கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 2,017 
 

(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

6 – 10 | 11-15 | 16 – 20

11 

“அபாரம்டா ரிக்கி” என்று உதட்டை விரிக்காமலேயே, கையைப் பிரிக்காமலேயே ‘கைதட்டினார்’ ஹரிஹரன். கீதாவுடன் அங்கே வந்த ரிக்கி, அவரை ஒரு புதுமுகமாய்ப் பாவித்து, முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல் அவரைப் பார்த்த ரிக்கியின் புதிய பார்வை அப்படி அபாரமாக இருந்தது. 

“அப்பா இது யார் தெரியுமா?” -துள்ளி வந்தாள் கீதா. அந்த முகத்தில் எவ்வுளவு ஆழமான குதூகலம்! 

“நல்லாவே தெரியும்மா. இவ்வளவு நேரமா சித்தார்த் சொன்னதையெல்லாம் கேட்டதுக்கு அப்புறம்.” என்ற அவரை இடைமறித்தான் கீதா. 

“உங்களுக்கும் சந்தேகம் வந்திடுச்சா…?” குப்பென்று கோபம் வந்தது கீதாவுக்கு.

“எனக்கா? சந்தேகமா? நானே சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட டாக்டர்னு பேர் எடுத்தவன். எக்ஸ்ரே, ப்ளட் டெஸ்ட், அது, இதுன்னு பார்க்காம, பேஷண்ட்டோட முகத்தைப் பார்த்தே அவனுக்கு என்ன வியாதின்று சொல்லிடுவேன்” 

*ரிக்கி… நீ அறைக்குப் போயி இதையெல்லாம் வச்சிட்டு வா” என்று ரிக்கியை அனுப்பிவிட்டு தந்தையிடம் திரும்பினாள் கீதா. 

“சரி… இப்பச் சொல்லுங்க. இந்த ரிக்கி கொண்டாந்த லெட்டர்ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா இல்லியா?” 

“நாலு செங்கல்லை ஒரு மரத்தடியிலே அடுக்கி வச்சு, தண்ணி தெளிச்சுட்டு, சந்தனம் குங்குமம் பூசி ரெண்டு பூவை அதுமேல் வச்சவுடனே, நமக்குக் கடவுள் நம்பிக்கை வந்து செங்கல்லைச் சாமியா நினைச்சுக் கும்புட ஆரம்பிச்சிடுறோம். இந்த மாதிரி பூமியில பொறந்துட்டு, இந்தப் பையன் கொண்டாந்த கடுதாசியில் எழுதியிருக்கிறதைப் படிச்சிட்டு இந்தப் பையனை என்னாலே எப்படி சந்தேகப்பட முடியும்? இவனை நானும் உன்னை மாதிரியே நம்புறேன்” – கீதா தன் புருஷனைத் தைரியமாகத் திரும்பிப் பார்த்தாள். சித்தார்த்துக்கு முகம் இறுகிவிட்டது, ஹரிஹரனைக் கோபமாகப் பார்த்தார். 

ஹரிஹரன் சித்தார்த்தின் ஆத்திரத்தைப் புரிந்துகொண்டு, “சித்தார்த், என்னுடைய நம்பிக்கையைத் தப்பா எடை போடாதீங்க. இந்தப் பையன் உங்களை ‘அப்பா’ன்னு உரிமை தேடி வரலே. உங்க அன்புக்கு யாசகம் கேட்டு வந்திருக்கான்” என்றார். 

“என்னைத் தவிர இவனுக்கு வேற யாரும் அன்பு செலுத்துறதுக்கு ஆள் இல்லையா இந்த ஊரிலே? சொல்லுங்க அங்கிள்.” 

“பிச்சை எடுக்கிறவன்கூட எல்லார் வீட்டு முன்னாலேயும் நிக்கமாட்டான் சித்தார்த், கிடைக்கிற இடத்துலேதான் குரல் குடுப்பான். இவ்வளவு நேரம் இந்த ரிக்கியோட இசை ஞானத்தை நீங்க எத்தனை உயர்வாப் பேசுனீங்க அந்த நேரத்திலே இவன் மேலே உங்களுக்கு வெறுப்பு வந்துச்சா?” 

“விருப்பு வெறுப்பைப் பத்தி இப்ப நான் பேசலே. என் கேரக்டரையே களங்கப்படுத்துற மாதிரி இருக்கே இந்த லெட்டர், அதுக்கு என்ன சொல்றீங்க?” 

“உங்க கேரக்டரைப் பற்றி நான் ஒண்ணும் தப்பா நினைக்கவே இல்லே” 

“ஆனா இந்த லெட்டரை மட்டும் நம்புறீங்க. இப்ப எனக்குச் சந்தேகமா இருக்கு. இந்த நாடகத்துலே உங்களுக்கும் பங்கு இருக்குமோன்னு.” 

“நல்ல நாடகமா இருந்தா, மேடையிலே ஸ்கிரீனை இழுத்து – ஏத்துறவன்கூட பெருமைப் பட்டுக்குவான். தனக்கும் நாடகத்துலே பங்கு இருக்கிறதா நெனைச்சுக்குவான். அந்த வகையிலே பார்த்தா நீங்க சொல்ற இந்த நாடகத்துலே எனக்கும் பங்கு இருக்கு. ஏன்னா இந்த நாடகத்தாலே சந்தோஷப்படுற கீதாவுக்கு நான் தகப்பனா இருக்கேன். நீங்களும் நல்ல ஒரு ரசிகரா இருந்து பலமா கைதட்டுங்க. எந்தக் குழப்பமும் இல்லே, இதைப்போயி ஒரு அயோத்திப் பிரச்சினையாக்கி உங்க நிம்மதியைக் கெடுத்துக்காதீங்க. புதுப்புது ராகபாவங்களை நீங்க கண்டுபிடிக்கிறீங்க, அதெல்லாம் எங்கேருந்து வந்ததுன்னு, கேட்டு, ரசிக்கிற யாரும் கேள்வி கேக்கறது இல்லே. அதைப்போல இந்த ரிக்கியையும் யாரோ ஒருத்தரோட அருமையான கீர்த்தனையா நெனைச்சுப் பாருங்க, அதனோட மூலத்தைப் பத்தின ஆராய்ச்சி அநாயசியம்”

கீதாவிற்கு அப்பாவைத் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. 

ஹரிஹரனின் குணாதிசயத்தைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பவர் சித்தார்த். அவர் தனக்குச் சாதகமாகப் பேசவில்லை என்றாலும், அவருடைய பேச்சின் உள்ளடக்கமாக ஏதோ ஒன்று தனக்கு பக்கபலமாகவும், ஆதரவாகவும் இருப்பதை மட்டும் தெரிந்துகொண்டார். “இந்த ரிக்கி, ‘சித்தார்த்தின் மகன்’ என்று பொருள்படும்படியாக அவர் எந்த ஒரு வார்த்தையும் போடாமல், ‘ரிக்கிக்கு இருக்க இடம் கொடு’ என்ற தோரணையில்தானே பேசினார்?” என்ற ஆறுதலோடு சித்தார்த் தன் அறைக்குள் போய்விட்டார். 

தன் அறையிலிருந்து வந்த ரிக்கி கீதாவின் பக்கம் வந்து நின்றான். 

“கீதா, இந்த ரிக்கியை என்னோடு அழைச்சிட்டுப் போகட்டுமா?”. 

“எதுக்குப்பா?” 

“இவன் ப்ளூட் ப்ளே பண்றதைப் பத்தி மாப்பிள்ளை ஒரேயடியாப் புகழ்ந்தார். அது எந்த அளவுக்கு உண்மைங்கிறதை நான் தெரிஞ்சுக்க வேணாமா? அதுக்குத்தான்.” 

அப்பாவின் சங்கீத மோகம் தெரிந்ததே கீதாவுக்கு அவர் கேட்டதைத் தட்ட வழியில்லை. இப்பொழுது தனக்கும் ரிக்கிக்கும் சப்போர்ட் பண்ணி அவர் பேசியதிலிருந்து அப்பாவை சந்தேகப்படவும் அவசியமில்லை. 

“சீக்கிரமா அனுப்பிச்சிடுங்கப்பா” என்றாள் கீதா. ஆனால் ‘ரிக்கி’ என்கிற ரங்கராஜன் ரொம்பவும் பவ்யமாக, “இங்கே. இப்ப எனக்கு நிறைய வேலை இருக்கு. சாயந்தரம் சந்திக்கலாமே சார்” என்றபொழுது, டாக்டர் ஹரிஹரன், “அட வேஷக்காரப் பயலே. இப்படியெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் எனக்கு நீ அந்நியம் போலப் பேசி நடிக்கிறதுக்கு எங்கேடா கத்துக்கிட்டே?” என்று மனசுக்குள் சிரித்தபடி, “ஓகே. ஈவினிங் சந்திப்போம்” என்றபடி புறப்பட்டார். 


12

அந்தச் சாயந்திரத்துக்குள் கீதாவை இப்படி அப்படி என்றில்லாமல் அசாத்தியமாய் வியப்படையச் செய்துவிட்டான் ரிக்கி. 

டாக்டர் ஹரிஹரன் புறப்பட்டுப் போனதும் – கிச்சனுக்குள் ஏகமாய்ச் சத்தம் கேட்டு தன் அறையிலிருந்து ஒன்றும் விளங்காதவராய் வெளியே வந்தார் சித்தார்த். கீதாவுக்கும் ரிக்கிக்கும் கிச்சனில் கடுமையான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கீதாவை கட்டாயப்படுத்தி உட்காரச் சொல்லிவிட்டு அவள் எவ்வளவு தடுத்தும் கேட்க மறுத்த ரிக்கி, சமையலைக் கவனிக்க ஆரம்பித்தான். கிச்சனில் எது, எது எங்கே இருக்கிறது என்று கேட்பதற்கு அவசியமில்லாமல் விதம் விதமான பிளாஸ்டிக் டப்பாக்களில் ‘லேபிள்’ போட்டு வைத்திருந்தாள் கீதா. அவளுக்கு முதலில் ‘இது ஏதோ ரிக்கியின் தமாஷ்’ என்றுதான் தோன்றியது. ரிக்கி ஒரு சமையல் கலைஞன் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்! சித்தார்த்தும் மனைவி மாதிரியே ஒன்றும் புரியாமல் தனது அறைக்குப் போய் விட்டார். ஆனால், நேரம் போகப்போக, சமையல் அறையிலிருந்து வெளிவந்த நளபாக வாசனை – சித்தார்த்தை எழுந்து உட்காரச் செய்துவிட்டது. 

கீதாவோ ரிக்கியின் சமையல் நிபுணத்துவத்தைப் பார்த்து திக்குமுக்காடிவிட்டாள். இத்தனை வருஷ காலத்தில் அவள் கண்கள் இமைக்காமல் நெடுநேரம் இருந்த நாள் இன்றாகத்தான் இருக்கும். எத்தனை எத்தனை புத்தம் புதிதான வகையறாக்களை ரிக்கி செய்து காட்டுகிறான். 

“ஆன்ட்டி இதைக் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப்பாருங்க” என்று அவன் பீங்கான் தட்டில் கொடுத்த சாம்பிளை இடையிடையே அவள் ருசி பார்த்தபொழுது – மாய்ந்துபோனாள். ஆச்சரியத்தில் ‘இந்த ரிக்கிக்குள் எவருக்கும் சுலபத்தில் கை வராத அபூர்வக் கலைகள் – அதுதான் இசையும் சமையலும் – இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன’ என்று நினைத்தாள். “ரிக்கி இதெல்லாம் நீ எப்படிக் கத்துக்கிட்டே” என்றாள் திரும்பத் திரும்ப. “ஒருநாளைக்குச் சொல்றேன்” என்றான் அவனும் திரும்பத் திரும்ப. 

மத்தியானம் டைனிங்டேபிள் ஒழுங்குபடுத்தப்பட்டு, நடுநடுவே பூங்கொத்து ஜாடிகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்த இடமே மிக நவீனமாய்க் காட்சி தந்ததை சித்தார்த் விசித்திரமாகப் பார்த்தார். ரிக்கியின் சமையல் புராணத்தை கீதா காலட்சேபம் பண்ணிக் கொண்டிருக்க, அதைக்கேட்க விரும்பாதவர்போல் முகத்தைக் கடினமாக வைத்துக்கொண்டு ஊமைபோல சாப்பிடத் தயாரானார் சித்தார்த். 

“சாப்பாடு வேண்டாம்” என்று கோபத்தோடு மறுப்பார் என்றுதான் முதலில் கீதா நினைத்தாள். அப்படி நடந்து கொண்டால், வீட்டைவிட்டு ரிக்கி வெளியேறும் வரையில் அவர் வெளியில்தான் சாப்பிட வேண்டியதிருக்கும் என்பது சித்தார்த்துக்குத் தெரியும். ‘வீட்டுக்குள் வந்த பையன் விளையாட்டாய் நடந்துகொண்டு விளைவித்த குழப்பத்தைத் தானும் விளையாட்டாய் எடுத்துக்கொள்வது போலக் காட்டிக்கொள்ள வேண்டும்’ என்பது, அவர் சாப்பிட வந்ததின் மறுபக்க நோக்கங்களில் ஒன்று. மூடி வைக்கப்பட்டிருந்தவைகளைத் திறந்தபோது ஆவி பறக்க வந்த மணம் சமைத்தவற்றின் தனிச் சுவைக்கான கட்டியமாக இருந்தது. ரிக்கியின் தயாரிப்புகளை கீதா ஒவ்வொன்றாக எடுத்து அவரது பிளேட்டில் வைத்தபொழுது – அவையெல்லாம் சித்தார்த்திற்குப் புதுமையாக இருந்தது. அவர் சாப்பிடத் தொடங்கிய பொழுது, ரிக்கி நாகரிகமாகத் திரும்பிக்கொண்டு சிறிதாக ஒரு தும்மல் போட்டான். 

“உன்னை யாரோ நினைக்கிறாங்க” என்றாள் கீதா, சூடான தண்ணீர் க்ளாஸை அவனிடம் நீட்டியபடி தற்சமயம், ரிக்கி தொடர்ந்து புரையேறும் அளவிற்கு அவளை நினைத்து நினைத்து அவனுடைய சமையல் திறனை மனதார வியக்கிறவர் தன் புருஷனே என்பது கீதாவிற்குத் தெரியாது. 

“என்னைக்காவது ஒருநாள் இப்படி வகை வகையா ரசிச்சு ரசிச்சு சாப்பிடுவேன்னு நான் கனாதான் கண்டிருப்பேனா? அதுவும் நம்ம ரிக்கி கையாலே” என்று ஒரு குழந்தையைப்போல கணவனிடம் கீதா சொன்னபோது.”‘இன்னும் கொஞ்சம் போடு கீதா” என்று சொல்லத் தவித்தார் சித்தார்த், கௌரவம் பிரம்பை நீட்டியது. ஆனால் கீதாவே “இன்னும் கொஞ்சம். இன்னும்” என்று அவருடைய தட்டில் வைத்தபொழுது “போதும் போதும்” என்று ஒப்புக்கு நடித்தாரே தவிர, மனைவியின் கையைத் தட்டிவிடவில்லை. இந்த நளபாகக் கலையில் இவனுக்கு இத்தனை நேர்த்தியும் பக்குவங்களும் எப்படித்தான் கிடைத்தனவோ? சித்தார்த் சாப்பிட்டு முடித்து தன் அறைக்குத் திரும்பியதும் அப்படித்தான் யோசித்தார். அவன் கொண்டு வந்து தந்த கடிதக் குழப்பம் எல்லாம் அவருக்கு அந்த நிமிஷங்களில் மறந்தே போய்விட்டது. ஆனால், மறுபடியும். “இவன் யார்? எதற்காக இந்த வீட்டிற்குள் நுழைந்து நாடகமாடுகிறான்? இவன் முகமூடி எப்போது கிழியும்?” என்ற குழப்பம் அவருக்குள் உச்சம் பெற்றது. 

மறுநாள் காலை – தன் தோழி ஒருத்தியுடன் வந்த அனிதாவுக்கோ பலகோடி பெறுமான ஆச்சரியங்கள்! ரிக்கியின் சிறப்பு வகை டிபன் வகையறாக்கள், களங்கமில்லாமல் சிரித்தபடியே சுறுசுறுப்பாகப் பரிமாறிக்கொண்டே பேசும்விதம், மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கண்காணித்து ஆனந்தப்படுவதில் அவனுக்குள்ள ஈடுபாடு எல்லாம் அனிதாவை வியக்கச் செய்தன. ஹரிஹரன், மாரா, பிரான்சிஸ் இருவரையும் அழைத்துக்கொண்டு, அனிதா வந்து அரைமணி நேரம் ஆனபிறகே வந்தார். டாக்டரின் வலது இடது கைகளான மாராவும், பிரான்சிஸும் சரியான கில்லாடிகள். தன்னுடைய அந்த இரண்டு புறாக்களையும் நன்றாகவே பக்குவமாய் பயிற்சி கொடுத்து இப்போது அழைத்து வந்திருக்கிறார் டாக்டர். ரிக்கியை அவர்களுக்கு அவர் அறிமுகம் பண்ணிவைத்தபோது, ‘அப்போவ்’ அவர்கள் என்ன மாதிரி நடந்துகொண்டார்கள்! பிரம்மாதமாய் நடித்துவிட்டார்கள்! 

“என் பேரு மாரா. டாக்டர்கிட்ட கம்பவுண்டரா இருக்கேன். நான் அய்யா தயவுலே படிச்சு இந்த நிலைக்கு வந்தவன். நான் இருளர் இனத்தைச் சேர்ந்தவன்!” 

ரிக்கி, மனசுக்குள் “சூப்பர் ஆக்டிங்டா மகனே” என்று சொல்லிக் கொண்டான். 

“நான் பிரான்சிஸ். நான் தஞ்சாவூர்க்காரன் டாக்டர் சாருக்கு நான்தான் சமையல், காவல் எல்லாம்.” 

“கொப்புறானே” என்று ரிக்கி கூவிவிட்டான். 

“எங்க ஊனர் பேச்சாச்சே இந்தக் ‘கொப்புறாளே’, இது உங்களுக்கு எப்படித் தெரியும்?” 

“சேலமா, மதுரையா, திருநெல்வேலியா, ராமநாதபுரமா. கோயம்புத்தூரா, தஞ்சாவூரா எந்த ஊரா இருந்தாலும் அந்த ஊர்க்காரங்களோட ஒருநாள் பழகிட்டாப் போதும். நான் அப்படியே அவுங்க ஊர் தமிழ்லே பேசுவேன்” – ரிக்கி அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அனிதா அவனிடம் வந்து விட்டாள். அனிதாவைத் தூரத்திலிருந்து காட்டி தன் அப்பாவிடம் என்னமோ சொல்லிக்கொண்டிருத்தாள் கீதா. அவள் ரிக்கி வந்தது முதல் சிரிக்கத் தொடங்கிய அதிசயத்தைச் சொல்வதாய் இருக்கும். 

“ரிக்கி… நீங்க வந்து…” இழுத்தாள் அனிதா. 

“டேய் ரிக்கின்னு சொல்லு அனிதா. என்னை வா, போன்னு சொல்றவங்களைத்தான் எனக்குப் புடிக்கும்” – உண்மையாகவே சொன்னான் ரிக்கி. 

“நேத்து ப்ராமிஸ் பண்ணது ஞாபகம் இல்லையா?” 

அங்கே ஹாலின் ஓரத்தில் இருந்த மாஸ்டர் பியானோ மீது சாய்த்து வைத்திருக்கும் அந்தப் புல்லாங்குழலைக் காட்டினான் அனிதா. 

இத்தனைக்கும் மத்தியில் அதிகம் பேச விரும்பியும், பேச முடியாதவராய் நின்று கொண்டிருந்தார் சித்தார்த் நேற்றுவரை வெறிச்சோடிக் கிடந்த வீடு – இன்று பேச்சும் சிரிப்பும். ஆனந்தமுமாய் நிறைந்துவிட்டிருந்த மாற்றப் பொலிவை நினைத்து ஆச்சரியப்பட்டார். “நிம்மதியாய் உறங்க முடியாமல் தவித்த இந்த வீட்டில் இப்படி ஒரு உற்சவமா?” என்ற உச்சகட்ட உற்சாகம் அவருக்குள் ரசுசியமாய்க் கசிவதை மற்றவர்கள் அறியமாட்டார்கள். 

ரிக்கி, புல்லாங்குழல் எடுத்துவிட்டான்.

“ஆன்ட்டி எனக்குப் பக்கவாத்தியம் நீங்கதான். நீங்க பியானோவுல உக்காருங்க” – ரிக்கி சொன்னபடி கீதா பியானோவிடம் போய் உட்கார்ந்தாள். 

“நான் கடம் வாசிப்பேன். என்னையும் சேர்த்துக்க முடியுமா?” கெஞ்சினார் டாக்டர். சிரித்தபடி சம்மதித்தான் ரிக்கி. 

மாரா ஓடிப்போய் ஹாலில் பூக்களைச் சொருகி அழகுபடுத்தியிருந்த மண்பானையைக் கடமாக மாற்றி எடுத்து வந்து டாக்டரிடம் தந்தான். 

சித்தார்த்தின் கைகள் பரபரத்தன. தனது வயலினைத் தொடுவதற்கு. ஆனால் ‘வீம்புக் கயிறு’ அவர் கைகளைக் கட்டிவிட்டது. கையில் ஏதோ புத்தகம் ஒன்றைப் எடுத்துப் படிப்பதுபோல பாவனை செய்தார். அனிதாவோ ரிக்கியின் விரல்களும் உதடுகளும். நிகழ்த்தப்போகும் மாயாஜாலத்தை எதிர்பார்க்கும் பரபரப்பில் இருந்தாள். அவள் அழைத்து வந்தவள் அனிதாவின் சிநேகிதியாகத் தோன்றவில்லை. அனிதாவின் கட்டாயத்தால் துணைக்கு வந்தவள் போல, உற்சாகமாய் இருப்பவர்களையும் மந்தப்படுத்திவிடும் எரிச்சல் முகத்தோடு தெரிந்தாள் “அவள் மனசுக்குள் அப்படி என்ன குறை இருக்கிறதோ” என்று நினைத்துக்கொண்டாள் கீதா. 

புத்தகத்தில் கண்களை வைத்திருந்த சித்தார்த் திடுக்கிட்டுக் கீழே குனிந்தார். 

அங்கே ரிக்கி அவர் காலைத்தொட்டு கண்களில் ஒற்றியபடி… சித்தார்த் தன்னைச் சமாளிப்பதற்குள்…

“யூ ஆர் எ கிரேட் மாஸ்டர் இன் மியூசிக். உங்க இடத்துல ப்ளே பண்றதுக்கு நான் பெருமைப்படுறேன்” என்று எழுந்து நின்று சொன்ன ரிக்கி, சித்தார்த்தின் கண்களில் தெரிந்த திவ்யமான ஆச்சரியத்தையே ஆசீர்வாதமாக ஏற்றுக்கொண்டு புல்லாங் குழலை வாசிக்கத் தொடங்கினான். 

ரிக்கி இசைக்கத் தொடங்கிய ராகத்தைச் கேட்ட மாத்திரத்தில் சித்தார்த் புத்தகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சப்பணம் போட்டு கீழே உட்கார்ந்துவிட்டார். அவன் அங்கே வந்த நாள் முதல், ரிக்கியை எரிக்கும்படி பார்த்தவர், இப்போது இமைக்காமல் பார்க்கிறார். ஒரு இசை பயிலும் மாணவனைப் போல நெஞ்சில் கைகட்டி அப்படி என்ன ராகம் வாசித்துவிட்டான் ரிக்கி? 

‘தோடி’

அந்த அற்புத ராகத்தை- இந்த ‘ரிக்கி’ புல்லாங்குழலில் கொண்டு போகிறானே.. என்ன தெளிவு. எத்தனை துல்லியம்.. நாதம் எத்தனை சுத்தம்! பரிசுத்தம்! சித்தார்த் கிறங்கிப்போனார், புளகாங்கிதத்தில் ‘எங்கிருந்தோ வந்தான் கண்ணன்’ என்று அவர் உதடுகள் உச்சாடனம் பண்ணத் தொடங்கிவிட்டன. தன்னால் நான்கு தந்திகளை வைத்துக்கொண்டு வயலினில் வருடிப் பார்க்கும் அந்தத் தோடியை, புல்லாங்குழலின் ஆறு துளைகளின் மூலம் அந்தத் தோடியையே மயக்கிக் கொண்டிருக்கிறான் ரிக்கி. பாதிவரை ரிக்கிக்கு ஈடுகொடுத்த ஹரிஹரனும், கீதாவும் தங்கள் பக்கவாத்தியத்தை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள், அவர்களால் ரிக்கியிடம் தாக்குப்பிடிக்க முடியாதது ஒரு காரணம். ரிக்கியின் மாயநாதத்தில் அவர்கள் சிக்கிச் செயலற்றுத் தங்களை மறந்தது மறுகாரணம். ‘அந்த வாசிப்பில்தான் எத்தனை நுணுக்கம், லாவகம். காற்று அலைகளைத் தன் மந்திர விரல்களாலும் பூவிதழ் உதடுகளாலும் எப்படியெல்லாம் உருகச் செய்கிறான். ஒலியின் மென்மையை கைதேர்ந்த சிற்பியைப்போல எப்படி வருடுகிறான். ஆனந்தத்தின் ஊடே சோகரசத்தையும் கூடக்கலந்து தருகிறான். ஏன்? தன்னைச் சுற்றியிருக்கும் இந்த அன்புள்ளங்கள் தனக்கு நிரந்தரம் இல்லை என்ற ஏக்கமோ? இல்லை. இதுநாள்வரை அவன் அனுபவித்தறியாத பாசப்பிணைப்புகளின் ஐக்கியமா? சித்தார்த்தும் கீதாவும் அப்படித்தான் நினைத்தார்கள். “ரிக்கி. நீயும் உன் நாதமும் போல எங்களோடு நீ நிரந்தர பந்தமாகிவிட்டாய். நீ ஒரு கொலைகாரனாய் இருந்தாலும் சரி, நேர்த்தியான – கூர்மையான – நிகரில்லாத, இசைக்குப் பிறந்தவன் நீ! இசைக்கப் பிறந்தவன் நீ! இனி, எங்கள் உள்ளம் எல்லாம் உன் கைப் புல்லாங்குழலாக இருக்கும்” மனதிற்குள் உரத்த சிந்தையாய்ச் சத்தியம் பண்ணிக்கொண்டிருந்தார் சித்தார்த். 

அங்கே, எல்லோரும் சொல்லி விளக்க முடியாத தியான நிலைக்குப்போய், அந்த ஹால் முழுவதும் ஒரு ஸ்தபதியின் கலைக்கூடம்போல, அசையாத பதுமைகள் திரம்பியது போல ஆகிவிட்டது. 

ரிக்கி வாசித்து முடித்தான். உதட்டிலிருந்து புல்லாங்குழலை எடுத்த பிறகு ரிக்கிக்கு மட்டுமே தன் கானம் முடிந்தது தெரிந்தது. மற்றவர்கள் எல்லாம் சில விநாடிகள் கழித்தே சுயஉணர்வுக்குத் திரும்பினார்கள். 

முதலில் ஓடோடி வந்து அந்த மகனைக் கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்து அவன் கன்னத்தில் வாஞ்சையோடும் பெருமிதத்தோடும் முத்தம் கொடுத்தவள் கீதா. ரிக்கிக்கு இதையெல்லாம் தன் மனதிற்குள் செய்கிறவளாய்க் கண்மூடித் திறந்தான் அனிதா. 

சித்தார்த், ஒருகாலை முன் வைத்தவர், நின்றுவிட்டார். அவருக்கு இப்பொழுது ‘அவனை என்ன சொல்லிப் பாராட்டுவது’ என்று தோன்றவில்லையே தவிர, சுயகௌரவப் பிரச்சினையோ, தான் மனம் மாறிவிட்ட தோரணையைக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்ற எண்ணமோ கிடையாது. 

மாரா ஓடிவந்து ரிக்கியைத் தோளில் தூக்கிக்கொண்டு சுற்றிச் சுற்றி கூத்தாடத் தொடங்கினான். 

“ரிக்கி தம்பி, உன்னை எங்க சாதி ஜனத்துக்கிட்ட கொண்டு போயி, உன்னோட மகிமையைக் காட்டுறேன் பாரு. அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா? உன்னை கிருஷ்ணபரமாத்மாவா நினைச்சு எங்க இனத்தார் எல்லாம் உன்னைப் புடிச்சு வச்சுக்குவாங்க, அப்புறம் நீ இங்கே வரவே முடியாது.” 

மாராவுக்கு அவன் வாசித்த ராகம் ரிக்கியைப் போலவே என்ன ஏதென்று தெரியாது. தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லையே. அதைத் தெரிந்துகொண்டவர் மாதிரி ஹரிஹரன் சொன்னார். 

“ரிக்கி, ஜாதி, மதம், மொழி, நாடு, எல்லை, எல்லாவற்றையும் தாண்டி மக்களை இணைக்கிற சக்தி இசைக்கு மட்டுமே சாத்தியம். என்னா, அது கடவுளோட பாஷை. பராசக்தியோட தாய்ப்பால். நீ ரிக்கி இல்லே, ஞானசம்பந்தர், அதனாலதான் இந்த தெய்வீகக்கலை உனக்குள்ளே ஊத்தெடுத்திருக்கு” தன் தாயின் நினைவு வந்து ரிக்கி கண் கலங்கினான். 

அனிதா ஒருபக்கம் முகவாட்டத்துடன் தனியே உட்கார்ந்திருந்தாள். ரிக்கி அதைப் பார்த்து மாராவின் தோளை விட்டு இறங்கினான். கீதாவிடம் அனிதாவைக் காட்டினான். கீதா அனிதாவிடம் ஓடினாள். 

“என்ன அனிதா, என்னாச்சு உனக்கு?”

“ஒண்ணுமில்லே ஆன்ட்டி” 

“அப்புறம் ஈதுக்கு அழறே?”

“எனக்கே தெரியலே.” 

இப்பொழுதுதான் சித்தார்த் அனிதாவிடம் வந்தார். அங்கிருந்தவர்கள் எல்லாம் தன்னையே வேடிக்கை பார்ப்பதை உணர்ந்த அனிதா எழுந்தாள். அவள் முகம் நிமிர்த்தவில்லை, 

“என்ன அனிதா?” அவள் முகத்தைத் தூக்கி அன்போடு கேட்டார் சித்தார்த். 

“அங்கிள். இதுமாதிரி. இவ்வளவு சந்தோஷமான நேரம் இதுக்கு முன்னாலே எனக்குக் கிடைச்சது இல்லே.” அவள் இப்படிச் சொன்னது தனக்கும் பொருத்தமானதே என்று சித்தார்த் நினைத்தார். கீதாவும் அப்படித்தான் நினைத்தாள் என்பது அனிதாவுக்குத் தெரியுமா? 

‘இந்த வித்தையை நிகழ்த்திக் காட்டிய நிஜத்தின் பிறப்பிடம் ரிக்கியின் அன்பு மனம்தான்’ என்று ஹரிஹரன் உள்ளுக்குள் வியந்தார். 

அனிதாவின் கூந்தலை கீதா வாஞ்சையுடன் வருட, “ஆன்ட்டி! எனக்குத் தினம் தினம் இந்த அதிர்ஷ்டம் கிடைக்குமா? அது எப்படி முடியும்?” என்று அனிதா கண் கலங்கியபொழுது தான் ரிக்கியும் தடுமாறி விட்டான். அனிதா அப்படிச் சொன்ன அர்த்தத்தோடுதானே அவனும் இவ்வளவு நேரம் வாசித்தான். அனிதாவின் ஏக்கத்திற்குத் தீர்வு சொல்ல வேண்டிய தகுதி இப்பொழுது உண்மையிலேயே யாருக்கு உண்டு என்பதை கீதாவும், ஹரிஹரனும், ஏன் சித்தார்த்தும்கூட நொடிப்பொழுதில் தெரிந்துகொண்டார்கள். ரிக்கி அந்தத் தீர்ப்பைத் தீவிரமாக எதிர்பார்த்தான். 

‘எப்பேர்ப்பட்ட பொதுப் பிரச்சினை இது? இதற்கு ஒரு முடிவு சொல்லவேண்டிய கட்டாயம் அனிதாவின் மூலம் வந்தது சாதாரண நிகழ்ச்சி அல்ல. இதற்கெல்லாம் காரணம் – ரிக்கிவிடம் இறைவன் ஒப்படைத்திருக்கும் கலைத்திறனும் மனிதமும்தான்’ என்று பரிபூரணமாக நம்பினார் ஹரிஹரன். 

“அனிதா… இப்ப நான் சொல்லட்டுமா” என்று சொல்லி இடைவெளிவிட்ட சித்தார்த், கொஞ்சம் நிதானித்து, “உன்னோட ஏக்கத்தைப்பற்றி என்னைவிட உங்க ஆன்ட்டிக்கு அதிகமாத் தெரியும். இந்த நாள் மாதிரி தினம் தினம் உனக்குக் கிடைக்கிறதுக்கு உங்க ஆன்ட்டியே பொறுப்பு கவலைப்படாதே” என்ற சித்தார்த் கீதாவைத் தனது பார்வையால் அருகில் அழைத்தார். 

‘தன்னுடைய தீர்ப்பை எவ்வளவு திறமையாக கீதாவின் பக்கம் தன் மருமகன் திருப்பிவிட்டார்’ என்பதில் ஹரிஹரனுக்கு அமோக மகிழ்ச்சி. சித்தார்த்தின் நிரந்தர அங்கீகாரம் ரிக்கிக்குக் கிட்டி விட்டது என்பதை கீதா புரிந்துகொண்டாள். 

ரிக்கியைக் கடந்து போகும் தருணத்தில் சித்தார்த் நின்றார். தன்னைப் பார்க்கவே கூச்சப்பட்டுக் கொண்டிருக்கும் ரிக்கியிடம், “உன்னை மாதிரிக் கலைஞன் இப்படி வளைந்து நிற்கக்கூடாது. நிமிர்ந்து நிற்க வேண்டும்” என்று அவன் மோவாயைத் தொட்டுச் சொல்லி, அவன் முகத்தை நிமிர்த்திப் புன்னகைத்துவிட்டுக் கடந்து போனார். அவரது பேச்சில் ஒரு நேர்மையான கலைஞனின் உண்மையான பாராட்டு இருந்தது. அதேநேரத்தில்… ‘வளைத்து நிற்கக்கூடாது’ என்ற வார்த்தைகளின் மூலம், தனது வீட்டிற்குள் ரிக்கி பிரவேசித்த முறை எப்படி முறையற்றது என்பதையும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்திவிட்டார் என்றுதான் ஹரிஹரன் அர்த்தப்படுத்திக்கொண்டார். 

மதியச் சாப்பாடு இவ்வளவு சீக்கிரத்திலா என்று ஹரிஹரன் யோசிக்கும்பொழுதே… ரிக்கி கூடுவிட்டுக் கூடு பாய்ந்த மாதிரி – தன் புல்லாங்குழலை எடுத்து வைத்துவிட்டு சுறுசுறுப்பான சமையல்கார வேஷத்தைப் போட்டுக்கொண்டு – டைனிங் டேபிளை அழகுபடுத்தி எல்வோருக்கும் பரிமாறத் தொடங்கிவிட்டான். அனிதாவிற்குத் துணையாக வந்த சிடுமூஞ்சிகூட இப்பொழுது முகமலர்ச்சியோடு – அனிதாவோடு போட்டி போட்டுக்கொண்டு ரிக்கிக்கு உதவியாகச் செயல்படத் தொடங்கினாள். எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு அனிதாவும் ரிக்கியும் சாப்பிடாமல், மற்றவர்களைக் கவனிப்பதிலேயே மும்முரமாக இருப்பதைக் கண்டு, 
 
“இப்ப நான் யார் வீட்டுலே சாப்பிடுறேன்னு தெரியலே. துலே விருந்தாளிங்க மாதிரி நாம்ப விருந்து குடுக்கறவங்களா ரிக்கியும் அனிதாவும். அதனாலதான் இந்த சந்தேகம்” என்று வேடிக்கையாகப் பேச நினைத்த அப்பாவைப் பார்த்து சிறிதளவு கோபத்தோடு கீதா பதில் கொடுத்தாள். 

“இது ரிக்கி வீடுதான். அதுலே உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்” 

அந்தப் பதிலில் பரம திருப்திப்பட்ட ஹரிஹரன், ரிக்கியின் சமையல் ஆற்றலைப் புகழ்ந்து – பிரான்சிஸின் சமையலைத் திட்டித் தீர்த்து, கடைசியில் அனிதா – ரிக்கி இருவரையும் உட்காரச் சொல்லி கீதா பரிமாறி மகிழ்ந்தாள். ஹரிஹரன் தனது வீட்டிற்குப் புறப்படும் பொழுது ஏற்கெனவே கீதாவைக் கேட்டுக்கொண்ட மாதிரியே ரிக்கியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் – “ஒண்ணுமில்லே கீதா- ரிக்கியை இப்ப நான் அழைச்சிட்டுப்போறது எதுக்குன்னா, யாராச்சும் வயசான அம்மாவா பார்த்துக் கூப்பிட்டு ரிக்கிக்குத் திருஷ்டி சுத்திப் போடணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம்” என்றார். 

அதற்கு ஆமோதித்து கீதா உடனடியாகச் சம்மதித்தாலும், “உடனே பத்திரமா அனுப்பி வச்சிடுங்கப்பா” என்று கீதா அழுத்தமாகச் சொன்னாள். 

“வா அனிதா, உன்னை வழியிலே ‘ட்ராப்’ பண்றோம்” என்று ரிக்கி அழைத்தபோது, அந்த அழைப்பில் இருந்த நெருக்கமான அன்பும் அக்கறையும் அனிதாவிற்குத் தந்த வெட்கமும், மகிழ்ச்சியும் எப்படிப்பட்டது என்பதை கீதா மட்டுமே உணர்ந்தாள். ஆனால், “அனிதா இங்கே என்னோடு இருக்கட்டும். அனிதாவின் ஃப்ரண்டை மட்டும் நீங்க ஹாஸ்டலில் ‘ட்ரஸ்’ பண்ணுங்க” என்றாள் கீதா. 

அவர்கள் புறப்பட்டுச் சென்றதும், தனது அறைக்குள் அனிதாவை அழைத்துச் சென்ற கீதா, நேற்று அவளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை மறக்காமல் அந்த ‘சஸ்பென்ஸ்’ என்னவென்பதை அனிதாவிடம் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு போட்டு உடைத்தாள். ‘எதிர்பாராத அந்த உண்மையை’ அறிந்த மாத்திரத்தில் அனிதா உறைந்து போனாள். எதுவும் பேசமுடியாது கீதாவின் மடியில் படுத்து அவள் அழுது தீர்த்தாள் ஆனந்தத்தோடு. 


13 

ஹரிஹரன் வீட்டை விட்டு அன்று இரவு நகர மறுத்துவிட்டான் மாரா. ஹரிஹான் எப்பொழுதுமே மாரா, பிரான்சிஸ் இருவரையும் வேலையாட்களாய் நினைத்ததில்லை. அவர்கள் இருவருமே தன் குடும்பத்தினர்தான் என்று நினைக்கிற மனப்பாங்கு அவருடையது. அதனால் அவர்களையும் பக்கத்தில் உட்காரச் சொல்லி, சித்தார்த்தின் வீட்டினுள் ரிக்கி பிரவேசிந்தது முதல் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமான அடிப்படை நோக்கத்தை ரிக்கியிடம் விவரமாக இப்போது கேட்க அவசரப்பட்டார். 

“இப்படியெல்லாம் நடந்துகொள்ள உனக்கு அவசியம் என்ன? “

“ஆன்ட்டியும் அவுங்க ஹஸ்பெண்டும் வச்சிருக்கிற ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்புக்கு என்ன பெயர் சொன்னீங்க” 

“ஹார்மோனி!” 

“அவங்களோட ஆர்க்கெஸ்ட்ராவுலே, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிந்துகொண்டு, எத்தனை அழகா இணைஞ்சு, இசைக்கிறாங்க, அத்த ஒருங்கிணைந்த கீதம் – ஹார்மோனி எல்லாம் ஆன்ட்டி வீட்டுல இல்லவே இல்லேன்னு தெரிஞ்சப்ப நான் எடுத்த அதிரடி நடவடிக்கைதான் இது” 

“இந்த தைரியம் உனக்கு எப்படி வந்துச்சு?” 

“ஒரு உயிரைக் காப்பாத்தனும்னு வெறி வந்துட்டா முடவன்கூட சமுத்திரத்துலே நீச்சல் அடிப்பான்னு படிச்சிருக்கேன்;” 

“இதுலே எவ்வளவு ரிஸ்க் இருக்கு தெரியுமா?” 

“நீங்க அன்புக்கு எத்தனை வலிமை இருக்குன்னு சொல்லிக் குடுத்தீங்க அப்புறம் ரிஸ்க்கைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்?” 

“சரி… நீயே எழுதி அவுங்ககிட்டே கொடுத்த கடிதத்துலே, உன்னைப் பெத்த தாய்க்கு எப்பேர்ப்பட்ட அவப்பெயரை உண்டாக் கிட்டே அது உனக்குத் தெரியுமா?” 

“சார், திருப்பி வேண்ணாலும் அந்த லெட்டரை இன்னும் பல தடவைப் படிச்சுப் பாருங்க. ஒரு பெண் தன் மகனை அவனுடைய தகப்பன்கிட்ட அனுப்பின அர்த்தமே அதுவே சுத்தமா கிடையாது. யாரோ ஒரு ஏழை, அது ஆணோ, பெண்ணோ, தன்னோட மகனுக்கு இரக்கம் காட்டி அடைக்கலம் கொடுக்கும் படியா உங்க மருமகனைச் கெஞ்சுற மாதிரித்தான் எழுதியிருக்கேன்” 

தன்னைத் திகைத்துப் பார்த்த ஹரிஹரனிடம் தொடர்ந்து ரிக்கி சொன்னான்- 

“எனக்கும் உங்களுக்கும் பிறந்த பிள்ளைதான் இந்த ‘ரிக்கி’ங்குற பொருள் படும்படியா அந்த லெட்டர்லே நான் எழுதலே. ஆனா, லெட்டரைப் படிச்சதும் அவுங்களுக்கு ஏற்பட்ட மன அதிர்வுலே, அவுங்களா அப்படித் தீர்மானிச்சுக்கிட்டாங்க. ஏற்கெனவே அவுங்களுக்கு இருந்த கசப்பான மனநிலையிலே ஆழமாப் படிக்காம, அவசரமா வேற அர்த்தம் எடுத்துக்கிட்டாங்க. அதை நான் எதிர்க்கவும் இல்லே, மறுக்கவும் இல்லே. காரணம், நான் எதிர்பார்த்ததே அதைத்தான். அதுதான் உண்மை. மென்மையான அவங்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்படும்போது அவங்களுடைய நிதானம் காணாமப் போயிடும்னுதான் படிச்சிருக்கேன். இனி அவங்க ரெண்டு பேரும் பிரியமாட்டாங்க ஆன்ட்டியோட புத்திர ஏக்கம் ஜெயிச்சிடுச்சு. என்னை அவங்களோட தத்துப் பிள்ளையா நான் நினைக்கிற மாதிரி, நீங்களும் நினைச்சுக்குங்க டாக்டர் சார்.” 

“எத்தனை காலத்துக்கு உன்னாலே இப்படி நீடிக்க முடியும்? நீ யாருங்குற உண்மை அவங்களுக்கு என்னைக்காவது ஒருநாள் தெரியாமப் போகாது ரிக்கி!” 

“அப்படி அவுங்க தெரிஞ்சுக்காம இருக்குறதுக்கு உங்களோட ஒத்துழைப்பு எனக்கு இருந்தாப் போதும்.” 

“அது எப்படி?” 

“இன்னைக்கி மாதிரியே, என்னை முன்னே பின்னே தெரியாத மாதிரி நீங்களும், மாரா, பிரான்சிஸும் தொடர்ந்து நடிச்சா போதும்” 

“நாங்க நடிக்கலாம். உன்னைத் தெரிஞ்ச வேற யாராவது உன்னைக் காட்டிக் குடுத்துட்டா?” 

“என்னைத் தெரிஞ்சவங்கள்லாம் எங்க வீட்டு ராமய்யா, கல்யாணி, அவுங்களோட எஜமான், எஜமானிதான். ஆனா, ஜெனரேஷன்ஸ் அப்பார்ட்மெண்ட் ஜனங்களும் சரி, ராமய்யா கல்யாணியும் சரி, எங்க அப்பா காட்டுன அழுகின பிணத்தை நான்தான்னு இப்பவும் நம்பிட்டிருக்காங்க இப்ப என்னைத் தெரிஞ்சவங்க நீங்க மூணு பேரும்தான். அதனாலதான் உங்க உதவியைக் கேக்குறேன். ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் சார். கீதாம்மாவோட தூய்மையான பாசத்துக்கு முன்னாலே நான் அவங்க வயித்துலே பிறந்தவனாவே என்னை நினைக்கிறேன். அவங்களோட குடும்ப சந்தோஷத்துக்காக மட்டும் இல்லே, எனக்குக் கிடைச்சிருக்கிற இன்னொரு தாயான அவங்களை விட்டும் நான் என்னைக்குமே ஓடிடமாட்டேன் சார்” 

“ரிக்கி பெத்த தகப்பனா இருந்தும் என்னாலேயே என் மகளோட எதிர்காலத்தைக் காப்பாற்ற வழி தெரியாம தவிச்சிக்கிட்டிருந்தேன். என்னோட வேடிக்கையான பேச்சு, சிரிப்பு எல்லாம் செயற்கையான ஒண்ணுங்குறது யாருக்குமே தெரியாது. ஆனா எங்கிருந்தோ வந்த நீ மட்டும் என் மனசைப் புரிஞ்சிக்கிட்டு, என் மகளுக்கு மகனா வந்து என் வேதனையைப் போக்கிட்டே, எப்படி இருக்குன்னா. மழை, வெள்ளத்தாலே மத்தவங்கள்லாம் மடிஞ்சு பரிதவிக்கிறப்ப, என் வீட்டுக் கிணறு மட்டும் நிறைஞ்சு வழியுதேன்னு சந்தோஷப்படுறவன் மாதிரி! நீ உன்னையே அடமானம் வச்சு, உனக்கு வரப்போற சிக்கலையும் பாதிப்புகளையும் சந்திக்கத் தயாராகி, அவுங்க ரெண்டுபேரையும் ஒண்ணு சேர்த்து வைக்கப் போறதைப் பார்த்து நான் சுயநலத்தோட சந்தோஷப்படுறதும் அப்படித்தான் இருக்கு” 

ஹரிஹரன் முதன்முறையாக இப்படி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசின விதத்தை இன்றுதான் பார்க்கிறார்கள் மாராவும் பிரான்சிஸும். 

போன் அடித்தது. 

ஹரிஹரன் எடுத்தார். கீதாதான். 

“என்னப்பா இன்னும் எவ்வளவு நேரத்துக்குத்தான் ரிக்கிக்கு திருஷ்டி சுத்திட்டிருப்பீங்க.. மழை போட ஆரம்பிச்சிருச்சு, ஸ்வெட்டர் கூட போடாம அவன் வந்திருக்கான்; உடனே இப்பவே ரிக்கிய உங்க காரிலே கொண்டாந்து விடுங்க. நான் வாசல்லியே நிப்பேன், குடையே பிடிக்காம ஞாபகத்துலே வச்சுக்குங்க..” ஹரிஹரன் பதில் சொல்வதற்குள் பொறுக்காமல் அந்தத் தாய் உள்ளம் போனை வைத்துவிட்டது. ஹரிஹரன், கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக்கொண்டார். 

“ரிக்கி என் மகளுக்குக்கூட உனக்குக் கிடைச்ச மாதிரியான தாய்ப்பாசம் கிடைச்சதில்லே. அவ பிறந்து மூணு வருஷத்துலேயே அவங்க அம்மா இறந்துட்டா. வாப்பா, சீக்கிரம் போகலாம் ‘உங்க அம்மா குடைபிடிக்காம மழையிவே நிற்கிறாளாம்” 

ஹரிஹரன் சொல்லி முடிப்பதற்குள் ஓடோடிப் போய்க் காரில் உட்கார்ந்துவிட்டான் ரிக்கி.

கோயம்புத்தூர் ‘ஜெனரேஷன்ஸ்’ அபார்ட்மெண்ட் காம்பவுண்டுக்குள் ஹரிஹரனின் கார் வந்து நின்றது. ஊட்டியிலிருந்து வருகிற வழியெங்கும். இப்பொழுது, லிஃப்டில் மூன்றாவது ஃப்ளோருக்குப் போய்க் கொண்டிருக்கும் பொழுதும்கூட, டாக்டரின் மனத்தில் திரும்பத் திரும்ப ஒரே ஒரு கேள்விதான்; அவரால் சரியா, தப்பா என்று முடிவு செய்ய முடியாத ஒன்றாய் அது நிலைகுத்தி நிற்கிறது. ரிக்கி இறந்து விட்டான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் எல்லோருக்கும், ரிக்கி இப்பொழுது ஊட்டியில் உயிரோடு இருப்பதைச் சொல்வது பல விபரீதங்களை உருவாக்கும். ஆனால் தனது சிநேகிதர்களில் ஒருவருக்கு மட்டும் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறார். அந்த ஒருத்தர் விஸ்வநாதய்யர், ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். ஞானஸ்தர். கண்ணியமானவர். அவரிடம் உண்மையைச் சொல்வதன் மூலம் ரிக்கியின் எதிர்காலப் பாதுகாப்புக் குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வரலாம். ஆனால், என்னதான் விஸ்வநாதய்யர் ஹரிஹரன் சொல்வதை மற்றவர்களிடம் மறைத்தாலும் அவருடைய மனைவியிடம் சொல்லாமல் இருப்பாரா? அங்கேதானே எந்த ஆண்பிள்ளையும் தோற்றுப் போகிறான். அதை நினைத்துப் பயந்துகொண்டு விஸ்வநாதய்யரிடம் சொல்லாமலே விட்டுவிட்டால், நாளைக்கே ரிக்கியைப் பொறுத்தவரை ஏதாவது வில்லங்கம் முளைத்தால், “எல்லாம் முத்தின பின்னாலே பேஷன்ட்டைக் கொண்டாந்திருக்கீங்களே, கொஞ்சம் முன்னாடியே கொண்டு வந்து காட்டியிருக்கக்கூடாதா? இப்பொழுது என்னால் என்ன செய்ய முடியும்?” என்று பலபேரிடம் தனது டாக்டர் தொழிலில் தான் வழக்கமாய்ச் சொல்லி வரும் கைவிரிப்புப் பேச்சுத்தான் அவரது நினைவிற்கு வந்ததும் 

“வாங்க வாங்க… லோகி, இங்கே யார் வந்திருக்கர பாரு”- ஹரிஹரனை வரவேற்ற விஸ்வநாதய்யர் உற்சாகத்தோடு மனைவியைக் கூப்பிட்டார். “லோகி’ என்ற லோகநாயகி காப்பியுடன் சிரித்துக் கொண்டு வருவாள் என்று நினைத்தால், அந்த அம்மாள் தூக்கக் கலக்கம் போகாத மனுஷிமாதிரி, “வாங்க சௌக்கியமா?” என்று சுரத்தே இல்லாமல் மாமூல் உபசரணை செய்தாள். 

“என்ன விஸ்வம்? அவங்களுக்கு உடம்புக்கு ஏதாச்சும் முடியலையா?”-ஹரிஹரன் அப்படி நினைத்துத்தான் கேட்டார். அப்புறம் விஸ்வநாதய்யர் விபரம் சொன்னதும்தான் ஹரிஹரனுக்குப் புரிந்தது. 

“அந்தப் பையன் ரங்கராஜன் போனதுலேருந்து, இந்த அபார்ட்மெண்ட்டுலே எல்லோரும் அவா அவா ஆத்துலே இன்னமும் துக்கம் கொண்டாடிண்டிருக்கா. இப்ப உங்களைப் பார்த்ததும் இவளுக்கு நீங்களும் துக்கம் விசாரிக்க வந்த மாதிரித் தோணிருக்கு. நீங்களும் இங்கே வர்றப்ப எல்லாம் அவனைப் பத்தித்தானே நாம் பேசுவோம்” 

ஹரிகரன் குழம்பிவிட்டார். “யார் அந்த ரங்கராஜன்” என்றார். “அதான் ஹரி… ரிக்கி! அவனோட முழுப்பேரு ரங்கராஜன் ஆச்சே. ஷார்ட்டா செல்லமா ‘ரிக்கி’ன்னு, யாரு அவனை அப்படிக் கூப்புட ஆரம்பிச்சாங்கன்னு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது” 

பத்திரிகையில்கூட ‘ரிக்கி’ என்கிற ‘ரங்கராஜன்’ என்று வந்திருந்ததைப் படித்த ஞாபகம் இப்பொழுதுதான் ஹரிஹரனுக்கு வந்தது. 

“நீங்க அந்த ரிக்கி ஃப்ளூட் வாசிக்கறதைக் கேக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டீங்க. கடைசிவரை அது நிறைவேறாமலே போயிடுத்து, காப்பி சாப்பிடுங்கோ” 

ஹரிஹரன் நிலைதான் பரிதாபம். தினம் தினம் அவர் இப்பொழுது ரிக்கியின் முகத்தைப் பார்ப்பதையும், அவனுடைய கானத்தைக் கேட்பதையும், இவர்களிடம் சொன்னால் எப்படியிருக்கும்? “நடப்பது எதுவுமே தெரியாத இவர்கள் இப்போது எனக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.” என்று நினைத்துச் கொண்டார். மீண்டும் ஹரிஹரனுக்கு அந்தச் சந்தேகம். இவர்களிடம் சொல்வதா, இல்லை மறைப்பதா? எது சரி? 

“ஹரி… நீங்க பேப்பர்ல படிச்சிருப்பீங்களே ரிக்கியோட டெத்தைப் பற்றி?” 

“படிச்சேன்.”

“கொலையா தற்கொலையான்னு குழம்புறதாச் சொன்ன போலீஸ், இப்ப ‘தற்கொலை’ன்னு ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கா..” 

“அது எப்படி? முதல்லே அந்தப் பிணம் ரிக்கிதானான்னு அவுங்க எப்படி முடிவுக்கு வந்தாங்க?”ஆத்திரப்பட்டார் ஹரிஹரன்.

“ஹரி, ரிக்கியோட அப்பா நினைச்சதைச் சாதிக்கிறதுல மஹா மஹா அரக்கன். அவன் மனசு வச்சான்னா, இந்தப் புரபஸர் வைத்தியநாதய்யர்தான் என் மகனைக் கொன்னுட்டான்னுகூட கேஸை ஜோடனை பண்ணிடுவான். அந்த மாதிரியான பேர்வழிக்கு ஏத்தாப்ல அந்த அதர்ம பத்தினி காமினி. அவளோட சைத்தான் மூளையிலே கால்வாசிகூட பம்பாய் பூரா குண்டு வச்சு நாசம் பண்ணவாளுக்கு இருக்க முடியாது. அவ திட்டம் போட்டாள்னா புருஷன்காரனையே பஜ்ஜி பண்ணிடுவா. இப்ப மட்டும் என்ன ரிக்கி இல்லேன்னு ஆனதுக்கு அப்புறம் அந்த வீட்டுக்குள்ளே அந்த ராட்சஷி என்னென்னமோ செஞ்சிட்டிருக்கிறதா புரளி வந்திட்டிருக்கு” 

“என்ன புரளி?” 

“புரளின்னாலே அதுல தம்பிடி அளவுக்கு உண்மை இருக்கும். அதை உங்ககிட்டே சொல்லி வதந்தியைப் பரப்ப எனக்கு இஷ்டம் இல்லே.” 

வைத்தியநாதய்யர் எதையோ சொல்லத் தயங்குவதை ஹரிஹரன் புரிந்துகொண்டார். 

இப்பேர்ப்பட்ட மனுஷனிடம் ரிக்கி உயிரோடு இருப்பதைச் சொல்லாமல் இருப்பது நல்லது என்று முடிவு பண்ணிவிட்டார் டாக்டர் ஹரிஹரன். மற்ற ஃப்ளாட்களில் இருந்த இதர நண்பர்கள் வந்து, தான் எதையாவது உளறிவிடுவதற்குள் அங்கிருந்து போய்விடுவது நல்லது என்று நினைத்தார். ஆனால், அவர் புறப்பட்டு வந்த நோக்கத்தில் ஒன்று மிச்சமிருக்கிறதே. 

“ஏன் மிஸ்டர் வைத்தி. ரிக்கி வீட்டுலே ராமய்யான்னு ஒரு சமையல்காரர் இருக்காரா?” 

“ஓ கிருஷ்ண பக்தரா? அவர் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” 

“நம்ம ஃப்ரண்ட்ஸ், இங்கே, எப்பவோ ரிக்கி பத்திப் பேசினப்போ, எங்கிட்டே சொன்ன ஞாபகம்!” 

“அந்த ராமய்யா சாதாரண சமையல்காரர் இல்லே. ஒரு மகா புருஷன்.. 

71* இயக்குநர் மகேந்திரன் 

எங்க மாதிரி ஆசார வேஷம் போடுற மனுஷா எல்லாம் அவர்கிட்டேதான் மனுஷாள் எப்படி நிஜமா வாழனும்னு கத்துக்கணும். நீங்க கேட்டா நம்பமாட்டேன்.  ரிக்கி இறந்துட்டான்னு தெரிஞ்சதும் ‘என் ரிக்கி சாகலே, அவன் சாகமாட்டான்’னு புலம்பிட்டு, பித்துப்பிடிச்ச மாதிரி இன்னைக்கு வரைக்கும் அந்தக் கிருஷ்ணன் கோவில்லேயே விழுந்து கிடக்கிறார். ரொம்பவும் அன்பான எஜமானியாட்டம் நடிச்சுட்டு அந்த காமினி மட்டும் அப்பப்ப கோயிலுக்குப் போயி அந்த ராமய்யாவைப் பார்த்துட்டு வந்திட்டிருக்கா. எல்லாம் வேஷம்” 

“அந்த ராமய்யாவை நான் பார்க்கணுமே? 

“எதுக்கு நீங்க பார்க்கணும்?” 

“ராமய்யாவுக்குப் பூர்வீகம் எல்லாம் ஊட்டிதான்னு நம்ப நண்பர் வின்சென்ட் அடிக்கடி எங்கிட்டே சொல்லியிருக்கார். அதான் அவரைப் பார்த்தா, என்னாலான உதவிய அவருக்குச் செய்ய முடியும். அதுவும், நீங்க எல்லோரும் நேசிச்ச அந்த ரிக்கிக்கு செய்யற மாதிரியான ஒரு திருப்தி உங்களுக்கும் கிடைக்கும். அந்த ராமய்யாவை ஊட்டியிலே இருக்கிற அவரோட பந்துக்களோட் என்னாலே சேர்த்துட முடியும்.” 

அபாரமாய் புளுகி சமாளித்து ஜெயித்துவிட்டார் ஹரிஹரன்.

“உங்களுக்கு நல்ல மனசு ஹரி. அந்த ரிக்கி உயிரோட இருந்தவரைக்கும் அவனுக்கு ஆறதலாகவும், பக்கபலமாகவும் இருந்தது ராமய்யாதான். வாங்க, இப்பவே போகலாம் ஆனா, ஒரு கண்டிஷன். உங்களைக் கோயில்வரை அழைச்சிட்டுப்போய் ராமய்யாவைக் காட்டிட்டு ஓடி வந்திடுவேன். நீங்க மட்டும் தனியாய்ப் போய் அவர்கிட்டே பேசுறது உத்தமம். ஏன்னா நான் ராமய்யாகிட்டே பேசுறதை யாராவது பார்த்துச் சொல்லிட்டா போச்சு. அதுக்கு ஆயிரம் அர்த்தம் எடுத்துட்டு அந்த துர்தேவதை காமினி எனக்கு என்ன கெடுதல் செய்வாள்னு சொல்ல முடியாது!” 

அவர் அப்படிப் பின்வாங்கிப் பேசியதும் ஹரிஹரன் எதுவும் சொல்லவில்லை. 

“அப்பேர்ப்பட்ட தைரியசாலியா நீர்? உன்னை மாதிரி ஜென்மங்கள் இருக்குறதாலேதான் இப்பல்லாம் அதர்மம் சத்தியத்தை முதல் ரவுண்ட்டிலேயே ‘நாக்-அவுட்’ பண்ணிடுது” – உள்ளுக்குள் கொதித்தார் ஹரிஹரன்.


14 

கிருஷ்ணன் கோயிலில் இத்தனை நாளாய் தவம் கிடந்த ராமய்யா, ஹரிஹரன் சொன்னதை யெல்லாம் கேட்டதும் கண்ணீர்விட்டபடி, “கிருஷ்ணா… கிருஷ்ணா.. என் பிரார்த்தனை வீணாப் போகலே, எங்க ரிக்கியை நீதான் இந்த நல்லவங்ககிட்டே கொண்டு சேர்த்திருக்கே. பகவானே..” குழந்தைபோல விம்மிவிட்டார் ராமய்யா. “இப்பவே நாள் தம்பியைப் பார்க்கணுங்களே” – ராமய்யா கையெடுத்துக் கெஞ்சியபொழுது, “அவசரப்படாதீங்க. நேரம் வரட்டும். உங்ககிட்டே மட்டும்தான் அவன் உயிரோட இருக்கிறதப் பத்தி ரிக்கி சொல்லச் சொன்னான். அதுதான் ஓடிவந்தேன். இப்ப, நீங்க மறுபடியும் ரிக்கி வீட்டுக்கு வேலைக்குப் போய்ச் சேரணும்.” 

“எதுக்குய்யா அந்த நரகத்துக்கு?” 

“காரணம் இருக்கு, ரிக்கி இருக்கிறது அந்த காமினிக்கோ அந்த மனுஷனுக்கோ எப்பவாவது தெரிய வந்தா மறுபடியும் ரிக்கிக்கு அவுங்களாலே சோதனைகள் தொடங்கிவிடும். அப்படி அவங்களுக்குத் தெரியும் பட்சத்திலே, என்னை நீங்க தொடர்பு கொண்டீங்கன்னா..ரிக்கியை பத்திரப் படுத்த எனக்குச் சௌகரியமா இருக்கும்.” 

“வாஸ்தவம்தான்யா, ரிக்கி செத்துட்டதை இவங்களே நிச்சயப்படுத்தினவுடனே அந்த காமினி செஞ்ச முதல் காரியம் என்ன தெரியும்ங்களா? ரிக்கிக்கு சேரவேண்டிய சொத்து பங்கை யெல்லாம் அந்தப் பொம்பளை தன் பேருக்கு எழுதி வாங்கிருச்சு. நீங்க சொன்ன மாதிரி ரிக்கி விஷயம் அவளுக்குத் தெரிஞ்சா ரிக்கிய ஆளைவச்சு தீர்த்திடுவா. இப்ப ரிக்கி அப்பாவோட நிலைமையே மோசமா இருக்கு. சொத்து பத்து ஒண்ணுகூட இப்ப அவர் பேருலே இல்லே. அந்த ஆளை சதாகாலமும் குடிக்கவச்சு அவரைக் கண்ட கண்ட பத்திரத்துலயும் கையெழுத்து வாங்கிருச்சு. நாளைக்கே காமினி அவரை வெளியே போடான்னா ரிக்கி அப்பா தெருவுக்கு வாவேண்டியதுதான். தற்சமயம் அந்த அரக்கி அதைச் செய்யாம் இருக்கக் காரணம் அவளுக்கு மட்டும் ரிக்கி சாகலேங்குறது தெரியும். அவ சொல்லித்தான் யார் பிணத்தையோ தன் பிள்ளைன்னு இந்த ஆள் போலீஸ்கிட்ட சத்தியம் பண்ணிச் சொன்னார்.. அதுமட்டும் இல்லே..ரிக்கி அம்மாவை அந்த ஆள் எப்படி மோசடி பண்ணி, கோர்ட்டுலே கேவலமான பொய்யைச் சொல்லி சாகடிச்சாருங்குற உண்மை காமினிக்குத் தெரியும். அதுக்குப் பயந்துதான் அந்த மனுஷி சொல்றதுக்கெல்லாம் அந்த ஆள் ஆடிக்கிட்டிருக்காரு. இப்பக்கூட என்னை இங்கே வந்து அந்தக் காமினி அப்பப்ப வந்து எட்டிப் பார்க்குறது ஏன்? ரிக்கி அம்மா இறந்த காரணம் எனக்கும் தெரியும்ங்கறதாலதான்.”

ஹரிஹரனுக்கு இது புதிய சேதியாக இருந்தது. ராமய்யாவே சொன்னார். “சார், உங்களுக்குத் திகைப்பா இருக்கா? இதுக்கு நான் சாட்சி. தன் அம்மா எதுனாலே தற்கொலை பண்ணிக்கிட்டாங்க; அதெல்லாம் ரிக்கிக்கு தெரியவே தெரியாதுய்யா. இங்கேருந்து ரிக்கி போகும்போது, ஒரு சிவப்புக் கவர்லே வச்சு இதைப்பத்தியெல்லாம் விளக்கமாக எழுதின ஒரு கடுதாசியை ரிக்கிக்கிட்டே குடுத்தேன். நீ பெரிய ஆளா நிமிர்ந்து நின்னதுக்கு அப்புறம் அதைப்படிச்சுப் பாருப்பான்னு சொல்லியிருக்கேன்.” 

ஊட்டிக்குத் திரும்பிய ஹரிஹரன் நேராக மகள் வீட்டிற்குத்தான் போனார். ராமய்யா கொடுத்து அனுப்பிய செம்பருத்திப் பூக்களும் அவரோடு பத்திரமாக வந்திருந்தன. 

‘அந்தச் சிவப்பு நிறம் கொண்ட கடித உறையை ரிக்கியிடமிருந்து அவனுக்குத் தெரியாமல் மறைத்துவிட வேண்டும்’ என்பதுதான் ஹரிஹரனின் இப்போதைய நோக்கம், 

பங்களாவினுள் அவர் நுழைந்தபொழுது தோட்டக்காரரும் வாட்ச்மேனுமான மல்லையாதான் இருந்தான். மற்றவர்கள்? 

“சார், அய்யாவும் அம்மாவும் ரிஹர்சல் ஹாலுக்குப் போயிருக்கார்கள்” -மல்லையா, கன்னடம், 

“ரிக்கி?” 

“இப்போ அனிதா வந்தாள், அவள்கூட ரிக்கியும் போயிருக்கார்”;

“சரி, இந்தப் பூவையெல்லாம் ரிக்கி ரூம்ல வைக்கணும்” செம்பருத்திப் பூக்கள் கொண்ட பிளாஸ்டிக் கூடையுடன் வீட்டினுள் நுழைந்தார் ஹரிஹரன், 

ரிக்கியின் அறைக்குள் பூக்களை வைத்தவருக்கு, ரிக்கியின் பெட்டியிலிருந்து ராமய்யா குறிப்பிட்ட அந்த அந்தரங்கக் கடிதத்தைக் கைப்பற்றுவது சுலபமாக இருந்தது. 

ராமய்யா அவரிடம் ராஜலட்சுமி அம்மாளின் துயரமான முடிவை விபரமாகச் சொன்னதைக் கேட்டது முதல், அந்தக் கடிதத்தைத் தப்பித் தவறி ரிக்கி படிக்க நேரிட்டால், அது ரிக்கியின் தற்போதைய சுபாவத்தைத் தலைகீழாக மாற்றி அவனின் எதிர்காலத்தையே நாசமாக்கிவிடும் என்று பயந்தார். எந்தக் காலத்திலும் தாயின் மரணத்துக்கான சுசப்பான காரணங்களை ரிக்கி அறியவே கூடாது என்பது அவருடைய அறிவுபூர்வமான முடிவு. ‘கடிதத்தை உடனே எரித்துவிடலாமா’ என்று நினைத்தவர், ‘வேண்டாம்’ என்று தீர்மானித்து தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டு புறப்பட்டுவிட்டார். 

“மல்லையா… நான் ரிஹர்சல் ஹாலுக்குப் போறேன்.” என்றபடி காரில் ஏறி உட்கார்ந்தார். 

ரிஹர்சல் ஹால், ஆல்பர்ட் மெமோரியல் கான்வென்ட்டிற்குப் பக்கத்தில்தான். அந்த நீண்ட பெரிய ஹாலில்தான் சித்தார்த் இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். “மிஸ்டர் சித்தார்த், வருகிற 15-ம் தேதி தென்னாப்பிரிக்க நாட்டு அரசு அதிகாரிகளுடன் அவர்களுடைய கலாச்சார தூதுக்குழு ஊட்டிக்கு வருகிறார்கள். அவர்கள் எனக்கு கூறிய விண்ணப்பமே. உங்கள் இசை நிகழ்ச்சியைக் கேட்கவேண்டும் என்பதுதான். இதன்மூலம் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதோடு – ஊட்டியின் கெளரவத்தையும், மதிப்பையும் மேலும் மெருகூட்டிக் காட்டும் சந்தர்ப்பமாக இது அமையும் என்று நம்புகிறேன்”- இப்படி மாவட்ட கலெக்டர், சித்தார்த்துக்கு அன்பான கோரிக்கையை விட்டிருந்தார். அதற்கான ஒத்திகைதான் இப்பொழுது தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. போலீஸ் உதவி கமிஷனர், பிரபலமான டாக்டர்கள், ஆடிட்டர்கள், அட்வகேட்டுகள்- இப்படி அடுக்கிக் கொண்டே போகக்கூடியவர்களின் கைகளில் இசைக் கருவிகள். சித்தார்த் அவர்களைப் பக்குவப்படுத்தும் பணியில் கடுமையாக ஈடுபட்டிருக்க, வயலின் வாசிப்பவர்களின் பகுதியில் கீதா. அந்த வி.ஐ.பி.க்களான இன்ஸ்ட்ரூமெண்ட் ப்ளேயர்கள் தங்கள் தகுதி, வயது அனைத்தையும் மறந்து பள்ளிக்கூடப் பையன்கள் மாதிரி அடக்க ஒடுக்கமாக, கொஞ்சம் நடுக்கமாகவே, சித்தார்த்தின் பயிற்சிக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். சித்தார்த் வழக்கத்திற்கு மீறிய உற்சாகத்துடன் இப்பொழுது காணப்படுகிறார். அதற்கெல்லாம் காரணம்? ரிக்கியின் வருகைக்குப் பிறகு, வீட்டில் விடியும் நாளெல்லாம் மகிழ்ச்சி என்பது பிரவாகம் எடுத்தோடுகிறது. முன்னைவிட தன் மனைவி கீதா இணை சொல்ல முடியாத மன மலர்ச்சியில் திளைப்பது ஒன்று போதுமே சித்தார்த்தின் இதயத்துக்கு.

இன்றுவரை ரிக்கியுடன் அவர் வாய்விட்டு சகஜமாகப் பேசாவிட்டாலும், அவனுடைய அப்பழுக்கற்ற உயர் வகை அன்பைக் கண்டு தன் மனதிற்குள்ளேயே அவனுடன் பேசிக்கொள்கிறார். எல்லாவற்றையும்விட, “இவள் எப்பொழுது சிரித்துப் பார்க்கப் போகிறோம்” என்று புருஷன்-மனைவி இருவருமே அனிதாவை நினைத்துத் தவித்துக்கொண்டிருந்த தவிப்பு எல்லாம் மறைந்துபோய், இன்று அனிதாவின் அலாதியான முகமலர்ச்சியை அவர்களால் இப்போது தினம் தினம் பார்க்க முடிகிறது. அவளை ஹாஸ்டலுக்குப் போகவிடாமல் முடிந்தவரை தங்கள் வீட்டிலேயே சித்தார்த் கட்டிப் போட்டுவிடுவார். காரணம், அவளின் பெருக்கெடுக்கும் மகிழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல். அதே நேரம் அவள் அங்கே இருந்தால்தான் எல்லோருமாகக் கூடி உட்கார்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருக்க முடியும். அவள் ஹாஸ்டல் போய்விட்டால், ரிக்கி சமையல்கட்டினுள் புகுந்துவிடுவான், கீதாவுக்கு உதவியாக. ஏதோ அவர்களுக்கு எதிரிபோல தான் மட்டும் தனி அறையில் உட்கார்ந்திருக்க இப்போதெல்லாம் சித்தார்த்தால் இயலவில்லை, 

இது எல்லாவற்றிற்கும் ஊடே, “இந்த அற்புத இளைஞன் எதற்காக இப்படி அபாண்டமாக ஒரு நாடகத்தை ஆடி தங்கள் வீட்டினுள் நுழைந்தான்?” என்ற உறுத்தல் மட்டும் அவரைக் குடைந்து கொண்டிருக்கிறது. கீதாவுக்கோ, தானும் ஒரு தாய் என்கிற உன்னத ஸ்தானத்தைப் பெற்றுவிட்டோம் என்ற பெருமைக்குரிய மகிழ்ச்சி. 

டாக்டர் ஹரிஹரன் உள்ளே வந்து பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்துவிட்டார். 

அவர் கண்களும் ரிக்கியைத்தான் தேடுகின்றன. 

‘அந்த இசை விற்பன்னன் இந்த நேரத்தில் இங்கே அல்லவா இருக்க வேண்டும்! இந்த நேரத்தை விட்டுவைக்க மாட்டானே. அனிதாவோடு எங்கே போயிருப்பான்?’

அனிதா நினைப்பு வந்ததும். ஹரிஹரனுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவர்களுடைய தேவகானம் போன்ற நட்புக்கு எந்தவித இடைஞ்சலும் எவர் மூலமாகவும் வந்துவிடக்கூடாதே… தொட்டுக்கூடப் பேசாமல், இதயத்தின் இசையால் மட்டுமே வலுவாகத் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் அவர்களுடைய பவித்திரமான காதலுக்கு வரப்போகும் நாட்கள் நல்ல அங்கீகாரத்தைத் தரவேண்டும் என்று மானசீகமாய்ப் பிரார்த்தித்துக் கொண்டார். 

ரிட்டயர்டு ஜட்ஜ் வெங்கிடபதி ஃப்ளூட்டில் வித்தகர்தான். ஆனால் இப்பொழுது சித்தார்த் தந்திருந்த புது வகையான நோட்ஸை வாசிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். சித்தார்த் பொறுமை இழந்துவிட்டார். எவ்வளவு நேரம்தான் வெங்கிடபதி இப்படித் திணறிக்கொண்டு, எல்லோரையும் இப்படிக் காக்க வைத்துக்கொண்டு, நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பார். கீதா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். “நல்லாப் படுங்கள் பாடு… ரிக்கியை அழைச்சிட்டு வரலாம்னு தான் சொன்னப்ப, ரொம்பவும் இளக்காரமா தேவை இல்வேன்னு சொன்னீங்களே, அதான் இந்தத் தண்டனை” 

“மிஸ்டர் வெங்கிடபதி, நீங்க நெர்வஸா இருக்கீங்க வேணும்னா வீட்டுக்குப்போயி ரிகர்ஸ் பண்ணிப் பாத்துட்டு ரிலாக்ஸ்ட்டா வாங்க நான் மத்தவங்களை இப்ப கவனிக்கிறேன்” – சித்தார்த்தின் மென்மையான கோபத்தில் அந்த நீதிபதி நடுங்கத் தொடங்கினார். “இந்தத் தடவை ஈரெக்ட்டா வாசிச்சுடுறேன் சார்” மீண்டும் அவர் தடுமாற, அப்போது – எங்கிருந்தோ ஹாலின் ஒரு பகுதியிலிருந்து சித்தார்த், வெங்கிடபதிக்குத் தந்த அந்த நோட்ஸை யாரோ மிக மிகத் துல்லியமாக, சித்தார்த் எதிர்பார்த்ததைவிட மிக நேர்த்தியாக புல்லாங்குழலில் இசைப்பதைக் கேட்டதும், அங்கிருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் மிரண்டுவிட்டார்கள். யார் அது? யார்? எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் முகம் திருப்பிப் பார்க்க மேலே பால்கனியின் பக்கம் கீதா பார்த்துவிட்டாள். அங்கே ரிக்கி!! கண்களை மூடியபடி தன் புல்லாங்குழலில் சித்தார்த்தின் கஷ்டமான அந்த நோட்ஸை சிரமமே இல்லாமல் அதை மேலும் மெருகூட்டி அழகாய் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவன் பக்கத்தில் அனிதா. அவன் வாசித்து முடித்தான். 

அத்தனை பேரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு கைதட்டத் தொடங்கினார்கள். “ரிக்கி! கீழே வா” என்று கூவினாள் கீதா. 

கரவொலி தொடர்ந்துகொண்டிருக்கிறது. சித்தார்த் ஆச்சரியப் படவில்லை. “தோடியையே விரலுக்குள் முடக்கியவனுக்கு இது சாதாரணம்” என்று அவர் உள்ளுக்குள் கர்வப்பட்டிக்கலாம். 

ஆனால் வெங்கிடபதிக்கும் மற்ற ஆட்களுக்கும் ரிக்கி பற்றின விஷயம் தெரியாதே…தெரிந்தால் என்ன ஆவது? 

ஏழே இறங்கி ரிக்கி வந்ததும் கீதா அவனைக் கட்டிக்கொண்டு, பெருமையாக, “இது யார் தெரியுமா? எங்க பையன் ரிக்கி எங்க சன்- ” கீதா கூறியது மற்றவர்களுக்குப் புரியவில்லை. எல்லோரும் சித்தார்த்தைப் பார்த்தார்கள். அவருக்கோ பொறியில் மாட்டிக்கொண்ட நிலை. 

“எங்கள் மகன் ரிக்கியோட இசைஞானம் எப்பேர்ப்பட்டதுன்னு உங்க யாருக்கும் தெரியாது. ஏன், எங்களுக்கே இத்தனை வருஷம் கழிச்சுத்தான் தெரியும். எங்க குடும்பத்துக்கு மட்டுமில்லே, இசை உலகத்துக்கே வரப்பிரசாதமா எங்க ரிக்கி வந்து சேர்ந்திருக்கான். போகப்போக இவன் எப்பேர்ப்பட்ட ஞானக்குழந்தைன்னு நீங்க தெரிஞ்சுக்குவீங்க” – என்று மனைவி கீதா மற்றவர்களிடம் சொல்வதை ஹரிஹரனும் மெளனமாக நின்றபடி.. மனசுக்குள் ஆமோதித்தார். ஆனால் குழம்பிப்போன எல்லோருக்கும் பதில் சொல்ல அங்கே சித்தார்த்தைக் காணோம். 

வெங்கிடபதியின் காதில் மட்டும் ரகசியமாக ஏதோ சொன்னாள் கீதா. சொல்லிவிட்டு அனிதா ரிக்கியுடன் கீதா புறப்பட்டுச் சென்றதும், வெங்கிடபதி சந்தோஷம் தாங்காமல் அந்த உண்மையைத் தனது சக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட பொழுது – அத்தனை பேருக்கும் உற்சாகம். ஏதோ தங்கள் வீட்டில் ஒரு மங்கள காரியம் நிகழ்ந்துவிட்ட மாதிரியும், ரிக்கியும் தங்கள் வீட்டு அதிசயப் பிள்ளை மாதிரியும் நினைத்துப் பெருமைப்பட்ட அவர்கள் சித்தார்த்தை நேரில் போய்ப் பாராட்டி மகிழ அவர் வீட்டிற்குப் படையெடுத்து விட்டார்கள். 


15 

வீட்டிற்கு வந்த இசைக்குழுவினர், சித்தார்த்தை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எதையும் கொச்சையாகக் கேட்டு அவரை சங்கடப் படுத்திவிடவில்லை. அப்படிப்பட்ட நாகரிகம் தெரிந்த படிப்பாளிகளும், அதிகாரிகளும் சித்தார்த்திடம் ஒரேயொரு கோரிக்கையை மட்டுமே முன்வைத்தார்கள். சித்தார்த் தனது நண்பர்களின் ஆசை வேண்டுகோளை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் அவரிடம் ரிக்கி பற்றி ‘விசாரணை’ செய்வார்களோ என்ற நெருக்கடியான நிலைமை தவிர்க்கப்பட்டுவிட்டது என்ற ஆறுதலோடு, அந்த நண்பர்கள் கேட்டுக் கொண்டதை “ஓ’ தாராளமாகச் செய்யலாமே” என்று சம்பிரதாய முறையில் உடனே சம்மதித்து விட்டார். ஆனால், தனது சம்மதத்தால் நிகழப்போகும் பின் விளைவுகளைப் பற்றி அவர் அப்போது யோசிக்கவில்லை. அதைப்பற்றிக் கேள்விப்பட்டதும் பதட்டம் அடைந்தவர் டாக்டர் ஹரிஹரன் மட்டும்தான். 

“அப்பா! நம்ம ரிக்கியோட திறமையும் பெருமையும் வெளி உலகத்துக்குத் தெரியப் போகுது” என்று கீதா ஓடி வந்து சொன்னபோது ஹரிஹரனுக்கு ஒன்றும் மட்டுப்படவில்லை. கீதா மாய்ந்து மாய்ந்து அதை விவரித்தபோதுதான் ஹரிஹரனுக்கு அந்தப் பதட்டம் தோன்றியது. ஆனால், வெளியே காட்டிக்கொள்ளவில்லை. 

அந்த காமினிக்கும் அவள் புருஷனுக்கும் தெரியாமல் கொஞ்ச நாளைக்கு ரிக்கியை வெளி உலகத்துக்குக் காட்டாமல் வைத்திருக்க எண்ணிய ஹரிஹரன், மகள் வந்து சொன்னதைக் கேட்டு முழுமனதோடு சந்தோஷப்பட முடியாமல் போனதற்கு இதுதான் காரணம். அதேசமயம் மகனின் கட்டுக்கடங்காத மகிழ்ச்சிக்கு திருஷ்டியாக ஏடாகூடமாக எதையும் சொல்லிவிடயில்லை. “ரொம்ப சந்தோஷம் கீதா” என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். “என்ன சார்.. என்ன. கீதாம்மா இவ்வளவு சந்தோஷமாப் போறாங்க” என்று ஓடிவந்த மாராவிடம் ஹரிஹரன் எதையும் மறைக்கவில்லை. 

“மாரா- வர்ற 15-ம் தேதி வெளிநாட்டுலேருந்து வர்றாங்களே கலாச்சார தூதுக்குழு? அவங்க முன்னாலே நம்ம ஹார்மோனி ஆர்கெஸ்ட்ரா.” 

“இசைக் கச்சேரி நடத்தப்போறாங்க, தெரியுமே”

“அவசரப்படாதே ஆனா வழக்கம்போல இல்லே. இந்தத் தடவை ரிக்கியோட புல்லாங்குழல்தான் அவுங்க கச்சேரிக்கு ஹைலைட்டா இருக்கப்போகுதாம். ஆர்க்கெஸ்ட்ரா ஆளுங்களே சித்தார்த்தைக் கெஞ்சி சம்மதிக்க வச்சிட்டாங்களாம்”

“வெரிகுட் வெரிகுட் சார்.” 

“என்னத்த வெரிகுட். கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா கேக்கக்கூடாதவங்களுக்கு இந்த விஷயம் எட்டுச்சுன்னா என்ன ஆகுறது? அதைப்பத்தி யோசிச்சியா?” 

“என்ன சார், புரியலையே நீங்க சொல்றது?” 

தன் மனதில் முளைவிட்ட சஞ்சலத்தை அவனிடம் ஹரிஹரன் விவரித்தார். 

ஆனால் அவன் தனது இனத்துக்கே உரித்தான முரட்டுத்தனத்தோடு சொன்னான் : 

“ரிக்கி என்ன கைக்குழந்தையா சார், அவுங்க வந்து பறிச்சிட்டுப்போறதுக்கு? அப்படியே ரிக்கி உயிரோட இருக்கிற விஷயம் தெரிஞ்சாலும் அவுங்களாலே என்னெத்தக் கிழிச்சிட முடியும்? ரிக்கி செத்துட்டான்னு அவுங்களே ஒரு பொணத்துக்குக் கொள்ளி வச்சிட்டு உலகத்தை நம்ப வச்சதுக்கு அப்புறம் எந்த ரூட்ல வந்து இங்கே நம்ப ரிக்கிய சொந்தம் கொண்டாட முடியும்? அவுங்க மட்டும் இந்த ஊட்டி எல்லைக்குள்ளே அடி எடுத்து வைக்கட்டும். எங்க சாதி சனம் எல்லாத்தையும் ஈட்டிங்களோட வந்து குவிச்சிடுறேன் பாருங்க.” 

மாராவின் பேச்சில் கோபம், ஆத்திரம் எல்லாம் சீறிக் கொண்டு வந்தாலும், அவனுடைய வாதத்தில் உள்ள உண்மைகளை ஹரிஹரனால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் கொஞ்சம் ஆறுதலும் கிடைத்தது. 

கிச்சனில் கீதாவிற்கு உதவி செய்துகொண்டிருந்த அனிதாவின் மூகத்தில் இன்று ஒரு மாதிரியான சோர்வு தெரிந்தது. 

“என்ன அனிதா டல்லா இருக்கே” கீதா கண்டுகொண்டாள்.

“ஒண்ணுமில்லே ஆன்ட்டி..” 

“உன் மனசுல இருக்கிறதை நான் சொல்லட்டுமா? ஒத்திகை ஆரம்பிச்ச நேரத்திலிருந்து ரிக்கியோட நீ அதிகமாப் பேச முடியல. அதானே. நல்ல குழந்தை நீ” 

“இல்லே ரிக்கிதான் எங்கிட்ட பேசறதே இல்லை.” 

“தலைக்கு இந்தக் கையாலே பூ வச்சா என்ன? அந்தக் கையாலே பூ வச்சா என்ன? நீ எப்படிச் சொன்னாலும் உன் கவலைக்குக் காரணம், ரெண்டுபேரும் பேசிக்க முடியலேன்னுதான். இப்ப நீயும் நானும் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம், புரியலையா. என்னைக்குமே ரிக்கியோட பேசாம விரதம் இருந்தாரே உங்க அங்கிள். இப்பப் பாரு அவர் ரூம்ல ரிக்கியோட தனியா உக்கார்ந்து ரிகர்சல் பார்த்துட்டிருக்காரு, இது இப்படியே நீடிச்சதுன்னா நமக்கு எந்தக் குறையும் இருக்காது. இந்தா, இந்த டீயைக் கொண்டு போய் ரிக்கிக்கும் அங்கிளுக்கும் குடுத்துட்டு வா.” 

தங்களின் இசைக்குழு நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சியில் ரிக்கியின் புல்லாங்குழலே பிரதான இடத்தைப் பெறப்போகிற புதுமையான அனுபவத்தை சித்தார்த் மிக ஆழமான ஈடுபாட்டோடு அனுபவித்து செயல்படத் தொடங்கிவிட்டார். 

ரிக்கியைப் பற்றின பழைய சிந்தனைகளுக்கெல்லாம் தாழ்ப்பாள் போட்டுச் சாத்திவிட்டு, ரிக்கியை ஒரு இணையற்ற இசை ஞானஸ்தனாக மட்டுமே பார்த்து, ‘நோட்ஸ்’ எழுதியபடி அவ்வப்பொழுது ரிக்கி ஆர்வமாக வாசிக்கும் சில ராகங்களை அவை ஹிஸ்துஸ்தானி சங்கீதத்தின் பிரசவங்களாக அமைவை வியந்தபடி. ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த். 

‘டீ’ கொண்டு வந்த அனிதாவைப் பார்த்ததும், கண்ணை மூடியபடி அலை அலையாய் ரிக்கி பரவவிடும் இசையின் ரீங்காரத்தை இடர்ப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தோடு. கண்ஜாடையால் ‘டீயை வைத்துவிட்டு அவனைத் தொந்தரவு செய்யாமல் போய்விடு’ என்று சித்தார்த் எச்சரிக்க, அனிதா துவண்டுவிட்டாள். கீதா சொன்னதுபோல அனிதா குழந்தைதான். ‘தான் உள்ளே வருவதையே சித்தார்த் விரும்பவில்லை’  என்பதுபோல அர்த்தம் கற்பித்துக் கொண்டவள் அவசரமாக டீ ட்ரேயை வைத்துவிட்டு, மறுபடியும் கிச்சனுக்குப் போகாமல் கண்கலங்கியபடி நேராகத் தன் ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டாள் என்பது கீதாவுக்குத் தெரியாது. 

மறுநாள் ரிகர்ஸல் ஹாலில் ‘கிராண்ட் ரிகர்ஸல்’. அனைத்து அதிகாரிகளும் பிரமுகர்களும், அவர்கள்தான் ஹார்மோனி இசைக்குழுவினர், ரிக்கியின் வாசிப்புக்கு ஈடுகொடுத்தும் – அவனைப் பின்தொடர்ந்தும் போட்டியிட்டும் காட்டவேண்டிய ஒத்திகை.

பிரான்சிஸை மட்டும் க்ளினிக்கில் விட்டுவிட்டு, மாராவைத் தவிர்க்க முடியாமல் அவனுடன் சேர்ந்து அங்கே வந்திருந்தார் டாக்டர் ஹரிஹரன். உதவி கலெக்டரோ, ஆபீஸ் ப்யூன் மாதிரி தன்னை எளிமைப் படுத்திக்கொண்டு இசைக்கலைஞர்களுக்கு ஓடியோடி அவர்களுக்குத் தேவையானவற்றைக் கவனிப்பதோடு அவர்களுடன் வந்திருக்கும் குடும்பத்தாரையும் கவனித்துக்கொண்டிருந்தார். அத்தனை உற்சாகம் அவருக்கு. வயலின் செக்ஷனில் இரண்டு லேடி டாக்டர்களுடன் இருக்கிறாள் கீதா, சித்தார்த் கண்டக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால், கீதாவோ, சித்தார்த்தோ அனிதா அங்கே வரவில்லை என்பதைக் கவனிக்கவில்லை. அந்தக் குழந்தை, மீண்டும் தான் ஒரு அனாதையாகிவிட்ட மாதிரி நினைத்துக் கொண்டு ஹாஸ்டலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறாள். 

இசைக்குழுவினர் ரிக்கியோடு பின்தொடர முடியாத போதெல்லாம் கீதாவிற்குப் பெருமை நெஞ்சுக்குள் அடங்கவில்லை. சிரிக்கத் தொடங்கினாள். சித்தார்த் பார்வையாலேயே மனைவியை எச்சரித்தார். ‘கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ரிக்கி தொடர்ந்து வாசித்திருப்பான்’ என்று தெரிந்து பதறிய கீதா கணவனிடம் கொஞ்சம் இடைவெளி விடச்சொல்லி, சூடான பாலுடன் அவனை நெருங்கி அவன் கைகளைத் தொட்டபோது, கீதா நொறுங்கிவிட்டாள். ரிக்கியின் உடம்பு அக்னியாய்ச் சுடுகிறது. இந்த ஜுரம் எப்பொழுதிலிருந்து என்பதை அவளால் இப்பொழுது யூகிக்க நேரம் இல்லை. விஷயம் மற்றவர்களுக்குப் பரவியபோது, அத்தனை பேரும் ரிக்கியை ஓடி வந்து சூழ்ந்துகொண்டார்கள். 

“ரிக்கியை உடனே என் கிளினிக்குக்குக் கொண்டுபோறேன்” என்ற ஹரிஹரன், ரிக்கி ‘வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லியும் கேட்காமல் மற்றவர்கள் உதவியோடு அவனைத் தன் காரில் கீதா, சித்தார்த், மாரா துணையுடன் கிளினிக்கை நோக்கி விரைந்தார். 

கலெக்டர், மனம் தொந்துவிட்டார். விழா என்ன ஆகுமோ என்ற பயம் அவரைப் பிடித்துக்கொண்டது. 

“இது டைஃபாய்டும்மா கீதா” -ஹரிஹரன் ரிக்கியை நன்றாகப் பரிசோதித்த பிறகு சொன்னபோது, கீதா கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டாள். “இதுக்கு ஏன்ம்மா பயப்படுறே இப்படி? ரெண்டே நாள்ல இவனை எந்திரிச்சு ஓட வைக்கிறேன் பார்”. இப்படி ஹரிஹரன் சொல்லியும்கூட மனம் பொறுக்காமல் தன் அறைக்குள் ஓடி உட்கார்ந்துகொண்டு விம்மத் தொடங்கிவிட்டாள். சித்தார்த்தும் அவளை ஆறுதல்படுத்த முயன்று தோற்றுப் போனார். “உங்களுக்கென்ன, ரிக்கிக்கு இப்படி ஏதாச்சும் நடக்கக்கூடாதது நடந்து உங்களை விட்டு ஒழிஞ்சாப் போதும்னுதானே நினைப்பீங்க” என்று அவள் எதிர்பாராத ஒன்றைச் சொன்னபொழுதுதான் சித்தார்த் நிலைதடுமாறிவிட்டார். தன்னைப் பற்றி இந்த விபரீதமான சிந்தனை கீதாவிடம் இருக்கும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டார். அவள் தவிப்பின் தீவிரம்தான் அவளை அப்படிப் பேச வைத்துவிட்டது என்று உணர்ந்த மாத்திரத்தில் அவளைப் பச்சாதாபத்துடன் பார்த்தார். 

“கீதா, ரிக்கியைப் பத்தி இப்படி ஒரு எண்ணம் என் மனசுக்குள்ளே இருக்குறதா நீ நம்புறது, உன் கண்ணையே உனக்கு எதிரியா நினைக்கிற மாதிரி இருக்கு, கீதா – இப்ப நான் என்ன நினைச்சிட்டிருக்கேன் தெரியுமா? ரிக்கிக்கு வந்த டைபாய்டு எனக்கு வந்திருக்கக்கூடாதா? இல்லை, கொடுமையான ஒரு விபத்தே எனக்கு வந்து சேர்ந்திருக்கக்கூடாதா? இசை நிகழ்ச்சியிலே என் இடத்தையும் பூர்த்தி செஞ்சு, ரிக்கி மட்டும் தனி ஒருத்தனா மேடையிலே நின்னு, அவனுக்குக் கிடைக்கப்போற புகழுக்கெல்லாம் அவன் ஒருத்தனே காரணம்ங்கிறதை எல்லோரும் தெரிஞ்சுக்கணுமே..! இதுதான்… இதுதான் என்னோட பிரார்த்தனை.” 

கீதா கணவனின் பேச்சைக் கேட்டு சிலிர்த்துவிட்டாள். தன் புருஷனுக்குள்ளே இப்படியொரு பெருந்தன்மையான லட்சிய வெறியா? ரிக்கியின் தனிப்பெருமை. தனி ஆவர்த்தனம் வாசிக்கவேண்டும் என்பதில் கணவனுக்குள்ள தீவிரம் அவளை உலுக்கிவிடுகிறது. 

கணவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு தன் அழுகையைக் குறைத்துக் கொண்டவளாய், “இப்ப என்ன செய்யப்போறீங்க?” என்றுதான் கேட்டாள். 

“வேற வழி…வழக்கமான பாணியிலேதான் நம் ட்ரூப்பைக் கொண்டு நான் சமாளிக்க வேண்டும்” – ஏக்கமாய் விடை தந்தார் சித்தார்த். 

“நான் ரிக்கி பக்கத்திலேயே இருக்கேன். நீங்க போயி நிகழ்ச்சி மாறுதலுக்கு மத்தவங்களைத் தயார் பண்ணுங்க. ரிக்கியோட பெருமையை உலகம் தெரிஞ்சுக்கிற நாள் என்னைக்காவது ஒருநாள் வந்தே தீரும்* 

சித்தார்த் தள்ளாடும் மனதுடன் புறப்பட்டுச் சென்றார். 

– தொடரும்…

– அழகிய தவறு (நாவல்), முதற் பதிப்பு: 2007, சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *