கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 2,781 
 
 

(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

11 – 15 | 16 -20

16 

‘ஹார்மோனி’ ஆர்கெஸ்ட்ரா குழுவினர் வாடி வதங்கிவிட்டார்கள். ரிக்கியின் குழலோடு இணைந்து சந்தனக் காற்றாய், ஜவ்வாது மணமாய் இசைக்கத் துடித்த வைர தினம் கைநழுவிப் போய்விட்டதே என்று, 

உதவி கமிஷனர் விஜயபாஸ்கர், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பல எண்ணெய்க் கிணறுகளுக்குச் சொந்தக்காரரான தனது சேலத்து கோடீஸ்வர நண்பர் ரங்கமணிக்கு விசேஷ அழைப்பு விடுத்திருந்தார். 

வெங்கிடபதி ஹாங்காங்கில் உள்ள தனது உறவினரைக் கட்டாயம் வரும்படி சொல்லியிருக்கிறார். 

கிடார் வாசிக்கும் – தேயிலை, காபி எஸ்டேட் அதிபர் மாயவநாதன், லண்டனில் தங்கிப்படிக்கும் தன் மகனையும், மகளையும் கண்டிப்பாக வரும்படி கட்டளையிட்டதோடு, ஸ்டார் டிவி நிறுவனத்தோடு தொடர்புகொண்டு தங்கள் இசை நிகழ்ச்சியைக் கவரேஜ் பண்ணும்படி செய்ய – ஹாங்காங்கில் இருக்கும் தனது வியாபார நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். வயலினிஸ்ட் அம்புரோஸ், மேல்நாட்டு ஹாஸ்பிட்டல்களுக்கு மாதம் ஒரு தடவையாவது கட்டாயமாகப் போகவேண்டிய நிலையில் உள்ள புகழ்பெற்ற டாக்டர். அவரின் அழைப்பை ஏற்று வரவிருக்கும் வெளிநாட்டு இசை வல்லுநர்கள் எத்தனை பேர்! 

கலெக்டர், அவர் பங்கிற்கு ‘தூர்தர்ஷனை’ சொடுக்கிவிட்டிருந்தார் டிக்கெட்டு விற்பனையோ, வழக்கமான இசை மண்டபம் வேண்டாம் திறந்தவெளி அரங்குதான் சரிப்பட்டு வரும் என்ற நிலையைத் தோற்றுவித்துவிட்டது. 

ஊட்டியில் தனது இனத்தாரான தோடர், கோத்தர், வலையர். இருளர் போன்ற அத்தனைப் பழங்குடி மக்களையும் ஊர்வலமாய் வரும்படி தடபுடல் ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தான் மாரா. கான்வென்ட்டில் படிக்கிற எல்லா மாணவர்களும் கேட்டுக் கொண்டதின் பேரில், முன்கூட்டியே பொதுவிடுமுறை நாளைத்தான் நிகழ்ச்சிக்காக நிச்சயித்திருந்தார்கள். 

அடிவாரத்திலிருந்த ஊர்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வருகின்றவர்கள் மரங்களில்தான் பரண் கட்டிக்கொண்டு தங்கவேண்டும் என்ற நிலை. அந்த அளவிற்கு இசை நிகழ்ச்சிக்கு வருகின்றவர்களின் கூட்டம் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கூடாரங்கள் போட்டுக்கொண்டு தங்கத் தொடங்கிவிட்டனர். வெளியூர் மாணவர்களும், விசேஷ போலீஸாரும் மலைராணி ஊட்டிக்குத் திருமண நாள் மாதிரி ஊட்டி நகரமே மேளம் கொட்டிக் குதூகலித்துக்கொண்டிருந்தது. 

இத்தனையும் எதற்காக? யாருக்காக? 

ரிக்கி என்ற ஞானக்குழந்தை, ‘சைல்டு ப்ராடிஜி’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த இளைஞனின் இசை மகிமையைக் கேட்கும் ஆர்வத்தில்தான் – துடிப்பில்தான். அந்த அளவிற்கு ரிக்கியைப் பற்றிய ஆச்சரியமும் எதிர்பார்ப்பும் எல்லாத் திக்கிலும் பரவிவிட்டிருந்தது. ஏற்கெனவே ஹார்மோனி இசைக்குழுவிற்கு ஊட்டியில் பெரிய செல்வாக்கு. இப்போது ரிக்கியும் அவர்களோடு இணைகிறான் என்பதால் பரபரப்பு என்பது கேள்வி கேட்பார் இல்லாமல் திகைக்கும்படி அதிகமாகிவிட்டது. ஆனால், ரிக்கியின் தற்போதைய நிலைமை வெளியே திரண்டு கொண்டிருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இசை நிகழ்ச்சியில் திடீரென எதிர்பாராத மாற்றத்தை இந்த மக்கள் கண்டால், மேடையில் ரிக்கியைக் காணாமல் திகைத்தால், அந்தக் கூட்டம் ஏமாற்றம் தாங்காமல் எப்படிப்பட்ட விபரீதங்களைச் செய்துவிடுமோ? அதை உத்தேசித்து போலீஸ் கமிஷனர் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யத் தொடங்கிவிட்டார். 

அவசர ஒத்திகையின்போது – தனது சகாக்களிடம் முடிந்த வரை உற்சாகத்தை உண்டுபண்ண முயன்றுகொண்டிருக்கிறார் சித்தார்த், தானும் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டால் மற்றவர்களின் நிலை என்ன ஆகும் என்ற நியாயமான பயம் அவருக்கு. 

ரிக்கியின் இசையைக் கேட்க ஊட்டியில் நடக்கும் அத்தனை ஆர்ப்பாட்டங்களையும் கேட்டு அறிந்து வைத்திருந்த அனிதாவுக்கு – காய்ச்சலில் படுத்திருக்கும் ரிக்கியின் முனகல் சப்தம் மட்டும் அறியாத ஒன்றாய் – கேட்காத ஒன்றாய் இருக்கிறது. 

ஆனால் மாராவின் மோப்ப குணம் ‘அனிதா’ கண்ணிலேயே படவில்லையே என்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டது. அதுவும், இந்தச் சமயத்தில் ரிக்கியின் அருகில் அனிதா இல்லையே? ஏன்? 

“இதுவரைக்கும் நீங்க கேள்விப்படவே இல்லையா?” என்று மாரா ஹாஸ்டலுக்கு ஓடிவந்து சொன்னபோதுதான் அவளுக்கு ரிக்கியின் நிலைமை தெரிந்தது. க்ளினிக்கை நோக்கி காற்றாக மாறி ஓடத் தொடங்கினாள் அனிதா, மாராவால் கூட அவளுக்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை. 

ரிக்கி கண் திறந்தபொழுது.. அவனின் இரு கைவிரல்களையும் தன் கைகளால் மிருதுவாக வருடியபடி, கண்ணீர்க்கோலத்துடன் அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது அனிதாதான். 

“அனிதா..!” எழுந்து உட்கார முயன்றவனின் தோளை மென்மையாகப் பிடித்து மீண்டும் படுக்க வைத்துவிட்டாள் கீதா. 

“ரிக்கி நீயும் அனிதாவும் பேசிட்டிருங்க. நான் ஒரு ஃபோன் பண்ணிட்டு வர்றேன்” என்று இங்கிதமாக நகர்ந்துவிட்டாள் கீதா “அனிதா- நீயும் கீதா ஆன்ட்டியும் ஏதாச்சும் உங்களுக்குள்ளே பேசி வச்சிக்கிட்டீங்களா?” 

“என்ன ரிக்கி சொல்றே?” 

“வேற… என்னைப் பார்த்து ஆன்ட்டியும் நாள்பூரா அழுதிட்டிருக்காங்க. இப்ப நீ. நான் என்ன, சாகப்போறேன்னு நெனைச்சிட்டீங்களா?” -பலவீனமாய்ச் சிரித்தவனின் உதடுகளைத் தன் விரல்களால் போர்த்திவிட்டாள் அனிதா. 

“என்ன பேச்சு இதெல்லாம்? வேற பேசத் தெரியாதா?” என்றாள் அவனுடைய வாயை மூடிக்கொண்டிருந்த அவளுடைய விரல்களுக்குள்ளே தன் உதடுகளால் உரசியபடி பேசினான் ரிக்கி. 

“உன்னோட விரல்களையே ஃப்ளூட்டா நெனைச்சு ‘ப்ளே’ பண்ணட்டுமா?” 

அவளுடைய விரல்களின் நடுவே தன்னுடைய உதடுகளைக் குவித்து, மெல்லிதாய் புல்லாங்குழல் வாசிப்பைப்போல் ‘விசில்’ பண்ணத் தொடங்கினான் ரிக்கி. 

“கப்’ -அவன் வாயை அழுத்தி மூடினாள் அனிதா பல் பதியாமல் அவள் விரலைக் கடித்தான் ரிக்கி. கையை எடுத்துக்கொண்டாள் அனிதா. 

“இப்போது கீதா ஆன்ட்டி வந்துவிடக்கூடாதே” என்று நினைத்து திரும்பிப் பார்த்த அனிதாவின் கண்களில் பட்டது அந்தப் பூக்கள். பக்கத்து மேஜையிலிருந்த ஒரு பெரிய எவர்சில்வர் பாத்திரத்தில் நிறைந்திருந்த செம்பருத்திப் பூக்களைப் பார்த்துவிட்டு, 

“இந்தப் பூ. இவ்வளவு பூவும் எதுக்கு? யாருக்கு?” என்று அனிதா கேட்ட பொழுதுதான், தலையைத் திருப்பிப் பார்த்தான் ரிக்கி. மேஜையில் இருந்த ஏராளமான அந்தச் செம்பருத்திப் பூக்களை ஆச்சரியத்துடன் பார்த்தான் ரிக்கி. 

செம்பருத்திப் பூக்கள்!!! 

இத்தனை நாளும் இல்லாமல், இன்றைக்கு, இங்கே எப்படி? அவன் சுயநினைவு இல்லாமல் கிடந்தபோது ராமய்யா பூக்களுடன் அவனைப் பார்த்துவிட்டுச் சென்றது அவனுக்கு எப்படித் தெரியும்? இருந்தும், அந்தப் பூக்களைத் தனக்கு அறிமுகப்படுத்தின ராமய்யாவின் நினைவு இப்போது வந்தபொழுது அவன் கண்களில் நீர் கட்டியது. ரிக்கியின் கண்கள் திடீரென கலங்குவதைக் கண்டதும் அனிதா பதறிவிட்டாள். 

“என்ன ரிக்கி? என்ன? என்ன?” 

“அன்னைக்கி நீ அழுதப்ப, அதுக்கான காரணத்தைச் சொன்னியே. அதே மாதிரியான காரணத்தை இப்ப நானும் நெனைச்சுக்கிட்டேன், அதான்.” 

“அப்ப, நீயும் என்னை மாதிரி, இந்த சந்தோஷம் எல்லாம் நிரந்தரம் இல்லேன்னு நினைக்கிறியா?” 

“ஆமா” ரிக்கியின் குரலும் கண்ணீர் ஆனது. 

“ரிக்கி. ரிக்கி” அந்தப் பேதைப்பெண் ரிக்கியின் நெஞ்சில் தலையைக் கவிழ்த்தபடி “உன்னாலேதான் இனிமே என் வாழ்க்கையிலே சந்தோஷம் நிரந்தரமா இருக்கும்னு நம்பிக்கிட்டிருந்தேன்.. நீயே இப்படி அவநம்பிக்கையோட சொல்றப்ப, இனிமே நான். எனக்கு… என்ன அர்த்தம் இருக்கு சொல்லு?” – அனிதா மனம் உடைந்து தடுமாறி அழத் தொடங்கிவிட்டாள். 

சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்த ரிக்கி, அனிதாவின் கண்களைத் துடைத்துவிட்டபடி, “அனிதா என்னை மன்னிச்சிடு. நான் ஏதோ பழைய நினைப்பிலே. அதுவும் இந்தச் செம்பருத்திப் பூக்களைப் பார்த்ததும் அப்படிப் பேசிட்டேன்.” 

கண்களைத் துடைத்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அனிதா, ரிச்சியின் பேச்சு அவளுக்குப் புரியவில்லை. 

“அது என்ன பழைய நினைப்பு? இந்தச் செம்பருத்திப் பூக்களைப் பார்த்ததும் உனக்கு மனசுலே திடீர்னு அப்படி என்ன வேதனை?” பரிதாபமாகக் கேட்டாள் அனிதா. 

“அதையெல்லாம் நம்ப கல்யாணத்துக்கு அப்புறம் உனக்குச் சொல்றேன்” என்ற ரிக்கியின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் அனிதா. அவனது நெற்றியோடு வைத்து தனது நெற்றியை இப்படியும் அப்படியும் தேய்த்தாள். 

“உள்ளே வரலாமா?” என்று வெளியிலிருந்து கீதாவின் குரல் கேட்டதும் இருவரும் நல்ல பிள்ளைகள்போல் விலகி உட்கார்ந்து கொண்டார்கள். 


17 

எல்லோரும்… எல்லோரும்… ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அற்புதமான இசை நிகழ்ச்சிக்குரிய நேரம் நெருங்கிவிட்டது. 

அந்த திறந்தவெளி அரங்கமே மக்கள் கூட்டத்தால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இசை நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடையின் திரைக்குப் பின்னால் சித்தார்த்தும் மற்றவர்களும் தயார் நிலையில் இருந்தாலும் மனத்தளவில் கலக்கத்துடன் காணப்படுகிறார்கள். ‘இந்நேரம் திட்டமிட்டபடி ரிக்கி மட்டும் இங்கே இருந்தால் ஊட்டியின் உயரமே அவன் காலடியில் மண்டியிட்டுக் கிடக்குமே’ என்று மனம் புலம்பிக் கொண்டிருக்கிறார் சித்தார்த். ‘ரிக்கி வரவில்லை’ என்பது திரண்டிருக்கும் கூட்டத்திற்குத் தெரிந்துவிட்டால், அதனால் எதிர்பாராத குழப்பம் எதுவும் மூண்டால், அதைச் சமாளிப்பது எப்படி என்பது குறித்து போலீஸாரை முறைப்படி எச்சரித்திருந்தார் கலெக்டர். வெளிநாட்டு அமைச்சர்களும் அவர்களது கலாச்சார தூது கோஷ்டியும் மிகுந்த ஆவலுடன் வந்துவிட்டது. 

நிகழ்ச்சி தொடங்கிட இன்னும் சில நிமிடங்கள் தான். திரைக்குப் பின்னால் நிற்கும் கலைஞர்களிடம் செயற்கையான சுறுசுறுப்பு. அப்பொழுது தான் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது. தன் கண்களாலேயே நம்ப முடியாதபடித் தனக்கு முன்னால் வந்து நின்ற ரிக்கியை வியப்போடு இறுகத் தழுவிக் கண் கலங்கினார் சித்தார்த். 

“இந்த நிலைமையிலே எக்காரணத்தைக் கொண்டும் நிகழ்ச்சிக்குப் போகக்கூடாதுன்னு நான் எவ்வளவோ சொன்னேன். இவன் என்னையும் கீதாவையும் ஏமாற்றிவிட்டு இங்கே ஓடிவந்திருக்கிறான் சித்தார்த்” என்று பின்னாலேயே ஓடி வந்த ஹரிஹரன் விளக்கினார். 

“அங்கிளுக்கு என்னாலே எந்தக் கெட்டப் பேரும் வந்திடக் கூடாதுன்னு ரிக்கி சொன்னப்ப, என்னாலேயும் ரிக்கியைத் தடுக்க முடியலே” என்றாள் அனிதா, 

“ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். தனக்கு கிடைக்கப்போற நல்ல பெயருக்காக ரிக்கி இங்கே ஓடி வரலே” என்று பெருமையுடன் புதிய விளக்கம் தந்தாள் கீதா. 

இசைக்குழுவினருக்கு கல்யாண சந்தோஷம். ரிக்கியைச் சூழ்ந்துகொண்டார்கள். நிகழ்ச்சி முடியும்வரை டாக்டர் ஹரிஹரன், ரிக்கியின் பாதுகாப்புக்காக மேடையிலேயே இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். 

“யு ஆர் கிரேட் ரிக்கி” என்ற சித்தார்த், தன் கண்கள் கலங்குவதைக்கூட மறைக்காமல் தன்னை மறந்தார். 

“அனிதா.. கடைசிவரை நீயும் மேடையிலேயே உட்கார்ந்திரு” என்று கீதா கூறியபொழுது, அனிதாவின் முகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட அங்கீகாரத்தின் பெருமைப் பூரிப்பு பிரகாசித்தது. 

உடனே நிகழ்ச்சியில் மாற்றத்திற்கான ஏற்பாடுகளைச் சடசடவெனச் செய்தார் சித்தார்த் ரிக்கியைப் பிரதானப்படுத்தி. அவர் ஏற்கெனவே அமைத்து, ஒத்திகையும் பார்த்த இசை அமைப்பை. இப்போது, மீண்டும் கையில் எடுப்பதில் அவருக்கு அதிகச் சிரமம் இல்லைதான். இந்தச் சமயத்தில் ஹரிஹரனுக்கு மட்டும், வெளியில் சொல்ல முடியாத ஒரு பயம். இந்த மாபெரும் கூட்டத்தில் ரிக்கிக்கு ஆபத்தை விளைவிக்க அபாயகரக் காமினி யின் கைக்கூலிகள் எங்கே, எந்த மூலையில் காத்திருக்கிறார்களோ? 

ரிக்கி புல்லாங்குழலை கையில் எடுத்தவுடன், சித்தார்த்தையும் கீதாவையும் சேர்ந்து நிற்கச் சொல்லி, அவர்களின் காலைத் தொட்டு நமஸ்கரித்தபொழுது, சித்தார்த் மனம் நெகிழ்ந்து சிலிர்த்தார். கீதா, ரிக்கியை அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டுக் கண்கலங்கினாள். பிறகு இசைக் குழுவினர் அனைவரிடமும் தனித்தனியே சென்று அவர்களின் ஆசியைக் கோரியபொழுது அவர்கள் அவனைக் கட்டியணைத்துக் கொண்டார்கள். ஹரிஹரனிடம் வந்து அவர் காலைத் தொட்டபொழுது, “உன் இசையைப் போலவே உன் மனமும் எவ்வளவு உயர்ந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும், உன்னுடைய தாய் ராஜலட்சுமி அம்மாளை மனதிற்குள் வணங்கி விட்டு இசைக்கத் தொடங்கு” என்றார் அவன் காதில். கடைசியாக அனிதாவிடம் வந்தான் ரிக்கி தங்களைச் சுற்றி அத்தனை பேர் நிற்பதைப் பற்றி அனிதா கவலைப்படவில்லை. அவனுடைய இரு கன்னங்களிலும் சொல்ல இயலாத தவிப்போடு, அழுத்தமாக முத்தமிட்டாள். “ரிக்கிக்குத் தரப்பட்ட பெஸ்ட் ட்ரீட்மெண்ட் இதுதான்!” – என்று நினைத்தார் ஹரிஹரன், 

திரை விலகியது. நிகழ்ச்சி தொடங்கிவிட்டது ஊட்டி. மலையே அதிர்ந்து குலுங்கும்படி அந்த ராட்சதக் கூட்டம் “ரிக்கி.. ரிக்கி.” என்று ஆனந்தக்கூச்சல் எழுப்பியது. இந்தப் புதுமையான நிகழ்ச்சிக்குக் காரணகர்த்தாவான ரிக்கியின் அதீதத் திறமையைச் சித்தார்த் விளக்கமாய்ப் பேசியபொழுது, மீண்டும் மீண்டும் அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். 

ரிக்கி தனது மாயக்குழலை எடுத்து இசைக்கத் தொடங்கி விட்டான். வெளிநாட்டு விருந்தினர்களும் மற்ற இசை ரசிகர் கூட்டமும் தங்களை மறந்தனர். ஏதோ மாய உலகில் தாங்கள் சஞ்சரிப்பதாக உணர்ந்தார்கள். தனது அற்புதக் குழல் ஓசையால் அந்த இருட்டு இரவிலும் பௌர்ணமியைக் கொண்டு வந்து அனைவரையும் குளிர வைத்தான். ஒவ்வொரு இடைவெளியின் போதும் கூட்டத்தினர் எழுந்து நின்று “ரிக்கி, ரிக்கி.” என்று ஒரே குரலில் மனம் மயங்கி – கண்கசிந்து வாழ்த்திக் கரவொலி எழுப்பினர். மறுபடியும் அவன் இசைக்கத் தொடங்கியதும், மந்திரத்தில் கட்டுண்டவர்கள் மாதிரி, சுவாசிக்க மறந்தவர்கள் போல பதுமைகளாக மாறினர். அவர்கள் நெஞ்சமெல்லாம் ரிக்கியின் குழல் இசை நிறைந்து ததும்பியது. மலைராணிக்கே பொறாமையாக இருந்திருக்கும்; தன்னைவிட இந்த இளைஞன் மக்கள் கண்ணில் உயர்ந்துகொண்டுப் போகிறானே என்று, கடைசியில் நிகழ்ச்சி முடிவடைந்தபொழுது கூட்டத்தினர் மேடையை முற்றுகையிட வெறிபிடித்து முன்னேறிய சமயம், போலீஸாரால் அவர்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சோதனையாகப் போய்விட்டது. வெளிநாட்டு விருந்தினர் மேடைக்கு வந்து ரிக்கியின் மாயத் திறமையைப் பாராட்டிய விதத்தைக் கண்டு சித்தார்த்தும் கீதாவும் சந்தோஷக் கண்ணீக் வடித்த அதே சமயம், அவர்களின் மனசில் இன்னொரு பயம் – இந்த நிமிஷமே ரிக்கியை இவர்கள் தங்கள் நாட்டுக்குத் தூக்கித் கொண்டு போய்விடுவார்களோ என்று. ரிக்கிக்கு ஏராளமான பரிசுகளை அள்ளிக் கொடுத்த விருந்தினர்கள் தங்கள் நாட்டுக்கு ரிக்கி அவசியம் வரவேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். இப்போது, “ரிக்கி பேசவேண்டும்” என்று மலையே அதிரும்வண்ணம் மக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். 

நன்றி தெரிவித்துப் பேசவந்த ரிக்கி, மக்கள் வெள்ளத்தின் முன்னால் பேச முடியாமல் தவித்தான். அந்த அளவுக்கு நீண்ட நேரக் கைதட்டல் கடைசியில் அவன் சித்தார்த்-கீதா இருவரையும் தன்னுடன் சேர்த்து இணைத்து நிற்க வைத்து, “உங்கள் பாராட்டுக்கள் அத்தனைக்கும் நான் காரணம் அல்ல. இதோ இந்த தெய்வங்கள்தான் காரணம்! இவர்கள் இல்லை யென்றால் உங்கள் முன்னால் நிற்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிடைத்திருக்காது” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கினான். மீண்டும் அத்தனைக் கூட்டமும் கை தட்டி ஆர்ப்பரித்து, சித்தார்த்-கீதா தம்பதிக்குத் தங்கள் பாராட்டைத் தெரிவித்தார்கள். அந்தக் காட்சியை – அந்தக் கூட்டத்தில் இப்போது மறைந்திருந்து பார்க்கும் காமினியும் இந்திரஜித்தும் எத்தகைய மிருகவெறியோடு கண் சிவந்திருப்பார்கள் என்பது மேடையில் இருப்போருக்குத் தெரியாது. 

‘ஜெனரேஷன்ஸ்’ அபார்ட்மெண்ட்டில் அத்தனைபேரும் டி.வி.யில் ரிக்கியைப் பார்த்த மாத்திரத்தில் பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர். அவனுடைய மாயாஜால் இசை நிகழ்ச்சி ஒருபுறம் எனறால், ரிக்கி உயிரோடுதான் இருக்கிறான் என்ற அதிரடி உண்மைதான் அந்த அபார்ட்மெண்ட்டில் உள்ள அத்தனை பேரும் தீபாவளி கொண்டாடக் காரணமாக இருந்தது. அந்தச் சமயத்தில் மட்டும் காமினியும் அவள் புருஷனும் பங்களாவில் இருந்திருந்தால் எல்லோருமாகச் சேர்ந்து அவர்களைத் தீயில் போட்டு எரித்திருப்பார்கள். கோழைத்தனத்திற்குப் பெயர்போன விஸ்வநாதய்யர் உட்பட. இப்பொழுது அவர்களுடைய வெறித்தனமான ஆசையெல்லாம் உடனடியாக ரிக்கியை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான். அதனால் ஓடிப்போய் வேலக்கார கல்யாணி அம்மாளையும் ராமய்யாவையும் சூழ்ந்துகொண்டார்கள். “நாம் எல்லோருமாகச் சேர்ந்துபோய் ஊட்டியில் இருக்கும் ரிக்கியைப் பார்ப்போம்; ஆனால், நான் சொல்லும் ஒரு நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்படவேண்டும்” என்று ராமய்யா சொன்னபோது அவர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். ஜனகவள்ளி அம்மாளும் மற்ற அபார்ட்மெண்ட் பெண்மணிகளும் கோயிலுக்கு ஓடினார்கள் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல! 


18 

இசை நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் வீடு திரும்பிய போது, ரிக்கிக்கு ஆரத்தி எடுத்த பிறகே அவனை சீதா உள்ளே அழைத்துச் சென்றாள். அவர்கள் வீட்டிற்குள் பிரவேசித்த அரை மணி நேரத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ரிக்கியின் புதுமையான இசை நிகழ்ச்சிக்கு, சாதனைக்கு – செல்போன், இமெயில், இண்டர்நெட் வழியாக விவரிக்க இயலாத பாராட்டுக்கள், அழைப்புகள். டரக்டர் ஹரிஹரன் ஒரு முடிவு செய்தார். ‘ரிக்கியை இனிமேல் எனது க்ளினிக்கில் வைத்து கவனிப்பது வேண்டாம், ரிக்கி வீட்டிலேயே இருக்கட்டும். நான் இங்கே வந்து ட்ரீட் பண்ணுறேன். அதுதான் பல வகைகளில் அவனுக்குப் பாதுகாப்பு’ என்று கூறிவிட்டார். மியூஸிஷியன்ஸ் எல்லோரும் தங்கள் குடும்பத்தினருடன் ரிக்கியை விட்டுச் செல்ல இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் போகும் வரை அத்தனை பேரையும், கீதாவையும் மிஞ்சிக் கொண்டு உபசரித்தவர் சித்தார்த், கடைசியில், “ரிக்கி ரெஸ்ட் எடுக்கட்டும். எல்லோரும் அவனிடம் பேசிப்பேசி அவனைக் களைப்படையச் செய்யாதீர்கள்” என்று சித்தார்த் எல்லோரையும் தவிர்க்க முடியாமல் அன்புடன் கேட்டுக்கொண்ட பொழுது, கணவனை என்றுமில்லாத பெருமையுடனும், நிம்மதியுடனும் பார்த்துக் கொண்டிருந்தவள் கீதா. எதுவுமே பேசாமல் ஏதோ ஒரு அதிசயத்தைப் பார்ப்பதைப்போல – அதுவும் தனக்கே சொந்தமான பொக்கிஷத்தைக் கவனிப்பது போல. ரிக்கியின் அருகில் உட்கார்ந்தபடி அவன் முகத்தையே பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அனிதா. 

பின்னிரவில், எல்லோரும் ஒருவழியாகப் புறப்பட்டுச் சென்றதும் வீட்டில் விடப்பட்டவர்கள் சித்தார்த்-கீதா, ரிக்கி-அனிதா மட்டுமே. வெளியே நல்ல மழை கொட்டத் தொடங்கிவிட்டது. அனிதாவை ஹாஸ்டல் போகவேண்டாம் என்று கட்டளை போட்டுவிட்டாள் கீதா. 

கீதாவுடன் அவன் அறையில்போய் அனிதா படுத்துக்கொண்ட பொழுது, ரிக்கி தன் அறைக்குத் திரும்பினான். ஆனால் சித்தார்த் மட்டும் ஏதோ சிந்தனையில் தனது பெட்ரூமில் நடைபோட்டுக் கொண்டிருந்தவர், ஏதோ நினைத்துக்கொண்டவராய் ரிக்கியின் அறையை நோக்கிச் சென்றார். ரிக்கி இன்னும் தூங்கவில்லை. பெட்டியிலிருந்த அம்மாவின் படத்தை எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மேடையில் ஹரிஹரன் சொன்னது எவ்வளவு உண்மை. அந்தத் தாயை மனதாரப் பிரார்த்தித்த பின்னர்தானே கச்சேரியைத் தொடங்கினான். “அம்மா – இந்நேரம் நீ மேலேயிருந்து என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கண்ணீர் விடுவே இல்லே” என்று மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டான். “நான் உள்ளே வரலாமா ரிக்கி” என்ற குரல் கேட்டதும்தான் அங்கே வந்திருக்கும். சித்தார்த்தைக் கவனித்தான். ‘வாங்க அங்கிள்’ என்றபடி அம்மாவின் படத்தைத் தலையணைக்கடியில் மறைத்துவிட்டு எழுந்து நின்றான். 

“உட்காரு.. உட்காரு” அருகில் வந்து அவன் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு அவன் தோள்களில் வாஞ்சையோடு தட்டிக்கொடுத்தபடி “ரிக்கி யூ ஆர் மார்வலஸ்! இன்னைக்கு மட்டும் இல்லே, நீ இந்த வீட்டுக்குள்ளே வந்த நாள்ளேயிருந்து எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திட்டே, வாழ்க்கையிலே பிரியப்போன என்னையும் ஆன்ட்டியையும் இனி எந்தக்காலமும் பிரிய முடியாதபடி செஞ்சுட்டே. இத்தனை வருஷமா வேதனையை அனுபவிச்ச எங்க ரெண்டுபேரு மனசுலேயும் நிரந்தரமான சந்தோஷத்தை உண்டாக்கிட்டே. ஏகாந்தமா, வெறுமையாக் கிடந்த இந்த வீட்டுல ஒவ்வொரு நாளும் இன்னைக்கித் திருவிழா நடக்கிற மாதிரி கூட்டமும் குதூகலமுமா இருக்கு. குறுகிய காலத்தில் இந்த ‘ஹார்மோனி’ ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்புக்கு தேசிய அளவில் பெரும் புகழ் தேடிக் கொடுத்திருக்கே இன்னைக்கி நீ மேடையில் இல்லாம என் உள்ளம் ஓடிஞ்சுப்போன சமயத்துலே. எனக்காக எனக்காக வந்திருக்கே, எல்லாமே எனக்காக. இந்தக் குடும்பத்துக்காக் உன்னோட பலவினமான உடல் நிலையிலும் ரிஸ்க் எடுத்து ஓடி உனக்காக நீ எதுவுமே செஞ்சுக்கலே. கடவுள் அனுப்பின தேவதூதன் மாதிரி இத்தனை சாதனைகளையும் எங்களுக்குச் செய்த உனக்கு நான் நன்றி சொல்றதைவிட அந்த நன்றிக்கும் மேலான ஒன்றைச் செய்ய ஆசைப்படுகிறேன்.” 

தொடர்ந்து பேசி வந்த சித்தார்த் சிறிது மௌனம் ஆனார். சித்தார்த்தின் அந்தச் சில வினாடி மௌன இடைவெளிக்கு என்ன காரணம் என்பதை மீண்டும் அவர் பேசத் தொடங்கியபொழுது தெரிந்துகொண்டான் ரிக்கி அதை அவன் எதிர்பார்த்தான். 

“ரிக்கி உன்னை ஆரம்பத்துலே வெறுத்தேன். அதுக்குக் காரணம் உனக்குத் தெரியும். ஆனா… போகப்போசு, உன்னை மனசார நான் நேசிக்க ஆரம்பிச்சேன். இந்த நிமிஷம் வரை நேசிக்கிறேன் அது எனக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு நேரம் உன்னுடைய கீர்த்தியைப் புகழ்ந்தேன். அது அத்தனையும் சத்தியம். ஆனா, இத்தனைக்கும் நடுவுவே என் மனசுக்குள்ளே ஒரு உறுத்தல் மட்டும் இருந்துகிட்டே இருக்கு. ” தயங்கினார் சித்தார்த். மறுபடியும் தொடர்ந்தார். 

“இப்பேர்ப்பட்ட அற்புதமான நீ. ஒரு பொய்யான கடிதத்தோடு இந்த வீட்டுக்குள்ளே எதுக்கு வந்தே? ஏன், என்மேல எல்லோரும் சந்தேகப்படும்படியா ஒரு சூழ்நிலையை உருவாக்குனே? இதுக்கெல்லாம் என்ன காரணம்? உண்மையிலேயே நீ யார்?”

அவ்வளவுதான். 

உடைந்து நொறுங்கிவிட்டான் ரிக்கி. அவன் பிறந்த குடும்பத்தில் அவன் பட்ட துன்பங்கள், ஓடிவந்த சூழ்நிலை அடைக்கலம் தந்த ஹரிஹரன், அன்பின் உன்னதம் பற்றி அவர் தந்த விளக்கம், சித்தார்த்தும் கீதாவும் வாழ்க்கையில் பிரியப் போவதைச் சொல்லி அவர் வேதனைப் பட்டது தான் அவர்களை மறைந்திருந்து பள்ளியிலும் வெளியிலும் கண்காணித்தது, தம்பதிகள் இருவரை யும் சேர்த்து வைக்க முடிவு செய்தது – தானே எழுதிய கடிதத்துடன் சித்தார்த்திடம் வந்தது. அந்தக் கடிதத்தில் இறந்த தனது தாயின்மீது களங்கம் வராதபடி எச்சரிக்கையுடன் வார்த்தைகளை அமைத்தது, தனது தந்தை யார் என்பதைச் சொல்லாமல் கடிதத்தில் தவிர்த்தவிதம் – தனது மன அழுத்தத்தால் கடித எழுத்துக்களை, சித்தார்த் ரிக்கி எதிர்பார்த்தபடி தவறாகப் புரிந்துகொண்டது – அந்த அளவிற்கு அவன் எடுத்துக்கொண்ட அபாயகரமான முயற்சியின் உள்நோக்கம் – இப்படி ஒன்று விடாமல் – தனது நீண்ட வாக்குமூலத்தை விளக்கி முடித்தான் ரிக்கி. 

சித்தார்த் அழுவதை நிறுத்தவில்லை. 

ரிக்கியை இறுகத் தழுவிக்கொண்டார். 

“ரிக்கி, எங்களோட ஒற்றுமைக்காக சந்தோஷத்துக்காக நீ செய்தது தவறே இல்லே. தெய்வீகமான செயல். இனி, நீயே இல்லேன்னு சொன்னாலும் நீ எங்க மகன்தான். எங்களை விட்டு உன்னைப் போகவிடமாட்டேன். உலகம் அறிய உன்னை எங்க மகன்னு சொல்லிக்க இப்ப நான் தயாரா இருக்கேன்” 

தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சித்தார்த், நிம்மதியான பெருமூச்சுக்குப் பிறகு, “ரிக்கி நீ என்கிட்டே சொன்னதெல்லாம் எந்தக் காலத்திலும் கீதாவுக்குத் தெரிய வேண்டாம். இது மட்டும் தெரிஞ்சிட்டா மனசு உடைஞ்சு அந்த நிமிஷமே அவள் உயிர் விட்டாலும் ஆச்சரியம் இல்லே. ‘அவள் இப்போது பெருமையுடன் உரிமை கொண்டாடும் மகன் ரிக்கி தனக்குச் சொந்தமில்லை என்ற உண்மையை அவளின் தாய் உள்ளம் ஜீரணிக்க முடியாமல் தவித்துப்போகும். யாருடைய மகிழ்ச்சிக்காக இவ்வளவு கடினமாக முயற்சித்தாயோ அவ்வளவும் பாழாகிவிடும். அது மட்டும் அல்ல, உன்னை இழந்து நானோ, கீதாவோ இனி வாழ்வது என்பது இயலாத ஒன்று..ப்ளீஸ் உன்னைப் பற்றிய உண்மையை கீதாவுக்குச் சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு ரிக்கி, ப்ளீஸ்.” 

அப்படியே கையடித்துச் சத்தியம் பண்ணினான் ரிக்கி.


19 

மறுநாள் முதல், தன் கணவன் சித்தார்த் ரிக்கியிடம் மிகவும் ஒட்டிக்கொண்டு பேசிப் பழகுவதையும், கிச்சனில் ரிக்கியிடம் அவர் சமையல் கலையைக் கற்றுக்கொள்ளும் அக்கறையையும் பார்த்து கீதாவிற்கு ஆயிரமாயிரம் ஆச்சரியங்கள். எல்லாவற்றையும்விடப் பெரிய விஷயம் அன்று, கீதாவைத் தன் அறைக்கு ரகசியமாக அழைத்தார் சித்தார்த். 

“இந்தாப் பாரு கீதா, ரிக்கிக்கும் அனிதாவுக்கும் உடனடியா கல்யாணம் பண்ணி வைக்கணும். தாமதிக்கக் கூடாது. தேவைப்பட்டால் கல்கத்தாவில் இருக்கும் அனிதாவின் அப்பாவிற்கு உடனே தகவல் சொல்லி கொடுத்து வரச்சொல்லு” என்று கணவன் சொன்ன பொழுது கீதா மகிழ்ச்சியின் மடியில் சாஷ்டாங்கமாய் விழுந்து விட்டாள். 

இந்த விஷயத்தை கீதா அனிதாவிடம் சொன்னபொழுது, அவள் அந்த நொடியிலேயே மணப்பெண்ணாக மாறி, அங்கே நின்ற ரிக்கியிடம் நிமிர்ந்து பேசவே வெட்கப்படத் தொடங்கி விட்டாள். 

சந்தோஷக்காற்று இந்த வகையில் அந்தக் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் வானத்தில் பறக்க வைத்துக் கொண்டிருந்த பொழுது- 

பாம்புப் புற்றான காமினியின் இடத்தில், அவர்களின் நச்சுக்காற்று மிகத் தீவிரமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. போலீசிடம் போய் ‘இவன்தான் எங்கள் மகன்’ என்று ரிக்கியைச் சொந்தம் கொண்டாட முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அதேசமயம் காமினிக்கு அப்படி உரிமை கொண்டாடுவதில் உள்ள சிக்கலும், இழப்பும் தெரியும். தற்சமயம் ரிக்கியின் சொத்துக்கள் நம் பெயரில் இருக்கிறது. அவன் எந்த நேரம் திரும்பி வந்து கேட்டாலும் சட்டப்படி அவன் பங்கைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். அது மட்டுமா, அனாதைப் பிணத்தை ‘ரிக்கி’ என்று அவர்கள் போலீசிடம் சொன்னது. ரிக்கியின் தாயை வீண்பழி சுமத்திக்கொன்றது எல்லாமே வெளிச்சத்திற்கு வந்துவிடும். அந்த நிலமை ஏற்படக்கூடாது என்றால் ரிக்கியை உண்மையிலேயே உலகத்தில் இல்லாதவனாக ஆக்கிவிட வேண்டும். இதுவே அவளின் திட்டம். அதற்காகவே ஊட்டியில் இசை நிகழ்ச்சி முடிந்த நாள்முதல் ஊட்டியின் ஹோட்டல் ஒன்றில் இந்திரஜித்தோடு ரகசியமாகத் தங்கிவிட்டாள். தனக்குப் பாதுகாப்பாகவும், தனது திட்டங்களுக்கு உதவியாகவும், அவள் பணத்தை இறைத்து அழைத்து வந்திருந்த சில நபர்களை வெவ்வெறு ஹோட்டல்களில் தங்கச் செய்திருந்தாள். அந்தச் சிலர் வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாசகாரர்கள். அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அளவிற்கு இந்த இடைப்பட்ட காலத்தில் தனது சமூக விரோதச் செல்வாக்கை இந்திரஜித்துடன் சேர்ந்துகொண்டு வளர்த்திருந்தாள் காமினி. 

காமினி சொன்ன திட்டம் அந்த சமூக விரோதிகளுக்குக் கொக்கு சுடுகிற மாதிரியான சாதாரண விஷயம்தான். இருந்தாலும் அவர்கள் தங்களுடைய வேறு சில திட்டங்களுக்காசுக் காமினியின் பணத்தையும் பலவீனத்தையும் நம்பியிருந்தார்கள். 

டாக்டர் ஹரிஹரனுக்கு இப்பொழுது மகா மகா நிம்மதி சித்தார்த்திடம், ரிக்கி தன்னைப் பற்றின எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டபின்- மறுநாள் காலையிலேயே மாமனாரிடம் வந்து அவருக்கு நன்றி சொன்ன சித்தார்த், ரிக்கியிடம் கேட்டுக் கொண்டது போலவே, ரிக்கி யார் என்பது கீதாவுக்குத் தெரியாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று அழுத்தமாய்க் கேட்டுக்கொண்டார். ஆனால் மருமகன் வந்து சொன்ன மகிழ்ச்சிகரமான விஷயத்தை அவர் பிரான்சிஸ், மாரா இருவரிடம் பரிமாறிக் கொண்டது ஒருவகையில் ரிக்கிக்கு ஆபத்தை வினை வித்துவிட்டது. டாக்டர் சொன்னதைக் கேட்டு துள்ளிக் குதித்த மாரா, சித்தார்த்- கீதா வீட்டில் இல்லாத சமயம் ரிக்கியைக் கட்டாயப்படுத்தி தங்கள் இருளர் இனத்தவர் வசிக்கும் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுவிட்டான். அந்தப் பழங்குடி மக்கள் ரிக்கிக்கும், அவனுடன் போயிருந்த அனிதாவுக்கும் மிகப் பெரும் மரியாதைகள் செய்தனர். ரிக்கியின் புல்லாங்குழல் வாசிப்பில் மயங்கித் திளைத்த அவர்கள் அவனை அந்தக் கிருஷ்ணனாகவே பாவித்து பயபத்தியுடன் உபசரித்து, வழி அனுப்பும் சடங்கில் பாதி அவர்களின் பெருங்கூட்டமே பின்தொடர்ந்து வந்தது. 

அப்பொழுதுதான் அந்த விபரீதம் நிகழவிருந்தது. வழியில் பதுங்கியிருந்த காமினியின் ஆட்கள் ரிக்கியைத் தீர்த்துக் கட்டுவதை சுலபமாக எண்ணியது அவர்களுக்கே மாரடைப்பைக் கொடுத்து விட்டது. மாராவின் இனத்தவர் அவர்களை விட்டுவைக்கவில்லை. வேட்டையாடிவிட்டார்கள். சாதாரண காயங்களுடன் நிக்கி தப்பித்தான். வேட்டையாடப்பட்டவர்கள் போலீஸில் ஒப்படைக் கப்பட்டார்கன் அவர்கள் தந்த தகவலின்படி ஹோட்டலில் தங்கியிருந்த காமினியும் இந்திரஜித்தும் போலீசால் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டார்கள். ஆனால், ரிக்கியைக் கொலை செய்ய முயன்றவர் ரிக்கியின் தந்தை இந்திரஜித்தும், சித்தி காமினியும்தான் என்பதை கீதாவிற்குத் தெரியாமல் மறைப்பதற்குச் சித்தார்த் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார். 

இந்திரஜித்தும் காமினியும் சேர்ந்து போலீசையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள், அவர்கள் மீது பல தீவிரமான கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்யக் காரணமாக இருந்தது. 

சித்தார்த்தின் பங்களாவில் – 

ரிக்கியின் காயங்களுக்குச் சிகிச்சை அளித்த ஹரிஹரன் ‘ரிக்கிக்கு இந்த வகையில் எதிரிகளாய் மாறியவர்கள் யார்’ என்பதைக் கேட்டபடி துடிதுடித்துப் பதறிய கீதாவிடம் உண்மையைச் சொல்லவில்லை. “பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கடத்திச் சென்று, பெற்றோரிடம் பெரும் பணம் பறிக்கும் கூட்டம்தான் ரிக்கியைத் தாக்கிக் கடத்த முயன்றிருக்கிறார்கள்” என்று கீதாவிடம் சித்தார்த் சொன்னதையே ஹரிஹரனும் அவளிடம் ஒப்பித்தார். சித்தார்த்திடம் மட்டுமே தனி அறைக்குள் வைத்து நடந்த உண்மைகளைச் சொல்லிவிட்டார் ஹரிஹரன். 

அவரிடம் ரகசியமாய் சித்தார்த் கேட்ட கேள்வி இதுதான்: “தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிரிகள் மீண்டும் வெளியே வந்து ரிக்கிக்கு ஆபத்தை விளைவித்தால் என்ன செய்ய முடியும்?” 

“அவர்களைப் போலீஸார் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே விடமாட்டார்கள். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பல வழக்குகளின் பயங்கரம் அந்த மாதிரி. அவர்களின் தலையில் இப்போது இடியே இறங்கியிருக்கிறது. ரிக்கி பற்றிய பிரச்சினை அவர்களின் கண்டுவிரல் காயம் மாதிரிகூட இல்லை” 

“சரி நாளைக்குப் பத்திரிகையில் அவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகுமே. அந்தச் சமயத்தில் ரிக்கி யார் என்கிற விஷயம் கீதாவுக்குத் தெரிய வாய்ப்பிருக்கே?” 

“கிடையாது சித்தார்த், இந்திரஜித்தோட மகன் ரிக்கி தற்கொலை பண்ணி இறந்துட்டான்னு போலீசே முடிவு பண்ண ஒண்ணு. அதேசமயம், சித்தார்த்துங்கிற பேர்ல, ஹரிஹரன்ங்குற பேருல நாட்டுல ஆயிரமாயிரம் பேர் இருக்காங்க. அதே மாதிரிதான் இதுவும், அந்த ரிக்கி வேற இந்த ரிக்கி வேற. ஒரே ராகத்தை ஆயிரம்பேர் ஆயிரம் விதமாய் பாடுறீங்களே. அதுமாதிரி இப்ப நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ரிக்கி – அனிதா கல்யாணத்தை உடனடியா முடிக்கிறதுதான்” தீர்மானமாகச் சொல்லிவிட்டார் ஹரிஹரன். 


20 

ரிக்கி அனிதா திருமண ஏற்பாட்டை சித்தார்த்தும் அவரது ‘ஹார்மோனி’ இசைக்குழுவின் வி.ஐ.பி.க்களும் விரைவாகச் செய்து முடித்தனர். 

ரிஜிஸ்ட்ரர் ஆபீஸில்- கலெக்டர் உட்பட அத்தனை முக்கிய புள்ளிகளும், ராமய்யா அழைத்து வந்திருந்த ஜெனரேஷன்ஸ் அபார்ட்மெண்ட் கூட்டமும், கல்கத்தாவிலிருந்து ஓடிவந்திருந்த அனிதாவின் ‘மாக்னெட்’ அப்பாவும் ஊட்டியின் மலர்க் கண்காட்சியில் மட்டுமே காணக் கிடைக்கும் மலர்க்கூட்டம்போலக் கூடி நின்றனர். நல்ல மணம் நிறைந்த இதயத்துடன் திரண்டிருந்தனர். ராமய்யா எச்சரித்து வைத்திருந்தபடி ஜெனரேஷன்ஸ் அபார்ட்மெண்ட் ஆட்கள் கீதாவின் முன்னால் – ரிக்கியை ஏற்கெனவே தெரிந்து கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்ளாமல், ரிக்கியின் விசிறிகள்போல் நடந்து கொண்டார்கள். 

திருமணப் பதிவுப் புத்தகத்தில் மணமக்கள் கையெழுத்திட்டனர். மியூசிக் ரிகர்ஸல் ஹாலில் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊட்டியே திரண்டு வந்திருந்தது. 

தங்கள் பங்களாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் – சித்தார்த், ரிக்கியை கீதாவுக்குத் தெரியாமல் ரிக்கியின் தனி அறைக்கு அழைத்துச் சென்றார். “ரிக்கி உன்னைப் பெத்த அம்மாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கப்பா சீக்கிரம்” என்றார். அம்மாவின் படத்தை மேஜையில் எடுத்து வைத்து செம்பருத்திப் பூக்களை வைத்து வணங்கினான் ரிக்கி. 

இந்த உண்மை தெரியாமல், கீதாவுக்குத்தான் அங்கே பரபரப்பு. அங்கும் இங்கும் ரிக்கியை அவள் தேடிக்கொண்டிருக்கும் போதே, சித்தார்த்தும் ரிக்கியும் ஹாலுக்கு வந்துவிட்டார்கள். அதனால் தப்பித்தார்கள். 

அவர்கள் ரிகர்சல் ஹாலுக்கு வந்தபோது அங்கே பெரும் கூட்டம் அலை மோதியது. 

மேடையில் மணமக்களை அமரச் செய்துகொண்டிருந்தாள் கீதா. கலெக்டர் அவசரமாக ஓடிவந்து சித்தார்த்தின் காதில் ரகசியமாக ஒன்றைச் சொன்னார். அதை, சித்தார்த் ரிக்கியிடம் காதில் சொல்ல, சித்தார்த்திடம் ரிக்கி ஏதோ கேட்டுக்கொண்டிருக்கிறான். சித்தார்த் முகம் பிரகாசித்தது. சித்தார்த் மைக்கிடம் வந்தார். 

“சில வெளிநாடுகளிலிருந்து ரிக்கிக்கும், ஹார்மோனி இசைக் குழுவிற்கும் அழைப்பு வந்திருப்பதை இப்போது நமது கலெக்டர் என்னிடம் தெரிவித்தார்” 

மக்களின் கைத்தட்டல் பெரிதாக ஒலித்தது. 

“அவசரப்படாதீர்கள். ஆனால், ரிக்கியின் விருப்பம் வேறுமாதிரியாக இருக்கிறது. அவன் இசையைப்போல ரிக்கிக்கு தற்சமயம் எந்த வெளிநாடு போகவும் விருப்பம் இல்லை.. அவனுடைய ஆசை எல்லாம் அவனது புதிய பாடலை நமது மக்களிடம் கொண்டு செல்வதே! அந்த இனிய புதிய இசையின் பெயர் ‘அன்புக்குரிய குழந்தைகள்!'” 

“இது ‘அனாதைக் குழந்தைகள்’ என்பதற்கான மாற்றுப்பெயர்! அந்த ‘அன்புக்குரிய குழந்தைகளுக்காக’, அன்பு, கருணை இரண்டையும் மக்களிடமிருந்து பெற்றிட ரிக்கியும் எங்கள் இசைக்குழுவும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் இசைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். தவிர, இந்தியாவின் புல்லாங்குழல் இசை மேதைகளிடம் தீவிரமான பயிற்சி மேற்கொள்ளவும் ரிக்கி ஆசைப்படுகிறான். ரிக்கியின் புதிய இசையும் ஆசையும் வெற்றிபெற வாழ்த்துவோம்.” 

கூட்டத்தினர் கைதட்டி ஆர்ப்பரிக்க, அவர்களிடம் ரிச்கி சில வார்த்தையாவது பேசித்தான் ஆகவேண்டும் என்று ரிக்கியிடம் சொல்லும்படி கீதா சித்தார்த் இருவரிடமும் கேட்டுக் கொண்டார் கலெக்டர். 

எழுந்து மைக்கிடம் வந்த ரிக்கி. விருந்தினரின் கைதட்டலுக்கு வணக்கம் தெரிவித்தான். ஆனால் வாய் திறந்து பேச்சு வரவில்லை. அந்த நெருக்கடியில் கணவனுக்குக் கைகொடுக்கிறாள் அனிதா அவள் தன்னுடன் கொண்டு வந்திருந்த புல்லாங்குழலை அவனிடம் தந்து, “இதன் மூலமா உங்கள் நன்றியைச் சொல்ல முடியுமே” என்று ரிக்கியிடம் சொல்கிறாள். 

ரிக்கி, புல்லாங்குழலை உதட்டில் வைத்து, குழலைத் தன் மனைவி அனிதாவின் இதழாக நினைத்து வாசித்த ஆரம்பித்திருப்பான் போலிருக்கிறது. வழக்கத்தைவிட அமுதாய் – தேனாய் இனித்தது அந்த கானம் ரிக்கியிடம் அவசரமாய் வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்ட கீதா, அவன் காதில் ரகசியமாக “இந்தாப்பாரு ரிக்கி, இன்னையிலேர்ந்து நீ என்னை ‘ஆன்ட்டி’ன்னு கூப்பிடக்கூடாது. ‘மம்மி’ன்னுதான் கூப்பிடணும். இனிமே, என் மருமகளுக்கு மட்டும்தான் நான் ‘ஆன்ட்டி’ புரிஞ்சுதா?” என்றாள். மைக்கின் மிக அருகில் வந்து “சரி மம்மி! நீங்க சொன்னமாதிரியே இனிமே உங்க மகன் நடந்துக்குவான்” என்று உரக்கச் சொல்லி விட்டுக் கீதாவைப் பார்த்தான் ரிக்கி. அந்த அன்புத் தாயின் முகத்தில் ரிக்கியின் குழல் இனிமையைவிட மிக இனிமையான பெருமிதப் புன்னகை பெரிதாய் மலர்ந்தது. ‘அந்தத் தாயின் மகிழ்ச்சி நிரந்தரமானது முழுமையானது முடிவற்றது’ என்று சொல்வதுபோல இசைக்கிறது – ரிக்கியின் புல்லாங்குழல்! 

(முற்றும்) 

– அழகிய தவறு (நாவல்), முதற் பதிப்பு: 2007, சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *