கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,904 
 
 

மழை நாள் ஈரத் துணிகளுக் குன்னே ஒரு வாசனை உண்டு. ஜோதிக்கு அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். ஜோதியும் நானும் ஹாஸ்டல்ல இருக்கிறப்ப, வேணும்னே துணி காயப் போடுற இடமா மூக்கை நுணுக்கிட்டுப் போய் நிப்பா. மழைன்னா, அவளுக்கு உசிர். பல்லவன் பஸ்ல மழை நேரம் ஏறி, கால்ல மிதிபடுறது எனக்குப் பிடிக்காத ஒண்ணு. அவளுக்கு சேறு சகதிலாம் சகஜம். ‘வயக்காட்டு சகதில வளர்ந்தவ நானு… உன்ன மாதிரியா?’ என்பாள்.

இப்பவும் அலுவலகத்தில் யார் இருந்தாலும்கூட ‘என்னத்த எழவு பீட்சா? பழைய சோறும் கருவாட்டுத் துண்டுக்கும் வருமா?’ என்பாள். முகத்துக்கு நேராக பீட்டர் விடும் பெண்களிடம், ‘பார்த்து… உங்க ஆத்தா ஜூலியா ராபர்ட்ஸ்… ஒங்க அப்பன் பில் கிளின்டன்!’ என்பாள்.

அவங்க முகம் போற போக்கைப் பார்த்து சந்தோஷப்பட்டு ‘பினாத்தல பாரு… கலை!’ என்பாள். எதுக்கு இதெல்லாம் என்றால், கேட்கவே மாட்டாள். ஜோதி இங்கே வேலை பாக்குறதாலதான் அப்பா என்னை வேலை பார்க்க விட்டிருக்கார்.

‘அட, என்ன மாமா இன்னும் அடைக் கோழி மாதிரி எத்தனை நாள் நீங்க கலையை அடை காப்பீங்க? சொல் லுங்க… எதுதான் சொன்னாக் கேப்பீங்க?’ என்று ஒரே அதட்டலில் அப்பாவைப் பணியவைத்தாள். அப்பா போடுற கருப் பட்டி காபிக்கு ஜோதி அடிமை. பாலே இல்லேனாலும்கூட வெறும் கடுங் காபியை ஒரு சொம்பு நிறைய ஊத்திக் குடிப்பா. அவளும் நானும் ஒரு கையெ ழுத்துப் பத்திரிகைலாம் நடத்தினோம். சிவப்ரியாதான் படம் வரைவா. ஏதோ தத்துப்பித்துன்னு நான் கவிதை எழுது வேன். ஜோதி கவர் ஸ்டோரிலாம் எழு துவா. இதயம்னு வர்ற இடமெல்லாம் ஹ்ருதயம்னு போட்டு ‘அப்படித்தான் எழுதணும்’னு சொல்லுவா. எதையும் வித்தியாசமா செய்யணும்னு துடிப்பா.

அப்பதான் நளினிக்குக் கல்யாணம் ஆச்சு. படிப்பைவிடப் போறதா நளினி கிளாஸ்ல வந்து சொன்னப்ப, ஜோதிக்கு வந்த கோபம் மாதிரி நான் பார்த்ததே இல்ல. ‘உனக்கு அறிவே கிடையாதா? பெரிய்ய பணக்காரி நீ? எதுக்கு இவ்ளோ அவசரப் பட்டு கல்யாணம் பண்ணிக்கப்போற? சோறு பொங்கியே செத்துருவ!’ என்றாள். நளினி ஏற்கெ னவே ரொம்ப சிவப்பு. அவ முகமே ஜோதி சொன்னதுல மேலும் சிவந்து போச்சு. படபடனு கண்ணை சிமிட்டி வந்த கண்ணீரை அடக்கிக் கிட்டா. சொன்ன மாதிரியே ஜோதி அவ கல்யா ணத்துக்கு வரவும் இல்லை. அப்புறம் இரண்டு வருஷத்திலேயே நளினி ரெண்டு பிள்ளை பெத்துக் கிட்டு, ஒருநாள் போன் பண்ணா. அப்பல்லாம் எல்லார் வீட்லயும் போன் கிடையாது. எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டு கீதாக்கா வீட்லதான் போன் இருந்தது. போன் சொல்றதாலயே கொஞ்சம் சலுகையாய் எங்க வீட்டுல வந்து வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக் கிழமை இந்திப் படமும் பார்த்துட்டுப் போவாங்க.

”நான் ஊருக்கு வந்திருக்கேன் கலை. உங்களை எல்லாம் பாக்கணும்.”

”வாயேன்” என்றேன்.

அப்பமும் ஜோதி ஞாபகம்தான் எனக்கு வந்தது. ”நான் வர முடியாது. கார் அனுப்புறேன். நீங்க வாங்க” என்றாள் நளினி. ஜோதிட்ட சொல்லுறப்ப, ”நான் வரலை. அவ கார் அனுப்புவா. நீங்கள்லாம் நாய் வண்டில நாய் போற மாதிரி போய் பாருங்க!” என்றாள்.

அடுத்த தடவை நளினி போன் போட் டப்ப நான் தயங்கித் தயங்கி, ”நீ வாயேன் நளினி” என்றேன். அவளும் ஏதோ ஒரு மூடுல ”சரி… நான் அம்மாகிட்ட பிள்ளைங் களை விட்டுட்டு வாரேன். 10 மணிக்கெல் லாம் வந்திடுறேன். அப்படியே ஒரு சினிமாவுக்குப் போயிட்டு வருவோம்!” என்றாள்.

ஜோதிக்கு இந்த பிளானில் இரண்டாவது பாகம், அதாவது சினிமாவுக்குப் போவது ரொம்பவும் பிடித்திருந்தது. அன்னிக்கு ‘நாயகன்’ படம் போனோம் என்று நினைக் கிறேன். ராயல் தியேட்டரில் ஒருத்தன் என்னை இடித்துவிட்டுப் போனான். ஜோதி அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, ஓங்கி முகத்தில் குத்தினாள். ”போய் உங்க ஆத்தா, அக்காவை இடிடா!” ஒரு நிமிஷம் நளினி அரண்டு ”வாடி வாடி” என்றாள். அவளுக்கு கழுத்துப் பக்க மெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

அந்த ஆள் அரண்டு சுவரில் சாத்தி இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடி னான். ஒட்டுமொத்தக் கூட்டமும் ஜோதியை மிரண்டு பார்த்துச்சு. ‘நாயகன்’ படத்தில் முதல் சில காட்சிகள் எங்க யாருக்கும் இப்ப வரைக்கும் சரியா ஞாப கம் இல்லை. படம் முடிச்சுட்டு ஹோட்டல்ல சாப்பிடணும்னு ஏற்பாடு. ஆனா நளினி, ”வேணாம்… பிள்ளைங்க தேடுவாங்க”ன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டா.

”லூஸு… எங்கே, எப்படி நடந்துக்கணும்னு உனக்குத் தெரியாதா?”

”போடி போ… அவ பணக்கார பூர்ஷ்வா… அப்படித்தான் நடந்துப்பா!” என்றாள். ராத்திரி டிக்ஷ னரியை மடில வெச்சிக்கிட்டு ‘பூர்ஷ்வா’வுக்கு அர்த்தம் தேடினேன். அடுத்த மாதமே எனக்கு அவசர அவச ரமாக மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவெச் சுட்டாங்க.

”தாலி கட்டினதும் காலைல எந்திரிச்சி அவன் காலைத் தொட்டுக் கும்பிடுவ… போடி போ. தைரியமா ‘மேல படிக்கணும். வேலை பாக்கணும்’னு வீட்ல சொல்லு. ஒரு தடவை வாழுறோம். சரியா வாழணும்னு ஆசைப்படுடி!” என்றாள். ஆனால், எனக்கென்னவோ தைரியம் இல்லை. கல்யாணமான பிறகு, ஜோதி அவ் வளவாக போன்லகூட பேசலை. ஊருக்கு வந்தாகூட, ”என்ன… எப்படி இருக்கே?” என்பாள். ஆனா, எனக்கு அவகிட்ட பேச நிறைய இருந்தது. ”ஜோதி… மனசே சரி இல்லடி. அவர் எதுக்கெல்லாமோ கோவப்படுறார். சப்பாத்தி வட்டமா சுடலைன்னு அடிக்கார்” என் றேன்.

”பதிலுக்கு சப்புனு வைக்கறதுதானே?”

”சந்தேகப்படுறார்டி!”

”என்னவாம்?”

”மேல் வீட்டுக்காரன் குளிக்கிறப்ப எட்டிப் பார்த் தான்னு சத்தம் போட்டேன். அவர் என்னைப் பார்த்து, ‘நீதான் பாக்கச் சொல்லிருப்ப’ன்னு சொல்லு தார் ஜோதி!”

எங் கண்ணுல வழிஞ்ச கண்ணீரை உத்துப் பார்த்தா. ”அவம் மூஞ்சிலயே தாலியை அத்து எறி”ன்னா. போயிட்டா.

ஊருக்கு நான் கிளம்புறப்ப வேகவேகமா பஸ் ஸ்டாண்டுக்கு சைக்கிள்ல வந்தா. ”டீ கலை… அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லிடு. சரியா? இழுவிட்டு நிக்காத… சரியா? புரியுதா?”ன்னா. காதுகிட்ட வந்து, ”அடுத்த ஜென்மத்துல நான் ஆம்புளையாப் பொறந்து உன்னக் கட்டிக்கிறேன்டி!” என்றாள்.

அடுத்த மாதமே சுவரில் அடித்த பந்தாகத் திரும்பி வந்தேன். சந்தேகம். சந்தேகம். சந்தேகம்! பேச்சுவார்த்தை, விவாகரத்து. அப்பவும் தாங்கிக்கொண்டது ஜோதி தான். என்கூடவே இருந்தா. என்னைக் காரணம் இல்லாம சிரிக்கவெச்சா. ”யார் என்ன சொன்னாலும் கவலப்படாத கலை. ஜூலியஸ் சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்தான்!” என்றாள். அப்பா கவலைப்படும்போது எல்லாம், ”அட, போங்க மாமா… கல்யாணம்தான் வாழ்க்கைல முடிவா? அது ஒரு ஜெயில். புலம்பிக்கிட்டுத் திரியுறதுக்கு ‘டேஷே’ போச்சுனு அவளைப் படிக்கவைக்கலாம்ல?” என்றாள். கெட்ட வார்த்தைகள் பேசும்போது ஜோதி எப்போதும் ‘டேஷ்’ என்பாள். அப்பாவுக்கு அது புரியாமல் போனது எனக்கு பெரிய நிம்மதி.

அப்பா என்னைப் படிக்கவெச்சார். அப்ப அறிமுகமானவன்தான் திருச்செல்வன். எங்ககூட எல்.கே.ஜி படிச்சானாம். ”என்னை ஞாபகம் இருக்கா கலை”ன்னுட்டு முதல் நாளே கேட்டான். எனக்குச் சரியா ஞாபகம் இல்லை. ஆனா, ஜோதி சரியா ஞாபகம்வெச்சிருந்தா. ”ஐய… அந்த மூக்கொழுகியா?” என்றாள். அப்பதான் அவன் சதா மூக்கு வடித்துக்கொண்டு நிற்கும் காட்சி ஞாபகம் வந்தது. ‘மூக்கில் இருந்து தேன் வடியுதே’ன்னு ஒருவன் பாட… இன்னொருத்தன், ‘நக்கித் தின்னு… நக்கித் தின்னு!’ என்று அவனைக் கிண்டல் செய்வார் கள். இப்போது பெரிய ஆளாக என்னிடம் ஒரு நோட்டை நீட்டி, ”கவிதைலாம் எழுதுவேன். எப்படி இருக்குனு பாரேன் கலை!” என்றான்.

‘என் வண்ணமில்லாப்
பட்டாம்பூச்சி பறந்த தோட்டத்தில்
உதிர்ந்துகிடக்குது வண்ணங்கள்.
கூடுதல் அழகு
தோட்டத்துக்குக் கிடைத்துவிட்டதெனச்
சொல்ல முற்படுகையில்
என் உதடுகளில் வந்தமர்கிறது வண்ணத்துப்பூச்சி!’

ஜோதிட்ட நோட்டை நீட்டினதும், ”என்ன… ரூட்டு வுடுறானா மூக்கொழுகி?” என்றாள். ”நீ… தானாக்கும் வண்ணத்துப்பூச்சி? முக்கைச் சுழிச்சிக்கிட்டு உங்க சோகக் கதைலாம் எடுத்துவிட்டீங்களாக்கும்?”

”இல்லடீ!”

மறுநாள் ஜோதி என்கூட வந்து, ”கவிதைலாம் எப்பலருந்து எழுதுவ செல்வன்?” என்றாள்.

அவன் கொஞ்சம் வெட்கப்பட்டு, ”சும்மா… அப்பப்ப!” என்றவன், ”எப்படி இருக்கு ஜோதி?”னு கேட்டான்.

”சுமாரா இருக்கு. எதுக்கும் நீ லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைலாம் படி. எனக்கு இன்னும் நீ முக்கொழுகி நிக்கிறாப்லதான் இருக்கு”ன்னு பட்டுனு சொல்லிப்புட்டா. அவனுக்கு ரொம்ப அவமானமாகிவிட்டது. நோட்டை பட்டென்று உருவிட்டுப் போயிட் டான். எனக்கு அவனைப் பார்க்க ரொம்பப் பாவமா இருந்துச்சு.

”எதுக்குடி இப்படிலாம் பண்றே?”

”இப்ப புரியாது. அடுத்தவாட்டி லவ் லெட் டர் வெச்சித் தருவான். வாங்குறப்ப தெரியும்!” ஆனால், அவன் அப்படித் தரவே இல்லை. ஜோதிக்குக் கொஞ்சம்கூட மென்மையே இல்லைஎனத் தோன்றிற்று.

ஒருவாட்டி வைர மாளிகைல புரோட்டா வாங்கிட்டு இருந்தான் செல்வன். ”ஸாரி… ஜோதி சும்மா கிண்டலாதான் சொன் னா”ன்னேன். ”அதுக்கென்ன?”ன்னுட்டு கிளம்பிப் போயிட்டான்.

”உன்னால என்னயும் இல்ல தப்பா நினைச்சிப்புட்டான்”னு ஜோதிகிட்டே சொன்னேன். அவ மசியலை. ”ஓ… இப்போ காத்து அங்க அடிக்கா?”ன்னு கேட்டது அசிங்கமா இருந்துச்சு. ”ஆம்பளைங்கள் லாம் ரொம்ப ஓவியமா? எவ முந்தானை எங்க விலகும்னு அலையுற பயலுவ. இவ்ளோ ஏன்? எங்கப்பனே அசிங்கம் புடிச்ச புஸ்தகத்த ஒளிச்சு வெச்சி வாசிக்கு. சொல்ல முடியுமா? வெளிய சொல்ல முடியுமா? இவ்ளோ ஏன்? உன்ன குளிக்கி றப்ப பார்த்தானே? அவனுக்குத் தெரி யாதா? உங்கிட்ட இருக்கதுதான் அவன் ஆத்தாட்ட இருக்கும்னு!”

”அசிங்கமாப் பேசாதடி!”

”ஆமாமா. இதப் பேசினா அசிங்கம். செஞ்சா கலாசாரம்… த்தூ!” என்றபடி அவித்த கடலைக் காயை உடைத்து வாயில் போட்டாள்.

அன்னிக்கும் இதே மாதிரி மழை நேர ஈரத் துணிகள் காற்றில் அசைந்தபடி இருந்தன. இடையில் செல்வனுக்கும் கல்யாணம் ஆயிற்று. தேடி வந்து பத்திரிகை வெச்சுப்போனான். அலுவலகத்துல லீவ் கிடைக்காததால் நான் போகலை. நீண்ட நாட்கள் கழித்து ஒரு தடவை செல்வன் போன் பண்ணி, அவனுக்கு வாய்த்த மனைவி சரியில்லை என்றும் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அவளுக்குக் கோபம் வந்து அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறாள் என்றான். பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த ஜோதி செல்லைப் பிடுங்கி டக்கென ஆஃப் செய்தாள். ”நாதாரிப் பயலுவ…” என்று டேஷ் வார்த்தையால் நிரப்பினாள். அவளுக்கு வந்த வரன்களை வேண்டாம் என்று தீர்மானமாக மறுத்தாள். ”என் புருஷன் எவளுக்கு போன் போட்டு நான் சரியில்லன்னு சொல்வானோ?” என்றாள். அவளால் ஏனோ செல்வனைத் தோழமையோடு பார்க்கவே முடியவில்லை.

ஞாயிற்றுக் கிழமைகள் எனக்கும் ஜோதிக்குமானது. எண்ணெய் தேய்த்துக் குளித்து, நகரத்தின் வாடை தெரியாத உணவகத்தில் நாட்டுக் கோழிக் குழம்பு சாப்பிடுவோம். ஒரு வாரம் நானும் மறு வாரம் அவளும் பணம் கொடுப்போம். கல்லாவில் பணம் கட்டிவிட்டு நிமிர்ந்தபோது செல்வன் நின்றிருந்தான். ”ஹேய் கலை. நல்லாருக்கியா?” என்றான். ஜோதி எட்ட போய் நின்றுகொண்டாள். நான் திரிசங்கு நரகத்தில் நின்று, ”என்ன செல்வன் இங்க?” என் றேன். ”வேலை மாறிட்டு. நல்லா இருக்கீங்களா? அதே ஹாஸ்டலா?” ஜோதி விருவிருவென தெருவில் நடக்கத் தொடங்கினாள். நானும் கிளம்பி அவள் பின்னாலேயே நடந்தேன். ஐந்தடி நடக்கும் முன்னே என் அலைபேசியில் மெசேஜ் சத்தம். ”அவன்தான்!” என்றாள் ஜோதி தீர்க்கமாக. ”பாரு…” என்றாள். ”உங்கள் தோழிக்கு என் மேல் எதற்கு கோபம் என்று தெரியவில்லை. ஆனாலும், நீங்க முன்னைக்கு இப்ப பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் கலை!” என்றிருந்தது. ”வழிஞ்சிருக்கானா? நினைச்சேன். அவனை நம் பாதே!” என்றாள்.

நான் அவளையே பார்த்தேன். ”சும்மா ஒண்ணும் சொல்லலை. இவன்கூட நீ காதல்ல இருந்ததாலதான், அந்த திருவாத்தான் உன்ன விலக்கி வெச்சான்னும், இவன்தான் உன்னைச் செலவழிச்சிப் படிக்க வெச்சதுன்னும் ஊர்ல சரவணன் மாமாட்ட சொல்லிருக்கான்!” சொல்லிட்டு வந்த பஸ்ஸில் ஏறினாள். கட்டுப்பட்ட ஆடாய் பின்னாலேயே ஏறினேன். பஸ்ஸில் இருக்க ஸீட் இல்லை. மனசுல இனம் புரியாத குழப்பம் ஆட்டுவிச்சுக்கிட்டே இருந்தது. ஜோதி ஜன்னல் பக்கம் பார்த்தபடி நின்றாள். பஸ்ஸுக்குள் ஒரு குழந்தை என்னைப் பார்த்து கை நீட்டிச் சிரித் தது. அதற்கும் ஜோதி என்று பெயர் இருந்தா, நல்லா இருக்கும்னு தோணுச்சு எனக்கு!

– டிசம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *