அலையைத் தாண்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,409 
 

பார்வதி கலங்கிப்போனாள்!

யுகத்தின் கணவேகச் சுழற்சியில் ஒன்றுமே அறியாத சிசுவைப் போல, விழி பிதுங்கி அழுதாள். அவளைத் தேற்ற அப்பொழுது ஒருவருமில்லை.

மற்றையவர்கள் அழுவதைப் பார்த்துச் சிரிப்பதும், சிரிப்தைப் பார்த்து எரிவதுந்தானே இந்தப் பிறப்பு எடுத்து எல்லோரும் கண்ட அனுபவம்?

அவளுடைய குழந்தைகள் மூன்றும் கதிகலங்கிவிட்டன! நான்காவது என்று மூச்சற்றுப் பேச்சற்று வயிற்றிலேயே உருவாகிக் கொண்டிருந்த அடுத்த குழந்தையை அடித்து அழவைத்தாள் பார்வதி.

வயிற்று நோவுடன் தன்னையே தான் வருத்திக்கொண்ட வலி வேறு அவளைப் போட்டுச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது.

“அட! பாவியளே! நீங்கள் நல்லாயிருப்பியளா எப்படி வாழ்ந்த எங்கடை குடும்பத்தை வேரோடை சாய்க்கப் பாக்கியறியயேன்!”

“இந்த மூண்டு குஞ்சோடை, நாலாவதையும் வைச்சண்டு என்னை என்ன செய்யச்சொலுறியள். கடவுளே! இவங்கடை அக்கிரமத்தைச் சகியாமல் நீயும் தூரப் போயிட்டியே! கண்கெட்டவங்கடை காரியங்களுக்கு எட்ட நின்டு கொண்டு ஒத்தாசை புரியிறையோ?… ஐ…யோ !

பார்வதி யாரையோ அப்படித் திட்டிக் கொண்டிருந்தாள். உலர்ந்து வற்றிப்போன அவளுடைய முகம் கண்ணீர்க் கறைகளால் நிரம்பிக் கறுத்துவிட்டது .

அவள் அழுதுகொண்டேயிருந்தாள். பிறந்தது முதல் இன்று வரை தேவைக்காகப் பார்வதியின் முகத்தைப் பார்த்த அந்த மூன்று குழந்தைகளுக்கும், அவள் ஏன் அழுகின்றாள் என்பது விளங்கவில்லை.

‘அய்யாவுக்கு எதாச்சும் நடந்திருக்குமோ? மனத்திலும் உணர்வுகள், நினைவுகள் தோன்றும் என்பதை மொழியால் அறியாத அவருடைய மூத்த மகன் நினைத்தான்.

தன்னையே கேட்டுப்பார்த்தான். தம்பியையும், தங்கையையும் ஏக்கத்தோடு பார்த்தான். ஏன்? என்பது தெரியாமல் அவர்களும் அழுது கொண்டிருந்தார்கள்.

“ஏன் மணி அழுறே?” அவன் தம்பியைத் கேட்டான் . “அம்மா அழுறா” அந்த மூன்று குழந்தைகளும் காரணம் தெரியாமலேயே அழுது கொண்டிருந்தார்கள்.

அலைகள் வந்து கரையிலே மோதி மடிந்தன. சிலாபத்தின் மாண்புமிக்க காட்சிகளைக் காணமுடியாமல், இந்து சமுத்திரத்தைத் தாண்டி வந்த மயக்கத்திலும், களைப்பிலும் அவை மடிந்து விட்டன.

இந்துமகா சமுத்திரத்தை நீந்தி வருபவையெல்லாம் சிலாபத்திலே மாண்டு போக வேண்டும் என்பது இயற்கையின் நியதியா? என்ன ?

கதிரேசன் தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த நீளமான ‘தேடாவளையத்தை’ அவிழ்த்துத் தோணியின் அணியத்திலே போட்டான்.

அவன் அப்பொழுதுதான் கடலுக்குக் கீழே போய் மீண்டு வந்திருந்தான்.

“கதிரேசு” இன்னொருக்கா போய்ப் பாத்திட்டு வா’ ஏதாவது பிளைப்புக்குக் கிடைக்கலாம்” தோணிக்குள்ளே இருந்தவர்களுள் ஒருவர் கூறினார்.

“என்னப்பா’ இப்பக் கொஞ்சம் முந்தித்தானே போயிட்டு வந்தான். பேந்தும் போகச் சொன்னா….. நான் என்ன பண்ண முடியும்?”

கதிரேசனுக்கு அலைகளோடு பொருந்திய களைப்பு, அப்படி அலுக்க வைத்தது விட்டது.

அவனை அப்படிக் கேட்டவர் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.

“இந்தா எத்தினை வருசமா இந்தத் தொழிலை மனிசன் செய்யிறான். ஏதோ சங்கம் நடத்துறாங்களாம் அதாலை எங்களுக்கு என்ன நன்மை கிட்டிப் போச்சுது”

“மனிசனாப் பிறந்து மனிசன் படுற வேதனை கொஞ்ச நஞ்சமல்லப்பா! சங்கு குளிக்கிறதெண்டு கீழே போற போதாவது மூச்சுப் பறியதா கை, தானாகவே கயிற்றைப் பிடிச்சு ஆட்டுதில்லே,”

கதிரேசனுக்கு இருந்த வெறுப்பு வார்த்தைகளில் கோலமிட்டது.

“ஏம்பா அப்பிடிச் சொல்லுறே! நீ வாழற மனிசனாச்சே! உன்கிட்டேயே துணிச்சல் இல்லாட்டி வேறை யாருகிட்டே அதை எதிர்பார்க்கமுடியும்?”

முன்பு பேசியவரே, மீண்டும் சொன்னார்; “சங்கு சங்குன்னு குளிக்கிறமே…… மழையெண்டு கிடக்கிதா! வெயிலெண்டு பாக்கிதா…….. எல்லாம் எங்களுக்கெண்டு சமுத்திரத்திலே பாய்ஞ்சு தேடுறம்….கூப்பன் எடுக்கிறதுக்கே மனிசனுக்குப் பெரும்பாடு……. சேச்சே! வீட்டை மனிசி, குழந்தை குட்டியளுக்கு வயிறுரச்சோறு போட முடியாத நமக்கு எதுக்கையா வீண்பேச்செல்லாம்”

கதிரேசன் தேடாவளையத்தை ‘ எழுந்து மறுபடியும் கூட்டியபடி, சங்குப்பையையும் தூக்கினான்.

கடலில் குமிழிகள் சலசலத்தன. கதிரேசன் கீழே போய்விட்டான்.

***

இருட்டி விட்டது! பகலெல்லாம் இந்த வையத்தைப் பார்த்து ஒளிந்து கொளுத்திவிட்டு இளைப்பாறத் தொடங்கினான் சூரியன். வெய்யிலின் கொடுமையைச் சொல்வது போல் காற்று வீசத்தொடங்கிவிட்டது.

நீரோடு சேர்ந்த குளிர்! உடல் வெடவெடக்க வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் கதிரேசன்.

கடல் நீரில் நனைத்துவிட்ட அவனுடைய அரைத்துண்டு அப்படியோ இடுப்பில் ஒட்டியிருந்தது. சாரத்தை தலையில் சுற்றிக் கட்டியிருந்தான் கதிரேசன். அதன் மடிப்புக்களில் ஒன்றில் இரண்டு ரூபாத் தான் சொருகப்பட்டிருந்தது.

அதை நம்பி எதிர்பார்த்திருக்கும் நான்கு உயிர்களுக்காக, தென்னைந் தோப்புக்களையும் மணற்பெருவெளியையுங் கடந்து வந்து கொண்டிருந்தான் அவன்.

“போன கிழமைக் கூப்பனிலை விட்ட அரிசி இரண்டு கொத்தையும் வாங்கினா அம்பது போயிடும்…… மிச்சம் ஒன்றரைக்கும் கறியைப் புளியை வாங்கலாம்………. பொழுது போயிடும்……..”

‘என்ரை கடைசியாள்…… கையையே பார்த்தண்டிருப்பாளே……… ஒரு பெண்குஞ்சு……. அதுக்கு ஏதும் வாங்க வேணுமே…………

கதிரேசன் சாரத்தை அவிழ்ந்து, காசை எடுத்துக் கொண்டான். ஈரத் துண்டை மீண்டும் ஒரு முறை பிழிந்துவிட்டு, தோளில் சால்வையாகப் போட்டான்.

கூப்பன் கடையை நோக்கி அவனுடைய கால்கள் போய்க் கொண்டிருந்தன.

அவனுக்குள் திக்கென்றது! கடை பூட்டப்பட்டிருந்தது. ‘என்ன அநியாயம்? ஆறு மணியும் ஆகயில்லை கடையைப் பூட்டிப் போட்டாங்கள் பாவியள்.”

நினைத்துக் கொண்டு ஏமாற்றத்தோடு திரும்பியவனுக்கு சந்தியின் ஒருமூலையில் வெளிச்சம் விழுகிறது தெரிந்தது.

‘சுப்பையாரை கடை திறந்திருக்கு………. சரி மாவையாவது வாங்கிக் கொண்டு போவம்…….!’

உள்ள பணத்திற்கு ஒரு சதம் மிச்சம் இல்லாமல், மாவும், சனியும் மகளுக்கு மிட்டாயும் வாங்கிக் கொண்டான்.

நிலைகள் வீட்டிற்குச் சென்று விட்டன. ‘பார்வதிதான் பாவம் எங்கையோ கூடுவிட்டு கூட வந்த எனக்கு அடைக்கலந்தந்து …… என்னையே முடிச்சிட்டி……. ஆனா , ஒரு சுகத்தையும் இன்னும் காணயில்லை’

‘போதாக் கஸ்டத்துக்கு மூண்டு….நாலு குழந்தையள்’

“பார்வதி!”

அவனுடைய அழைப்பைக் கேட்டு வழமையில் குழந்தை போல ஓடிவந்து அவளை வரவேற்கும் பார்வதியை அவன் காணவில்லை. என்றும் போல மகள் வந்து மிட்டாயை பெற்றுக் கொண்டாள்.

அணையப் போகும் வாழ்வில் ஒளியை மினுங்கி மினுங்கிக் காட்டிக்கொடுத்தது கைவிளக்கு.

“பார்வதி!” கதிரேசனுடைய குரலில் ஒரு வித நடுக்கம் ” என்ன…… ஏன் பேசமாட்டியா என்ன நடந்தது. சொல்லன் பிள்ளையாள் எங்கை……..

“நித்திரை” – துக்கம் வந்து அடைத்து இறுக்கியிருந்த அவளுடைய அதரங்கள் பிளந்தன.

“நீ இன்னும் தூங்கவில்லியாம்மா!” மகனைப் பார்த்துக் கேட்டபடியே அவனின் நாடியைப் பற்றினான் கதிரேசன்.

புலன்களில் மலர்ச்சி!

கதிரேசன் தோளில் இருந்த ஈரத்துணியை வெளியே கட்டியிருந்த கம்பியிற் காயப்போட்டான். பார்வதி கணவன் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு குசினிக்கு கிட்ட சென்று விட்டாள். அடுப்புப் புகையத் தொடங்கியது! கதிரேசன் அறிந்து கொண்டான். அவளுடைய நெஞ்சம் கருகியது; அதை அவனால் உணரமுடியவில்லை .

மகளைத் தூக்கி நெஞ்சில் இருத்தியபடி முற்றத்திற் கிடந்த தென்னேலைப் பாயில் சாய்ந்தான்.

மழலை இன்பம் அவனுக்கு பொழுதைக் கழித்தது. சமையலும் முடிந்துவிட்டது.

வயிறுகள் நிரம்பின. ஒரு சாண் வயிற்றை நிரப்ப எத்தனையோ மைல்கள் கடந்து வந்தான். அவருக்குத் தப்பி , இவரிடம் பிழைத்து அவன் வந்து கண்டதென்ன?

அக்கரைக்கு இக்கரை பச்சை என்பதைத்தான் கண்டான். இந்த உண்மையை ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் அவன் அறிந்து விட்டபோதிலும், இதமான இல்லறத்தை விட்டு அவனால் பிரிய முடியவில்லை .

‘எத்தினை பேர் கலியாணம் முடிச்சுப் பிள்ளையளும் பெத்துப் போட்டு, விட்டுட்டு ஓடியிட்டாங்க …. பார்வதியையும் என்றை குஞ்சுகளையும் தவிக்க விட்டுப் போட்டு நானும் போக மடையனே!’

கஷ்டங்களின் ஊடே மனித நிலையை அவன் மறந்ததுண்டு. பின் அவனுடைய உள்ளத்தில் ஊறிய அன்பு வெள்ளம் வந்து கெட்ட எண்ணங்களைக் களைந்து விடும்.

கதிரேசன் மனிதனாக மாறிய வேளைதான் அடுத்தவர்கள் மிருகமானார்கள்.

“பார்வதி! ஏன் ஒரு மாதிரி இருக்கிறே” ஏப்பம் விட்டபடி கேட்டான் கதிரேசன்.

அவள் விம்மத் தொடங்கினாள். “நம்மளை அனுப்பப் போறாங்களாம்!”

“எங்கை?” – திகைப்பு.

“இந்தியாவுக்கு…” – சுருக்கம்.

“உன்னையுமா?” – சிரிப்பு.

“உங்க ளை…” – ஏக்கம்.

கதிரேசனுக்கு தலை சுழன்றது. “நடராசாவின்ரை வேலையா இது?” உணர்ச்சியற்ற மரக்கட்டையாய் நின்ற கதி ரேசனின் வாயிலிருந்து உதிர்கின்றன இவை.

“அவன் நல்லாயிருப்பானா?”

“காட்டிக் கொடுக்கின்ற கயவர்கள் எங்க மத்தியில் தான் அதிகம்…பெரியவை சொல்லுவினம்…சரித்ரத்திலேயும் இது தான் அதிகம் எண்டு”

“பார்வதி…நான் ஒண்டு சொல்லுறன் நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை! முனீஸ்வரன் நம்மளைக் கைவிடமாட்டான்…நம்மடை நாலு பிஞ்சுகளையும் காயவிடமாட்டான். நம்பு….. என்னை நம்பாட்டாலும் அவனை நம்பு!”

“கடவுளே!…ம்”

இருவருடைய நெஞ்சங்களும் பொருமின; அவற்றிலிருந்து புறப்பட்ட மூச்சுக்கள் ஒன்றுடன் மற்றொன்று காற்றோடு கலந்தன.

ஒரு வருடமாகி விட்டது!

கதிரேசன் சங்கு குளிப்பதை நிறுத்தவில்லை. முனீஸ்வரன் மீது பழியைப் போட்ட பின்பும் அவனுக்கு என்ன வந்துவிடபோகிறது?

ஆனால்…ஒரு நாள் திடீரென்று பொலீசார் அவனுடைய வீட்டைச் சோதனை போட்டார்கள். அவன் திருடவில்லை. ‘கள்ளத்தோணி’ அந்தப் பட்டம் பெற்றுவிட்டான். அது தான் அவன் செய்த குற்றமா? சக வர்க்கமும் சதா கேட்கும் பெயர் இது தானே?

கதிரேசனால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. சுங்க இலாகாவினரைப் போல அவனும் படித்திருக்கிறானா குறுக்குக் கேள்விகளை அள்ளி வீசி, வழி தெரியாமல் அனுப்பிவைப்பதற்கு.

நெஞ்சிலே வலி பொங்க, மிரள, மிரள விழித்தான்.

“ஓய்…உன்ரை பாஸ்போஸ்ட் எங்ஹே?” ஒரு பொலிஸ் வீரன் தமிழ் பேசினான்.

“அது எனக்கெதுக்கு வேணுமாம்?”

“யாரை ஓய் கேக்கிறே? கூப்பனும் இல்லை?”

இந்த வீரன் விழுந்து கிடந்த தென்னங் குற்றியில் தனது பூட்ஸ்’ காலால் உதைத்தான். கதிரேசனுக்கு விழுந்திருக்க வேண்டியதை அந்தக் குற்றி தானே வாங்கிக் கொண்டு, தியாகியாகி விட்டது.

“அதுவும்…கடையிலே…”

கொண்டு காவும் பஞ்சியைப் பார்த்து கூப்பன்கள் அத்தனையையும் கடையிலேயே வைத்திருந்தான் கதிரேசன்.

ஞாயிற்றுக்கிழமை கடையைத் திறக்கவும் மாட்டார்கள். கதிரேசனால் நிலைகொள்ள முடியவில்லை .

பார்வதி மூலையில் நின்று அழுதுகொண்டிருந்தாள். அவள் விசும்பல் எங்கும் பரவியது.

‘நீ எங்களுக்கு டிமிக்கி குடுக்கிறே? ஏறுடா வான்லே”

அதே வீரன் கதிரேசனைப் பின்னால் பற்றித் தள்ளிவிட்டான். நிலை தடுமாறி நிலத்தில் வீழ்ந்தான் அவன்.

“ஐ…யோ. என்ரை ராசா…” என்று அலறியபடி அவன் மீது வீழ்ந்தாள் பார்வதி. குழந்தைகள் மூன்றும் கண்களைப் பிசைந்தன.

மூத்தவன் “ஐ…யா!..ஆஆஅ…” என்று அழத்தொடங்கினான். அவனுக்கு அழத்தெரியும். மற்றக் குழந்தைகள்…

“பா…தி! என்ரை செல்வங்கள்!…ஐ…யோ!….முனீஸ்வரா?…”

தென்னந்தோப்பினூடே பறந்து கொண்டிருந்த போலிஸ் வண்டியிலிருந்து இந்த வார்த்தைகள் மிதந்து, தேய்ந்து, அழிந்து கொண்டிருந்தன.

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *