அழகின் விலை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 845 
 
 

ஒரு பெண்ணாக சிறு வயதிலிருந்து பல பேருடன் பேசிப்பழகியிருக்கிறாள். ஆனால் மனம் விரும்பியதால் ஏற்பட்ட இந்தப்பழக்கத்தால் வந்துள்ள தற்போதைய தர்ம சங்கடமான நிலை கவிக்கு எப்போதும் இருந்ததில்லை. ‘அழகால் தனக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ?’ என அஞ்சினாள்.

“மனதில் தோன்றுவதையெல்லாம் செய்ய முடியாது. செய்யக்கூடாது. செய்வதால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்” 

என கவி கூறியதை மறுத்துப்பேசினாள் பவி.

“யாரோ எதுவோ நினைத்து விட்டுப்போகட்டும். நாம் சந்தோசமாக இருக்க மனம் போல் நடந்தால் தான் சாத்தியம் ” எனும் தோழி பவியின் பேச்சை சில சமயம் ஆதரிக்கத்தோன்றும். பல சமயம் நிராகரிக்கவும் தோன்றும் கவிக்கு.

“இத பாரு கவி. வாழறது ஒரு தடவை தான். யாரோ ஒருத்தர் சொல்லி வெச்சுட்டு போனதை அப்படியே பாலோ பண்ணனம்னு அவசியமில்லை. பிடிச்சிருந்தா பாலோ பண்ணலாம். பிடிக்கலேன்னா விட்டிடலாம். தெனமும் உப்புமாவையே செஞ்சு உன்னால சாப்பிட முடியுமா? அப்படித்தான் கல்யாண வாழ்க்கையும். பெட் ரூம், சமையல் கட்டு, வாசல், சொந்தக்காரங்க, நல்லது கெட்டதுன்னு நம்ம பாட்டியோட பாட்டி நடந்து போய் பண்ணினதை நாம கார்ல போய் பண்ணறோம். அவன் கிட்டப்பேசாதே… இவங்கிட்டப்பேசாதே…. ன்னு சொன்னா இந்தக்காலத்துல எந்தப்பொண்ணும் கேட்க மாட்டாங்க. ஆம்பளைங்க கல்யாணத்துக்கப்புறம் எந்தப்பொண்ணுங்க கூடவும் பேசாமையா இருக்காங்க…?”

“பேசலாம். ஆனா பேசப்பேச பேசிட்டே இருக்கனம்னு தோணுச்சுன்னா அது தப்பாயிடுமே….?”

“ஒருத்தரு கூட பேசும் போது திரும்பத்திரும்பப்பேசனம்னு தோணனம். அவங்க தான் நமக்கானவங்க. கெமிஸ்ட்ரி ஒத்துப்போகனம். அந்த ஈர்ப்பு தான் நம்ம மனசுக்கு சந்தோசத்த கொடுக்கும். ஆள்காரன்ல இருந்து பால்காரன் வரைக்கும் அந்த வசியம் இருந்தாத்தான் நமக்கு நல்லது கிடைக்கும். காலைல கல்யாண மண்டபத்துல ரகு கூட பேசுனியே… என்ன தோணுச்சு….?”

“அவர ரொம்ப பிடிச்சிருக்கு. பேசிட்டே இருக்கனம்னு கூட தோணுச்சு. நாங்க அதிக நேரம் பேசிட்டிருந்ததை மத்தவங்க ஒரு மாதிரியா பார்க்கும் போது மனசுக்குள்ள பயமா இருந்துச்சு…”

“ஆரம்பத்துல கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். அப்புறம் தைரியம் வந்திருச்சுன்னா சரியாயிடும். அவரு டெய்லி சம்பாதனையே பல லட்சம் இருக்கும். பெரிய தொழிலதிபர். உன்ன மாதிரி லட்சணமான பொண்ணுக்கு செலவு பண்ண யோசிக்கவே மாட்டாரு. அந்தக்கல்யாண மண்டபத்துலயே உன்னப்பிடிச்சிருக்குன்னு சொன்னாரு. உன்ன மட்டுந்தான் பிடிச்சிருக்குன்னு சொன்னாரு. அவரைப்பிடிக்கிறதுக்கு பல பேரு ட்ரை பண்ணறாங்க. ஆனா அவருக்கு பிடிக்கிறது தான் முக்கியம்‌. அந்த வகைல நீ அதிர்ஷ்ட சாலி தான்….”

“அப்படியென்ன நான் ரொம்ப அழகாவா இருக்கேன்….?”

“என்னடி இப்படி கேட்டுட்டே…? உன்னோட அழகுக்கு ஒரு ஊரையே எழுதி வைக்கலாம். பணம் சொத்துன்னு வந்திருச்சுன்னா இன்னும் அழகு கூடிப்போயிடும். நீ வேணும்னா நாளைக்கு என் கூட டவுனுக்கு வா. பியூட்டி பார்லர்ல உன்னை எப்படி சிலை மாதிரி செதுக்கச்சொல்லறேன்னு பாரு. அப்புறம் உன்னை பாதுகாத்துக்கறதுக்கு பாடிகார்ட் போட வேண்டியது வந்தாலும் வரும். நீ ரகுவோட பார்வைக்குள்ள வந்த பின்னாடி பஸ்ல எதுக்கு போறே….? ஒரு மெஸேஜ் கொடுத்தா கார் அனுப்பிடப்போறாரு. இனி மேல் எதுக்கும் கவலைப்படாதே…. நாஞ்சொல்லறத மட்டும் கேளு. ராணி மாதிரி வாழ்ந்திடலாம்” என்றாள் பவி உறுதியாக.

இரவு முழுவதும் கவிக்கு உறக்கம் வரவில்லை. ‘வெளியூரில் நம்மை நம்பி இருக்கும் கணவன். வயதான அவரது பெற்றோர். அவர்களுக்குத்தெரியாமல் மனதுக்குப்பிடித்ததை செய்வது துரோகமில்லையா? கேட்டால் வேண்டாம் என்று தான் கூறுவார்கள். கணவரின் வருமானத்தை வைத்து குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ், வீட்டு வாடகை, குடும்பச்செலவு என வாரத்துக்கு ஒரு தடவை கூட ஹோட்டலில் சாப்பிட முடியவில்லை. பிடிச்ச டிரஸ் எடுக்க முடியவில்லை. பவி சொல்வதைக்கேட்டால் வீடு வாங்கலாம், கார் கூட வாங்கலாம். வசதியாக வாழலாம். வயதானால் அழகு போய்விடும். அதன் பின் யாரும் இப்படித்தேடி வர மாட்டார்கள்’ மனம் சலனப்பட்டு சோர்வில் அவளையறியாமல் உறங்கிப்போனாள் கவி.

“உன்னப்பண்ணச்சொல்றத என்னால பண்ணமுடியாதா என்ன? ஆனா என்னோட ஒடம்புல கவர்ச்சி இல்லை கவி. இதுக்கு அழகு தான் முக்கியம். அது உன் கிட்ட கொட்டிக்கிடக்குது. ஒரு பெண்ணான எனக்கே உன்னோட அழகுமேல ஆசை இருக்குன்னா பார்த்துக்குவே….”

பவியின் பேச்சைக்கேட்டு மிகவும் பெருமையோடு வெட்கப்பட்டாள் கவி.

“என்னமோ பண்ணடி. என்னை உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன். இந்த நிமிசத்துல இருந்து உனக்கு நான் அடிமை. என்னோட வாழ்க்கை உன் கைல” என்றாள் அதீத நம்பிக்கையுடன் கவி.

அடுத்த நாள் கவியை அழைத்துச்செல்ல ரகுவின் ஒரு சொகுசு காரில் வந்திருந்தாள் பவி. கவி சேலையில் தேவ லோக ரம்பையைப்போல் ஜொலித்தாள். ஒரு பேப்பரில் கவியிடம் கையெழுத்து வாங்கினாள் பவி. ஒரு லட்சம் பணம் அட்வான்சாக கொடுத்தாள்.

 “பாக்கி வேலை முடிஞ்சதும் தருவாங்க. அதுக்கப்புறம் உன்னோட அதிஷ்டத்தைப்பொறுத்து மறுபடியும் கூப்பிடுவாங்க. இதுவே பெரிய அதிஷ்டம் தான். ஒரே நாள்ல பத்து லட்சம் யாருக்கு கிடைக்கும்…?” கவியின் முகம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அரண்மனை போன்ற வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதுப்பெண்ணைப்போல் அதிகப்படியான நகைகளை அணிந்திருந்தாள் கவி. பட்டு வேட்டி சட்டையில் இருந்த மாப்பிள்ளை கோலத்திலிருந்தவரை உரசியபடி மணவறையில் தலை குத்தி வெட்கப்பட்டபடி வந்து அமர்ந்து தைரியமாக தென்னம்பாலை வெடித்தது போன்ற தனது பற்களைக்காட்டி சிரித்தபடி போஸ் கொடுத்தாள். போட்டோ வீடியோ எடுக்கப்பட்டது.

சில வார்த்தைகளைப்பேசச்சொன்னார்கள். பேசினாள். மனம் இப்போதும் சலனப்பட்டது. வேறு நபரோடு மனைவியாக, மணப்பெண்ணாக நடித்தது தவறோ…? அவரது முகத்தைக்கூட நேருக்கு நேர் பார்க்கவில்லை. பார்க்கப்பிடிக்கவுமில்லை. ‘பவியின் பேச்சைக்கேட்டு பணத்துக்காக அவசரப்பட்டு விட்டோமோ….?’ நினைத்து வருந்தினாள் கவி.

“ஒரு பிரபல நடிகையை வெச்சு எடுத்திருந்தா கூட இப்படி தத்ரூபமா வந்திருக்காது. இன்னொரு சாட் நீ அவரைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிற மாதிரி எடுக்கனம். அப்பத்தான் சூட்டிங் முடியும்” என பவி சொன்னதும், “அது மட்டும் முடியாது…” என ஒரு குழந்தையைப்போல் பிடிவாதமாக மறுத்தவளை, மாப்பிள்ளையாக நடித்தவர் பின் பக்கமிருந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க எத்தனித்த  போது, இந்த செயல் பிடிக்காததை வெளிப்படுத்த கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டவள், திடீரென வெகுண்டெழுந்து கதறி அழுதபடி கோபத்தில் “என்னோட அனுமதி இல்லாம எதுக்காக என்னை பின் பக்கமா கட்டிப்பிடிச்சீங்க….?”  எனக்கூறி அவரது கன்னத்தில் ஓங்கி அறைய முகத்தைப்பார்த்த போது அதிர்ந்தாள் கவி.

“என்ன கவி அதிர்ச்சியா இருக்கா….? ரவியோட சம்மதத்தோட தான்  நகைக்கடை அதிபர் ரகு  விளம்பரத்துக்காக உன்னை நடிக்க வைக்க முடிவு பண்ணினார்” என பவி சொன்ன அடுத்த நொடி ரவியை இழுத்தணைத்து பலர் இருப்பதை மறந்து, அவனது கன்னத்தில் முத்த மழை பொழிந்தாள் கவி. திருமணமாகி ஐந்து வருடங்களில் தன் கணவன் ரவியுடன் இந்தளவு காதலுடன் நடந்து கொண்டதில்லை கவி.

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *