கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 2,830 
 

(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 -5 | 6 – 10

தமிழ் திரைப்பட வரலாற்றில் விட்டுவிட முடியாத பெயர் – இயக்குநர் மகேந்திரன். திரைப்படங்கள் வசன ஊடகமாக இருந்த நிலையை மாற்றி விஷவல் மீடியம் என்பதை புரிய வைத்து திரைப்படங்களின் போக்குக்கே புதிய பாதை அமைத்துத் தந்தவர் மகேந்திரன் என்பதை தமிழ் திரையுலகம் நன்கு அறியும். திரைப்பட இயக்குநராக அறியப்பட்ட அளவுக்கு ஒரு பத்திரிகையாளர், சிறுகதை நாவலாசிரியர் என பன்முகங்கொண்ட மகேந்திரனை இன்றைய தலைமுறை வாசகர்கள் அறிந்திருக்க மாட்டார் கன்! ஆனால் அவர் புதிய பார்வையில் மனிதர்களை- சமூகத்தை உறவு நிலைகளைப் பார்த்து எழுதக்கூடிய அற்புதமான படைப்பாளி! அதற்கு இந்த ‘அழகிய தவறு’ நாவல் அழகான சான்று படித்து முடிக்கும்போது அதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்! – பதிப்பகத்தார் 


நீங்கள் படிப்பதற்கு முன்… 

நாம் எல்லோரும் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில ‘அழகிய தவறுகள்’ நாமே எதிர்பார்க்காத அரிய சாதனைகளுக்கும் அர்த்தமுள்ள நன்மைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன. ஆனால் இந்த உண்மையை மையமாகக்கொண்டு இந்த நாவலை நான் எழுதிவிடவில்லை என்பதே நிஜம். சில வருடங்களுக்கு முன்பு, எனக்குப் பிரியமான ஒரு மன ஓட்டத்தில் இந்தக் கதையை எழுதி முடித்த பிறகு, கதையில் வரும் இளைஞள் ரங்கராஜன் அரங்கேற்றும் ஒரு விபரீத நாடகம், ஒரு ‘அழகிய தவறு’ என்றே எனக்குத் தோன்றியது. அதையே கதைக்குரிய பெயராக்கினேன். அதற்காக அழகான தவறுகளைத் தெரிந்து செய்வது ‘சரியா, தப்பா’ என்ற விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை. அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். 

ஒரு திரைப்பட இயக்குநர் என்ற முறையில் நான் தேர்ந்தெடுத்துச் செல்லும் பயண வழியில், அன்றும் இன்றும் எனக்குப் பிரியமான ஒரே வழித்துணை நான் மிகவும் நேசிக்கும் இலக்கியவாதிகளின் உயிருள்ள படைப்புகள்தான். 

அத்தகைய ‘இலக்கிய சகவாசம்’ எனக்குச் செய்த ‘அழகிய தவறு” என்னையே கதைகள் எழுதத் தூண்டியதுதான். ஆனால், ‘எழுதப்பட்டு படிக்கப்படும்’ இலக்கிய ஊடகத்தின் வலிமையும் தனித்துவமும் எத்தகையது, திரைப்படம் எனும் ‘பார்க்கப்பட்டு உணரப்படும். ஊடகத்தின் மொழி எப்படிப்பட்ட தனித்தன்மை கொண்டது என்ற உணர்வின் எச்சரிக்கையை என்றைக்கும் நான் மறப்பதில்லை. கடந்த வருடங்களில் எனது சில நாவல்களும், சிறுகதைகளும் வாசகர்களிடையே திருப்திகரமான அங்கீகாரத்தைப் பெற்றாலும், என்னுடைய முதல் நாவலான ‘மெட்டி’யை அமெரிக்காவின் ‘Library of Congress’ தங்களின் நூலகங்களின் தமிழ்ப் பிரிவில் சேர்ப்பதற்காகத் தேர்வு செய்தபோதும், நான் எளிதாக மனநிறைவு கொள்ளவில்லை. ‘நான் இன்னும் ஆழமாக நீந்திச் செல்ல வேண்டியிருக்கிறது’ என்றே உணர்ந்தேன். அதுதான் உண்மை. 

அருமை நண்பர் திரு. நக்கீரன் கோபால் அவர்கள் ‘சிறுகதை கதிர்’ எனும் அருமையான இதழை நடத்தியபோது ஒரு புதுமையான உத்தியைக் கையாண்டார். யோசிக்கச் செய்யும் அபூர்வமான புகைப்படங்களை என்னிடம் அனுப்பி, அந்தப் புகைப்படங்களை ஆதாரப்படுத்தி சிறுகதைகள் உருவாக்கும்படி சொல்வார். அதை ஒரு இனிய சவாலாக ஏற்று பல சிறுகதைகளை எழுதினேன். மறக்க முடியாத அனுபவம் அது. அந்த உத்தியை மீண்டும் இப்போது அவர் தொடர வேண்டும். 

இன்று அவர், ‘நக்கீரன்’, ‘இனிய உதயம்’ சார்பாக பெருமைக்குரிய பிறமொழிப் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதன் மூலம், தமிழ் வாசகர்களுக்கு அருமையான இலக்கியப் பணியாற்றுகிறார். அவரது ‘இலக்கியப் பார்வையில்’ இப்போது எனது ‘அழுகிய தவறுக்கும் இடம் அளித்திருப்பது, அடுத்தடுத்து நான் எழுதவிருக்கும் முயற்சிகளுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாய் இருக்கிறது. 

பதிப்பாசிரியர் திரு. நக்கீரன் கோபால் அவர்களுக்கும், ‘இனிய உதயம்’ பொறுப்பாசிரியர் திரு. மா. முருகன் அவர்களுக்கும், அவர்களின் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள எழுத்தாளர் நண்பர் திரு சுரா அவர்களுக்கும் இப்புத்தகத்தின் அழகிய வடிவமைப்பிற்குக் காரணமான அட்டை வடிவமைப்பாளர் ஆர்.சி.மதிராஜ் மற்றும் தோழர்களுக்கும் எனது நன்றியும், வணக்கமும் உரித்தாகுக!

என்றும் அன்புடன், 
மகேந்திரன் 


1

அவன் எல்லா நாட்களும் இப்படித்தான். வழக்கம்போல, அந்த அதிகாலை இளமையைத் தனது தேனான புல்லாங்குழல் இசையால் கிறங்கச் செய்துகொண்டிருந்தான் ரிக்கி புகைமூட்டம் போட்ட மாதிரி வெளிச்சம் அதிகம் தெரியாத அந்தக் காலைக் கருக்கலில், தனது பங்களா மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் கண் மூடிச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான். தன் இளம் சிவப்பு உதடுகளைப் புல்லாங்குழல் கண்ணில் குவித்தபடி, விரல் களால் குழலின் கண்களை மூடுவதும் திறப்பதுமாசு – அவன் மெய்மறந்து வாசிக்கும் கோலம், அன்புக் காதலியை மோகத்தோடு முகம் பதித்துக் கொஞ்சுவது போலிருக்கும். 

அந்தப் பங்களாவைச் சுற்றிலும் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரிக்கியின் மயக்கும் இசை கேட்சுத் தொடங்கியதுமே, அந்த அடுக்குமாடிக் கட்டிடங்களின் ஜன்னல்கள் அடுத்தடுத்துத் திறந்துகொள்ளும். குழந்தைகள், முதியவர்கள் குமரிகள், குமரன்கள், அத்தனைபேரும் ரிக்கியின் விசிறிகள்தான். ஒரு அரைமணி நேரம்தான் அந்த கீத சுகத்தை அவர்கள் அனுபவிக்க முடியும். சூரியக்கதிர்களால் முகத்தில் இதமான வெப்பம் படரத் தொடங்கியதும் அவன் எழுந்து ஓடிவிடுவான். 

அது அவனுக்குரிய ஒரு நேரக்கணக்கு. அப்புறம் தோட்ட வேலைதான் அவனுக்கு குழல் பிடித்த கையில் ‘ஹோஸ் பைப்’ இருக்கும்.. 

அந்த அடுக்குமாடி மக்களுக்குத் தினம் தினம் தித்திக்கும் கானத்தை அள்ளிக்கொடுக்கும் ரிக்கி, அவர்களுக்கு உலராத வேதனை ஒன்றையும் அன்றாடம் தந்துகொண்டிருக்கிறான். ‘ஜௌரேஷன்ஸ்’ என்று பெயர் பொறித்த அந்த அபார்ட்மெண்ட்டின் மூன்றாவது மாடியில் இருக்கும் ஜனகவல்லி அம்மாள் தனது கணவரிடம் தினமும் காலை வேளையில் சொல்லிப் பொங்குவது இதுவே- “இந்த ரிக்கி நமக்குப் புள்ளையா வந்து பிறந்திருக்கக் கூடாதா? அந்தப் படுபாவிக்கு மகனாய் பிறக்க இந்தப் பிள்ளை என்ன பாவம் பண்ணான்..?” 

இப்படி ஒவ்வொரு பிளாட்டிலும் ஒரு ஜனசுவல்லி தினமும் புலம்பிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பாவியைச் சபிக்கிறாள். 

அந்தப் பாவிதான், இந்திரஜித் என்ற புராணக் கதாபாத்திரத்தின் பெயர் கொண்ட ரிக்கியின் அப்பா. அந்தப் பெயரால்தானோ என்னவோ அந்தக் கோடீஸ்வரருக்கு அரக்க குணம் தலைதூக்கி நின்றது. இந்திரஜித்துக்கு இந்தியாவில் மட்டும் அல்ல, வெளிநாடு களிலும் சில நட்சத்திர ஹோட்டல்கள் உண்டு. அந்த ஹோட்டல் புத்தியால், மகன் என்றும் பாராமல் ரிக்கியை ஒரு எடுபிடியாக மிரட்டி ஒடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறார். அவரின் கேடுகெட்ட புத்திக்கு மணி கட்டிவிட்டு சந்தோஷப்படுகிற குரூர குணம் கொண்டவள் இந்திரஜித்தின் இரண்டாவது மனைவி இளம் காமினி. இந்திரஜித்தின் இச்சைக்குத் திகட்டி விடாதபடி தீனிபோட்டு, எச்சரிக்கை எல்லையில் நின்றபடி, தான் நினைத்ததை எல்லாம் கணவனிடம் சாதித்துக் கொள்வாள். 

“என்னவோ கிருஷ்ண பரமாத்மா மாதிரி எப்பவும் புல்லாங் குழலோட திரியற இவனுக்குப் படிப்பு எதுக்கு?” என்று ஒருநாள் படுக்கை அறையில் கேட்டாள். மறுநாளே ‘ரிக்கி’ என்ற ரங்கராஜன் கல்லூரியின் இரண்டாவது வருடப் படிப்போடு நிறுத்தப்பட்டு, வீட்டு வேலைகளுக்கு நியமிக்கப்பட்டான் அப்பா இந்திரஜித்தால்.

இன்று, வழக்கத்துக்கு அதிகமாக முகத்தில் சூரியன் முத்தம் கொடுத்தும்கூட ரிக்கி இசைப்பதை நிறுத்தவில்லை. தன் மனத்துச் சோகத்தை வானத்திலிருந்து பார்க்கும் தன்னைப் பெற்ற தாயிடம் சொல்லிப் புலம்புவதுபோல் – கண்களில் கசியும் கண்ணீருடன் மனம் உருகி வாசித்துக் கொண்டிருக்கிறான். அதனால், அடுத்து நடக்கப்போவதை ரிக்கி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன் கன்னத்தில் விழுந்த பலமான அறையால் தடுமாறிச் சாய்ந்த பொழுதுதான், இந்திரஜித் தன் முன்னே நிற்பதைப் பார்க்கிறான். உடல் நடுங்குகிறது. மனசையும் சேர்த்துக்கொண்டு, 

“சோம்பேறி ராஸ்கல். உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் காலையிலே எந்திரிச்சவுடனே முதல்வேலையா ‘கார்டனிங்’கை முடிக்கணும்னு நீ என்னையே ஏமாத்திட்டு இப்படிக் காலையிலே இருட்டோட டெரசுக்கு வந்து தெருப்பிச்சைக்காரன் மாதிரி ப்ளூட் வாசிச்சிட்டிருக்கே. இனிமே இங்கே உன்னைப் பார்த்தேன்னா…கொலையே விழுந்திடும்…ஜாக்கிரதை. என்னடா பார்க்குறே..நாயே கீழே போயி வேலையைக் கவனி” 

ரிக்கி, அழுகையை மனதிற்குள் அடைத்துக்கொண்டு அடுத்த அறை விழுவதற்குள் பரிதாபமாகவும் வேகமாகவும் அங்கிருந்து புறப்படுகிறான். 

அத்தனை அடுக்குமாடி ஜீவன்களும் அந்தக் கொலைகாரக் காட்சியைப் பார்த்து அதிர்ந்துபோய் கண்ணீர்விட மறந்து நிற்கின்றனர். 


2 

ரிக்கி தோட்ட வேலையைத் தொடங்கி விட்டான். ஹோஸ் பைப்பைப் பிடித்தபடி, பங்களா முன் விரிந்து கிடந்த ஆஸ்திரேலியப் புற்களின் மென்மை சிதைந்து விடாதபடி பனி பெய்வதுபோல் தண்ணீர் விழச் செய்கிறான். இன்று, வழக்கத்திற்கு மாறாக அவன் காதலிக்கும் செம்பருத்திப் பூக்கள் ஏராளமாய்ப் பூத்திருந்தது அவனை சந்தோஷப்படுத்தி விட்டது. தண்ணீர்விடுவதைக் கொஞ்சம் தற்காலிகமாக நிறுத்திவிட்டு அந்தப் பூக்களிடம் ஓடினான். செக்கச் செவேல் என்று சிரித்துக்கொண்டிருந்த அந்தச் சிவப்புப் பூக்கள் அவனிடம் சிரித்துப் பேசுவதுபோலத் தெரிந்தது. ரிக்கி இப்படித்தான் கற்பனை செய்துகொள்வான். “நீங்களாவது என்கிட்டே சிரிக்கிறீங்களே. எனக்கு இது போதும். உங்களைப் பார்க்குறப்ப எல்லாம் எனக்கு என் கவலையெல்லாம் மறந்துபோகுது” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். கடந்த ஒரு வருடமாகத்தான் ரிக்கிக்கும் செம்பருத்திப் பூக்களுக்கும் இப்படிப் பட்ட சிநேகிதம். ஒரு வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் காலை, அப்பாவும் சித்தியும் வெளியூர் போய்விட்டார்கள். சமையல்காரன் ராமய்யா கிருஷ்ண பக்தன். அவன் தினமும் அதிகாலை எழுந்து பங்களா பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் கட்டப்பட்ட கிருஷ்ணன் கோயிலுக்குப் போய்விட்டு வந்துதான் வேலைகளையே தொடங்குவான். 

அன்றைக்கு ரிக்கி மட்டும் தனியே வீட்டில் இருந்தான். ராமய்யாதான் வந்து கூப்பிட்டான் “ரிக்கி, நீயும் வாயேன் என்கூட அப்பாவும் சித்தியும்தான் வீட்டுலே இல்லியே பயப்படாமப் புறப்படு. இன்னைக்கி கோயில்ல ரொம்ப விசேஷம். பிரார்த்தனை நடக்கும். அத்தோட கொஞ்சப்பேர் ஆண்களும் பெண்களுமா அற்புதமாகப் பாடுவாங்க. அவுங்க பாடுறதைக் கேட்டாலே போதும் மனசெல்லாம் இளகி ஆனந்தப் பரவசத்திலே கூத்தாடும்”. ரிக்கிக்கு பாட்டு என்றதும் மகா உற்சாகம். “நானும் வர்றேன்” என்று ராமய்யாவோடு புறப்பட்டுவிட்டான். கோயிலில் அவர்கள் பாடியதைக் கேட்டு தன்னையும் அறியாமல் தாளம் போடத் தொடங்கிவிட்டான். “எவ்வளவு இனிமையாகப் பாடுகிறார்கள். தெய்வீகமாகத் தித்திக்குதே இந்த இசை” என்று ராமய்யாவிடம் மயங்கிய நிலையில் புகழ்ந்தான். பிரார்த்தனை எல்லாம் முடிந்து எல்லோரும் கலையத் தொடங்கியதும் ரிக்கியை அழைத்துக்கொண்டு கோயிலின் உள்ளிருந்த தியான மண்டபத்தைக் காட்டினான் ராமய்யா. “பகவான் கிருஷ்ணனைக் கும்பிட்டுக்கோ ரிக்கி உன் கவலையெல்லாம் உன்னை விட்டுப் போய்விடும்” -ராமய்யா சொன்னபொழுதுதான் மண்டபத்தில் மேடையில் புல்லாங் குழலுடன் நின்ற கிருஷ்ணன் விக்ரகம் செம்பருத்திப் பூக்களால் வித்தியாசமாய் அலங்கரிக்கப் பட்டிருப்பதைப் பார்த்தான். 

கோவிலை விட்டு வெளியே வருவதற்கு முன்பு காம்பவுண்டுக்குள் இருந்த செம்பருத்திச் செடிகளில் ரத்தச் சிவப்பாக ஒரே ஒரு பூ மட்டும் இலைகளுக்கு நடுவே தலையாட்டுவதைப் பார்த்துவிட்டான், ரிக்கி, “ராமய்யா. இந்தப் பூ எனக்கு வேணுமே” என்று கேட்ட பொழுது, ராமய்யா, “ரிக்கி இது உனக்காக பசுவான் விட்டுவச்ச பூவா தெரியுது” என்றபடி அந்தப்பூவைப் பறித்துக் கொடுத்தான். 

அந்தப் பூவைக் கொண்டுபோய் தன் அறையில் உள்ள தாயாரின் புகைப்படத்திற்கு வைத்துப் பரவசத்துடன் பார்த்தான். ஒன்றுக்கு இரண்டு பேர் தன்னோடு தன் அறைக்குள் இருப்பதுபோல் அவனுக்குள் ஒரு உற்சாகமும் தைரியமும் பிறந்தது. 

அடுத்தநாளே. ராமய்யா உதவியுடன் எங்கிருந்தோ கொண்டு வந்த செம்பருத்திக் கன்றுகளை நட்டு, உரம்போட்டுத் தண்ணீர் விடத் தொடங்கியவன் தான்… இன்று வளர்ந்து உயர்ந்த செடிகள் கூட்டமாய்ப் பெருகி, ஏராளமான செம்பருத்திக் குடும்பங்கள் இப்போது ரிக்கியின் சொந்தங்களாகிவிட்டன. அவனுடைய வெறுமை நிறைந்த தனிமைக்கு அவை ஆறுதலாய் இருந்தன. 

ராமய்யா கோயிலுக்குப் போகும்போது அவனுக்கு மட்டும் அந்தப் பூக்களைப் பறித்துக் கொடுப்பான் ரிக்கி. அப்புறம் மிச்சம் எல்லாம் அம்மா படத்திற்கு. “நானும் கோயிலுக்கு தினமும் வரத்தான் ஆசைப்படுறேன் ராமய்யா. ஆனா அப்பா என்னைக் கொன்னேபுடுவார்” என்று ரிக்கி சொல்லும்போதெல்லாம் “இந்தப் பூக்களாகவே கிருஷ்ண பரமாத்மா உன்னோடு இருக்கும்போது உனக்கு அந்தக் குறையே வேண்டாம்” என்று ராமய்யா அமைதியாகப் பதில் தந்துவிட்டுச் செல்வான். 

“டேய் ரிக்கி, வேலை செய்யாம அங்கே என்னடா வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கே” என்று உறுமல் ஒன்று கேட்ட பொழுது தான் செம்பருத்திப் பூக்களிடமிருந்த கவனத்தை மாற்றித் திரும்பிப் பார்க்கிறான் ரிக்கி 

அப்பாவும், காமினியும், அந்த அல்சேஷனும் காரில் பீச்சுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்திரஜித்தைப் போலவே அந்த நாயும் காருக்குள் உட்கார்ந்தபடி குலைக்கிறது. வாட்ச்மேன் ஓடிப்போய் கேட்டை திறக்க, குலைத்தபடியே அந்தக் கார் வெளியே போகிறது. 

ஹோஸ் பைப்பை எடுத்து வைத்துவிட்டு, மடிநிறைய செம்பருத்திப் பூக்களைப் பறித்துக்கொண்டு தன் அறைக்கு ஓடுகிறான் ரிக்கி.


3

சமையல் கட்டில் ரிக்கி பிரவேசம் பண்ணிவிட்டால் போதும், விதவிதமான பதார்த்தங்கள் பிரபலமான சைனீஸ் ரெஸ்டாரண்டுகளைத் தோற்கடிக்கும் விதத்தில் பிரசவித்துவிடும். இசைக்கு அடுத்தபடியாக அவன் நேசிக்கிறது இந்த சமையல் கலையைத்தான். தங்கள் வீட்டின் அலங்காரமான புத்தசு பீரோவில் இருந்த, மேல்நாட்டு – இந்திய நாட்டு – செட்டிநாட்டு சமையல் வரை விபரமாகச் சொல்லப்பட்டிருந்த ‘குக்கரி’ புத்தகங்களைப் படித்தவன் ரிக்கி. இப்படி அவனைப் படிக்கத் தூண்டிய புத்தகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம்? பெரும்பகுதி நேரத்தை, சிறுவயது முதல், அம்மா ராஜலட்சுமி இறந்ததிலிருந்து, அவன் சமையல் கட்டில் ராமய்யாவோடும், கல்யாணி என்ற விதவை வேலைக்கார அம்மா இவர்களுடன்தான் சந்தோஷமாக்கிக் கொள்கிறான். சித்திக்கும் – அப்பாவுக்கும் தெரியாமல் ரகசியமாகத் தன்னிடம் அன்பைக் கொட்டும் அந்த ஏழை உள்ளங்களுக்கு சமையலில் கலந்துகொண்டு உதவி செய்வது அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். ராமய்யாவும், கல்யாணியும் எவ்வளவு தடுத்தாலும் விடமாட்டான். ஆரம்பத்தில் இப்படித் தொடங்கிய பழக்கம்தான், காலப்போக்கில் குக்கரி புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து அதன்படி புதுமாதிரியான உணவு வகைகளைத் தயாரிப்பதில் தீவிரம் காட்டினான். அந்தத் தீவிரம் சமையல் கலையில் அவனைக் கைதேர்ந்தவனாக்கியது. 

இதை ஒருநாள் காமினிதான் துப்புத் துலக்கினாள் “என்ன ராமய்யா, இன்னைக்கு வீட்டுல சமைக்காம சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட்டுலேருந்து புடிச்சிட்டு வந்துட்டியா. என்னைக் கேக்காம இதெல்லாம் என்ன அதிகப்பிரசங்கித்தனம்?”- அவள் போட்ட கூச்சலில் பயந்துபோய், அந்த அப்பாவிகளைக் காப்பாற்றும் எண்ணத்தோடு முன்னால் வந்து நின்ற ரிக்கி வாக்குமூலம் கொடுத்துவிட்டான். அதன் விளைவு எப்படியிருக்குமோ என்று ராமய்யா பதறிக் கொண்டிருக்க, “வெரிகுட்…” என்று பாராட்டின காமினி, இந்தமாதிரி சமையலையெல்லாம் ரிக்கி எப்படிக் கற்றுக் கொண்டான் என்று கேட்டறிந்ததும், போட்டாளே ஒரு தடாலடி உத்தரவு, “ரிக்கி, இனிமே நான் எப்பப்ப இந்த மாதிரி டிஷ்ஷஸ் வேணும்னு சொல்றேனோ அப்பல்லாம் நீதான் குக் பண்ணணும். அப்புறம் வீட்டுலே பார்ட்டி அது இதுன்னு முக்கியமான அக்கேஷன்ஸ் வர்றப்ப எல்லாம் நீதான் கிச்சன் இன்சார்ஜ். ராமய்யா, கல்யாணி ரெண்டுபேரும் எதையும் தொடக்கூடாது. டேபிள்ல சர்வ் பண்றதுகூட நீ படிச்ச வெஸ்டர்ன் ஸ்டைல்லேதான் இருக்கணும்.” 

ரிக்கி, அபார மகிழ்ச்சியுடன் அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு, இன்றுவரை அதில் பிழை ஏதும் நேராமல், நல்லதொரு மகனாக – ‘நளனாக’ நடந்துகொள்கிறான். 

அம்மா படத்திற்குச் செம்பருத்திப் பூக்களை வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்த ரிக்கி, கல்யாணியும் ராமய்யாவும் சோர்ந்துபோய் தரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் “ஏன் ஒரு மாதிரியா…” என்று கேட்கப் போனவன் நிறுத்திக்கொண்டான். ரிக்கியின் அம்மா இறந்த மறு வருடமே ரிக்கி தெரிந்து கொண்ட முதல் விஷயம் – அவன் அம்மா இறந்த தினத்தை விரதநாளாக அனுஷ்டிப்பவர்கள் இந்த அன்பான வேலைக்காரர்கள் என்பதை ஒவ்வொரு வருடமும் இந்த ஒருநாள் – அன்றுதான் ரிக்கி அம்மா இறந்ததுபோல நினைத்துக்கொண்டு அவர்கள் அழுது புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஆக, இன்று ரிக்கியின் அம்மா இறந்த தினம். ரிக்கி தன் அறைக்குத் திரும்பிவிட்டான். அவனுடைய அந்தச் சின்ன அறையில் இருந்த அம்மாவின் படத்தைப் பார்த்தபடி கட்டிலில் தளர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டான். திடீரென நினைவு வந்தவனாய், தன் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஊதுபத்திக் கட்டிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொளுத்தி, எரிந்ததை அணைத்துவிட்டு மணக்கும் புகை எழுப்பிய அந்த ஊதுபத்திகளை அம்மா படத்தின் முன்னால் இருந்த ஸ்டாண்டில் வைத்தான். 

கிச்சனில் சுல்யாணி அம்மாள் ராமய்யாவிடம் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாள். 

“ராமய்யாண்ணே… அம்மா இறந்தது மட்டும்தான் கிக்குக் தெரியும். ஆனா அந்த உத்தமி எப்படிச் செத்தாங்க, ஏன் செத்தாங்கள்னு இதுவரைக்கும் ரிக்கி தம்பிக்கிட்டே சொல்லாமலே மறைச்சி வச்சிருக்கோமே, இது பாவமில்லையா?” 

“அதைச் சொல்றதுதான் நாம செய்ற பெரிய பாவமா இருக்கும். கல்யாணி” 

ராமய்யா அதற்குமேல் பேசவில்லை. இப்போது, அவன் நினைப்பு எல்லாம் பதினோரு வருடத்திற்கு முன்னால் ஓடி ஒரு கோர்ட்டுக்குள் உட்கார்ந்துகொண்டிருக்கிறது. ஏழு வயது ரிக்கியை மடியில் வைத்துக்கொண்டு. 

இந்திரஜித் தன் மனைவியை விவாகரத்து செய்ய நினைப்பதற்கான வலுவான காரணத்தை நீதிபதி கேட்கிறார். 

“அதை நான் எப்படிச் சொல்வேன். என் மனம். வாய் எல்லாம் கூசுகிறது. அந்தக் காரணத்தைச் சொல்வதன்மூலம் என் மானமும் பறிபோய்விடுமே” – நீதிபதி முன்னால் கண்ணீர் விடுபவன்போல் நடிக்கிறான் இந்திரஜித்.

“மிகவும் ரகசியமான முறையில் இந்த வழக்கை நடத்த நான் அனுமதித்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் காரணம் இந்தக் கோர்ட்டைத் தாண்டி வெளியே போகாது. நீங்கள் தயங்காமல் அந்தக் காரணத்தைச் சொல்லலாம்” -நீதிபதி வற்புறுத்துகிறார். 

கணவனுக்கு நேராக உள்ள சாட்சிக் கூண்டில் அழுதுகொண்டு நிற்கிறாள் ராஜலட்சுமி.

“இந்தக் கோர்ட்டில் என் வேலைக்காரன் ராமய்யா இருக்கிறான். அவனையும் அவனிடமிருக்கும் என் மகனையும் சேர்த்து வெளியே போகச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் என்னால் அந்தக் காரணத்தைச் சொல்ல முடியும்” 

நீதிபதி அதற்கு உத்தரவிட்டபொழுது, அரசாங்கத் தரப்பு வக்கீல் ஆட்சேபணை தெரிவிக்கிறார். வெளியேறப்போன ராமய்யா மீண்டும் உட்காருகிறான். 

கடைசியில், ராஜலட்சுமி கதறித் துடித்து மயக்கமடைந்து விழும்படியான படுபாதகப் பொய்க் காரணத்தை, இந்திரஜித் எனும் அந்த அரக்கன் தயங்காமல் சொல்லிவிட்டான். 

“என் மனைவி நடத்தை கெட்டவள்”

பத்தினி சொன்னால் மழை கொட்டும் என்று பெருமைப்படும் மண்ணில், ராஜலட்சுமியின் அழுகையால் நெருப்பு மழை கொட்டி அந்த இடத்திலேயே இந்திரஜித் கருகிச் சாம்பலாகியிருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை அன்று? தெய்வம் நின்று கொல்லும் என்ற ஆறுதல் தத்துவத்தையும் இந்த மண்ணிலேதானே உழுதிருக்கிறார்கள். 

நீதிபதி ஆதாரம் கேட்டதற்கு அந்தப் பாம்பு சுக்கின விஷம்- “என் மனைவி நன்றாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். நான் இல்லாத நேரங்களில் வீட்டிற்கு என்னைத் தேடிவரும் நண்பர்களைத் தன் பாட்டால், முறைகெட்ட நடத்தையால் அவர்களை ரகசிய நண்பர்களாக்கிக் கொண்டுவிட்டாள். இதற்கு மேலும் நான் காரணம் சொல்ல வேண்டுமா? சம்பந்தப்பட்ட நண்பர்கள் துரோகிகள்தான். ஆனால் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள், அவர்களைக் கோர்ட்டிற்கு இழுத்து அவமானப்படுத்த நான் விரும்பவில்லை. இவள் செய்த பாவத்திற்கு அவர்களைப் குற்றப்படுத்த என் மனசாட்சி இடம் தரவில்லை.” காமினியைப் பற்றிச் சொல்ல வேண்டிய உண்மைகளை, உத்தமியான மனைவி ராஜலட்சுமியின்மேல் திருப்பிக் கவிழ்த்துவிட்டான் இந்திரஜித். 

அதைக் கேட்டதும் ராமய்யா சுதறி அழுதான். அவன் அழுகையைக்கூட இந்திரஜித் கோர்ட்டில் திசைமாற்றிவிட்டான். “பாருங்கள். என் விசுவாசமான வேலைக்காரன், எனக்காக அழுவதைப் பாருங்கள்.” 

இந்திரஜித் ஜெயித்துவிட்டான். சத்தியம் தோற்கடிக்கப்பட்டது. 

வென்றவன் வீடு திரும்புவதற்குள், வீழ்த்தப்பட்டவள் விஷம் குடித்து மடிந்துவிட்டாள். 

சிறுவன் ரிக்கிக்கு கோர்ட்டில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத வயது. நடக்கத்தான் அவனுக்குத் தெரியும். தகப்பன் என்ற அசுரன் கோர்ட்டில் சொன்ன ‘நடத்தை’ என்ற பதத்திற்கெல்லாம் பொருள் புரியும் வயது அவனுக்கு இல்லை. ‘அம்மா இறந்துவிட்டாள்’ என்பது மட்டுமே அவன் மூளைக்கு எட்டுகிறது. அதுவும்கூட ராமய்யா சொல்லி. 

இந்திரஜித்தை அந்த அளவிற்குத் தன் இளமையால் ஆட்டிவைத்தவள் காமினி. இந்திரஜித் என்ற கோடீஸ்வரனை ராப்பிச்சையான இந்த நட்சத்திர ஹோட்டல் ஆட்டக்காரி சர்வசாதாரணமாய்ச் சாய்த்துவிட்டாள். ராஜலட்சுமியைத் தீர்த்துக்கட்டினால் ஒழிய தன்னால் முறைப்படி இந்திரஜித் அருகே அரியணையில் அமர வாய்ப்பில்லை என்று தெரிந்துகொண்டு, விவாகரத்து செய்யத் தூண்டினாள் இந்திரஜித்தை. விவாகரத்துக்கான காரணத்தையும் அவளே அவன் மூளைக்குள் திணித்தான். ராவணன் சொன்னதற்காக தர்மத்தை எதிர்த்து அழித்தவன் ராமயணத்து இந்திரஜித் இங்கே காமினி சொன்னதற்காக தர்மத்தை அழித்துவிட்டு – அதற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருப்பவன் இந்த இந்திரஜித்.

ராமய்யா வீட்டை விட்டு வெளியே போனால் ‘குடும்பத்தோடு கொளுத்திவிடுவேன்’ என்று பயமுறுத்தியே இத்தனைக் காலமாக வீட்டிற்குள்ளேயே அவனை சிறை வைத்திருக்கிறான் இந்திரஜித், 

இப்போது, ஏதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு ராமய்யாவின் நினைவு நீதிமன்றத்திலிருந்து மீண்டும் கிச்சனுக்குத் திரும்பியது. ஜன்னல் ஓரமாகத் தாழ்ந்திருந்த மாமரத்து மரக்கிளையில் குயில் ஒன்று உட்கார்ந்துகொண்டிருந்தது. “குக்கூ” அந்த இனிய ஒலியை எழுப்பும் குயில் ராஜலட்சுமி அம்மாளா? ராமய்யா அப்படித்தான் நினைத்தான். “அம்மா தெய்வமே. குயிலா வந்து எங்களைப் பாக்குறீங்களா, உங்க புள்ளையெக் கூப்புடுறேன், கொஞ்சம் இருங்க.” 

ரிக்கியின் அறைக்கு ஓடினான் ராமய்யா ரிக்கியுடன் கிச்சனுக்கு ராமய்யா திரும்பிபொழுதும் அந்தக் குயில் அந்தக் கிளையில்தான் உட்கார்ந்திருந்தது. மீண்டும் அது “குக். கூ குக்.. கூ” என்றது. “ரிக்கி, அது குயில் இல்லே. உங்க அம்மா உன்னைப் பார்க்க வந்திருக்காங்க..” -ராமய்யாவின் பேச்சு ரிக்கிக்கு அப்பாவித்தனமாகத் தெரிந்தது. “சரி. ராமய்யா அம்மாகிட்டே நீ பேசிக்கிட்டு இரு. நான் ரூமுக்குப் போறேன் ” – போய்விட்டான். குயிலும் பறந்துவிட்டது. 


ரிக்கியின் அம்மாவிற்குத் தூரத்துச் சொந்தம் என்பதெல்லாம் எவரும் இல்லாத இருட்டு. அந்தத் தைரியத்தில்தான் அந்த அன்பு மனைவியைக் களங்கப்படுத்தி அவள் காலத்தைச் சுலபமாக முடித்துவிட்டான் இந்திரஜித். ஆனால் அந்த உத்தமி வாசித்து மகிழ்ந்த வீணையை, ‘நலம்தானா?’ என்று விசாரிக்க மட்டும் ரிக்கி இன்று உயிரோடு இருக்கிறான். 

தன் அறைக்குள், அம்மாவின் ஞாபகார்த்தமான அந்த வீணையை பார்த்தபடியே, ரிக்கி தனது கையிலிருந்த புல்லாங்குழலை கண்களில் ஒற்றிக் கொண்டான் அம்மா ராஜலட்சுமி, ரிக்கிக்கு மூன்று வயதாகும்போதே அவனுக்குப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக்கொடுத்தாள். அம்மா வாசித்ததை அப்படியே சுத்தமாக, மேலும் அழகாய் அவன் வாசித்துக் காட்டுவான். அம்மாவிற்கு அதிசயமாய் இருக்கும். நாளாக, நாளாக, ராகங்களின் பெயர்கள் தெரியாமலே, அந்த ராகங்களை அதி அற்புதமாய் வாசிக்கத் தொடங்கிவிட்டான். ராமய்யா கதவைத் தட்டினான். கதவைத் திறந்தான் ரிக்கி, “ரிக்கி, அம்மா உடனே உன்னை வரச்சொல்றாங்க?” “எந்த அம்மா? மேடம்னு சொல்லுங்க ராமய்யா. இந்த வீணைக்குச் சொந்தக்காரங்கதான் எனக்கு அம்மா. இந்த வீட்டுக்குச் சொந்தக்காரம்மா என் அம்மா இல்லே” – திருத்தினான் ரிக்கி. 

மேடம் காமினி முன்னால் வந்து நின்றான் ரிக்கி.

“இந்தா பார் ரிக்கி, சிங்கப்பூர்லேருந்து எங்க ஹோட்டலோட ஓர்க்கிங் பார்ட்னரை இன்னிக்கு இங்கே டின்னருக்கு வரச் சொல்லியிருக்கேன், சைனீஸ் அண்ட் இண்டியன் டைப்புல ஸ்பெஷல் டிஷ்ஷஸ் ரெடி பண்ணிடு. அவரோட சேர்த்து கூட ஒரு அஞ்சு பேர் வரலாம். எல்லாம் கணக்குப் பண்ணி பிரம்மாதமான டின்னருக்கு அரேஞ்ச் பண்ணிடு” 

கட்டளையைப் பெற்றுக்கொண்டு கிச்சனுக்கு வந்தான் ரிக்கி. கல்யாணி அம்மாள் அவனைக் கட்டிப்பிடித்து அமுதாள். “அம்மா இறந்த நாள் அதுவுமா வீட்டுலே பார்ட்டி குடுக்குறா அந்த ராட்சஷி. அதுக்கு நீ சமைக்கணும்னு சொல்றாளே…இவ நல்லாயிருப்பாளா?” 

ராமய்யா திடமான குரலில் சொன்னான், “விடிஞ்சா கிருஷ்ண ஜெயந்தி. இந்தப் பொம்பளையால உனக்கு அவமானத்தைக் குடுக்குற மாதிரி குடுத்து, அந்த பகவான் உனக்கு விமோசனத்தைக் கொடுக்கலாம். யார் கண்டா!” 

ராத்திரி விருந்துக்கான பொருட்களை வாங்குவதற்காகத் தன் டூவீலரில் புறப்பட்டான் ரிக்கி போகிற வழியில், அம்மாவின் கல்லறைக்குப்போய், தான் கொண்டு வந்திருந்த செம்பருத்திப் பூக்களை வைத்து வணங்கிவிட்டுச் சில நிமிடங்கள் தன் புல்லாங் குழலை எடுத்து அம்மாவிற்குத் தாலாட்டு இசைத்தான் பிள்ளை. 

கிச்சனில் பரபரப்பாக சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த ரிக்கிக்கு – திருட்டுத்தனமாக கோயிலுக்குப் போய்விட்டு வந்த ராமய்யா விபூதி பிரசாதத்தை எடுத்து அவன் நெற்றியில் இட்டான். 

விருந்தினர்கள், ஹாலில் க்ளாசும் கையுமாக உட்கார்ந்திருக்க – காமினியின் மேல்தான் அவர்களின் போதை இடம் பெயர்த்திருந்தது. அந்த அறையின் சுவர்களை நாகரிகமாகக் கண்ணாடியால் பதித்திருந்தார்கள். அதனால் அங்கிருந்தவர்கள் இரட்டிப்புக் கூட்டமாகத் தெரிந்தார்கள். காமினியும் பல காமினிகளாய் மாறினாள். காமினியைப் புதிதாகப் பார்க்கிறவர்கள், அவன் சுல்யாணம் ஆகாதவள் என்றே நினைப்பார்கள். அவளின் இளமை இந்திரஜித்தின் தொழில் சூதாட்டங்களுக்கு உதவியாக இருந்தது. அவள் விழுந்து, விழுந்து குனிந்து சிரிக்கும்போதெல்லாம், அவளின் மார்பகச் செழிப்பு, ரவிக்கைக்குள் அடங்காமல் வெளியே பொங்கிட, கவனம் சிதறினான் விருந்தாளி. இந்திரஜித் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியபடி அவன் நீட்டிய பேப்பர்களில் எல்லாம் கையெழுத்திட்டான். இதே மாதிரியான மோகினித் தனத்தைக் கொண்டுதான் இந்திரஜித்திடமிருந்து ஏராளமான பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறாள் காமினி. இதெல்லாம் அந்தப் பணக்கார முட்டாளுக்குத் தெரியாது. தற்சமயம், அங்கே நடக்கும் விருந்தில் காமினி எதைக் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் அந்த அயோக்கியனுக்குத் தெரியாது. இப்பொழுது தெரியப்போகிறது. 

எல்லோரும் சாப்பிடும் நேரம் வந்தது. விருந்தாளிகள் டைனிங் ஹால் வந்தார்கள் ‘ரிக்கி’யை ஒரு இளம் சர்வண்ட் என்று நினைத்த அவர்கள், “அதை எடு, இதைச் கொடு” என்றபோதெல்லாம் ரிக்கி யார் என்பதே அவர்களுக்குத் தெரியாது. இந்திரஜித்தும், வந்தவர்களுடன் சேர்ந்துகொண்டு ரிக்கியை அதட்டி உருட்டி அங்கேயும் இங்கேயுமாக ஓட வைத்துக் கொண்டிருந்தான். கிச்சன் அறையிலிருந்தபடி. அந்தக் கொடுமையை அழுதபடி பார்த்துக்கொண்டு நின்றார்கள் ராமய்யாவும், கல்யாணியும் “டெலி ஷியஸ்… மார்வலஸ் ஃபெண்டாஸ்டிக்.” என்று ரிக்கியின் தயாரிப்பைப் புகழ்ந்தார்கள் வந்தவர்கள். ரொம்பவும் போதை ஏறிய ஒருவர் ‘டிப்ஸ்’ என்று சொல்லி, ரிக்கி வாங்க மறுத்தும், கேளாமல் ஒரு ஆயிரம் ரூபாயை அன்பளிப்பு என்று சொல்லி அவன் பாக்கெட்டில் திணித்தார். எல்லோரும் சாப்பிட்டு முடித்து கை கழுவும் சம்பிரதாயம் நெருங்கியது. 

அப்பொழுதுதான் அது நடந்தது. காமினி எழுந்து ஓடி வாஷ்பேஸினில் குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்தாள். “தேள்.. தேள்” என்று வேறு கத்தினாள் எல்லோரும் பதைத்துப்போய் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். 

“நான் குடிச்சிட்டிருந்த சூப்பில் தேள் கிடக்குது பாருங்க” வாந்திக்கிடையில் கத்தினாள் காமினி. இதுவரை, அவள் மட்டும் சாப்பிடாமல் நேரம் வரட்டும் என்று ‘சூப்’பைக் கையில் வைத்துக் காத்திருந்தது ஏன் என்று தெரிந்துவிட்டது. 

ரிக்கி அதிர்ந்துவிட்டான்.

காமினி குடித்த சூப் கோப்பையிலிருந்து ஒரு செத்த தேளை எடுத்தார் இந்திரஜித் இவள் வைத்திருந்த சூப்பில் மட்டும் எப்படி வந்து மிதந்தது? அங்கேதான் காமினி தன் ஆட்டத்தைக் காட்டிவிட்டான். “என்னைக் கொல்றதுக்காக சதி நடந்திருக்கு” என்று ஆங்கிலத்தில் கத்தி அழுதாள். 

தமிழ் பிழைத்தது. ஆனால் ரிக்கி பிழைக்கவில்லை. 

அடுத்து நடந்த அநியாயம் காமினி எதிர்பார்த்ததே. ஏனெனில் திட்டம் போட்டு அந்தக் காமினி போட்ட தேள்தான் அது. காமினியைக் கொல்ல ரிக்கி செய்த சதி என்று சொல்லி, ரிக்கியைக் கதறக் கதற, தன் குடி வெறியோடு பெல்ட்டால் அடித்து நினைவிழக்கச் செய்துவிட்டான் இந்திரஜித். உதட்டிலும் கன்னத்திலும் உடம்பின் எல்லா பகுதியிலும் விழுந்த அடியால் உடலெங்கும் ரத்தம் கன்றியும் கறுத்தும் – மயங்கிக் கிடந்த ரிக்கியைத் தூக்கிக்கொண்டு கல்யாணியும் ராமய்யாவும் அவனுடைய அறைக்குப் போனார்கள். வாந்தி என்ற பெயரில் வாஷ்பேஸினில் சூப்பை உமிழ்ந்த காமினியை அழைத்துக்கொண்டு இந்திரஜித்தும் அவளின் குடிகாரக் கூட்டமும் பக்கத்து ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தது. 


5 

காமினியின் வாந்திக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க டாக்டரால் முடியவில்லை. அவர்கள் கொண்டு போயிருந்த சூப்பிலும் தேளின் பாதிப்புக் கிடையாது. “இப்படிச் செய்து ஒரு உயிரைக் கொல்ல முடியாது” என்று டாக்டர் சொல்லியும் போதையில் இருந்தவர்கள் நம்பவில்லை. பிறகென்ன? பெரிய இடத்துப் பேஷண்ட். அவர்கள் திருப்திப்படும்படி புரியாத எதையோ சொல்லி, அவர்களுக்குத் தாளம் போட்டு அனுப்பி வைத்தார் டாக்டர். பிறகு அந்தக் கோஷ்டி ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குப் போய் மீண்டும் குடித்துவிட்டு அவரவர் வீடு திரும்பினார்கள். புருஷனை நம்ப வைப்பதற்காக, “ரிக்கியின் சூழ்ச்சியிலிருந்து தெய்வம்தான் என்னைக் காப்பாற்றியது” என்று காரில் வரும்போது கன்னத்தில் போட்டுக் கொண்டே வந்தாள் காமினி. அதை அந்த முட்டாள் புருஷனும் நம்பினான். “பாவம் சின்னப்பையன். ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் – அவனை மன்னித்துவிடுங்கள். மீண்டும் இப்படி ரிக்கி நடந்துகொள்வான் என்ற பயத்தில் அவனை வீட்டை விட்டு மட்டும் துரத்திவிடாதீர்கள்” என்று கெஞ்சுவதுபோல நடித்து, அபாரமான தனது திட்டத்தை புதிரான மொழியில் அவள் தெரிவித்தபோது, இந்திரஜித் சிலிர்த்துவிட்டான். பந்தயக்கோழி மாதிரி அவன் பிடரி மயிர்கூட விறைத்துக்கொண்டது. “நீ ஒரு அப்பாவி, அவன் மேல் இரக்கம் காட்டினால் அதைவிடப் பயங்கரம் வேறு ஒன்றுமில்லை. வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்போறேன். இனிமேல் அவனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று காமினி எதிர்பார்த்திருந்த வசனத்தைப் பேசினான். இதைத்தானே காமினியின் சதுரங்க மூளை திட்டமிட்டிருந்தது. 

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் ராமய்யா ஓடி வந்தான். “அய்யா, இந்த லெட்டரை உங்ககிட்டே குடுக்கச் சொல்லிட்டு தம்பி போயிடுச்சுங்க” என்று ஒரு கடிதத்தை நீட்டினான் இந்திரஜித்திடம். 

“திருவாளர் இந்திரஜித் அவர்களுக்கு, 

நிரந்தரமாக உங்களை விட்டுப் போகிறேன். இனி திரும்பி வரமாட்டேன் கூடிய சீக்கிரத்தில், கண்ணுக்கு எட்டாத இடத்தில் என்னுடைய உருத்தெரியாத பிணம் குளத்திலோ, கிணற்றிலோ கிடந்து நாறிக்கொண்டிருக்கும். இந்த உதவியைச் செய்த உங்களுக்கு என்னுடைய நன்றி. 

வாழ்க மரணம்! 
ரிக்கி” 

கடிதத்தைப் படித்துவிட்டுச் சிரித்தாரே ஒரு சிரிப்பு. 

“உன்னோட சாவை நானும் வாழ்த்துறேன்டா. காமினி, இந்தக் கொலைகார நாய், நான் போலீஸிலே புடிச்சுக் குடுத்துடுவேன்னு பயந்து வீட்டை விட்டே ஓடிருச்சு. தற்கொலை பண்ணிக்கப் போறானாம். நான் நினைச்சது சுலபமா முடிஞ்சு போச்சு. நீ ஒரு ஏமாளி அவனுக்காகப் பரிஞ்சு பேசுனியோ?” 

மாய மயக்கம் போட்டு, மிக மிக ஜாக்கிரதையாக புடவை கசங்காமல் சோபாவில் ஒய்யாரமாய்ச் சரிந்தாள் காமினி புருஷன் பன்னீர் தெளித்து அவள் மயக்கத்தைப் போக்கியதும், “அய்யோ ரிக்கி நம்மைவிட்டுப் போயிட்டானா.” என்று அழுது நடித்தவள், ‘ஆஹா. எல்லாச் சொத்தும் இப்ப என்னை வந்து சேர்ந்திடுச்சு’ என்று உள்ளுக்குள் பரமானந்தச் சிரிப்பு சிரித்தாள். இன்றைக்கே அதை சட்டபூர்வமாக்கிவிட வேண்டும் என்று நினைத்தபடி, “என்னாலே நடக்க முடியலே.. இந்து. என்னை பெட்ரூமுக்குத் தூக்கிட்டுப் போறீங்களா?” என்று போதைக் கண்களால் கொஞ்சினாள். 

ஆனால் ரிக்கியோ – 

வானத்தில் உயர உயரப் பறக்கும் அளவிற்கு சிறகு விரித்துக் கொண்ட மகிழ்ச்சியில், ப்ளூட்டை வாசித்தபடியே ஊருக்கு வெளியே போகும் நெடுஞ்சாலையில் நடந்துகொண்டிருந்தான் ரிக்கி. 

காமினியை அழைத்துக்கொண்டு எல்லோரும் ஹாஸ்பிட லுக்கு ஓடிய பிறகு நடந்தது இதுதான் – வெந்நீர் போட்டு ரிக்கியின் உடம்புக்கு ஒத்தடம் கொடுத்து, ரத்தக் கசிவையெல்லாம் கல்யாணி துடைத்துவிட்டாள். ராமய்யா தோட்டத்துப் பக்கம் ஓடி.. சில மூலி கைச் செடிகளைச் சாறு பிழிந்து அவன் உடம்பெல்லாம் தடவி விட்டார். கஷாயம் ஒன்றைப் போட்டுக்கொண்டு வந்து ரிக்கியைக் குடிக்கச் செய்தாள் கல்யாணி. அப்போது ராமய்யா சொன்ன உபதேசத்தை உடம்பு வலியோடு உன்னிப்பாகக் கேட்டான் ரிக்கி. 

“நான் கும்பிடுற பகவான்தான் அந்தக் காமினியைத் தேளாக்கி உன்னைக் கொட்டச் செய்திருக்கிறார். ஆனா உனக்குக் கடி மட்டும்தான். விஷம் எல்லாம் அவ உடம்பிலே ஏறிடுச்சு. அதனோட பலனை அவளும் உங்க அப்பாவும் கூடிய சீக்கிரம் அனுபவிப்பாங்க. நீ இந்த வீட்டை விட்டுச் சுதந்திரமா வெளி உலகத்துக்குப் போறதுக்குக் காமினிங்குற விஷப் பாம்பை விட்டு பகவான் உன்னைத் தப்பியோட வைக்கிறதா நினைச்சுக்க. இப்ப நான் சொல்றபடி நீ கேக்கணும்” – அதுதான் அந்தக் கடித நாடகம். 

ரிக்கி புறப்படுவதற்கு முன்பு அம்மாவின் படத்தை எடுத்து தனது ஷோல்டர் பாக்கில் வைத்துக்கொண்டான். ராமய்யா வற்புறுத்திக் கொடுத்த ஒரு சிறிய தொகையை ஏற்றுக் கொண்டான். “பகவான் உனக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுப்பான் நல்ல நிலையில் உன்னைப் பார்க்குற வரைக்கும் நான் நிச்சயம் உயிரோட இருப்பேன்” – ராமய்யா அப்படிச் சொன்ன பொழுது ராமய்யா, கல்யாணி இருவரின் பாதங்களையும் தொட்டு வணங்கிவிட்டு அவர்களைப் பிரிந்து செல்வதைப் பொறுக்காமல் புறப்பட்ட ரிக்கியைத் தனியே அழைத்துச் சென்ற ராமய்யா, “ரிக்கி நான் எழுதின ஒரு முக்கியமான லெட்டர் இந்தக் கவருக்குள்ளே இருக்கு. நான் உன்கிட்டே கேக்குற சத்தியம் இது ஒண்ணுதான். நீ ஒரு நல்ல நிலைமையை வாழ்க்கையிலே அடைஞ்சதுக்கு அப்புறம்தான், இதை நீ பிரிச்சுப் படிக்கணும். பகவான் உனக்குத் தந்திருக்கிற நல்ல இசை ஞானம்தான் உன்னை வாழ்க்கையிலே உயர்த்தப்போகுது” என்றவர் அவன் கையில் அந்த சிவப்பு நிறக் கவரைக் கொடுத்தார். “இந்தக் கடிதத்தைப் பொறுத்தவரை நான் சொன்னதை மட்டும் மறக்காதே” என்று மீண்டும் அழுத்தம் கொடுத்தார். 

‘இனி என்ன செய்யப் போகிறோம்’ என்ற திட்டமெல்லாம் போடாமல் ரிக்கி என்ற வானம்பாடி புல்லாங்குழலை வாசித்தபடியே ஊட்டிக்குச் செல்லும், குளிர்படர்ந்த சாலையில் நடந்துகொண்டிருந்தபோது… ஒரு செல்ல மழை போடத் தொடங்கியது. உடனே அவனுக்கு அவன் நீர் பாய்ச்சி வளர்த்த செம்பருத்திப் பூக்கள்தான் நினைவுக்கு வந்தன. அந்தத் தூறல் மழைக்கு அவன் எங்கும் ஒதுங்கவில்லை. நனைவதிலும் ஒரு சுகம் தன்னைச் சுற்றிலும் பல மாதிரியான நறுமணக் காற்று சூழ்ந்துகொள்ள, ‘ம்’ என்று சுவாசப் பைக்குள் அந்த தறுமணத்தை இழுத்துக்கொண்டே நடக்க – அடிக்கடி மேலிருந்து இறங்கி வரும் லாரி, பஸ்களுக்கு தன்னை ஓரம் கட்டியபடியே பயணத்தைத் தொடர்ந்தபொழுது, சிவப்பு நிறத்தில் மாருதி கார் ஒன்று அவனைக் கடந்தது. ஆனால் நின்றுவிட்டது. ரிக்கி அந்த மாருதியை நெருங்கியபோது கார்க் கதவைத் திறந்த காரின் சொந்தக்காரர், “தம்பி மழையிலே ஏன் நனையறே, உள்ளே வா” என்றார். அப்படியே செய்தான் ரிக்கி. மாருதி புறப்பட்டது. அவர் வயதான முதியவரும் இல்லை; இளமை மிச்சமுள்ள நடுவயசும் இல்லை என்கிற மாதிரி ஒரு பெரியமனிதத் தோற்றம் அந்த இருட்டில் அவரது லட்சணங்களை அவ்வளவுதான் ரிக்கியால் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னான். 

“தம்பி நீ ஊட்டி போறியா? குன்னூரா?” இரண்டில் ஒன்று சொல்லவேண்டும். பேசிப்பேசி பழக்கப்பட்ட பெயர் ஊட்டிதான்.

“ஊட்டி சார்” 

“நானும் ஊட்டிதான் போறேன்” 

“ஊட்டியிலே எந்த இடம்?”

இவன் ஊட்டியைப் பார்க்கப்போவதே இதுதான் முதல் தடவை. என்னத்தைச் சொல்வது? 

“என் சிநேகிதன் வீட்டுக்கு சார்.” 

“உன் ஃப்ரண்டு என்ன பண்றான் ஊட்டியிலே”

“படிச்சிட்டிருக்கான்!” 

“எப்படியும் இந்த மழையிலேயும் காத்துலேயும் ஊட்டி போய் சேர்றதுக்குப் பதினோரு மணி ஆயிடும். இந்த ராத்திரியிலே எதுக்கு ஃப்ரண்டுக்குத் தொல்லை குடுக்குறே? என் வீட்டுலே தங்கிட்டு காலையிலே போய்க்க என்ன சொல்றே” 

“ஓகே.சார்.” 

“நான் என்னைப் பத்தி உனக்குச் சொல்லலே. நான் ஒரு டாக்டர். எனக்கு ‘டைம்’ கிடைக்கறப்ப எல்லாம் என்னோட ப்ரெண்ட்ஸைக் கோயம்புத்தூர் வந்து பார்ப்பேன். மறுநாள் காலையிலே திரும்பிடுவேன். இன்னைக்கித்தான் ராத்திரியே புறப்பட்டுட்டேன். என்னமோ தெரியல, இன்னைக்கி நான் போய்ச் சேர்ந்த நேரம் ஜெனரேஷன்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்லே (ரிக்கிக்கு பளார் என்றிருந்தது. ஜெனரேஷன்ஸ் அபார்ட்மெண்ட்ஸ் ரிக்கி வீட்டுக்குப் பக்கத்தில்தானே! ரிக்கியின் அதிகாலை ரசிகர்களின் கூட்டம் அந்த அடுக்கமாடி கட்டிடத்தில்தானே டாக்டர் சார்?) இருந்த என் ஃப்ரண்ட்ஸ், எல்லாருமே ஒரு ‘SAD நியூஸ்’ பத்தி வேதனைப் பட்டுக்கிட்டிருந்தாங்க. அவுங்க மூடுலே நான் வழக்கம்போலப் பேச முடியலே.. அதான் திரும்பிட்டேன். இப்பக்கூட ஒரு பேச்சுத் துணைக்குந்தான் உனக்கு லிஃப்ட் குடுத்தேன். என்னை பரோபகாரின்னு நினைச்சுடாதே” – சிரித்தார். 

இந்த டாக்டர் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிற வேடிக்கையான ஆள் என்று கணித்துவிட்ட ரிக்கி ஜெனரேஷன்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்காரர்கள் சோகத்தில் மிதப்பதாக டாக்டர் சொன்னது, தன்னைப் பற்றிய சோகமாகத்தான் இருக்கும் என்பதை எளிதாக நிச்சயப்படுத்திக்கொண்டான். இனிமேல் இவரிடம் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என்றும் தீர்மானித்துவிட்டான். 

“என்ன தம்பி ஒண்ணுமே பேசாம வர்றே?” 

“ஒண்ணுமில்லே சார்.” 

“பேசறதுக்கு எதுவுமில்லேன்னா ஏதாச்சும் பாடேன். அது எந்த மாதிரி பாட்டா இருந்தாலும் சரி. வெஸ்டர்ன், கிளாசிக், இல்லே இந்துஸ்தானி, எதுவா இருந்தாலும் சரி. தெரிஞ்சதைப் பாடு. மியூசிக்னா நான் அதுல பைத்தியம். ஆபரேஷனைக்கூட ஏதாச்சும் ஒரு கீர்த்தனையைப் பாடிக்கிட்டேதான் செய்வேன். அதனால பேஷண்ட்டுக்கு ஒண்ணும் ஆகாது.” 

மீண்டும் சிரித்தார். 

“சார் நான் ஃப்ளூட் நல்லா பிளே பண்ணுவேன்” 

“வெரிகுட் வெரிகுட் நீ எனக்கு அருமையான கம்பெனி. எங்க ‘ப்ளே’ பண்ணு கேக்கலாம்.” 

டாக்டருக்கு ஏகமாய் உற்சாகம். 

ரிக்கி புல்லாங்குழலை எடுத்து, தன் உள்ளத்தின் எல்லையற்ற மகிழ்ச்சியை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான கொண்டாட்டத்தை, நரகத்திலிருந்து தப்பி வந்துவிட்ட கோலாகலத்தை, காற்றில் இசையாக எழுப்பினான். 

மயக்கும், போதையூட்டும் அந்த தெய்வீக ராகத்தை ரிக்கி வாசிக்கத் தொடங்கியதும். சங்கீதப் பிரியரான டாக்டர் காரை ஓரங்கட்டிவிட்டு, ரிக்கியின் குழல் இசையில் கண்களை மூடிக் கொண்டு ஊட்டி க்ளினிக், தனக்குள்ள ஷூகர், மகள், மகளின் பிரச்சினை யாவும் மறந்து ரசிக்கத் தொடங்கிவிட்டார். 

– தொடரும்…

– அழகிய தவறு (நாவல்), முதற் பதிப்பு: 2007, சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *