அழகழகாய் வீடு கட்டி…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,933 
 

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் கோபாலன்.
மனசுக்குள், “எங்களுக்கு வேணாம்… எங்களுக்கு இங்க சரிப்படாது… வசதி போறாது. வேற வீடு வாங்கறதா முடிவு பண்ணிட்டோம். இந்த வீட்டை வித்துட்டு, எங்களுக்கு சேர வேண்டியதை கொடுங்க. எங்க வழிய நாங்க பார்த்துப்போம்!’ என்று, ஜெயந்தியும், ஸ்ரீதரும் பேசியவையே மீண்டும், மீண்டும், “ரீவைண்டு’ ஆகின.
“வீட்டை வித்துட்டா நாங்கள் எங்க இருக்கறது ஜெயந்தி?’ கேட்டாள் அலுமேலு.
“இதென்ன கேள்வி அத்தை? எங்களோட ஆறு மாசமும், செந்திலோட ஆறு மாசமும் இருங்களேன்!’
“அதாவது, எங்களை நாடோடிகளாட்டமா அலையச் சொல்றே…’
அழகழகாய் வீடு கட்டி...“சரி… வேணாம்… அதான் மாமாவுக்கு பென்ஷன் வருதுல்லே. அதுல வாடகைக்கு ஒரு வீட்டை பிடிச்சுட்டு இருங்களேன்… பிள்ளைங்க, நல்லா இருக்கணும்ன்னு நினைச்சா, கொஞ்சம் தியாகம் பண்ணித்தான் ஆகணும் அத்தே…’ என்று நொடித்துக் கொண்டாள் ஜெயந்தி.
“ஆமாம்மா… நீ சொல்லித்தான் தியாகத்தைப் பத்தி நான் தெரிஞ்சுக்கணும்ங்கறது என் தலையெழுத்து. என்ன செய்றது… வயசான காலத்துலே நிழலாயிருக்கும்ன்னுதான், வாயக் கட்டி, வயித்தைக் கட்டி இந்த வீட்டைக் கட்டினோம். இப்படி, இதை வித்துட்டு, நடுத்தெருவுல நிக்க வேண்டிவரும்ன்னு தெரிஞ்சிருந்தா கட்டாமலேயே இருந்திருப்போம்!’
“இந்த வீடு ஜெயந்திக்கு பிடிக்கலைப்பா… புறாக் கூடு மாதிரி வீட்டுல இத்தனை பேரு… மூச்சு முட்டறாப்பல இருக்குன்னு பீல் பண்றா. மாடர்னா பிளாட்டுக்கு குடியேறலாம்ங்கறா. என் பங்கை தானேப்பா கேக்கறேன். இதுக்கு ஏன் இத்தனை பேச்சு?’ என்றான் ஸ்ரீதர்.
“நீ… பிறந்து தவழ்ந்த வீடுடா இது; இதைப் போயி விக்கணும்ங்கறீயே… உன் போக்கே சரியில்லடா…’ குமைந்தாள் அலமேலு.
“பிறந்த வீடாம்… பிறந்த வீடு; டஞ்சன் மாதிரி. அம்சமா, அழகா, மாடர்ன்னா வீடு வாங்கக் கூடாதா?’ சீறினாள் ஜெயந்தி.
“யாரு வேண்டாம்ன்னது? திவ்யமா வாங்குங்க, சந்தோஷம் தான். ஆனா, வாழற வீட்டை வித்துடு, வித்துடுன்னா என்ன அர்த்தம்? ஏண்டா ஸ்ரீதர், அம்மா, அப்பாவும் கூட அரதப் பழசுதான். அப்ப, எங்களையும், உதறிட்டு, அம்சமா, மாடர்னா வேற அம்மா, அப்பாவை விலைக்கு வாங்கிடுவீங்களா?’ என்றாள் அலமேலு பதிலுக்கு.
“ஆமா, காலுக்கு உதவாததை கழட்டி எறியறாப்பல, ஒண்ணுக்கும் ஆகலேன்னா… உபத்திரவமில்லாம எங்கயாவது முதியோர் இல்லத்துலே கொண்டு போய் தள்ளிட வேண்டியது தான்…’ என்றாள் ஜெயந்தி ஆங்காரமாக.
கேட்டுக் கொண்டிருந்த எல்லாருக்குமே, “சிவுக்’ கென்றாகிவிட்டது. சட்டென்று, ஜெயந்தியின் அந்த பேச்சு, ஸ்ரீதருக்கும் என்னவோ போலிருந்தது.
“ஏன் வீண் பேச்சு? அப்பா, பத்து நாளைக்குள் எனக்கு பணம் வேணும்; ஏற்பாடு பண்ணுங்க… அப்புறமா போன் பண்றேன். ஜெயந்தி வா… போகலாம்…’ என்று மடமடவென வெளியேற, அவளும் பின் தொடர்ந்தாள்.
வீடு, “கல்’லென்றாகி விட்டது. அலமேலு, அறைக்குள் நுழைய, கோபாலன் அப்படியே சமைந்து போனார்.
கோபாலன், படுக்கையிலிருந்து மெதுவே எழுந்து சென்று, புழக்கடை கதவை திறந்தார். சிலு, சிலு வென தென்றல் மிதந்து வந்து, முகத்தை தழுவியது. பவுர்ணமி நிலவு, இலைகளில் அழித்து, அழித்து புதுக் கவிதை எழுதிக் கொண்டிருந்தது, விழிகளை ஏறெடுத்தார்.
அர நெல்லி மரம், நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தது. இது, ஸ்ரீதர் பிறந்த 3ம் மாதம் ஆசையாய், அலமேலு நட்டு வைத்தது. இந்த இரண்டு குட்டைத் தென்னைகளும், ஸ்ரீதருக்குப் பிறகு அடுத்தடுத்து பிறந்து தவறிப் போன குழந்தைகளின் நினைவில் வைத்தது. எலுமிச்சையும், வாழையும் செந்தில் பிறந்த போது… இது தவிர மருதாணி, முருங்கை, சுண்டை, பாகல், கையகல கீரைப்பாத்தி, வாசல்புறமாய் நித்யமல்லி, பவழமல்லி, ரோஜா, இப்படி பசுமையாய்…
கோபாலன், பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், தோட்டந்தான் தோழமையுடன் கை நீட்டி அணைத்துக் கொண்டது. ஹும்… மூச்சை இழுத்து விட்டார். “குழந்தைகளைப் போல வளர்த்ததையெல்லாம், யாருக்கோ விற்று விடுவதா?’ என்று மனம் பொங்கியது.
இருளின் மெல்லிய போர்வையில், நிலவின் ஒளிக் கிரணங்களில், யாரோ அமர்ந்து, மெல்ல பேசுவது கேட்டது. மல்லிகை பந்தலின் கீழே சிமென்ட் மேடையில், “மச…மச’ வென தெரிந்தது… கோபாலன் ஊன்றி பார்த்தார்.
“ஓ…செந்திலும், அனுவும். இவர்களுக்கும் தூக்கம் வரவில்லையோ… மகனும், மருமகளும் அந்தரங்கமாய் பேசிக் கொள்கையில் தகப்பனே ஆனாலும், அங்கே நிற்பது தர்மம் ஆகாது…’ என்று தோன்றவே, அவர்களின் தனிமை சுகத்தை கலைக்க மனசில்லாமல், சப்தமின்றி வீட்டிற்குள் திரும்ப முனைந்தார்.
செந்திலின் குரல், காதில் மோதியது.
“”அவ்ளோ பணத்துக்கு எங்க போறது அனு? இன்னி ரேட்டுக்கு, இந்த வீடு, 40 லட்ச ரூபாய்க்கு மேலேயே போகும். அப்படி பார்த்தா, 20 லட்ச ரூபாயாவது நாம ஸ்ரீதருக்கு தர வேண்டியிருக்கும். கொஞ்சம் குறைஞ்சாலும், ஜெயந்தி அண்ணி விடுவாங்களா? அனு… உன் புருஷன், சின்ன ஆட்டோ மொபைல் ஓர்க் ஷாப் ஓனர்; ஸ்ரீதர் மாதிரி பெரிய ஆபிசர் இல்லை!'”
“”என்னங்க நீங்க… இப்படி பண்ணினா என்ன? ஊருல என் பேருல இருக்கிற வீட்டையும், நிலத்தையும் வித்துடுவோம். நீங்க ஓர்க்ஷாப் மேல பாங்க்ல கடன் கேளுங்க. போதலைன்னா என் நகை இருக்கு. கைமாத்தா யாரிடமாவது கடன் வாங்குவோம். இந்த வீட்டை விக்க வேணாங்க… இது வேற கைமாறினா, மாமாவும், அத்தையும் தாங்க மாட்டாங்க!”
“”ஹேய்… என்ன நீ… சீரியசா தான் பேசுறீயா? உன் கிராமத்து வீடு பெருசு… இது சின்ன வீடுதான் அனு… உன் வீட்டை விக்கறதுலே உனக்கு வருத்தம் இல்லையா? ஏன் கேக்கறேன்னா, இதை வித்து பங்கு கொடுன்னு அண்ணி ஒத்தை கால்ல நிக்கிறாங்க. இத்தனைக்கும் அவங்க எங்க அப்பாவோட சொந்த தங்கச்சி பொண்ணு. அவங்க விக்கிறதுலேயே குறியா இருங்காங்க. நீ வெளியே இருந்து வந்தவ… நீ… என்னமோ, வீட்டை விக்கக் கூடாதுங்கறே…
“”ஆமா, உனக்கு மட்டும் வேற அழகா, மாடர்னா இருக்கிற வீட்டுக்கு குடித்தனம் போகணும்ன்னு ஆசையில்லையா அனு?” என்றான் செந்தில்.
அனுவின் பதிலை தெரிந்து கொள்ளவேனுமென்ற ஆசை கிளர்ந்தது கோபாலனுக்கு. சுவர் ஓரமாய் இழைந்து நின்று கொண்டார்.
“”அய்யே… என்னங்க நீங்க… இப்படி கேட்கறீங்க… மாமாவும், அத்தையும் ஆசை ஆசையாய், சிக்கனமா குடும்பம் நடத்தி, சேர்த்து வச்சு, பார்த்து, பார்த்து கட்டுன வீடு இது…
“”மாமாவோட பிரெண்டு ஒருத்தர், “ரெட்டி கார்’ன்னு மாமா கூட கூப்பிடுவாரே, அவரு அடிக்கடி தெலுங்குல, “தேசமண்ட்டே மட்டிகாது மனுஷயலுன்னு…’ பாட்டு பாடுவார். ஒரு நாள் அதுக்கு அர்த்தம் என்னன்னு கேட்டப்ப, அவர் சொன்னார், “தேசம்ன்னா வெறும் மண்ணு மட்டுமில்லை. உணர்வு பூர்வமான மக்கள் நிறைந்தது…’ அப்படின்னார்.
“”அதுபோல, மாமாவுக்கும், அத்தைக்கும் இந்த வீடு வெறும் சிமென்ட், செங்கல்லால் ஆனது இல்லைங்க. இது ஒரு உணர்வுக்குவியல். ஒவ்வொரு இடத்துக்கும், அவங்க கிட்ட ஒரு கதை இருக்குது. நினைச்சு பார்க்க நேசம் நிறைந்த நினைவு இருக்கு.
“”தோட்டத்துல இருக்கிற ஒவ்வொரு செடி, கொடிக்கும் அவங்க கிட்டே ஒரு ஞாபகம் இருக்கு. எல்லாமே, அவங்க வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. இன்பமும், துன்பமும் எத்தனையோ வகையான நினைவுகள். வயசாக ஆக, இந்த ஞாபகம் அப்படியே அவங்க மனசுலே மணக்க, மணக்க, சாம்பிராணி புகை போல சுழன்றுகிட்டே இருக்கும். அதைப் பறிச்சுட்டா… அவங்க உயிரிலிருந்து ஜீவனையே பறிச்சு எறிஞ்சாப்பல தான்…
“”என் கிராமத்து வீடு பெருசுதான். ஆனா, அதுல என்னோட எந்த நினைவுப் பதிவுகளும் கிடையாது; எங்கப்பா, அம்மாவோட வாசனைகளும் இல்லை. அதனால, அதை விக்கிறதுலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு நினைவு தெரிஞ்சு அங்கு எதுவுமே இல்லை. யாரோ குடித்தனம் பண்றாங்க…
“”ஆனா, இந்த வீடு எனக்கு அப்படி இல்ல… கல்யாண மாலையை சுமந்துகிட்டு நான் அடியெடுத்து வச்ச வீடு இது. கனவுகளோட வந்தவளை ஆதரிச்ச வீடு… இது, எனக்கும் பொக்கிஷம் போல மாறிடுச்சு.
“”மாமா, அத்தை காலத்துக்குப் பிறகும், அவங்களோட ஞாபகத்தை, ஒரு மனோரஞ்சிதப்பூ மாதிரி வாசனையா பரப்பி நிற்கும்… நம்ம பிள்ளைகளுக்கும், தாத்தா, பாட்டி வாழ்ந்த வீட்டுல வாழற குடுப்பினை கிடைக்கும். அது ஒரு வரம் மாதிரி; என்ன சொல்றீங்க?” என்றாள் அனு.
“”அனு… யூ ஆர் கிரேட்!” செந்தில் உணர்வு மீதூற சொல்வது கேட்டது.
கோபாலன் உணர்ச்சி மேலீட்டில் தள்ளாடி சுவற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
தோள் மீது மெத்தென்று கை ஒன்று படர்ந்தது.
“இவளும் கேட்டிருப்பாளோ!’
அதற்கு சாட்சியாக கன்னம் ஈர விழுதை தாங்கி நின்றது.
மெதுவாக, ஆதரவுடன் கைகளைப் பற்றிக் கொண்டு, படுக்கைக்கு வந்து விட்டனர் இருவரும். ஒரு வார்த்தை கூட எழும்பவில்லை அங்கே!
“இளையவர்கள் எல்லாரும் சுயநலவாதிகள் இல்லை. அனுவைப் போல முதியவர்களின் உணர்வுகளை பாராட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு சின்ன பெண், எத்தனை துல்லியமாய் தங்களின் உணர்வை படம் பிடித்து விட்டாள்…’ என்று, இருவரின் மனதிலும் ஒரே எண்ணம் தான் ஓடியது. நெஞ்சு பெருமிதத்தில் துள்ளியது. இளையவளின் புரிதல் தந்த மகிழ்ச்சியில் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. மனசு நிறைந்து லேசாகியது.
மனதுக்குள் உணர்வுகள் ஒரு மாமழை போல பொழிந்து கொண்டிருந்ததில் ஈரம் கசிந்தது. வாழ்த்தியது நெஞ்சம். ஜன்னல் வழியே… மலர்ந்து விட்ட மல்லிகையின் மணம் ஒரு திருடனைப் போல, ரகசியமாய் அறைக்குள் நுழைந்து ரம்மியமாய் மனதை நிறைந்தது!

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *