் நின்று கொண்டிருந்தாள். யோசித்தார் விஸ்வநாதன். பின் எழுந்து, அக்காவை அழைத்து, கிச்சனுக்குள் சென்றார்.
“”அக்கா… உண்மையிலேயே, நாம பழைய காலத்து மனுஷங்க தான். நாம மாற முடியாது. ஆனா, நம் முன்னே, பல விஷயங்கள மனசுல போட்டு, பண்பாடுங்கிற பேர்ல, அமுக்கி வச்சிருந்தோம். ஆனா, நம்ம வாரிசுங்க, எதுலேயும் வெளிப்படையா இருக்காங்க.
“”இப்ப உம் பொண்ணு பேசினத கேட்டில்ல… மொத்தத்தில் இவ மாதிரியானவங்க, நாம பயப்படற மாதிரி ஏமாற மாட்டாங்க. தன் எதிர்கால துணையக் கூட, எல்லா விதத்துலயும் தகுதியான்னு யோசிச்சுதான் தேர்ந்தெடுப்பாங்க… புற அழகுல மயங்குற பெண்கள் இவங்க இல்ல. நம்மள விட புத்திசாலியானவங்க. இனிமே, நீ பயப்பட வேண்டாம். மொதல்ல அவளுக்கு காபிய கொடு.”
சொல்லி விட்டு வெளியே வந்தார்.
அழகான ரேஷ்மா கண்மூடி அமர்ந்திருந்தாள். கொஞ்ச நேரத்தில், காபி வந்தது, மிதமான சூட்டில் ரேஷ்மா பருக, ஆறியிருந்தாள்
கலாவதி.

– கீதா சீனிவாசன் (ஏப்ரல் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *