அழகிய லைலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2024
பார்வையிட்டோர்: 645 
 
 

அழைப்பு மணியை அடித்து பிரயோசனமில்லை. கதவை கைகளாலும் கால்களாலும் உதைத்தான். உள்ளே ஒரு சத்தத்தையும் காணவில்லை. அவன் வேண்டுமென்றே திறக்காமல் இருக்கிறான். கதவு திறந்து ஒரு கணம் தோட்டு ரவியின் முகம் வெளியே நீட்டியது. நிஷாந் பேசத் தொடங்கினான். அடுத்த கணம் முகத்தை காணவில்லை. சாத்திய கதவுதான் முன்னால் நின்றது. மறுபடியும் கதவை அடித்தான். கதவு திறக்கவே இல்லை. ‘என்னுடைய காசைத் தா. அல்லது என்னை என் நாட்டுக்குத் திருப்பி அனுப்பு.’ அழுவதுபோன்ற குரலில் நிஷாந் கத்தினான். அந்த தமிழ் வார்த்தைகள் காற்றிலே ஒவ்வொன்றாகப் பிரிந்து பரவின. உக்கிரைன் நாட்டிலே அந்த வார்த்தைகளை புரியக்கூடிய எவரும் சுற்று வட்டாரத்தில் இல்லை.

அன்று அம்மாவை நினைக்கும் நாள். நிஷாந் புறப்பட்டு இரண்டு வருடத்துக்கு மேலாகியும் அவன் இன்னமும் உக்ரைனிலேயே தங்கியிருந்தான். அவனுக்கு பின்னர் புறப்பட்ட தங்கை கனடா போய்ச் சேர்ந்துவிட்டாள். அம்மாவின் கடிதம் வந்தால் இரண்டு வரியை படித்துவிட்டு மூடி வைத்துவிடுவான். மறுபடியும் இரண்டு வரி. கடிதம் இப்படிப் போகும். ‘நேற்று ரஸ்யா பற்றி வகுப்பில் பாடம் எடுத்தேன். அப்போது உன்னை நினைத்தேன். நீ அங்கே இருப்பது வகுப்பு பிள்ளைகளுக்கு தெரியாது. நீயும் நானும் ஒன்பது மாதம் ஓர் உடம்பை பங்கிட்டுக்கொண்டோம் என்பதை நினைத்துப் பார்ப்பேன். கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். நேற்று உனக்குப் பிடித்த நெத்தலி குழம்பு வைத்தேன். ஆனால் என்னால் ஒருவாய் உண்ண முடியவில்லை.’

அம்மாவின் முகத்தை நினைவுக்கு கொண்டுவர முயன்றான். ஒரு மூலையில் விளக்கின் அடியில் அமர்ந்திருந்து கம்பளி பின்னும் நினைப்பு வரும். தையலை எண்ணி எண்ணி பின்னுவாள். எண்ணிக்கை பிழைத்தால் மறுபடியும் அவிழ்ப்பாள். பின்னர் மீண்டும் பின்னுவாள். அந்தக் காட்சி, தனிமையில் இருந்து எண்ணுவதும் பின்னர் அவிழ்ப்பதும் அவனை என்னவோ செய்யும். ஒருவித தயக்கமும் இல்லாமல் அம்மா காணியை விற்று ஏஜண்டுக்கு பணம் கொடுத்தார். ஏஜண்ட் சொன்னதை கேட்டபோது சுலபமாகத்தான் பட்டது. முதலில் ரஸ்யா போவது. அங்கேயிருந்து உக்கிரைனுக்கு மாணவ விசா உடனே கிடைக்கும். ஒரு வேலி தாண்டினால் போலந்து. இன்னொரு வேலி தாண்டினால் ஜேர்மனி. அங்கேயிருந்த சொந்தக்காரர்கள் அவனை பார்த்துக்கொள்வதாக அம்மாவுக்கு உறுதியளித்திருந்தார்கள்.

அவனுடைய ஏஜண்டு மூன்று தடவை நிஷாந்தை போலந்திற்கு அனுப்பினார். மூன்று தடவையும் பிடிபட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். மூன்றாவது தடவை குளிர் தாங்க முடியாமல் பழைய பேப்பரை உடம்புக்கும் உடைக்கும் இடையில் அடைத்திருந்தான். அதிகாரிகள் ’தவாய், தவாய்’ என விரட்டினார்கள். உடைகளைக் களைந்து அவனை சோதித்தபோது பேப்பர் பேப்பராக வந்தது. அடக்கமுடியாமல் சிரித்தார்கள். ரப்பர் தடியினால் அடித்து அவனுடைய முதுகுத் தோல் உரிந்துவிட்டது. அந்த வலியை இப்போது நினைத்தாலும் அவன் உடம்பு நடுங்கும். புது ஏஜண்டுக்கு அவனை விற்றுப்போட்டு பழைய ஏஜண்ட் போய்விட்டார். அவனுடன் சேர்த்து எட்டுப் பேர். அவர்கள் வெறும் சரக்கு என்பது அப்போதுதான் புரிந்தது. புது ஏஜண்டின் பெயர் தோட்டு ரவி. பெரிய உருவம், அவரை உருக்கினால் இரண்டு பேர் செய்யலாம். கழுத்திலே வெட்டுக் காயம். தமிழ் படங்களில் வருவதுபோல கன்னத்தில் ஒரு மரு. கையிலே எப்போதும் ஒரு பயணப்பெட்டி வைத்திருப்பார் ஆனால் அவர் அதை திறந்ததை ஒருவரும் கண்டது கிடையாது. இதுவரை 200 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகச் சொன்னார். சில நேரங்களில் புத்திசாலிபோலவும் தென்பட்டார். ’கார் முன் கண்ணாடியில் பின்னுக்கு வரும் வாகனங்கள் தெரிவதுபோல பின்னுக்கு வருவதை நான் முன்னாலேயே உணர்ந்துவிடுவேன். அதுதான் என் வெற்றிக்கு காரணம்’ என்பார்.

தோட்டு ரவியுடன் வந்தவர்கள் நாலுபேர். ஈஸ்வரி, அவளுடைய குழந்தை லைலா, செல்லத்தம்பி, அடுத்தது அலெக்ஸ். இவர்கள் வந்த பின்னர் 807ம் வீட்டில் இருந்தவர்களின் சராசரி புத்திக்கூர்மை எண் பாதியாகக் குறைந்தது. செல்லத்தம்பியை பார்த்தவுடன் இயக்கத்திலிருந்து துரத்தப்பட்டவன் என்பது தெரிந்துவிடும். தோள்களை அசைத்து அசைத்து சாய்ந்துதான் நடப்பான். அவனைப்போல இன்னொருத்தனை இந்த உலகில் கண்டுபிடிக்க முடியாது. முழு வாயை திறந்து அடுத்த ஊரில் இருக்கும் ஒருவருடன் பேசுவதுபோல பேசுவான். முதல் பார்வைக்கு மூடன்போல தோற்றமளிப்பான், ஆனால் அவனுடைய மூளை வேறுமாதிரி வேலை செய்யும். உக்கிரைன் நாட்டுக்கு வந்தவுடன் அதிகாரி அவனுடைய வயதைக் கேட்டிருக்கிறார். ’இன்றைக்கே சொல்லவேண்டுமா?’ என்றானாம். அந்தக் கதை உக்கிரைன் முழுக்க பரவிவிட்டது.

இரண்டாவது நாள் நூறு மீட்டர் டெலிபோன் வயரை வெட்டி விற்று காசாக்கிவிட்டான். அவனுக்கு ஒரு வார்த்தை ரஸ்யமொழி தெரியாது. எப்படிச் செய்தான் என்பதுதான் மர்மம். ஒருமுறை கிழவி அணிந்திருந்த காது கேட்கும் மெசினை திருடி வந்ததும் அல்லாமல் அதை யாரிடம் விற்கலாம் என ஆலோசனை கேட்டான். இன்னொரு நாள் எப்படியோ ஒரு முயலைப் பிடித்துவந்து கறியாக்கினான். உக்கிரைனில் பனிக்காலத்தில் முயல் வெள்ளையாக இருக்கும், கோடை காலத்தில் பழுப்பு நிறமாக மாறிவிடும். அது வெள்ளைவெளேரென்று இருந்தது. எப்படி பிடித்தாய் என்று கேட்டால் சொல்கிறான். ‘முயலை ஓடி வெல்லமுடியாது. முயல் பிடிப்பதற்கு முயல்போல யோசிக்கவேண்டும். அது எங்கே ஓடப்போகிறது என்று தெரிந்து முன்கூட்டியே அங்கே போய் நிற்கவேண்டும்.’

தோட்டு ரவி நிஷாந்தை திரும்பியும் பார்க்க மறுத்தான். மேலும், மேலும் பணம் கேட்டான். வேறு வழியின்றி தங்கையிடம் கெஞ்சவேண்டி நேர்ந்தது. எத்தனை கேவலம். அவள் 1400 டொலர்கள் தோட்டு ரவிக்கு அனுப்பினாள். அதன் பிறகு நடந்ததுதான் ரமேஷ் சம்பவம். ஒரு காலத்தில் அகதிகளாக வந்து உக்கிரைனில் தங்கியிருந்த அத்தனை தமிழர்களும் அந்தச் சங்கதியை அறிவார்கள். அவ்வளவு பிரபலம். தோட்டு ரவி புத்தம் புதிய பாஸ்போர்ட் ஒன்றை கொண்டுவந்து நிஷாந்திடம் தந்தான். கள்ளப் பாஸ்போர்ட் இல்லை. மெய்யான இலங்கை பாஸ்போர்ட்தான். நிறைய விசாக்கள் குத்தப்பட்டு கவர்ச்சியாக இருந்தது. நிஷாந்தினுடைய படத்தை மாற்றி அதில் ஒட்டினார்கள். இப்பொழுது அவனுடைய பெயர் ரமேஷ் சிவப்பிரகாசம். அவன் வயது 19. இன்னும் அந்த கடவுச்சீட்டில் உள்ள விவரங்களை பாடமாக்கினான். ஏனென்றால் அவன் அந்த பாஸ்போர்ட்டில்தான் பயணம் செய்வான். நாலு ரஸ்யாக்காரர்கள் அவனை மட்டும் கூட்டிக்கொண்டு போலந்துக்கு போவார்கள். ஒரேயொரு ஆளுக்குத்தான் இடமிருந்தது. ’சரியாக 11 மணிக்கு வருவார்கள், தயாராக இரு’ என்று தோட்டு ரவி சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.

நிஷாந் காலை எழுந்து குளித்து உடையணிந்து தயாராகினான். ஒரு சின்ன முதுகுப்பை மட்டுமே கொண்டுபோகலாம். காலை பத்துமணிக்கு ரஸ்யாக்காரர்கள் அவசரமாக வந்தார்கள். அவர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே வந்துவிட்டார்கள். நிஷாந் அப்போது பாத்ரூமில் இருந்தான். அதேவீட்டில் இன்னொரு ரமேஷும் இருந்தான். அவனும் அகதிதான், முழுப்பெயர் ரமேஷ் கருணாகரன். ரஸ்யாக்காரர்கள் வந்து கூப்பிட்டதும் இவன் தன்னுடைய கைப்பையை தூக்கிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டு போய்விட்டான். நிஷாந் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது மற்றவர்கள் எல்லோரும் அவனைப்பார்த்து சிரித்தார்கள். அவனால் நம்பமுடியவில்லை. இப்படியும் ஒருவன் திட்டமிட்டு ஏமாற்றுவானா? தோட்டு ரவிக்கு இது தெரியாது. ரஸ்யர்களுக்கும் இதில் கூட்டு இல்லை, அவர்கள் வந்து ’ரமேஷ்’ என்று கூப்பிட்டபோது இவன் அவர்களுடன் போய்விட்டான்.

நிஷாந் வெட்கத்திலும் அவமானத்திலும் விரக்தியிலும் இரண்டு நாள் வெளியே வரவில்லை. குப்புறப் படுத்தபடியே கிடந்தான். தோட்டு ரவி வந்து விசயத்தை அறிந்தபோது அவனைத்தான் திட்டினான். அவனும் கோபமாகத்தான் இருந்தான். ஆனால் இரண்டு நாள் கழித்து அவர்களுக்கு வந்த தகவலைக் கேட்டு முதலில் இடிந்துபோனது தோட்டுரவிதான். அந்த நாலு ரஸ்யாக்காரர்களும் போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குறிப்பிட்ட எல்லையிலே போதைப்பொருளை வேலிக்கு மேலால் எறிவார்கள். போலந்துப் பக்கம் இருக்கும் கும்பல் அதை எடுக்கும். ஆனால் இந்த முறையில் ஏமாற்று வேலைகள் நடந்தன. பலசமயம் தொலைந்துபோய்விட்டது என்று சொல்லிவிடுவார்கள். ஆகவே இம்முறை நேரே கொண்டுபோய் கொடுப்பதற்கு ஓர் ஆள் தேவைப்பட்டது. பிடிபட்டபோது முழுப் பழியையும் பையன் மேலேயே சுமத்தினார்கள். அவனால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. மொழியும் தெரியாது. அவனுக்கு ஆறு வருடம் கடூழியத் தண்டனை கிடைத்தது. கடூழியம் என்றால் போலந்தில் மிகக் கொடூரமாக இருக்கும். இருட்டிலேதான் ஆளை வைத்திருப்பார்கள். ஆனால் வருடக் கணக்கை எண்ணும்போது பகல் ஒருநாள், இரவு ஒரு நாள் என எண்ணுவார்கள். மூன்று வருடத்திலேயே தண்டனை முடிந்துவிடும். ‘உன்னை ஏமாற்றினான் அல்லவா? அவன் அனுபவிக்கட்டும்’ என்றான் தோட்டு ரவி.

மூன்று மாதம் கழித்து நிஷாந்துக்கு ஒரு கடிதம் ரமேஷிடமிருந்து வந்தது. போலந்து சிறையிலிருந்து எழுதியிருந்தான். நாலே நாலு வரிகள்தான். இருட்டிலே வைத்து எழுதியிருந்தான் என்பதை ஊகிக்கக்கூடியதாக இருந்தது. வசனம் எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்தது. சில வசனம் இன்னொன்றுடன் கலந்திருந்தது. ‘என்னை மன்னித்துவிடு. நான் திட்டமிட்டு இந்த துரோகத்தை செய்ததற்கு இப்போது உத்தரிக்கிறேன். நீ மிக நல்லவன். உனக்கு கிடைக்கவேண்டிய வலியை நான் அனுபவிப்பது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாகக் கூட இருக்கிறது.’ இதை படித்தபோது அவனுக்கு துக்கமாக இருந்தது. அவன் அனுபவிக்க வேண்டியதை இன்னொருவன் அனுபவிக்கிறான். வேறு துக்கங்கள் வந்து அவனை அடித்துப்போனதில் அந்தச் சம்பவதை மறந்துவிட்டான்.

உக்ரைன் சினிமா கொட்டகையில் அவன் பார்த்த முதல் தமிழ் படம். ‘பூவே பூச்சூட வா.’ பத்மினியும் நதியாவும் வாயை திறந்தபோது ரஸ்யமொழி வெளியே வந்தது வேடிக்கையாகவிருந்தது. ரஸ்யாவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ரஸ்யப் பெண்கள் தமிழ் படங்களைப் பார்த்து அழுது அழுது கண் சிவந்தார்கள். யாராவது புதிதாக வரும் அகதிகள் தமிழ் பட கசெட்டுகள் கொண்டு வருவதுண்டு. கார்த்திக்கும் ரம்பாவும் நடித்த ’உள்ளத்தை அள்ளித்தா’ பட கசெட் அப்படிக் கிடைத்ததுதான். இரவுச் சாப்பட்டுக்கு பின்னர் தினமும் போட்டு பார்ப்பார்கள். அதிலே பிரதானமான அம்சம் அப்பொழுது மிகப் பிரபலமான ’அழகிய லைலா’ பாட்டுத்தான். கட்டை பாவாடை அணிந்து ரம்பா ஆட, கீழே இருந்து காற்று வீசி பாவாடையை மேலே தூக்கும். தொடையில் எதையும் மிச்சம் வைக்காமல் காட்டிக்கொண்டு ரம்பா ஆடும் ஆட்டம் அது.

ஈஸ்வரி ஒல்லியான பெண் ஆனாலும் கவர்ச்சியானவள். மெல்லிய மீசை உண்டு. அவளும் மகளும் பிரான்ஸிலே உள்ள அவளின் கணவருடன் போய்ச் சேருவதற்காக காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் உக்கிரைனில் வந்து தங்கிய சில மாதங்களிலேயே அவளுக்கு பிரான்ஸ் போகவேண்டும் என்ற ஆர்வம் குறைந்துவிட்டது. காலையிலே தலை முழுகிவிட்டு, ஆடை பின்னால் இழுபட நடக்கும் ராசகுமாரிபோல, தலையை இங்கேயும் அங்கேயும் ஆட்டி தலைமயிரை காயவைப்பாள். அவர்களுடன் கொழும்பிலிருந்து பயணம் செய்த அலெக்ஸைப் பார்த்தால் அகதி என்றே சொல்லமுடியாது. முடிவளர்த்து நுனியில் ரப்பர் மாட்டியிருப்பான். மற்றவர்களைப்போல் மொல்டோவா சிகரெட் பிடிக்காமல், விலையுயர்ந்த மார்ல்பரோதான் பிடிப்பான். இன்னொருவர் ஒட்டுக்கேட்கமுடியாத குரலில் இருவரும் பேசுவார்கள். இவள் குனிந்தபடி பேச அவன் தலையாட்டுவான். அவன் ஏதாவது பகிடி சொன்னால் ஈஸ்வரி விழுந்து விழுந்து பெரிதாகச் சிரிப்பாள். யாராவது பாதியிலே வந்தால் ஒருகையால் பிடித்து தள்ளியதுபோல முகத்தை பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அவளுடைய 10 வயது மகள் லைலாவுக்கு ஈஸ்வரி ’அழகிய லைலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடக் கற்றுக்கொடுத்திருந்தாள். அந்தக் குழந்தையும் ரம்பாவைப் போலவே இடுப்பை வளைத்தும் கண்ணைச் சுழற்றியும் காலை எறிந்தும் நன்றாக ஆடும். ஒன்றிரண்டு இடத்தில் ரம்பாவே அவளிடம் கற்கும்படி இருக்கும்.

ஒருநாள் மாலை அலெக்ஸ் சோபாவை கையால் துடைத்துவிட ஈஸ்வரி அதில் உட்காருகிறாள். சோபாவில் போதிய இடம் இருந்தாலும் அலெக்ஸ் பக்கத்தில் நெருக்கமாக இருக்கிறான். லைலா கட்டை பாவாடையில் ரம்பா போலவே உடையணிந்து ரெடியாக நிற்கிறாள். அந்த நேரம் பார்த்து டெலிபோன் அடிக்கிறது. நாலு பேர் அதை நோக்கி ஓடினார்கள். டெலிபோன் பாத்ரூமிலேதான் இருக்கும். ஈஸ்வரியின் கணவர் சமயம் தெரியாமல் பிரான்ஸிலிருந்து அழைக்கிறார். நிஷாந் பாத்ரூமிலிருந்து வயரை இழுத்து இழுத்து வந்து டெலிபோனை ஈஸ்வரியிடம் தருகிறான். இவள் சைகையாலேயே ’வேண்டாம் வேண்டாம்’ எனக் கையாட்டுகிறாள். ஈஸ்வரி ரேப்ரிகார்டரை அழுத்த குழந்தை ஆடத்தொடங்குகிறது. அலெக்ஸ் தரையில் படுத்திருந்து காற்றாடி ஒன்றை சரித்து வைத்து காற்று மேலே எழும்பும்படி செய்கிறான். குழந்தையின் பாவாடை அப்படியே மேலே கிளம்ப எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஈஸ்வரியின் கண்கள் பூரித்துக் கிடக்கின்றன. அலெக்ஸும் அவளும் ஒரு கணம் காமம் சொட்டும் பார்வை பரிமாறிக் கொள்கிறார்கள்.

‘உனக்கு வெட்கமில்லையா? உன்னுடைய கணவர் காத்திருக்கிறார். நீ குழந்தையை ஆடவிட்டு லீலை செய்கிறாய்’ என்றான் நிஷாந். ‘நீ யாரடா?’ என்று அலெக்ஸ் எழும்பினான். நிஷாந் அடித்த அடியில் அலெக்ஸ் விழுந்து மேசை முனை கன்னத்தில் குத்தி ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க செல்லத்தம்பி ஒரே தூக்கில் அவனைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். அவனுடைய ஓட்டத்தைப் பார்த்தவர்கள் அது ஒரு வெள்ளை முயலின் ஓட்டத்துக்கு சமமானது என்றார்கள். அலெக்ஸுக்கு கன்னத்தில் நாலு தையல்கள் போட்டதாகத் தகவல் வந்தது.

தோட்டு ரவி கதவை திறக்காததற்கு அது காரணமாக இருக்கலாம். அலெக்ஸை அடித்தது அவனுக்கு பிடிக்கவில்லை. எந்த திசையில் போவதென்று தீர்மானிக்காமல் நிஷாந் சும்மா நடந்தான். ரயில் பாதை ஒன்று குறுக்கிட்டது. நிரையாக செஸ்நட் மரங்கள் மென்சிவப்பு மலர்களால் நிறைந்து கிடந்தன. பூங்காவுக்குள் நுழைந்ததுபோல ஓர் அமைதியான சூழ்நிலை. அப்படியே அந்த இடத்தில் உயிரை விட்டால் என்னவென்று அவனுக்கு தோன்றியது. ஒவ்வொரு நாள் காலையும் எழுந்து தோட்டு ரவியிடம் மன்றாடும் தேவை இருக்காது. குப்பிளான் போன்ற ஒரு சின்னக் கிராமத்தில் பிறந்த அவன் இங்கே பதினைந்து துண்டுகளாகப் பிரிந்துபோன சோவியத் யூனியனின், உக்கிரைன் நாட்டில் உயிரை விடுவது எவ்வளவு சிறப்பானது.

லாரா என்ற பெயர் எவ்வளவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஒருகாலத்தில் அவனுக்கு தந்தது. அவன் ஜேர்மனிபோய் அங்கேயிருந்து அவளைக் கூப்பிடுவதாக ஏற்பாடு. அதை ரமேஷ் கெடுத்துவிட்டான். பயணத் திட்டம் சரிவராதது அவளுக்கு கோபம். அவள் சொன்னாள் ’நீ என்னைக் காதலிக்கவில்லை. என்னை ஒரு மனைவியாக தயார் பண்ணுகிறாய்.’ இப்பொழுது பழைய காதலனிடம் அவள் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். 807ம் நம்பர் வீட்டில் இனி உனக்கு இடமில்லை என்று தோட்டு ரவி சொல்லிவிட்டான். அவனுடைய தங்கை 1,400 டொலர்கள் சேமித்து அனுப்புவதற்கு எத்தனை பாடுபட்டிருப்பாள். 10,000 கோப்பைகள் கழுவியிருப்பாளா?

அந்த ரயில்பாதையில் நாளுக்கு மூன்று ரயில்கள் போகும். ஒன்று காலையில், அடுத்தது சாமான் வண்டி மதியம்போல மெதுமெதுவாக போகும். பின் மதியத்தில் கடுகதி வண்டி ஒன்று படுவேகமாக ஓடும். எப்படி தண்டவாளத்தில் படுப்பது? கழுத்தை குறுக்காக வைப்பதா அல்லது நெஞ்சை வைப்பதா? அவனுக்கு குழப்பமாக இருந்தது. ரயில் வரும்போது சட்டென்று முன்னால் பாய்ந்தால் நல்லாயிருக்கும். ஆனால் ரயில் வேகமாக தாண்டிப் போனபோது அந்தக் கணத்தை தவற விட்டுவிட்டான்.

12 மணி ரயிலுக்காக காத்திருந்தான். அது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம். பறவைகளின் காலை ஓசை ஆகாயத்தை நிறைத்தது. முகிலுக்குள் மறைந்த சூரியன் குறைந்த ஒளியை பூமிக்கு தந்துகொண்டிருந்தான். உச்சிக்கு வர இன்னும் மூன்று மணி நேரம் எடுக்கும். அவனுடைய கிராமத்தில் இப்பொழுது என்ன நேரம் என மனதுக்குள் கணக்குப் போட்டு பார்த்தான். அம்மா மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு முதல் பாடம் எடுத்துக்கொண்டிருப்பார். ஐரோப்பாவைப் பற்றி படிப்பிக்கும்போது மத்திமசக்கர பூமி என்பார். ஊசி இலைக்காடு, உதிர் இலைக்காடு என்றெல்லாம் சொல்லித்தருவார். அவனுக்கு ஒன்றுமே புரிந்ததில்லை. உக்கிரைனில் ஊசி இலைக்காடுகளைப் பார்த்தபோது அம்மாவை நினைத்தான். அம்மா அன்று பாடத்தை முடிக்கும்போது அவன் இறந்துபோயிருப்பான். அவருக்கு யார் அறிவிப்பார்கள்? ஒருவேளை அறிவிக்காமலே புதைத்து விடுவார்களா? அவனுடைய தங்கை கனடாவிலிருந்து சடலத்தை பார்க்க வருவாளா? விமான டிக்கட்டுக்கு எவ்வளவு பணம் தேவை? 20,000 கோப்பைகள் கழுவவேண்டி வருமோ?

அப்பொழுதுதான் பார்த்தான். சற்று தள்ளி இன்னொரு மனிதர் உட்கார்ந்திருந்தார். அவர் வந்ததை அவன் பார்க்கவில்லை. இந்தக் கால நிலையிலும் பழைய ஓவர்கோட் ஒன்றை அவர் அணிந்திருந்தது வியப்பாகவிருந்தது. 50 – 55 வயது மதிக்கலாம். அழுக்கான தாடி. அதிலே பல நாள் உணவு ஒட்டிக்கொண்டு இருந்தது. இதற்கு முன்பு பொலீஸிலோ, ராணுவத்திலோ இருந்திருக்கலாம். அத்தனை கட்டுக்கோப்பான உடல்வாகு. அவனைக் கவனிக்காமல் மற்றப் பக்கம் பார்த்துக்கொண்டு பேப்பரில் சுற்றி வந்த ஏதோ உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அது ’கர்க் கர்க்’ என சத்தமெழுப்பியது. முறுக்கு சாப்பிடும் சத்தம். ஒருவித மோசமான மணமும் அதிலிருந்து எழுந்தது. உக்கிரைன் உணவு வகையில் சத்தம் எழுப்பும் உணவு இருப்பது அவனுக்கு தெரியாது. எரிச்சலோடு அவரைப் பார்த்தான். இத்தனை இடம் இருக்க மனிதருக்கு அமர வேறு இடமா கிடைக்கவில்லை?

இவன் மனதில் நினைத்ததை சட்டென்று புரிந்து கொண்டவர்போல அவர் திரும்பிப் பார்த்தார். சாப்பிடுவதை நிறுத்தாமல் வாயை ஆட்டிக்கொண்டே ’தற்கொலையா?” என்றார். இவன் ஓம் என்றான். மறுபடியும் ’காதலா?’ என்றார். அதற்கும் ஓம் என்றான். அது பாதிக் காரணம்தான். பின்னர் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. பேப்பரில் இருந்த உணவு முழுவதையும் ஒரே கவனத்தோடு சாப்பிட்டு முடித்தார். கைகளை தன் கோட்டிலேயே உரசித் துடைத்துவிட்டு இவனை நோக்கி நடந்து வந்தார். உயரமான மனுசர். இவன் பக்கத்திலே வந்து உட்கார்ந்து ’நீ அகதியா?’ என்றார். அதற்கும் ஓம் என்றான். அவர் பைக்குள் கையை விட்டு ஏதோ ஒன்றை வெளியே எடுத்தார். துப்பாக்கி. ‘இதோ பார். உன்னைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. நான் சுட்டுக் கொலை செய்து ஒருவாரம் ஆகிறது. ரயிலிலே சாவதைப்போல மோசமான சாவு வேறு ஒன்றுமே இல்லை. உன் உடல் சிதிலமாகிவிடும். அடையாளம்கூடத் தெரியாது. அப்படியே அள்ளிக்கூட்டி எறிந்து விடுவார்கள். உக்ரைனிலே சாவுக்கு மதிப்பில்லை. கியேவ் நகர பிண அறைக்குப் போய்ப்பார். அதிகாலையிலே சடலங்களைப் பெறுவதற்கு வரிசையில் ஆட்கள் நிற்பார்கள். உனக்கு சடலமே இருக்காது. துப்பாக்கிச் சூடு கச்சிதமாக இருக்கும். நெற்றியிலே ஒரு சின்னப் பொட்டு. அல்லது நெஞ்சிலே ஓர் ஓட்டை. கணத்தில் எல்லாம் முடிந்துவிடும். நானும் ஒருவாரமாகப் பயிற்சி இல்லாமல் இருக்கிறேன். உனக்குச் சம்மதமானால் நானே உன்னைச் சுடமுடியும்.’

இவனுக்கு பயம் பிடித்தது. அவர் துப்பாக்கியை புதிதாகப் பார்ப்பதுபோல இரண்டு பக்கமும் திருப்பி தடவிப் பார்த்தார். ’நீ சுட்டிருக்கிறாயா?’ என்றார். அவன் இல்லை என்றான். ’இதோ, இதை பிடித்துப் பார். மனிதன் கண்டுபிடித்த மகத்தான ஆயுதம். இதைக் கையில் எடுத்தால் உன் உடம்பில் தானாகவே வீரம் உதித்துவிடும்.’ அவன் துப்பாக்கியை கையிலே ஏந்திப் பார்த்தான். அதன் விசையில் கை வைத்தபோது அவன் உடலில் புதிய தென்பு வந்தது. இந்த உலகமே அவன் கீழ்தான் என்பதுபோன்று எண்ண வைத்தது. விசையை அமுக்கி அவனுக்கு முன்னால் நிற்கும் மனிதரைக்கூட அவனால் கொல்லமுடியும். துப்பாக்கியை திருப்பி அவரிடமே தந்தான்.

’நீ ரஸ்யப் பெண்ணையா காதலித்தாய்?’ என்றார். ’அவளுடைய பெயர் லாரா’ என்றான். ’அதுதான் காரணமா?’ ’டொக்ரர் ஷிவாகோ படத்தில் வரும் லாரா அழகாக இருப்பாள். இவளுக்கும் அதே சாம்பல் கண்கள், தோளோடு நிற்கும் அதே பொன் கூந்தல். என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள்’ என்றான். ’ஒரு நடிகையின் பெயர் இருப்பதால் காதலித்தாயா?’ ‘ஞாயிற்றுக்கிழமை உடையில் என்னைப் பார்க்க வருவாள். என்னுடைய பாவப்பட்ட வாழ்க்கையின் ஒரேயொரு சின்ன மகிழ்ச்சி அவள்தான். அவள் காலடியோசையை நினைத்துக்கொண்டு நாலுமணி நேரம் சும்மா இருப்பேன்.’ ’காலடியோசையை வைத்து என்ன செய்வாய்? ரஸ்யப் பெண்களுக்கு ஏதாவது நடந்துகொண்டே இருக்கவேண்டும். வருடாவருடம் லைசென்ஸ் புதுப்பிப்பதுபோல காதலைப் புதுப்பிக்கவேண்டும். இப்பொழுது சாகவேண்டும் என்று சொல்கிறாய். செத்துப்போ. அதனால் என்ன? பத்து வயதிலும் சாகலாம், 100 வயதிலும் சாகலாம். ஆனால் உலகத்திற்கு என்ன விட்டுப்போகிறாய். உன்னுடைய உடம்பு துண்டுகளையா? உன்னை வருங்காலம் நினைப்பதற்கு என்ன சாதனையை செய்துவிட்டு போகிறாய்?’

’துன்பத்தை பற்றியே எண்ணும் மனிதன் உலகில் கொட்டிக்கிடக்கும் இன்பத்தை பற்றி நினைப்பதில்லை. யாரோ பெண், சில மாதங்களே பழக்கமான ஒருத்திக்காக உயிரை விடத் துணிகிறாய்? எத்தனை முட்டாள்தனம். அவள்தான் உலகமா? உக்கிரைனில் ஒரு அழகான தேவாலயம் உள்ளது. 1000 வருடம் பழமை வாய்ந்தது. அதை பார்த்தாயா? அங்கே தொங்கும் கண்ணாடியிலான சரவிளக்குகள் 4 டன் எடை கொண்டவை. உலகத்தில் எங்கேயும் பார்க்கக் கிடைக்காது. அத்தனை அழகு.’ ’நான் அகதி ஐயா. நாடு இல்லாதவன்.’ ’நாடு இல்லாதவன் காதலிக்கலாம். அழகை ரசிக்க முடியாதா? கலையை ரசிப்பதற்கு நாடு தேவை இல்லை. வியப்படைவதற்கு அறிவு தேவை இல்லை. நிப்பர் நதியை பார்த்தாயா. அது மூன்று நாடுகளைத் தாண்டி ஓடி கருங்கடலில் விழுகிறது.’ நிஷாந் கீழே பார்த்த பார்வையை தூக்கவில்லை. ’வா, வொட்கா குடிக்கும் நேரம் இது. இந்த அற்புதமான தருணத்தை வீணடிக்கக்கூடாது.’

அவருடைய பெயர் ஷாஷா. அலெக்ஸாண்டர் என்பதன் சுருக்கம். ரஸ்யாவில் ஐம்பதுவீதம் ஆண்களுக்கு அதுதான் பெயர். ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்தார்கள். பணக்காரர்கள் மட்டுமே குடிக்கும் ஆகத்திறமான இஸ்ரேலிய வொட்காவுக்கு அவர் ஆணை கொடுத்தார். இருவரும் ஆளுக்கு மூன்று பெக் குடித்தார்கள். அவனிடம் கடைசி பத்து டொலர் மடித்து சுருண்டு பாதுகாப்பாக இருந்தது. பத்து டொலருக்கு உக்கிரைன் காசில் 1,400,000 கூப்பன்கள் கிடைக்கும். அன்று முழுக்க வொட்கா குடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் ஷாஷாவே பணம் கொடுத்தார். அவன் கொடுத்ததை ஏற்க மறுத்துவிட்டார். அவனுக்கு நாலாவது பெக் குடித்தது ஞாபகத்தில் இல்லை. எப்படி வீட்டைக் கண்டுபிடித்து எட்டாவது மாடி ஏறினான் என்பதும் நினைவில் வர மறுத்தது.

காலையில் எழும்பியதும் ஒரு நிமிடமாக அவனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்பது தெரியவில்லை. பின்னர் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது. வேறு யாரோவுடைய பிளாஸ்டிக் பாயில் படுத்திருந்தான். வாந்தி எடுத்து அதன் மேலேயே இரவு முழுக்க தூங்கியிருக்கிறான். அந்த மணத்தை அவனாலேயே தாங்க முடியவில்லை. அவசரமாக எழுந்து விரிப்பையும் உடைகளையும் கழுவிப் போட்டான். சீக்கிரமாக குளித்து, கால்வழியாக லுங்கியை இழுத்துக் கட்டிக்கொண்டு தேநீர் தயாரித்து அருந்தினான். வீட்டில் ஒருவரையும் காணவில்லை, எல்லோரும் அலெக்ஸைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு போயிருக்கக்கூடும். யாரோ கதவை படார் படார் என்று உடைத்தார்கள். பொலீஸ்காரர்கள்தான் அப்படித் தட்டுவார்கள். அவர்கள் அழைப்பு மணியை அடிப்பதில்லை. கதவுத் துளை வழியே பார்த்தபோது நெஞ்சம் திடுக்கிட்டது. கறுப்பு உடை, கறுப்பு பூட்ஸ், இடுப்பிலே துப்பாக்கி, கறுப்பு தொப்பி. தொப்பியின் நடுவில் இரண்டு முக்கோணங்களுக்கு மத்தியில் மெழுகுதிரிபோல ஒரு சின்னம். பொலீஸ்தான். ஒருவன் வாய்திறந்து சத்தமிட்டபோது அவனுடைய தங்கப் பல் பளிச்சிட்டது. நாலு பொலீஸ்காரர்களில் ஒருவருக்கு தங்கப்பல் இருக்கும். யாரைத் தேடி வந்தார்கள்? எதற்காகத் தட்டுகிறார்கள்? ஒன்றுமே புரியவில்லை.

வழக்கம்போல கடவுச்சீட்டுகளையும், விசாக்களையும் சரிபார்க்க வந்திருப்பார்களா? ஒருவேளை அலெக்ஸ் பொலீஸில் முறைப்பாடு கொடுத்திருப்பான். அலெக்ஸ் சட்டவிரோதமாக அல்லவா தங்கியிருக்கிறான். அவன் எப்படிக் கொடுப்பான்? இன்னொன்றும் தோன்றியது. நேற்று ரஸ்யாக்காரன் தன்னுடைய துப்பாக்கியை கொடுத்து பிடித்துப் பார்க்கச் சொன்னான். அவனும் விசையில் கைவைத்து அழுத்தியிருந்தான். அவனுடைய கைரேகை பதிவாகியிருக்கும். ஒரு கொலைக்காக அவனைக் கைது செய்ய வந்திருக்கிறார்களா? எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருந்தது. அது கதவைத் திறந்தவுடன் தெரியவரும்.

– September 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *